அடுக்ககத்தில், புறாக்கள் இறக்கைகளைப் படபடக்கவிடும் ஓசை கேட்டு விழிப்பதே வழக்கமாகிவிட்டது. உறங்கும்போதும், நடமாடும்போதும் கூட அந்தச் சத்தம் மண்டைக்குள் ரீங்காரமிட்டபடியிருக்கும். அதற்காகவே படுக்கையறையின் கட்டில், சன்னலை ஒட்டிக்கிடக்கும். ஒவ்வொரு விடியலிலும் சன்னலுக்கு வெளியே பரந்து கிடக்கும் உலகம், எனக்காகக் காத்திருப்பது போலொரு மாயத்தோற்றம். வாகன இரைச்சல்கள், நகர இடிபாடுகள், பிச்சைக்கான இறைஞ்சுதல்கள், வியாபாரிகளின் கூச்சல். ஒருநாளைக்குத்தான் எத்தனை சத்தங்கள். புறாக்கள் சிறகை விரித்துப் பறக்கும் இவ்வோசை, எல்லாவற்றிலுமிருந்தும் என்னை மீட்டெடுக்கும் வாதை. அந்தச் சத்தம் பூமிஜாவுக்கு ஒவ்வாமையை அளிக்கவே, குழந்தைகளோடு தனியறையில் படுக்க ஆரம்பித்தாள். அப்போதே அவளைப் புரிந்துகொள்ள முயற்சித்திருக்கவேண்டும். இத்தனைக்கும் அவளைக் காதலித்து மணம் புரிந்தேன்.
குடும்பம், கம்பிகளை அடைபோட்டுக் கூண்டுக்குள் நிற்கவைக்கும் அமைப்பு என்றொரு நம்பிக்கையிருந்தது. அதனாலேயே, வீட்டிற்குள் அருவமான சுவர்களை எழுப்பிக்கொண்டேன். உணவருந்தும் நேரம், மதுவருந்தும் நேரம், உரையாடும் நேரம் என எப்போது விருப்பமில்லையென்றாலும், இருவரில் யார் வேண்டுமானாலும் விலகிக்கொள்ளலாம். உடலுறவிலும் கறாராகச் சொல்லியிருந்தேன், இருவருக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே. இதுவரையிலும் அவள் எதற்கும் மறுப்புத் தெரிவித்ததில்லை. மாறாக அவள் உறவிற்கு விரும்பிய சிலநேரங்களில் புத்தக வாசிப்பினாலோ, கதை எழுதுவதினாலோ வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறேன். உச் கொட்டிச் சரியென்று விலகிவிடுவாள்.
மனதிற்குள் எல்லாவற்றையும் அசைபோட்டபடியே பால்கனிக்கு வந்தேன். சாம்பல்நிற வானின் அடியில், ஒழுங்கமைவின்றி எழும்பியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மேலே வட்டமிட்டபடி புறாக்கள் பறந்தன. பெங்களூருக்கு வந்தபிறகுதான் இச்சடவு மனநிலைக்கு ஆட்பட்டேன். எப்போதுமே மயக்கநிலையிலே இருக்கும் வான்பிரதேசம்.
இதே பால்கனியில், முட்டையிலிருந்து குஞ்சுபொரித்த புறாக்குஞ்சுகள், இறக்கையை விரித்துப் பறக்க ஆரம்பித்தபின், அவற்றை விட்டுப்போன ஆண்புறாவையும் பெண்புறாவையும் போல, அவளும் நானும் குழந்தைகள் வளர்ந்தபின் விட்டுப்போக முடியுமா? இதெல்லாம் குடும்பம் என்றொரு அமைப்பு உருவாக்கிய ஒன்றுதானே என்று அவளிடம் ஒருநாள் தர்க்கம் பண்ணியதுகூட, அவளை இப்படியொரு முடிவொன்றை எடுக்கத் தூண்டியிருக்கலாம்! எங்கோ பாங்குச் சத்தம் கேட்கிறது. எண்ணங்கள் வேறொரு திசையில் பாய்கின்றன. ஒரு நாளைக்கு ஐந்து முறை பாங்கு ஒலிக்கிறது, கேட்கிறேன், அந்தப் பள்ளிவாசல் எங்கிருக்கிறது!
கனிந்த முகத்தோடும், எல்லா சவுகரியங்களையும் செய்துகொடுத்திருந்தாலும் இப்படியொரு திட்டம் போட்டிருக்கிறாள் என எப்படித் தெரியும். நினைவுகளை மீட்டெடுத்து எந்தவொரு சந்தர்ப்பத்தில் அப்படியொரு முடிவை எடுக்கக் காரணமாக இருந்தேன் என யோசித்தால், வீணையின் தந்திகளை விளையாட்டாய்ச் சுண்டும் குழந்தையின் விரலால் உண்டாகும் அபசுரம் ஒலிக்கிறது.
“டீ சாப்பிடுறீங்களா? பார்ரா குளிச்சு முடிச்சாச்சு போல.” வலதுகையிலிருந்த தேநீர்க்குவளையை என் பக்கம் நீட்டினாள்.
“மெதுவா குடிச்சிட்டு வழக்கம் போல இங்கையே நின்னு யோசிங்க. வண்டி ஏழு மணிக்குத்தான வரும்,” எனக்காகவே தமிழ் கற்றுக்கொண்டவளின் உச்சரிப்பு என்னைவிடச் செறிவாக இருக்கிறது. குறிப்பாக ‘ழ’கரம். பால்கனியின் கண்ணாடிக்கதவைக் கேட்காத மாதிரி மெல்லத் திறந்து எப்படி வந்தாள்? குளித்து முடித்து, ஈரத்தலையோடு நிற்கையில், கண்களில் வெண்மை நிரம்பி, கருவிழிகள் கூராகி நின்றன. மையிட்டிருக்கிறாள். கன்னங்கள் இன்னும் உப்பலாகத் தெரிந்தன. கையில் கோப்பையை வாங்கிக்கொண்டேன். பேசாமல் இருந்தால், நடிக்கிறேன் என்றே எண்ணுவாள்.
“புக் பண்ண கார் தான. வந்தாலும் வெயிட் பண்ணுவான். நீயும் குளிச்சிட்டியா! ஒருத்தன நா குளிப்பாட்டி விடவா?” தேநீரை உறிஞ்சியபடி கேட்டேன்.
“ஓஹோ, இப்போவே நீ மாறிட்ட அப்படித்தான. பிள்ளைங்க ரெண்டு பேரும் குளிச்சாச்சு. ஏற்கெனவே பேசின மாதிரிதான். மடிக்கேரி போறோம். வந்ததுக்கு அப்புறம் டாட்டா பாய் பாய்தான். என்ன வேணா நடி.” நிறுத்தியவளின் கண்கள் என்மேல் குத்திட்டு நின்றன. பின், “எல்லாம் போதும், இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது. நீ எல்லாருக்கும் தனித்தனி ஸ்பேஸ் உண்டுன்னு சொல்லுவியே. ஒரே வீட்டுல எதுக்குத் தனித்தனி ஸ்பேஸ்? அவங்கவங்க ஸ்பேஸ்ல இனி இருந்துக்கலாம். இந்த டிரிப்ப ஒரு வாய்ப்பா எடுக்கிறன்னு எனக்குத் தெரியும். ஒன்னவிட எனக்கு ஒன்ன நல்லா தெரியும். இந்த முடிவு, ஏதோ நேத்து முந்தாநேத்தைக்கு எடுத்ததா நெனச்சுக்காத. கொழந்தைங்க பொறந்து ஆறு மாசம் எங்கள நீ பாத்துக்கிட்ட லட்சணம் இருக்கே! அப்பவே கொஞ்சம் தோணியாச்சு. நீ மாறுவ, மாறுவன்னு எத்தனை நாள் பொறுத்தேன். பாரு, காலைல எப்போவும் இல்லாம எனக்கு முன்னாடி நீ எந்திச்ச! இப்போவே சண்டை ஆரம்பிக்குது.” விலகிப்போனாள்.
“சண்ட எங்க போடுறோம். நீ உன்னோட பாயிண்ட்ஸ தான சொல்ற. பேசுறத சண்டைன்னு எடுத்துக்காத.” அவளருகே நெருங்கிச் சென்றேன்.
“கிட்ட வராத, ரெண்டு நாள் ஒங்கூட சண்டை போடக்கூடாதுன்னு நெனச்சிருக்கேன். ஒனக்கு நான் கோபப்படுறேன்னு கூட தெரியலையா?”
“இதலாம் சீரியஸா எடுக்கவேண்டாம்.” சிரித்தால் சமாதானம் உருவாகலாம் என்றெண்ணினேன்.
“சிரிக்கிற. ஒருத்தர் கோபப்பட்டுப் பேசிட்டு இருக்கும்போது சிரிச்சா, அவங்களுக்கு என்ன ஆகும் தெரியுமா? புதுசாவா பண்ற? நான் ஒரு லூசு. ஒங்கிட்ட பேசியிருக்கவே கூடாது.” பால்கனி கதவைச் சட்டென்று அடைத்துச் சென்றாள்.
குழந்தைகளுக்கு மூன்று வயதுதான் ஆகிறது. இரட்டை ஆண் குழந்தைகள். எப்போதும் அவளை அண்டியே இருப்பார்கள். வெளியே சென்றாலும் என்னருகே வரமாட்டார்கள். அதனாலே தனியாக வேலையாள் ஒருவரை நியமித்தோம். “அப்பாவப் பிடிக்குமா?” என்று கேட்டால், இருவரும் ஒருசேர, “அம்மாவப் பிடிக்கும்.” என்பார்கள். விவாகரத்தைப் பற்றி என்னோடு கலந்தாலோசித்தபோது விளையாடுகிறாள் என்றே நினைத்தேன். இவ்வளவு தீர்க்கமாக இருப்பாள் என்று ஒருபோதும் எண்ணவில்லை.
இருவரும் இப்போதுவரையிலும், அவரவர் வீட்டில் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை. என் முன்னே தத்தித் தத்தி நடக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் தொண்டை கனக்க ஆரம்பிக்கும். என்னருகே வந்து விரல்களைப் பிடித்து நீட்டும் மென்கைகள், சிலசமயம் கடிக்கும் பால்பற்கள், யோசிக்கும்போதே பெரும்பயம் சூழ்ந்துகொள்ளும். கோபமாக வரும். அப்படியென்ன மோசமான கணவன்? என்னைப் போலவே அவளும் சம்பாதிக்கிறாள். கோவிட் வந்துபோன பிறகு, இருவருக்குமே வசதியாக வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம் என்பது போலொரு வேலை.
“பேக்லாம் பண்ணிட்டேன். ஒங்க ட்ரெஸ்லாம் எடுத்து வச்சாச்சா?” அரக்கு நிறத்தில், தங்கப் பூக்கள் மின்னும் மிடியை அணிந்திருந்தாள்.
“என்னோடத வைக்கலயா? நேத்தே அயர்ன் பண்ணி மேஜைல வச்சேனே!”
“நேத்து காது எங்க போச்சோ! ஒங்களோடத நீங்கதான் வைக்கணும்ன்னு அப்பவே சொன்னேனே.”
“இப்போ ஒரே வீட்டுலதான் இருக்கோம். ஒரு சின்ன ஹெல்ப் பண்ணிருக்கக் கூடாதா? மடிக்கேரி போற எல்லாச் செலவும் நான்தானே பாத்துக்குறேன்.” எழுந்து, என்னுடைய துணிகளை இன்னொரு பையில் செருகியபடியே வந்தேன்.
“ஒரு நிமிஷம், இந்தப் பிளான் ஒங்களோடது. நெஜமா எனக்குத் துளியும் விருப்பம் இல்ல. கெஞ்சிக் கேட்டதால ஒத்துக்கிட்டேன்.” அவளுடைய கைப்பை, தோள்பையை மாட்டியபடி வாசலுக்குச் சென்றாள். இருவரும் பின்னாலே குடுகுடுவென ஓடினார்கள். வழக்கம் போல எல்லா அறைகளின் விளக்குகள், மின்விசிறிகள், எரிவாயு அடுப்பு எல்லாம் அணைத்து வைக்கப்பட்டுள்ளதா? நீர்க்குழாய்கள் ஒழுங்காக மூடப்பட்டுள்ளதா? எனச் சரிப்பார்த்து வீட்டையும் பூட்டி, அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாசலுக்கு வந்தேன். வரும்வழியிலேயே காவலாளி உமேஷ் நின்றிருந்தான்.
“சார், டூரா? எல்லிக?” வணக்கம் வைத்தபடியே கேட்டான்.
“மடிக்கேரி.” அவன் கையில் நூறு ரூபாயைச் செருகியபடியே சொன்னேன்.
“தலக்காவேரி ஹோகு. உத்தம ஹவமானா.” என்றான். வெளியே வண்டி எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அவளும் குழந்தைகளும் பின்னிருக்கையில் அமர, ஓட்டுநரின் அருகே அமர்ந்தேன்.
“போலாமா சார்?” இளைஞனாகத் தெரிந்தான். பூசியிருந்த திருநீற்றுக்குக் கீழே புருவமத்தியில், செந்தூர நிறப் பொட்டிட்டிருந்தான். அப்பாவின் நினைவுகள் வந்தன,
“போற வழில, சிட்டி அவுட்டர்ல சவுத் தமிழ்நாடு ஸ்டைல்ல ஏதாச்சும் ஹோட்டல் இருந்தா நிறுத்துங்க. சாப்பிட்டறலாம்.”
“சவுத் தமிழ்நாடு ஸ்டைல்ன்னா, பெங்களூருல தான்ண்ணா சாப்பிட நல்லாருக்கும். அவுட்டர்ல இருக்காது. பாப்போம்.” ஸ்டியரிங்கின் முன்னே ராமரும், சீதையும் தம்பதி சகிதமாக லட்சுமணனும், அனுமனும் கூடவேயிருக்கும், மல்லிப்பூ ஆரம் சூடிய சிறிய விக்கிரகத்தைத் தொட்டு வணங்கியபடி வண்டியை ஓட்டத் துவங்கினான்.
“சவுத் தமிழ்நாடா?”
“ஆமாண்ணா, நமக்கு மந்தாரம்புதூரு, நாரோயில் பக்கம்” என்றான்.
நெருக்கமாக உணர்ந்தேன். மிதமான வேகத்திலே ஓட்டினான். வண்டியில் அவன் இட்டிருந்த ரிப்ரெஷ்னர் மணம் இதமாக இருந்தது. குழந்தைகள் இருவரும் கத்தும் போது, திரும்பிப் பயமுறுத்தினான். இடையிடையே பொதுவான ஓட்டுநருக்குரிய தொனியில் சில கேள்விகள், சம்பாஷணைகள் தொடர்ந்தன.
தலையைத் திருப்பி அவ்வப்போது பார்த்தேன். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். இயல்பாக அமர்ந்திருப்பது போலத் தெரிந்தது. இரண்டு நாட்கள் என்ன செய்யப் போகிறேன்! எப்படிச் சமாதானம் செய்வேன்! எந்தவொரு திட்டமுமில்லை. குழந்தைகள் இருவரும் அவர்களுக்குள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புளூடூத் மூலம் வண்டியின் ஒலிப்பெருக்கியை அலைபேசியோடு இணைத்து, அவளுக்குப் பிடித்தமான பாம்பே ஜெயஸ்ரீயின் பாடல்களை ஒலிக்க விட்டேன். வண்டி மைசூரு நான்குவழிச்சாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. எண்ணங்களை எங்கே அலைப்பாய விட்டாலும், மனம் என்ன செய்யப்போகிறேன் என்பதிலே மையமிட்டது. பாடல்கள் மாறிக்கொண்டிருக்கும் போதெல்லாம், அப்பாடலைப் பற்றி அவளோடு உரையாடிய ஏதோவொரு சம்பவம் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. இசையைப் பற்றிப் பெரிய புரிதல் எல்லாமில்லை. திருமணத்திற்குப் பிறகே சங்கீதம் கேட்க ஆரம்பித்தேன்.
ஆலாபனை வயலினிலிருந்து கேட்க ஆரம்பித்தது. இந்தப் பாடல், இவள் அடிக்கடி கேட்கும் ஒன்று. வயலினின் ஆலாபனை முடியவும், ‘இரக்கம்’ எனும் சொல் ஒலிக்கவும், கண்களை இறுக்க மூட முயற்சித்தேன். கருவிழிகள் துடித்தடங்கின.
‘இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு’
பாடலின் வரிகள், இசை எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பதை விட, ஒற்றையாய் ரசிக்க முயற்சித்தேன். ஒவ்வொரு முறையும் இயலாத ஒன்றாகவே இருந்தது. இறுதியில் ஓர் ஆலாபனையில் மனம் ஒன்றியது. அதன்பிறகு பாடல் வரிகள் மறைந்துபோயின. இறைஞ்சும், பிசிறுள்ள, மென்குரல். கண்களைத் திறந்தேன். பாடலின் தாளத்திற்கு நேரெதிராய் வேகவேகமாய்க் கடந்துபோகும் நிலக்காட்சிகள். வயலினின் ஒவ்வொரு மீட்டலுக்கும் மனம் உள்ளொடுங்கிப் போனது. ‘கருணைக் கடல் என்றுன்னை’, மீண்டும் மீண்டும் வரிகள் ஒலிக்க, பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவளுடைய கண்கள் மூடியிருந்தன. மடியில் இருவரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். விழியோரத்தில் தழும்பி நிற்கும் கண்ணீர். சில நேரங்களில் வேலை முடிந்ததும், பாடல்களை ஒலிக்க விட்டு மௌனமாய் அமர்ந்திருப்பாள். என்ன கிடைக்கிறது எனக் கேட்டிருக்கிறேன்.
*
“இசைல எதுவும் கிடைக்கக் கூடாது. நெஜமா சொல்லப் போனா நீ இருக்கிற எடத்த, ஒன்ன சுத்தி இருக்கிற எல்லாத்தையும் மறந்துரணும். அது நேரடியா ஒன்னோட பேசும். ஒன்னோட ஆழ்மனம் உன்னோட பேசும். சும்மா வரி, தாளம் எல்லாத்தையும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணி ஒன்னோட புத்திசாலித்தனத்தக் காட்ட நெனைக்காத. ஜஸ்ட் பீல் இட்.” கண்களை மூடினாள்.
“இது கர்னாடிக் ராகமா?”
“இல்ல ஹிந்துஸ்தானி. பேஹாக் ராகம். எனக்கு ஒரு ஆசை.”
“சொல்லு.”
“இசைக்கு ஒரு ஓபன் ஸ்பேஸ் வேணும். நம்மோட காதுக்குள்ள மட்டும் ஒலிக்கிற இசை பூர்ணமானது இல்ல. ஓபன் ஸ்பேஸ்ல இசையோட லயங்கள் கலக்கும்போது அது டிவைன் ஆகும். நம்மள கரைய வைக்கும்.” கண்களைத் திறந்தாள்.
*
சுந்தர் அழைக்கவே நிதானமானேன்.
“அண்ணா, இனிமேல் ஹோட்டல் இருக்கிற மாதிரி தெரியல. தவாங்கரே பெண்ணா தோசா இந்தக் கடைல ஃபேமஸ். இத விட்டா பெரிய கடை இருக்கிற மாதிரி தெரியல,” வண்டியை நிறுத்தவும் கண்களைச் சுருக்கிப் பார்த்தேன். பெரிய உணவகம். வரிசையாய் வண்டிகள் நின்றன. வெளியே சிறுசிறு துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. ‘பழி எத்தனை நான் செய்தினும்’ வரிகள் ஒலிக்க, பின்னால் திரும்பிப் பார்க்கத் தைரியமில்லை. பாடல் எங்களிடையே இருந்த தூரத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டது.
ஏதோ! நானே அவரை இங்கே நிறுத்தச் சொல்லியிருப்பேன் என்றே எண்ணுவாள். அவள், சட்டென்று கதவைத் திறந்து வெளியே இறங்கப்போகவும், நானும் கதவைத் திறந்தேன். அவள் என்னிடம் பேசாமல் இருக்கவே, சுந்தர், “அக்காக்கு இந்தக் கட பிடிக்கலைன்னா வேறொரு கட இருக்கு. சின்ன கட தான், திருனவேலிக்காரங்க.” என்றான். உடனே சரியென்றேன். அவளும் சரியென்று தலையாட்டியபடியே காருக்குள் ஏறினாள். பூமிஜாவுக்குப் பிடிக்காத உணவு தவாங்கரே பெண்ணா தோசா. சுந்தரைப் பார்த்து, “காப்பாத்திட்டப்பா!” பெருமூச்சொரிந்தேன்.
அவன் நிறுத்திய இடத்தில் எங்களைத் தவிர வேறு ஆட்களே இல்லை. இப்படியொரு கடை இருப்பதே யாருக்கும் தெரியாதா என்று கேட்டேன்.
“எங்கள மாதிரி டிரைவர் மட்டும் வருவோம்ணா. சாப்பாடு நல்லா இருக்கும். சின்ன கடையா, அதான் யாரும் நிப்பாட்ட மாட்டாங்க.”
சிறிய ஓலைக்கடை. இட்லியும், பூமிஜாக்குப் பிடித்த பூரியும் இருந்தது. குழந்தைகளைச் சுந்தர் அழைத்து வேடிக்கைக் காட்டினான். இருவர் மட்டுமே கடைக்குள் இருந்தோம். ஒரு வயதான அம்மா மட்டுமே இருந்தாள். என்னன்ன வேண்டும் எனக் கேட்டுப் பரிமாறினாள். குழந்தைகள் இருவரும் விளையாடியபின் சோர்வாகவே அவர்களும் சாப்பிட வந்தார்கள்.
சுந்தரும் எங்களருகே வந்தான்.
“கடைசியா ஓடின பாட்டு.. யாருக்குப் பிடிக்கும்?” இருவரையும் பார்த்துக் கேட்டான்.
நான் பூமிஜாவைப் பார்த்தேன்.
“பேஹாக் ஒருமாதிரி உருக்குற ராகம்லா!” அவளைப் பார்த்துச் சொன்னான்.
பூமிஜா ஆச்சர்யமாகி, “உனக்கு ஹிந்துஸ்தானி தெரியுமா?” கேட்டாள்.
“வீட்டுப் பக்கத்துல ஒரு பண்டிட் இருக்காரு! அவர் தினமும் இராத்திரி இந்தப் பாட்ட பாடாம தூங்க மாட்டாரு. சுத்தி இருக்கவங்களும் அதுவரைக்கும் தூங்க முடியாது.” என்றான்.
“ஏன்?” பூமிஜா கேட்டாள்.
“அவர் தூங்குனாதான், நாங்க தூங்கமுடியும்.”
பூமிஜா வாய்விட்டுச் சிரித்தாள்
நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். கடைசியாக என்றைக்குச் சிரித்தாள். உணவும் அவளுக்குப் பிடித்திருந்தது. வயதான அம்மாவும், சுந்தரும் குழந்தைகளும் சாப்பிட உதவினார்கள். ஒருகணத்தில் என்னருகே வந்து, “ரெண்டு பேரும் வயறு நெறய சாப்பிட்டாங்க,” சொல்லிவிட்டு மகிழ்ந்தாள். பின் எதையோ மறைத்து விழுங்கி, “நீ பண்ண மொத உருப்படியான வேல,” என்றாள். சுந்தரைப் பார்த்தேன், மலங்க மலங்க விழித்தான்.
ராமநகரம் கடக்கவும் சாலைகளின் இருபக்கமும் விவசாய நிலமும், மடிந்து செல்லும் சிறிய மலைக்குன்றுகளும் கடந்தபடியே இருந்தன. வானமும் சாம்பல் வண்ணத்திலே நிலத்தைத் தொடர்ந்தது. ஸ்ரீரெங்கப்பட்டினம் வரவும் காவேரி ஆறு அகண்டு ஓடியது. இதற்கு முன்னர் மைசூரு வந்தபோது குழந்தைகள் பிறக்கவில்லை. இருவரும் காவேரி ஆற்றைப் பார்த்தபடியே வெகுநேரம் அமர்ந்திருந்தோம். ஆற்றில் முங்கி எங்கோ வெளிவரும் நீர்க்கோழியை, ஒவ்வொரு முறையும் எங்கு வெளிவரும் எனத் தேடிக்கொண்டிருந்தேன். என்னருகே இருந்தவள்,
“இப்போ எங்க வரும் சொல்லுங்க,” என்றாள்.
“வலது பக்கம் வரும் பாரு,” என்றேன். சரியாக இடது பக்கம் வந்தது.
அடுத்தமுறையும் நான் சுட்டிக்காட்டிய இடத்தில் வரவில்லை. அவள் குறிப்பட்ட இடத்திலேயே தலையைக் காட்டியது.
“நீங்க தண்ணி போற திசைல நீந்தும்ன்னு நெனைக்கிறீங்க. ஆனா அப்படி இல்ல, தண்ணி போற திசைல வர மீனப் பிடிக்க, பெரும்பாலும் எதிர்த் திசைலயோ, இல்ல பக்கவாட்டுல தான் நீந்தும்.” சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
திரும்பிப்பார்த்தேன். பின்னால் அவளும் ஆற்றையே பார்த்தபடியிருந்தாள்.
“ஒனக்கு ஞாபகம் இருக்கா? இதுக்கு முன்னாடி, அதோ தெரியுதே அந்தச் சின்ன பாறை பக்கத்துல எவ்வளோ நேரம் உக்காந்து இருந்தோம்.” அவளிடம் இருந்து எந்தப் பதிலுமில்லை.
“சுந்தர், வண்டிய நிப்பாட்டுறீங்களா? கொஞ்சம் இறங்கிப் பாத்துட்டு வரோம்.” நிப்பாட்டவும், கதவைத் திறந்து, ஒருவனைத் தூக்கவும், அழ ஆரம்பித்தான். அவளும் இன்னொருவனைத் தூக்கியபடி உடன் வந்தாள்.
“கர்ட்டசிக்காகவும் பேசு. டிரைவர் என்ன நினைப்பான்?”
“அவன் என்ன யோசிப்பான்னுலாம் பயம் இருக்கு, என்ன பத்தி ஏதாச்சும் இதே மாதிரி யோசிச்சிருக்கியா?”
“கொஞ்சம் மனசமாதனம் ஆவோம்,” கெஞ்சினேன்.
“சரி, டிவோர்ஸ் அப்ளை பண்ணியாச்சு. ஒருவேள கிடைச்சுட்டுன்னா?” கேட்டேன்.
“என்ன நினைக்கிற, ஒன்ன மிரட்டுறேன்னு நினைக்கிறியா? பிரியணும்ன்னு தான் அப்ளை பண்ணப்போறேன்.” தீர்க்கமாகச் சொன்னாள்.
“குழந்தைங்க! யோசிச்சியா?”
“ஏன் புதுசா? நான்தான இத்தன நாள் பாத்துக்கிட்டேன். இனிமேலும் அப்படித்தானே,”
அமைதியாக நின்றேன். “பேசாம வீட்டுக்கே போயிடுவோமா?” கேட்டாள்.
“உனக்கு ஏன் அந்தப் பாட்டு அவ்ளோ பிடிக்கும்?” நெருங்கினேன்.
“எந்தப் பாட்ட கேக்குற?”
“உனக்குத் தெரியும், எதப்பத்திக் கேக்குறேன்னு.”
மீண்டும் அவளுடைய கண்கள் கலங்க ஆரம்பித்தன.
“பிராக்டிக்கலா இரு,” கையைப் பிடிக்க முயற்சித்தேன். ஒதுங்கினாள்.
“ஒன்னோட பிராக்டிக்கல் திங்கிங்க் ஜீரோ! ஆபிஸ்ல பிராப்ளம்ன்னு சொல்லுவேன். லாஜிக்கா பேசுவ. சரி எது? தப்பு எதுன்னு கிளாஸ் எடுப்ப. அத எதிர்பார்த்தா உங்கிட்ட வந்துருப்பேன். என்னோட பீலிங்க்ஸ எப்போவாச்சும் சரியா புரிஞ்சிருக்கியா?”
“நான் ஒன்ன இந்த மாதிரி நெனச்சது இல்ல. ஒனக்குன்னு ஒரு ஸ்டிராங் ஹோல்ட் இருக்குன்னு நம்புனேன்.”
“என்ன வீக்குன்னு சொல்றியா?”
“இல்ல அப்படியில்ல.”
“தெளிவா லாஜிக்கலா பேசேன். எப்பவும் மாதிரி,”
“ஒரு ஃபெமின்ஸ்ட்.”
“ஏய், ஃபெமின்ஸ்ட்ன்னா உர்ர்ன்னு, ரொம்ப தைரியமா காட்டிருக்கிற மாதிரிதான் இருக்கணுமா? ஒரு சார்ந்திருக்கிற பெண் ஃபெமின்ஸ்ட்டா இருக்கக் கூடாதா? ஒங்கிட்ட கொஞ்சம் என்ன அணைச்சுக்கோ! கொஞ்சம் தன்மையா பேசுன்னு சொன்னா! பலவீனமான்னு அர்த்தமா? நீங்களே ஃபெமின்ஸ்ட்க்கு ஒரு அர்த்தம் வச்சுக்கோங்க.”
“இல்ல அப்படிச் சொல்ல வரல, எனக்குப் புரியுது.”
பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றாள். இருவரும் காரில் ஏறியவுடன், சுந்தர் புரிந்தவன் போல, மென்இசையுள்ள பாடல்களை ஒலிக்க விட்டான். திரும்பிப் பார்த்தேன். குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்தன. கண்களை வேண்டுமென்றே இறுக்க மூடியிருந்தாள்.
“எல்லாமே பேஹாக் போலச் சரியாயிடும்” சுந்தர் என்னைப் பார்த்து நான் மட்டும் கேட்குமாறு மெல்லச் சொன்னான். அவனுக்கும் எல்லாம் புரிந்துவிட்டது. சிரிக்க முயன்று தோற்றேன். மைசூர் செல்லும் வழியிலுள்ள திப்புசுல்தானின் கோடைக்கால அரண்மனை, மைசூர் அரண்மனை, மிருகக் காட்சி சாலை எல்லா இடத்திற்கும் சுந்தரையும் உடன் அழைத்துச் சென்றேன். முதலில் வர மறுத்தான். ஆனால் குழந்தைகளுக்காக வந்தான். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் பூமிஜாவிற்கு என் நிலையைப் புரிய வைக்க முயன்றேன். எல்லாமே தோல்வியிலே முடிந்தன. அவள் பிடிவாதமாக விவாகரத்திலேயே நின்றாள். அதன் பிறகு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஜார்கண்டிற்குச் சென்றுவிடுவதாக உத்தேசித்திருப்பதாகக் கூறினாள்.
அறையில் தங்கியபிறகும் இருவரும் தேவையின்றிப் பேசிக்கொள்ளவில்லை. குழந்தைகள் என்னருகே வருவார்கள், விளையாடுவார்கள். ஆனால் பூமிஜா அழைத்தால், அவளிடம் ஒட்டிக்கொள்வார்கள். சுந்தருக்கும் நாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தோம்.
மூவரும் உறங்கியவுடன் வெளியே வந்தேன். சுந்தரும் வெளியே நின்றான். யாரிடமாவது பேச வேண்டும்.
“சாப்டியா?” சம்பிரதாயமான உரையாடலோடு ஆரம்பித்தேன்.
“நீங்க?” கேட்டான்.
ஆமாம், என்பது போலத் தலையசைத்தேன்.
“எத்தனையோ பேர இந்த வண்டில கூட்டிட்டு வந்துருக்கேன். சந்தோசமா சிரிச்சிட்டு வருவாங்க! எதுக்குண்ணே ! சண்ட கிண்ட போட்டுட்டு வண்டில வந்தீங்களா?”
“அட நீ வேற, அவ டிவோர்ஸ் அப்ளை பண்ணப்போறா!”
“உங்களுக்கும் விருப்பமா?”
“இல்ல.”
சில நொடிகள் இருவரும் அமைதியானோம்.
“தப்பு யார் மேல?”
“எம் மேலதான் இருக்கும்.”
மீண்டும் அமைதியானோம்.
“சரி செய்ய முடிஞ்ச தப்பா?”
“சரி செய்யக் கூடியதுதான்.”
அவன் பேசவில்லை. என்னைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“குழந்தைங்க?”
“அதான், பயமா இருக்கு.” குரல் நடுங்கியது.
“உனக்கு எப்படி ராகம் பேருலாம் தெரிஞ்சிருக்கு?” கேட்டேன்.
“சொன்னேனே வீட்டு பக்கம் ஒரு பண்டிட் இருக்காரு.”
“இப்போ சபாலலாம் பாடுறாரா?”
“பார்ல தான் பெரும்பாலும் பாடுறாரு.” சிரித்தான்.
“எனக்கு மியூசிக் பத்தி பெருசாலாம் தெரியாதுண்ணே! ஆனா இன்னைக்குக் காலைல அக்கா கேட்ட பாட்டு உச்ச உணர்வு நிலைல கேக்குற பாட்டுன்னு தெரியும்.”
“எப்படி சொல்ற?”
“நான் சொன்னேனே பண்டிட், அவரு பேரு ஹரிகேசவ தேஷ்பாண்டே. இருவது வருசம் முன்னாடி பெரிய பண்டிட். இப்பவும் தான்.” மெல்ல சிரித்தான். “மூணு மாசம் முன்னாடியே போயி பாத்தாதான் இன்னைக்கு டேட் வாங்க முடியும். அவ்வளோ பிஸியான ஆளு. நல்ல பணம், வசதி எல்லாம் இருந்துச்சு. அவரோட ஒயிப் இவர விட பத்துப் பதினைஞ்சு வருசம் சின்ன பொண்ணு. அந்தப் பொண்ணோட அம்மா, சொத்து எல்லாத்தையும் அவங்க பேருலதான் வாங்குவாங்க. இவரும் சந்தேகப்படல, சந்தோசமாதான் போச்சு. ஒருகட்டத்துல இவரு மேல டொமஸ்டிக் வயலன்ஸ் கேசு போட்டுட்டாங்க. ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு. ஒயிப்பையும் பாக்க அந்த அம்மா விடல. கேஸும் நடந்துச்சு. இந்த ஊரச் சொல்லவா வேணும்? பொறவு, எந்த அக்காடமிலயும் இவர கூப்பிடல. எல்லாச் சொத்தும் போச்சு. குடிக்க ஆரம்பிச்சாரு. அவரோட ஸ்டூடண்ட்ஸ்தான் இப்போ வர அவர பாத்துக்குறாங்க. எல்லோரும் பெரிய எடத்துல இருக்காங்க. எங்க அப்பாட்மெண்ட்ல ஒரு வீட்டுல இருக்காரு. ஆரம்பத்துல எனக்கும் அவருக்கும் ஒத்து வரல. ரொம்ப சாதி பாப்பாருண்ணே. ஒரு நாள் குடிச்சுட்டுப் படில ஏற முடியாம நின்னாரு. நான் பிடிச்சு கூட்டிப்போயி வீட்டுல விட்டேன். என்ன நெனச்சாரோ ‘வாடா உள்ள’ன்னு கூப்பிட்டாரு. அப்போ இந்தப் பாட்ட தான் பாடினாரு. அண்ணே, சத்தியமா சொல்றேன், எனக்கு அந்த நிமிஷம் எந்தக் கவலையும் இல்ல. கையில, தம்புரா பிடிச்சுட்டுப் பாட ஆரம்பிச்சாரு. கண்ணு நிறைஞ்சு போச்சு. அதுல இருந்து என்ன அவருக்குப் பிடிக்கும். எப்போவாச்சும் வீட்டுக்குக் கூப்பிடுவாரு, எனக்காக மட்டும் பாடுவாரு. அழ ஆரம்பிச்சுருவேன். அப்படியே கொஞ்சம் ராகத்தோட பேரு, என்ன ராகம் என்ன மனநிலையக் குறிக்கும்ன்னு எல்லாம் சொல்லுவாருண்ணே. அப்படி தெரிஞ்சதுதான்.” நிறுத்தினான்.
“ஏன் அவரு அந்தப் பாட்ட அதிகம் பாடுவாரு.”
“ஒருநாள் நானும் கேட்டேன்.
‘நான் அவன்ட்ட பேசுறேண்டா,
அவனுக்காகத் தானே எல்லாம் செஞ்சேன்.
கருணையே இல்லையே அவனுக்கு.
என் வாழ்க்கை இப்படி ஆச்சே.
சந்தோசமா அவனுக்கு!
கருணைக் கடலாம், ச்சீ.
அழ ஆரம்பிச்சுட்டாரு. ராக தேவன்ட்ட பேசணும்ன்னா இந்தப் பாட்ட பாடுவாருன்னு சொன்னாரு. யோசிச்சுப் பாத்தா ‘என்ன ஏன் கைவிட்டேன்’னு கேக்குற மாதிரி இருக்குதுல்லா!”
எனக்குத் தொண்டை கனக்க ஆரம்பித்தது. நெஞ்சுக்கூட்டில் ஒரு வலி உருவாக ஆரம்பித்தது. புருவத்தைச் சுருக்கி, உதடுகளை உள்ளிழுத்தேன்.
“உறங்குங்க அண்ணே. காலைல தலக்காவேரி போவோம். எல்லாம் சரியாவும்.” என்றான்.
அறைக்குத் திரும்பினேன். பூமிஜாவும், குழந்தைகளும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பூமிஜாவின் அருகில் சென்றேன். அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள். கால்மாட்டருகே சில நொடிகள் அமர்ந்தேன். என் படுக்கையில் படுத்துக் கண்களை மூடினேன். உறக்கம் வரவில்லை. மனம் எடை கூட, உடல் தளர்ந்து போனது. பூமிஜாவைப் பெங்களூருவில் பார்த்த முதல்நாள், காதலித்த தருணங்கள், திருமணநாள், இரட்டைக் குழந்தைகள் பிறந்த நாள் எல்லாமே வேகவேகமாகக் கடந்துபோயின. இப்போது பிரிவிலும் வந்து நிற்கிறது.
காலையில் தலக்காவேரி செல்லும்போது, சுந்தர் காலை உணவிற்குப் பூமிஜாவிற்குப் பிடித்தமாதிரியான உணவகத்திலேயே வண்டியை நிப்பாட்டினான். குழந்தைகளை முடிந்தளவிற்கு அவனே கவனித்துக்கொள்ள உதவினான். நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கும் தருணங்களில் பொதுவான உரையாடலுக்கு அவனே இட்டுச் சென்றான். பூமிஜா என்னிடம் விவகாரத்து கேட்ட நாளுக்குப் பிறகு இயல்பாக இருப்பது போலத் தோன்றியது.
தலக்காவேரியில் வழக்கத்திற்கு மாறாகப் பனிமூட்டம் அதிகம் இருந்தது. மெல்லிய சாரல் தூறிக்கொண்டேயிருந்தது. குளிர்ந்த காற்று வாரிச் சுருட்டியது. சுந்தரும் எங்களுடன் ஒரு குழந்தையைத் தூக்கியபடியே வந்தான்.
கோயிலில் வழிபாடு முடிந்தவுடன் எல்லோரும் படிக்கட்டு வழியே காவேரி உருவாகும் மலையுச்சிக்குச் சென்றோம். எங்களைத் தவிர ஆட்களே இல்லை. தூரத்தில் ஒரு பசுக்கூட்டம் மேய்ந்துகொண்டிருந்தது. பனிவிலகும் போது சில்வர் ஓக் மரங்களே கண்ணில் தெரிந்தன. குழந்தைகள் இருவரும் சுந்தருடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இருவரும் ஒருமுனையில் அருகருகே அமர்ந்தோம்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வெட்டவெளி, உச்சிக்குக் கீழே தெரியும் அளந்தெடுத்த மலைமுகடுகள். ஆங்காங்கே ஊசிபோல மரங்களின் உச்சிக்கிளைகள். வானும் நிலமும் முயங்கும் ஓசை மட்டுமே எங்கும். பூமிஜா அருகிலிருந்தாலும் என்னிடமிருந்து தூர விலகி இருப்பதைப் போலவே தோன்றியது. கைகளைப் பிசைந்தபடியிருந்தேன்.
சுந்தர் ஓடிவந்து என்னிடம் ஒரு பாக்கேட் சைஸ் ஸ்பீக்கரைக் கொடுத்தான். பூமிஜா பார்க்கவே என்னைக் குனியச் சொல்லி, “மியூசிக் கேளுங்க” என்றான்.
பாடலை ஒலிக்கவிட்டேன்.
வீணை ஒலிக்கவுமே, பூமிஜா உற்சாகமாகி என்னைப் பார்த்தாள். பின் வயலின். அடுத்து புல்லாங்குழல். இசை ஏறி ஏறி இறங்குவது போல, மடிப்பு மடிப்பாக மலையிறங்கிச் சென்றது. சிறிய தூறல் படும்தோறும் உடல் உதறியது. ‘கண்டேன் கண்டேன்’ வரிகள் ஒலிக்க, பின்னே வீணையும் ஒலிக்க, பின்னாலே ‘நான்’ எனுமிடத்தில் உருகிப்போனேன். பூமிஜா கண்களை மூடித் தலையை அங்குமிங்கும் ஆட்டிக்கொண்டிருந்தாள். எனக்குக் கை காலெல்லாம் பறத்தம் எடுக்க ஆரம்பித்தது.
சுந்தர் குழந்தைகள் இருவரையும் இரண்டு தோளிலும் மாற்றி மாற்றி ஏற்றி விளையாடிக்கொண்டிருந்தான். பரந்த நிலம், காற்றிலும் நீர்த்திவலைகள். இசை, மலைமுகடுகளிலும் மெல்ல எதிரொலிப்பதைப் போல உணர்ந்தேன். எங்குமே ஓர் அதிர்வு.
ஓரிடத்தில், பூமிஜாவைத் தொட்டேன். கண்களைத் திறந்தவள், என்னைப் பார்த்ததும், கையைத் தட்டி, மீண்டும் கண்ணை இறுக்க மூட முயற்சித்தாள். அவள் உடலும் துடித்துக்கொண்டிருந்தது. இறுக்க மூட இயலாமல், தோற்றுப்போனவளைப் போல என்னைப் பார்த்தாள். இருவரின் விழிகளும் நிறைய ஆரம்பித்தன. இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற அன்றைக்கு மிகவும் தளர்ந்து போய்ப் படுக்கையில் கிடந்தாள். ஏறத்தாழ நான்கு மணிநேரம் அவளுக்கு நினைவில்லை. அவள் உதடுகள் முனங்கிய ஒரே பெயர், ‘ரகு’,’ரகு’. போதம் வந்து, என்னைப் பார்த்த நொடி, ‘என்ன குழந்தை ‘என்று கேட்டாள். ‘ரெட்டைக் குழந்தைங்க’ என்று சொல்லவும், உதடுகளை வலித்து, அழுத அந்த முகம் ஓர்மை வரவும், ‘மகராசி’ எனும் வரிகள் காதிற்குள் நுழைந்தன. ‘இனி தாமதம்’ வரிகள் இழைந்தோடுகையில், கைகள் என்னை அறியாமல் அவளிடம் நீண்டன.
இனிமேலும் அவளின்றி நான் யார் என்பது போலானேன். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். மடியில் கைவைத்தேன். தட்டிவிட்டாள். விசும்பினாள்.
“என்ன ராகம்?” கேட்டேன்.
“பாகேஸ்ரீ.” வாய்க் குழறச் சொன்னாள்.
Art : Marcopolo Cervantes








Leave a Reply