1.
இரைப்பையின் மீது யானையின் குறட்டை ஒலி. புவியெங்கும் கசியும் உதிர நெடிகளில் ஈக்களின் ரீங்காரங்கள்.
2
ஓர் இரைப்பை முன்பனியின் இடைவிடாத நடுக்கத்தை நிறுத்துகிறது.
3.
உலர்ந்த இரைப்பையில் ஒட்டியிருக்கும் வெந்த தானியங்கள்.
அவற்றை கொத்த எத்தனிக்கும் பறவை பிரபஞ்சத்தையே கவ்விச் செல்கிறது.
4.
இரைப்பையைச் சுருக்குப் பையாக்கியவள்
கிழிந்த வெற்றிலை போன்ற வாயையும்
பாக்கு வடிவ உதிரக் கட்டிகளையும்
சுண்ணாம்பு நிறப் பற்களையும்
சேமித்து வைத்திருக்கிறாள்.
5.
ஆலை எந்திரத்தில்
அரைத்த இரைப்பை மாவாகியது.
பல் பொடி காலியாகி விட்டதாம்.
6.
இன்னும் ஈரம் காயா இரைப்பை
துண்டு துண்டாக நறுக்கி மடிக்கப்பட்டு
ஜவ்வு மிட்டாயாய்ச்
சப்பித் தின்னப்படுகிறது.
7.
பனைமரமெங்கும் தூக்கணாங் குருவிக் கூடாய்த் தொங்கும்
எண்ணிலிறந்த இரைப்பைகள்.
8.
விரைத்த இரைப்பையைக் கண்ணீரில் முக்கி முக்கி எடுப்பது யார்?
9.
அந்நெடுஞ்சாலையின் நடுவே
தாரோடு தாராக ஒட்டிக் கிடக்கும் இரைப்பையை வெறித்துக் கிடக்கின்றன
சென்டர் மீடியனில் அமர்ந்த பறவையின் கண்கள்.
10.
இந்தப் பிரபஞ்ச இரைப்பை
ஆண்டின் பாதியில் தகிக்கும் பாறையாகவும்
மீதி ஆண்டில் மிதக்கும் பனிக்கட்டியாகவும்…
யாரோ அதைத் தீக்குச்சியால்
உரசி உரசி உருட்டி விளையாடுகிறார்கள்.
11.
உலகின் அத்தனை கூரைகளும்
இரைப்பைகளால் வேயப்பட்டுள்ளன
முதுகெலும்பால் துளையிட்டு
அவை குடற்கயிற்றால் இறுக்கப்பட்டுள்ளன.
12.
வானம் நீல நிற இரைப்பை
விண்மீன்கள் அதன் பருக்கைகள்
13.
மனிதர்களுக்குக் கையுமில்லை காலுமில்லை
இப்பிரபஞ்சமெங்கும்
இரைப்பைகள் மட்டுமே சதா அலைவுறுகின்றன
14.
இரைப்பையை இஸ்திரிப் பெட்டியாக்கி
உடலைத் தேய்த்துக்கொண்டிருக்கிறான்
15.
இரைப்பையின் உட்சுவரில் குழாய் பதித்து
காயும் பயிருக்கு நீரிறைப்பது யார்?
16.
முன்னங்கால் நிலத்தைக் கொத்திச் செல்ல
பின்னங்கால் அதை மூடிச் செல்கிறது
இரண்டுக்கும் நடுவில் விதைக்கப்படுகிறது இரைப்பை
17.
ஒருவர் இரைப்பையைச் சுரைக்குடுவையென இடுப்பில் கட்டி நீச்சல் பழகுகிறார்
மற்றொருவர் சக்கரைவள்ளிக் கிழங்கென ஆவி பறக்க விடுகிறார்
இரைப்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தால் கடலில் நீந்தி மீனைச் சேமிக்கிறார்
வேர்க்கடலையெனத் தட்டித் தட்டி பருப்புகளைத் தேடுகிறார்
18.
உணவு மேசையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது இரைப்பை
19.
இரைப்பையின் குவிமாடத்திலிருந்து சறுக்கிச் சறுக்கி விளையாடுகிறார்கள்
20.
தந்தை பெயர் அறியாதவன் இரைப்பையை முதலெழுத்தெனச் சந்தேகிக்கிறான்.
Art : Denis Shipilov
கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ரா.ச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம், ஜனசக்தி ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது தடாரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.








Leave a Reply