ஜார்ஜ் டிராகல்
(1887- 1914)
ஜார்ஜ் டிராகல் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஜெர்மன் வெளிப்பாட்டிய கவிஞர் ஆவார். முதல் உலகப் போரின் கொடூரங்களையும் வக்கிரங்களையும் படிம மொழியில் வடித்த டிராகல் உலகப் போரின் போது மருந்தாளுநராகப் பணியாற்றினார்.
சிதைவுகள், பித்துநிலை, குற்ற உணர்வு, ஆளற்ற வீடுகளில் உலவும் நிழல்கள், காடுகளில் திரியும் பைசாசங்கள், இருட்டிய பொழுதுகளில் வெளிவரும் ஜந்துக்கள், அமானுஷ்ய ரூபங்கள், வயலின் இசைக்கு எலும்புக்கூடுகள் போன்றவை நிரம்பியது இவரது கவிதை உலகம்.
ரெய்னர் மரியா ரில்கே போன்ற கவிஞர்களுக்கு ஆதர்சமாக விளங்கியவர் டிராகல். வெளிப்பாட்டிய பாணியின் கவிதைகளின் உச்சத்தை எட்டியவர் என்று இவரை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
குரோடெக் என்ற இடத்தில் நடந்த போரில் கண்ட கொடூரக் காட்சிகளின் காரணமாக தன் 27வது வயதில் தற்கொலை செய்து கொண்டார் ஜார்ஜ் டிராகல்.
I. மூன்று கனவுகள்
1.
உதிரும் இலைகளைக் கனவு கண்டேன்
வெகு தொலைவு காடுகளையும் கருங்கடல்களையும்
சோகம் படிந்து எதிரொலிக்கும் சொற்களையும்தான்
ஆனாலும் அவற்றின் அர்த்தம் புலப்படவில்லை
வீழ்கின்ற நட்சத்திரங்களைக் கனவு கண்டேன்
வேண்டி இறைஞ்சும் வெளிறிய விழிகளையும்
புன்னகையின் எதிரொலிகளையும்தான்
ஆனாலும் அவற்றின் அர்த்தம் புலப்படவில்லை
உதிரும் இலைகளையும் நட்சத்திரங்களையும் போல
எப்பொழுதும் போய் வந்து கொண்டிருந்தேன்
ஒரு கனவின் இறவா எதிரொலிகளைப் போல மேலும் மேலும்
ஆனாலும் அவற்றின் அர்த்தம் புலப்படவில்லை.
2.
என் ஆன்மா எனும் இருட் கண்ணாடியில்
காணவியலா ஒரு கடலுடன்
கைவிடப்பட்ட துயரார்ந்த மாந்திரீகப் பிரதேசங்களின் சித்திரங்கள்
நீலம் பாரித்து மங்கலாய் உருகும்
ரத்த சிவப்பு வானம் ஒன்று என் ஆன்மாவிலிருந்து வெளிப்பட்டு
மழை பொழியும் பிரமாண்டச் சூரியன்களால் ஊடுருவப்பட்டு
ஜொலிக்கும் விசித்திரத் தோட்டங்களை உயிர்ப்பித்தது
அவற்றில் உடலின் கொடூர இச்சைகள் கொப்பளித்தன
இருண்ட ஊற்றான என் ஆன்மாவிலிருந்து
பைசாச இரவுகளின் சித்திரங்களைப் பெயரற்ற பாடல்கள் பீடித்து
நித்திய ஆற்றலின் மூச்சுக்காற்றாய் விரட்டுகின்றன
நினைவுகளின் இருளால் என் ஆன்மா அதிர்கிறது
ஆழ்கடல்களிலும் ஆழ் இரவுகளிலும்
ஆரம்பமும் முடிவுற்ற நீண்ட நெடும் பாடல்களிலும்
அனைத்திலும் தான் நிறைந்து விட்டதாக உணர்கிறது.
3.
தீயால் அழிந்த பல நகரங்களைக் கண்டேன்
கொடூரங்களின் கூடாரமானது காலம்
மனிதர்கள் சாம்பலாய் மாறுவதைக் கண்டேன்
அனைத்தும் மறதியின் அந்திமத்தில் மறைவதைக் கண்டேன்
இருளேகிய கடவுளரைக் கண்டேன்
புனித யாழ் இற்றுப் பாழாகி உடைந்து சிதறியது
அழிவின் குவியலிலிருந்து எழுந்தது
புத்தொளியில் பூத்த புதியதோர் வாழ்வு
உலர் காலைப்பொழுதில் தோன்றி என்றைக்குமாய்த் தொலைந்தது.
நித்தியமாய் நடைபெறும் துயரார்ந்த நாடகம்.
அதில் புரியாமல் பங்கேற்றுப் பாத்திரங்களாய் நடிக்கிறோம்.
பித்தேறிய அதன் இருள்வாதை
அழகின் மென் கிரீடமாய் மிளிர்ந்து
புன்னகைக்கும் முள் பிரபஞ்சமாய்த் திகழ்கிறது.
II. சபிக்கப்பட்டவர்கள்
1.
இருள் படர்கிறது. கிழவிகள் கிணற்றை அடைகிறார்கள் .
செஸ்ட் நட் மரங்களின் இருளில் ஒரு செம்பறவை பாடுகிறது.
ரொட்டியின் மணம் ஒரு கடையில் இருந்து பரவுகிறது,
சூரியகாந்தி மலர்கள் வேலியை நோக்கித் தலைகுனிகின்றன.
நதியை ஒட்டிய விடுதியில் இருந்து மெல்லொலிகள் கேட்கின்றன.
கித்தாரின் இன்னிசை; நாணயங்களின் சப்தம்.
கண்ணாடிக் கதவுக்கு வெளியில் சாந்தமாக நிற்கும்
வெண்ணிறச் சிறு பெண்ணின் மேல் ஒரு புனித ஒளி பாய்கிறது.
ஓ! கண்ணாடிச் சில்லுகளில் மேல் விரைந்து படியும் அவளது நீல ஒளி,
முட்களால் சூழப்பட்டு கருமையாகவும் பரவசத்துடனும் சமைந்து நிற்கிறது.
கூன் விழுந்த ஒரு எழுத்தர் பித்தனைப் போல்
நீருக்கு மேல் அதன் ஆக்ரோஷத்தைத் தணிப்பது போல் நகைக்கும் தோற்றம்.
2.
அந்தியில் அவளது நீல ஆடையின் விளிம்புகளில் பிளேக் பரவுகிறது,
ஒரு தீய விருந்தாளி வாயிற்கதவைத் திறக்கிறார்.
மேப்பிள் மரத்தின் கறு நிழல் ஜன்னலின் ஊடாக விழுகிறது;
ஒரு சிறுவன் அவள் கையினுள் தன் முகத்தைப் புதைக்கிறான் .
அவளது இமைகள் அவ்வப்போது கொடிய பாரத்தில் குனிகிறது,
சிறுவனின் கைகள் அவள் கேசத்தில் ஊர்கின்றன.
கருமை படிந்த அவளது சூனியக் கண்களின் ஊடே
அவனது தகிக்கும் கண்ணீர் தாரையாகப் பொழிகிறது.
கருஞ்சிவப்புச் சர்ப்பங்களின் கூட்டம் ஒன்று
அவள் கருப்பையில் மெல்ல சுழல்கிறது.
கைகள் மரித்துக் கொண்டிருப்பதைக் கைவிடுகின்றன,
அதைக் கம்பளத்தின் துயர விளிம்புகள் தொடுகின்றன.
3.
பழுப்புத் தோட்டத்தில் விசை மணிகளின் இன்னிசை
செஸ்ட் நட் மரங்களின் இருளில் ஒரு நீல உரு அலைகிறது,
விசித்திரமான ஒரு பெண்ணின் உடையிலிருந்து கமழும் நறுமணம்.
பச்சைப் பூக்களின் மூலிகைச் செடிகளின் வாசம்; ஒளிரும் தீயுணர்வு.
நனைந்த புருவங்கள் குளிர்ந்து வெளிறி மாமிசத் துண்டங்களை நோக்கிக் குனிந்தன,
அவற்றை எலிகள் குடைகின்றன, கருஞ்சிவப்பு நட்சத்திரப் பிழம்புகளில்
நனைந்த ஆப்பிள்கள் மெல்லொலியுடன் கீழே விழுந்தன.
காரிருள் போர்த்திய இரவு. அலைந்து திரியும் சிறுவனின் வெண்ணிற இரவுச் சட்டையை
ஆவியுரு போன்று சுழன்று அடித்தது தென் திசை காற்று.
மரித்தவரின் கை அவன் வாயைக் குடைகிறது.
சோனியா மென்மையாகவும் அழகாகவும் புன்னகைக்கிறாள்.
III. படிகக் கல்லில் மூன்று தரிசனங்கள்
(எர்ஹார்ட் புஷ்பெக் கிற்கு)
1.
படிகக் கல்லின் ஊடே பார் : வாடிய திராட்சைக் கொடிகளால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு கிராமம் ; சாம்பல் மேகங்களின் மஞ்சள் குன்றுகளின் நிச்சலனம். நீரூற்றுகளின் மாலை குளிர்ச்சி: சாயைகளாலும் பாசிபடிந்த கற்களாலும் சட்டகமிடப்பட்ட இரு கண்ணாடிகள்.
இலையுதிர்காலப் பாதையில் சிலுவைகள் அந்தியில் ஆழ்கின்றன, துதிப் பாடல்களுடன் பயணிக்கும் புனிதப் பயணிகள், ரத்தக் கறைகள் சிதறிய மெல்லிய துணி. தனியே பயணிக்கும் உருவம் உள்ளே நுழைகிறது, சூனியப்பழத் தோட்டத்தினுள் வெளிரிய தேவதை நடந்து செல்கிறது.
இருட்டில் இருந்து மழைக் காற்று வீசுகிறது. மெல்லிய பெண்கள் குறுந்தெய்வங்களுடன் கூடுகிறார்கள். முகம் வெளுத்த காமத்தின் வழிபாட்டாளர்கள் அழகிய இருளடர்ந்த அல்லி மலர்களுடன் தம் பித்தை அலங்கரிக்கிறார்கள். கடவுளின் பொற்கோயிலை நோக்கித் தம் கைகளை உயர்த்துகிறார்கள்.
2.
ஓர் இளஞ்சிவப்புப் பனித்துளி ரோசுமரி மரத்திலிருந்து நிறைவுடன் தொங்குகிறது: துர்நாற்றம் வீசும் கல்லறைகளில் இருந்து ஒரு முணுமுணுப்பு பரவி மருத்துவமனைகளில் இருந்து எழும் சன்னி பீடித்த கொடிய அலறல்களையும் உறுதிமொழிகளையும் பற்றிக் கதைக்கிறது. நொய்ந்த சாம்பல் எலும்புக்கூடுகள் தம் குடும்பக் கல்லறைகளிலிருந்து எழுகின்றன.
கிழவர்களுக்காகத் தன் நீலச் சேற்றில் நடனமிடும் பெண் தன் அழுக்கு படிந்த தலைப் பின்னலைத் தன் கண்ணீரால் மூடுகிறாள். வில்லோ மரங்களின் உலர்ந்த கிளைகளில் கட்டுண்டு கனவு காணும் சிறுவர்களின் குட்டத்தால் முடிகளற்று முரடு தட்டிய மொட்டைத் தலைகள்.
வளைந்த ஜன்னல்களின் ஊடாக மென்மையாகப் பரவும் அந்திப்பொழுது. தன் களங்கத்தின் கரும் புண்ணிலிருந்து பின் வாங்கும் ஒரு புனிதர். சிதைந்த ஓடுகளில் இருந்து வெளியேறும் சிவப்பு நத்தைகள் சாம்பல் முள் கிரீடத்தில் குருதியைக் கக்கும்.
Art : сamus°сat°cigarette
கே.கணேஷ்ராம் ஆங்கிலப் பேராசிரியர். சுழலும் சக்கரங்கள், பத்து இரவுகளின் கனவுகள், மூன்று ரத்தத் துளிகள் ஆகிய சிறுகதை நூல்களையும் நடமாடும் நிழல், K3 ஆகிய குறுங்கதை நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.








Leave a Reply