1.
நூத்துக்கணக்கான
கால்நடைப் பிரசவங்களைப் பார்த்த தாத்தன்
ஈத்தின் ரத்தக்கோழையை
திரித்துத் திரித்து
தாயத்தும் அரணாக்கொடியும்
எனக்கு அணிவித்தான்.
கடுயிருட்டுக்கு முன்பே
கண்ணுமுழிக்கு முன்பே
கரிக்கு முன்பே
எள்ளுக்கு முன்பே
மிளகுக்கு முன்பே
பப்பாளி விதைக்கு முன்பே
என் நாவுச் சதையில்
சேனைக் கருப்பை
இழுவினான்.
2.
வாழ்வுக்காக
வடிய வடிய
குழுதாடி தண்ணீர் சுமந்த அம்மாச்சி
தனது தலையீரத்தைத்
தொட்டுத் தொட்டு வைத்துதான்
பட்டுப் போகாத சொற்களை
எனது கருநாவுக்கு ஊட்டினாள்.
அவளேதான் சொன்னாள்
எதுவுமே முடியாத பட்சத்தில்
குகைக்குள் வாழும்
ஓவியம் போன்றுள்ள
கருநாக்கை அத்து
ஆயுதமாக்கு
அதிகார ஈரக்குலைகள்
சிதறுமென.
Art : Bengt Lindström
மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் & தொடர்பியல் துறையில் ஆய்வு நிறைஞர் பட்டம் பயின்றுள்ள இவர், விகடனில் மாணவப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்துள்ளார். பிடிமண், நீர்ச்சுழி, கழுமரம் ஆகிய கவிதை நூல்களும் ஈத்து, கொடுக்கு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் கங்கு நாவலும் இவரின் படைப்புகள். சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையில் எழுத்தாளராகவும் இயங்கி வருகிறார். இவருடைய எழுத்துகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கவிதைகளும், சிறுகதையும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.








Leave a Reply