அன்றாட வாழ்வின் அகவெளி
ரெய்னர் பிராம்பாக் (1917-1983) நவீன ஐரோப்பிய கவிஞர்களுள் மிகத் தனித்துவமானவர். இரண்டாம் உலகப் போரின் வதைமுகாம்களின் வடுக்கள் அவர் ஆழ்மனதில் படிந்தாலும் தன் கவிதைகளின் வாயிலாகத் தன்னை விடுவித்துக்கொண்டவர்.
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தாலும் பிராம்பாக் ரைன் நதியின் கரையோர நிலவெளிக் காட்சிகளைக் கவிதைகளாக வடித்தவர். வீடுகளுக்கு வர்ணம் பூசுபவராகவும், தோட்டக்காரராகவும் பல்வேறு பணிகளைப் புரிந்தவாறு தன் வாழ்நாட்களைக் கழித்த பிராம்பாக் பிற்காலத்தில் புகழ்வெளிச்சம் அவர்மேல் வீழ்ந்தாலும் அதிலிருந்து விலகியே வாழ்ந்தவர்.
இயற்கைக் காட்சிகளின் சின்னஞ்சிறு விவரங்களையும் மாற்றங்களையும் கவிதைகளுக்கான பாடுபொருட்களாக உருமாற்றினார் பிராம்பாக். சிறுகல்லும் சிற்றிலையும் அவரது விவரிப்பில் பிரபஞ்ச இருப்பின் சாட்சியங்களாக உணரப்படுகின்றன. அரூபக் கவிதையியலின் பல்வேறு பரிமாணங்களின் வரைபடமாக நவீனத்துவ/பின்நவீனத்துவக் கவிதைகள் விளங்குகையில் பிராம்பாக்கின் கவிதைகள் வாழ்வின் organic தருணங்களை ஆவணப்படுத்துகின்றன. அன்றாடத்தின் அகவெளி தரிசனங்களாக நீட்சியடைகின்றன.
மிகச் சொற்பமான கவிதைகளையே இயற்றினாலும் ரெய்னர் பிராம்பாக்இறுதிவரைப் பொருளுலகுடன் சமரசம் செய்துகொள்ளாமல் இயற்கையை அவதானிப்பதையே தன் வாழ்வின் விளக்கமாகக் கண்டுணர்ந்தார்.
1.
எட்கர் ஆலன் போ
பூங்காவில் என்னையும் கவிதையையும் தவிர வேறு யாரும் இல்லை.
சூரியாஸ்த்தமனத்தில் பழைய எல்ம் மரங்களினடியில் போவைப் போன்ற ஒருவர் மட்டும் தோன்றுகிறார்.
நான் போவைப் பார்த்திருக்கிறேன்.
கொட்டும் மழையில் ஈர இலைகளின் மேல்
எல்ம் மரங்களினடியில் அவர் நின்று கொண்டிருந்தார். நான் போவைப் பார்த்தேன்.
மென்பட்டுத் துணியில் தைத்த மேல் கோட்டை உடுத்தியிருந்தார்.
எதற்காகவோ மிகுந்த விசனத்துடன் காணப்பட்டார்.
முட்டாளாக இருக்காதே ப்ராம்பாக், ஒரு பாடலைப் பாடு,
ஒரு பறவையைக் கற்பனை செய்து கொள்,
போவின் கரும்பறவையை எடுத்துப் பறக்க விடு, அது பறக்கட்டும்…. பறக்கட்டும்,
எட்கர் ஆலன் போ மழையில் எல்ம் மரங்களோடு மறைவதைப் பார்த்தேன்.
2.
பூஜ்ஜியத்தில் இருந்து பத்து டிகிரி கீழே,
மேலும் என் நீர் கசியும் கண்களைத் துடைக்கும் கைக்குட்டைக்குள் ஒரு நல்ல தும்மல்.
பனிப்பாளம் வீறல் விடும் வரை துள்ளிக் குதித்துக் கொண்டாட்டம்,
ஒரு மென் நரம்பிசைக்கருவியின் இசை
தொடர்ந்து என் செவியினுள் ரீங்காரமிடுகிறது.
3.
கரீபியாவிலிருந்து வந்த ஒரு தபால் அட்டை
தபால் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டது.
ஓ! நல்லது, கரீபியா.
எனக்கு முன் – – – ஆசிர்வாதங்கள் அனைத்தும் மேலிருக்கும் சொர்க்கத்திலிருந்து வருவது – – –
ஒரு வெண் கருவனம்.
4.
வெறும் கோடை என்பதை விட
கோடைகாலத்திற்கு உறுதியாகப் பல பெயர்கள் உண்டு.
உதாரணத்திற்கு உலீயா எனும் பெயர்.
சோளத்தின் மஞ்சளையும் கம்பின் சிவப்பையும் புல் தரையையும் வனப்பச்சையையும் ஒன்றாகக் கோர்த்து வார்த்த பெயர்.
5.
நண்பர்கள்
நான் அணிந்திருக்கும் இந்தச் சட்டை வில்லி எனக்கு வழங்கியது,
ஒரு குளிர் நாளில் உலீயா எனக்குக் கம்பளிச் சட்டை வாங்கித் தந்தாள்,
நான்கு பைகளை உடைய காற்சட்டை கிளார் அன்பளிப்பாக அளித்தது,
வெர்னரின் கவிதைகள் நம்பிக்கையை அளிக்கின்றன,
காலணிகள் மாக்ஸ் இடமிருந்து வந்தவை
அவைகளோடு நான் எப்பொழுதும் நம்மை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறேன்.
6.
சிறு குறிப்பு
மனதில் மண்டியிருக்கும் இருளை இறக்கி வைக்க எழுதினேன், ஆனால் இயலவில்லை.
கொத்தனிடம் கலவை இல்லை.
சிற்பியிடம் உளி இல்லை
தச்சனிடம் மரம் இல்லை
நம்மால் ஏது இயலும்!
7.
பாடலின் நிலக்காட்சி
கிராமப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் ஒரு நாட்டுப் பாடலைப் பாடுகிறார்கள்.
மேசைகளில் இருந்து மையால் தீண்டப்பட்ட ஒரு வனம் வளர்கிறது,
ஏகாந்த தூயவெளி, ஒரு ப்ளுபெர்ரி தொங்கும் தோட்டம்.
பிறகு, கணிதப் பாட வேளையில் வழக்கம் போல
சன்னலுக்கு வெளியே எப்போதும் காட்சி தரும் ஓர் உருளை விளைநிலம்.
அப்போது ஒரு செயற்கை நட்சத்திரம்
பூமியை வட்டமிடும்.
8.
மூன்று நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது
நிதானமாக நிறுத்திப் பெய்யும் மழை.
நீலம், மஞ்சள், பச்சை வண்ணங்களில் என் மூன்று கலர் பென்சில்களை எடுத்து
ஒரு வானத்தை வரைகிறேன்
அதில் ஒரு சூரியன்
அதனடியில் ஒரு மஞ்சள் மலர்களின் புல்வெளி
ஒரு பேப்பரின் மீது — — —
புல்வெளியில் ஒரு சிவப்புக் கறை ——
சிந்திய ஒயின்.
9.
அயல் தேசத்தவன்
என்னிடம் வழி கேட்டவன் கிரேக்க தேசத்தில் இருந்து வந்திருந்தான்.
ஆர்கோஸ், சியோஸ், ஏதென்ஸ்.
பாடென் ரயில் நிலையத்திற்கு வழி சொல்வது மிகச் சிக்கலாக இருந்தது.
நான் அவனுக்கு ஓடிசியை நினைவுறுத்தினேன்.
அவன் தன் தொப்பியை உயர்த்தினான்,
மழைத்துளிகளில் டால்பின்கள் வெள்ளியைப் போல் ஒளிர்ந்தன.
10.
எனது செவிப்பறைகளா காரணம்? சில நாட்களாகச் செவிகள் ஒரு புது அலைவரிசைக்கு ஆட்பட்டு விட்டன.
தூண்டிலிலே மீன் தொங்கிக் கொண்டிருந்த போது அதன் பீதியூட்டும் அலறல்கள் என் செவிகளைக் குடைந்தன.
எனது மீன்பிடிப்பதற்கான உரிமத்தைக் கிழித்து எறிந்தேன். என் தூண்டிலை விற்று விட்டேன்.
11.
ஓய்வுப் பொழுது பணி பொழுது. இரவுணவுப் பொழுது மேலும் உறக்கத்தின் பொழுது—–
விரையும் இரயில்கள் ஊரும் இரயில்கள்
வருவதும் போவதும் —–
நவம்பரின் முதல் பொழுதுகள், ஆனாலும்
சற்று நேரத்திற்கு முன்பு நான் குக்கூவின் குரலைக் கேட்டது போல உணர்கிறேன்.
12.
அக்டோபரில் இறுதி நாள். உன் தோள் பையை எடுத்துக் கொண்டு உனக்குத் தெரிந்த பாதைகளின் ஊடே மீண்டும் திரிந்து கொண்டிரு.
புற்களின் நடுவே தெரியும் எல்லையைக் குறிக்கும் நித்தியமான கருங்கல்.
காட்டின் எல்லையில் கரடு முரடாகச் செதுக்கப்பட்ட இருக்கை, அதில் அமர்ந்து
வெளிர் நீல வானைப் பார்த்துக் கொண்டே இரு.
ஹோல்டர்லினுடைய வரிகள் : “ஆனால்
நம் ஆன்மாவையும் குறுகிய வாழ்வையும்
அவிழ்த்துப் பிரிப்பது மிக இனிமையான அனுபவம்தான்”.
13.
சுவடுகள்
குழிகளுக்குள் தேங்கும் மழை நீர்,
தகர்க்கப்படும் நிலவறைகள்,
எறும்புப் புற்று ,
நெருப்பில் எஞ்சிய சாம்பல் ,
பறவைகளின் எச்சங்கள்—-
இவையெல்லாம் அற்ப விஷயங்கள்
என்று நீ எண்ணுகிறாயா? சரி,
நம் இருவரைப் பற்றியும் எறும்புகளைப் பற்றியும் பேசுவோம்,
நாம் எப்போதைக்குமாய் மறைவதற்கு முன்.
14.
W.க்காகச் சில வார்த்தைகள்
என் நண்பன் W. எப்பொழுதும்
தரிசனங்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மேதை.
ஆனால் குறித்த நேரத்தில் தன் சந்திப்புகளை நிகழ்த்தும் வரம் மட்டும் அவனுக்கு வாய்க்கவில்லை.
இன்று காலைப் பொழுதில் இறுதியாக
அவனை நேற்று மாலை வருமாறு வேண்டினேன்.
அவன் குறித்த நேரத்தில் வந்து விட்டான்.
15.
பல நாட்களுள் ஒரு நாள்
ஜெரானியம் மலர்கள் கசாப்புக் கடையின் ஜன்னல்களுக்கு இடையில் பூத்துக் குலுங்குகின்றன.
மேலும், என்னை வெறுக்கும் யாரோ ஒருவர் தன் தொப்பியை மேல் உயர்த்தி முகமன் செய்கிறார் ——
ஏழு மணிக்கு மணி ஏழு அடிக்கிறது, வேறொன்றுமில்லை.
இரவு, என்னை விளக்கை நோக்கி விரட்டுகிறது.
கே.கணேஷ்ராம் ஆங்கிலப் பேராசிரியர். சுழலும் சக்கரங்கள், பத்து இரவுகளின் கனவுகள், மூன்று ரத்தத் துளிகள் ஆகிய சிறுகதை நூல்களையும் நடமாடும் நிழல், K3 ஆகிய குறுங்கதை நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.








Leave a Reply