திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், அயோத்திதாசப் பண்டிதர் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்.
காதல், காமம் தாண்டிச் சிந்திக்கத் தெரியாத பெரும்பான்மைத் தமிழிலக்கியவாதிகளில் மொழி, இலக்கியம், பண்பாடு, அரசியல், வரலாறு குறித்து எழுத்து, பேச்சு, கள ஆய்வு போன்ற பல்தளங்களில் இயங்கி வருபவர் ஸ்டாலின் ராஜாங்கம். இவரின் மிக முக்கிய ஆக்கங்களில் ஒன்று 2016 ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியான ‘ஆணவக் கொலைகளின் காலம்’ என்னும் நூல். சிறுகதைகள், திரைப்படங்கள், அரசியல் தோலை உடுத்திய சாதிச் சங்கங்கள், ஆய்வறிக்கைகள் மூலம் தமிழ்ச் சாதிய நிலவரைபடத்தின் ரேகைகளைக் குறுக்குவெட்டுத் தோற்றத்துடன் இப்பனுவலில் அணுகியிருக்கிறார்.
அன்றாடத்தின் ஒரு நிகழ்வாக ஆணவக் கொலைகள் நடைபெறுவதைச் செய்தி ஏடுகளில், யூடியூப் சேனல்களில், மீம்ஸ்களில், ரீல்ஸ்களில் சாதாரணமாகக் கடந்து செல்கிறோம். இந்நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆணவக் கொலைகளின் காலம் பண்பாட்டு இழிவைப் பிரதிபளிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது. இந்நூலினை மையமாக வைத்து நடைபெற்ற உரையாடலிலிருந்து….
ஆணவக் கொலை என்பதை எவ்வாறு வரையறுப்பது?
வரையறை என்ற சொல் நிறுவனவாதம் சார்ந்தது. எதன் பெயரில் நடத்தப்பட்டாலும் கொலை கொலைதான். அது கொலை என்பதுதான் அதற்கான வரையறை. மிக நீண்ட காலமாகவே இங்கு அக்கொலைகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. நம்முடைய கதைப்பாடல்களும், அம்மன் சாமிகள் தொடர்பான தோற்றக் கதைகளும் பெரும்பாலும் சாதி கடந்த காதலுக்கு எதிராக நடந்த கொலைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதனைக் குறிப்பிட ஒரு பெயரைக் கூட யோசிக்க முடியாத அளவிற்கு அது இங்கு இயல்பாக இருந்திருக்கிறது அல்லது மறைபொருளாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அதற்கு எதிராக யோசிக்க முடியாத சூழலும் நிலவியிருக்கிறது. ஆனால் நம்முடைய மரபு நவீன அரசியல் போல அவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கவில்லை. இந்தவகைக் கொலைகள் அதற்குத் தெரிந்தே இருந்திருக்கிறது. அது தனக்கே உகந்த முறையில் இந்தக் கொலைகளைத் தன் அமைப்பின் அங்கமாக்கி வைத்து இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் ஆணவக் கொலை என்ற பெயரைக் கடந்த சில ஆண்டுகளில் நாம் சூட்டியிருக்கிறோம்.
Honour Killing என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் பெயர்ப்பு என்ற முறையில் கௌரவக்கொலை என்ற சொல் முதலில் பத்திரிகைகளில் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பிரச்சினையைத் தனித்துப் பேச வேண்டிய அரசியல் தேவை ஏற்பட்ட போது எந்த வார்த்தையைப் பயன்படுத்துவது என்ற விவாதம் எழுந்தது. எப்படியான சொல்லைப் பயன்படுத்துவது என்ற விவாதம் குறிப்பிட்ட பிரச்சினையை நாம் எந்தப் பார்வையில் பார்க்கிறோம் என்பதோடு தொடர்புடையது. எனவே இந்த வார்த்தை தொடர்பாக நடந்த விவாதங்கள் முக்கியமானவை. யாராவது ஒருவர் அவற்றையெல்லாம் தொகுக்கக் கூடச் செய்யலாம். அத்தகைய விவாதத்தினூடாக நிலைபெற்ற சொல்தான் இன்றைய ஆணவக் கொலை என்பது.
எந்த முன்னொட்டும் இல்லாமல் ஆணவக்கொலை என்ற சொல் வழங்கப்பட்டாலும் அது சாதி காரணமாக நடத்தப்பட்ட கொலையைக் குறிக்கும் வகையில்தான் இங்கு அர்த்தப்படுத்தப்படுகிறது. நாம் அவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும். காதல் தொடர்பான கொலைகள் சாதியால் மட்டும் நடப்பவை அல்ல. ஒரே சாதிக்குள், ஒரே ஊருக்குள் கூட இது போன்ற கொலைகள் நடத்தப்படுவதுண்டு. அவற்றை நாம் மலினப்படுத்தவில்லை. அவையும் கொலைகள்தாம். மற்ற கொலைகள் எவ்வாறு தடுக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அந்தக் கொலைகளும் தடுக்கப்பட வேண்டும். அதேவேளையில் அக்கொலைகளைச் சாதியைக் கருத்தில் கொண்டு நடத்தப்படும் கொலைகளுக்கு இணைவைத்துச் சொல்லக் கூடாது. சாதியின் தன்மையும் தாக்கமும் ஆழமானது. எனவே காதல் தொடர்பாக நடக்கும் எல்லாக் கொலைகளையும் ஆணவக் கொலை என்ற பெயரிலேயே குறிப்பிடக் கூடாது. சாதி தொடர்பான கொலைகளைக் குறிப்பதற்காகவே அச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாக் கொலைகளையும் அதேபெயரில் குறிப்பிட்டால் சாதி வகிக்கும் ஆழத்தைக் காண நாமே தவற விடுகிறோம் என்று அர்த்தமாகிறது.
அண்மையில் ஒரு தலித் செயற்பாட்டாளர் ஒரே சாதிக்குள் நடந்த காதல் திருமணக் கொலையை இதுவும் ஆணவக் கொலையே என்று சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். இது சாதி காரணமாக நடத்தப்படக்கூடிய ஆணவக் கொலை என்பதன் ஆழத்தை நீர்த்துப்போக வைத்து விடும். சாதி அல்லாத காரணத்திற்காக நடத்தப்படும் கொலைகளைக் குறிப்பிட வேறு சொல்லைப் பயன்படுத்தலாம். இந்த விசயத்தில் பலரும் கருத்துகளைச் சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள்தாம் முதன்மையாகப் பேச வேண்டும். எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் மட்டுமே எல்லாக் கொலைகளையும் ஆணவக் கொலை என்ற சொல்லுக்குள் அடக்கக் கூடாது என்று தம்முடைய முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். இதுதொடர்பான விவாதமொன்றை பெருந்தேவி தம்முடைய கட்டுரை ஒன்றில் முன்பே விரிவாக விவாதித்திருந்தார். அதில் அவர் ஆணாதிக்கமும், சாதியமும் இக்கொலைகளில் பங்கு வகிக்கின்றன என்பதைக் கூறி அதனைக் குறிப்பிடும் வகையில் ஆணாதிக்கச் சாதியாணவக் கொலைகள் என்ற சொல்லைப் பரிந்துரைத்தார். கொலைக்குக் காரணமாகும் எல்லா அம்சங்களையும் பெயரில் சேர்க்க விரும்பியிருந்தார் அவர். இவ்விரண்டும் இல்லாமல் குறிப்பிட்டால் அச்சொல் பொதுவானதாகி விடும் என்றும் அவர் கருதியிருந்தார். இப்போது அதுதான் நடந்திருக்கிறது.
அதேவேளையில் ஆணவக்கொலை என்ற சொல் சாதி காரணமாகக் கொலை செய்யப்படுவதைக் குறிக்கும் வகையிலேயே நடைமுறைக்கு வந்து நிலை பெற்றது. நாளடைவில் சொல்லில் நிலவும் வடிவத்தை வைத்தே அர்த்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலையும் நடக்கும். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு வரையறைகள் அமைய வேண்டும்.
மயிலாடுதுறை வைரமுத்து ஆணவக்கொலையைப் பெண்ணின் தாய் தானே முன்னின்று நடத்தியிருக்கிறார். மேலும், கவின் படுகொலையில் நேரிடையாக சுர்ஜித் பங்குபெற்றாலும் இக்கொலையின் பின்னணியில் பெண்ணின் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளார்கள். இவ்வாறு ஆணவக்கொலையில் பெண்களின் பங்கும் இருக்கும் போது வெறுமனே ‘ஆணாதிக்கம்’, ‘ஆணாதிக்கச் சாதியாணவக் கொலைகள்’ என்று வரையறை செய்யப்படுவது ஒற்றைத்தன்மையுடன் பார்ப்பதாக உள்ளதே?!
ஆணாதிக்கம் இருப்பதைச் சொல்வதென்பது பெண்கள் இக்கொலைகளில் ஈடுபட மாட்டார்கள் என்பதல்ல. ஆண் ஒழுங்கை ஏற்றிருக்கும் பெண்கள் இருப்பார்கள் என்பது உண்மைதானே. மண உறவில் பெண்ணின் சுய தேர்வு இருப்பதில்லையே. ஆணுடைய விருப்பத்திற்கேற்றபடியே அது அமைகிறது. பெண்ணின் பாலியல் தேர்வைக் குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த ஆண்களுக்கானதாக மாற்றுவதன் மூலம் அந்தக் குழுவின் அடையாளம் உடையாமல் காப்பாற்றப்படுகிறது. பெண் மேல் தொடர்புடைய குடும்ப ஆண்களால் நிறுவப்படுகிற ஆதிக்கம், அக்குடும்பத்தை உள்ளடக்கியிருக்கிற சாதியின் ஆண்கள் சார்ந்ததாகவும் அமைகிறது. இவற்றைக் கலாச்சாரமாக மாற்றுவதன் மூலம் அதனைக் காப்பவர்கள் என்கிற ‘அதிகாரம்’ தங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதான பெருமிதத்தில் பெண்களும் அவற்றைக் காப்பதில் ஈடுபடுவார்கள். மேலும் இதுபோன்ற தருணங்களைப் பிரச்சினை நிகழும் பின்புலத்தில் வைத்தும் புரிந்து கொள்ள வேண்டும்.
தொண்ணூறு சதவீத தமிழ்த் திரைப்படங்கள் சாதி கடந்து, அந்தஸ்து கடந்து, வர்க்க நிலை கடந்து காதலிப்பதனால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றன என்கிற பார்வையும் இவை ஆணவக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவை என்கிற கருத்தும் உங்களுக்கு எந்தப் புள்ளியில் தோன்றத் தொடங்கின?
நான் பள்ளிக்கூடக் காலங்களில் அதிகம் திரைப்படங்கள் பார்த்தவன். என் சக நண்பர்களோடு அதிகம் சினிமாவைப் பற்றியே பேசியிருக்கிறேன். ”வீணாகப் போவதற்கா சினிமா பார்க்கிறாய்” என்றார்கள். ஆனால் நான் சினிமா பற்றி எழுத வந்த போது சிறுவயதிலிருந்து பெற்ற சினிமா அறிவைப் பயன்படுத்திக் கொண்டேன். தீவிர அரசியல் பிரக்ஞை, சிறு பத்திரிகை விமர்சன மரபு சார்ந்து சினிமாவைப் பற்றி எழுத வந்தவன் நான். எனவே அவற்றை நல்லாருக்கு – நன்றாக இல்லை என்று சொல்வதிலிருந்து விலகி ஆழமாகப் பார்க்க வேண்டும் என்ற புரிதல் கிடைத்திருந்தது. வசனம், காட்சி, கதையமைப்பு போன்றவற்றை உற்றுக் கவனித்து அதன் அர்த்தத்தை நுட்பமாக விவரிப்பது இதன் அடிப்படையாக இருந்தது. பிறகு வெகு மக்கள் மனநிலையைப் புரிந்துகொள்ள வெகுஜன சினிமாவைச் சான்றாகக் கொள்ளலாம் என்ற புரிதலை சினிமா விமர்சன முன்னோடிகள் உருவாக்கியிருந்தனர். இத்தகைய பின்னணியிலிருந்து சினிமா பற்றி எழுத முற்பட்டவன் நான்.
நான் எழுத ஆரம்பித்தபின் நடந்த இரண்டு மாற்றங்கள் முக்கியமானவை. ஒன்று அயோத்திதாசர் வாசிப்பு. இரண்டு அதன் தொடர்ச்சியில் வழக்காறுகள் பற்றி கிடைத்த பார்வை. அயோத்திதாசர் பௌத்தத்தை இந்திய அளவிலிருந்து பார்த்ததை விட உள்ளூர் சார்ந்து தந்த விளக்கங்களே அதிகம். எனவே உள்ளூர்க் கதைகள், விழாக்கள் போன்றவற்றைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். இதோடு சேர்த்து அவருடைய சிந்தனைமுறைகளையும் சொல்ல வேண்டும். பெயர்கள், கதைகள், சடங்குகள் ஆகியவற்றின் அறியப்பட்ட அர்த்தத்தைத் தாண்டி உள்மெய்யாக உறைந்திருந்த அர்த்தத்தையே அவரின் வாசிப்பு மீட்டெடுத்தது. நான் அயோத்திதாசர் ஆய்வில் அவரைப் பற்றி ஆராய்வதைப் போலவே அவருடைய சிந்தனைகளை எடுத்துக் கொண்டு இங்கு நிலவும் பிற விசயங்களைப் புரிந்துகொள்வதற்குப் பொருத்திப் பார்க்கும் வேலையையும் செய்து வருகிறேன். குறிப்பாக என் திரைப்பட ஆய்வுகளில் இதனை அதிகம் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அவர் பெயரைப் பயன்படுத்துவதில்லை. வேண்டுமென்றே தவிர்த்து வந்திருக்கிறேன். ஆனால் அப்பார்வைகள் அயோத்திதாசரின் சிந்தனைகள் இல்லாமல் சாத்தியமில்லை.
இந்த வகையில்தான் சினிமாவில் இடம்பெறும் உள்ளூர்க் கதைகள், தெய்வங்கள் பற்றிய கதைகளின் உள்ளார்ந்த மெய் எனப்படும் இன்னொரு அர்த்தத்தை வாசித்தறிய முற்பட்டேன். கதைகளை, பெயர்களை, வசனங்களைப் பிரித்துப் பார்த்த போது அல்லது உடைத்துப் பார்த்த போது வேறொரு அர்த்தம் கிடைப்பதையும் அத்தகைய உள்ளூர்க் கதைகள் எவ்வாறு சினிமா சட்டகத்திற்கு ஏற்ப படமாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க முடிந்தது. அந்த சினிமாக்கள் அதனாலேயே மக்களிடையே செல்வாக்கு பெற்றிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களின் நினைவுகளில் தெய்வக் கதைகள்/வழக்காற்றுக் கதைகள் இருந்ததாலேயே அவை சினிமா என்ற ஊடகத்திற்குள் வந்த போது ரசிக்கப்பட்டன. சினிமா கம்பெனிகளும் அத்தகைய கதைகளையே படமாக்கின. பிறகு அவையே சினிமா கதைக்கான வகைமாதிரியாக நிலைத்தது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடிந்தது. அதேவேளையில் நம்முடைய மரபு இத்தகைய கொலைகளை நிகழ்த்திக் கொண்டே பின்னர் அவற்றைத் தெய்வமாக்கியது, திருவிழாவாக்கியது. இதையே இன்றைக்குச் சாதி கடந்த காதலை சினிமாவில் ரசிப்பதாலேயே இச்சமூகம் அவற்றைத் தடுக்கத் தவறுவதில்லை என்பதற்கும் அப்படியே பொருத்தலாம். இந்த வாசிப்பில்தான் தமிழ் சினிமாக்களின் தொண்ணூறு சதவீதப் படங்கள் சாதி கடந்து, அந்தஸ்து கடந்து, வர்க்க நிலை கடந்து காதலிப்பதனால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கின்றன என்பதைப் பார்க்க முடிந்தது.
சமூகத்தைப் புரிந்துகொள்வதற்குப் பண்டை எழுத்திலக்கியங்களை மிகையாகக் கணக்கில் எடுத்து விட்டிருக்கிறோம் என்கிற பார்வை எனக்குண்டு. வழக்காற்றுத்தன்மை கொண்ட இலக்கியங்களே சமூக வாழ்வை அதிகம் காட்டி இருக்கின்றன. நன்கு திட்டமிட்டு எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் நிலங்களைத் தாண்டி காதலிக்கும் சமூக எதார்த்தம் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கதைப்பாடல்கள் அவற்றை அப்பட்டமாகக் காட்டுகின்றன. இந்த வகையிலும் உள்ளூர்க் கதைகளைக் கவனித்து வந்த போதுதான் இந்த வகை கதைகள் சினிமாவிலும் கதையாக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
இந்த உள்மெய்யை வாசிப்பது என்ற அணுகுமுறையால் நிறைய அனுகூலங்கள் கிடைத்தன. நாம் எதிர்பார்க்காத சாதாரண இயக்குனரின் கதையின் உள்மெய்யில் வேறொன்று இருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்த வகையில் கிராமக் கதைகளைப் படமாக்கி வந்த கஸ்தூரிராஜாவின் படங்கள் முக்கியமானவையாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. சாதி கடந்த காதலால் கொல்லப்பட்டு, வணங்கப்பட்டு வரும் அம்மன் கதையை ‘ஆத்தா உன் கோயிலிலே’ என்ற படமாக எடுத்திருந்தார் என்பதைப் பார்க்க முடிந்தது. சினிமாவுக்குள் வந்த கதைப்பாடல்தான் இது.
சங்க இலக்கியங்களில் காதலிக்கும் சமூக எதார்த்தம் மறைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். இது எதனால் நிகழ்ந்ததாகக் கருதுகிறீர்கள்?
அது கற்பித நிலப்பரப்பில் நிகழ்பவை என்பதால்தான் அவ்வாறு சொல்கிறேன். இவ்வாறு சொல்வது கவிதையில் அது பெற்றிருக்கும் சாதனையை மறுப்பதாகாது. அதன் கவித்துவச் சாதனையை ஒத்துக் கொள்கிறோம் என்பதாலேயே அதில் காட்டப்படும் காதலில் எதார்த்தம் பிரதிபலிக்கிறது என்று சொல்லி விட முடியாது. நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைப்பட்ட சமூகம் எப்போதும் சாத்தியமில்லை. ஆனால் சங்க நிலப்பரப்பு ஒரு ஒழுங்கிற்குட்பட்டுக் காட்டப்படுகிறது. அதில் மனித உணர்வுகள் வெளிப்படுவதற்கான பின்புலமாக திணையை முன்வைத்திருக்கிறார்கள். அங்கு காதலின் மீறல்களுக்கு இடமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. அந்தந்த நிலத்தில் பிறந்தோரை அந்தந்த நிலத்திலேயே காதலிக்க வைக்கிறது. அங்கு சாவோ, பிரிவோ, அதன் காரணமான மோதல்களோ இல்லை. சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் அவை சரி செய்யப்பட்டுவிடுவதாய்க் கவிதைகள் முடிகின்றன.
சங்க இலக்கியங்களில் இன்றைக்கு இருப்பது போல சாதி இருந்ததா? என்பது ஆய்விற்குரியது. ஆனால் அந்தந்த நிலத்திலேயே காதல் உறவுகளும் மணங்களும் அமைவதைக் காட்டி தமிழ்ச் சமூகத்தில் சாதிக்கான மூலம் இருந்ததாகச் சிலர் கருதத் தொடங்கியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தர்மபுரி வன்முறையை ஒட்டி சங்க இலக்கியங்களைக் காட்டி தமிழ்ச் சமூகத்தில் ஒரே குழுவுக்குள்தான் திருமண உறவு இருந்தது என்று கூற முற்பட்டவர்களை நானறிவேன். இவ்வளவு ஏன்? திணை என்கிற அழகியல் பற்றி கடந்த இருபதாண்டுகளில் ஒரு கவனம் கல்விப் புலங்களில் ஏற்பட்டிருக்கிறது. அது கவிதை அழகியல் என்ற திசையில் மட்டுமல்லாது வேறு திசைகளிலும் பொருள் கொள்ளப்பட்டது. திணையில் இடம்பெறும் நிலம், அதற்கேற்ற தொழில் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இன்றைக்குக் குறிப்பிட்ட தொழில், நிலம் ஆகியவற்றோடு தொடர்புறுத்தி கற்பிதம் செய்துகொண்டிருக்கும் சமூகக் குழுக்களின் உரிமைகோரும் பிரதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. அத்தகைய உரிமைக் கோரல்கள் இன்றைய சாதி அமைப்பை மறைமுகமாக மாற்றங்கள் ஏதுமற்று என்றென்றைக்குமானதாகச் சாராம்சப்படுத்துகிறது. மேலும் சாதி அமைப்பைத் தொன்மையானதாக்குகிறது. இன்றைய இந்நிலையை மட்டுமே வைத்துக்கொண்டு சங்க இலக்கியத்தைக் குற்றம் சாட்டவில்லை. அவற்றிலிருக்கும் வரையறையையே நான் கவனப்படுத்த விரும்புகிறேன். சங்க கவிதைகளில் இடம்பெற்றிருக்கும் நேரடி விசயங்களில் விட உவமையாக, உதாரணமாக, தொன்மமாகச் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களில் சமூக எதார்த்தத்தின் சாயல் அதிகமிருப்பதாக நினைக்கிறேன்.
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கும் போது ஆணவக் கொலைக்கென்று தனிச் சட்டம் தேவையில்லை என்று திராவிடக் கட்சிகள் சொல்வதன் பின்னணி என்ன? இதையொட்டி, திராவிடக் கட்சிகள் சமூகப் பிரச்சினைகளில் இருந்து விலகிவிட்டன என்ற குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்ததைத் திராவிடக் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்கின்றன?
எஸ்சி.எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கும் போது ஆணவக் கொலைகளுக்கு என்று தனிச் சட்டம் தேவையில்லை என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லி விட்டார்களா என்ன? அவர்கள் அப்படியும் சொல்லவில்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. அந்தச் சட்டமே முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்கிற எதார்த்தம் ஒரு பக்கம் இருக்கத்தானே செய்கிறது. நான் இங்கு திராவிடக் கட்சிகள் என்று குறிப்பிடுவது திமுக அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளையும் சேர்த்துதான். ஆணவக்கொலைத் தடுப்புச் சட்டம் போடுவது இருக்கட்டும். முதலில் அவர்கள் இந்தக் கொலைகளைப் பற்றி நாங்கள் எப்படிப் பார்க்கிறோம்? என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிக் கூட எந்தத் தீர்க்கமான கருத்தையும் சொன்னதில்லையே. கொலை என்பதால் அதைப் பேசுகிறோமோ ஒழிய ஆணவக்கொலை மட்டுமா இங்கு பிரச்சினை? சுடுகாட்டுப் பாதை பிரச்சினைகள், கோயில் நுழைவுப் பிரச்சினைகள், மாணவர்களிடையே சாதி மோதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
சட்டம் போடுவது இருக்கட்டும். அவர்கள் நடத்தும் மாநாடுகளில், பயிலரங்குகளில் இதுபோன்ற பிரச்சினைகள் நீடிப்பது, பெருகியிருப்பது பற்றி அறிவார்ந்த ரீதியில் விவாதிக்கப்படுகிறதா? சமூக நீதியைப் பேசும் அரசியல் கட்சிகளாகத்தானே தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள்?” இல்லையில்லை இவர்கள் சமூக இயக்கங்கள் அல்ல, அரசியல் கட்சிகளான இவர்கள் சமூக இயக்கங்கள் போல பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது”என்று சொல்கிறார்கள். இதன் பொருள் என்ன? பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்டோர் குறித்துப் பேசினால் ஆதிக்க வகுப்பினர் கோபித்துக்கொண்டு ஓட்டுப் போட மாட்டார்கள் என்பதுதானே? இந்த எதார்த்தத்திற்காக நாம் வருத்தப்பட வேண்டும். இவ்வளவு சாதனைகளை உருவாக்கி விட்டோம் என்று சொல்லக்கூடிய மண்ணில் ஒடுக்கப்பட்டோருக்காகப் பேசுவதால் பாதிப்பு வரும் என்றால் நாம் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படும் இந்த மாற்றங்களின் அர்த்தம் என்ன என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
தேர்தலில் ஈடுபடாத கி.வீரமணியின் திராவிடர் கழகம் இப்போதெல்லாம் அரசியல் பிரச்சினைகளைத் தானே பேசிக்கொண்டிருக்கிறது. இந்தச் சாதிப் பிரச்சினைகளைச் சமூக பிரச்சினைகளாகக் கருதி செயல்படுவதில்லையே ஏன்? கி.வீரமணியின் தி.க.வைவிட ஒப்பீட்டளவில் நல்ல செயற்பாடுகளைக் கொண்ட பிற திராவிடக் கழக அமைப்புகளும் கூட முன்பு போல் இல்லை. ஏகலைவன் கட்டை விரல் பற்றிப் பேசுகிறவர்கள் தமிழகக் கல்வி நிறுவனங்களில் சாதி மோதல்கள் பரவலாகி வருவதை விவாதிப்பது தவறாகிவிடுமா? பொதுவாக திராவிடக் கட்சிகளுக்கு சாதி வேண்டுமா என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது மட்டும் பொத்தாம் பொதுவாக ஒழிய வேண்டும் என்று சொல்வார்கள். மாறாகச் சாதி ஒழிப்பு என்கிற ஒரு சித்தாந்தத்தை அவர்கள் முதன்மையாகக் கொண்டிருப்பவர்களாகவோ, அவற்றை ஒழிப்பதற்கான நேரடியான – ஆக்கபூர்வமான திட்டங்கள் என்னென்ன என்ற பார்வையைக் கொண்டவர்களாகவோ இல்லை. அதனால்தான் சாதிகளுக்கு இடையே மோதல் வருகிற போது அவற்றில் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்லவேண்டும் என்கிற பார்வை அவர்களுக்கு இல்லை.
ஒவ்வொரு சாதியையும் திருப்திப்படுத்துவது சாதிகளின் உணர்ச்சியை அதிகப்படுத்தியிருக்கிறதா? குறைத்து இருக்கிறதா? என்கிற ஆய்வு இங்கு இல்லை. அதிகப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. இந்துத்துவ அமைப்புகளும் இந்த அரசியலையே செய்கின்றன. தாங்களே அந்தக் காரியங்களைச் செய்து வருவதால் இந்த விசயத்தில் இந்துத்துவ அமைப்புகளைத் திராவிடக் கட்சிகள் கண்டிக்கவும் முடிவதில்லை. ஒவ்வொரு சாதியையும் தனித்தனியாகத் திருப்திப்படுத்துவது சாதியைப் பலமிழக்கச் செய்யவில்லை எனில் அவற்றில் மறுபரிசீலனை வேண்டாமா? இது தொடர்பாக திராவிட மேடைகளில் விவாதங்கள் இருந்ததே இல்லை. அவர்கள் முற்றிலும் தேர்தல் சார்ந்த கட்சிகளாக மாறிவிட்டிருப்பது என்பது இதில் இன்னும் முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது. புதியதாக உருவாகியிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் இதில் எந்தப் பார்வையும் இல்லை. ஒன்று அவர்கள் பேசுவதில்லை. இரண்டு அப்படியே பேசினாலும் திராவிட அரசியலை எதிர்ப்பதற்குத் தவிர ஆக்கபூர்வமான செயல்திட்டத்தோடு பேசுவதில்லை.
ஒவ்வொரு சாதியையும் திருப்திப்படுத்துவது சாதிகளின் உணர்ச்சியை அதிகப்படுத்தியிருக்கிறதா? குறைத்து இருக்கிறதா? என்கிற ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது?
தெரியவில்லை. அத்தகைய ஆய்வு தேவை என்று உணர்ந்தால் மேற்கொள்ளும் வழியைக் கண்டு பிடித்து விட முடியும். நான் சொல்ல வருவதன் அர்த்தம் என்னவென்றால் சாதி பற்றி அடிப்படையான தரவுகளோ, மாறிவரும் சூழலுக்கேற்ற மாற்றங்கள் பற்றிய விவரங்களோ இல்லை என்பதைத்தான். அதனால்தான் சாதிகள் மிகையான அல்லது குறைவான மதிப்பீடுகள் பெருகி அவற்றை அடிப்படையாக வைத்து விவாதங்கள், சண்டைகள் நடக்கின்றன. சாதியை அது பற்றித் தரப்பட்டிருக்கும் கருத்துகளிலிருந்து புரிந்துகொண்டிருக்கிறோமே தவிர கள எதார்த்தங்களிலிருந்து புரிந்து கொள்ளவில்லை என்கிறேன். எல்லாவற்றிலும் சாதியம் ஊடாடும் சாத்தியமுள்ள இங்கு அதைப் பற்றிய எத்தனையோ ஆய்வுகள் நூல்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் வெளிவரவில்லை. சாதியின் மோசமான அனுபவங்கள் மட்டுமல்ல. அவற்றை எதிர்கொள்ளப் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அதில் நடந்துள்ள வெற்றிகளைச் சொல்லலாம். தோல்விகளைச் சொல்லலாம். சாதியமைப்பை எதிர்கொள்வதில் நடந்திருக்கும் தோல்விகளை ஏன் சொல்வதில்லை என்றால், அதன் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் பிம்பங்களைக் கலைத்து விடும் என்பதால்தான். வைக்கம் சென்று பெரியாரை நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இங்கு நுழைய முடியாத கோயில்களுக்காகப் போராடிக் கொண்டிருப்பதைப் பற்றி ஏன் பேச முடிவதில்லை? வைக்கத்திற்காக அறிக்கை விடும் கட்சி உள்ளூர்க் கோயில் போராட்டம் பற்றி ஏன் எந்த அறிக்கையும் விடுவதில்லை?
காணாமல் போயிருக்கும் சாதிகள், பெரிதாயிருக்கும் சாதிகள், பெயர் மாற்றங்களின் விளைவு, நடைமுறையில் மதங்களுக்கும் சாதிகளுக்குமான உறவு என்று எத்தனையோ விசயங்கள் ஆய்வு செய்யப்படாமல் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆய்வு செய்வது மட்டுமல்ல அத்தகைய ஆய்வுகள் யாரால், எத்தகைய கண்ணோட்டங்களில் செய்யப்படுகின்றன என்பதெல்லாம் யோசிக்கப்பட வேண்டும். இப்பிரச்சினைகளை ஆராய்வதற்கென்றே புதிய ஆய்வு முறைமைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். சாதி பற்றிய அடிப்படையான ஆய்வுகள் செய்யப்படாததற்குக் காரணம் இப்போதிருக்கும் நிலைமையால் அதிகாரச் சாதிகளுக்குப் பெரிய பாதகமில்லை என்பதால்தான்.
அந்தரங்கமாக நடைபெற்ற ஆணவக் கொலைகள் பொதுவெளியில் நிகழ்த்தப்படுதலும் அதற்கு, அரசியல் நியாயம் கற்பிக்கப்படும் சூழலும் எவ்வாறு உருவானது?
இவற்றைப் பற்றி “ஆணவக்கொலைகளின் காலம்” நூலில் என்னுடைய புரிதலைச் சொல்லியிருக்கிறேன். தலித்துகளின் உரிமைகளுக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் கூட அரசியலமைப்பு அவையில் இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளின் போது ஒரு இணக்கத்திற்கு வரவேண்டிய நிலை இருந்தது. பொதுவெளியில் சாதி பார்ப்பது, பேசுவது கூடாது என்கிற நிலை இங்கிருந்தது. ஆனால் தனித்தனியான சாதி அமைப்புகள் அரசியல் கட்சிகளாக மாறிய போது இந்த வரம்பு உடைந்திருக்கிறது. இவ்வாறு உருவான அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இடைநிலை எண்ணிக்கை பெரும்பான்மைச் சாதிகளைப் பிரதிபலித்த சாதி அமைப்புகள். அவர்கள் தங்கள் நியாயத்தைத் தலித்துகளை எதிராகக் காட்டியே கட்டமைத்தனர். அரசை நோக்கி வன்னியர் சங்கம் போராட்டம் நடத்தியது. அதற்காகத் தலித் குடிசைகள் கொளுத்தப்பட்டது இப்படித்தான்.
கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்து நடந்த மாற்றங்கள், உலகமயமாக்கம் ஆகியவை சார்ந்து மரபான தளங்களிலிருந்து தலித்துகள் வெளியேறியிருக்கிறார்கள். இதனால் பதற்றமடைந்தவர்களின் வெளிப்பாடே தலித்துகள் மீதான வன்முறை. இம்மாற்றங்களால் ரத்த வழி உறவுகளில் பெருமளவு உடைவு ஏற்பட்டிருக்கிறது. தங்கள் குழுவின் பெரும்பான்மையைத் தக்கவைப்பதே அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான வழி என்று கருதும் அதிகாரச் சாதிகள் தலித்துகளிடையே நடந்திருக்கும் மாற்றங்களைக் குலைக்கின்றன. அவர்கள் மீது குற்றம்சாட்டுகிறது. ராமதாஸ் கூறிய ஜீன்ஸ், டிசர்ட், கூலிங் க்ளாஸ் போன்றவை தலித்துகளிடையேயான நவீனத்திற்கான அடையாளங்கள்தாம். இந்தப் பின்னணியில்தான் இதுவரையில் மறைமுகமாக இருந்து வந்த ஆணவக்கொலையை வெளிப்படையாக ஆதரிக்கும் அரசியல் போக்கு தலையெடுத்தது.
முன்பு எப்போதும் இல்லாத நிலை இது. இன்றைக்கு ஆணவக் கொலை செய்பவர்களை ஆதரித்துப் பேசும் போக்கு, வழக்குக்கு உதவும் போக்கு சாதாரணமாக நடக்கத் தொடங்கிவிட்டன. இதன் மீது தலையீடு செய்வதற்கான மொழியோ, வழியோ நமக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. கொலை நடக்கும் போது அதைக் கண்டித்து விடுவதே இதில் செய்யும் பங்களிப்பாக இருக்கிறது. அவை நடக்காமல் இருப்பதற்கான எந்த விவாதங்களுக்கும் நம்மிடம் இடமில்லை. ஒரே விதமான அரசியல் தர்க்கங்களுக்குள்ளேதான் இரண்டு தரப்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. பாமகவைக் குறிப்பிட்ட செயலுக்காக, சொல்லுக்காகக் கண்டிக்கலாம். ஆனால் பாமக கொண்டிருக்கும் தர்க்கத்தைப் பற்றி எந்த மறுப்பும் இல்லையே.
தலித் X தலித் அல்லாதவர், நாடார் X தேவர், ‘தலித் X தலித் உட்பிரிவு உட்பட பல்வேறு சமூகங்களுக்கு இடையில் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால், ‘தலித் பிரச்சினை’ என்று குறுக்கிப் பார்க்கப்படுவது ஏன்? இவ்வாறான பார்வைகூட ஆணவக் கொலை குறித்த சிறப்புச் சட்டம் இயற்ற தடையாக உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா?
இதற்கு ஒரு பதிலைச் சொல்வது சிக்கல்தான். இவை தலித் பிரச்சினை என்பதும் உண்மை. தலித் பிரச்சினை என்பதிலிருந்து விரிக்க வேண்டும் என்பதும் உண்மை. தலித்துகள் கொல்லப்படுவதற்கான காரணமும், பிறர் கொல்லப்படுவதற்கான காரணமும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியதே இதன் பாலபாடமாக இருக்க முடியும். தலித் பிரச்சினை என்பது நமக்கு வெளியே நடப்பதல்ல. அதன் பார்வையாளர்களாய் இருக்கும் விதத்தில் மற்றெல்லோரும் அதன் அங்கத்தினர்களாகவே இருக்கின்றனர். மற்றெல்லோரும் கூட இவற்றிற்குப் பொறுப்பு ஏற்பதன் மூலமே இச்சொல்லாடலை விரிக்க முடியும்.
தமிழ்ச்செல்வி தான் கொல்லப்படப் போகிறோம் என்பதை அறிந்து தன் பெற்றோர்களிடம் தான் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் தம்பி, தங்கைகளுக்கு உதவும் என்கிறார். அவ்வாறான சூழலிலும் பெற்றோர்கள் நகைகளைக் கழற்றிக் கொண்டு, தமிழ்ச்செல்வியைக் கொல்வதற்குத்தான் முனைகிறார்கள். தம் பிள்ளையைக் கொல்லுகிற போதும் கொலைக்குப் பிறகும் அக்குடும்ப மனநிலை உளவியல் ரீதியாக ஏதேனும் தாக்கத்திற்கு ஆட்படுகிறதா?
பொதுவாக இந்தியக் குடும்பங்களின் சமூக வகிபாகத்தை அவர்களே தீர்மானிப்பதில்லை. ஊர், சாதிக்காரர்கள், சொந்தக்காரர்கள் போன்றோரும் சேர்ந்துதான் தீர்மானிக்கிறார்கள். இப்போது சாதி அமைப்புகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தளத்தில் உருவாவதுதான் இந்தக் கௌரவம் என்ற நிலைப்பாடு. ஒருவரோ, ஒரு குடும்பமோ எடுக்கிற கௌரவம் என்ற நிலைப்பாடு அந்த ஊருக்கானதாகவும் சாதிக்கானதாகவும் பார்க்கப்படுகிறது. எனவே ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையில் சாதியோ உறவினர்களோ தலையிடுகிறார்கள். குடும்பங்களும் தங்களைப் பிறர் எவ்வாறு நினைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்படித்தான் தங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
தங்கள் பெண் வேறு சாதிப் பையனைக் காதலிப்பதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாலும் தடுக்கிறார்கள். சில வேளைகளில் குடும்பம் இப்பிரச்சினை அப்படியே விட்டு விட நினைத்தாலும் ஊராரும் சாதியினரும் விடுவதில்லை. தமிழ்ச்செல்வியை அவர் பெற்றோர் அப்படியே விட்டு விட நினைத்திருந்தாலும் அவர்கள் நினைவில் ஊர், சாதி, உறவினர் வந்து போகும்போது கொலை செய்பவர்களாக மாறியிருப்பார்கள். அல்லது இதனை இப்படிக் கூடச் சொல்லலாம். அதாவது ஊர், சாதி மத்தியில் கெளரவத்தோடு வாழ அந்தக் குடும்பமே விரும்பி எடுத்த முடிவாகவும் இருக்கலாம். இதுதான் சமூகத்திற்கும் குடும்பங்களுக்கும் இடையேயான உளவியல் ரீதியான தொடர்பு.
இன்றைய சாதியவாத விசயத்தில் பேசப்படாது விடப்படுகிற அம்சம் ஏதேனும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ஆமாம். பல விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கல்வித் தளத்திற்கான பொறுப்பு. அண்மையில் நடந்த ஆணவக்கொலையின் போது ஒரு நண்பர் தமிழ் சினிமா சாதியப் போக்கிற்கு எவ்வாறு தூபம் போட்டிருக்கிறது என்று எழுதியிருந்தார். அது சரிதான். ஆனால் அதை விட நாம் விவாதிக்க வேண்டியது இவற்றை மாற்ற வேண்டிய கல்விப்புலம் எவ்வாறு இருக்கிறது என்பதைத்தான். அது பற்றிய அடிப்படையான விவாதங்கள் கூட இங்கில்லை. ஆணவக் கொலை உள்ளிட்ட சாதியவாதங்கள் பெருகியிருப்பதைக் கட்டுப்படுத்தத் தவறியிருப்பதில் கல்வி அமைப்புக்குப் பொறுப்பே இல்லையா? கல்வி பரவலாகி வருவதற்கும் பாகுபாடுகள் குறைவதற்கும் தொடர்பு இருக்க வேண்டும் இல்லையா? இதற்கு மாறாகச் சாதியவாதம் பெருகுகிறது என்றால் இந்தக் கல்வி அமைப்பு என்ன மாதிரியான வேலைகளைச் செய்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
ஆணவக்கொலை நடக்கும் போது எத்தனை ஆசிரியர்கள் அதைப் பற்றி வகுப்பில் விவாதித்திருப்பார்கள்? மாணவர்களிடையே அதற்கான சூழல் இருக்கிறதா? நமக்கேன் வம்பு என்று செல்வதுதான் கல்வியா? மாணவர்களிடையே தீட்டு போன்ற மரபான வடிவங்களில் சாதி இருப்பதில்லை. அது வேறொரு வடிவத்திற்கு மாறியிருக்கிறது. அவர்களிடம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து பரவலாக இருக்கிறது. அது தலித் மாணவர்களுக்கு மட்டுமானது என்ற பார்வை குடும்பத்திலிருந்தே சொல்லித் தரப்பட்டுக் கல்விப் புலம் வரையில் வலிமையாக உலவுகிறது. சாதிச் சான்றிதழினால்தான் சாதி இருக்கிறது என்ற கருத்திற்குப் பரவலான செல்வாக்கு இருக்கிறது.
அண்மையில் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்காக நடந்த சமத்துவம் என்ற தலைப்பிலான அரங்கு ஒன்றில் பார்வையாளராக இருந்தேன். உரை மீது எழுந்த கேள்விகளில் சாதிச் சான்றிதழை வாங்காமல் விட்டால் தானே சாதி ஒழியும் என்ற கேள்விக்குத்தான் அதிக கைத்தட்டல் எழுந்தது. இவ்வாறு கல்விப்புலத்திலிருந்தே தலித்துகளுக்கு எதிரான மனநிலை உருவாகி விடுகிறது. தலித்துகள் மீது எந்தத் தர்க்கமும் இல்லாமல் ஒரு பொறாமை உணர்வு உருவாகி விடுகிறது. இன்றைக்குக் கல்வி வளாகங்களிலேயே சாதி வன்முறைகள் தலை தூக்கியிருப்பதைப் பார்க்கிறோம். இதனைத் தடுப்பதில் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும் என்ன வகையான பங்கினை வகிக்கிறார்கள்? சமூகத்தின் பிற அங்கத்தினரைப் போல அவர்களும் பார்வையாளர்களாகத்தான் இருப்பார்கள் என்றால் இன்றைய நிலையை மேம்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஆசிரியர்களிடம் நிலவக்கூடிய சாதியவாதத்தையே விவாதிக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். சாதியத்தை மிகத் தந்திரமாகக் கடைபிடிக்கக் கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இலக்கியத்தில் தலித் இலக்கிய வகைமை உருவான பின்னால் அவற்றை மறைமுகமாக எதிர்கொள்ளும் விதத்தில் நடந்திருக்கும் கல்விப்புல வேலைகளைப் பற்றியே நாம் தனியே பேச வேண்டும். நவீன கல்வி பெருகுவதற்கும் சமத்துவச் சிந்தனை வளர்வதற்கும் தொடர்பு இருக்கும் என்று நம்பப்பட்டது. இன்றைய போக்கு அதனை உத்திரவாதப்படுத்தும் நிலையில் இல்லை என்பதே கசப்பான உண்மை.
அம்மன் கதைகளுக்குள் பொதிந்திருக்கும் ஆணவக் கொலைக் கதையாடல், அதன் பின்னணியிலான உறவு மீறல்களைக் குறித்து…
இறந்து போன/கொல்லப்பட்ட பெண் வழிபாட்டுக்கு உரியவளாக மாற்றப்படுகிறாள். பிறகு அதைப்பற்றி ஒரு கதை அவளை வணங்கும் வட்டத்திற்குள்ளே வழங்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் தேடினால் இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட அம்மன் கதைகளைக் கேட்டு விட முடியும். அந்தக் கதைக்குத் திருவிழா அந்தஸ்து கிடைக்கவில்லையெனில் நாளடைவில் மறைந்து போகின்றன. தெய்வங்களுக்குச் செத்த கதை இருப்பதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் பெரிய அம்மன் வழிபாட்டோடும், கதைகளோடும் சிறிய அம்மன்கள் சேர்க்கப்பட்டு விடுகிறார்கள். சிறிய அம்மன்களுக்குத் தோற்றத்திலிருந்து வந்த குறிப்பான பெயர் இல்லாமல் போய் பெரிய அம்மனின் பொதுவான பெயருக்குள் அமிழ்ந்து போகிறது அல்லது பெரிய அம்மனின் பெயருக்கு முன்னால் சேர்த்து வழங்கப்படுகிறது. இத்தருணத்தில் அம்மன் சிறிதாக இருந்த போது வழங்கப்பட்ட கதையும் இல்லாமல் போய் விடுகிறது அல்லது பெரிய அம்மன் கதை மட்டுமே வழங்கப்பட்டு விடுகிறது.
நான் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு அம்மனைப் பார்ப்பேன். ஆதி மல்லம்மாள் என்ற காமாட்சியம்மன் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. மல்லம்மாள்தான் ஆதி என்பதைப் பெயரிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. இப்போதே பெயர்ப் பலகையில் மல்லம்மாள் என்பது சிறிதாகவும் காமாட்சியம்மன் பெரிதாகவும் இருக்கின்றனு. கோயில் ஒவ்வொரு முறை மாற்றமடையும் போதும் பெயரும் மாறும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் ‘என்ற’ இடைச்சொல் மறையும். பிறகு மல்லம்மாள் காமாட்சியம்மன் என்றோ வெறுமனே காமாட்சியம்மன் என்றோ மாறும். அம்மன் கதைகளை ஆராய்வது மிகப்பெரிய சமூக வரலாறு. பெரும்பாலான அம்மன் கதைகளில் அடிநிலைச் சாதி தொடர்பே ஊடாடுகிறது. வேறு வகையில் வரலாறு தொகுக்கப்படாத அடித்தட்டு மக்களுக்கு அம்மன், கதைகள், பெயர்கள், திருவிழாக்கள் ஆகியவற்றில் வரலாறு ஒளிந்திருக்கின்றன. அந்த வகையிலும் இக்கதைகள் முக்கியமானவை.
சுயமரியாதைத் திருமணங்களின் சீர்த்திருத்த எல்லை சடங்கு மறுப்பாகச் சுருங்கி விட்டது என்று எதன் பின்னணியில் சொல்கிறீர்கள்? சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இருந்து வந்த சமூகப் பாதுகாப்பு ஏன் பலவீனமடைந்தது?
கல்வி வேலை வாய்ப்புகள் சார்ந்து நடந்திருக்கும் இடப்பெயர்ச்சி, இயல்பான உறவு, மாறிவரும் மதிப்பீடுகள் சார்ந்து நிறைய சாதி தாண்டிய திருமணங்கள் நடந்து வருகின்றன. இதை எதிர்ப்பதைச் சார்ந்தோ ஆதரிப்பதைச் சார்ந்தோ அதன் நிலை இருக்கப் போவதில்லை. காதலை எப்படித் தடுக்க முடியும்? குடும்பங்கள் சனநாயகமாக இருக்கும் போது இவற்றில் பிரச்சினை வருவதில்லை. இதில் நீங்கள் குறிப்பிடும் சமூகப் பாதுகாப்பு என்ற நிலை சாதி தாண்டிய திருமணங்களுக்கு அச்சுறுத்தல் வரும் போது தேவைப்படுகிறது. சிவில் சமூகத்தில் இதற்கான ஆதரவான அமைப்புகளோ, சூழ்நிலைகளோ இல்லை. ஒரே மதமாகக் கருதப்படும் பல சாதிகளுக்கிடையே ஏற்படும் இந்தவகை திருமணங்களை மத அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் சாதிதான் அவர்களுக்கு மதம். எனவே மாற்றங்களைப் பேசும் கட்சிகளோ அமைப்புகளோ மட்டுமே இதனைச் செய்ய வேண்டிய நிலை இங்கிருக்கின்றன. இந்தவகையில் சுயமரியாதை இயக்கம் முக்கியமான முன்னெடுப்புகளை நிகழ்த்தியது உண்மை.
பெரியாரிஸ்டுகள் இந்தவகைத் திருமணங்களுக்கு இப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். அதேவேளையில் சுயமரியாதை திருமணம் என்பது திராவிடர் கழகத்தினரின் எல்லையைத் தாண்டியும் விரிவடைந்திருக்கின்றது. சாதி மறுப்புத் திருமணங்கள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நாம் நிர்பந்திக்க முடியாது என்றாலும் சாதி மறுப்பு ஒரு பொறுப்பாக மாறியிருக்க வேண்டும். இந்நிலையில் தான் அது சடங்கு மறுப்பாக மாறியிருக்கிறது என்கிறேன். ஊர் அளவிலும், குடும்பங்கள் அளவிலும் எனக்கு நேரடி அனுபவங்கள் இதிலுண்டு. ஒரு கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாதி தாண்டிய தம்பதிகளுக்குப் பாதுகாப்புத் தரப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே இயல்பாகவே அந்த வகை திருமணங்களை அக்கட்சி நடத்தி வைத்து வந்தாலும் அதனை ஒரு அறிவிப்பாகச் செய்யும் போது அது வேறொரு நிலையை எட்டுகிறது. ஆனால் சுயமரியாதை மரபில் வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடக் கட்சியினர் உள்ளூரில் அந்தந்தச் சாதியினர் தரப்பாகவே இருப்பதை மறுக்கமுடியுமா?
இலக்கியத்தில் ஆணவக் கொலைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன. அந்தந்தக் காலக்கட்டங்களில் இக்கொலைகளுக்குச் சமூகத்தில் எவ்விதமான எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன?
அண்மையில் சாதி கடந்த திருமணம் / காதல் பற்றி நவீன இலக்கியங்களிலுள்ள படைப்புகளைத் தேடிக் கொண்டிருந்தபோது அவை போதுமான அளவு எழுதப்படவில்லை என்பது அறிய முடிந்தது. புலப்படாத வாழ்வை எழுத முற்பட்ட நவீன இலக்கியப் படைப்பாளிகளின் கண்களில் இவை ஏன் புலப்படவில்லை என்ற கேள்வி வந்தது. அதை எழுதுவதில் ஏதோ தடை இருந்திருக்கிறது. அதனால்தான் அது வாய்மொழி மரபுகளிலேயே அதிகம் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. இவற்றை அடியொற்றி எழுதப்பட்ட கதைகளிலும், திரைப்படங்களிலும் தான் இக்கதைகள் புலப்பட்டன. திரைப்படங்களும் இவற்றை வெளிப்படையாகக் காட்டவில்லை. ஆனால் அந்தக் கதைகளை வேறு திசைகளில் யோசித்துப் பார்த்தபோது அடிநாதமாக இப்பிரச்சினை இருந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. எப்போதுமே இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் மரணமும், மீறல்களும் கவர்ச்சிக்குரியவையாக இருந்து வந்துள்ளன. கதைக்கான கச்சாப் பொருட்களாக இவை மாறின. உள்ளூர் அம்மன் கதைகளில் இந்த அம்சங்கள் இருந்து அண்மைக் காலங்களில் அவள் மரணமடைந்தற்கான காரணம் நாளடைவில் மாற்றிச் சொல்லப்படும் போக்கும் தலையெடுத்துள்ளன. மரபை நவீன அரசியல் சூழலும் பாதிக்கின்றன.
2012 இல் ‘கலப்புமண எதிர்ப்பு அரசியல்’ தொடங்கி சமீப காலம் வரை பல்வேறு கட்டுரைகள் ஆணவக் கொலை சார்ந்து எழுதியிருக்கிறீர்கள். இவை சமூகத்தில் என்னவிதமான உரையாடல்களை உண்டாக்கியிருக்கின்றன?
துல்லியமாகச் சொல்லத் தெரியவில்லை. ஒரு எழுத்தாளன் அல்லது ஆய்வாளன் விளைவுகளை எதிர்பார்த்து எழுத மாட்டான். மீறியும் விளைவுகள் ஏற்பட்டால் மகிழ்வான் என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் என் அரசியல் செயற்பாட்டின் பகுதியாகவே எழுத வந்தவன். ஆரம்பத்திலிருந்தே என்னுடைய எழுத்து களத்தோடு தொடர்புள்ளவையாகவே இருந்தன. ஆணவக்கொலைகளின் காலம் நூல் அத்தகையது. சாதிப் பிரச்சினை நடந்த இடத்திற்குக் குழுவோடு சேர்ந்து உண்மையறியும் குழுவாகவோ, தனியாகவோ சென்று வந்த கட்டுரைகள் அவற்றில் உள்ளன. அவை உடனே உடனே சமூக வலைத்தளங்களிலும் பத்திரி்கைகளிலும் வெளியாகி விவாதங்களையும் உண்டாக்கின. பத்திரி்கைகளில் வெளியான கட்டுரைகள் மட்டுமல்லாது முகநூல் விவாதங்களையும் அந்நூலில் சேர்த்துள்ளேன்.
ஆணவக்கொலை பற்றிய விரிவான அறிமுகமாக இருக்க வேண்டுமெனக் கருதி வழக்காறு, இலக்கியம், சினிமா தொடர்புகளையும் ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள் அவற்றில் உள்ளன. அந்நூல் பரவலான வாசிப்பைப் பெற்றதோடு, ஆணவக்கொலை பற்றிய புரிதலை உண்டு பண்ணவும் உதவியது என்பதை உரையாடிய வாசகர்கள் மூலம் அறிந்து கொண்டேன். இந்நூலைப் படித்து என்னைத் தொடர்பு கொண்ட ஆய்வு மாணவர்களில் சிலர் இப்போதும் நீங்கள் ஆணவக்கொலைகளின் காலம் போன்ற நூலை எழுத வேண்டும் என்று சொல்வதுண்டு. பெரிய வாசக கவனத்தைப் பெற்றும் வாசிப்போடு தொடர்புடைய அரசியல் அமைப்புகளோ, செயற்பாட்டாளர்களோ இந்நூலை அறிந்திருந்தும் அதனைச் சொல்லியதில்லை.
இன்றைக்கு நம்பப்படும் அரசியல் தர்க்கங்களுக்குள் அவை இல்லை என்பது முக்கியக் காரணம். இட ஓதுக்கீட்டிற்கான திரட்சியிலும் வன்முறையிலும் சாதி மறுஆக்கம் விதம் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறேன். இவர்களுக்குப் பிடிக்காது என்பது மட்டுமல்ல புரிந்தும் இருந்திருக்காது. இந்நூலிலுள்ள கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்திலேயே நண்பர்கள் நாங்கள் ஐவர் சேர்ந்து எழுதிய “சாதி இன்று” என்ற நூலையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த நூலைக் கடுமையாகத் தாக்கி எழுதிய பத்திரி்கையாளர் ஒருவர் பின்னாளில் இதழியலில், தான் பதிவு செய்த சாதிப் பிரச்சினைகளைப் பற்றி நல்ல நூல் ஒன்றை எழுதினார். பிரச்சினைகளைச் சரியாக விவரித்த அந்நூலில் அதன் அரசியல் சமூகப் பின்புலத்தை விவரிக்கவில்லை. அந்த விதத்தில் அந்நூல் தகவலாக எஞ்சுகிறது.
‘சாதி என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினை அல்ல; இந்தியச் சமூகத்தின் பிரச்சினை. நீங்களும் பொறுப்பேட்க வேண்டும்’ என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தை இந்தியச் சமூகம் எவ்வாறு உள்வாங்கி இயங்கி வருகிறது?
அவர் கருத்தை இந்தியச் சமூகம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அம்பேத்கரை நேரடியாகச் சொல்லி உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றாலும் காந்தியை அம்பேத்கர் தீவிரமாகப் பாதித்திருந்தார். 1932 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு காந்தியின் பயணம் அடுத்த 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய பத்தாண்டுகள் வரை உள்ளூர் நிர்மாணப் பணிகளிலேயே இருந்தது. அதில் மையமானது அரிஜன மேம்பாடு. தலித்துகளிடையே பணியாற்ற வர வேண்டுமென உயர்சாதியினரை அவர் அழைத்ததால் பலர் வந்தனர். அதனை நம்பிக்கையாக ஏற்று அதற்கு உண்மையாகப் பலர் செயலாற்றினர்.
தலித்துகளை அழுக்கானவர்களாக உருவகம் செய்ததெல்லாம் விமர்சனத்திற்குரியது என்றாலும் அவர்கள் பணி செய்தனர் என்பதை மறுக்க முடியாது. இந்திய அரசியல் வரலாற்றில் காந்தி அளவுக்கு அம்பேத்கரை உள்வாங்கியவர் வேறு யாரும் இருக்க முடியாது எனலாம். நீங்களும் பொறுப்பேற்கனும் என்ற அம்பேத்கர் கூற்றைப் பலர் உள்வாங்கியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அதேவேளையில் ஒருவரை உள்வாங்குவது என்பது அவரின் கருத்தியலை எடுத்துக்கொள்வதாக இருக்க வேண்டுமே ஒழிய அவரைத் தனிப்பட்ட நண்பராக்கிக்கொள்வது, அவரின் தொடர்பைப் பேணுவது, அவர் பெயரை உச்சரிப்பது என்பதாக இருக்கக் கூடாது.
ஆணவக் கொலைச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டால் அது எவ்வாறான விளைவுகளை உருவாக்கும்?
ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் மறுப்பில்லை. இந்தப் பிரச்சினையை அது தனித்துக் கவனப்படுத்துகிறது என்பதும் உண்மை. ஆனால் இந்தப் பிரச்சினையை இத்தோடு மட்டும் முடித்துக்கொள்ளக் கூடாது என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இதுபோன்ற பிரச்சினைகள் நடந்ததும் இதையொட்டிச் சொல்வதற்குச் சட்டம் மட்டுமே இருக்கிறது என்பதால்தான் தடுப்புச் சட்டம், தடுப்புச் சட்டம் என்று கூறுவதோடு முடித்துக் கொள்கிறார்கள். இந்தச் சட்டம் வந்து விடுவதால் இக்கொலைகள் நின்று விடுமா? பிற பிரச்சினைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அப்பிரச்சினைகள் விசயத்தில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் எவை? கொண்டுவரப்பட்டிருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் எந்த அளவுக்கு நடைமுறைபடுத்தப்பட்டிருக்கின்றன? என்பவற்றையெல்லாம் கவனத்திற்குக் கொண்டு வந்து பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே தடுப்புச் சட்டம் கோருவதிலேயே திருப்தியடைந்து விடாமல் இன்னமும் கூட விரிந்து செல்ல வேண்டும்.
இக்கொலைகள் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள், ஆதரிக்கப்படுவதற்கான காரணங்கள், இவற்றின் பின்னுள்ள சமூக அரசியல் பொருளியல் காரணங்கள் போன்றவை விவாதிக்கப்பட வேண்டும். தீவிரமாக விமர்சிக்கப்பட வேண்டும். அதையொட்டிய அரசியல் விமர்சனச் சொல்லாடல்களைக் களத்திற்குக் கொணர வேண்டும். இத்தகைய கொலைகளைப் புரியும், ஆதரிக்கும் சாதிய அரசியலை இப்படிதான் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் தர்க்கங்களைக் கேள்விக்குட்படுத்தாமல் நாம் எதைச் செய்தாலும் அவை அடையாளத்திற்காகச் செய்யப்படுவதாகவே அமையும். அச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கான காரணம் நாம் என்ற நற்பெயர் வேண்டுமானால் நமக்குக் கிடைக்குமே ஒழிய மற்றபடி பெரிய மாற்றங்கள் நடக்காது. காரணங்களை அப்படியே வைத்து விட்டு அதன் விளைவுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற பார்வையில்தான் இந்தத் தடுப்புச் சட்டம் கோரப்பட்டு வருகிறது.
நாம் சட்டங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம் என்பது சமூகத்தில் இதுவரை எத்தகைய மாற்றங்களைச் செய்திருக்கிறோம் என்கிற கேள்வியை எழுப்பி விடுகிறது. சட்டங்கள் அதிகரிக்கின்றன என்பது குற்றங்கள் அதிகரித்து இருக்கின்றன என்றே பொருளாகிறது. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் பெ.சண்முகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையேயும் சமூக வலைத்தளங்கள் சார்ந்து நடந்துவரும் சாதிப் பெருமைகள் பற்றிப் பேசியிருந்தார்.
ஒருவர் வாட்ஸ் அப்பில் நடக்கும் இப்போக்கைத் தடைசெய்ய ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவருடைய நோக்கத்தை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் இப்படியே எத்தனை சட்டம் போடுவீர்கள்? தவறுகள் நடந்து கொண்டே இருக்கும். சட்டங்கள் போட்டுக் கொண்டே இருப்போமா? குற்றங்கள் உருவாவதற்கான காரணிகள் அப்படியே இருக்கின்றன அல்லது பெருகுகின்றன என்பதே இதன் பொருள். அவற்றைச் சரி பண்ண முடியாததால்தான் நாம் சட்டங்களைக் காட்டித் தடுக்க முடியும் என்று நம்புகிறோம். சாதி விசயத்தில் புதிய புதிய சட்டங்களை உருவாக்கிறோம் என்பதற்கு அதில் மாற்றங்கள் நடைபெறவில்லை, மாறாக நிலைமை மோசமாகிறது என்பது தானே பொருள். நிலைமை மோசமாவது ஏன்? என்பதையும் நாம் பேச வேண்டும் என்கிறேன் நான். அவ்வளவுதான்.
இந்த விசயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்களை விமர்சித்திருக்கிறேன். தேவையேற்படின் இனியும் விமர்சிப்பேன். ஆனால் விமர்சனம் புறக்கணிப்பல்ல. அவர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டு செய்யப்படும் விமர்சனமே அது.இன்றைக்குத் தலித் அமைப்புகளை விடவும் இந்தப் பிரச்சினைகளில் களத்தில் இருப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில் ஒரு தொடர்ச்சியையும் பேணுகிறார்கள். ஆணவக் கொலைப் பிரச்சினையில் தனிச் சட்டம் கோரி வருபவர்களாக, விடுதலைச்சிறுத்தை கட்சியிடம் இல்லாத அரசை நோக்கிய விமர்சனமும் அவர்களிடம் இருப்பதைப் பார்க்கிறோம்.
ஆனால் மீண்டும் மேலே சொன்ன விசயத்திற்கு வருகிறேன். இன்றைய இணைய வலைத்தள உலகில் சாதிய அமைப்பின் இயங்குதளம் எவ்வாறெல்லாம் மாறியிருக்கிறது என்பதைச் சொன்ன பெ.சண்முகத்தின் அண்மைய பேட்டி முக்கியமானது. இதனை இவ்வளவு சரியாகச் சொன்ன அந்தக் கட்சி ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் கோருவதோடு நின்று விடாமல் அதன் சமூகப் பண்பாட்டுப் பொருளியல் காரணிகளை இன்றைய பின்புலத்தில் விளக்கி அது இன்றைய சாதியக் குழுக்களிடையே எவ்வாறு இயங்குகிறது என்பதையும் ஆராய வேண்டும். பிறகு அவற்றைச் சாதி பற்றிய இன்றைய சொல்லாடலோடு சேர்க்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கும் இப்பிரச்சினையைத் தடைச்சட்டம் என்று சட்டவாதமாகவே ஆக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிகிறது.இன்றைக்கு என்ஜிஓ என்பது ஒரு நிறுவனமல்ல; அது சிந்தனையாக மாறிவிட்டது. எல்லாவற்றையும் சட்டவாதத்திற்குள் அடக்கி அதைத் தாண்டி யோசிக்க விடாமல் செய்வது என்ஜிஓமயப்பட்ட சிந்தனை தான். அப்படியெனில் இன்றைக்கிருக்கும் அரசியல் கட்சிகளையும், ஆய்வுகளையும் கூட என்ஜிஓமயப்பட்டது என்று சொல்லலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற துணை நிலை அமைப்பு தொடங்கப்பட்டு சாதிப் பிரச்சினைகளைத் தனிக் கவனம் கொடுத்துப் பார்ப்பதற்கான அமைப்பாகவே இயங்கி வருகிறது. தனிக் கவனம் கொடுக்கும் அமைப்பு என்பதால் பிற துணை நிலை அமைப்புகளால் கவனிக்கப்படக்கூடாது என்பதாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். உதாரணத்திற்குப் பல விசயங்களுக்குக் கருத்து எழுதும் தமுஎச நண்பர்களில் பலர் சாதி வன்முறை போன்ற பிரச்சினைகள் பற்றி எதையும் எழுதாமல் இருந்து கொள்வதை இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. சாதி, மரபு போன்றவற்றில் பிடிப்புடைய வேல.ராமமூர்த்தி போன்ற அந்த அமைப்பின் எழுத்தாளர் முதல் நாள் மாலை தமுஎகச பொன்விழா மாநாட்டில் பாராட்டு பெறுகிறார். மறுநாள் மாலை சௌத்ரி தேவர் விழாவில் பங்கு பெறுகிறார். ஆணவக் கொலைகளின் பண்பாட்டு அர்த்தம் நோக்கி விரிவான விவாதம் நடத்தக்கூடாதா? அந்தப் பிரச்சினை ஏன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிரச்சினையாக மட்டும் இருக்க வேண்டும்? அந்த வகையில் மார்க்சிஸ்ட் கட்சி இவற்றையெல்லாம் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைத்து எல்லோருக்குமான பொறுப்பாக இதனை மாற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு.
கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு உடனடி அரசியல் நலன்களை எதிர்பாராத தலைமைகள், ஆளுமைகள் உருவாகவில்லை என்கிறீர்கள். இந்த வெற்றிடம் எதனால் உருவானதாகக் கருதுகிறீர்கள்?
ஆமாம். இங்கிருக்கக்கூடிய பல அதிகார மாற்றங்கள் பாராளுமன்றம், சட்டம், தேர்தல், அதற்கான எண்ணிக்கை என்பதற்குள் அடக்கப்பட்டுவிட்டிருப்பதால் எல்லோரும் அதை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். இங்கு அரசியல் என்பது தேர்தல் என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை என்பதும், எல்லாமும் ஏதோவொரு வகையில் அரசியலோடு இணையும் என்பதும் உண்மைதான். ஆனால் அதிகார அரசியலின் லாப நட்டங்களைத் தாண்டிய சமூகச் செயற்பாடுகளோ, சீர்திருத்தவாதங்களோ இல்லாமல் போய் விட்டதைப் பார்க்கிறோம்.
நவகாளியில் மதமோதல்கள் நடந்தபோது காந்தி நேராக அங்கு சென்றார். வைக்கத்திற்கு பெரியார் சென்றார். இன்றைக்கு சாதிப் பிரச்சினைகள் நடக்கும் இடத்திற்குச் சென்று இரு தரப்பினரிடம் பேசும் துணிச்சல் பெற்ற இயக்கங்களோ, ஆளுமைகளோ ஒருவர் கூட இல்லையே. தலித் அரசியலே இந்த நெருக்கடியில் சிக்கி விட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 1990 களில் தலித் அடையாளம் இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை என்ற பல தளங்களில் எழுந்தது. நாளடைவில் அவையாவும் அரசியலுக்குள் சுருக்கப்பட்டு விட்டன. இங்கு அரசியல் என்பது தேர்தல் அரசியலாகச் சுருக்கப்பட்டு அரசியல் கட்சிகளாக மாறிய தலித் அமைப்புகளுக்கேற்ப மாற்றப்பட்டுவிட்டது. இப்போது தலித் அடையாளங்கள் எல்லாம் செல்வாக்கு பெற்ற அமைப்பாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற அரசியல் கட்சியின் தேர்தல் நிலைபாட்டிற்கேற்பச் சுருக்கப்பட்டு முடங்கியிருக்கின்றன.
முரண்பாடுகளைக் களைவதற்கான பொறுப்பை அரசியல் கட்சிகளிடமே எதிர்பார்க்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.அதைத் தாண்டிய பொது அமைப்புகள் உருவாக வேண்டும். ஊழல் ஒழிப்பு, சுற்றுச் சூழல் மேம்பாடு, கல்வி போன்றவற்றிகாகக் கூட இத்தகைய அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. ஆனால் சமூகச் சீர்திருத்த நோக்கில் அதிகார அரசியல் எல்லையைத் தாண்டிய குரல்கள் எழவில்லை.
ஒடுக்கப்பட்ட ஆணைக் காதலித்து மணம் புரியும் ஆதிக்கச் சாதிகளின் பெண்களின் தலைமயிறை அறுப்பது, முலையை அறுப்பது போன்ற கலச்சார வன்முறைகள் இமையம் எழுதிய சாவுச் சோறு, பெத்தவன் கதைகளில் நிகழ்வதைக் குறிப்பிட்டுக் கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இவை கதைகளில் நிகழும் கற்பனைகளா இல்லை உண்மையை அடிப்படையாகக் கொண்டவைகளா?
உண்மையே தான். அவை தண்டனைகளாகக் கருதித் தரப்பட்டிருக்கின்றன. பல விநோதமான தண்டனைகள் உள்ளூர் அளவில் இருந்திருக்கின்றன. பங்கப்படுத்துவது என்று பெயரிடலாம். அதாவது உறுப்புகளைச் சிதைப்பது மூலம் அவலட்சணமாக்குவது. அதன் மூலம் ஒருவரை விரும்பத்தகாதவர் ஆக்குகிறார்கள். பிராமண மற்றும் உயர் சாதி மரபுகளில் பெண்களை ஏன் மொட்டை அடித்தார்கள்? அலங்கரித்துக் கொள்வதை ஏன் தடை செய்தார்கள்? இதனை நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக்கிவிடும் போது அது இயல்பாக நிகழத் தொடங்கிவிடுறது. மூக்கு அறுத்தல், முடி அறுத்தல், முலை அறுத்தல் என்பவையெல்லாம் அப்படித் தான். அதே போல கழுதை மேல் ஏற்றுவதையும், கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதையும் நம் கலாச்சாரத்தில் காண்கிறோம்.
இதனுடைய இன்னொரு வடிவம்தான் ஊரார் முன் கும்பிட்டு விழுவது, தண்டம் கட்டுவது ஆகியவை. இதற்கு வழியில்லாத போது ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் இன்றைக்கும் நம் ஊர்களில் நடந்து கொண்டு தானே இருக்கின்றன. இவ்வாறு ஊரை விட்டுத் தள்ளி வைப்பது ஒருவரை அல்லது ஒரு குடும்பத்தைச் சமூக வாழ்விலிருந்து துண்டிப்பது என்றாகிறது. இதற்குப் பயந்துதான் விரும்பமில்லாவிட்டாலும் கூட தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்களே கொல்கிறார்கள். கும்பலாக அல்லது குழுவாக இருக்கும் போது மேலெழுவதுதான் சாதியின் பண்பு. இவையெல்லாம் நம்முடைய நவீன கால கதைகளில் அரசல்புரசல்களாகவே இடம்பெற்றுள்ளன. மாறாக நம்மால் மூன்றாந்தரமானதாகக் கூறப்படும் சினிமாக்களில் கூடுதலாகவே பதிவாகியுள்ளன.
1980, 1990 காலக்கட்ட கிராமப் படங்களில் இவற்றைக் காண முடியும். இந்த வகையில் தான் இமையம் எழுதிய சாவுச் சோறு, பெத்தவன் கதைகளில் இந்தப் பதிவுகளைப் பார்க்க முடிந்தது. அதைத்தான் இந்த நூலில் நான் எழுதியிருக்கிறேன். எனவே பெண்களின் தலைமயிறை அறுப்பது, முலை அறுப்பது போன்றவற்றை கற்பனை என்று சொல்ல முடியாது. படைப்பு தேவைக்கேற்ப அவை சொல்லப்பட்டிருக்குமே ஒழிய அது முற்றிலும் கற்பனை அல்ல. எதார்த்தம் கற்பனையை விடப் பயங்கரமானது என்ற கூற்று சாதி வன்முறைக்கு முற்றிலும் பொருந்தும்.
காலம் காலமாய் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘ஆணவக் கொலைகளின் காலம்’ என்ற வரையறையின் முக்கியத்துவம், தேவை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாமா?
ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவு கிடைத்து அவற்றைப் பொதுவெளியில் வெளிப்படையாக ஆதரித்துப் பேசும் நிலை ஏற்பட்டு விட்டதைக் குறிக்கவே அந்தத் தலைப்பை வைத்தேன். குறிப்பாக 2012 ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட தர்மபுரி வன்முறைக்குப் பிறகு பாமக முன்னெடுத்த அரசியல் இதில் முக்கியமாகியது. நாடகக் காதல் என்ற சொல்லாடலை அவர் பிரகடனப்படுத்தினார். தலித்துகள் ஜீன்ஸ், டீசர்ட், கூலிங் கிளாஸ் அணிந்து பிற சாதிப் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று மேடைகளில் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அவர் குறிவைத்தாலும் இவற்றை ஒட்டுமொத்தத் தலித் வகுப்பினருக்கான குணாம்சமாக அவர் வரித்தெடுத்தார். எல்லாவற்றையும் விட தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற அமைப்பைக் கட்டி அதன் சார்பாகப் பரவலாகக் கூட்டங்களை நடத்தினார். அம்மேடைகளில் வெவ்வேறு வகைகளில் தலித் வெறுப்பைக் கொண்டிருந்த ஆதிக்கச் சாதி அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இவர்கள் தடுக்க விரும்பியதில் முதன்மையாக இருந்தது சாதி கடந்த மணங்கள். அதுவரை ஆணவக் கொலையாளிகளுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டிருந்த சாதி அமைப்புகள் இதற்குப் பிறகே வெளிப்படையாக உதவ ஆரம்பித்தன.
ஆணவக் கொலை செய்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சமூகத்திற்காகத் தியாகம் செய்தவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாவும் கதையாடல் கட்டப்பட்டதும் இதற்கெல்லாம் பிறகுதான். கவின் கொலை வரையில் இதனைப் பார்க்கிறோம். இச்சூழலின் நேரடி நிர்பந்தத்தை எதிர்கொள்ள வேண்டியவர்களாக தலித் அமைப்பினர் இருந்தனர். இடதுசாரிகள் சிறு சிறு பெரியார் அமைப்புகள் மட்டுமே பேசினர். மற்ற எல்லோரும் மெளனமாயினர். இவ்வாறு மாறி வந்த இச்சூழலைக் குறிப்பிடவே அந்தத் தலைப்பை வைத்தேன்.
ஆனால் நூல் வெளியான பின்னால் அத்தலைப்பு பற்றி எனக்கு மாற்றுக் கருத்து உருவானது. காலம் என்பது ஒரு உறைந்த நிலையைக் குறிக்கும் சொல். அதன்படி காலம் என்று கூறுவது பிரச்சினையைச் சாராம்சப்படுத்திவிடுகிறது. ஆணவக் கொலைக்குள் அடங்காத காதல், திருமணம் போன்றவற்றைப் புறமொதுக்கி விடுகிறது. அப்போக்கு மாறக்கூடியது என்கிற அர்த்ததிற்கும் அது தடையாக இருக்கிறது.
ஆணவக் கொலைகளால் கொலையுண்ட- பாதிக்கப்பட்ட கண்ணகி, தமிழ்ச்செல்வி, விமலா தேவி, திவ்யா, கௌசல்யா ஆகிய ஐந்து பெண்களுக்கும் ‘ஆணவக் கொலைகளின் காலம்’ நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கும் காரணம் என்ன?
இந்நூலைப் பலரும் வாசித்திருந்தாலும் இதனைக் குறிப்பிட்டுப் பேசியதே இல்லை. நீங்கள்தான் கவனித்துக் கேட்டிருக்கிறீர்கள்.
பெரும்பாலான ஆணவக் கொலைகளில் இறந்தவர்கள் தலித்துகள்; ஆண்கள். அவர்களின் வளர்ச்சி, கனவு, படிப்பு, தொழில், உழைப்பு, குடும்ப அர்பணிப்பு என்று விசயங்கள் இழப்புக்குள்ளாகின்றன. பெண்களை விட இவர்களுக்குத்தான் இழப்பு என்பதில் சந்தேகமில்லை. அதனாலேயே அவற்றை நாம் பேசுகிறோம். அக்கொலைகளுக்கு அரசியல் மதிப்பைப் பெற்றுத் தருகிறோம்.
ஆனால் நாம் யோசிக்காத மற்றொரு பக்கம் இருக்கிறது. அதுதான் அந்த ஆண்களைக் காதலித்த பெண்களின் பக்கம் அல்லது தரப்பு. அவர்கள் கொல்லப்படாததால் அரசியல் மதிப்புக் கிடைப்பதில்லை. அவர்களின் நிலை என்னவாகிறது என்பது நம்முடைய அரசியல் சொல்லாடல்களில் யோசிக்கப்படுவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் என்ற நோக்கில் பார்க்கச் சொல்லவில்லை. அதேவேளையில் அவர்கள் தங்கள் குடும்பத்தின் பக்கமே போய்விட்டதால் சோரம் போய்விட்டதாக எதிர்மறையை உருவாக்கிடவும் முடியாது. இக்கொலைகள் பற்றிய மொத்த யோசனையில் இப்பெண்களின் இடத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். அவை எவையாக இருந்தாலும் அவையும் சமூக அனுபவங்களே.
முதலில் சாதி தாண்டிக் காதலிக்க முன்வந்தவர்கள் பெண்கள்தான். சாதியை கடப்பதை அவர்களே தொடக்கி வைக்கிறார்கள். பிரச்சினை வெடிக்கும் போது குடும்பத்தால் அவர்களின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. அந்நிலையில் அவற்றைக் கடப்பதற்கான சூழல் அவர்களிடம் இல்லை. நமக்கும் தெரியாது. அவர்கள் என்ன சூழலில் முடக்கப்படுகிறார்கள்? அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது நமக்குத் தெரியாது. எனவேதான் தலித் பற்றிய இந்நூலினை அத்தகைய தலித் அல்லாத பெண்களுக்குச் சமர்ப்பித்தேன். பெற்றோர் கொலை செய்ய முற்பட்டபோது தமிழ்ச்செல்வி மாறியிருக்கலாமே. ஆனால் மாறாமல் இறந்து போகிறாரே. இதனை எப்படி எடுத்துக் கொள்வது?
தருமபுரி திவ்யா இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லையே. அவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லையே. இப்பெண்கள் கொல்லப்படவில்லை அவ்வளவுதான். மற்றபடி குற்றவுணர்வு, செய்யத் தவறியவை என்று எத்தனை விசயங்களோடுதான் அவர்கள் வாழ வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கோகுல்ராஜ் கொலைக்குப் பின்னர் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சுவாதி அவ்வழக்குக்காக நீதிமன்றம் வந்து செல்லும் போது கணவன் வீட்டை எவ்வாறு எதிர்கொள்வார்? இதில் மீண்டு வந்தவர் என்ற முறையில் கெளசல்யா ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். இவர்களின் உலகம் பற்றிப் பெண்கள் யாரேனும் விரிவாக எழுத வேண்டும். இந்தப் பின்னணியில்தான் சாதி எதிர்ப்பு மற்றும் ஆணவக் கொலை பற்றிய சொல்லாடலில் இவர்களின் பெயர் இருக்க வேண்டுமெனச் சமர்ப்பணம் செய்தேன்.
கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ரா.ச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம், ஜனசக்தி ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது தடாரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலையம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ எனும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகி உள்ளன. ‘மாமிச அம்புலி’ என்னும் சிறுகதை அகழ் இணைய இதழில் எழுதியுள்ளார்.








Leave a Reply