Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

உதயசங்கர் சிறார் கதைகள்

உதயசங்கர் .
உதயசங்கர் .
September 1, 2025
உதயசங்கர் சிறார் கதைகள்

இர்பானின் வண்ணப் பென்சில்

ஒரே இருட்டு. முதலில் இர்பானுக்கு எதுவும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு பழகியது. இர்பான் தேடினான். ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமா? என்று இடிபாடுகளில் தேடினான். மண்ணும் புழுதியும், கற்களும் கால்களில் இடறின. இர்பான் கைகளால் தரையைத் துழாவினான். கையில் எது கிடைத்தாலும் கண்களுக்கு அருகில் கொண்டு வந்து பார்த்தான். இருபத்திநான்கு மணி நேரமாக எதுவும் சாப்பிடவில்லை. வயிறு சுண்டிச் சுண்டி வலித்தது.

இப்போது மட்டுமல்ல எப்போது யுத்தம் தொடங்கியதோ அப்போது இருந்தே ஒரு வேளை உணவு அல்லது அதுவும் கிடையாது. எப்போது குண்டு விழும்? எங்கே குண்டு விழும்? என்று தெரியாது. மருத்துவமனை, பள்ளிக்கூடம், மசூதி, எங்கேயும் ஒளிய முடியாது. எல்லா இடங்களிலும் குண்டு விழுந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இர்பானும் அப்சலும் பள்ளிக்கூடத்தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு ஒரு பொம்மை கிடைத்திருந்தது. அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

“அலாவுதீன் கதையில் வருகிற ஜீனியைப் போல அந்தப் பொம்மை கேட்டதை எல்லாம் கொடுத்தால் எப்படி இருக்கும்?”

என்று சொல்லிச் சிரித்தான் அப்சல்.

“எனக்கு உடனே ரொட்டியும் சப்ஜியும் வேணும்னு கேப்பேன்” என்று தீவிரமான முகத்துடன் கேட்டான் இர்பான்.

“இல்லையில்ல.. சிக்கன் சாப்ஸும் பரோட்டாவும் கேப்பேன்..”

என்று அப்சல் சொன்னான்.

அப்போது அவன் தன்னுடைய உலர்ந்த உதடுகளை உலர்ந்த நாவினால் தடவிக் கொண்டான். அவனுடைய கண்களில் ஒளி தெரிந்தது. அந்த ஒளியில் அவன் கேட்ட உணவு மிதந்து கொண்டிருந்தது. நாவில் பசை போல எச்சில் ஊறியது.

ஆனால் இர்பான் பேசாமல் அந்தப் பொம்மையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உனக்கு என்ன வேணும்னு கேளுடா.. நாம் ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாம்..”

இர்பான் உண்மையிலேயே அந்தப் பொம்மை ஜீனிதான் என்று நம்பியவனைப் போலச் சொன்னான். தூரத்தில் விமானங்கள் உறுமும் சத்தம் கேட்டது. உடனே அருகில் கட்டிட இடிபாடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். எங்கோ குண்டுகள் விழும் சத்தமும் கேட்டது.

அந்தச் சத்தம் மெல்ல குறைந்ததும் வெளியில் வந்தார்கள். வெகுதூரத்தில் வானில் புகை மண்டலம் தெரிந்தது. இருவரிடமிருந்தும் ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது. இந்தச் சத்தங்கள் அவர்களுக்குப் பழகி விட்டன.

அப்சல் சொன்னான்.

“இது பட்டங்களின் திருவிழா காலம் இல்லையா இர்பான்..” என்று வானத்தைப் பார்த்தான். ஒரே புகை மண்டலமாக இருந்தது. திடீரென ஒரு கேவலுடன் கையிலிருந்த பொம்மையைப் பார்த்தபடி,

“எனக்கு என் தங்கச்சிப் பாப்பா வேணும்னு கேப்பேன்..” என்றான். அதைக் கேட்ட இர்பானுக்கு அழுகை வந்தது. அவனுடைய அம்மா அப்பா தம்பியின் ஞாபகங்கள் வந்து விட்டது. அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இந்தச் சண்டையே வேண்டாம்னு கேப்போமா?.” என்றான் இர்பான்.

எதுவும் பேசாமல் அப்சல் எழுந்து போய் விட்டான். அவன் போனதும் அதுவரை ஒளிந்திருந்த பசி மறுபடியும் பூதம் போல எழுந்து வந்தது. இர்பான் உணவு தேடி இடிந்த கட்டிடங்களுக்குள் போனான்.

திடீரெனக் காதைப்பிளக்கும் குண்டு சத்தம் மிக அருகில் கேட்டது.

சற்றுதூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த அப்சலைக் காணவில்லை. இர்பானுக்குத் தலை சுற்றியது. அப்படியே கீழே விழுந்து விட்டான். இப்போது தான் விழிப்பு வந்தது. பசித்தது. வயிறு என்று ஒன்று இல்லாமல் இருந்தால்….

இர்பான் மெல்லத் தவழ்ந்து போனான்.

தரையில் ஒரு பென்சில் கையில் தட்டுப்பட்டது. இர்பான் கண்களுக்கு அருகில் கொண்டு வந்து பார்த்தான். அது சிவப்பு வண்ணப் பென்சில். அவனுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும். எப்போதும் சிவப்பு நிற உடைகளைத் தேர்ந்தெடுப்பான். அவனுடைய பொருட்கள் எல்லாவற்றிலும் சிவப்பு நிறம் ஏதாவது ஒருவகையில் இருக்கும்.

அவன் முகத்தில் லேசான சிரிப்பு வந்தது.

இர்பான் அந்தப் பென்சிலால் கீழே இடிந்து விழுந்து கிடந்த சிமெண்ட் சுவரின் மீது கிறுக்கினான். இந்தப் பென்சில் ஒரு மாயப்பென்சிலாக இருக்ககூடாதா என்று நினைத்தான். எத்தனை கதைகளில் மாயாஜாலம் நடக்கிறது.!

இருட்டுக்குள் அந்தச் சுவரில் எதை எதையோ கிறுக்கினான். மனதில் தோன்றியதை எல்லாம் வரைந்தான் இர்பான். அவன் ஓவியன் அல்ல. அழகாக வரையத் தெரியாது. ஆனால் கிறுக்குவதற்கு பயிற்சி தேவையா என்ன?

அப்படியே கையில் பென்சிலைப் பிடித்தபடி மயங்கி விட்டான்.

காலையில் அவனுடைய வீட்டில் சிவப்புநிற மெத்தையில் கண்விழித்தான். தெருவில் குழந்தைகள் விளையாடும் கூக்குரல் கேட்ட து. சன்னல் வழியே பார்த்தான்.

பட்டங்களின் திருவிழா.

வானத்தில் ஏராளமான வண்ண வண்ணப்பட்டங்கள், வால் முளைத்த பட்டங்கள் போட்டி போட்டுக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. அவனுக்கு மிகவும் பிடித்த சிவப்பு நிறப்பட்டமும் பறந்து கொண்டிருந்தது.

அம்மா காலை உணவு சாப்பிட அழைக்கும் குரல் கேட்டது. இர்பான் கண்களைத் திறக்க முயற்சித்தான்.


பூமியின் விருந்தினர்கள்

பிரபுவுக்குப் புரியவில்லை. பள்ளியில் தமிழாசிரியர்,

“ யாரையும் வெறுக்காதீர்கள், யாரையும் நிராகரிக்காதீர்கள், யாரையும் அவமதிக்காதீர்கள், எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள். அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள். நாம் வாழும் இந்த பூமியை நேசியுங்கள்..”

என்று சொன்னதைக் கேட்டு பிரபுவுக்குப் புரியவில்லை. அவன் எல்லாரிடமும் நட்பாகத்தான் பழகுகிறான். இயன்ற உதவிகள் செய்வான். அவனுக்கு அன்பின் சுவை தெரியும். திகட்டாத இனிப்புச் சுவை. ஒவ்வொரு உதவியும் ஒவ்வொரு சுவை. பேக்கரிகளில் ஒவ்வொரு விதமான கேக்குகள் இருக்கிறதல்லவா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருக்கிறது. அதே மாதிரி. பிரபுவுக்கு கேக் என்றால் உயிர். எத்தனை கேக் கொடுத்தாலும் சாப்பிடுவான். அப்படித்தான் உதவி செய்வதிலும் சரி. என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான்.

நேற்று மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டியைத் தூக்கி அதன் கூட்டில் விட்டான். தாய் அணில் அவனுக்கு கீச் கீச் கீச் கீச் என்று நன்றி சொன்னது. எல்லாரும் பாராட்டினார்கள். அன்பின் சுவை ஸ்பாஞ்ச் கேக்கைப் போல கரைந்து உருகி உடலில் சேர்ந்தது.

போனவாரம் பிரபு பள்ளிக்கூடம் விட்டு போய்க்கொண்டிருந்தான். ஒரு தள்ளுவண்டியில் பெரிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு வயதான தாத்தா இழுக்கமுடியாமல் இழுத்துக் கொண்டு போனார். அவன் அந்த தாத்தாவிடம்,

“ தாத்தா நான் கொஞ்சம் தள்ளிவிடுகிறேன்.. “ என்று சொல்லிவிட்டு பின்னால் போய் வண்டியைத் தள்ளிவிட்டான். மேடு தாண்டியதும் தாத்தா,

“ போதும் பேராண்டி.. நல்லாப்படி “ என்று வாழ்த்திவிட்டுச் சென்றார். அன்று முழுவதும் ரோல் கேக் மாதிரி அப்படி இனித்தது.

ஆனால் வெறுப்பின் சுவை எப்படி இருக்கும்? அவனுக்குத் தெரியாது. அவனுடைய நண்பன் அகமதிடம் கேட்டான்,

“ வெறுப்பின் சுவை எப்படி இருக்கும்? “

“ எனக்கும் தெரியாது.. ஆனால் அது நன்றாக இருக்காது என்று மட்டும் தெரியும்..” என்று சொன்னான்.

“ எனக்கு வெறுப்பின் சுவையை ருசிக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது..”

என்றான் பிரபு.

இதை அங்கேயிருந்த ஒரு புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்த வெறுப்பு கேட்டது. உடனே அது பிரபுவைப் பின் தொடர்ந்து அவனுடைய வீட்டுக்குப் போனது. பிரபு உறங்கும்போது அவனைப் பிடித்துக் கொண்டது.

காலையில் எழுந்திரிக்கும் போதே பிரபுவின் முகம் சரியில்லை. காரணமில்லாமல் கோபம் வந்தது. வாலாட்டிக் கொண்டே ஓடி வந்த பப்பியை

“ ச்சீ ப்போ..” என்று விரட்டினான். வீட்டின் பின்புறம் எப்போதும் குயிலின் பாட்டை அவன் ரசித்துக் கேட்பான். இன்று அவனுக்கு அது பிடிக்கவில்லை. ஏன் இந்தக் குயில் இப்படிக் கத்துது? அங்கெ வந்த அப்பாவிடம்,

“ அப்பா இந்த வேப்பமரத்தை வெட்டி விட வேண்டும்.. இந்தப் பறவைங்க கத்தறதைச் சகிக்க முடியவில்லை..”

என்றான் பிரபு. அப்பா பிரபுவுக்கு என்னாச்சு? என்று ஆச்சரியமாகப் பார்த்தார். அவன் சொன்னதைக் கேட்ட குயில் அங்கிருந்து பறந்து போய் விட்டது. .

அம்மாவுக்கு அன்று உடம்பு முடியவில்லை. அதனால் அப்பாதான் உப்புமா கிண்டியிருந்தார். பிரபுவுக்கு உப்புமா எப்போதும் பிடிக்கும். அதுவும் அப்பா கிண்டினால் மிகவும் பிடிக்கும். ஆனால் அன்று உப்புமாவை வெறுப்புடன் பார்த்தான்.

“ எப்ப பாரு உப்புமா தானா? தின்னு தின்னு போரடிக்குது..” என்று கத்தினான்.

அவன் முகம் சிவந்திருந்தது. புருவங்கள் நெறிந்தன. வாய் கோணியிருந்தது. சரியாகச் சாப்பிடாமல் எழுந்து பள்ளிக்கூடம் போனான்.

போகும்போது சாக்கடையில் இரை தேடிக்கொண்டிருந்த பன்றியைப் பார்த்தான். அருவெறுப்பாய் இருந்தது. பன்றிகளே இருக்கக்கூடாது என்று நினைத்தான். தெருநாய் ஒன்று குரைத்தது. தெருநாய்களே இருக்கக்கூடாது என்று நினைத்தான்.

திடீரென அவன் மீது ஒரு சைக்கிள் வந்து மோதியது. கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். அவனை விடச் சின்னப்பையன் முக்காபெடல் போட்டுக் கொண்டு வந்தவன் நிலை தடுமாறிவிட்டான். அவனை ஓங்கி ஒரு அறையலாமா என்று யோசித்தான். அவன் யோசித்தவுடன் அவனறியாமல் கை ஓங்கி ஒரு அறை கொடுத்து விட்டது. அந்தச் சின்னப்பையன் அழுது கொண்டே போனான்.

யாரும் வருவதற்கு முன்னால் ஓடி விட வேண்டும் என்று வேகமாக ஓடினான். அவனுக்குப் புரியவில்லை. என்னாச்சு? காலையில் இருந்து எல்லாமே தப்பு தப்பாய் நடக்குது என்று தோன்றியது.

பள்ளிக்குள் நுழைந்ததும் அவனைப் பார்த்த பிரகாஷ் ,

“ டேய் நம்ம பசங்க எல்லாம் காவிக்கயிறு கட்டிக்கிடணும்.. பச்சைக்கயிறு கட்டின பசங்க நமக்கு எதிரி “ என்றான். அத்துடன் பையிலிருந்து ஒரு காவிக்கயிறை எடுத்து பிரபுவின் கையில் கட்டி விட்டான். அதுநாள் வரை அவன் எந்தக் கயிறையும் கட்டியதில்லை. எல்லாரிடமும் நன்றாகத்தான் பழகுவான். காவிக் கயிற்றைக் கட்டியதிலிருந்து எதிரே வரும் ஒவ்வொரு பையனின் கையையும் பார்த்துக் கொண்டே வந்தான்.

நீலம், சிவப்பு, கருப்பு, என்று எந்தக் கயிறைப்பார்த்தாலும் அவனுடைய மனதில் பகை உணர்வு தோன்றியது.

“ ஆளப்பாரு..” என்று வாய்விட்டுத் திட்டினான்.

வகுப்பில் அவனுக்கு அருகில் அகமது உட்கார்வான். இன்று அகமதைப் பார்த்ததும் இவன் வேறு ஆள் என்று நினைத்தான். அதுநாள்வரை தோன்றாத புதிய எண்ணம் தோன்றியது. வித்தியாசமாய் பார்த்தான். அகமதிடம் இருந்து கொஞ்சம் விலகி உட்கார்ந்தான். அகமது எப்போதும் போல பிரபுவின் தோளில் கையை போட்ட போது தட்டி விட்டான்.

அகமதுவுக்குப் புரியவில்லை.

அன்று தமிழாசிரியர்,

“ குழந்தைகளே! வெறுப்பு ஒரு கொடிய மிருகம்.. அது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும்.. எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருக்கும்.. வெறுப்பு எப்படி உருவாகிறது தெரியுமா? நமக்கு ஒன்று பிடிக்காமல் போகும்போது வெறுப்பு நம் மனதில் மெல்லத் தன் வாலை நீட்டி நுழையப் பார்க்கிறது. அப்போதே நம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? “

என்று நிறுத்தினார். உடனே எல்லாரும்,

“ என்ன ஆகும் ஐயா? “

என்று சேர்ந்து கேட்டார்கள்.

“ வெறுப்பு கூடவே கோபத்தை அழைத்து வரும். கோபத்தின் உடன்பிறப்பான வன்முறையை அழைத்து வரும். வன்முறை அடுத்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும்.. பல நேரங்களில் நம்மையும் துன்புறுத்தி விடும்.. உங்களுக்கு ஹிட்லரைத் தெரியுமா? “

என்று கேட்டுவிட்டு மாணவர்களை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.

“ வெறுப்பின் மொத்த உருவம் ஹிட்லர் தான். இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தி கோடிக்கணக்கான மனிதர்களைக் கொன்றவன்.. அவனுடைய சொந்த நாட்டிலேயே ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றவன்.. ஏன் அவன் அப்படி நடந்து கொண்டான் தெரியுமா? “

என்று கேட்டார் தமிழாசிரியர். வகுப்பு அமைதியாக இருந்தது.

“ வெறுப்பு தான் காரணம் அவன் யூத இனமக்களை வெறுத்தான். அவனிடம் இருந்த வெறுப்பின் விதைகளை மற்றவர்களின் மனதிலும் விதைத்தான். அதனால் இருபது லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்றான்.. கொடூரமாகக் கொன்றான்.. கூட்டம் கூட்டமாக விஷவாயுவைச்ச் செலுத்திக் கொன்றான்.. உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்றான்.. மூச்சுத்திணற வைத்துக் கொன்றான்.. உடலின் ரத்தம் முழுவதையும் உறிஞ்சிக் கொன்றான்.. துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.. “

என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மாணவர்களின் முகத்தில் சோகம் ததும்பியது. ஒரு பையன் கண்ணைக் கசக்கினான். சில மாணவர்களுக்கு உடம்பு நடுங்கியது. அடுத்து ஆசிரியர் என்ன சொல்லப்போகிறாரோ என்று காத்திருந்தனர் மாணவர்கள்.

தமிழாசிரியர் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதைப் போல சில நிமிடம் அமைதியாக இருந்தார். அவருடைய முகத்திலும் சோகம். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

“ நண்பர்களே! வெறுப்பு நம்முடைய பகுத்தறிவை, அன்பை, நேசத்தை அழித்து விடும். அன்பில்லாத உலகத்தில் எந்த உயிரும் வாழ முடியாது.. ஈ, எறும்பு முதல் மனிதர்கள் எல்லாரும் தனித்துவமான உயிர்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை, ஒவ்வொரு விதமான நம்பிக்கை.. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும்.. நாம் அனைவருமே இந்த பூமியின் விருந்தினர்கள் தான்.. நமக்குள் அன்பிருந்தால் மட்டுமே நாம் அமைதியாக வாழமுடியும்..

வெறுப்பின் துப்பாக்கிக்குண்டுகள் தான் நம்முடைய மகாத்மாவைக் கொன்றது.. எல்லாரும் ஒற்றுமையாக வாழுங்கள். அனபைக் கொடுத்து அனபைப் பெறுங்கள் என்றார் காந்தி. ஹிட்லரைப் போலவே சகமனிதர்களின் மீது வெறுப்பை வளர்ப்பவர்கள் தான் காந்தியின் அன்பைப் பொறுக்கமுடியாமல் கொன்றார்கள். “

பிரபு, அகமது, பிரகாஷ், மணிகண்டன், சந்தோஷ், டேவிட். எல்லோர் மனதிலும் காந்தியின் படுகொலை காட்சிகள் ஞாபகத்து வந்தன. அதையும் தமிழாசிரியர் சொல்லியிருந்தார். அன்று பல மாணவர்கள் காந்தித்தாத்தாவுக்காகக் கண்ணீர் சிந்தினார்கள். இன்றும் எல்லாருடைய மனதிலும் ஒரு பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

வகுப்பு முடிந்து விட்டது. தமிழாசிரியர் முத்தாய்ப்பாக ஏதாவது சொல்லுவார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாகப் போய் விட்டார்.

மாணவர்கள் அமைதியாக இருந்தார்கள். எல்லார் மனதிலும் ஏதோ நெகிழ்ச்சியான உணர்வு. பிரபுவின் மனதில் புகுந்திருந்த வெறுப்பு காந்தித்தாத்தாவைப் பற்றிப் பேசத் தொடங்கியதுமே சன்னல் வழியே குதித்து ஓடிப் போய் விட்டது.

பிரபு இப்போது அவனை அறியாமலேயே அகமதின் அருகில் நெருங்கியிருந்தான். பள்ளி முடியும் போது அந்த வகுப்பில் கையில் கயிறு கட்டியிருந்த பல மாணவர்கள் கயிறை அறுத்து எறிந்தார்கள். கயிறை அறுத்ததுமே ஒரு விடுதலை உணர்வு வந்தது.

தமிழாசிரியர் அந்தக் காட்சியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே சென்றார். பிரபு அகமதின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு சென்றான். அவர்களுடன் பிரகாஷும் சேர்ந்து கொண்டான்.

அவர்கள் அனைவரின் மனதிலும் அன்பின் இனிப்புச்சுவை நிறைந்திருந்தது.


Art : etsy.com

உதயசங்கர் .
உதயசங்கர் .

சொந்த ஊர் கொவில்பட்டி. 45 ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை ஆகிய வகைமைகளில் 200 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். விகடன் விருது, தமிழ்ப்பேராயம் விருது, தமுஎகச, கஇபெமன்ற விருதுகள் உள்ளிட்டு 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். 2022 ஆம் ஆண்டு தமிழ்ச்செம்மல் விருதும், 2023 ஆம் ஆண்டு பாலசாகித்ய புரஸ்கார் விருதும் பெற்றவர்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மழை

    மழை

    May 2, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    May 1, 2026
  • தூக்கிடல்

    தூக்கிடல்

    May 1, 2026
  • ஹிம்சானா கவிதைகள்

    ஹிம்சானா கவிதைகள்

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (21)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (107)
  • கட்டுரை (5)
  • கதை (11)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (47)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (21)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மழை

    மழை

    May 2, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    May 1, 2026
  • தூக்கிடல்

    தூக்கிடல்

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (21)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (107)
  • கட்டுரை (5)
  • கதை (11)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (47)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top