நகரம் ஒரு மாயை. இங்கு வாழும் மனிதர்கள், அவர்களின் வாழ்விடம், உணவு வகைகள், கலாசாரம், பலதரப்பட்ட மொழிகளின் பயன்பாடு ஆகியவை அந்த வினோத மாயையைத் தீர்க்கமாக உணர்த்தும் காரணங்கள் என்றும் அப்படியான மாயைகள்தாம் மக்களுக்கு நகரத்தை மிகப்பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்துகின்றன என்றும் அவ்வப்போது எனக்கு நானே நினைத்துக்கொள்வதுண்டு.
மிரட்சியடைந்த ஒரு குழந்தையைப் போல் இந்த மாய நகரையும் அது ஆட்டுவிக்கும் மனிதர்களின் வினோதச் செயல்களையும் கண்டு ஒன்றும் புரியாதவளாக வேடிக்கை பார்த்தே என் நகர வாழ்வின் சில ஆண்டுகள் கடந்திருந்தன.
கல்லூரி நாள் அது. பொதுவாகக் காலை எட்டு முப்பதில் இருந்து நண்பகல் ஒரு மணிவரை எனக்கு வகுப்புகள். ஐந்து பாடவேளைகள் கொண்ட அன்றைய வகுப்பில் ஒரு பாடத்திற்கு ஒரு சிறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதால் அதற்காக நூலகம் சென்றிருந்தேன். இதனால் நான் விடுதி திரும்ப மாலை நான்கிற்கு மேல் ஆகியிருந்தது.
நான் நூலகத்தை விட்டு வெளியேறிய சமயம் கல்லூரியின் மாலை வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. அதனால் வகுப்புகளின் வெளிப்புறமோ கல்லூரி மைதானத்திலோ வேறு யாரும் என் கண்களுக்குத் தென்படவில்லை. அந்த நேரம் யாருமற்ற சூழல் மனதிற்கு ஏதோ ஒருவித இதமான உணர்வைத் தந்திருந்தது.
நான் கல்லூரியை விட்டு வெளியேற கல்லூரிக் கட்டிடங்களுக்கு இடையே நடந்துவரும்போதே பேருந்து நிலையத்திலும் யாரும் இல்லாததை அறிந்துகொண்டேன். கல்லூரி நுழைவு வாயிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் என்பதால் மனிதர்கள் நிற்பது கல்லூரியின் உட்புறம் இருந்தும் நன்றாகப் பார்க்க முடியும். மாலை வகுப்புகள் முடிய இன்னும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருந்தது. நான் ஒரு அடித்தரையைப் பார்த்தும் மறு அடி ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டும் மிக சாவகாசமாக நடந்து வந்து பேருந்து நிறுத்தம் அடைந்தேன். ஆறு காத்திருப்பு இருக்கைகள் கொண்ட கல்லூரிப் பேருந்து நிறுத்தம் அது. இராணி மேரி கல்லூரி பேருந்து நிறுத்தம் என்று சற்றுப் பெரிய எழுத்தில் எழுதியிருக்கும்.
வேறெதுவும் செய்யத் தோன்றாத அந்தப் பொழுதும் சூழலும் இசையைத் தேர்வு செய்யத் தூண்டின. கைபேசியில் வானொலியைக் கேட்கக் காதொலிப்பானை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கிருந்த மூன்றாவது இருக்கையில் சென்று அமர்ந்தேன்.
முதல் சேனலில் “யாரோ மனதிலே… ஏதோ உயிரிலோ..” என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. மிக சோகமான பாடல் அது. கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்தும் காதலுனுக்காக ஏங்கிப் பாடும் பாடல். சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செல்லும் வாகனங்கள் ஏனோ அப்பாடலுக்கு உகந்த காட்சிபோல் மனம் எண்ணிக்கொண்டது.
அப்பாடலின் தொடர்ச்சியாகக் “கருப்பு நிலா” பாடல் ஒலிபரப்பானது.
இப்பாடலின் இசையில் திடுமென அவ்வப்போது வாகனங்கள் செல்லும் சாலை, திருமண வீட்டின் கலையை அப்பிக்கொண்டது. ஏதோ மந்திரம் செய்தது போல். சாலை முழுவதும் தவழ்ந்து ஓடியது காதில் தித்தித்த இசை.
“பத்து மாசம் மடியேந்தி
பெத்தெடுத்த மகராசி
பச்ச புள்ள உன்ன விட்டு
போனதெண்ணி அழுதாயா..
மாமன் வந்து எனைக் காக்க
நானும் வந்து உனைக் காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக..
காலம் உள்ள காலம்
வாழும் இந்தப் பாசம்
பூ விழி
இமை மூடியே
சின்ன பூவே
கண்ணுறங்கு
கருப்பு நிலா..”
என உருகிக் கொண்டிருந்தார் பாடகி சித்ரா. வரிகளால் தோளைத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார் கவிஞர் வாலி. நான் கண்களை மூடி இசையோடும் குரலோடும் மூழ்கிப்போனேன். மிக ஆழமாக.
ஏழெட்டு வயதுச் சிறுமியாக சித்ரா தியேட்டர் தரை வரிசையில் அமர்ந்திருந்த நினைவு மேலெழுந்தது.
சித்ரா திரையரங்கம் எங்கள் ஊரில் இருந்த ஒரே திரையரங்கம். நண்பகல் ஒரு மணிக்கு, மாலை நான்கு மணிக்கு, இரவு பத்து மணிக்கு என தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்படும்.
ஊரில் பெரும்பாலும் அச்சமயத்தில் ராமராஜனுக்கும் விஜயகாந்திற்கும் என ஒரு பெரிய இரசிகப் பட்டாளமே இருந்தது.
“திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்ற சித்ரா திரையரங்கின் ரெக்கார்டு சத்தம்தான் ஊரில் சரியாக நண்பகல் ஒரு மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் இரவு பத்து மணிக்கும் ஒலிக்கும் அலாரம் சத்தம்.
நண்பகல் பாடல் கேட்டுதான் வயல்வெளியில் வேலை செய்யும் ஆட்கள் உணவு இடைவேளைக்குச் செல்வார்கள். மாலை நான்கு மணி ரெக்கார்டு கேட்டபின்தான் பசும்பால் கடை திறக்கப்படும். இரவு எழுப்பப்படும் ரெக்கார்டு சத்தம் உறங்க உந்தும் அலாரம். ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒலிக்கப்படும் இந்தப் பாடல் எங்கள் ஊரின் உயிரில் கலந்த அன்றாடமாகி இருந்தது.
பத்து வயதுச் சிறுமி நான். அன்று விடுமுறை தினம் என்பதால். அம்மாயி எங்கே செல்கிறோம் என்று கூடக் கூறாமல் என்னை ஒரு கையில் பிடித்துக்கொண்டும் தலையில் முக்காடு இட்டு முகத்தை வெயிலுக்கு மறைத்தும் ஓட்டமும் நடையுமாக எனை இழுத்துக்கொண்டு நடந்தாள்.
ஆயா.
என்ன புள்ள.
இந்த வெயில்ல எங்க கூட்டிப் போற..
கொட்டாயிக்கி.
அப்போது கூடக்குறைய ஆறு பேரப்பிள்ளைகள் இருந்தோம். நான்தான் இரண்டாம் எண். ஆனால் என்னை மட்டும் அழைத்து வந்த நோக்கம் புரியாமல் விழித்தேன்.
ஆயா..
என்னடி.
அப்ப.. பாப்பா தம்பிலாம் கூப்டாம என்ன மட்டும் எதுக்கு இழுத்தாந்த.
அதுங்களெ கூட்டியாந்தா படம் பாக்க விடாதுங்க. அதுங்கள மேக்கிறதே வேலையா போய்டும். பேசாம வாடி.
அதான். கேட்குறேன். என்னைய ஏன் இழுத்தாந்த.
எனக்குத் தொணைக்கு வேணும்ல.
உனக்குத் தொணைக்கு ஒரு ஆளு வேணுமா? நீ பெருசாதான இருக்க. உனக்கெதுக்கு தொண?.
பேசாம பொட்டாட்டம் இருப்பனுதான் உன்ன இழுத்தாந்தேன். மத்ததுங்கெல்லாம் பேய்ங்க.
இதற்குள் நானும் அம்மாயும் திரையரங்கின் வாசலை அடைந்திருந்தோம்.
அப்பாடா! எவ்ளோ பெரிய எடம் ! இங்க மட்டும் வெளையாட விட்டா செம்மையா விளையாடலாம். தூரமா இருக்கு அதான் ஒரே குறை. இப்படியாகச் சிந்தித்துக் கொண்டே நான்குபேர் கொண்ட ஒரு வரிசையில் ஐந்தாவதாக நான் நின்றேன். எனக்கடுத்து அம்மாயி நின்றாள். முன்னாடி இருந்தவர்கள் நகர அம்மாயி ஐந்து ரூபாய் தாளைக் கொடுத்து இரண்டு டிக்கெட்டுகள் வாங்கினாள். அப்போது டிக்கெட் விலை இரண்டு ரூபாய்.
இரண்டு மூன்று அடிகள் நகர்ந்திருப்போம் அங்கிருந்த வேலிக்கு வெளியே நின்றிருந்த மனிதர் அம்மாயி வாங்கிய டிக்கெட்டை வாங்கி இரண்டாகக் கிழித்து மீண்டும் அவள் கையிலேயே கொடுத்தார்.
நாங்கள் உட்புறமாக நடந்தோம்.
ஆயா..
என்ன புள்ள
அப்படி வாங்கின டிக்கட்ட இந்தப் பக்கம் இவரு வாங்கிக் கிழிக்கிறாரு.. இதுக்கு எதுக்கு ஒரு ஆளு. டிக்கெட் கொடுக்கும்போதே கிழிச்சே கொடுத்துருக்கலாம்ல.
ஆமா டி. அந்தாளுக்கு வெவரம் தெரியல போல என்று சிரித்தாள்.
நானும் கூடச் சேர்ந்து சிரித்தேன்.
அன்று ஓடிய திரைப்படத்தின் சுவரொட்டி திரையரங்கச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. அதன் அருகில் வந்து நின்றாள் அம்மாயி.
பாப்பா.
என்ன ஆயா.
இந்தப் படம் பேரு என்ன படிச்சிச் சொல்லு.
சரி. இரு படிக்கிறேன் என்று எழுத்துக்கூட்ட ஆரம்பித்தேன். “எ ன் ஆ ச ம ச் சா ன் ‘என் ஆச மச்சான், ஆயா” படம்
பேரு.
இந்த ஐயன் பேரு என்ன ?
யாரு விஜயகாந்தா?
ஆமா விசய காந்து. பாக்க நல்லாருக்காருல்ல. இந்த ஐயன் படம் நல்லாருக்கும். அதான் வந்தேன்.
எல்லாம் சரி. நீ தாத்தாவக் கூட்டிட்டு வரவேண்டியதுதான. என்ன ஏன் புள்ளைங்கள விட்டுத் தனியா கூட்டியாந்த.
உன் தாத்தன் தான்டி உன்ன இழுத்துட்டுப் போகச் சொன்னாங்க. நீதான் ஒரு தொந்தரவும் தர மாட்ட. அதான். இடைவேளைல உனக்கு ஐசு வாங்கித் தரேன். படம் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயி விளையாடலாம். என்று சமாதானம் செய்து திரையரங்கின் தரைப் பகுதிக்கு அம்மாயி அழைத்துச் சென்றாள்.
நண்பகல் நேரம் என்பதாலோ என்னவோ தரைப் பகுதியில் நான்கு பேர்தான் இருந்தோம். பென்ச் பகுதியில் இரண்டு மூன்று பேர்களும் நான்கு படிகள் ஏறிச் சென்று அமரும் கடைசி மூன்று பெஞ்சில் ஐந்தாறு நபர்களும் அமர்ந்திருந்தனர்.
படம் தொடங்கியது. இவ்ளோ பெரிய வெள்ளைச் சீலைய எங்க வாங்கிருப்பாங்க. ஒருவேளை இது வேட்டியா இருக்குமோ என்ற சிந்தனைகள்தான் என்னுள் மேலோங்கி இருந்தது.
பின் தரைப்பகுதியில் இருந்த மண்ணில் ஒரு பாதி பிடித்துப்போட்ட துண்டுப் பீடி ஒன்று கிடந்தது. அதை வைத்து மண்ணிற்குள் அதைப் புதைத்து மறைத்துப் பின் நானே அதைக் கண்டறியும் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடத் தொடங்கினேன்.
படத்தின் எழுத்திலிருந்தே அம்மாயி திரையை ஆழ்ந்து பார்க்கத் தொடங்கினாள்.
ஆரம்பத்தில் சிறுது நேரம் திரையில் ஆடிய வண்ணங்கள் என்னை ஈர்த்தன. பிறகு படத்தின் பாடல்கள் சற்றுக் கவனிக்கத் தூண்டின. அதுவும் இந்தக் கருப்பு நிலா பாடல்.
“வண்ண வண்ண முகம் காட்டி,
வானவில்லின் நிறங்காட்டி,
சின்ன சின்ன மழலைப் பேசி
சித்திரம் போல் மகனே வா….
செம்பருத்தி மலர் போலே..
சொக்க வெள்ளி மணிப்போலே
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடிமேல் வா..
பாட்டு தமிழ்ப் பாட்டு
பாட அதைக் கேட்டு
ஆடிடும் விளையாடிடும்
தங்கத் தேரே
நீ தானே…
கருப்பு நிலா..
நீ தான் கலங்குவதேன்?
துளித் துளியா
கண்ணீர் விழுவது ஏன்..?”
என்னைப் போன்ற ஒரு சிறுமி அப்பாடலை உருகிப் பாடிக்கொண்டிருந்தார். அந்தச் சிறுமியின் முகம். அம்முகத்தில் இருந்த கனிவு, அவள் ஆடை நேர்த்தி, அதன் வண்ணம், திரையரங்கம் முழுவதும் வழிந்தோடிய அந்த இசை மற்றும் வரிகள் என் கவனத்தை முழுவதுமாகத் திரையில் குவிக்கச் செய்தது. ஏதோ ஒரு மாயம் செய்தது போல் எங்கும் திரும்பாமல் அப்பாடலைக் கேட்டபடி அதன் காட்சிகளுக்குள் மூழ்கினேன்.
அன்று முதல் இந்தப் பாடலை எங்கு எப்போது எப்படியான சூழலில் கேட்கும்போதும் நான் சித்ரா திரையரங்கின் ஒரு பெரிய வெள்ளைத் திரைக்கு முன்னால் விரிந்திருக்கும் மண் தரையில் அமர்ந்து விடுகிறேன். ஆமாம் அப்போதுதெல்லாம் எனக்கு வயது பத்து.
Art : BellaBella BoBella2
ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.








Leave a Reply