வெறுமையின் சித்திரம்
வெற்றுச் சுவரில் வெறுமையை வரைய
வண்ணம் தேடிக்கொண்டிருக்கிறேன்
உங்கள் கடிகாரங்களில் இருந்து முட்களை உடைத்து வாருங்கள்
தூரிகை செய்வோம்
அப்படியே உச்சி வெய்யிலின் மஞ்சளைக் கொஞ்சம் அள்ளி வாருங்கள்
என்னிடம் கொஞ்சம் யாரும் கேட்டிராத சொற்களின் சாறு இருக்கிறது
சேர்த்துக் கரைத்து வெறுமையின் சித்திரத்தைத் தீட்டுவோம்…
இருத்தலின் இயல்புகளைக் கொண்டு கோடுகள் இடுவோம்
பால்யத்தின் முடுக்குகளில் தேடிப் பார்த்து உடைந்த கண்ணாடிக் கோப்பையில்
சற்று ஈரம் மிச்சம் இருக்கும் மையெடுத்து ஒப்பமிட்டு முடிப்போம்
கடிகாரம் காத்திருக்கட்டும்
வெய்யில் காத்திருக்கட்டும்
சொற்கள் காத்திருக்கட்டும்
இந்தச் சித்திர நிழலில் கொஞ்சம் இளைப்பாறுவோம்.
வெறுமைகளின் வீதி
வெறுமையுற்றிருக்கும் வீதிகளினூடே நடந்து செல்வதாய் எண்ணிக்கொள்கிறேன்…
கைகள் குறுக்க வைக்கும் குளிர்வீசும் குறுகலான வீதி அது..
எங்கிருந்தோ வந்து கதகதப்பூட்டும் காற்றை முதுகில் உணர திரும்பிப் பார்க்கிறேன்…
அங்குமிங்குமாய்ச் சில ஒளியூட்டும் காட்சிகள்..
ஒன்றிரண்டு நிழற்படங்கள் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கின்றன..
உற்றுக் கவனிக்குமுன்னே நிழற்படங்களைத் தின்று தீர்த்தது அந்நெருப்பு…
முதுகில் மெல்ல வெப்பமூட்டிய காற்றும் அந்நெருப்பைக் கடந்து வந்திருக்கக் கூடும்…
கதகதப்பான அவ்விடத்தில் சற்று உட்கார்ந்து விடலாம் போலிருந்தது
நிழற்படங்களை எரித்த நெருப்பு அருகில் வந்தால் என்ன செய்வது
சற்றும் தாமதிக்காமல் திரும்பி நடக்கத் தொடங்குகிறேன்
சற்றே விரிந்தும் குளிர் குறைந்தும் நீள்கிறது வீதி
கதைசொல்லும் கடிகாரம்
பூட்டியிருக்கும் வீட்டினுள்
எதிர்ச்சுவரைப் பார்த்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறது கடிகாரம்
நொடி நாவின் ஒவ்வொரு நகர்தலிலும்
ஆயிரமாயிரம் கதைகள்
தொடங்கி முடிகின்றன
பூக்களும் மழலைகளும்
புன்னகைக்கும் கதைகள் சில
வறண்ட விழிகளில் கானல் நீராய்
மறைந்திருக்கும் கண்ணீர்
சொல்லும் கதைகள் சில
அத்தனை கதைகளையும் கேட்டுக்கொண்டு
தன்னைச் சுற்றி பரவிக்கிடக்கும்
வெறுமையைப் போக்கிக் கொண்டிருக்கிறது சுவர்.
டார்வினின் ஆட்டுக்குட்டி
அநேக ஞாயிற்றுக்கிழமைகளி்ல்
இறைச்சிக் கடைகளின் கூட்டத்தின் நடுவே
அந்த ஆட்டுக்குட்டியை நீங்கள் காணலாம்
பரிணாமக் கோட்பாட்டு விதிகளின் படி
தன் மேய்ப்பனிடமும் வியாபாரியிடமும்
வலியது என்று நற்பெயர் பெற்றே இங்கு வந்திருக்கிறது
அதன் கழுத்து கயிற்றின் முடிச்சுக்கள்
தன் மூதாதையர்கள் சுற்றித்திரிந்த காட்டுப் புற்களையும்
மண்டியிட்டிருக்கும் அதன் முன்னங்கால்கள்
சாய்க்கப்பட்ட மலை முகடுகளையம் ஒத்திருக்கின்றன
அதன் காதுகளில் இன்னமும் வேட்டையாடியின் காலடிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது..
தப்பிப் பிழைத்து வந்திருக்கும் வெற்றிச் செய்தியை அதனிடம் சொல்லிவிடாதீர்கள்
அது நம்பிவிட்க்கூடும்
காகிதத் துண்டுகள்
தினம் படுக்கையிலிருந்து எழுந்ததும்
போர்வையை மடித்துவைக்கா விட்டாலும்
குறைந்தபட்சம் அதை உதறி படுக்கையின் ஓரத்தில் வைக்குமளவுக்கு
எனக்குப் பழக்கம் இருக்கிறது
சில காலமாக இப்படிப் போர்வையை உதறும் பொழுது
அதிலிருந்து சில காகிதத் துண்டுகள் விழுவதைக் கவனித்தேன்
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணத்திலும் வெவ்வேறு வடிவத்திலும்
கிழித்துப் போடப்பட்ட துண்டுகள் அவை
சிலநாட்களில் அவை துகள்களாக வந்து விழுவதுமுண்டு
அப்படிப் பலவண்ணக் காகிதத் துகள்களாக விழும்போது
நட்சத்திரங்களை நறுக்கி வீசிவிட்டது போலிருக்கும்
நட்சத்திரங்களை நறுக்கும் சக்தி வந்துவிட்டதென்று
எனக்குள்ளே நகைத்துக்கொள்வேன்
இப்படியாக ஒருநாள் அந்தக் காகிதத் துண்டொன்றை எடுத்துப் பார்த்தேன்
ஒன்றும் புரியும்படியாக இல்லை
கீழிருந்த மற்ற துண்டுகளையும் இணைத்துப் பார்த்தேன்
ஒன்றோடொன்று பொருந்தவில்லை
ஒவ்வொரு துண்டிலும் ஏதேதோ கிறுக்கியிருந்தது
சில கிறுக்கல்கள் முகங்களை வரைந்து யாரென்று அறியாதபடி
மேலே கிறுக்கப்பட்டதைப் போலிருந்தது
இன்னொன்றில் யாரோ கடிதம் எழுதிவிட்டு
அனுப்ப மனமில்லாதது போல் அதன்மீது கிறுக்கப்பட்டிருந்தது
இது யாருடைய முகம்?
இது யாருக்கு யார் எழுதிய கடிதம்?
ஒன்றும் புலப்படவில்லை..
நட்சத்திரங்களை நறுக்குவதுபோல் கிழித்தெறிந்துவிட்டு நடந்தேன்
கிறுக்கிக் கிழிக்கக் காகிதமா இல்லை
இது எதற்கு.
Art : Marie T. Brandt








Leave a Reply