பட்டியலின மற்றும் பழங்குடி பெண் இயக்குநர்களுக்கான கேரள அரசின் திரையுருவாக்க நிதியளிப்பு குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் கூறிய ஆலோசனைகள் சமீபத்தில் சர்ச்சையாக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தை உணர்ச்சி மேலிடுதலின்றி, நல்ல சினிமாவை நேசிக்கும் ஒரு படைப்பாளரது கண்கொண்டு பார்ப்பது நலம்பயக்கும் என்று தோன்றுகிறது. அடூர் கோபாலகிருஷ்ணன் தான் அர்ப்பணிப்புடன் இயங்கும் திரைக்களத்தின் நிகழ்காலத் தேவைகளையும் அதன்வழியான சீரடைவுகளையும் முன்னிறுத்தியே தனது எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஒரு படைப்பாளருக்கே 1.5 கோடியை நிதியளிப்பாகத் தருவதைவிட, அந்தத் தொகையை 3 பேருக்குத் தலா 50 இலட்சங்களாகப் பகிர்ந்தளித்து, ஒரே சமயத்தில் 3 படைப்பாளிகளுக்கு வாய்ப்பு தரலாமே என்றிருக்கிறார். இது சிறந்த ஆலோசனைதானே. ஒருவருக்கு மட்டுமே பெரும்நிதி செல்லவேண்டுமென்று ஏதேனும் கட்டுப்பாட்டு விதிமுறை இருக்கிறதா?
கலைசினிமா (Art Cinema) உருவாக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளத்தானே ஏதொரு அரசும் நிதியை வழங்குகிறது. அதன்படி, சிறு முதலீட்டில் படங்களைத் தயாரிப்பதுதானே ஆக்கபூர்வ நடைமுறைக்கு வழிகோலும். திரைப்படம் சார்ந்து பெரும் முதலீடு என்பது தானாகவே பல சமரசங்களை வரவழைத்துவிடக் கூடியது. பிரபல நடிகரை வைத்துப் படமெடுக்கத் தோன்றும். அவர் தனது விருப்பத்திற்கேற்பக் கதையை வழிப்படுத்த முயல்வார். இதனால் ஏற்படும் செலவேற்றம் படத்தின் மற்றைய தொழில்நுட்ப அம்சங்களிலும் தற்போக்காக ஊடுபாவிவிடும்.
மலையாள சினிமாவில் அடூர் கோபாலகிருஷ்ணனும், அரவிந்தனும், ஜான் ஆப்ரஹாமும் கட்டிக்காத்த கலைசினிமா என்பது குறைந்தபட்சச் செலவீனத்தை முன்வைத்த உலகளாவிய உச்சம் கண்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மக்களது சிந்தனையை நல்வழிப்படுத்தும் அர்த்தப்பூர்வத் திரைப்படங்களைச் சில ஆயிரங்களில்கூட எடுத்துவிட முடியும் என்பதைக் கலைசினிமாவின் நவீன உருவெடுப்பான ‘சுதந்திர சினிமா’ (Independent Cinema) இந்தியப் பரப்பில் மட்டுமல்ல, உலகெங்கும் சாதித்திருக்கிறது, சாதித்தும் வருகிறது. கதைக்களத்தின் எல்லைக்குட்பட்ட வீர்யத்திலும் அதைக் கட்டமைக்கும் திரைக்கதையின் ஆற்றொழுக்கிலுமே அப்படங்கள் ஈட்டவேண்டிய அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகின்றன. எனவே பெரும் பொருட்ச்செலவை வைத்துத்தான் கலையார்ந்த திரைப்படங்களை உருவாக்கமுடியும் என்பதில்லை.
மேலும் ஆழ்ந்து பார்த்தோமானால், பெரும் பொருட்ச்செலவை நாடிச்செல்லும் படைப்பாளர்களது கூட்டமே சமகால மலையாள சினிமாவிலும் சரி, இன்னபிற இந்திய சினிமாவிலும் சரி, அழுத்தமான கலைத் தாக்கங்களைக் கைவிட்டுவிட்டு ‘நடுநிலை சினிமா’ (Missle Cinema) என்னும் வெகுஜன ஈர்ப்புத் தளங்களில் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இது நல்ல சினிமாவின் மீது அழுத்தப்பட்டிருக்கும் நெருக்கடிதான். ஆழ்மையான பரப்பில் இந்திய சினிமாவைப் பார்ப்பவருக்கு இது கண்கூடாகத் தெரியும் உண்மை.
இந்தியாவெங்கும் புதிய அலை சினிமாவைத் (New Wave Cinema) தழைக்கச் செய்த பற்பல திரைமேதைகளின் ஒளிமயப்பட்ட காலத்திலும் நடுநிலை சினிமா என்ற தனித்த போக்கு இருக்கவே செய்தது. ஆனால் அதன் மேலடுக்கில் திகழ்ந்த கலை சினிமாவிற்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் நட்புப் பாலமாக அது விளங்கியது. இரு வேறு நதிகளென அவை தனித்தனியே கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த அக்காலம் அற்புதமானதுதான். பொருட்ச்செலவின் அதீத மதிப்புக் கூட்டலில் எளிய வடிவிலிருந்த கலைசினிமாவை மனமொடுக்கித் தன்னுள் செரித்துக்கொண்ட நடுநிலை சினிமா தற்போது ஒற்றை ஆறாகத் தனிமையில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும் முதலீடு என்பது நல்ல சினிமாவைக் கொன்றுவிடும் கொடிய நோய். அன்றிலிருந்து இன்றுவரை, சிறிதினும் சிறிது கேள் என்கிற கொள்கைப்பாட்டில் நிற்பதாலேயே கலைசினிமா இந்தியாவில் குற்றுயிராகவேனும் உயிர்த்திருக்கிறது என்பது நிதர்சனம்.
குறைந்த செலவீட்டில் படங்களை உருவாக்கும் சுதந்திர சினிமா குழுக்கள் கேரளாவிலும் சிறுபான்மையாக உண்டு. ஆனால் தேடல்வயப்பட்ட சினிமா பார்வையாளர்களுக்கேகூட அக்குழுவினரது படைப்புகள் குறித்த பரவலான பரிட்சயம் இருப்பதில்லை. அடூர் கோபாலகிருஷ்ணன் கூறும் நிதிப்பகிர்வுக் கொள்கை கேரள மண்ணின் வெவ்வேறு நிலப்பரப்புகளில் உள்ள விளிம்புநிலைப் படைப்பாளிகளை ஒருசேர வெளிக்கொணர உதவிகரமாக அமையும் என்பதே என் பார்வை.
அடுத்து அவர் குறிப்பிட்ட நிதியளிப்பைப் பெறுபவர்களுக்குத் திரையுருவாக்கம் சார்ந்து 3 மாதகாலப் பயிற்சி அளிப்பது குறித்தது. இது உண்மையில் அனைத்து இளம் படைப்பாளர்களும் வரவேற்கவேண்டிய சிறப்பான ஆலோசனை அல்லவா? உலகளாவிய முதன்மைத் திரைப்பட விழாக்களை நடத்தும் அமைப்புகள் இப்படியான காரியங்களைக் காலங்காலமாகச் செய்து வருகின்றனவே. கான் (Cannes) உட்பட பல முதன்மைத் திரைப்பட விழா அமைப்புகள், உலகளாவிய இளம்படைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து தமது நாடுகளில் தங்கவைத்து, உலகத் திரைமேதைகளின் நேரடிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளச் செய்து அவர்களது திரையறிவை விஸ்தரித்துக்கொள்ளும் அரிய வாய்ப்பை வழங்கிவருகின்றனவே. கடந்த பத்தாண்டுகளில்தான் எத்தனையெத்தனை நல்ல இயக்குநர்களை உருவாக்கித் தந்திருக்கின்றன, இத்தகைய திரைப்பயிற்சிக் களங்கள். கேரள மண்ணில் அதற்கான விதை விழுந்தால் அது நல்ல சினிமாவிற்கான ஆரோக்கியப் போக்கைத்தானே கட்டமைக்கும். இந்திய சினிமாவிற்கே ஒரு முன்னுதாரண முயற்சியாகத்தானே அது பரிமாணம் பெறும்.
இந்திய அளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் சிலவற்றிலாவது வருடாவருடம் நீங்கள் பார்வையாளராகப் பங்கேற்கிறவர்களாக இருந்தால், சுதந்திர சினிமா என்னும் பெயரில் அலங்கோலத்திலான திரைக்கதையாலும் பலகீனமான இயக்கத்தாலும் குறைப்பிரசவத்தில் பிறப்பெடுத்த படங்கள் கணிசமாக வருவதைக் கண்கொண்டு காணமுடியும். அவற்றை உள்ளூர்ப் பார்வையாளர்களே நிராகரித்துவிடும் நிலையிருக்கும்போது, உலக சினிமாவில் ஏது அதற்கு அரங்கம்? தான் வடிவமைத்த கதையை ஆர்வமிகுதியில் தானே திரைக்கதையாக எழுதத் துணிவதும், அப்படத்திற்கு அவசியமான திரைமொழியைக் கண்டுணரும் திறமையற்றிருப்பதும் இத்தகைய படைப்புச் சரிவிற்கு மூலக்காரணங்கள். ‘மனதில் தோன்றும்விதமாக எதையாவது ஒளிப்பதிவுக் கருவியின்வழி எடுத்துவைக்கலாம், ஓரிரண்டு திரைவிழாக்களிலாவது திரையிடப்படாமலா போய்விடும்’ என்கிற கண்மூடித்தனமான நப்பாசையும் உடன் ஊக்கவேலை செய்கிறது. இப்படி சமகால இந்தியச் சுதந்திர சினிமாவில் கடந்த பத்தாண்டில் அங்கப்பட்டிருக்கும் ஒரு நூற்றுத் தொகையிலான அரைவேக்காட்டுத் திரைப்படங்களை நான் பட்டியலிட முடியும். முறையான திரைக்கல்வி சார்ந்த பயிற்சியைப் பெறாததாலும் பெறும் வாய்ப்பில்லாததாலும் சுதந்திர சினிமாவின் கலையுருவம் உயிர் மெலிவடைந்து உடல் வீழும் நிலையிலிருக்கிறது.
இந்நிலையை உணராமல், தத்தமது வீட்டிலிருந்தபடியே தரவிறக்கத்தில் அல்லது ஓடிடியில் படங்களைப் பார்த்து நல்ல சினிமா குறித்து குண்டுச் சட்டியில் குதிரையோட்டிப் பாடம் எடுக்கும் சமூகத் தள அறிவுசீவிகளுக்கு இந்தியக் கலைசினிமா கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கொண்டிருக்கிற நிலை கண்களுக்குத் தெரியாது, தமது எல்லைக்குட்பட்ட இரசனையைத் தன்மயக்கப்படுத்திக் கொண்டு ஜனரஞ்சக சினிமாவிற்குள்ளேயே அனைத்துக் கலையம்சங்களும் அடக்கம் என அவர்கள் பெருமிதமாக இறுதித் தீர்ப்பை எழுதுபவர்களாக இருக்கிறார்கள். மயிலில் பறந்து உலக சினிமாவைச் சுற்றி வராமல் அம்மையப்பனான உள்ளூர் சினிமாவைச் சுற்றிவந்து பழம் பெறும் உழைப்பற்ற ஞானிகள் அவர்கள். கையில் கிடைக்கும் படங்களை வைத்து மதிப்பிடுபவரது மனோகதி வேறு. நல்ல சினிமாவின்மீது காதல் வயப்பட்டு ஊர் ஊராகத் திரைவிழாக்களில் பித்துப் பிடித்துத் திரியும் திரைக்காதலர்களின் மனோகதி வேறு.
அடூர் கோபாலகிருஷ்ணன் கூறிய திரையுருவாக்கப் பயிற்சி குறித்த ஆலோசனைக்குக் கேரளாவில் இளைய தலைமுறை திரைப் படைப்பாளர்கள் அனைவருமே நன்றி நவிலவேண்டும். இந்த நிதியளிப்புத் திட்டமும் பயிற்சியும் கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இன்னபிற மாநிலங்களிலும்கூடப் பரவலாக்கம் செய்யப்படவேண்டிய முக்கியமான முன்னெடுப்பு. மட்டுப்படுத்தப்பட்ட கற்றலோடு ஓரிரு படங்களை எடுத்து வெற்றிபெற இயலாமல் காணாமல் போய்விடும் பலரும் தமது ஆற்றலை வளமைப்படத்திக்கொண்டு திரைக்களத்தில் அழுத்தமாகக் காலூன்றி நிற்க இந்தப் பயிற்சிக்களம் உதவும். திரைக்கலையைப் பொறுத்தவரை பயிற்சி என்பது அத்தியாவசியம். தனது பெயரைத் திரைவரலாற்றில் அழுத்தமாகப் பதிய விரும்பும் படைப்பாளர்களுக்கு இதன் தீவிரம் புரிபடும்.
பயிற்சியே இல்லாமல் உலகத் திரை இயக்குநர்கள் மேம்படவில்லையா அல்லது புகழ்பெறவில்லையா என யாரேனும் கேட்டால், விதிவிலக்குளைப் பொதுவில் வைத்து ஏதொன்றையும் நாம் உத்தேசமாக மதிப்பிடமுடியாது என்பதுவே தக்க பதில். ‘படம் எடுக்கத் திரைக்கல்வி தேவையற்றது’ என்று கூறிய இத்தாலிய இயக்குநர் மைக்கலேஞ்சலோ அந்தோணியோனியை முன்வைத்தோ, ‘மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் தான் ஒதுங்கியதில்லை’ என்று கூறிய கரிசல் எழுத்தாளர் கி.இராஜநாராயணனை முன்வைத்தோ நாமும் சுயம்புகள்தான் என்று கற்பிதப்படுத்திக் கொள்வது அறிவீன முடிவாகவே எஞ்சிநிற்கும். தமிழ்சினிமாவில் திரைக்கதை அறிவாளர்களாகத் திகழ்ந்த கே.பாக்யராஜையும், டி.இராஜேந்தரையும் பார்த்து தம்மையும் அவர்களுக்கிணையாகக் கற்பனைசெய்து சூடுபோட்டுக் கொண்ட, கொண்டிருக்கும் இயக்குநர்களின் தோல்விக் கதையாகத்தான் அது முடிவடையும்.
அடூர் கோபாலகிருஷ்ணனது அக்கறையார்ந்த ஆலோசனைகளைக் குறுகலான கண்ணோட்டத்துடன் பார்ப்பது நல்ல சினிமாவிற்குத்தான் இழப்பைக் கொண்டுவரும். நிதியைப் பகிர்வதும், அதனைப் பெறும் படைப்பாளர்களுக்குத் திரையுருவாக்கப் பயிற்சி அளிப்பதும் நல்ல சினிமாவின் எதிர்காலத்தை மெருகேற்றச்செய்யும் என்கிற கடப்பாட்டில் அவர் கூறியிருக்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
சாதி, மதம், இனம், மொழி கடந்து அறத்தை ஆன்ம இருப்பெனக் கொண்டிருக்கும் கலைச் செயல்பாடு, ஏற்றத்தாழ்வற்ற சமத்துவத்திலான மனிதநேயத்தையே போதிக்கத் தலைப்படுவது. அத்தகையச் செயல்பாட்டைச் செறிவுடன் நிர்மாணிப்பதுதானே படைப்பாளர்களது ஆழ்கடமை. இந்திய சினிமா உலகளாவிய அங்கீகாரத்தை இன்னும் வலிமையாகப் பெறுவதற்கும் அது ஒன்றுதானே காண்பதற்கரிய ஊற்றுக்கண்.
Art : Anand Kalpakaserry








Leave a Reply