தூக்கணாங்குருவியும் நானும் நண்பர்கள்
பனையின் அந்தர வாப்பில்
நார்க்கூடு பின்னுகிறது குருவி.
யானையளவு வைக்கோல் படப்பைத்
தரையில் கட்டியெழுப்புகிறேன்.
தலைகீழாகப் பறந்தபடி நார் எடுத்துக் கொடுத்துக்
குருவிக்கு ஒத்தாசை செய்வேன்.
உடம்பெங்கும் சொனையரிக்க
வைக்கோலை என்னிடம் அள்ளித்தரும் குருவி.
கருவமுள் குத்தியதால்
எனது இடதுகண் நெம்பியெடுக்கப்பட்டது.
கட்டியால் மார்பகங்கள் அரியப்பட்டன.
தொண்டைப் புற்றைக் கொல்லும் கதிரியக்கச் சிகிச்சைக்காக
எல்லாப் பற்களும் பிடுங்கப்பட்டன.
கதிரியக்கத்தால் கழுத்து முழுதும்
விடியலே வராத இரவாகக் கருத்தது.
பனையின் உள்காயங்களைக் கண்டுணரும் குருவி
வெட்டி வெட்டியிழுக்கும்
எனது நோய்த்தேகம் அடங்கும் நேரத்தைத்
துல்லியமாய்க் கணித்தது.
வைக்கோல் பிரியால் என்னைப் பாடம் செய்து
வாய் பிளந்தவாறு
குஞ்சுகளோடு குஞ்சாக்கிக்
காலத்திற்கும்
எனக்குப் புழுவூட்டுகிறது குருவி.
(அன்புக்கரசி தேவதாஸுக்கு)
பொசுக்கும் இரும்புப் பூண்
கொடுக்காப்புளி மரத்தின் பட்டுப் போன முட்கள்
வெயிலுக்கு விடைக்கின்றன.
புளிச்சோத்தின் சூடு
நெத்திக் குங்குமத்தை இளக்குகிறது.
சூடக் கட்டியின் புகையால்
பலாச்சுளைகளில் கறுப்பு.
விருவுத் தரிசுக்குள் ஓடுகிறது
எலியின் மண்டையோடு.
கோடி வேட்டியில் பேயூமத்தைகள் அப்ப
சேவல் கொண்டையைச் சவைத்தபடி
செத்த நகங்களால் நடக்கிறேன்.
சுருமாட்டில் முதுகெலும்பாய்க் கிடக்கும்
புது உலக்கைக்கு
வேர்த்து ஊத்துகிறது.
சீலை நிலம்
தீ வைக்கப்பட்டதில்
அறுவடை முடிந்த கரும்புக் காடெங்கும்
கருகல் வாடை.
நடுநிசித் திருவிழாவில் கடை விரிக்க
ஒரேயொரு கட்டைப் பையுடன்
கரும்புச் சவங்களுக்குள் பயணிக்கிறேன்.
வனப்புடன் சீவி
பையினுள் சுருட்டி வைக்கப்பட்டுள்ள
சவுரிக் கூந்தல்கள்
ஜிகினாக்கள் மின்னும்
கண்ணாடி வளையல்களே
பேய்களால் வழி மறிக்கப்பட்ட
எனக்குத் துணை.
முத்துராசா குமார்
ஓவியம் : க.ஸ்ரீதர்
மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் & தொடர்பியல் துறையில் ஆய்வு நிறைஞர் பட்டம் பயின்றுள்ள இவர், விகடனில் மாணவப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்துள்ளார். பிடிமண், நீர்ச்சுழி, கழுமரம் ஆகிய கவிதை நூல்களும் ஈத்து, கொடுக்கு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் கங்கு நாவலும் இவரின் படைப்புகள். சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையில் எழுத்தாளராகவும் இயங்கி வருகிறார். இவருடைய எழுத்துகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில கவிதைகளும், சிறுகதையும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.








Leave a Reply