Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

இரண்டு நண்பர்கள்

கார்குழலி .
கார்குழலி .
April 1, 2026
இரண்டு நண்பர்கள்

(Two Friends)
கீ டு மோப்பஸான்
தமிழில்: கார்குழலி


முற்றுகையிடப்பட்ட பாரிஸ் பஞ்சத்தில் சிக்கித் துடித்தது. கூரையிலிருந்த சிட்டுக் குருவிகளும் சாக்கடையிலிருந்த எலிகளும்கூட அரிதாகின. மக்கள் கையில் கிடைத்த எதையும் தின்றனர்.

திருவாளர் மோரிஸாட் தொழில்முறை கடிகாரத் தயாரிப்பாளர், தற்போது வேலையேதுமின்றி ஓய்வாக இருந்தார். ஒளிமயமான ஓர் ஜனவரி மாதக் காலையில் மரங்களடர்ந்த பெருஞ்சாலையில் கால்சட்டைப் பையில் கைகளைப் பொதிந்தபடி, காலியான வயிற்றோடு, உலாத்திக்கொண்டிருந்தார். திடீரென முன்னர் மீன்பிடிக்கச் செல்கையில் அறிமுகமாகியிருந்த திருவாளர் சோவாஜின் முகத்தை நேருக்குநேர் கண்டார்.

போர் தொடங்குமுன்னர் மோரிஸாட் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் கையில் மூங்கில் கழியையும் முதுகில் தகரப் பெட்டியையும் தூக்கிக்கொண்டு கிளம்புவது வழக்கம். அர்ஜெண்டியூ ரயிலில் ஏறி கொலம்பெஸில் இறங்கி ஈல் மராண்ட் வரை நடந்துபோவார். தன் கனவுலகமான அந்த இடத்தை அடைந்ததும் உட்கார்ந்து இரவு சாயும் வரையில் மீன்பிடிப்பார்.

ஒவ்வொரு ஞாயிறும் அந்த இடத்தில் திருவாளர் சோவாஜைச் சந்திப்பார். சிறிய, கனத்த உடல்கொண்ட, களிப்புமிக்கவரான சோவாஜ் ரூ நாட்ர டேம் ட லோரெட்டில் ஜவுளி வியாபாரியாக இருந்தார். மீன்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கையில் கழியுடன் காலைக் கீழே தொங்கவிட்டுக்கொண்டு அருகருகே அமர்ந்தபடி அரை நாள் வரையிலும் பொழுதைப்போக்கும் சமயத்தில் இருவருக்குமிடையே இனிய நட்பு மலர்ந்திருந்தது.

சில நாட்கள் எதுவும் பேசமாட்டார்கள், மற்ற நாட்களில் அளவளாவுவார்கள். ஆனாலும் ஒரே விதமான ரசனையும் உணர்வும் கொண்டிருந்தனர் என்பதால் சொற்களின் தேவையின்றி ஒருவரையொருவர் முழுவதுமாகப் புரிந்துகொண்டனர்.

இளவேனிலில், காலை பத்துமணி சுமாருக்கு இளஞ்சூரியன் நீரின்மேல் மெல்லிய ஒளிப்படலத்தை பரவச்செய்து ஆர்வத்துடன் மீன்பிடித்துக்கொண்டிருந்த அந்த இருவரின் முதுகையும் கதகதப்பூட்டிய வேளையில் மோரிஸாட் அருகில் இருப்பவரிடம் எப்போதாவது இப்படிச் சொல்வார்:

”ஆகா, எத்தனை அருமையாக இருக்கிறது.”

அதற்கு மற்றவர் இப்படிப் பதிலளிப்பார்:

”இதைவிடவும் சிறப்பான ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது!”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பாராட்ட இந்தச் சொற்பமான வார்த்தைகளே போதுமானதாக இருந்தன.

இலையுதிர்காலத்தில், பொழுது சாய்கையில், மேற்கு வானில் அந்திச் சூரியன் ரத்தச் சிவப்பைச் சிந்துகையில், செவ்வண்ண மேகங்களின் எதிரொளிப்பு நதி முழுவதையும் சிவப்பாக்கி அந்த நண்பர்கள் இருவரின் முகத்தையும் ஒளிரச் செய்தது. பனியின் முதல் தொடுதலினால் நிறம் மாறத்தொடங்கியிருந்த இலைகளையுடைய மரங்களின்மீது தங்கமுலாமைப் பூசியது சூரிய ஒளி. சில சமயங்களில், மாரிஸாட்டைப் பார்த்துப் புன்னகைத்தபடியே சொல்வார் திருவாளர் சோவாஜ்:

“எத்தனை அற்புதமான காட்சி!”

தன்னுடைய கழியிலிருந்து கண்ணை அகற்றாமலே பதில்சொல்வார் மாரிஸாட்:

”மரங்களடர்ந்த சாலையைவிடவும் சிறப்பாக இருக்கிறது, அல்லவா?”

இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டதும் நட்புணர்வுடன் கைகுலுக்கினர். இத்தனை மாறுபட்ட சூழ்நிலையில் சந்திப்பது அவர்களைச் சிந்தனையில் ஆழ்த்தியது.

பெருமூச்சுடன் முணுமுணுத்தார் திருவாளர் சோவாஜ்:

“துயரமான காலம் இது!”

வருத்தத்தோடு தலையசைத்தார் மாரிஸாட்.

”எப்படியொரு வானிலை. இந்த வருடத்தின் முதல் அருமையான நாள்.”

வானம் மேகம் ஏதுமின்றி பளீரிடும் நீல வண்ணத்துடன் காட்சியளித்தது.

இருவரும் சிந்தனையில் ஆழ்ந்தபடி சோகமாக நடந்தனர்.

“மீன்பிடிப்போமே! எத்தனை அருமையாக இருந்த காலமது!” என்றார் மோரிஸாட்.

“மீண்டும் அப்படி மீன்பிடிக்கும் காலம் வருமா?” என்றார் திருவாளர் சோவாஜ்.

சிறிய காப்பிக்கடை ஒன்றுள் நுழைந்து அப்சிந்தே மது வாங்கி அருந்தினார்கள். பிறகு மீண்டும் சாலையோரத்தில் நடையைத் தொடர்ந்தனர்.

திடீரென மோரிசாட் நின்றார்.

“இன்னொரு அப்சிந்தே அருந்தலாமா?” என்றார்.

“உங்களுக்கு விருப்பமென்றால் செய்யலாம்,” என ஒப்புக்கொண்டார் சோவாஜ்.

இன்னொரு மதுக்கடைக்குள் நுழைந்தனர்.

வெறும் வயிற்றில் மது அருந்தியதால் வெளியே வருகையில் தள்ளாடினர். அன்று அருமையான மிதமான நாள், மெல்லிய தென்றல் அவர்கள் முகத்தை வருடியது.

தூய்மையான காற்று திருவாளர் சோவாஜின்மீது மது ஏற்படுத்திய தாக்கத்தை முழுமை செய்தது. திடீரென அப்படியே நின்றார்.

“அங்கே போனால் என்ன?”

”எங்கே?”

”மீன்பிடிக்க.”

”அது சரி, எங்கே?”

”ஏன், பழைய இடத்துக்குத்தான். ப்ரெஞ்சு ராணுவத்தின் குடியிருப்புகள் கொலம்பெஸ் அருகில் உள்ளன. எனக்கு கர்னல் டுமூலானைத் தெரியும். அதனால் அங்கே செல்வதற்கான கடவுச்சீட்டை எளிதாகப் பெற்றுவிடலாம்.”

ஆசையில் நடுங்கினார் மோரிஸாட்.

“அப்படியென்றால் சரி, போகலாம்.”

தூண்டிலை எடுத்து வருவதற்காக அவரவர் வழியில் சென்றனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நெடுஞ்சாலையில் ஒன்றாக நடை போட்டுக்கொண்டிருந்தனர். சீக்கிரமே கர்னல் முகாமிட்டிருக்கும் தோட்டம் சூழ்ந்த தனி வீட்டை அடைந்தனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்டதும் புன்னகை செய்தபடியே நிறைவேற்றினார். கடவுச்சொல் கிடைத்தும் மீண்டும் நடையைத் தொடர்ந்தனர்.

சீக்கிரமே ராணுவக் குடியிருப்பைத் தாண்டி வெறிச்சோடிக் கிடந்த கொலம்பெஸ்சின் வழியே நடந்தனர். புறநகரில் செய்ன் நதியின் கரையில் அமைந்த சிறிய திராட்சைத் தோட்டங்களின் நடுவே சென்றனர். அப்போது மணி சுமார் பதினொன்று.

முன்னால் இருந்த அர்ஜெண்டியூ கிராமம் உயிரற்று காணப்பட்டது. சன்னாயிஸ் குன்றும் ஆர்ஜிமெண்ட் காற்றாலையும் நிலப்பரப்பின்மீது ஆதிக்கம் செலுத்தின. நாண்டேர் வரை பரந்திருந்த சமவெளி சாம்பல் வண்ண மண்ணும் இலைகளற்ற செர்ரி மரங்களும் தவிர வேறேதும் இல்லாமல் வெறுமையாகக் காணப்பட்டது.

உயரமான பகுதியைச் சுட்டிக்காட்டி முணுமுணுத்தார் திருவாளர் சோவாஜ்:

”ப்ரஷியர்கள் அதற்கு அந்தப் பக்கம் இருக்கிறார்கள்.”

ஆள்நடமாட்டமில்லாத ஊரைக் கண்டதும் இருவரின் உள்ளத்திலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அச்சவுணர்வு தோன்றியது.

ப்ரஷியர்கள்! இதுவரையில் பார்க்கவில்லை என்றாலும் கடந்த சில மாதங்களில் அவர்கள் இருப்பை பாரிஸின் சுற்றுப்புறங்களில் உணர முடிந்தது. ப்ரான்ஸைச் சூறையாடி, கொன்றுகுவித்து, அவர்களைப் பட்டினியில் வாடவைத்தனர். முன்பின் தெரியாத அந்த வெற்றிகரமான நாட்டின்மீது ஏற்கனவே தோன்றிய வெறுப்போடு ஒருவிதமான மூடநம்பிக்கை கலந்த அச்சமும் சேர்ந்துகொண்டது.

“அவர்களில் யாரையாவது சந்திக்க நேர்ந்தால்?” என்று கேட்டார் மாரிஸாட்.

“கொஞ்சம் மீன் கொடுப்போம்.” என்று எதனாலும் முழுவதுமாக அணைக்கமுடியாத பாரிஸுக்கே உரித்தான நகைச்சுவையுணர்வோடு பதிலளித்தார் திருவாளர் சோவாஜ்.

இருந்தாலும் சுற்றிலும் வீற்றிருந்த முற்றிலுமான அமைதி அவர்களை அச்சுறுத்தியது. திறந்தவெளியில் நடமாடுவது குறித்துத் தயக்கம் ஏற்பட்டது.

இறுதியில் திருவாளர் சோவாஜ் தைரியமாகச் சொன்னார்:

“வாருங்கள், கிளம்பலாம். எச்சரிக்கையாக இருப்பது அவசியம்!”

கண்ணையும் காதையும் தீட்டிக்கொண்டு திராட்சைத் தோட்டத்தில் அடர்ந்திருந்த கொடிகளின் கீழே முதுகை வளைத்துத் தவழ்ந்து சென்றனர்.

நதியின் கரையை அடைய வெட்டவெளிப் பாதையொன்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஒரே ஓட்டமாக அதைத் தாண்டினர். நதியின் கரையை அடைந்ததும் காய்ந்த நாணல்களிடையே ஒளிந்துகொண்டனர்.

மோரிஸாட் நிலத்தின்மீது காதை வைத்து அந்தப் பக்கமாக யாராவது வரும் காலடியோசை கேட்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றார். எதுவும் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் முற்றிலும் தனித்து இருப்பதுபோலத் தோன்றியது.

தைரியம் மீண்டதால் மீன்பிடிக்கத் தொடங்கினார்கள். அவர்களின் முன்னால் அக்கரையிலிருந்த யாருமற்ற ஈல் மராண்ட் அவர்களை மறைத்தது. அந்தச் சிறிய உணவகம் மூடப்பட்டிருந்தது, பல வருடங்களாக அங்கே யாருமே வராததுபோலத் தோற்றமளித்தது.

திருவாளர் சோவாஜ் முதல் மீனைப் பிடித்தார், திருவாளர் மோரிஸாட் இரண்டாவதைப் பிடித்தார். ஒவ்வொரு நொடியும் இருவரில் ஒருவர் தூண்டிலை மேலே உயர்த்துகையில் அதன் மறுமுனையில் சிறிய மினுமினுக்கும் வெள்ளிநிற மீன் ஒன்று வளைந்து நெளிந்தது. இருவரும் அருமையாகப் பொழுதைக் கழித்தனர்.

காலடியில் கிடந்த வலைப் பையில் தாங்கள் பிடித்தவற்றை மென்மையாக விடுவித்தனர். களிப்பில் மூழ்கினர், வெகுநாளாக மறுக்கப்பட்ட பொழுதுபோக்கை மீண்டும் செய்யமுடிவதால் உண்டாகும் களிப்பு.

சூரியனின் ரேகைகள் அவர்களின் முதுகின்மீது பொழிந்தன. அவர்கள் இப்போது எதையும் கேட்கவில்லை, எதைப்பற்றியும் நினைக்கவில்லை. அவர்களைச் சுற்றியிருந்த உலகைக் கவனிக்கவில்லை; மீன்பிடித்துக்கொண்டு இருந்தார்கள்.

திடீரெனப் பூமிக்குள்ளே இருந்து வந்ததுபோன்ற கர்ச்சிக்கும் ஓசையொன்று கேட்டது; காலுக்குக் கீழேயிருந்த நிலத்தை அதிரச் செய்தது: பீரங்கிகள் தங்களின் முழக்கத்தை மீண்டும் தொடங்கின.

மோரிஸாட் தன்னுடைய தலையைத் திருப்பி இடப் புறத்தில் நதியின் கரைக்கு அப்பாலிருந்த மாண்ட் வலேரியன் மலையின் உருவரையை நோக்கினார். அதன் உச்சியில் இருந்து வெள்ளைப் புகைப்படலமொன்று மேலெழுந்தது.

இரண்டாவது புகைப்படலம் முதலாவதைத் தொடர்ந்து உடனடியாக வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் புதிய வெடியொன்று நிலத்தை நடுங்கச் செய்தது.

அடுத்தடுத்த நிமிடங்களில் மலை தன்னுடைய கடுமையான மூச்சை வெளியிட்டது, அதைத் தொடர்ந்து வெண்மையான புகைப்படலம் வெளியேறி மலையின் முகட்டுக்கு மேலே மெல்ல மிதந்து அமைதி தவழும் சொர்க்கத்தை நோக்கி நகர்ந்தது.

திருவாளர் சோவாஜ் தோளைக் குலுக்கினார்.

“மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள்!” என்றார்.

மிதவை மேலும் கீழுமாக அலைவதைப் பதற்றத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார் மோரிஸாட். ஓயாமல் சுட்டுக்கொண்டு இருக்கும் பைத்தியக்காரர்களின்மீது அமைதியை விரும்பும் மனிதனுக்கு ஏற்படும் பொறுமையிழந்த கோபம் அவரை ஆட்கொண்டதால் சீற்றம்கொண்டார்.

“ஒருவரையொருவர் இப்படிக் கொன்று தள்ளுகிறார்களே இந்த முட்டாள்கள்!”

”விலங்குகளைவிடவும் மோசமானவர்கள்,” என்றார் திருவாளர் சோவாஜ்.

மீன் பிடித்தபடியே மோரிஸாட் பறைசாற்றினார்:

”அரசாங்கங்கள் உள்ளவரை இதேபோலத்தான் இருக்கும் என்பதை நினைத்தால்தான்!”

”குடியரசு போரைத் தொடங்கியிருக்காது” என்று குறிப்பிட்டார் திருவாளர் சோவாஜ்.

மோரிஸாட் குறுக்கிட்டார்:

”மன்னர் ஆட்சியில் வெளிநாட்டுப் போர்கள்; குடியரசின் ஆட்சியில் உள்நாட்டுப் போர்கள்.”

அமைதியை விரும்பும், உண்மையைப் பேசும் ஆழ்ந்த பொது அறிவுகொண்ட இரண்டு பொதுமக்களைப் போல இருவரும் நிதானமாக அரசியல் பிரச்சனைகளை அலசினார்கள். ஒரு விஷயத்தை இருவரும் ஒத்துக்கொண்டனர்: அவர்கள் இனி ஒருபோதும் சுதந்திரமாக இருக்கமுடியாது. மாண்ட் வலேரியன் இடைவிடாமல் முழங்கி ப்ரெஞ்சு மக்களின் வீடுகளைப் பீரங்கிக் குண்டுகளால் தரைமட்டமாக்கியது, மனிதர்களின் வாழ்க்கையைத் தவிடுபொடியாக்கியது, கனவுகளையும் போற்றிப் பேணிய நம்பிக்கைகளையும் வருங்காலத்தின் மகிழ்ச்சிகளையும் சிதைத்தது. மற்ற நிலங்களைச் சேர்ந்த மனைவியர், மகள்கள், அன்னையர் எல்லோரின் மனங்களிலும் துயரத்தையும் சிரமத்தையும் இரக்கமின்றித் தோற்றுவித்தது.

“அவ்வளவுதான் வாழ்க்கை!” என்றார் திருவாளர் சோவாஜ்.

“இல்லையில்லை, அவ்வளவுதான் இறப்பு என்று சொல்லுங்கள்!” என்று சிரித்தபடி சொன்னார் மோரிஸாட்.

திடீரென அவர்களின் பின்னே காலடியோசை கேட்டவுடன் எச்சரிக்கையுணர்வில் நடுங்கியபடி திரும்பிப் பார்த்தனர். அவர்களுக்கு மிக அருகில் பணியாட்களைப் போலச் சீருடையும் தட்டையான தொப்பியும் அணிந்த உயரமான, தாடிவைத்த ஆட்கள் நான்கு பேர் நிற்பதைக் கவனித்தனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரையும் நோக்கித் துப்பாக்கிகளை நீட்டியிருந்தனர்.

அவர்களின் பிடியிலிருந்து நழுவிய தூண்டில்கள் நதியில் மிதந்து போயின.

சில நொடி நேரத்துக்குள் அவர்களைச் சிறைப்பிடித்துக் கட்டிப் படகுக்குள் எறிந்து எதிர்ப்பக்கமிருந்த ஈல் மராண்டுக்குக் கூட்டிச் சென்றனர்.

காலியாக இருக்கிறது என அவர்கள் நினைத்திருந்த வீட்டுக்குப் பின்புறம் சுமார் இருபது ஜெர்மானியப் படைவீர்கள் இருந்தனர்.

பரட்டைத்தலையும் பெருஉடலும் கொண்ட ஒருவர் நாற்காலியில் காலைப் பரப்பியபடி அமர்ந்திருந்தார். நீண்ட களிமண் குழாயைப் புகைத்தபடி அவர்களிடம் அருமையான ப்ரெஞ்சில் பேசினார்:

“என்ன ஐயன்மீர், மீன்பிடிப்பதில் அதிர்ஷ்டம் அடித்ததா?

வீரர் ஒருவர் தான் கவனமாக எடுத்துவந்த மீன் நிரம்பிய பையை அதிகாரியின் காலடியில் வைத்தார். ப்ரஷியர் புன்னகை செய்தார்.

“மோசமில்லை என்று தெரிகிறது. ஆனால் நாம் வேறு ஒரு விஷயத்தைப் பேச வேண்டியிருக்கிறது. அச்சப்படாமல் நான் சொல்வதைக் கேளுங்கள்.

என் பார்வையில் நீங்கள் இருவரும் என்னையும் என்னுடைய நடவடிக்கைகளையும் கண்காணிக்க அனுப்பிவைக்கப்பட்ட உளவாளிகள். அதனால் உங்களைக் கைப்பற்றிச் சுடுவதுதான் இயற்கை. நீங்கள் மீன்பிடிப்பதுபோலப் பாவனை செய்தீர்கள். உங்கள் உண்மையான பணியை மறைப்பதற்கான வேடம் அது. இப்போது என்னிடம் பிடிபட்டதால் அதற்கான விளைவுகளைச் சந்திக்கவேண்டும். போர் என்றால் அப்படித்தான்.

ஆனால், ராணுவக் குடியிருப்புகளின் வழியே வந்ததால் திரும்பிச் செல்வதற்கான கடவுச்சொல் இருக்குமல்லவா. அந்தக் கடவுச்சொல்லைச் சொன்னால் உங்களை விடுவித்து விடுகிறேன்.”

மௌனமாக அருகருகே நின்ற நண்பர்களின் முகங்கள் பயத்தில் வெளுத்துப்போயிருந்தன. கைகளின் மெல்லிய நடுக்கம் மட்டுமே அவர்களின் உணர்ச்சியைக் காட்டிக்கொடுத்தது.

”யாருக்கும் தெரிய வராது” என்றார் அதிகாரி. ”மீண்டும் அமைதியாக வீட்டுக்குத் திரும்பிச் செல்லலாம். அந்த ரகசியம் உங்களோடு மறைந்து போகும். மறுத்தீர்களானால், சாவு, உடனடிச் சாவு நிச்சயம். தேர்வுசெய்யுங்கள்!”

இருவரும் வாயைத் திறக்காமல் அசைவின்றி நின்றனர்.

நதியை நோக்கிக் கையை நீட்டியபடி முழுமையான அமைதியுடன் பேசினார் ப்ரஷியர்:

“இன்னும் ஐந்தே நிமிடத்தில் நீரின் கீழ் இருப்பீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இன்னும் ஐந்தே நிமிடத்தில்! உங்களுக்கு உறவினர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்?”

மாண்ட் வலேரியன் இன்னும் இடிபோல முழங்கிக் கொண்டிருந்தது.

மீன்பிடிக்க வந்த இருவரும் எதுவும் பேசவில்லை. ஜெர்மானியர் திரும்பித் தன்னுடைய மொழியில் உத்தரவு பிறப்பித்தார். பிறகு கைதிகளிடம் இருந்து விலகி இருப்பதற்காகத் தன்னுடைய நாற்காலியைச் சிறிது தள்ளிப் போட்டுக்கொண்டார். துப்பாக்கி ஏந்திய பத்துப் பன்னிரண்டு சிப்பாய்கள் முன்னால் வந்து அவர்களிடமிருந்து சுமார் இருபது அடி தூரத்தில் தயாராக நின்றனர்.

“ஒரு நிமிடம் தருகிறேன், அதற்கு மேல் ஒரு நொடிகூடக் கிடையாது” என்றார் அதிகாரி.

பிறகு வேகமாக எழுந்து இரண்டு ப்ரெஞ்சுக்காரர்களும் நிற்கும் இடத்துக்குப் போனார். மோரிஸாட்டின் கையைப் பிடித்துச் சற்றுத் தொலைவுக்கு அழைத்துப் போய் தாழ்வான குரலில் பேசினார்.

’சீக்கிரம்! கடவுச்சொல். உன் நண்பனுக்கு எதுவும் தெரிய வராது. நானும் விட்டுக்கொடுப்பதுபோல நடிக்கிறேன்.’
மோரிஸாட் மூச்சுவிடவில்லை.

அடுத்து, திருவாளர் சோவாஜையும் அதேபோலத் தனியே அழைத்துச் சென்று அவனிடமும் அதே யோசனையைச் சொன்னார் ப்ரஷியர்.

திருவாளர் சோவாஜ் பதில் சொல்லவில்லை.

மீண்டும் இருவரும் அருகருகே நின்றனர்.

அதிகாரி உத்தரவைப் பிறப்பித்தார்; வீரர்கள் துப்பாக்கிகளை உயர்த்தினர்.

எதேச்சையாக மோரிஸாட்டின் பார்வை சில அடி தூரத்தில் புல்மீது கிடந்த மீன் நிறைந்த வலைப் பையின்மேல் விழுந்தது.

இன்னும் துடித்துக்கொண்டிருந்த மீனின்மீது பட்ட சூரிய ஒளிக்கீற்றொன்று அதை வெள்ளிபோல ஒளிரச் செய்தது. மோரிஸாட்டின் மனம் கனத்துப்போனது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள எத்தனை முயன்றும் கண்களில் நீர் நிறைந்தது.

”சென்று வருகிறேன், திருவாளர் சோவாஜ்” என்று வாய் குழறினார்.

”சென்று வருகிறேன், திருவாளர் மோரிஸாட்,” என்று பதில்சொன்னார் சோவாஜ்.

அவர்களால் அறிந்துகொள்ளமுடியாத அச்சத்துடன் தலை முதல் கால் வரையில் நடுங்கியபடி கை குலுக்கினார்கள்.
அதிகாரி குரலை உயர்த்தினார்:

“சுடுங்கள்.”

பன்னிரண்டு துப்பாக்கிகளும் ஒரே சமயத்தில் வெடித்தன.

அடுத்த நொடியே திருவாளர் சோவாஜ் முன்புறமாக விழுந்தார். மோரிஸாட் உயரமாக இருந்ததால் சிறிது தள்ளாடி முகம் வானை நோக்க நண்பரின் குறுக்கே விழுந்தார். அவருடைய அங்கியின் மார்புப் பகுதியில் ஏற்பட்ட சிறிய கிழிசலின் வழியே குருதி கசியத் தொடங்கியது.

ஜெர்மானியர் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

வீரர்கள் கலைந்து சென்று கயிற்றையும் பெரிய கற்களையும் எடுத்து வந்து இரண்டு நண்பர்களின் காலிலும் கட்டினர். பிறகு அவர்களை நதிக்கரைக்குத் தூக்கிச் சென்றனர்.

மாண்ட் வலேரியனின் உச்சியைப் புகை சூழ்ந்திருந்தது, இன்னமும் இடிபோல முழங்கிக் கொண்டிருந்தது.
இரண்டு வீரர்கள் மோரிஸாட்டின் தலையையும் கால்களையும் பிடித்துத் தூக்கினார்கள். இன்னும் இரண்டு பேர் அதேபோல சோவாஜைத் தூக்கினார்கள். அந்த வலிமையான கைகள் உடல்களைத் தூக்கித் தூர வீசியதும் வளைவாகப் பறந்த உடல்களின் கால்கள்தான் நதியை முதலில் தொட்டன.

நீர் உயரத் தெறித்து நுரைத்துச் சுழன்று, பின் அமைதியானது. சின்ன அலைகள் கரையைத் தொட்டன.

நதியின் மேல்புறத்தில் ரத்தக் கீற்றுகள் தோன்றின.

நிகழ்வு முழுவதும் சலனமின்றிக் காணப்பட்ட அதிகாரி வறட்டு நகைச்சுவையுணர்வோடு பேசினார்:

”இப்போது மீன்களின் முறை!”

திரும்பி வீட்டை நோக்கி நடந்தார்.

திடீரெனப் புல்மீது யாரும் கண்டுகொள்ளாத மீன்கள் நிறைந்த வலைப் பை கிடப்பதைக் கண்டார். அதைக் கையில் எடுத்துச் சோதித்தவர் புன்னகைத்தபடி குரல்கொடுத்தார்:

”வில்ஹெல்ம்!”

அழைப்பைக் கேட்டு வந்த வெள்ளைச் சமையலங்கி அணிந்த வீரனிடம் கொலைசெய்யப்பட்ட இருவரும் பிடித்த மீனைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

“மீன் உயிரோடு இருக்கும்போதே வறுத்துக்கொடு; சுவையாக இருக்கும்.”

மீண்டும் புகைக்கத் தொடங்கினார்.


கீ டூ மோப்பஸான் (Guy de Maupassant) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர், கவிஞர். சிறுகதை, நாவல், நாடகம், பயணக் கட்டுரை, கவிதை எனப் பல வகைமைகளை இயற்றியுள்ளார். ஆன்டன் செக்காவைப் போலவே சிறுகதை வடிவத்தின் ஆசான் என்று கொண்டாடப்பட்டவர். விதியின் பிடியிலும் சமூக விசைகளின் அழுத்தத்திலும் சிக்கி உழலும் மனிதர்களின் வாழ்வை இயல்பான நடையில் வடித்தவர். பெரும்பாலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதினார். கதைமாந்தர்கள் எதிர்கொள்ளும்  சவால்களையும்  உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் எளிமையான நடையில் குறைந்த சொற்களில் வடித்தார். 1880களில் முதல் சிறுகதையை வெளியிட்டார் என்றாலும் 1893க்குள் 300 சிறுகதைகள் 6 நாவல்கள் கூடவே பல பயணக்கட்டுரைத் தொகுதிகள், நாடகங்களையும் எழுதி முடித்தார். அவருடைய இரண்டாவது நாவலான பெல் அமி நான்கு மாதங்களில் 37 பதிப்புகளைக் கண்டது.

கார்குழலி .
கார்குழலி .

கார்குழலி தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் எழுதுகிறார். வில்லியம் ஃபாக்னரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், பெண் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ஆகிய மொழியாக்கத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். வாழ்வியல், உலக வரலாறு, ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைகள் வரலாறு, வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் இயற்றியுள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top