உன்னில்
கரைந்து கரையேறவே
காத்திருக்கிறேன்
மழையாய் வா
இங்கே கூரையும் இல்லை
குடையும் இல்லை
குளக்கரைமேல் அமர்ந்திருக்கும்
ஐய்யனார் சிலை போல்
காத்திருக்கும் பெருத்த காதல்
அவருக்கோ மீசை உண்டு
எனக்கோ ஆசை உண்டு
வா கரைந்து கலுங்கலில் புழங்குவோம்
நமக்காகவே காத்திருக்கிறது
குரவை மீனொன்று…
ஒரு மலையை வரையத் தொடங்குகிறேன்
கைகள் முழுவதும்
இறந்துபோன பறவைகளின் எச்சங்கள்
நான் வேண்டாமென்று
நீ ஒன்றும் சொல்லவில்லை
சொன்னாலும் எனக்கொன்றும் ஆகாது
உனக்கேதுமாகாமல் இருந்தாலே
அது போதும் எனக்கு
மழையே
வெய்யிலே
பனியே
எதும் தாங்காத உன் உள்ளத்தை நினைத்துதான்
எனக்குள் அலையடிக்கிறது
வருவதும் போவதுமாய் இருக்கிறது மழை
நீயும் நானும் அங்கேயே தங்கிவிட்டோம்
கடித்துத் தின்ற பின்பும்
நீராய்ச் சொட்டுகிறது
நீ கொடுத்த நெல்லிக்காய்
எங்களிடமோ
வெள்ளைக் காகிதங்கள்
நிறைய உண்டு
அதில் கப்பல்கள் செய்வோம்
கொக்குகள் செய்வோம்
கூரைகள் வரைவோம்
பறவைகள் இளைப்பாற
மரங்களை வரைவோம்
நீல வானம் கீழே பறக்கும்
பட்டங்கள் செய்து எறிவோம்
சமத்துவம் போதிக்கும்
கதை கவிதையெல்லாம் எழுதுவோம்
வானவில் செய்வோம்
அம்பேத்கர் செய்வோம்
பெரியார் செய்வோம்
காரல் மார்க்ஸ் செய்வோம்
ஒருபோதும் செய்யமாட்டோம்
சாதிமாறித் திருமணம் செய்யும்
காதலர்களை வெட்டும் கத்திகளை மட்டும்.
Art : artuk.org








Leave a Reply