விலங்கென நம்பப்படும் உயிரின் பற்கள்
கோபத்தால் குழிதோண்டி
என்னுடலை இறக்குங்கள்
அதில் வெறுப்பைக் கொண்டு நிரப்புங்கள்
அதிகாரிகள் புடைசூழ
மிஞ்சும் தலையருகே
கொடூர விலங்கைச் சங்கிலியால் பிணையுங்கள்
அது
அதிகாரியைப் போல் போதாமையின் முகம் காட்டிப் பல்லிளிக்கட்டும்
அந்நேரம் மழை கொட்டட்டுமென வேண்டிக்கொள்கிறேன்
புழுக்கள் என் பாதங்களில்
முளைக்கட்டும்
மேலும் வளர்ந்து வளர்ந்து என்னுடல் தடித்த புழுவாகட்டும்
தலையை உண்ண நேரும் போது
அதிகாரிகள் கைகளுக்குப் பூதக்கண்ணாடி வழங்குங்கள்
வட்டக் கருங்குடையை விலக்குங்கள்
கரைந்து புதையட்டும் அதிகாரம்
அந்நேரம்
மழைநீர் ஏரியை நோக்கிப் பாயும்
குஞ்சுக் கெண்டைகள் நீரெதிர்த் திசையில் குதித்தெழும்
தூக்கம் கலைந்த தவளைகள் குறட்டையொலியை எழுப்பும்
இனி அஞ்சுவதற்கு ஏதுமற்று மிஞ்சட்டும்
அடுத்து வருவது கடுங்கோடையாயினும்
ஏரிக்கரையின் நடுப்பகுதியில் வெட்டப்பட்ட கருவேலம் நெடுமுள்ளுடன் துளிர்க்கும்.
பொரி
குளத்து மீனுக்கு வீசும்
வெண் பொரியென
நினைவுகள் மனதில் வீசுகின்றன.
குவிந்த வாயுடன் நெருங்கும் மீன்கள்
தன் துடுப்பு வாலால் துயரத்தைத் தட்டுகிறது.
சில நினைவுகள்
குப்த இரும்புத்தூண் துருவென
உதிர மறுக்கின்றன.
பயன்பாடிழந்த பெரும்படகின் மீது
கடும் பசிகொண்ட தோணி கொக்குகள்
வந்தமர்ந்த தடயங்கள்.
சன்னமான ஒலிபரவும்
ஊமை மழைக்காலம்.
நீர்ப் பரப்பெங்கும்
மேக நிழல் தோற்றம்
அரையாழத்தில் சென்று ததும்பும் நிழலில்
காயங்களின்
அசைவுச் சித்திரம்.
கூரிய நகத்தடயங்களைப் பார்த்தவாறு
மெல்ல நீந்தும் மீனொன்று
ததும்பும் நிழலில்
மறைகிறது.
Art : Montserrat García
1985 இல் விழுப்புரம் அருகிலுள்ள வளவனூர் பிறந்து, கோலியனூரில் குடியேறியவர். புதுவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் BFA ஓவியக்கலை பயின்றவர். தற்போது கருவூலத்துறையில் கணக்கராகப் பணிபுரிந்து வருகிறார். கல்குதிரை சிற்றிதழில் புத்தக மதிப்புரைகள் வெளிவந்துள்ளன. தற்போது கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.








Leave a Reply