Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

பூமி எங்கும் கால்கள்

பூவிதழ் உமேஷ்
பூவிதழ் உமேஷ்
January 2, 2026
பூமி எங்கும் கால்கள்

1
நவலை நகரம்

பழங்காலத்தில் பெரிய நகரங்களாக விளங்கியவை இப்போது சிறிய ஊர்களாகவும் சிறிய ஊர்களாக இருந்தவை இப்போது பெரிய நகரங்களாகவும் கால ஓட்டத்தில் மாறியுள்ளன. நாடுகள் ஒவ்வொன்றும் கடக்க முடியாத காடுகளையும் வறண்ட நிலங்களையும் எல்லைகளாகக் கொண்டிருந்தன. முன்பொரு காலத்தில் பழைய தகடூர் நாட்டில் நவலை என்று ஒரு நகரம் இருந்தது. அது இப்போது ஒரு சிறிய ஊராக இருக்கிறது. அந்த நகரத்தில் காப்பியன் என்று ஒரு இளைஞன் இருந்தான்.

காப்பியன் பொருள் ஈட்டுவதற்காகப் பல நாடு நகரங்களுக்குப் போனான். இறுதியாகக் கொம்பு நாட்டில் இருந்த சின்னப்பூ என்ற சிறிய நகரத்திற்குச் சென்றான். அது எல்லா வளமும் நிறைந்த நகரம். அங்கு வேலை செய்து பொருளீட்டினான்.

உழைப்பைவிட உயர்ந்த ஒழுக்கம் எதுவுமில்லை என அவனுடைய அம்மா சொன்னதை மந்திரம் போல் மனதில் வைத்திருந்தான். ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதுதான் நாகரிக வளர்ச்சி என்று நேர்மையாக உழைத்தான். நாட்கள் வாரங்களாயின வாரங்கள் மாதங்களாயின.

சின்னப்பூ நகரத்தில் வகுத்தி பாட்டி என்ற மூதாட்டி இருந்தாள். அவள் சாப்பாட்டுக் கடை வைத்திருந்தாள். அவளுடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவளுடைய உடல்வாகு காரணமாக வகுத்தி என்று அழைத்தனர். வேலைக்குப் போவோர் வழிப் போக்கர்கள் எல்லாம் அந்தக் கடையில் சாப்பிடுவார்கள். காப்பியனும் அந்தப் பாட்டிக் கடையில்தான் தினமும் சாப்பிடுவான். அவனுடைய உடமைகள் எல்லாம் அவளது குடிலில்தான் இருந்தன. காப்பியன் சம்பாதித்த பணமும் பொருளும் அவளிடமே இருந்தன. இரவில் சத்திரத்தில் படுத்துக் கொள்வான்.

கடந்த சில நாட்களாக அவனுடைய அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. எனவே அடுத்த நாள் ஊருக்குப் போகலாம் என்று முடிவு செய்தான். அன்றைய வேலை முடிந்ததும் வழக்கம் போல பாட்டியின் வீட்டிற்குச் சென்றான். பாட்டியைக் காணவில்லை. அக்கம் பக்கம் தேடினான் அப்போதும் பாட்டி தென்படவில்லை. அக்கம் பக்கத்திலும் எதிரில் வருவோர் போவோரிடமும் விசாரித்தான் யாருக்கும் வகுத்திப் பாட்டி பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. சின்னப்பூ நகரம் முழுவதும் தேடிப் பார்த்தான் பாட்டி எங்குமே இல்லை. நள்ளிரவு ஆனதும் குடிலுக்கே திரும்பி வந்தான். அவனைப் போல சாப்பிட வந்த பலரும் காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றார்கள்.

வீடு பூட்டாமல் சங்கிலி மட்டும் மாட்டி இருந்தது. காப்பியன் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். கலக்காய்த் தொட்டுகள் மனிதனின் காலடித் தடம் போல தரையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நீண்ட நேரம் யோசித்தான் அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஒருவேளை, இது பாட்டி இங்கிருந்து போனதற்கான அடையாளமா? இல்லை நான் திரும்பிப் போக வேண்டியதற்கான அடையாளமா? என்று குழம்பினான்.

அடுத்த நாள் விடிந்து பகல் இரவானது இரவு பகலானது பாட்டி மட்டும் வீட்டுக்குத் திரும்பவே இல்லை. யாருக்கும் தெரியாமல் ஒரு மனுசி ஏன் மாயமாக வேண்டும்? ஊரில் இருப்பவர்களுக்குப் பாட்டி கையால் வடிச்சுப் போட்ட சோறு ஒரு மலையளவு இருக்கும். அவள் சுட்டுப் போட்ட தோசைகள் இன்னொரு மலையளவு இருக்கும். வழிப் போக்கர்கள் அவள் கையில் வாங்கிக் குடித்த மோர் ஒரு கடலளவு இருக்கும். அப்படி இருக்கும் போது, பாட்டிக்கு என்ன ஆனது என ஏன் யாருக்குமே தெரியவில்லை? அவள் இல்லாதது ஏன் யாரையுமே சிறிதளவு கூட யோசிக்க வைக்கவில்லை என்று வருத்தத்தோடு யோசித்தான்.

சற்று நேரம் அமைதியாகக் கண்ணை மூடி உட்கார்ந்தான். வகுத்தி பாட்டிக்கு எதுவும் ஆகியிருக்காது. ஏதேனும் அவசர வேலையாக அவள் போயிருக்கக் கூடும் என்று நினைத்தான், காப்பியனுக்கு அவனுடைய அம்மாவின் ஞாபகம் வந்தது. அதனால் இனி ஊருக்குப் புறப்படலாம் என்று முடிவு செய்தான். அவன் சொந்த ஊருக்குப் போவதிலும் ஒரு சிக்கல் இருந்தது. இதுவரை அவன் சம்பாதித்த பணத்தை எல்லாம் பாட்டியிடமே கொடுத்து வைத்திருந்தான்.

வீட்டின் உள்ளே சுற்றும் முற்றும் பார்த்தான். பண்ட பாத்திரங்கள் தானிய மூட்டைகள் எல்லாம் வரிசையாக இருந்தன. வடக்கு மூலையில் இருந்த தொம்பை அருகில் சில நாணயங்கள் சிதறிக்கிடந்தன. அங்கே ஒரு சிறிய துணிப்பை இருந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அவனுடைய துணிமணிகள் இருந்தன. பிறகு எல்லாவற்றையும் களைத்துப் பார்த்தான். அதில் ஒரு தோப்பை இருந்தது. அதில் அவன் இதுவரைச் சம்பாதித்த பணமும் இருந்தது. இன்னொரு சுருக்குப் பையில் வறுத்த கலக்காயும் இருந்தது.

துணிப்பையில் இருந்த பணம் துணிமணிகள், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட கலக்காய்த் தொட்டுகள் ஆகியவற்றின் மூலம் பாட்டி இவனுக்கு ஒரு செய்தியைச் சொல்கிறாள் என நினைத்தான். அதாவது வறுத்த கலக்காயைச் சாப்பிட்டுவிட்டு பையை எடுத்துக்கொண்டு நீ ஊருக்குக் கிளம்பவும் என்று இந்தக் குறிப்புகள் சொல்வதாகப் புரிந்துகொண்டான்.

பாட்டியின் விருப்பப்படி, கட்டி வைத்திருந்த உடமைகளை எடுத்துக்கொண்டு அவனுடைய ஊருக்குப் புறப்பட்டான். ஆனாலும் அவன் மனசு பாட்டிக்கு என்ன நேர்ந்திருக்கும் என்ற சிந்தனையிலே இருந்தது. இங்கிருந்து போகும் முன்பு பாட்டி இத்தனை முன் ஏற்பாடுகள் செய்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்று கொஞ்சம் மனசு சமாதானம் ஆனான். உச்சி வெயில் நேரங்களில் வழியெங்கும் இருந்த மர நிழலிலும் சத்திரங்களிலும் ஓய்வெடுத்தான். இரவில் சத்திரங்களில் தங்கினான். விடிந்ததும் பயணத்தைத் தொடர்ந்தான்.

வழியில் ஒரு சிறிய கிராமத்தின் சுமைத் தாங்கிக் கல்லின் அருகில் ஒரு பெரிய அழிஞ்சி மரம் இருந்தது. அடிமரம் முழுவதும் விதைகளை ஈர்த்து ஒட்டிக்கொண்டு இருந்தது. மேலே அண்ணாந்து பார்த்தான் இரண்டு கவை பிரிந்து வளைந்து இதயக் குறியைக் காட்டுவது போல இருந்தன. அதைப் பார்த்து மென்மையாகச் சிரித்துக் கொண்டான். பழுத்து உதிர்ந்த இலைகளின் மீது இருந்த மரத்தின் வெள்ளைப் பூக்கள் கம்பளம் விரித்தது போல எங்கும் பரவியிருந்தன. அந்த மரத்தடியில் தோளில் இருந்த துண்டை விரித்துப் போட்டுப் படுத்தான்.

மனச் சோர்வில் இருந்தும் உடற்சோர்வில் இருந்தும் மீள அவனுக்கு ஓய்வு தேவையாக இருந்தது. உழைக்கும் மக்களுக்கு ஓய்வு என்பதும் ஒருவகை உணவுதான். களைப்பு மிகுதியால் ஆழ்ந்து தூங்கிவிட்டான். கண்விழித்துப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனான். அவனுடைய எந்த உடமையும் காணவில்லை. அதை யாரோ எடுத்திருக்க வேண்டும் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் அரவம் எதுவுமில்லை.

அருகில் இருந்த மண் தடத்தைப் பார்த்தான். அழுந்தப் பதிந்த கால் தடங்கள் இருந்தன. இது திருடர்களின் கைவரிசையாகவே இருக்கும். உடமைகளில் எதையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அவர்களை எந்த ஊரில், எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது என்றும் இனி என்ன செய்வது என்றும் தெரியாமல் விழித்தான்.

அங்கிருந்து புறப்படும் முன்பு மரத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வை மரத்திடம் கேள்வி கேட்பது போல இருந்தது. எல்லாவற்றையும் பறிகொடுத்த கவலையோடு புறப்பட்டான். உணவும் தண்ணீரும் எதுவும் பருகாததால் புறப்பட்ட சிறிது நேரத்திலே வழியில் இருந்த ஒரு மரத்தடியில் பசியால் மயங்கி விழுந்தான்.

♦

2

சிக்கி

ஒற்றையடிப் பாதைகள் எப்போதும் ஏதோ ஒரு காலோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. பாதைகளில் இருக்கும் மரங்களே நிழற்கூடங்களாக இருக்கின்றன. அந்தப் பாதைகளில் ஆள் நடமாட்டம் எப்போதும் குறைவாக இருக்கும். அவனுடைய நல்ல நேரம், அந்த வழியே ஒருத்தி வந்தாள். மரத்தடியில் படுத்து இருந்தவனைப் பார்த்ததும் குரல் கொடுத்தாள். பதில் எதுவும் வராததால் கொஞ்சம் பதற்றத்தோடு அருகில் சென்று பார்த்தாள். மரத்தடியில் படுத்திருந்தவன் மயங்கிக் கிடந்தான். அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள். மயக்கம் தெளிந்த அவனுக்குத் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தாள்.

காப்பியன் பசியின் காரணமாக மயங்கி விழுந்ததை அறிந்து கொண்டு, தன்னிடம் இருந்த உணவையும் சாப்பிடக் கொடுத்தாள். மயக்கம் தெளிந்து இயல்புக்குத் திரும்பிய காப்பியன் அவளுக்கு நன்றி சொன்னான்.

என் பெயர் சிக்கி என்று அவளை அறிமுகம் செய்து கொண்டாள். பதிலுக்கு அவனும் அவன் பெயரைக் கூறினான். காப்பியன் உடமைகளைப் பறிகொடுத்ததையும் அதன் பிறகு அவனுக்கு நடந்ததையும் சொன்னான்.

சிக்கி அவனுடைய நிலையைக் கண்டு மிகவும் வருந்துவதாகச் சொன்னாள். அவளது பேச்சு மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது. சிக்கி மாந்தளிர் நிறத்தில் அழகாக இருந்தாள்.

“என் கூடவே வழித்துணைக்கு வர முடியுமா” என்று அவளிடம் காப்பியன் கேட்டான்.

“என்னைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் உன்னோடு வருகிறேன்” என்று சிறிதும் யோசிக்காமல் பதில் சொன்னாள். அவன் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பதில் வியப்பையும் தடுமாற்றத்தையும் கொடுத்தது. ஆனாலும் அவன் சம்மதித்தான். சம்மதம் சொன்னவுடன் அவள் இன்னும் அழகாக மாறினாள். அவனுக்கு வியப்பு தாங்கவில்லை.

”எப்படி நீ திடீரென்று இன்னும் அழகாக மாறிவிட்டாய்?” என்று அவளிடம் கேட்டான்.

“ஒரு பெண் அவளுக்கான முடிவை அவளே எடுக்கும் போது அழகி ஆகிறாள். ஒரு பெண்ணின் விருப்பம் அங்கீகரிக்கப்படும் போது அவள் பேரழகி ஆகிறாள்.” என்று சொன்னாள்.

“நீ அழகியாகவும் இருக்கிறாய் நல்ல அறிவுடையவளாகவும் இருக்கிறாய். எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. என்னைப் போலவே என் அம்மாவுக்கும் உன்னை மிகவும் பிடிக்கும். என் அம்மாவின் முன்னால் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் உனக்குச் சம்மதமா” என்று கேட்டான். அவளும் சம்மதித்தாள்.

இருவரும் அவனுடைய நகரமான நவலையை நோக்கிப் புறப்பட்டார்கள். அவனோடு அவள் நடக்க நடக்க அவளுடைய அழகு கூடிக்கொண்டே வந்தது. நம்மிடம் இருக்கும் அன்பு பெருகும் போது நமது அழகு அதிகமாகிவிடுகிறது.

எவ்வளவு தூரம் நடந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களிடம் இருந்த உணவுப் பொருள்களும் தண்ணீரும் தீர்ந்து போயின. உச்சி வெயிலில் நடக்க நடக்க பசியும் தாகமும் தாங்க முடியாதபடி அதிகமானது. அப்போதுதான் நெடுந்தூரம் வந்துவிட்டதை உணர்ந்தார்கள். பசி மிகுதியால் ஏதாவது காய்கனிகள் சாப்பிடக் கிடைக்குமா என்று வழி நெடுகிலும் பார்த்துக்கொண்டே சென்றார்கள். அவர்கள் போகும் வழியிலேயே சற்று தொலைவில் ஒரு மரம் தெரிந்தது. அதை நோக்கி நடந்தார்கள். அருகில் சென்று பார்த்தார்கள், அது மாமரம் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள்.

பாதை ஓரம் இருந்த மாமரம் என்பதால் கையெட்டும் உயரத்தில் மாம்பழங்கள் எதுவுமில்லை. கைக்கு எட்டாத உயரத்தில் பழங்கள் இருந்தன. அவற்றைப் பறிப்பதற்காக எட்டி எட்டிப் பார்த்தார்கள் எதுவும் கைக்கு எட்டவில்லை. ஏறிப் பறிக்கும் அளவுக்கு யாரிடமும் தெம்பு இல்லை.

மாம்பழங்களைப் பறிப்பதற்காக அருகில் எங்கேயாவது நீண்ட கொம்பு இருக்குமா என்று தேடிப் பார்த்தார்கள். எதுவும் தென்படவில்லை. அருகில் இலைகள் உதிர்ந்து காய்ந்து இருந்த இரண்டு கிளைகள் உள்ள ஒரு புதர்ச்செடி இருந்தது. அதிலிருந்து ஒரு கிளையை ஒடிக்க முயன்றான் காப்பியன், முடியாததால் அதை வேரோடு பிடுங்கி எடுத்தான். அந்தக் கொம்பைக் கொண்டு மாம்பழங்களைப் பறித்துக் கொண்டு அந்த மரத்தின் நிழலிலே இருவரும் அமர்ந்தார்கள்.

“இதுவரை நாம் சாப்பிட்ட உணவுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி சொல்லும் வழிமுறை அருகிலிருப்பவரின் பசியைப் போக்குவதுதான்” என்று நன்கு பழுத்த மாம்பழத்தை அவளிடம் நீட்டினான்.

“நம்மை நாமே வாழ்த்துவதற்குப் பசிக்கும்போது சாப்பிடுவது நல்ல வழிமுறை” என்று கூறி சிரித்தாள் அவள்.

மாம்பழத்தின் இனிப்பு தாகத்தையும் பசியையும் குறைத்ததும் முதன்முதலாகச் சாப்பிடப் பழகுபவர்கள் போல மெதுவாகக் கடித்துச் சாப்பிட்டார்கள். உச்சிவெயில் என்பதால் களைப்பு அதிகமாக இருந்தது. எனவே வெயில் தாழ்ந்ததும் போகலாம் என்று முடிவு செய்தார்கள். பசி அடங்கிய பிறகு உலகமே குளிர்ச்சியடைந்தது போல உணர்ந்தார்கள். பசி தீர்ந்த பிறகு பேசும் பேச்சுக்கு சாப்பாட்டை விட சுவை அதிகம். அதை மெய்யாக்குவது போல அவனுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி பேசினார்கள்.

அப்போது தொலைவில் இருந்து ஓர் ஓநாய் மூச்சிரைக்க ஓடி வந்தது. அதன் கண்கள் கோபத்தில் நெருப்பு போலச் சிவந்திருந்தன.

♦

3

மானாக மாற்றப்பட்ட சிக்கி

தொலைவில் இருந்து ஓர் ஓநாய் மூச்சிரைக்க ஓடி வந்தது. அதன் கண்கள் கோபத்தில் நெருப்பு போலச் சிவந்திருந்தன. ஓடி வரும் அதன் வேகத்தைப் பார்த்து சிக்கி பயந்தாள்.

“இப்படி அநியாயமாக நான் உயிருக்கு உயிராக நேசித்த மானைக் கொன்று விட்டீர்களே நியாயமா?” என்று கடும் கோபத்தோடு ஓநாய் கேட்டது.

“ஓநாய் சகோதரா! நீ உயிருக்கு உயிராக நேசித்த மான் இறந்து விட்டிருந்தால் அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். நாங்கள் நெடுந்தொலைவு நடந்து வந்தோம் வழியில் எங்கேயும் எந்த மானையும் பார்க்கவில்லை” என்றான் காப்பியன்.

“நீ மரத்தில் இருந்த மாம்பழங்களைப் பறிப்பதற்காகத் தரையிலிருந்து பிடுங்கி எடுத்த கொம்புகளை உற்றுப்பார். அது நான் உயிருக்கு உயிராக நேசித்த மானின் கொம்புகள்” என்று ஓநாய் கத்தியது.

“என்ன நண்பா சொல்லுகிறாய்? நான் எந்த மானையும் பார்க்கவில்லை, எப்படி மானின் கொம்புகளை ஒடித்திருக்க முடியும்?” என்று பதிலுக்கு அவனும் கேட்டான்.

“மனிதர்கள் அவர்களின் தேவைக்காக அலையும் போது, கடவுளாக இருந்தாலும் அதன் மீது ஏறி நிற்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அறிந்து கொள்ள நான் உயிருக்கு உயிராய் நேசித்த என் காதலியின் உயிரைக் கொடுக்க வேண்டியதாயிற்றே!” என்று கத்திய ஓநாய் ஓலமிட்டு அழுதது அந்த ஓலத்தில் காடே அதிர்ந்தது.

காப்பியனும் சிக்கியும் குழப்பத்தில் திகைத்து நின்றார்கள்.

”நீங்கள் மாம்பழம் பறிக்கப் பயன்படுத்திய கொம்புகளைப் பிடுங்கிய இடத்தை உற்றுப் பாருங்கள் உண்மை புரியும்” என்று வாய் குழறியபடி ஓநாய் சொன்னது.

மாம்பழம் பறிக்க கொம்பு பிடுங்கிய இடத்தை உற்றுப் பார்த்தார்கள். பெருகிய இரத்தம் உறைந்துபோய் இருந்தது. பசியிலும் களைப்பிலும் அறியாமல் செய்த தவறை உணர்ந்தார்கள்.

“எங்களை மன்னித்துவிடு சகோதரா! நாங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டோம், இது ஆறுதல் சொல்ல முடியாத துயரம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எங்கள் வாழ்க்கை முழுதும் மறைந்துவிடாத பழி. காலத்திற்கும் இந்தப் பழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வருத்தத்தோடு கூறினான் காப்பியன். சிக்கின் காப்பியன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஓநாய் அவர்களின் எந்த சமாதானத்தையும் ஏற்கத் தயாராக இல்லை. அது வருத்தத்தை ஒரு கண்ணிலும் கோபத்தை ஒரு கண்ணிலும் வைத்திருந்தது.

“காட்டின் எல்லை நிலையாக இருப்பதற்கு நீயே காரணமாக இருக்கிறாய். காட்டின் காவலனான உனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை என்ன செய்தாலும் எங்களால் ஈடு செய்ய முடியாது. ஆனால் உன் துயரத்தைப் போக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று சிக்கி கேட்டாள்.

ஓநாய் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

பேசிப் பேசி ஓநாயைச் சமாதானப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். ஆனால் ஓநாயிடம் ஒரு பிசிறு மாற்றமும் ஏற்படவில்லை. தொடுதல் என்பது எல்லா உயிர்களையும் நெருக்கமாக்கும் ஒரு வழிமுறை என்பதால் காப்பியன் ஓநாயின் முதுகில் அன்பாகத் தொட்டுக் கேட்டான். “ஓநாய் சகோதரா எதற்காக மானை பூமியில் புதைத்து வைத்தாய்?”ஆறுதல் சொல்வதுதான் பூமியில் இருக்கும் மிகப்பழமையான மருத்துவமுறை. தொடுதல் என்பது எல்லா உயிர்களையும் நெருக்கமாக்கும் ஒரு வழிமுறை.

ஆழ்ந்த பெருமூச்சிற்குப் பிறகு ஓநாய் பேசியது. “நான் ஒரு மானைக் காதலித்தேன். ஓநாயும் மானும் திருமணம் செய்துகொண்டால் சூரியன் உடைந்துவிடும் என்று காட்டில் இருந்த எல்லோரும் எங்களைப் பயமுறுத்தினார்கள். முதலில் அச்சம் ஏதும் இல்லாமல் இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து சொல்லச் சொல்ல மனதில் பயம் வந்துவிட்டது”.

“ம்… அப்புறம் என்ன செய்தாய் சகோதரா” என்றான் காப்பியன்.

“கொம்பு மட்டும் வெளியே தெரியும்படி மானைப் பூமியில் புதைத்து வைத்தால் ஆறு மாதங்களில் கொம்பு காற்றில் அறுபட்டு விழும் பிறகு மான் ஓநாயாக மாறிவிடும் என்று கரடி சொன்னது. அதனால் மானை மண்ணுக்குள் புதைத்து வைத்தேன். அது கொம்புகளை உதிர்த்துவிட்டு ஒருநாள் ஓநாயாகத் திரும்பி வரும் என்று காத்திருந்தேன். கொம்பின் அடிப்பகுதி காற்றில் அறுபட்டு உதிரப்போகும் நேரத்தில் நீ பிடுங்கி விட்டாய்” என்று கூறிய ஓநாய் வருத்தத்தில் உறைந்துபோய் நின்றது.

“நண்பா மன்னித்துக்கொள், நெடுந்தூரம் நடந்து வந்ததால் பசி கண்ணை மூடியது. காதை அடைத்தது. அதனால் புதர்ச்செடி எது, மானின் கொம்பு எது, என்று தெரியாமல் பிடுங்கி விட்டேன்” என்று வருத்தத்தோடு சொன்னான்.

குற்ற உணர்வு காப்பியனைக் காற்றில் ஆடும் காகிதக் கொடி போல மாற்றி விட்டிருந்தது.

ஓநாய் முன்னும் பின்னும் வளைய வந்தது. அது ஓநாயின் தீவிர மன ஓட்டத்தின் வெளிப்பாடாக இருந்தது. அடுத்த நொடி ஏதோ நடக்கப் போகிறது என்று காப்பியன் மனதில்பட்டது.

“என்னுடைய மான் இறந்தது போல உன் மனைவியும் இறந்துபோக சாபம் கொடுக்க வேண்டும். ஆனால் நீ என்னை சகோதரா என்று அழைத்ததால் என் முடிவை மாற்றிக் கொள்கிறேன். உன் மனைவி மானாக மாறட்டும்” என்று ஓநாய் சாபமிட்டது. அடுத்த நொடியே கடலின் நீர்மட்டம் கரையேறி மீண்டும் தாழ்வது போல சிக்கி மானாக மாறத்தொடங்கினாள்.

“இந்த உலகத்தில் கிடைக்கும் உயர்ந்த பொருளை விட உங்களிடமிருந்து கிடைத்த இந்தக் கருணையே மிகச் சிறந்தது. நான் திருமணம் செய்ய இருந்தவளை மானாக மாற்றி என்னுடனே இருக்க அனுமதித்ததற்கு நன்றி சகோதரா” என்று காப்பியன் சொன்னான்.

கோபத்தை முழுவதும் தீர்த்து விடாமல் அரை மனத்தோடு இருந்த ஓநாய் “உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? என்று வியப்போடு கேட்டது.

காப்பியன் நடந்ததை எல்லாம் சொன்னான். அதைக் கேட்டு ஓநாய் மிகவும் இரக்கப்பட்டது, “முன்பின் அறிமுகமில்லாத இருவருக்கு இடையே உருவாகும் அன்பான பிணைப்பு பவித்திரமானது என்பதை நானறிவேன். உங்களுடைய அன்பும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். இதேபோன்று முன்பின் அறிமுகம் இல்லாமல் புதியதாகப் பார்க்கும் ஒருவர் கோபத்தில் மான் மீது உப்புத் தண்ணீரை ஊற்றும் போது இவள் மீண்டும் பெண்ணாக மாறி பழைய உருவம் பெறுவாள்” என்று சொன்னது.

காப்பியன் ஓநாய்க்கு நன்றி கூறி மானை அழைத்துக்கொண்டு சென்றான். எவ்வளவு தூரம் நடந்தார்கள் என்பது மேலே இருந்த சூரியனுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நடக்க நடக்க மானின் உடம்பில் இருந்த புள்ளிகள் இடம்பெயர்வது போல இருந்தது.

“தனித்திருக்கும்போது நாம் குடியிருக்கும் வீடே பெரியதாகிவிடுவது போல பசித்திருக்கும்போது உலகம் சிறியதாகிவிடுகிறது. அப்படித்தான் என் அறிவு சிறியதாகிவிட்டது. என்னை மன்னித்துவிடு சிக்கி” என்று மானை தடவியபடி சொன்னான்.

“ஒரு நாடோடிக்குத் திசைதான் முக்கியமே தவிர பாதுகாப்பான பாதையல்ல. பாதை என்பது பாறை மீதும் இருக்கும் பாலைவனத்திலும் இருக்கும். பயணத்தை விட யாருடன் பயணிக்கிறோம் என்பதே முக்கியம். மாற்றங்களை எதிர்கொள்ளாமல் எதுவும் நிலைக்காது என்பது எனக்குத் தெரியும்” என்று மானாக மாறி இருக்கும் சிக்கி சொன்னாள். இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

போகும் வழியில் சிறிய குன்று போல ஒரு பெரிய மேடு வந்தது அதனைக் கடந்தால் தான் பயணத்தைத் தொடர முடியும். அது ஏறுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இருவருமே ரொம்ப மூச்சு வாங்கினார்கள்.

“பூமியே இதற்கு மேலும் நீ மேடாகிக் கொண்டே போவதற்குப் பதிலாய் ஒரு மலையாக மாறிவிடலாம். என்னை வதைப்பதோடு நில்லாமல் நான் நேசிக்கும் மானை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறாய்” என்று கீழே குனிந்து பூமியிடம் கேட்டான்.

அவன் பூமியிடம் குனிந்து கேட்டது. அங்கு கீழே தரையில் ஊர்ந்து கொண்டிருந்த எறும்பின் காதில் விழுந்தது.

♦

4

தந்தையைத் தண்ணீராக மாற்றியவன்

காப்பியனின் சொற்களைக் கேட்ட எறும்பு மிகவும் மகிழ்ச்சியடைந்தது. “நான் எத்தனையோ மனிதர்களை இந்த வழியில் பார்த்திருக்கிறேன். யாரும் என்னிடம் இவ்வளவு அன்பாகக் குனிந்து வந்து பேசியதில்லை” என்று எறும்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகக் கூறியது.

“எறும்பு சகோதரா! நீ மகிழ்ச்சியடைகிறாய் என்றால் நாள் முழுவதும் உன்னோடு பேசுவேன். ஆனாலும் உண்மையை மறைக்காமல் சொல்கிறேன் என் மன வருத்தத்தைச் சொல்ல பூமியிடம் பேசினேன்” என்றான்.

“எனக்கு இருப்பது பொய்யான காது நீ பேசியது முழுமையாகக் கேட்கவில்லை. ஆனாலும் நீ என்னைச் சகோதரா என்று அழைத்துவிட்டாய் இதை விட மகிழ்ச்சியடைய எதுவும் தேவையில்லை. சகோதரா – என்ற சொல் பூமியில் உள்ள எல்லாவற்றையும் இணைக்கும் சொல்! எளியவர்களிடம் பேசுகிறவர்கள் தான் கடவுளின் காதுக்கு மிக அருகில் வசிக்கிறார்கள். இந்த உலகில் எங்களின் இல்லாத காதுகளையும் மதித்துப் பேசியவன் நீ மட்டும்தான். உனக்கு நான் உதவுகிறேன். இனி உன் பிரச்சனை என்னுடையது.” என்று எறும்பு சொன்னது.

“எறும்புகள் உலகில் இருக்கும் மிகப் பழைய உயிரினங்கள். இந்தப் பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எடையானது மனிதர்களின் எடையை விட அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், உங்கள் சுறுசுறுப்பு சுற்றும் பூமியோடு போட்டிப் போடக்கூடியது! உன் வார்த்தையே அமிழ்தம்” என்று காப்பியன் சொன்னான் எறும்பு மிகுந்த மகிழ்ச்சியடைந்தது.

காப்பியனை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு பாதையின் மேடான பகுதியின் உச்சிக்குப் பறப்பது போல வேகமாகச் சென்ற எறும்பு மேட்டை ஒரு கடி கடித்தது. உடனே மேடான பகுதி சமதளமாக மாறியது ஆனால் இதுவரை ஏறிய மேடு அளவுக்குப் பாதை சரிவாகவும் இருந்தது. இது அவர்கள் நடக்கும் பாதையை இலகுவாக மாற்றியது. எறும்புக்கு இப்படி ஒரு ஆற்றல் இருப்பதை இருவரும் வியந்து பாராட்டி நன்றி கூறினார்கள்.

“ஒரு காட்டாற்றை திசை மாற்றிவிட்டு ஓய்வெடுப்பது போல தொலைவில் சென்று மறையும் வரை காப்பியனையும் சிக்கியையும் பார்த்துக் கொண்டே இருந்தது எறும்பு.

இருவரும் சரிவான இறக்கத்தில் நடக்கத் தொடங்கினார்கள். சரிவில் இறங்குவது எளிதாக இருந்தது. ஆனாலும் பாதை கல்லும் கப்பறையுமான பாதையாக இருந்தது. சிறிதும் பெரிதுமான கற்கள் சிதறி உருண்டு ஓடின. மரத்தடியில் பாதை ஓரமாக ஒரு தண்ணீர்ப் பானை இருந்தது. உருண்டு சென்ற ஒரு கல் அதன் மீது மோதியதால் பானை உடைந்தது. அதிலிருந்த தண்ணீர் முழுவதும் கீழே சிதறி ஓடியது.

பானை உடைந்ததைப் பார்த்த பானைக்குச் சொந்தக்காரன் பதறிப் போய் ஓடி வந்தான்.

“கொலைகாரப் பாவியே! நான் கண் போல காத்து வந்த என் தந்தையை என்னிடம் இருந்து பிரித்து இரக்கமே இல்லாமல் கொன்றுவிட்டாயே! உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் பார்! என்று ஈட்டியை ஓங்கிக்கொண்டு ஓடி வந்தான்.

“மன்னித்துவிடு சகோதரா! உன் தந்தையை நான் கொல்லவில்லை, இன்னும் சொல்லப்போனால் முன்பின் பார்த்ததே இல்லை. அவரை உன்னிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை” என்று கூறினான் காப்பியன்.

“நீ உடைத்த பானையில் இருந்தது வெறும் தண்ணீர் இல்லை என்னுடைய அப்பா” என்று காப்பியனை நோக்கி ஈட்டியை ஓங்கினான்.

சகோதரா! நீ என்ன சொல்லுகிறாய்? நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” பானைக்குள்ளே உன் தந்தை இருந்தாரா? அதுவும் தண்ணீராக, நான் நம்பமாட்டேன் சகோதரா!” என்று காப்பியனும் சத்தமாகச் சொன்னான்.

சகோதரா! என்ற சொல் அவனை ஏதோ ஒருவகையில் தடுத்தது. அதனால் கோபத்தைத் தணிக்க ஈட்டியை ஆழமாக பூமியில் ஊன்றினான்.

“உனக்குச் சொன்னால் புரியாதா?” என்று கத்தினான்.

நீ சொல்வது “ஒரு மீனைத் தண்ணீரில் மூழ்கடித்துச் சாகடித்தேன்” என்று சொல்வது போல இருக்கிறது. நீ ஏமாற்றிப் பறிப்பதற்கு என்னிடம் பொன்னும் இல்லை பொருளும் இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் போனால் பானைக்குள்ளே யானை இருந்தது என்றும் சொல்வாய்! பானையில் வெறும் தண்ணீர்தான் இருந்தது என்பது இப்போதும் நமக்கு முன்னால் சாட்சியாக இருக்கிறது இதோ பார்!” என்று கீழே ஓடியிருந்த தண்ணீரைக் காட்டினான் காப்பியன்.

“நான் பொய் சொல்லவில்லை உண்மையாகத்தான் சொல்லுகிறேன்” என்றான் பானைக்காரன்.

“நீ சொல்வது உண்மையா? பானைத் தண்ணீரைத் தந்தை என்று சொன்னால் இந்த உலகத்தில் யாரும் நம்பமாட்டார்கள். உனக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் சொல் என்னால் தீர்க்க முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்” என்றான் காப்பியன்.

பானைக்காரன் பானை உடைந்து ஓடிய தண்ணீரை விட அவன் அதிகமாகக் கண்ணீர் விட்டு அழுதான். இவ்வளவு நேரமாய் அவனோடு விவாதித்துக் கொண்டிருந்த காப்பியன் அவன் கண்ணில் இருந்து வந்த கண்ணீரைப் பார்த்து மனம் வருந்தினான்.

என்னை மன்னித்துவிடு சகோதரா! நீ சொல்வது எனக்குப் புரியவில்லை, என்று குரலைத் தாழ்த்திப் பேசினான் காப்பியன்.

“உடல் நலக்குறைவால் சாகக் கிடந்த என் தந்தையைப் பிரிய மனம் இல்லாமல் பல காலம் தவித்தேன். அவரை எப்போதும் என்னோடு வைத்துக் கொள்ள நினைத்தேன். நாடு நகரமெல்லாம் ஊர் உலகமெல்லாம் சுற்றி ஒரு மந்திரவாதியைக் கண்டுபிடித்தேன். மந்திரவாதிக்கு என் சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்தேன். அதற்கு ஈடாக மந்திரவாதி என் தந்தை எப்போதும் என்னுடன் இருக்க அவரைத் தண்ணீராக மாற்றித் தந்தார். அதனால் என் தந்தையைத் தண்ணீராகப் பானையில் ஊற்றி நாடோடியாக நான் போகும் இடம் எல்லாம் கூடவே வைத்திருந்தேன்” என்று சொல்லி அழுதான் பானைக்காரன்.

“மன்னிக்கவும் சகோதரா! இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. தெரிந்தோ தெரியாமலோ பானை உடைந்துவிடவும் உன் தந்தையின் இழப்பிற்கும் நானே காரணமாகிவிட்டேன். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு என் மானை மட்டும் எதுவும் செய்யாதே என்று வருத்தம் மேலிடச் சொன்னான் காப்பியன்.

அழுதபடியே இருந்த அவன் “உன் மான் நாயாக மாறட்டும் என்று சபித்தான்”. அடுத்த நொடியே மான் நாயாக மாறியது.

“உன் மேல் இருக்கும் கோபத்திற்கு உனது மானைத் தண்ணீரை விட்டுப் பிரியாத மீனாக மாற்றி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இவ்வளவு காலம் தண்ணீராக இருந்த என் தந்தையைப் பாதுகாத்து வைத்திருந்த சிரமம் உனக்குப் புரிந்திருக்கும். அதற்கான வலியை நீ உணர்ந்து கொண்டிருப்பாய். என்னைச் சகோதரா என்று அழைத்ததால்தான் உன்னைச் சரிபாதி மன்னித்து விட்டேன். நாயாக மாறிய உன் மானை என்னால் திரும்ப மீட்க முடியாது என்று சொன்னான் பானைக்காரன்.

“சகோதரா! ‘ஒரு மரம் அதன் கனிகளால் அறியப்படுவது போல ஒரு மனிதன் தன் செயல்களால் அறியப்படுகிறான்’ என்று என் அம்மா சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அதுபோலத்தான் உன் தந்தையும் உன்னைச் சிறப்பாக வளர்த்திருக்கிறார். அவருக்கு என் வணக்கம். நான் திருமணம் செய்ய இருந்த மானைக் கொல்லாமல் நாயாக மாற்றி என்னுடனே இருக்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி” என்றான்.

“என்ன! மானைத் திருமணம் செய்துகொள்ள இருந்தாயா? என்று பானைக்காரன் பெரும் வியப்புடன் கேட்டான். அப்போது அவனுடைய அழுகை நின்றிருந்தது. ஆனால் வருத்தத்தில் முகம் கன்னிப்போய் இருந்தது. காப்பியன் இதுவரை நடந்ததை எல்லாம் சொன்னான்.

அதைக்கேட்ட பானைக்காரன், “கவலைப்படாதே நண்பா உனக்காக நான் மிகவும் வருந்துகிறேன். புதியதாய்ச் சந்திக்கும் இருவருக்கு இடையே உருவாகும் அன்பு எல்லா அதிசயங்களை விடவும் பெரிய அதிசயமானது, நீங்களும் அப்படித்தான். உன்னிடம் புதியதாய் அறிமுகமாகும் ஒருவர் அல்லது உன்னை விரும்பும் ஒருவர் இந்த நாயை வெட்ட முற்படும் போது இது மீண்டும் மானாகப் பழைய உருவத்தைப் பெறும்” என்று சொன்னான். இவற்றைக் கேட்டு மன ஆறுதல் அடைந்த காப்பியன் அவனுக்கு நன்றி சொன்னான். நாயை அழைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான்.

“எல்லா மனிதர்களிடமும் எல்லா குணங்களும் இருக்கும். எந்தக் குணம் எப்போது வெளிப்படும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. பானைக்காரனிடமும் அதுதான் வெளிப்பட்டது. நமது அம்மாவைப் பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும்” என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டு நாயோடு பயணத்தைத் தொடர்ந்தான்.

“நான் எதுவும் உன்னைப் பற்றி கேட்டு அறியவில்லை என்று வருந்தாதே, நீண்டதூரம் பயணித்து உன் கால்கள் காப்பேறி இருந்தன. யாருமற்றவர்களைக் கால்கள்தான் அழைத்துச் செல்கின்றன. அவர்கள் பாதை என்ற ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே செல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பயணத்தைத் தேர்ந்தெடுக்கும் கால்கள் வடிவத்தைக் கடந்து எப்போதும் நேரானவை” என்று சொன்னான்.

“எல்லா கடவுள்களின் சாயலும் உள்ள பொருள்கள் உணவும் பணமும் அன்பும் மட்டும்தான். இவை மூன்றுமே ஏதாவது ஒருவகையில் துக்கத்தோடு தொடர்பில் உள்ளன. நாம் சேர்ந்ததற்கும் இப்படி கால் கடுக்க நடப்பதற்கும் அதுதான் காரணம்” என்று நாய் சொன்னது.

“புரிதலில் தான் அன்பு அடுத்த பரிமாணம் பெறுகிறது, உன்னை எனக்குத் துணையாகப் பெற்றது நல்ல பேறு” என்று சொல்லி நாயை அணைத்துக் கொண்டான்.

பலவற்றை வழியெங்கும் பேசியபடியே சென்றார்கள். அவர்கள் ஓய்வெடுக்க வழியில் யாரையாவது கண்டால் அடுத்து எங்கே சத்திரம் உள்ளது என்று கேட்டுக் கொண்டு நடந்தார்கள். சற்றுத் தொலைவில் ஒரு மாளிகை தெரிந்தது. அதை நோக்கிச் சென்றார்கள்.

உணவும் உறக்கமும் சரிவர இல்லாததால் அவர்களுக்கு ரொம்பக் களைப்பாக இருந்தது. அந்த வழியில் ஓரமாக ஒரு நடைக் கிணறு இருந்தது. நடைக் கிணறு என்பது மூன்று பக்கம் சுவர்ப் பகுதியாகவும் ஒரு பக்கம் உள்ளே நடந்து சென்று நீரெடுக்க நடப்பதற்கு ஏற்றவாறு தூரத்திலிருந்து சாய்தளம் போல இருந்தது. அதில் காப்பியன் தண்ணீர் குடித்தான். நாய்க்கும் ஒரு தேங்காய் சிரட்டையில் தண்ணீர் கொண்டு வந்து தந்தான்.

நிழல் மாளிகைக்கு எதிர்ப்பக்கம் விழுந்தது. அந்த இடத்தில் காப்பியன் படுத்தான். சிறிது நேரத்திலே தூங்கி விட்டான். அவன் அருகிலே நாயும் படுத்துக்கொண்டது.
நாய் தூங்கவில்லை. ஆனால் அது அமைதியாக இல்லை.

பூமி எங்கும் கால்கள்
(சிறார் நாவல்)
பூவிதழ் உமேஷ்
எதிர் வெளியீடு


 

பூவிதழ் உமேஷ்
பூவிதழ் உமேஷ்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று கூறிக்கொள்ளும் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார், தற்போது மொழிப்பெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி, சதுரமான மூக்கு, துரிஞ்சி, தண்ணீரின் சிரிப்பு, மற்ற விலங்குகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் எழுத்தெனப்படுவது என்ற புதிய நோக்கில் இலக்கண நூலும் “a piece of moonshine at dinner” (Writersgram publication) என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளன.

சிறார் இலக்கியத்தில் தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும், லிமொ ஆகிய நான்கு நாவல்கள் உட்பட பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026
  • நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை

    January 4, 2026
  • சிக்கிம் சுந்தரி

    சிக்கிம் சுந்தரி

    January 4, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)

Archives

  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • மாதுளை மரம்

    மாதுளை மரம்

    January 4, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 1

    January 4, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 6

    இன்கா நாடோடிக்கதைகள் – 6

    January 4, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (9)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (11)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இதழ் 8 (44)
  • இலக்கியம் (15)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (80)
  • கட்டுரை (2)
  • கதை (4)
  • கதை (3)
  • கவிதை (62)
  • கவிதை (11)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (11)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (36)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (5)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (9)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (3)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (27)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top