நிகழ் சமன்
வசந்த காலத்தின் ஆரம்ப நாட்கள்
செர்ரி மரத்தைப் போல என்னில் இருந்து துளிர்க்கும்
மென்னுணர்வுகள்
இந்தக் கண்ணாடி யன்னலுக்கும்
எதிர்க் கண்ணாடி யன்னலுக்கும் ஒரு தெரு இடைவெளி
“பெரு வெளித் தெரு”
ஒரு தாய் தன் மார்பைத் திறந்து
தன் குழந்தைக்குப் பாலூட்டுகிறாள்;
தன்னை மறந்து பாடுகிறாள்
அவள் கண்கள் பிங்க் வர்ணப் பூவின் அதிர்வில் ஒளிர்கிறது
முலாம்
அவர்கள் இறுதி மணித்தியாலத்தைச் சுமக்க முடியாதவர்களாக இருந்தார்கள்
எப்படியாவது தப்பித்துக் கடந்துவிட முந்தினார்கள்
முண்டியடித்து ஓடினார்கள்,
நான் இறுதி மணித்தியாலத்தைச் சுமக்க
எப்பொழுதும் தயாராகவிருப்பவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால்
வாசலைக் கடக்கும் பொழுது ; ஆச்சரியம் வழிய என்னைப் பார்த்தார்கள்
இறுதி மணித்தியாலத்தில் தப்பித்துப்போய் என்ன செய்துவிடப்போகிறார்கள்,
எந்த அமுதத்தைப் பருகிக்கொள்வார்கள்
அவர்கள் போனதன் பின்பும்
மின் குழிகள் ஒளிர்ந்தபடியே இருக்கின்றன
மழையைப் போலும் புயலைப் போலும் பேரிரைச்சல்
புதிதாய் இருவர்;
நீராடலின் முடிவில் கேசம் தொடும் இறுதித்துளியில்;
காலம் கரைந்து இல்லாது போகிறது
அநாயசம்
“கண்களில் மின்னும் சூரியப் பிரகாச வெளிச்சத்தில்
அன்னிச்சையாக மலர்களைப் பறிப்பாள்
அவ்வெளியெல்லாம் தாவித்தாவி நடப்பாள்
காற்று அவளில் மோதிப் பிரிந்து போவதை
இரசித்திருப்பாள்
விலக்குகளில் இருந்தெல்லாம் விலக்கழிக்கப்பட்டவள்”
கடவுளின் முன்னால் நடனமாடுவதில் இருந்து
அவள் விடை பெற்றாள்
அவளது வீடடைதல் மீதான பேரச்சம்
பிரபஞ்சத்தின் காதுகளை அடைக்கிறது
பௌர்ணமி நாள் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார்கள்
சந்தனம், ஜவ்வாது, அத்தர் கொண்டு
மூடி இருக்கும் தேகம், மின்னி மினுங்கும் மேனி
இந்த மலையை ஏறிக்கடந்தால் அவளது வீடு
அந்தப்பனி படர்ந்த தேசம்
சமுத்திரமும் நதிகளும் இல்லாத மலைத்தொடர்
கடவுளின் எல்லைக்குள் இல்லாதது
அந்த மலையை ஏறிக்கடக்க எந்தக் கால்களாலும்
பறந்து கடக்க எந்த இறக்கைகளாலும் முடியாது
காத்திருந்த பௌர்ணமி நாளும் வந்தது
கடவுளிடமிருந்து விலகுவதற்கு முன்பாக
ஒருதடவை கடவுளைப் பார்த்து
தனக்காக ஒருமுறை நடனமாடும் படிக் கோரினாள்
கடவுளின் ஆசனத்தில் அமர்ந்திருந்து
அதை இரசிக்க வேண்டும் என்றாள்
தன்னை திருப்திப்படுத்தும் மட்டிலும்
கடவுளின் நடனம் தொடர வேண்டும் என்றாள்
நித்தியம் மற்றும் நிழல் பிரம்மம்
ஆற்றுப் படுக்கையில் நான் ஒரு தாவரம்;
ஆனந்த அலைகளைக் கொடுத்தாய்
தேனூறும் மலர்களைக் கொடுத்தாய்
இரவு பகலென்று சமரசமில்லாது
அலைபடும் நீரின் வெளிச்சம்;
கால்கள் வழி ஊறி் ஒரு பெரும் ஆறு
என் தலைக்குள் நகர்கிறது
தேகம் அடர்ந்த சமுத்திரத்தில்
உயிர் கொண்ட உப்பின் வாசனை
மெது மெதுவாக ஊற்றெடுக்க;
மகா அவதாரிகள் ஒருவர் பின் ஒருவராகப்
பிறப்பெடுத்தபடி இருக்கிறார்கள்
அவர்கள் சுவர்க்கத்தின் மகிமையினை
நிலுவையில் உள்ள நாட்களில் ஒளிர்விடச்
செய்தபடி வெடித்துப் பிளம்பெனப் பரவி
சூரியனை மொத்தமாக மறைத்து
ஆற்று மண்ணில் புதைந்து
ஒரு தாவரம் என உருக்கொள்ள;
அதிரும் கூச்சல்களின் முன்னும் பின்னும்
கால்கள் பூமியின் ஏதோவொரு நிலப்பகுதியை
ஸ்பரிசித்தபடி இருக்கும்
ஒரு வெறுமையை அல்லது பரிபூரணத்தைச்
சுவைப்பதற்கு ஏற்ற மனநிலையைப் படரவிடும்
தட்பவெட்பங்கள் என் சூழலின்,
ஆக நுண்ணிய அகப்புற நிகழ்வுகளின்
பின்னல்களின் வழி,
அந்தரங்க மாயையின் பொருட்டு நிகழ்த்தப்படும்
ஒரு சித்துவிளையாட்டு என்பதாக வைத்துக் கொண்டாலும்;
நான் ஒரு தடவை அல்லது பல தடவைகள்
பெரும் சந்தோசங்களை எதிர்கொள்கிறேன்
அவை எங்கிருந்து வந்தன;
சர்வ நிச்சயமாக என்னிடமிந்து இல்லை
என் ஆத்மாவிடம் இருந்தா என்றாலும்,இல்லை
ஆத்மாவின் பின் தொடர்களில் இருந்தா என்றால்;
கண்களை மூடி ஆழ்ந்து போகிறேன்
அப்படியே போகிறேன்
எங்கென்று தெரியாதபடி எங்கோ போகிறேன்
இத்தனை முடிச்சுக்களை நான் பின்னி இருந்தேனா;
இத்தனை நீண்ட நெடிய வடங்கள் எங்கிருந்து
எனக்குக் கிடைத்தன,
எனக்கே தெரியாதபடி நான் அறியாத ஒன்றை
எப்படி என்னால் முடிக்க முடிந்தது
மின் விளக்குகளை ஒளிர்விக்கிறார்கள்
எப்போதோ எங்கேயோ யாராலோ
முதன்முதலில் பாடப்பட்ட மழைப்பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள்
எப்போதோ எங்கேயோ உயிர் கொண்ட மழை என்னை நனைக்கிறது
யாரோ யாரைப்பற்றியோ சொல்லும்
இதிகாசங்களும் புராணங்களும்
என்னை உட்கார விடாது பறக்கச்செய்கின்றன
“எந்த லோகத்தில் இப்பொழுது இருக்கிறாய்”
என்னும் குரலினை மிக மிகச் சொற்பக் கணங்களே
செவிமடுக்க முடிந்தது
கேள்விகளாய்க் கேட்டபடி இருக்கும்
சிறு பிள்ளையைப் போல என் அகக் கோலம்
திராணியற்றது
அந்தக் குரலினை மறுபடி மறுபடி பலமுறை கேட்டிருந்த ஞாபகம்
அந்தக் குரல் ஒரே ஒரு குரல் அல்லவென
அந்தக் குரல் பல கோடிக்குரல்களின் கூட்டென
நடு நடுங்கும் தோனியில் பேசியது
அந்தக் குரல் என்னை மேலும் வர அழைக்கிறதா
போ என விரட்டுகிறதா
பெரு வெளி எங்கும் அந்தக் குரலே நிறைந்திருக்கிறது
எனது குரலைப்போல ஒரு பருமன்
எனது குரலைப்போல ஒரு வெறுமை
எனது குரலைப்போல ஒரு இலாவகம்
துவர்ப்புத் தன்மையுடைய அக்குரல் கொண்டு
அமிர்தம் கடைவதாக நினைந்தால்
ஒரே பொதுவான ஒரு மன்னனை
ஒரே ஒரு நாற்காலியைப்
பெரும் கட்டற்ற வெளிச்சத்தை
நான் சுமக்க வேண்டும் ; கிறக்கமுற்று
சுமக்கத்தலைப்படுகையில்
என்னிடம் தேடி காற்று வந்தது
நெருப்பு வந்தது
நிலம் வந்தது
ஆகாயம் வந்தது; ஆகாயம் எனும் போது
கோடான கோடி நட்சத்திரங்களும்
கோள்களும் பின் பால் வீதியும்
கருந்துளைகளும் வந்தன,
பின் பிரபஞ்சம் அசைகிறது
கூட்டில் இருந்தபடி எனக்கு;
தடுக்கி விழுந்து குப்பறக் கிடக்கிறேன்
கால்களும் கைகளும் அசையத் தொடங்கின
ஒன்று இரண்டு மூன்று என அண்டங்களைக்
கடக்கிறேன்
காற்றில்லாத ஒரு வெளியில் மோதி;
கோடான கோடிப் பிரபஞ்சங்களுள் நான்
கர்ம ரோகம்
கைப்பிடித்து அழைத்துப் போனாய்
குரல் வழி சமிக்யைத் தந்தாய்
எங்கிருந்தெல்லாம் ஒளி வருகிறதோ
அங்கெல்லாம் கண்களை அசைத்தேன்
அரசே உன் பாதங்களை இந்த நிலத்தினில் வை
இது உனது நிலமில்லைதான் இருந்தாலும் வை
இந்நிலத்தினில்தான் வெளிச்சமே இல்லையே
வெளிச்சம் வரும் திசை ஒன்றில் போகக்கூடாதா
நீ வெளிச்சம் என்று எதைக் கருதுகிறாய் அரசே
வெளிச்சத்தைத்தான் ; அதோ அந்தத்திசையின்
வழி வருகிறதே, என்னால் உன்னையும் உன்னால் என்னையும்
பார்க்கமுடியும் படி இருக்குமே அதை;
இப்பொழுது பார் உன் முகத்தைக் கூட அறிந்திடாது
உன்னை என் கைகளைப் பிடிக்க விட்டிருக்கிறேன்,
உன் பின்னாலேயே வருகிறேன்.
எதேன்றறியாத கொடும் இருளுக்குள் அழைத்துப் போகிறாய்
கால்களுக்குள் பல்லி முட்டைகள் மிதிபடுகின்றன;
பாம்பு முட்டைகள் மிதிபடாதென்பதற்கு என்ன நிச்சயம்;
என் கண்களை இருள் கட்டிப்போட்டிருக்கும் போது
உன் கண்களுக்கு எங்கிருந்து வெளிச்சம் கிடைக்கிறது
எப்படி ஒரே வெளியில் உனக்கு வெளிச்சமும்
எனக்கு இருளுமாய்;
நதியின் கரையில் நடப்பவர்கள்
முன் எப்போதோ சந்தித்தவர்கள்
அவர்கள் என்னைச் சந்திக்கும் பொழுது
அவர்களிடம் கண்கள் இல்லை;
என்னிடம் கட்டப்பட்ட கண்கள் இருந்தன;
எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாத நதி
நகர்ந்தபடி இருக்கிறது
படகுகள் நகருகின்றன
மைய நகரத்தின் நடுச் சரடாக
ஓடும் நதி; பாடும் நதி ; இசைக்கும் நதி
என தேம்ஸ் நதியின் வகிபாகங்கள்;
தேம்ஸ் நதியின் வெளி அடுக்குகளில்
குளிர் கலந்த காற்றின், மென் நறுமணத்தில்
உணர்ந்திட மாட்டாதது;
கத்திகளால் கிளித்து துப்பாக்கிகளால் துளைக்கப்பட்ட
சீதலங்களில் இருந்து கசிகின்ற குருதியின் மணம்.
நிராசைகளின் பெருஞ்சுவர்
திரவ நிலையில் இருக்கும் என் பிஞ்சுத்தேகம்
பால்யகால நீளம்
கொள்ளும் திறமுடைய பாத்திரம் தேடி அலைந்தது
பாத்திரங்கள் நிரவி வழிந்ததில்
குறுகிப் போனது பாரம்
குறுகியதில் இருந்து உருப் பெருக்க வேண்டும்
போதாமையினுள் நிறைந்து
பெரும் பூதம் போல ; இராச்சத அரக்கன் போல;
மையிருட்டுக் காளி போல;
பாத்திரத்தை உடைத்து வெளிவரும் தொனியில்
உருப் பெருக்க வேண்டும்.
பாத்திரத்தைக் கண்டடைவதில்
பாத்திரத்துள் நிறைந்து ; உறைந்து போவதில்
மறுபடி மறுபடி பரீட்சார்த்த முயற்சிகளில்;
கண்களை மூடி காதுகளைப் பொத்திக் கைகளை ஒடுக்கி
முதலில் கபாலத்தை உள்ளிறக்குகிறேன்
கபாலம் நுளைந்தது,மேலுடம்பு நுளைந்தது
விறைத்த குறி நுளைந்தது
தொடை நுளைந்தது இறுதியாய் கால்களும் நுளைந்தது
பரிபூரண இருள்; அழுகிறேன் கூக்குரலிடுகிறேன்;
அங்அங்கெல்லாம் அலைந்து ; நானும் வருகிறேன் என இரஞ்சியபடி
நான் தனியனாக நுளையாது பாத்திரத்தின் விளிம்பில் குந்தியபடி இருக்கிறேன்;
Art : Stanley Mouse
மதுஷன் சிவன், (1990 ஜீலை 25 ) கவிஞர் மற்றும் ஓவியர்
2003ம் ஆண்டில் இருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். இதுவரை ஆறு கவிதை தொகுதிகள் எழுதியுள்ளார், 2025 இல் பரியலம் என்ற தொகுதி வெளி வந்தது.








Leave a Reply