Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

குறிஞ்சித்தேன் : படுகர் சமூகத்தின் திணை வாழ்வியல் – ந.இரத்தினக்குமார்

ந. இரத்தினக்குமார்
ந. இரத்தினக்குமார்
October 1, 2025
குறிஞ்சித்தேன் : படுகர் சமூகத்தின் திணை வாழ்வியல் – ந.இரத்தினக்குமார்

“உருவம் நடப்புக் காலம் சார்ந்ததாகவும், உள்ளடக்கம் எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாகவும் இருப்பதே ஒரு படைப்புக்கு இலக்கிய அந்தஸ்தை அளிக்கும்” – யுவன் சந்திரசேகர்

ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல்களில் குறிஞ்சித்தேன் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் தனித்தமைந்த ஒரு படைப்பாகும். அவர் எழுதிய இரண்டாவது நாவல். மலைவாழ்க் குடிகள் குறித்துத் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். கலைமகள் இதழில் 1963இல் தொடராக வெளிவந்து கலைமகள் பதிப்பகத்தால் அது நாவலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மு.வ.முன்னுரையும் ந.சஞ்சீவியின் விரிவான அறிமுகமும் நாவலைப் பரவலாக அறியச் செய்துள்ளது.

தமிழகத்தின் ஒரு வட்டாரத்திற்குச் சென்று அங்கு வாழும் மக்களோடு சில மாதங்கள் தங்கி கள ஆய்வு, வெளிநாட்டார் குறிப்புகள், அரசு அறிக்கைகள், பல்வேறு ஆய்வு நூல்கள், வட்டார வரலாறுகள் இவற்றைக் கணக்கில் கொண்டு நாவல் எழுதுவது ராஜம் கிருஷ்ணனின் படைப்பாக்க முறையியல். தான் வாழும் களத்தைப் புனைவுக்களமாக விஸ்தரித்தவர் ராஜம் கிருஷ்ணன். அதனால் அவரின் நாவல்களை ஆவண நாவல்களாகக் (Doco–Fiction) கருத இடமுண்டு. இடதுசாரியம், காந்தியம், பெண்நிலைவாதம் ஆகியவை ராஜம் கிருஷ்ணனின் எழுத்துகளில் திரளும். ராஜம் கிருஷ்ணனின் கணவர் ஊட்டிப் பைக்காரா மின் திட்டத்தில் பணிபுரியச் சென்றார்(1960). உடன் சென்ற இராஜம் கிருஷ்ணன் படுகர் குடிகளைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டி ‘குறிஞ்சித் தேன்’ நாவலை எழுதியதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். எட்கர் தர்ஸ்டன் நூல்களை ஆசிரியர் பயன்படுத்தியதற்கான கூறுகளை நாவலில் பார்க்க முடிகிறது. ஆசிரியர் எழுதிய அடிக்குறிப்புகளை கி.வா.ஜ., நீக்காமல் இருந்திருந்தால் கூடுதல் செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கும்.

தமிழகத்தில் 37 பழங்குடிகள் வாழ்வதாக அரசு பட்டியல் தெரிவிக்கிறது. ‘தமிழகத்தின் பழங்குடிகளின் மாவட்டம் நீலகிரி’ என்று அழைப்பதற்கேற்பத் தோடர், கோத்தர், குறும்பர், இருளர், பணியர், காட்டுநாயக்கர் போன்ற பல்வேறு பழங்குடிகள் வாழ்கின்றனர். இங்கு வாழும் படுகர்கள் குறித்த நாவல் குறிஞ்சித்தேன். 1941 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரை பழங்குடிகளாகப் பட்டியலிடப்பட்டவர்கள் படுகர்கள். பின்பு பட்டியலிலிருந்து வெளியேற்றம்  செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவர்களுடைய  வாழ்வியல் என்பது தொன்மையும் குறிஞ்சி திணைக்குடித் தன்மையும் நிறைந்தவை. “படுகர் என்று பேச்சு வழக்கிலும் படகாஸ் (Badaga) என்று ஆவணங்களிலும் குறிப்பிடப்படுகின்றனர். படுகரின் பேச்சு மொழியில் ‘பண்டா’ என்பதற்கு எருமை மந்தை எனப்பொருள். பண்டுகா என்பதற்கு எருமையைப் பேணுபவர் என்று பொருள். இவை மருவிப் படுகா என்று திரிந்ததாகப்” பேரா.ஜோகி குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. திராவிட மொழிகளில் ஒன்றாகத் திகழும் படுக மொழி கன்னடத்தின் கிளைமொழியாகக் கருதப்படுகிறது.

நாவலின் களமும் கட்டமைப்பும்

ஐந்து பகுதிகளாக நாவல் அமைந்துள்ளது. மோவ்கட் எனும் குறிஞ்சி மலர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கிறது. தோடர், படுகர் இம்மலர் பூக்கின்ற காலத்தை வைத்துத் தங்களின் வயதைக் கணிக்கின்றனர். நாவல் ஐந்து குறிஞ்சி ஆண்டுகளைக் கணக்கில் கொண்டுள்ளது. ஜோகியின் பாட்டி ஹெத்தே மலையின் தொல்கதையைச் சொல்கிறார். நீலகிரியில் உள்ள மரகத மலை ஹட்டியில் (படுகர் குடியிருப்பு) வாழும் கிருஷ்ணன், ரங்கன், ஜோகி ஆகிய மூன்று குழந்தைப்பருவ நண்பர்களின் வாழ்வில் கல்வி, பொருளாதாரம், நவீனமயமாதல் ஏற்படுத்தும் மாற்றங்கள் கதையின் மைய இழை. படுகர் இனக்குழுவின் இடப்பெயர்ச்சி, மேய்ச்சல், வேளாண்தொழில், வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள், உணவுப் பண்பாடு எனப் படுகர் இனவரைவியல் கூறுகளையும் படுகர்களின் சமூக வரலாற்றுப் பரிமாணங்களையும் (social dynamics) நாவல் தொகுத்துக் கொண்டுள்ளது.

முதல் குறிஞ்சி

ஹட்டியில் செல்வாக்கு மிக்க கரியமல்லரின் பேரன் கிருஷ்ணன். கீழ்மலையில் உள்ள ஆங்கில மிஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் செழிப்பு. ரங்கன், மாதனின் மகன். அம்மாவை இழந்து நஞ்சம்மைச் சித்தியின் வதைகளால்  எதிர்குணாம்சங்களுடன் இயங்குபவன். வறுமை சூழ நிற்பவன். மாதனின் தம்பி லிங்கையா. அவரின் மகன் ஜோகி. நிலமும் மந்தையும் உடையவர்கள். கிருஷ்ணன், ரங்கன், ஜோகி ஆகிய மூவருக்கும் பாரு முறைப் பெண்.

பருவ வயதில் ஜோகி ஹெத்தப்பா கோவிலின் பூசாரியத்தை ஏற்கிறான். பால் மனைச் சடங்கு நிகழ்த்தப்பட்டு, ஊரின் கறவைக்காரனாகிறான் ரங்கன். ஹட்டியின் தொன்மைகளிலிருந்து தப்பிக்க விரும்பி உதகைக்கு ஓடி விடுகிறான்.  கிருஷ்ணன் ஆங்கில வழிக் கல்வியைத் தொடர்கிறான். வெள்ளை முண்டுகளைச் சுற்றிய பெண்கள் “வெண் புறாக்களின் கூட்டம்  போல் சாரை சாரையாக  மலைச் சரிவுகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்”. அதில் பாருவும் ஒரு பெண். வன்புல விவசாயத்தில் தேர்ந்த பெண். இவர்களின் சிறுவர் பிரயாயத்தைச் சுற்றி முதல் குறிஞ்சியில் கதை பின்னப்பட்டுள்ளது.

எருமை மந்தைக்கு மேய்ச்சல் நிலங்கள் குன்றுதோறும் உண்டு. பாரம்பரிய விவசாயம், கூட்டு வாழ்வு, புற்களால் ஆன எளிய வீடுகள், குலசாமி கோவில், திருவிழா, சடங்குகள், தெருக்கூட்டங்கள், கோத்தரின் குழு இசை, தோடர்களின் வேலைப் பகிர்தல்கள், குறும்பர்களின் மருத்துவம், மந்திரம் என மலைகளுக்குள் வெளிப்பிரதேசம் தெரியாத இயற்கை வாழ்வை வாழும் பழங்குடிகளின் சித்திரங்கள் முதல் பகுதியில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

படுகர்களின் வாழ்வை அவர்களின் கூட்டு வாழ்நிலையே நிர்ணயிக்கிறது. பாதீடும், காவலும், கூட்டு நடனமும் குழுவின் முக்கிய நடவடிக்கைகள். சாமை, கேழ்வரகு, தானியங்கள் விளைய அவற்றின் கதிரை அறுத்துச் சாமிக்குப் படைத்த பின்பு வீடுகளுக்குக் கொண்டு வரும் ‘புத்தரித் திருவிழா’ (புதுக்கதிர் தெய்வத்திருவிழா) குழுவைப் பிணைத்துள்ளது. பண்டிகைக்கு முன்பே ஊரில் தனியாகத் தானியத்தை அறுப்பதும் உண்பதும்  மீறல். திருவிழா காலதாமதமாகும் போது, உணவிற்குத் தானியங்கள் இல்லாதவர்களின் வீடுகளின் வாசலில் இரவில் கூடையில் கிழங்கையும் சாமையையும் வைத்துச் செல்வது தானியங்கள் வைத்திருப்பவர்களின் வழக்கம். “அரத்துப் பந்தமக அன்னவ கொடு. பெரத்துப் பந்தமக பெக்கெய கொடு” என்பது படுகர்களின் முதுமொழி. பசித்து வந்தவர்களுக்கு அன்னத்தைக் கொடு, குளிரில் வந்தவர்களுக்குக் கம்பளியைக் கொடு என்பது பொருள். படுகர்களின் வீட்டில் கதவுகள் அடைக்கப்படுவது இல்லை. எப்பொழுதும் வருபவர்களுக்கு உணவும் அடைக்கலமும் மலையில் உண்டு.

கோத்தர்கள் குழல், கொம்பு முதலிய வாத்தியங்களின் இசைக் கோர்வைகளை வாசிப்பர். பிற இனக்குழுக்கள் கூட்டு நடனம் புரிவர். நாவலில் ஹெத்தே கோவில் திருவிழாவில் தலையில் பெருத்த தலைப்பாகையுடன் காதில் இரு வளையங்கள் அணிந்து பலர் கைகளைக் கோர்த்து வட்டமாகக் கால்கள் மாற்றி மாற்றி ஓவ்… ஓவ்… என்ற ஒலியுடன் நடனம் புரிகிறார்கள். “ஓவ், ஓவ் என்று மேய்ச்சல் தொழிலின் போது மாடுகளை ஓட்டும் தோடர்களது ஓசையானது அவர்கள் ஆடும் ஆட்டத்திலும் இடம் பெறுகின்றன” என்று  கே.ஏ.குணசேகரன் குறிப்பிடுவது இதற்கும் பொருந்தும்.  மாதன் ஒரு இசைவாணனாகப் படைக்கப்பட்டுள்ளார். அருவியும் குமரியாறும் பாய்ந்தோடும் வளம் மிக்கப் பகுதி ஹட்டி. அறுபதற்கும் மேற்பட்ட ஹட்டிகள் மலைகளில் உண்டு. குறிஞ்சிப் பூவின் நீல வண்ணத்தில் ஒளிறும் நீலகிரி உருமாறி வேற்றுருக் கொள்வது கதையின் பெருக்கு.

இரண்டாம் குறிஞ்சி

உதகைப் பால்வினியோகத் தலைமைப் பதவியில் ரங்கன். ஆடு, மாடு மேய்ப்புத் தொழில் பார்த்தும் சுப்பையா பிள்ளையின் கீழ் பன்னிரண்டு ஆண்டுகள் வேலை புரிந்தும் அவரை மீறி இப்பதவியை அடைகிறான். கோட், தொப்பி அணியவும் துரைக்குத் தெரியாமல் பால் வியாபாரம் செய்யவும் தெரிந்தவன். கம்பளிகள் சுற்றிய படுகர் இனத்தில் ரங்கன் கோட் அணிந்து வலம் வருகிறான். காலனியம் தன்னைப் போன்ற போன்மை மனிதர்களை(mimic Man) இனக்குழுவிற்குள் உருவாக்குகிறது. காலனியம் உருவாக்கிய நவீன மனிதருக்கான தன்னல அதிகாரத்தை ஹட்டியில் செயல்படுத்த விழைகிறான் ரங்கன். ஜோகி தந்தை லிங்கையாவின் காய்ச்சல் கண்டு பூசாரியத்தைக் கைவிட்டு மீண்டும் விவசாய வாழ்விற்குத் திரும்புகிறான். இயற்கை உறவு, சமூக உறவு, பண்பாட்டு உறவு இவற்றால் ஆனது படுகர் குழுமத்தின் உற்பத்தி உறவுகள். அதை முன்னெடுக்கிறான் ஜோகி. கிருஷ்ணன் நவீனக் கல்வி மூலம் மலைக்குப் பள்ளி, தார்ச் சாலை, மின்சாரம், கூட்டுறவுக் கடைகள் வருவதற்கான பணிகளைச் செய்கிறான்.      மூவருக்கும் தங்களின் முறைப்பெண் பாருவைத் திருமணம் செய்வதில் தோன்றும் உரிமைப் பிரச்சினைப் பூசலாக மாறுகிறது. பாருவோ  கிருஷ்ணனை விரும்புகிறாள். கரியமல்லர் தலைமையில் ஊர்ச்சபை கூடி, வழக்கப்படி  இளவட்டக் கல்லைத் தூக்கும் முறைப்பையன் பாருவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கிறது. ரங்கன் வெற்றி பெறுகிறான். பாரு தனக்குப் பிடிக்காத நகரச் சீமாட்டி ஆகிறாள். ஜோகி பாருவின் தங்கை கிரிஜாவையும்  கிருஷ்ணன் தேன்மலையில் உள்ள ருக்மணியையும் மணம் புரிகின்றனர். மூவருக்கும்  இடைவெளியும் முரணும் அதிகரிக்கிறது. திராவிடர் மரபில் பின்பற்றப்படும் உறவுகளுக்குள் மணம் செய்யும் ‘முறை மணம்’ (cross- cousin marriage) படுகர்களின் திருமண மரபாக உள்ளது.

மூன்றாம் குறிஞ்சி

உதகமண்டலத்தில் மின்சாரம், தேயிலைத் தோட்டங்கள், பால் பண்ணைகள், விற்பனை நிலையங்கள் நிறைகின்றன. கிளப்புகள், சிற்றுண்டிச் சாலைகள், விடுதிகள், மாதா கோயில்கள், காவல் நிலையங்கள், கச்சேரிகள், மேட்டுக் கட்டிடங்கள், வடநாட்டார் துணிக்கடைகள் என உதகைத் தனது மலையின் வடிவத்தை நகரமாக மாற்றிக்கொண்டது.  பைக்காரா மின் திட்டப் பணிகள் ஊட்டிக்குப் பலனைத் தருகிறது. படுகர், தோடர், குறும்பர் அங்கங்கே எரியும் மின்விளக்குகளை வியப்புடன் பார்க்கின்றனர். ஹட்டியின் ஆண்கள் கிழங்குகளை, சாமைகளை ஊட்டிக்கு வந்து வியாபாரம் செய்யப் பழகுகின்றனர். உதகையில் மேல்சட்டை அணிந்த பெண்களைப் பார்த்து, ஹட்டியில்  உள்ள இளம் பெண்கள் நாகரீக ஆடை வேண்டுகின்றனர். பழமை இதை மறுக்கிறது. இயற்கையின் அமைப்பை மையமிட்டுப் பன்முகமாக இயங்கிய மலைப்பகுதிகள் உதகமண்டலத்தை மையமிட்டு இயங்கத் தொடங்குகின்றன.

நான்காம் குறிஞ்சி

படுகர்களின் ஹட்டியும் நவீன மாற்றங்களை எதிர் கொள்கிறது. கரியமல்லர், கிருஷ்ணன் உட்படப் பலர் தேயிலை பயிரிடுகின்றனர். ஏற்பும் மறுப்பும் எழுகிறது. ரங்கன் ஆக்ரமித்த நிலங்களைத் தேயிலைத் தோட்டங்களாக விரிவுபடுத்துகிறான். பாரு எதிர்க்கிறாள். மேய்ச்சல் சமூகம், தேயிலையின் பரவல் மூலம் விவசாயச் சமூகமாக மாறத்தொடங்குகிறது. கிறிஸ்தவம் நீலகிரி மலை வாழ்க் குடிகளிடம் அறிமுகமாகிறது. தூரத்திலிருந்து பார்க்கும் பசுமை படர்ந்த மலைகளுக்குள்ளே திகைக்கச் செய்யும் வாழ்வியல் முன்னகர்கிறது.

இராணுவ உணவகம், ஜான்சன் எஸ்டேட், திரைப்படக் கொட்டகை, தைலம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் என நவீனமயமாக்கல் மலைகளில் தீவிரமாக அரங்கேறுகின்றன. இனக்குழுக்களின் சந்தைகளும் வியாபார வடிவங்களும் மாறுகின்றன. பண்டமாற்று கைவிடப்படுகிறது. ஹட்டிக்கு தார்ச்சாலை வருகிறது. கிருஷ்ணன் சிற்றுந்தில் ஹட்டிக்குள் வந்து செல்ல, இளைஞர்களோ பேருந்தில் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள். பத்திரிகைகளும் திரைப்படப் போஸ்டர்களும் மின்சாரமும் நீலகிரியில் பரவுகின்றன. படுகர் குடிகள் உதகைத் திரைப்படக் கொட்டகையில் நந்தனார் பயாஸ்கோப் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றன. கல்வி, பணம், சந்தை, நகரக் கலாச்சாரம் தலைமுறைகளுக்கு இடையில் வேறுபாடுகளைப் பெருக்குகின்றன. சுற்றுச்சூழல் மாற்றங்கள் மனிதக் குழுமத்தின் பண்பாட்டை, தனிமனித நடத்தைகளை மாற்றி அமைக்கின்றன. சமூகத்தின் விழுமியங்கள் சூழலால் வரையறுக்கப்படுகிறது. நகர வாழ்க் குடிகளின் ஊடாட்டத்தில் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளை நகல் செய்து, தம் வயப்படுத்திக் கொள்ளும் போக்கு மலைகளில் நடைபெறுகிறது.

ஐந்தாம் குறிஞ்சி

மலை முழுதும் இருந்த சாதி மரங்கள் வெட்டப்பட்டுத் தேயிலையின் விளைச்சலுக்கு ஏற்ப யூகலிப்டஸ், வால் பேரி, ஓக் போன்ற மரங்கள் வணிக நோக்கில் நடப்படுகின்றன. மாடுகள் மேய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல குன்றுகளில் தேயிலைச் செடிகள் முளைக்கின்றன. 1878இல் அறிவிக்கப்பட்ட இந்திய வனச் சட்டம், வனங்கள் மற்றும் கானுயிர்கள் அனைத்தும் அரசுக்கு உரிமையுடையதாகச் சொல்லித் தனியார் மயத்தையும் முதலாளியத்தையும் மலைகளில் பெருக்குகிறது. முன்பு கடும் பனிக் காலங்களில் எருமை மந்தைகளை மலைச் சரிவுகளில் உள்ள அடர் சோலைக்குள் மாதக் கணக்கில் அமர்த்துவர். அவ்வழக்கம் குறைகிறது. நீலகிரியில் தோடரும் படுகரும் கால்நடை மேய்ச்சலல் பொருளாதாரத்தை (pastoral economy) அடித்தளமாகக் கொண்டவர்கள். அவர்களின் சுயச் சார்பு உற்பத்தி முறைகளும் பண்டமாற்று போன்ற எளிய வணிக முறைகளும் கைவிடப்படலாயின. மலைகளில் மட்டுமே வாழும் தாவரம் குறிஞ்சி. மலைகளில் வாழும் குடிகள் தொல்குடிகள். இரண்டின் இயல்புகள் மாற்றத்திற்குள்ளாகின்றன. பழைய வாழ்க்கைமுறை ‘சமூக நினைவாக’ மட்டும் எஞ்சுகிறது என நாவல் நிறைவு பெறுகிறது.

படுகர்களின் இடப்பெயர்ச்சியும் மலைப்புல வேளாண்மையும்

தர்ஸ்டன் குறிப்பிடுவது போல, படுகரின் இடப்பெயர்ச்சி அவர்களின் வாழ்க்கை முறையின் உட்பகுதியாகும் (ecological adaptation). விஜய நகர, திப்பு சுல்தான் ஆட்சிக் காலங்களில்  மைசூரில் இருந்து பண்டிப்பூர் காடுகளின் வழியாக நீலகிரி மலையில் வந்து குடியேறியவர்கள். மைசூர் என்பது எருமை ஊர் என்றே முன்னர் அழைக்கப்பட்டது. மரகதமலை, மூக்குமலை, மணிக்கல், தேன்மலை… போன்ற ஆறு மலைகளில் எருமை மந்தைகளை மேய்ப்பதற்கு ஏற்ப, பெயர்ந்து வாழத் தொடங்கினர். நாவலில் லிங்காயத்துப் பிரிவினர் சிலரைக் கதாமாந்தர்களாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு இடப்பெயர்ச்சி நடந்திருக்கலாம். ‘படுகர்கள் பதினாறாம் நூற்றாண்டில் மைசூர் பகுதிகளிலிருந்து நீலகிரிக்குக் குடியேறினர்’ என்கிறார் பக்தவத்சல பாரதி.

மரபார்ந்து வாழும் நிலங்களைத் தொதநாடு, மேக்குநாடு, பொராங்காடு, குந்தே என நான்கு பிரிவாகப் பிரித்துக் கொண்டுள்ளனர். அங்கு ஒவ்வொரு ஹட்டியும் பல ஹட்டிகளை இணைத்தே செயல்படுகிறது. மலை முழுவதும் பரந்து காணப்படும் திணைப் பண்பாட்டின் ஒரு வட்டார வெளிப்பாடாக ஹட்டி அமைந்துள்ளது. வேட்டை, காவல், கூட்டுறவு அடிப்படையில் அது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பரண் அமைத்து முறைக்காவல் மூலம் மந்தைகளைப் பராமரிக்கும் காவல்காரர் ஒவ்வொருவரிடமும் ஊதுகுழல், தீயை உண்டாக்கும் ஞெலி கோல் இரண்டும் உண்டு. பாரம்பரியமாகக் காடுகளில் மேய்ப்பு, வேட்டை, சிறு விவசாயம், வனவளச் சேகரிப்பு போன்றவற்றை வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டவர்கள் படுகர்கள். காலப்போக்கில் இக்கட்டமைப்பு சிதைவுறுவதை நாவல் எடுத்துரைக்கிறது.

தெய்வம் –  சடங்குகள் – திருவிழாக்கள்

படுகர்கள் காடு, மரம், மலை, ஆறு போன்ற இயற்கை வழிபாட்டைப் படையல் வைத்து வழிபடுபவர்கள். விலங்குகள், தெய்வங்கள் ஆகியவற்றை மனிதக் குழுமங்களோடு இணைத்துச் சடங்குகள், சாமியாட்டம் படுகர்களின் சமய வாழ்வின் ஒரு பகுதி. நோய், மரணம், மகப்பேறு போன்ற அனைத்துக்கும் பல்வேறு சடங்குகள் உள்ளன. சமூகத் தளத்தில், குழுவினரின் ஒற்றுமை, பெரியவர்களின் ஆலோசனை, தீர்ப்பு ஆகியவை திணைசார்ந்த வாழ்வியலை வழி நடத்துகின்றன.

ஒவ்வொரு ஹட்டியின் கீழ்ப்புறம் சிறு குடில் உண்டு. அதில் முன்னோரான ஹெத்தப்பா தெய்வமாக உறைந்துள்ளார். கோயிலுக்கு முன் விரிந்திருக்கும் சமவெளியான மைதானமே குடிகளின் பஞ்சாயத்து கூடும் இடம். கல் திட்டை ஒன்று  ஊருக்குள் நுழைபவரைப் பார்க்கும் படி அங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஹெத்தே கோவிலுக்குப் படுகர் குடியிலிருந்து நியமிக்கப்படும் பாலகன், ஒருவேளை உணவு உண்டு, கோவிலைத் தூய்மை செய்து கோவில் நிலங்களில் சிறிய அளவில் வேளாண்மை விளைவித்து, சாமி எருமைகளைப் பராமரித்துத் தன் வாழ்நாளைக் கோவில் பணியிலே கழிக்க வேண்டும். ஆமணக்கு எண்ணெயில் விளக்கும் தீப்பந்தமும் அங்கு சுடர்ந்து கொண்டிருக்கும்.

உதகை நவீனமாகும்போது குடிலாக இருந்த படுகர் கோவில் பிரமாண்டமாகக் கட்டப்படுகிறது. முன்னர்த் தீப்பந்தங்களுக்கு நடுவே பாட்டும்  குழு நடனமும் நடந்த இடங்களில் புராணங்களும் பஜனைகளும் நடக்கின்றன. தோரணங்களும் காந்த விளக்குகளும் நாடக மேடையும் கலைக்கோஸ்டிகளும் எனக் கோவில் நவீன மேல்நிலையாக்கம் பெறுகிறது. சைவப் பூசைகளும் வைதீக வழிபாடுகளும் மேலெழுகின்றன. வட்டாரச் சிறு மரபுகள் பின்நகர்ந்து பெருநெறி மரபுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

படுகர்களின் முக்கியச் சடங்கு திருமணச் சடங்காகும். ஆவணி நன்னாள் கோத்தர்கள் இசையை முழங்குகின்றனர். முதிய பெண் “குடத்தில் இருந்து ஒழுகும் நீர் போல் வழி வழி வரும் இக்குடும்ப வளர்ச்சியை ஏற்றுக் கொள்வாயாக“ என்று நீரை மணப்பெண்ணின் கைகளில் மும்முறை வார்த்து வாழ்த்துகிறார். கம்பளி விரிப்பில் மணமக்கள் அமர்ந்து புது வட்டிலில் பால் பருகிக் குடும்ப வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். புதுக்குடம் ஒன்றை மாப்பிள்ளையின் சகோதரி கொடுக்கப் பெண்கள் புடை சூழ மணப்பெண் அருவிக்கு நீர் எடுக்கச் செல்கிறாள். ஆண்கள் பால் மனையில் பால் பீச்சத் தொடங்கும் சடங்கிற்கு இணையானது இது. பாருவிற்கு இச்சடங்கு நடக்கிறது. மதுரை உசிலம்பட்டி வட்டாரங்களில் புது மணத் தம்பதியினரைக் கிணறு பார்க்க அழைத்துச் செல்லும் வழக்கம் முன்பு உண்டு. மணப்பெண் வெற்றிலை, வேப்பிலை ஏதாவது ஒன்றைக் கிணற்றில் போட்டு வணங்குவாள். நீர் இறைக்கும் கடகாவில் மணப்பெண் தண்ணீர் எடுத்து ஊற்ற மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் தண்ணீரைக் கையில் வாங்கிப் பருகுவார்கள். காவல் கோட்டம் இதைப் பதிவு செய்துள்ளது. இனக்குழுக்களில் நீர், வளமையின் குறியீடாகும்.

எருமை மந்தை – பால்மனை – நம்பிக்கைகள்

எருமை நீலகிரியின் அடையாளம். தோடர், படுகர் சமூகங்களின் குலகுறிச் சின்னம். ஒவ்வொரு ஹட்டியும் நூற்றுக்கணக்கான எருமை மந்தைகளை உள்ளடக்கியது. “ஆயிரம் பொன் கொடுத்துப் பெண் கேட்பவரை விட ஆயிரம் எருமைகள் வைத்துப் பெண் கேட்பவர் ஹட்டியில் மதிப்புமிக்கவர்”. நீலகிரியில் பாதிரியார் ஒருவர் தோடர்கள் முன்னிலையில் இந்தியா வந்திருந்த வேல்ஸ் துரையின் மதிப்பை எடுத்துரைக்கும் பொருட்டு அவரின் புகைப்படத்தைக் காட்டி “அவர் மிகப்பெருஞ்செல்வர். அவர் போகுமிடமெங்கும் இரு நூறு பணியாளர்கள் உடன் செல்வர்”என்றாராம். முதிய தோடர் ஒருவர் “அதெல்லாம் சரி அவரோடு எத்தனை எருமைகள் வரும்னு சொல்லுங்க”?எனக் கேட்டாராம். எருமையுடன் ஒப்பிட்டுத்தான் வேல்ஸ் துரையே நீலகிரியில் மதிப்பு பெறுகிறார். ‘அண்ணல் ஏறு’ என்றும் ‘அணிநடை எருமை’ என்றும் எருமைக்குப் புகழ் தந்த சங்க இலக்கியத்தின் நீட்சியை நீலகிரிப் பழங்குடிகளிடம் காணமுடிகிறது.

எருமை மந்தைகள் அடையும் தொழுவம் பால் கூடம் எனப்படுகிறது. பால் கறக்கும் நேரம் புனிதமானது. தெய்வத்தை வழிபடும்போது கடைபிடிக்கப்படும் புனித விதிகள் அனைத்தும் பால் மனையிலும் உண்டு. பால் மனைக் கொட்டிலுக்குள் மூங்கில் குழாயில் (ஹொனா) கரந்த பாலை, பெரிய மண்பானைகளில் ஊற்றித் தலைச்சுமையாக மற்றொரு இடத்திற்கு மாற்றுகின்றனர். நூற்றுக்கணக்கான மாடுகளில் பால் கறப்பதற்கு ஏற்பப் பன்னிரண்டு வயதில் வலது தோள்பட்டையில் சூடு போட்டு வலிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்குகின்றனர்.

ஹட்டியில ஒரு சிறுவன் இளைஞனாக மாறும் போது பால் கறக்கும் சடங்கு அவனுக்குச் செய்விக்கப்படுகிறது. இளைஞனாக ஒருவன் அங்கீகாரம் பெறும் நிகழ்வு. திருமணம் உள்ளிட்ட புதிய வாழ்வுக்கு இது இட்டுச் செல்லும். பால்மனையில் ஊர் மக்கள் கூடிப் பொங்கல் வைத்துப் பூசை செய்கின்றனர். ஹட்டியின் பெரியவர் ஹொனெயில் பால் பீய்ச்சி அதை வீடு முழுவதும் தெளித்து, இளைஞனிடம் அதைக் கொடுக்க, அவன் பால் மடியை வணங்கிப் பால் கறக்கத் தொடங்குகிறான். ரங்கனுக்கு இச்சடங்கு பெரும் விமரிசையாகச் செய்யப்படுகிறது. “காரி எருமையைக் குளிப்பாட்டி மணிகள் கட்டி ஹொனே வைத்து ரங்கன் புதிய உள்ளாடையும், மேலாடையும் பூண்டு மகாலிங்கேஸ்வரரை வணங்கிப் பால் பீச்சத் தொடங்கினான்(ப.61)என்கிறது கதையாடல்.   இரத்த உறவுடைய குடிஅமைப்பில்(lineage)இளையோரைக் குடியின் பாரம்பரியத் தொழிலை ஏற்றுக்கொள்ளச் செய்யும் இச்சடங்கு, குடியின் உற்பத்தியையும் குலமுறையின் அமைப்பையும் உறுதிப்படுத்துவதோடு குடியைக் கிளைத்துப் பெருகச் செய்கிறது.

பிறந்த குழந்தைக்கு எருமையின் பாலைச் சேனையாகத் தொட்டு வைக்கின்றனர். எருமைக்கு உடல் நோவோ, புலி அடித்தாலோ, சரிவுகளில் உருண்டு கால் ஒடிந்தாலோ அக்குடும்பத்திற்குக் கெட்ட காலம் தொடங்குகிறது என நம்புகின்றனர். இறந்து கொண்டிருப்பவரின் வாயில் நெய்யில் தோய்த்த மஞ்சள் துண்டை வைத்துப் பால் ஊற்றுகிறார்கள்(ப.198). மணமக்கள் பால் தெளிப்பதும் பருகுவதும் முதல் செயல். பிறப்பு, திருமணம், இறப்பு எல்லாவற்றிலும் எருமையின் பால் புனிதப் பொருளாக இடம் பெறுகிறது. பால் என்பது பால்வரை தெய்வமாகக் குடிகளிடம் மதிப்பு பெறுகிறது.

இரவில் குடும்பத் தலைவன் வீட்டின் நடுவில் அமர்ந்துவிட்டால் அவருக்கு முன்பு மிகப்பெரிய தட்டில் உணவு வைத்துக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து அதே தட்டில் உண்பர். முக்கிய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடு அது. பால் மதிப்புறு பொருளாக அங்கு இடம் பெறுகிறது. குடும்ப  முறையும் சமூக அமைப்பும் ஆண் மையம் சார்ந்தும் தந்தைத் தலைமையை முன்வைத்தும் இயங்குகிறது. பால் மனையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்பளிகள் தோடர், படுகர் குடிகளின் முக்கிய அடையாளம். வெள்ளை பெண்களுக்கு, சிவப்பு இளைஞர்களுக்கு, கறுப்பு முதியவர்களுக்கு என மூன்று வண்ணங்களில் பயன்படுத்துகின்றனர்.

இறப்புச் சடங்குகள் : வீரராயப் பணமும் ஏழடுக்குச் சப்பரமும்

இறப்புச் சடங்கில் பாடை கட்டும் முறை இறந்தவரின் மதிப்பையும் அவர் சார்ந்த சமூகத்தையும் அடையாளப்படுத்துகிறது. படுகர்களின் தனித்துவம் ஏழடுக்குச் சப்பரம். தமிழகத்தில் வேறு குடிகளிடம் காணமுடியாத ஒன்று. பகையாளிகளும் தவறாது கலந்து கொள்வர்.  லிங்கையாவின் இறந்த உடலை ஏழடுக்குச் சப்பரப் பாடையில்  வைத்துக் கொண்டு செல்கின்றனர். மூங்கில் கழிகளும் நீண்ட பிரம்புகளும் மலைக் குச்சிகளும் கொண்டு பாடை உருவாக்கப்படுகிறது. வண்ண வண்ணத் துணிகளாலான ஆறு அடுக்குகளும் மலைப்பிரம்புகளில்  கருப்பு மண்டபம் போன்றதோர் அடுக்குமாகப் பாடை செய்யப்படுகிறது. அதைச் சுற்றி நின்று படுகர்கள் பாரம்பரிய நடனத்தைக் கைகோர்த்து ஆடுகின்றனர். கோத்தர்கள் இசைக்கின்றனர். இறந்தவரின் நெற்றியில் இரு வெள்ளி ரூபாய்களை ஒட்டி, தானியம், வெல்லம்,  மாவு, அரிசி, கடலை, புகையிலை போன்றவற்றைப் பாடையில் வைக்கின்றனர். தீங்குகளைத் தவிர்க்கவும் பயிர்கள் முளைப்பது போன்று இறந்தவர் முத்தி பெறவும் ஆற்றல் வாய்ந்ததாகத் தானியம் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை இறந்தவர் மோட்ச உலகில் உண்பதற்காக வைக்கப்படுபவை. மூக்குமலையைச் சார்ந்த மாமன் முறைக்காரர்கள் பணியாரங்களைக் கூடைகளில் கொண்டுவந்து இறப்பு வீட்டில் அனைவருக்கும் தருகின்றனர்.

மன்னிப்பு வேண்டி இறந்தவரின் சார்பாகப் படுக மொழியில் ஒன்றைப் படிக்கும் வழக்கம் படுகர்களின் மரணச் சடங்குகளில் முக்கியமான நிகழ்வாகும். இயற்கையிடம் இனக்குழுக்கள் தங்களை மீண்டும் ஒப்படைக்கும் பண்பாட்டுச் செயல். இறந்தவர் சார்பாக மன்னிப்பு  வேண்டுவது இயற்கைக்கு நன்றி பாராட்டும் சடங்காகும். குடியில் ஒருவர் இறந்து விட்டால் வீரராயப் பணம் கொடுப்பது படுகர்களின் வாடிக்கை. நவீனத்துவம் வர மதிப்பு குறைவாக அது பார்க்கப்படுகிறது.லிங்கையா இறந்தவுடன் ஜோகி வீரராயப் பணம் கேட்டு, ஹட்டியில் வலம் வருகிறான். படித்தவர்கள் இதை மறுக்கின்றனர். இறப்பு ஊர்வலத்தில் மாற்றுக் கருத்துகள் உருவாகின்றன. கிருஷ்ணன் சடங்குகளில்  செலவைக் குறைக்க வேண்டும் என்கிறார். பாரம்பரியம் மறுக்கிறது. நவீனமும் மரபும் மோதுகின்றன. குடிகள் பிரிகின்றன. ஈமச்சடங்கு செய்து வந்த கோத்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைகிறது. குழு இசை நிற்கத் தொடங்குகிறது. மூன்று நண்பர்களுக்கு இடையேயான பழைய திருமணப்பகை மீண்டும் மூர்க்கமடைகிறது. ரங்கன் பாருவுடன் கிருஷ்ணனைத் தொடர்புபடுத்திப் பேசி, கைம்பெண் கௌரியுடன் வாழ்கிறான். காலம் ஹட்டிக்குள் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துகிறது. ஒரு இனக்குழுவின் உறவுகளும் கால்வழிக் குழுவினரும் தங்களைச் சடங்குகளில் அதிகாரம்மிக்கவர்களாக வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

படுகர் – தோடர் – கோத்தர் – குறும்பர் – உறவும் விலகலும்

படுகர்களின் விவசாயம், தொழில், சடங்கு எனப் பண்பாட்டு வெளிகளில் பயணிக்கும் அண்டைச் சமூகத்தினராக, தோடர், குறும்பர், கோத்தர் ஆகியோர் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சமூகங்களாக (symbiotic social system) நாவலில் இடம் பெறுகின்றனர். நாவலின் பின் பகுதியில் ஆங்கிலேயர்கள், மலையாளிகள், கிறித்தவர்கள், நிலவாழ்க்குடிகள் மலைக்குள் வரப் படுகர்களுக்கும் மற்றமைகளுக்குமான தொடர்புகள் சிறிது பேசப்பட்டுள்ளன. இதைப் புனைவு விரிவாகவே எடுத்துச் சென்றிருக்க முடியும்.

தமிழ்நாட்டுப் பழங்குடிகளில் வரைகலைத் தொழில்நுட்பத்தில் திறன் பெற்றவர்கள் குறும்பர்கள். மலைகளில் வாழும் தொல்குடிகள்.  உருவங்கள் வரைந்து அதன் மீது சூனியம் வைப்பவர்கள் என்று படுகர்கள் நம்புகின்றனர். இதை அயல்குழுவினரின் பார்வையாக எடுத்துக் கொள்ள முடியும். நீலகிரியின் பெரும்பான்மையான நிலம் ஆதியில் தோடர், கோத்தர், குறும்பர் ஆகியவர்களிடம் இருந்தது ; அது படுகர் வசம் மாற்றப்பட்டது ; குறும்பர்களுக்குக் காணிக்கையாகப் பணம், தானியம், தரிசு நிலம்  கொடுத்துச் சமரசம் செய்து கொள்கின்றனர் படுகர்கள் என்கிறது நாவல். அதனால் குறும்பர்களின் மந்திரச் சொல் கேட்டு நடக்க, அவர்கள் குறித்து அச்சம் படரப் படுகர்கள் வாழ்வதாக நாவல் புனைந்துள்ளது. காட்டுக் குறும்பர்கள் ‘ஏவல் காய்ச்சல்’ ஒன்றைப் படுகர் குடிகளில் ஏவி விடுவதாக நம்பி, அவர்களிடம் காணிக்கை வைத்து மருந்து பெற்று அக்காய்ச்சலை முறிக்கின்றனர். லிங்கையாவிற்கு ஏவிவிடப்பட்ட காய்ச்சலை ஜோகி, குறும்பர் குல மூதாதையரை வணங்கிக் காணிக்கை வைத்துத் தாயத்தும் வேரும் வாங்கி வந்து தந்தையைக் காப்பாற்றுகிறான். குறும்பர் தலைவன் ‘ஜடச் சாமி’ யையும் மூதாதையரையும் வணங்கி அவற்றைத் தருகிறார். தொன்மக் கதைகளும் அரூப நம்பிக்கைகளும் இனக்குழுக்களை மறைநிலையில் இயக்குகின்றன.

கோத்தர்கள் கைவினைத் தொழில் செய்வதில் வல்லவர்கள். தோட்டக்காரர்களுக்கு இரும்பாலான கருவிகளைக் கோத்தர்கள் செய்து தருகின்றனர். படுகர்களின் வாழ்வில் நடைபெறும் சடங்குகளில் இசை ஊழியம் செய்பவர்கள் கோத்தர்கள். பிறப்பு, திருமணம், வழிபாடு, இறப்பு போன்ற சடங்குகளை முன்னெடுத்து நடத்துகிறார்கள். நீலகிரியில் வாழும் படுகர்களோடு சமூகப் பண்பாட்டு நெருக்கம் கொண்டவர்களாகக் கோத்தர்கள் காணப்படுகிறார்கள்.

படுகர்களுக்கும் தோடர்களுக்கும் வேளாண்மையின் பொருட்டுப் பரஸ்பர உறவு உண்டு. குளிரைத் தவிர்க்கும் பொருட்டு வட்ட வடிவிலும் கூம்பு வடிவிலும் புற்களால் ஆன வாழிடத்தை அமைத்து வாழும் தோடர்களின் குடியிருப்பு மந்து என்று அழைக்கப்படுகிறது. “வளைந்து செல்லும் குன்றுகளில் நடுவில் வளைவான குறுகிய பொந்து போன்ற வாயில்களுடன் கணகப் புல்லால் செய்யப்பட்ட குடிசைகளில் தோடர்கள் வாழ்ந்து வருகின்றனர்”(ப.71)என்கிறது நாவல். “தோடர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த கிராமத்தை “ஒத்தைக்கல் மந்து” என்று அழைக்கப்பட்டு, அதுவே ஆங்கிலத்தில் உதகமண்ட்(ootagamund) என்று மருவி உதகமண்டலமானது” என்கிறார் பகத்சிங். படுகர்கள் தங்களின் தேயிலை நிலம், புதிய பொருளாதாரம், நவீன அமைப்பார்ந்த வாழ்வுமுறை போன்றவற்றால் பிற இனக்குழுக்களிலிருந்து தங்களை மேலானவர்களாகக் கூம்பு நிலையில் தரப்படுத்திக் கொள்கின்றனர். நீலகிரியைச் சேர்ந்த குடிகளில் நல்ல நிறம் உடையவர்கள் படுகர்கள். இயற்கைச் சூழலில் சமநிலையை மலைவாழ் குடிகள் பாதுகாத்து வந்த நிலையில் நகர, நாகரிகக் குடிகள் அதை மாற்றி அமைக்கின்றன. மலைவாழ் குடிகளின் இயல்பான நடத்தைகளின் மீது நிலவாழ்ச் சமூகங்களின் பண்பாடு கட்டமைக்கப்படுகிறது.

 “கன்றுக் குட்டியின் இறைச்சி இருந்த பானையைத் தோடர்களுக்கும் எருமைக் கடாவின் இறைச்சி இருந்த பானையைக் குறும்பர்களுக்கும் எருமையின் இறைச்சி இருந்த பானையைக் கோத்தர்களுக்கும் காமடராயர் தெய்வம் தந்ததாகத் தொன்மக்கதை கூறுகிறது”. இம்மூன்று குடிகளுக்கும் இத்தொன்மக் கதை வழி நல்லுறவு தொடர்கிறது. ஆக இனக்குழுக்கள் சாதியாகத் திரள்வதற்கான முந்தைய வடிவங்களில் பின்பற்றும் மரபார்ந்த பண்பாட்டு உடன் படிக்கைகளாக இவற்றை நாம் கருதலாம். “சாதி அமைப்பு தோன்றுவதற்கு முந்தைய வடிவம் என ஊகிப்பதற்கு உரிய ஒரு முன் வடிவம் நீலகிரிப் பழங்குடிகளிடம் இருந்தது. அது இந்தியாவில் எங்கும் காணமுடியாத ஒன்று” என்கிறார் பக்தவத்சல பாரதி. கதையின் பல இடங்களில் தோடர், படுகர் இருவரையும் வேறுபாடு அறியாது ஆசிரியர் எழுதியிருப்பதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாகப் பால் மனை, புத்தரிச் சடங்குகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கிறித்துவமும் மருத்துவமும்

தேயிலைத் தோட்டங்கள் பரவிய பிறகு ஹட்டிகளில் விவசாய நிலங்களின் விலை அதிகரிக்க உறவுகளுக்கிடையே நிலம் சார்ந்த மோதல் தீவிரமடைகிறது. நிலங்களுக்கு எல்லைக்கல் வருகிறது. சிலர் அப்புறப்படுத்த, ஊமைக்கலகங்கள் நேரடிக் கலகங்களாக மாறுகின்றன. காவல்நிலையம், நீதிமன்றம் என இனக்குழு நகர்கிறது.

ஹட்டியில் காணப்பட்ட கூட்டு உழைப்பு, கூட்டு உணவு, கூட்டுச் சடங்குகள் கலைந்து தனிநபர் வாழ்வு முறைகள் துளிர்க்கின்றன. கதிர் அறுப்புத் திருவிழா கைவிடப்படலாயிற்று. அவரவர் தேவைக்கேற்பக் கதிர் அறுக்கின்றனர். உடல்நலம் குன்றியவர்களை நகரத்தின் மருத்துவமனைக்கு முன்னர் எப்போதாவது குதிரையில் அழைத்துச் செல்வர். தற்போது ஆங்கிலேய மருத்துவம் வாடிக்கையாகிவிட்டது. ஹட்டிக்குள் காலரா பரவுகிறது. குடில்களுக்குள் எலிகள் செத்து விழுகின்றன. குடில்கள் எரிக்கப்படுகின்றன. ஊரைக் காக்கும் பாறையடி மாரியம்மனுக்குச் சேவல் வாங்கிப் பலி கொடுக்கிறது, மூத்த தலைமுறை. இளைய தலைமுறை, கிருஷ்ணன் தலைமையில் அனைவருக்கும் தடுப்பு ஊசி போடுகிறது. இரண்டு குழுக்களும் மோதுகின்றன. கத்தோலிக்கத் துறவி “வுட்“(வெள்ளை கிழவி) மலை முழுவதும் பயணிக்கிறார். தடுப்பு மருந்துகளை விநியோகிக்கிறார். இனக்குழுக்களில் சிலர் மதம் மாற்றும் முயற்சி என்கின்றனர். காலனியம் நோய்களுக்கு மருத்துவம் எனத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. ஹட்டி சிலகாலம் மூடப்படுகிறது.

ஹட்டிப் பெண்கள் நவீன ஆடை உடுத்தும் வழக்கத்திற்கு வருகின்றனர். நாவலில் பெண் கதாமாந்தர்கள் கடும் உழைப்பாளிகளாக, மறு திருமணம் செய்யக் கூடியவர்களாக, விவசாயத்திறம் மிக்கவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். மாதி, பாரு, கிரிஜா, ரங்கம்மை, ருக்மணி, கௌரி, விஜயா ஆகிய பெண் மாந்தர்கள் தனித்துவமாக நிற்கின்றனர். கைம்பெண் மறுமணம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. தாய் வழிச் சமூக மரபைப் பின்பற்றும் படுகரிடத்தில் பெண்கள் குடிகளின் ஒற்றுமையை, நிலங்களைக் காப்பவர்களாகத் தன்னலம் கருதாத தியாகத்தைச் செய்பவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளைக் கொடியும் செங்கொடியும்

தேயிலைத் தோட்டப் புதுப் பணக்காரர்கள், பாரம்பரிய வேளாண்மை செய்து வரும் நிலக்கிழார்கள், கூலித்தொழில் செய்யும் ஏழைகள் என வர்க்க முரண் ஹட்டியில் கால்கொள்கிறது. ஒரே இனக் குழுவிற்குள் வேற்றுமைகள் தோன்றுகின்றன. கார வீடுகள், ஓட்டு வீடுகள், புல் வேய்ந்த குடிசைகள் என ஹட்டி வேறுபட்டுக் காட்சியளிக்கிறது. தன்னலங்கள் பெருகுகின்றன. ஹட்டி, மந்து, ஊர் முதலாளியப் பொருளாதார உற்பத்தி முறைக்கு மாறுகிறது. படுகர்களில் பலர் தகவமைத்துக் கொள்கின்றனர். தோடர், இருளர்,கோத்தர், குறும்பர் ஆகிய இனக் குழுக்கள் அதற்கு மாற இயலவில்லை. இவர்களின் குறைவான எண்ணிக்கையும் முக்கியக் காரணம். ஊட்டி மலைக்குத் தொடர்வண்டி வருகிறது. மலையாளம் பேசும் நாயர் கடைகள் பரவுகின்றன. கிராம் போன் அங்கெல்லாம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஊட்டியில் ஹெல் வியூ மாளிகையில் பலர் வேலைக்குச் சேர்ந்தனர். பலர் ஓட்டுநர்களாக மாறினர். சரக்குந்துகள் மலைகளுக்கு வந்து மரங்களை வெட்டி அள்ளிப் போகின்றன. ரங்கம்மையின் புதல்வனையே லாரி ஓட்டுநராக்கியிருக்கிறது முதலாளியம். கோவில் இசை, சாவுச் சடங்கு செய்து வந்த கோத்தர்களைப் புதிய மேட்டிமைத் திரள் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கிறது. மலையாளச் சீமையிலிருந்தும் கொங்குச் சீமையிலிருந்தும் பலர் நிலங்களை விலைக்கு வாங்குகின்றனர். மலைகளுக்கு வந்து பணப் பயிர் விவசாயத்தின் மூலம் பொருளாதார அதிகாரம் பெற்ற புதிய உடைமையாளர்கள் அரசின் அதிகாரத்தையும் பொதுச் சொத்துகளின் மீதான அதிகாரத்தையும் மலைகளில் உள்ள பொது வெளிகளையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதனால் மலைவாழ்க் குடிகள் பிற சமூகங்களைச் சார்ந்து வாழும் பகுதிச் சமூகங்களாக  மாற்றப்படுகின்றனர்.

கிருஷ்ணன் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கிறான். கதர் கொடி ஏந்தி வெள்ளையனே வெளியேறு  முழக்கம் மலைகளில் எதிரொலிக்கிறது. நாடு சுதந்திரம் அடைகிறது. முதல் தேர்தல் வருகிறது. மக்கள் இனம், வர்க்கம், சாதி அடிப்படையில் திரள்கின்றனர். எஸ்டேட் தொழிலாளர்கள் பல்வேறு உரிமைகளைக் கோரிச் செங்கொடி ஏந்திப் போராடுன்றனர். இடதுசாரித் தொழிற்சங்கங்கள் இவற்றை ஒருங்கிணைக்கின்றன. கிருஷ்ணன் காந்திய வழியில் நவீனத்துவத்தை எதிர்கொள்கிறான். ரங்கன் ஆங்கிலேயர்களின் பிரதிபிம்பமாக  மாறிக் காடுகளை அழிக்கிறான். காலனியம் ரங்கனைச் சுரண்டல்வாதியாக, கிருஷ்ணனைக் காந்தியவாதியாக, ஜோகியை மரபு வாதியாக என மூன்று புள்ளிகளில் கட்டமைக்கிறது. மரபும் பழமையும் நவீனமயமாதலும் ஒன்றாகக் கலந்த “கலப்பு நவீனத்துவம்”(hybrid modernity) மலையகத்தில் பரவுகிறது. இந்திய நவீனத்துவம் என்பதே சாதி, மதம், இனம் உள்ளடக்கிய ஒன்று என்பதைக் கதை நிகழ்வுகள் காட்டுகின்றன.  படுகர் இனக்குழுவின் வாழ்வில் நவீனமயமாதல் ஏற்படுத்தும் சமூகப் பண்பாட்டுப் பொருளாதார மாற்றங்களை வரவேற்கும் ராஜம் கிருஷ்ணன் காடழிப்பு, சூழல் மாசுபாடு, முதலாளிகளுக்காக மாற்றப்படும் நிலங்கள் போன்றவற்றை விமர்சித்துள்ளார்.

கவுடர்களும் படுகர்களும்

கிருஷ்ணன், ரங்கன், ஜோகி, பாரு அனைவரும் முதிர்வயதை அடைகின்றனர். மருத்துவர் அர்ஜுன் நர்சிங் இல்லம் ஒன்றை ஹட்டியில் தொடங்குகிறார். சிலர் அமெரிக்கா செல்லத் தொடங்கினர். ஜோகியின் மகன் நஞ்சன் பொறியியல் படித்துப் பைக்கார மின் நிலையத்தில் பணிபுரிகிறான். அவனும் கரியமல்லரின் பேத்தி விஜயாவும் காதலிக்கின்றனர். மூத்த எதிரிகளின் இளைய தலைமுறை பாரம்பரிய முரண்களைக் கைவிட்டுக் காதல் கொள்கிறது. விஜயாவும் நஞ்சனும் பழனியில்  திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடுகின்றனர்.

காடுகள் அழிப்பு, நிலம் மறுப்பு போன்றவற்றிற்கு எதிரான போராட்டம்  சுதந்திர இந்தியாவில் மலைகளில் ஒலிக்கத் தொடங்கின. நகர்மயமாதல், நவீனமயமாதல் ஆகியவை மேய்ச்சலுக்கும் கிராம வேளாண் உற்பத்திக்கும் தடையாக அமைகின்றன. பணப் பயிர்கள் நில உடமையை மட்டுமல்ல பொருளாதாரக் கட்டமைப்பையும் மாற்றிச் சாதியமைப்பை மேல் நோக்கி நகர்த்துகிறது. கிருஷ்ணக் கவுடர், ஜோகிக் கவுடர், ரங்கக் கவுடர் எனச் சாதியாக மாறி நிற்கத் தொடங்குகிறது ஒரு இனக்குழு. ஒரு இனக்குழு நாடோடிச் சமூகம் – மேய்ச்சல் சமூகம் – விவசாயச் சமூகம் – நிலவுடைமைச் சமூகம் – சாதியச் சமூகம் என்று மாறிச் செல்வதைக் கதை நிகழ்வுகள் மூலம் காட்டியிருப்பது நாவலின் பலம்.

நிறைவாகச் சில …
கால மாற்றத்திற்கேற்பப் புதிய புதிய சூழல்களை இனக்குழுக்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள்? அதற்கேற்ப எப்படித் தகவமைத்து இயங்குகிறார்கள்? அவர்களின் நடத்தைகள் எப்படி மாற்றம் அடைகின்றன? மனிதத் திரள் தன்னலத்திற்காக இயற்கையை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை மலைகளில் வாழும் இனக்குழுக்களைச் சுற்றி ராஜம் கிருஷ்ணன் எழுதியிருப்பது குறிஞ்சித் தேனின் தனித்துவம். கதைப் பரப்பு ஒற்றைத் தீர்வை நோக்கி நகராமல் வெவ்வேறு சாத்தியங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது சிறப்பு. புனைவின் மீதும் அல்புனைவின் மீதும் வாசகன் மாறிப் மாறிப் பயணிக்கும்படி ஆவணப்புனைவுத் தன்மையில் நாவல் அமைந்துள்ளது. நகர வாழ்குடிகளின் புலமை சார்ந்த மொழிப்பயன்பாடு ஆங்காங்கே விரவி வருகிறது. தோடர், படுகர் வேறுபாடற்று ஒரே குழுவினராக நாவலின் சில பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. நீலகிரியின் முக்கிய இனக்குழுவான இருளர்கள் நாவலில் இல்லை. முன்னர் எருமைக் கிடாய் பலிகள் கொடுக்கப்பட்டதை அகத்தாரான பேரா.ஜோகி குறிப்பிடுகிறார். அது நாவலில் இல்லை. மாந்தர்களிடையேயான காதல், பாலியல் விழைவு  தவிர்க்கப்பட்டிருக்கின்றன. குறிஞ்சியின் உரிப்பொருளை நாவல் கண்டுகொள்ளவில்லை. அகத்தார்களான சதீஷ் எழுதிய ‘கத்தலே’, ஜோகி எழுதிய மாதி (பரிசல் வெளியீடு) மலையில் ஒரு நகரம் உருவாகும் விதம் குறித்துச் சுகுமாரன் எழுதிய வெல்லிங்கடன் (காலச்சுவடு) ஆகிய மூன்று நாவல்களையும் நீலகிரியின் திணைசார்ந்த வாழ்வைப் புரிந்து கொள்ளக் குறிஞ்சித்தேனின் மாற்றுப் பிரதிகளாக வாசிக்கலாம்.

பயன்பட்ட பிரதிகள் :

ராஜம் கிருஷ்ணன், குறிஞ்சித்தேன்,சோழன் வெளியீட்டகம்,சென்னை -42, 2023.

பக்கதவத்சல பாரதி(தொ.), தமிழகத் தொல்குடிகள், அடையாளம், புத்தாநத்தம்.

முனைவர் கோ.சுனில் ஜோகி, படகர்களும் எடடயும் ஒடெயும், கைப்பிரதி – ஆய்வுக் கட்டுரை

எட்கர் தர்ஸ்டன், தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

சி.மகேஸ்வரன், பண்பாட்டு ஆய்வியல், பாரதி புத்தகாலயம், சென்னை.

அ.பகத்சிங், வாழும் மூதாதையர்கள், உயிர் பதிப்பகம், சென்னை.

பிலோ இருதயநாத், நீலகிரி படகர்கள், மல்லிகை பதிப்பகம், சென்னை, 1965
 கே.ஏ.குணசேகரன்,  நீலகிரி மலையின மக்கள் ஆட்டங்கள், ப.3, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Gareth Davey,   Identity and quality of life among Badagas in South India
with reference to rural-to-urban migration and new media –    A thesis submitted in partial fulfilment of the requirements of the University of Kent for the degree of Doctor of Philosophy,  April 2016.

Vennila sri,    The Broken promish To Nature ; A Study of Rajam krishnas’s When the kurinjiBlooms,Literary Endeavour – Vol. X; 3, May, 2019.


(இராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு விழாவை சாகித்ய அகாதெமியும் அருள் ஆனந்தர் கல்லூரியும் இணைந்து 3, 4.09.25 ஆகிய தேதிகளில் கருமாத்தூரில் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Image From : storytel

ந. இரத்தினக்குமார்
ந. இரத்தினக்குமார்

நவீன இலக்கியம், பின்காலனியம், இனவரைவியல், பண்பாட்டியல் ஆகிய புலங்களில்
ஆர்வம் மிகுந்தவர். மதுரையில் வசிக்கிறார்.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (5)
  • கட்டுரை (106)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (19)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • நீதிமணி கதைகள்

    நீதிமணி கதைகள்

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026
  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (19)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (5)
  • கட்டுரை (106)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top