Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

ஏமாந்தவர்கள்

மாரி.கிருஷ்ணமூர்த்தி .
மாரி.கிருஷ்ணமூர்த்தி .
October 1, 2025
ஏமாந்தவர்கள்

எது அவனை அங்கு கூட்டிப்போனது என்று யோசித்துப் பார்க்கிறேன். திறமை மீது அவநம்பிக்கை ஏற்படும் போது தன்னை நிரூபிக்க அவனே போட்டுக் கொண்ட வலை அது. அது இழுக்க இழுக்கக் கீழே கொண்டு போகும் சுழல் மாதிரி சேட்டுவும் அவன் சினிமாக் கனவும் போய்க்கொண்டிருந்தன.

நாங்கள் கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கும் போது மணி ஆறைத் தொட்டிருந்தது. லேசான மழைத் தூற சுற்றிலும் நிதானமாக ஆட்கள் உள்ளே வந்துகொண்டிருந்தனர். சேட்டு மட்டும் ரயிலைப் பிடிக்க ஓடுவது போல அங்கும் இங்கும் நடந்தபடியே போனில் பேசிக்கொண்டிருந்தான். தொடர்ந்து அவனுக்கு யார் யாரோ போன் பண்ணிக்கொண்டிருந்தார்கள். நான் அங்கிருக்கும் ஒரு சிமெண்ட் திண்டில் உட்கார்ந்து பிரபஞ்சனின் நாவலை  வாசித்துக்கொண்டிருந்தேன்.

மச்சி அட்ரஸ் கிடைச்சிடுச்சி வா போகலாம் என்று பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே இருக்கும் ஆட்டோ ஸ்டேண்டுக்குக் கூட்டிப் போனான். மச்சி இது மட்டும் செட்டாயிடுச்சின்னா இன்னும் ஒரு வாரத்துல ஆபீஸ் போட்டுடுவேன்டா அப்புறம் நடிகர்கள் தேர்வு, லொகேஷன், ஷீட்டிங்குன்னு மூனு மாசத்துலப் படத்தை முடிச்சிடுவேன்டா நீ மட்டும் கொஞ்சம் ஒத்துழைத்தா மத்த காரியம் எல்லாம் ஈசியா முடிஞ்சிடும்டா.

சேட்டு ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு படத்தில் துணை இயக்குநராக வேலைசெய்வதாகச் சொல்லி சென்னைக்குப் போயிருந்தான். எனக்கும் அவனுக்கும் பள்ளிப்பருவ நாட்களில் இருந்து பழக்கமிருந்தாலும் அவனுக்குள் சினிமா ஆசை இருப்பது அப்பொழுதான் எனக்குத் தெரிந்தது.

அதற்கு முன்பு வரை எங்கள் ஊரில் இருக்கும் ஒரு பெரும் புள்ளிக்குக் கார் ஓட்டுநராக இருந்தான். ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அரசியல், பெரிய ஆட்களுக்கு பைனான்ஸ் என அவர் இருந்தாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவன் ஒரு நாள் நான் வேலையை விட்டுட்டேன் மச்சி அந்த ஆள் எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு கூத்தியா வீட்டுலேயே இருக்கிறான். அவ பொண்டாட்டிக்குப் பொய்சொல்லி மாளமுடியல இப்ப என்னடான்னா புசுசா சினிமாக்காரிங்க சகவாசம் வேற அதனாலதான் வேலையை விட்டுட்டேன் என்றான்.

ஆட்டோ புறநகர்ப் பகுதிக்குப் போனது. ஆட்டோவைத் தெருவின் முனையிலேயே நிறுத்திவிட்டு யாருக்கோ போன் பண்ணினான். அவர்கள் இரண்டு மணிநேரம் கழித்து வரச் சொல்ல ஆட்டோவை அனுப்பிவிட்டுப் பக்கத்தில் இருந்த முருகர் கோயிலுக்குப் போயிருந்தோம். ஆளரவமற்ற சிறு குன்றின் மேல் இருந்த மலையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தார். சேட்டு பயபக்தியுடன் கைப்பையிலிருந்து ஒரு பேப்பர் கட்டை எடுத்தான். அதை முருகர் காலடியில் வைத்துக் கும்பிட்டான்.

என்ன மச்சி இது என்றேன், இதுதான் மச்சி என் படத்தோட ஸ்கிரிப்ட் என்றான்.

நான் வாங்கி சும்மா புரட்டிப் பார்த்தேன். நான்கு ஐந்து பக்கங்கள் போயிருக்கும் கதையில் யார் யாரோ வந்தார்கள் யார் யாரோ அடித்துக்கொண்டார்கள். அதற்கு மேல் படிக்க முடியாமல் மடித்து அவனிடமே கொடுத்து விட்டேன். உன்னைப் பத்தியும் ஒரு கேரக்டர் இருக்கு மச்சி என்றான். நான் ஆவலாகக் கதை கேட்கத் தயாரானேன். படத்துல அவன்தான் முக்கியமான ரோல். அந்த ஊரிலேயே அவன்தான் நிறைய புத்தகம் படிக்கிறவன். அந்த ஊர்ல எந்தப் பிரச்சனையின்னாலும் அவனிடம் வந்துதான் தீர்வு கேட்பாங்கன்னா பாத்துக்கேயேன் என்று சொல்லும் போது ஏனோ எனக்குள் ஒரு ஹீரோ உருவானான்.

நேற்று இரவு இரண்டு மணியிருக்கும் தூக்கத்தில் இருந்தவனை எழுப்பி மச்சி எனக்குச் சின்ன உதவிடா நாம ஒரு முக்கியமான விசயமா கோயம்புத்தூர் வரைக்கும் போய்வரனும்னு சொல்லும் போது கூட கார்க்கு ஏதோ பொருள் வாங்கத்தான் கூப்பிடுகிறான் என்று வந்திருந்தேன்.

இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. சினிமா எடுக்க யாரிடமோ பேசப் போகிறான் என்று. நான் இருந்தால் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சேட்டு எப்பொழுதும் தனிமையில் இருப்பான். கணக்கு நோட்டில் கடைசிப் பக்கத்தில் கதை, கவிதை என எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமையானால் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா ஆர்சியில் இருக்கும் பரணி தியேட்டருக்குக் கூட்டிப் போவான். எந்தப் படம் வந்தாலும் அதை இரண்டு மூன்று முறைப் பார்த்துவிடுவான். அதை வீட்டுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வான்.

அவனுக்கு நண்பர்கள் என யாரையும் நெடுநாள் வைத்துக்கொள்ள மாட்டான்.
அந்த ஊரில் அவன் நடமாட்டமே ஒரு பூனை வந்து போவது போலத்தான் இருக்கும்.

சேட்டு பாட்டி வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தான். மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான் அவன் அம்மா வந்து பார்த்துவிட்டுப் போவார். எப்பவாவது அவனோட இருக்கும் போது வெள்ளந்தியாக அவன் அப்பன் இல்லாத புல்லப்பா ஏதும் தப்பு தண்டாவுக்குப் போகாத பாத்துக்குங்க என்பாள்.

நாங்கள் கோலிகுண்டு, நீச்சல், கபடி என விளையாடும் போது எதிலும் கலந்துகொள்ளாமல் சும்மா வேடிக்கை மட்டுமே பார்ப்பான். கேட்டால் சின்னதாய்ப் புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து போய்விடுவான்.

அவன் சிகரெட் அடிப்பான். ஆனால் ஊரில் யார் சொன்னாலும் நம்பமாட்டார்கள். அவன் செய்யும் வேலைகளை யாருக்கும் தெரியாமல் எப்படிப் பார்த்துக்கொள்கிறான் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஏனோ என்னிடம் மட்டும் கொஞ்சம் மறைக்காமல் பேசுவான்.

என் வீட்டிலிருந்து நான்காவது வீடுதான் சேட்டுவின் பாட்டி வீடு. அவன் எங்காவது போனால் அவள் பாட்டி தேடி வரும் முதல் ஆளாக நான் இருந்தேன். ஒரே தாய்மாமன் அவரும் பட்டாளத்துக்குப் போய்விட அவனும் பாட்டியும் மட்டும்தான் வீட்டில் தனியாக இருந்தார்கள்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும், போன் வர மீண்டும் பரபரப்பானான் சேட்டு. தனியாகப் போய்க் கொஞ்சம் நேரம் பேசியவன் திரும்பி வந்து சீக்கிரம் வா மச்சி அவர் திரும்பி வர்றதுக்குள்ள சீக்கிரம் போய் வரணும்னு சொல்ல

யார் வர்றதுக்குள்ள?

அதலாம் போற வழியில சொல்றேன்டா, வா சீக்கிரம் என்று அவசரப்படுத்தி அந்தத் தெருவில் கடைசியில் இருக்கும் பெரிய வீட்டின் காலிங்பெல்லை அடித்தான். நாற்பது வயதான ஒரு அம்மா வாஞ்சையோடு வாங்க தம்பி என்று உள்ளே கூட்டிப் போனார்கள்.

மேல் மாடிக்குப் போகும் படிகட்டு சுவர் முழுக்கச் சின்னதும் பெரியதுமாய் விதவிதமான ட்ரெஸ்ஸில் ஒரு பதுமையின் போட்டோ இருந்தது. இன்னும் பள்ளிப்படிப்பு முடிக்காத தோற்றம் கொஞ்சம் தேவையானி சாயல்.

டைனிங் ஹாலில் உட்காரவைத்து பிரியாணி, மீன் வருவல் என வகைவகையாகப் பரிமாற முதல் முறையாக இப்படிச் சாப்பாடு கிடைத்த சந்தோஷத்தில் சாப்பிடக் கைவைக்கும் போதுதான் சேட்டு அந்த வார்த்தையைச் சொன்னான். இவர்தாங்க நம்ம படத்தோட ரைட்டர் ரொம்ப பிசி. நமக்காகத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்காரு என்று சொல்ல எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என்ன சொல்லுவது என்று தெரியாமல் நான் முழிக்க அந்த அம்மா இன்னொரு மீன் வறுவலை என் தட்டில் வைக்க உண்மையாகவே பொறையேறியது. அப்பொழுதான் என்னுடைய முதல் சிறுகதை இதழில் வந்திருந்த சமயம் அது.

மேல் மாடியைப் பார்த்து சுவிட்டி சார்ங்க வந்திருக்காங்க கீழே இறங்கி வா என்று சொல்ல அந்த போட்டோவுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை என்பது போல ஒரு பெண் இறங்கி ஓடி வந்தாள்.

சாப்பிடுகிறோம் என்று கூடப் பார்க்காமல் அந்தப் பெண்ணை எங்கள் காலில் விழச் சொல்ல என்ன செய்வது என்று புரியாமல் சேட்டுவை மொறைக்க எந்தக் கூச்சமும் இல்லாமல் அடுத்த வருஷத்துல இருந்து நீதான் தமிழ் சினிமாவோட டாப் ஹீரோயின்னு சேட்டு ஆசீர்வதிக்க அவன் இப்பொழுதே இயக்குநர் ஆகிவிட்ட தோரணை தெரிந்தது. வந்த வேகத்தில் அந்தப் பொண்ணு மாடிக்குப் போய்விட என்ன நடக்கிறது என்று புரியாமல் பாதிச் சாப்பாட்டில் எழுந்து போய்க் கை கழுவினேன். அந்த அம்மா வெள்ளந்தியாக என்ன தம்பி சாப்பாடு காரமா இருக்கா என்று கேட்க என் கண்கள் ஒரு நிமிடம் கலங்கின.

நிதானமாகச் சாப்பிட்டு முடித்து சேட்டு ஏதோ அவன் மாமியார் வீடு போல கேஸுவலாக சோபாவில் உட்கார்ந்தான். மன்னிச்சிடுங்க தம்பி இப்பதான் அவர் கடைக்குப் போனாரு. அவர் இருக்கும் போது இதக் கொடுக்கமுடியாதுல்ல என்று ஒரு மஞ்சள் பையை சேட்டுவிடம் கொடுத்தார். அவன் அதை மடித்து பேண்ட் பாக்கெட்டில் திணித்தான். அது பிதுங்கித் தெரிய தம்பி அத வயித்தாண்டா வெச்சிக்கீங்க அவர் இப்ப வந்துடுவாரு.

அவர்கிட்ட உங்க கதையச் சொல்லுங்க என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய கார் வீட்டுக்கு முன்னாடி வந்து நின்றது. படத்தில் வரும் வில்லனைப் போல இரண்டு அடியாளோடு முறுக்கு மீசையோடு காரை விட்டு இறங்கி ஒருவர் வந்தார். நெற்றியில் விபூதி பூசி நடுவில் சந்தனப் பொட்டு இருக்க மார்பில் இருபது பவுனுக்கு செயின் தொங்கிக்கொண்டிருந்தது.

போனில் அந்தப் பொறுக்கிப் பய்யன எங்க கிடைச்சாலும் நம்ம கிரில் குடோனுக்குத் தூங்கிட்டு வந்திடுங்க நல்ல வாயேன் சம்பாரிக்க நாற வாயன் தின்றதாப் போச்சி என்று சொல்ல எனக்குப் பயத்தில் மூத்திரம் அங்கேயே முட்ட ஆரம்பித்து விட்டது. நான் நெளிந்தபடி சோபாவில் இருந்து எழுந்திருக்க சேட்டு என் கையைப் பிடித்து உட்கார வைத்தான்.

வந்து பக்கத்தில் உட்கார்ந்தவர் அந்த செட்டுலே நீதான் தம்பி நாயமா இருக்கறவன். நான் மறுபடியும் சோபாவில் இருந்து எழுந்திருக்க அவர் உட்காருங்க தம்பி சாப்பிட்டீங்களா இவ்வளோ நேரம் உங்களுக்காகத்தான் காத்துட்டு இருந்தேன். நீங்க வர லேட்டாவ கட வரைக்கும் போயிட்டு வந்தேன். நாம ஒரு நாளைக்குக் கடைக்குப் போவலண்ணா திருட்டுப் பசங்க ஏமாத்துறானுங்க அதான் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வந்தேன்.

அவரிடமும் என்னை ரைட்டர் என்றே அறிமுகப்படுத்தினான் சேட்டு.

நீதான் தம்பி அந்தப் பொறம்போக்கு டைரக்டர்கிட்டயிருந்து எங்களக் காப்பாத்துன, இல்லனா இன்னும் பத்துலட்சம் போயிருக்கும் நீ மட்டும் அன்னிக்கு போன் பண்ணி அவன் திருடன் எல்லார்கிட்யேயும் நடிக்க வைக்கிறேன்னு பணத்தை ஆட்டயப் போடுறான்னு சொல்லலன்னா நாங்க பெரிசா ஏமாந்திருப்போம்.

தம்பி உங்கிட்ட சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு, நீங்கலாம் பெரிசா வரனும்னு ஆசப்படுறேன். காசப்பாக்கமா சினிமான்னு உண்மையா இருக்கீங்க. ஆனா பாருங்க புள்ள அடுத்த வருஷம் காலேஜ் போவப் போவுது. நமக்கு இந்த சினிமா கினிமால்லாம் தோதுபடாது. ஏதோ புள்ள ஆசப் பட்டுச்சேன்னு ஒரு படம் மட்டும் நடிச்சிட்டுப் போவட்டும்னு நினைச்சேன். ஆனா பாருங்க இத தெரிஞ்சிகிட்டு நான் இல்லாத நேரத்துல வந்து பொண்டாட்டிக் கிட்டப் பணத்தப் புடிங்கிட்டுப் போறானுங்க. அதனால எனக்கு அவளுக்கும் இப்பலாம் சண்ட வருது. எங்களுக்குக் கல்யாணமாகி ஒரு தடவ கூட அவள நான் திட்டுனது இல்ல வீட்ட எதிர்த்துக்கிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் யாருமே எங்களுக்கு உதவல நானே முட்டி மோதி இந்த இடத்துக்கு வந்திருக்கோம் எல்லாம் இந்த மகராசி வந்த நேரம்தான். பத்து வருஷம் கழிச்சுப் பொறந்த ஒரே பொண்ணு அவ அது மனசுல தேவையில்லாத ஆசைய வளர்க்கிறோமோன்னு பயமா இருக்கு. இதனால சொந்தக்காரங்கலாம் கூட எங்க கூடப் பேசறது இல்ல

சேட்டுவுக்கு மூஞ்சி சப்புன்னு போக தம்பி நீங்க முதல்ல ஆபீஸ் போடுங்க இது உங்க நல்ல மனசுக்கு என்னால முடிஞ்சதுன்னு பாக்கெட்டிலிருந்து பத்தாயிரம் ரூபாயைக் கொடுக்க அவன் முகம் நூறு வாட்ஸ் பல்ப் மாதிரி எரிய ஆரம்பித்தது.

உங்க நெம்பர் கொடுத்துட்டுப் போங்க அப்புறம் பேசுறேன் இப்ப கொஞ்சம் வேலை இருக்கு நான் போகுற வழியில் உங்கள பஸ் ஸ்டேண்ட்டில் இறக்கிவிடுறேன்னு சொல்ல அந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தேன், முதலில் இருந்த உற்சாகம் இழந்து அழுவுற மாதிரி இருந்தது. காரில் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட முதல் வேலையா சேட்டு சரக்குக் கடையத் தேடிப் போனான். நான் அவனிடம் எதுவும் பேசாமல் எதிரில் அமர்ந்திருந்தேன்.

மச்சி எனக்கு இன்னொருத்தரப் பார்க்க வேண்டியது இருக்கு நீ ஊருக்குப் போ என்று என் பாக்கெட்டில் நூறு ரூபாயைத் திணித்துவிட்டு போனில் யாரிடமோ சாய்ந்திரத்துக்குள்ள வந்திடுறேன் என்று பேசியபடியே வெளியேறினான்.

மனம் கல்லுமாதிரி உறைந்திருந்தது. அவனை விட்டு வந்து வெளிக்காற்று பட்டவுடன்தான் ஆசுவாசமானது.

ஊர் வரும் வரை அந்த அம்மாவின் அழத் தயாராகும் முகமும் என்னைக் குடோனின் அடைத்து வைத்து அடிக்கும் காட்சியும் திரும்பத் திரும்ப வந்து போய்க்கொண்டிருந்தன.

புதுக் காரோடு ஊருக்குத் திரும்பியவன் சினிமா எடுப்பதாகச் சொல்லி சேட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். ஆனால் அதுவும் ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டான். இரண்டு மாதம் இருக்கும் இரவு பத்து மணிக்குப் புது நெம்பரிலிருந்து அழைப்பு வந்தது.

தம்பி நாந்தான் கோயம்புத்தூர்ல இருந்து காமாட்சி பேசுறேன் சேட்டு போன் போட்டா போனே எடுக்க மட்டுன்றாப்ல பத்து லட்சம்பா புள்ளைய நடிக்க வைக்கிறேன்னு வாங்கினு போயிட்டாம்பா இதோ அதோன்னு இழுத்தடிக்கிறான் எனக்கும் அவருக்கும் சண்ட வந்து எங்கம்மா வீட்டுக்கே அனுப்பிட்டார்ப்பா புள்ள படிக்கிறதுக்காக வச்சிருந்த காசு இப்போ புள்ள படிப்பே நின்னுபோச்சி காசக் கொடுக்கும் போது நீயும் தானே கூட இருந்தே ஒரு வார்த்த சொல்லக் கூடாதாப்பா என்று அதே வெள்ளந்தியாகக் கேட்க எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால் அதற்கு அடுத்து அவர்கள் சொன்னதுதான் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

தம்பி இவ வேலை செஞ்ச டைரக்டரோட படம் வெளியே வந்து சூப்பரா ஓடுது தம்பி என் பொண்ணு நடிக்க வேண்டிய படத்தையும் கெடுத்துட்டானாப்பா. என் பதில் வார்த்தைக்குக்கூடக் காத்திருக்காமல் யாரோ வருவதாகச் சொல்லி அப்புறம் பேசுறேன்னு போனை அழுதபடியே வைத்துவிட்டார்.

அதற்கு அடுத்து ஆறு மாதம் இருக்கும் ரமணாஸ்ரமம் பக்கம் போனபோது சேட்டுவைப் பார்த்தேன். தனியாக ஒரு டீக்கடையில் உட்கார்ந்திருந்தான். உடல் மெலிந்து போய்ப் பயந்து பயந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். யாரோ இரண்டு பேர் அவனை நெருங்குவது தெரிந்தது. சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு போய் ஒரு காரில் ஏற்றுவது தெரிந்தது.


Art : theawakenedeye

மாரி.கிருஷ்ணமூர்த்தி .
மாரி.கிருஷ்ணமூர்த்தி .

மாரி.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு அப்பா மாரிமுத்து, அம்மா ஜெகநாதம்மாள், மனைவி சுகன்யா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கனலி, யாவரும், நடுகல் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளியிட்டு வருகிறார். “தளம்”சமூக உரையாடல் மையம் வழியாக இலக்கியக் கூட்டங்களும், ஊர்ப் பொதுக் கிணறு புனரமைப்பு இயக்கம் வழியாக மூன்று பொதுக் கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார். மேலும், சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார்.  இவருடைய “பிடிமானம்” என்ற முதல் சிறுகதை தொகுப்பு 2025 வருடம் வெளிவந்துள்ளது.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    May 1, 2026
  • றஹீமா பைஸல் கவிதைகள்

    றஹீமா பைஸல் கவிதைகள்

    May 1, 2026
  • ஹிம்சானா கவிதைகள்

    ஹிம்சானா கவிதைகள்

    May 1, 2026
  • நவீன இலக்கிய மடங்களும் அமெரிக்கப் பஜனைகளும் : ஒரு விமர்சனப் பார்வை

    நவீன இலக்கிய மடங்களும் அமெரிக்கப் பஜனைகளும் : ஒரு விமர்சனப் பார்வை

    May 1, 2026
  • அரவிந்தன் : நல்லார் தொடர்கை

    அரவிந்தன் : நல்லார் தொடர்கை

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (5)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (103)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (82)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (5)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 3)

    May 1, 2026
  • றஹீமா பைஸல் கவிதைகள்

    றஹீமா பைஸல் கவிதைகள்

    May 1, 2026
  • ஹிம்சானா கவிதைகள்

    ஹிம்சானா கவிதைகள்

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (5)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (103)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (82)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top