பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளைத் தத்துவவாதிகள் / சிந்தனையாளர்களில் நிறஆதிக்க உணர்வுள்ளவர்கள் ஆப்பிரிக்க இலக்கியப் பாரம்பரியத்தைக் கண்மூடித்தனமாக நிராகரித்தனர். குறிப்பாக, ஹெகல் (Georg Wilhelm Friedrich Hegel) தன்னுடைய ‘உலக வரலாற்றுத் தத்துவம் குறித்த விரிவுரைகள்’ (Lectures on the Philosophy of World History, 1837) நூலில் ‘ஆப்பிரிக்கா வரலாறு அற்றது’ என்றார். ஜோசப் கான்ராட் (Joseph Conrad) தன்னுடைய ‘இருளின் இதயம்’ (Heart of Darkness, 1899) நூலில் ஆப்பிரிக்க வாய்மொழி இலக்கியங்களை ‘முரட்டுக் கோஷங்கள்’ என்றார். எட்ஜர் ரைஸ் பர்ரோஸ் (Edger Rice Burroughs) தன்னுடைய ‘குரங்குகளின் டார்ஜன்’ (Tarzan of the Apes, 1912) என்னும் தொடர் நூலில் ‘கோரிக்கைகள், கூச்சல்கள்’ என்றார். ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) தன்னுடைய ‘வெள்ளையனின் சுமை’ (The White Man’s Burden,1899) கவிதையில் ஆப்பிரிக்கர்களை ‘பாதிக் குழந்தை, பாதிப் பிசாசு’ என்று ஏசினார். மொத்தத்தில் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு, எழுத்தோடு தொடர்பு இல்லாதவர்களுக்கு இலக்கிய மரபு எப்படி இருக்க முடியும் என்றார்கள். இந்த விவாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் உச்சநிலை அடைந்தது. அதே சமயம் ஆப்பிரிக்கர்களின் எதிர்வினையும் உச்சமடைந்தது.
சினுவா அச்செபே (Chinua Achebe), நுகுகி வா தியங்கோ (Ngugi wa Thiong’o), வோல் சோயிங்கா (Wole Soyinka) போன்றோர் அடர்த்தியான எதிர்வினை ஆற்றினர். இலக்கியமும் அறிவும் எழுத்தோடு தொடர்புடையதல்ல. அது நினைவுக் கடத்தலோடு தொடர்புடையது. எழுதுவதற்கு முன்பு நினைவுக் கடத்தல் வேண்டும். நினைவுக் கடத்தலின் துணைகொண்டு மட்டுமே எழுதிவிட்டு எழுத்தின் வகிபாகத்தில் முழுமையான பங்களிப்புச் செய்த நினைவுக் கடத்தல்களை விலக்குவது பொருத்தமற்றது என்றனர். அதில் இருந்த உண்மையை சோரேன் கீர்கேகார்ட் (Soren Kierkegaard), பிரெடெரிக் நீட்ஷே (Friedrich Wilhelm Nietzsche) உள்ளிட்ட வெள்ளையர்கள் மெதுவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். நினைவுக் கடத்தல் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அதன் விளைவாக இருத்தலியம் உள்ளிட்ட பல கோட்பாடுகள் உருப்பெற்றன. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜீன்-பால் சார்த்ரே (Jean-Paul Sartre) அதை விரிவாக முன்னெடுத்த பிறகு உலகத்தின் இலக்கியக் கண்ணோட்டம் மாறத் தொடங்கியது. ஆனாலும் மேற்கத்திய வெள்ளையரின் கோட்பாடுகளை ஆப்பிரிக்கர்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
நினைவுக் கடத்தல் பல விளக்கங்களைப் பெற்ற பிறகு ஒருவழியாக அது வாய்மொழி இலக்கியம் என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. எழுதப்படாத யாவற்றிலும் அறிவு இருக்கிறது. எழுத்தால் உருவாக்கும் அறிவு எழுதப்படாத, வாய்மொழி இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டதே என்ற விளக்கங்களைக் கொடுத்த ஆப்பிரிக்க அறிவுஜீவிகள், தங்களது வாய்மொழி இலக்கியங்களை எழுத்தாக்கினர். அவர்களின் நோக்கம் வெள்ளை இலக்கியத்தை விடத் தொன்மையான வாய்மொழி மரபு ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதைச் சொல்வதே. சொல்வதில் வெற்றியும் பெற்றார்கள்.
தான்சானியாவின் வாய்மொழி மரபு
உலகின் தொன்மையான நிலப்பரப்புகளில் ஒன்றான ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தான்சானியா, தன்னகத்தே ஓர் அசாத்தியப் பண்பாட்டு வளத்தைக் கொண்டிருக்கிறது. தான்சானிய இலக்கியத்தின் பெரும்பகுதி சுவாஹிலி மொழியில் இருந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்ட இனக் குழுக்களை உள்ளடக்கிய இந்நாட்டில், சுக்குமா, சாக்கா, ந்யாம்வேஸி, மாசாய், ஹயா, ஹெஹே, மகொண்டே, ஸாரமோ உள்ளிட்ட ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான வாய்மொழி இலக்கிய மரபுகள் உள்ளன. அவற்றுள் சுவாஹிலி வாய்மொழி இலக்கிய மரபு, ஜான்சிபார் தீவுகளின் தனிச்சிறப்பான கதைகள், சுக்குமா இனத்தின் புராணக் கதைகள், சாக்கா மக்களின் கிளிமஞ்சாரோ அடிவாரக் கதைகள், மாசாய் மக்களின் வாய்மொழிக் கதைகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.
தான்சானியாவின் வாய்மொழி இலக்கிய மரபு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. கி.மு. 5000 முதல் கி.மு. 1000 வரை நடைபெற்ற பண்டைய பாண்டு மக்கள் இடப்பெயர்வின் போது, அவர்களுடைய மொழிகளும், கதைகளும், பழக்கவழக்கங்களும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பரவியதாக ஆப்பிரிக்க இனவரைவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தான்சானியாவில் குடியேறிய இந்த மக்கள் குழுக்கள் தங்களது மூதாதையர்களிடமிருந்து கற்ற கதைகளை இடம்பெயரும் போதும் விட்டுவிடவில்லை. மாறாக, புதிய நிலங்களின் தன்மைக்கேற்ப அவற்றை வளர்த்தெடுத்தனர். கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையும் சான்சிபார் தீவும் எட்டாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தின் மையங்களாக விளங்கின. அரேபியர், பாரசீகர், இந்தியர், சீனர் முதலியோர்களுடனான தொடர்பு சுவாஹிலியின் வாய்மொழி இலக்கிய மரபைச் செழிப்பாக்கியது.
தான்சானியாவில் ‘கதை சொல்லுதல்’ ஒரு சடங்கு நிகழ்த்தும் வழமையைப் போலக் கட்டுத்திட்டமாக இருந்து வருகிறது. பெரும்பாலும், கதைகள் இரவு நேரத்தில் குளிருக்காக நெருப்பைச் சுற்றி அமர்ந்திருக்கும் போது சொல்லப்படும். கேட்போர் குழுவாக இருப்பர். வெறும் குரல் வெளிப்பாடாக இல்லாமல் ஓர் ஆற்றுகையைப் போல பல்வேறு விதமான உடல்மொழியுடன் வெளிப்படும். எடுத்த எடுப்பிலேயே கதை சொல்லப்பட்டு விடாது. கதை சொல்லும் நிகழ்வுக்கெனத் தனியான வாழ்த்துமுறைகளும் நடைமுறைகளும் கூட உண்டு. கதைசொல்லி, கதையைச் சொல்லும்போது தனித்து நிற்பதில்லை. அவரோடு கதை கேட்போரும் பங்கெடுப்பர். அத்தகைய சூழலில் ‘கதை சொல்லுதல்’ என்பது கூட்டு அனுபவமாக உருப்பெறும்.
சுவாஹிலி வாய்மொழி மரபில் ஙானோ (Ngano) என்று அழைக்கப்படும் வாய்மொழிக் கதைகள் மிகவும் பொதுவானவை. இந்தக் கதைகளில் வரும் விலங்குகள் மனிதக் குணம் கொண்டவையாக இருக்கின்றன. வலிமையை விட அறிவே வெல்லும் என்பதான செய்திகள் அதிகம் வருகின்றன. முயல், சிங்கம், ஆமை ஆகியவற்றின் வழி தந்திரம், வலிமை, நிதானம் என்னும் மூன்று விஷயங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றன.
முயலும் சிங்கமும்
தான்சானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தீவு சான்சிபார். இங்கும் சுவாஹிலி வாய்மொழி இலக்கியங்கள் உள்ளன. மத்திய ஆப்பிரிக்காவின் பிஷப்பாக இருந்த எட்வர்ட் ஸ்டீர் (Edward Steere) 1870ஆம் ஆண்டு இத்தீவில் உள்ள கதைகளைத் தொகுத்து Swahili Tales As Told by Natives of Zanzibar என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். அதில் உள்ள ஒரு கதைதான் ‘முயலும் சிங்கமும்’. காட்டின் நடுவில் ஒரு பெரிய ஆழமான கிணறு இருந்தது. அந்தக் கிணற்றின் அருகில் ஒரு சிங்கம் வசித்தது. நாள்தோறும் ஏதாவது ஒரு விலங்கு சிங்கத்திற்குத் தன்னையே உணவாகக் கொடுக்க வேண்டும் என்று விதி இருந்ததால் பிற விலங்குகள் அனைத்தும் சிங்கத்தின் பொருட்டு அஞ்சிக்கொண்டு வாழ்ந்தன.
விதியின் படி முயல் ஒரு நாள் தன்னையே சிங்கத்திற்கு உணவாகக் கொடுக்கும் முறை வந்தது. மற்ற விலங்குகள் மரணிக்கவிருக்கும் முயல் மீது இரங்கின. ஆனால் முயல் சிரித்துக்கொண்டு இருந்தது. சிங்கத்தின் இருப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்கிய முயல், வேண்டுமென்றே தாமதமாகப் போய்ச் சேர்ந்தது. பசியால் சோர்ந்துபோய் இருந்த சிங்கம், முயலைப் பார்த்துக் கோபமாகத் திட்டியது. தாமதத்திற்குக் காரணம் கேட்டது. அதற்கு முயல் ‘மன்னிக்கவும், வரும் வழியில் உன்னை விடப் பெரிய சிங்கம் ஒன்று வழியை மறித்துக்கொண்டு உனக்குச் சவால் விட்டது. உன்னுடைய காட்டுக்கு அது உரிமை கொண்டாடியது’ எனக் கூறியது முயல். ஆவேசமடைந்த சிங்கம் ‘அந்தச் சிங்கம் எங்கே’ என்று கேட்டது. வந்த வழியில் இருந்த கிணறு ஒன்றில் மறைந்திருப்பதாக முயல் கூற, சிங்கம் வேகமாக ஓடி கிணற்றுக்குள் குனிந்து பார்த்தது. அதன் பிம்பம் தண்ணீரில் தெரிந்தது. அதையே தான் தேடி வந்த சிங்கம் என்று நினைத்துக் கோபமாகக் கத்திக்கொண்டே கிணற்றில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கி அழிந்தது. ஆதிக்கச் சக்திகளால் ஒடுக்கப்படும் சாமானியர்கள் அறிவாலும் தந்திரத்தாலும் மட்டுமே அவர்களை எதிர்கொண்டு விடுதலை பெற முடியும் என்ற செய்தியை வெளிப்படுத்தும் இந்தக் கதை, இந்தியாவில் வழங்கும் பஞ்சதந்திரத்தின் ‘சிங்கமும் முயலும்’ கதையுடன் ஒத்திருக்கிறது. இதை சான்சிபார் வழியாகக் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலிருந்த வணிக / பயணத் தொடர்புக்கான சான்றாகக் கொள்ளலாம். வணிகத்தொடர்பில் இருந்த பண்டைய நாடுகளின் வாய்மொழி மரபுக் கூறுகள் பெரும்பாலும் ஒன்றுக்குள் ஒன்று தாக்கம் செலுத்தி ஒரே மாதிரியாக இருக்கின்றன.
திரட்டுக் கதைகள்
கிழக்கு ஆப்பிரிக்காவில் திரட்டுக் கதைகள் அதிமாக இருக்கின்றன. அவற்றை நீண்ட பயணங்களை மேற்கொண்டு முகம்மது பின் அப்த் என் நூரி (Mohammed bin Abd en Nuri) என்பார் சேகரித்தார். இந்தக் கதைகள் தமிழ் அந்தாதி அமைப்பைப் போன்றவை. அதாவது, ஒரு கதையில் சிறுசெய்தியாக இருக்கும் ஒரு பகுதி, அடுத்த கதையின் தொடக்கமாக இருக்கும். சான்றாக, கோசோ என்னும் ஆசிரியர் ஒருவரைப் பற்றிய கதையைக் கூறலாம். கோசோ வழக்கம்போல ஒரு மரத்தின் கீழ் குழந்தைகளுக்குக் கற்பித்துக்கொண்டு இருந்தார். ஒரு நாள் மரத்தில் ஒரு மான் (Antelope) நின்று ஒரு கூடையைக் கீழே தள்ளி விட்டது. அந்தக் கூடை கோசோ தலையில் தாக்கி அவர் இறந்தார். மாணவர்கள் அவரை அடக்கம் செய்தனர். பிறகு, ‘யார் இதைச் செய்தார்கள்?’ என்று விசாரிக்கக் கிளம்பினர். மான் என்று தெரிந்து அதைப் பிடிக்கச் சென்றனர். மான் ‘நான் செய்யவில்லை! தெற்குத் திசையிலிருந்து வீசிய காற்றுதான் கூடையை அசைத்தது எனக் கூறியது. காற்றைத் தண்டிக்கச் சென்றனர். காற்று ‘நான் செய்யவில்லை! மண் சுவர்தான் என்னைத் தடுத்து, கூடையை நோக்கித் திசை திருப்பி விட்டது என்றது. சுவரைத் தண்டிக்கச் சென்றனர். சுவர், எலி மீது பலி போட்டது. பிறகு எலி, பூனை, கயிறு, கத்தி, நெருப்பு, நீர், யானை, தும்பி என்று தண்டிக்கச் சென்றனர். கடைசி வரை மரம் மட்டும் பதில் சொல்லவில்லை. ஆதலால் மரம் வெட்டப்பட்டது. எந்தவொரு நிகழ்வுக்கும் காரண, காரியங்களை ஒருபோதும் வரையறுக்க முடியாது என்பதை உணர்த்தும் இதையொத்த கதைகள் இந்தியாவிலும் உண்டு.
சுரைக்காய்க் குழந்தைகள்
பிரிட்டிஷ் உகாண்டாவில் கவர்னராகவும் 1921இல் தான்சானியாவில் மாவட்ட ஆணையாளராகவும் இருந்த இனவரைவியலாளரான சார்லஸ் டண்டாஸ் (Charles Dundas) கிளிமஞ்சாரோ மலை அடிவாரத்தில் வாழும் சாக்கா (Chagga) மக்களின் வாய்வழிக் கதைகளைத் தொகுத்து 1924ஆம் ஆண்டு ‘கிளிமஞ்சாரோவும் அதன் மக்களும்’ (Kilimanjaro and Its People) என்னும் பெயரில் வெளியிட்டார். பின்னர் ஆரோன் ஷெப்பர்ட் (Aaron Shepard) இதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். இதில் ஷிண்டோ என்னும் பெண்ணைப் பற்றிய கதையொன்று உள்ளது. கிளிமஞ்சாரோ மலை அடிவாரத்தில் ஷிண்டோ தனியாக வாழ்ந்து வந்தாள். அவளது கணவன் இறந்துவிட்டான். குழந்தைகள் இல்லை. அவளுடைய உணவுக்காக நிலத்தை உழுது பயிரிட வேண்டும் என நினைத்தாள்.
ஒரு முறை சுரைக்காய்கள் (Calabashes) பயிரிட்டாள். அரவணைத்து வளர்த்தாள். பெரிய பெரிய அளவில் காய்த்தன. ஒரு நாள் இரவு அற்புதம் நிகழ்ந்தது. சுரைக்காய்கள் குழந்தைகளாக மாறி, ஷிண்டோவை ‘அம்மா’ என்று அழைத்தனர். அம்மாவுடன் இணைந்து உழுது பயிரிட்டனர். வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டனர். ஷிண்டோ மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் அந்தக் குழந்தைகள் ‘தங்களை யாரும் பார்க்கக் கூடாது, தங்களுடைய இரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது’ என்று நிபந்தனை விதித்திருந்தார்கள். ஒரு நாள் வேற்றுப் பெண் ஒருத்தி வந்தாள். குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியத்துடன் இவர்கள் அனைவரும் உன்னுடைய சுரைக்காய்க் குழந்தைகளா? என்று ஷிண்டோவிடம் கேட்டாள். தங்களுடைய ரகசியம் வெளிப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியான குழந்தைகள் உடனே மறைந்து விட்டனர். ஷிண்டோ மீண்டும் தனிமையாகி விட்டாள் என்பதாக அக்கதை முடிகிறது.
சாக்கா மக்களின் பண்பாட்டில் ‘இபவுண்டா’ (Ipvunda) என்று சொல்லப்படும் ‘செயல்வழிக் கற்றல்’ முறை முக்கியமானது. குழந்தைகள் வீட்டு வேலைகளைச் செய்வதன் வழி கற்றுக் கொள்வதாக அம்மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் கதைகளுள் ‘சுரைக்காய்க் குழந்தைகள்’ கதையும் ஒன்று. சமூக விதிகளை மீறும்போது இழப்பு ஏற்படும் என்கிற கற்பித்தலை நிகழ்த்துவதாகவும் சொல்கின்றனர் சாக்கா மக்கள். இவர்கள் பெரும்பாலும் சுரைக்காய்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுவதைப் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சாக்கா இனத்தைச் சேர்ந்த லாடி செமாலி (Ladi Semali) என்பவரிடமிருந்து அறிந்துகொண்டதாக ஆரோன் ஷெப்பர்ட் குறிப்பிடுகிறார்.
களிமண் மனிதர்
தான்சானியாவின் மிகப்பெரிய இனக் குழுவான ‘சுக்குமா’ மக்கள் மன்வாஞ்சா பகுதியிலுள்ள விக்டோரியா ஏரிக்கரையில் வாழ்கின்றனர். இவர்களின் வழக்காறு, இலக்கியங்கள் முதலிவற்றைச் சேகரித்து வகைப்படுத்தி ‘உலகளாவிய ஆப்பிரிக்கத் தொன்மவியல்’ (African Mythology Worldwide) என்கிற இணைய தளம் 2025 பிப்ரவரி 9 ஆம் தேதி பதிவேற்றம் செய்தது. அதில் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், தெய்வங்கள் என்று பல்வேறு தகவல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ‘களிமண் மனிதர்’ கதை.
ஆரம்பத்தில் இந்த உலகம் வெறுமையாக இருள் போர்த்தி இருந்தது. ஒரு தெய்வீக சக்தி வானிலிருந்து இறங்கி வந்தது. அந்தச் சக்தி களிமண்ணை எடுத்து ஒரு மனிதனை உருவாக்கியது. முதல் மனிதன் தோன்றினான். அவனது தனிமையை உணர்ந்த அந்தத் தெய்வீக சக்தி அவனுக்கென்று ஒரு பெண்ணை உருவாக்கிக் கொடுத்தது. அவர்களின் வழித்தோன்றல்களே ‘சுக்குமா மக்கள்’ என்பதாக ‘களிமண் மனிதர்’ கதை முடிகிறது. சுக்குமா மக்களின் வாய்வழி மரபில் மூதாதையர் வழிபாடு (Ancestor Worship) முக்கியமானது. அவர்கள் மறைந்த மூதாதையர்களைத் தங்களது இனத்துக்குக் காவலர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருப்பதாக நம்புகின்றனர். ஒருவர் தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் அந்த முடிவு அவர்தம் மூதாதையர்களால் கையளிக்கப்பட்டது என்றே நம்பப்படுகிறது.
ஹாடாணி மான்
எட்வர்ட் ஸ்டீரைப் போலவே ஜார்ஜ் டபிள்யூ. பேட்மேன் (George W. Bateman) 1901ஆம் ஆண்டு Zanzibar Tales என்ற நூலில் ஜான்சிபார் கதைகளைப் பதிவு செய்தார். அதில் அவர் ‘ஹாடாணி மான்’ கதையைச் சிறப்பானதாகக் குறிப்பிட்டு இருந்தார். அது பின்வருமாறு, ‘ஹாடாணி’ என்ற மான் புத்திசாலியாக வாழ்ந்து வந்தது. உழைத்துச் சாப்பிட விரும்பாத அது, தனது உணவைத் தந்திரத்தால் பெற்றுக் கொண்டிருந்தது. ஒருநாள் தான் வாழ்ந்த காட்டுக்கு அரசனாக இருந்தவனைச் சந்தித்து உங்கள் தூதனாக வந்திருக்கிறேன் என்று கூறி நெருக்கமாகிக் கொண்டது. பிறகு அவனிடம் ஏதாவது ஒரு பொய்க் காரணம் சொல்லி பணம் பறிக்க ஆரம்பித்து விட்டது. மக்கள் அந்த மானைக் கண்டுகொள்ளவில்லை என்பதாகக் கதை முடிகிறது. அந்த மானை பேட்மேன், ஐரோப்பியக் கதைகளில் காணப்படும் ‘பூட்ஸை அணிந்த பூனை’யை (Puss in Boots) விட மிகவும் தந்திரமானது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கடவுளும் வானவில்லும்
மாசாய் (Maasai) மக்கள் வடக்கு தான்சானியா, கென்யா பகுதியில் பரவலாக வாழ்கின்றனர். அவர்களிடம் வாய்மொழியாக இருந்து வரும் பண்பாட்டுக் கூறுகளைத் தான்சானியா பிளாக் (The Tanzania Blog) ஆவணப்படுத்தியது. அதில் இடம்பெற்றுள்ள ‘கடவுளும் வானவில்லும்’ கதையின் வழி மாசாய் மக்களிடம் என்காய் (Enkai) என்ற கடவுள் பெருமதிப்புக்கு உரியவராக இருப்பதை அறியலாம். அவர்தான் மேய்ச்சலுக்காக ஆண்களுக்கு ஆட்டுமந்தைகளைக் கொடுத்ததாக நம்பி அம்மக்கள் அவரை வணங்குகின்றனர். கதையின் ஓரிடத்தில் முன்னொரு காலத்தில் வானமும் பூமியும் தொட்டுக்கொண்டு இருந்தாகவும் மனிதர்கள் வானம் வரை ஏறலாம் என்பதாகவும் குறிப்பொன்று வருகிறது. வானவில்லின் ஏழு நிறங்களும் ஏழு வகையான ஆசீர்வாதங்களை வழங்குவதாக மாசாய் வாய்மொழி இலக்கிய மரபு சொல்கிறது. அம்மக்கள் வானவில்லைக் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளமாகப் பாவித்து வருகின்றனர். அந்த மக்களிடம் கறுப்பு, சிவப்பு என்னும் இரண்டு கடவுள் இருக்கின்றனர். கறுப்புக் கடவுளை நன்மை செய்கிறவராகவும் சிவப்புக் கடவுளைக் கோபக்கார, தீங்கு விளைவிக்கும் கடவுளாகவும் பார்க்கின்றனர். ஆப்பிரிக்கர்களுக்குக் கறுப்பு நிறக்கடவுளால் மட்டுமே நன்மை செய்ய முடியும். சிவப்புக் கடவுள் தீங்குதான் விளைவிக்கும் என அவர்கள் நம்புவது வெள்ளையர்களின் காலனிய ஆதிக்கச் சித்தாந்தந்திற்கு எதிரான வலுவான குரலாகும்.
ஆவிக் கதைகள்
தான்சானியாவின் கடலோரப் பகுதிகளில் வழங்கும் கதைகளில் ஆவி தொடர்பானவை அதிகமிருக்கின்றன. சான்றாக, நீர்ப்பெண் இடம் பெறும் ஓர் ஆவிக்கதையைக் கூறலாம். கடலின் கரையோரத்தில் ‘ஜும்பே’ என்ற ஒரு மீனவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் கடலில் வலை போட்டபோது ஓர் அழகான பெண் சிக்கினாள். அவனுக்கு அவள் ‘நீர் மனுஷி’ (Mermaid) என்பது தெரியவில்லை. ‘என்னை விட்டுவிடு, நான் உனக்கு உதவுவேன்’ என்று சொன்னாள். ஜும்பே விட்டுவிட்டான். அந்த நீர்ப்பெண் மறைந்தாள். மறுநாள் வலையில் நிறைய மீன்கள் மாட்டின. கடலில் புயல் ஏற்படும் போதெல்லாம் பல படகுகள் மூழ்கின. ஆனால் ஜும்பேயின் படகு மட்டும் பாதுகாப்பாகச் கரை சேர்ந்தது. அந்த நீர்ப்பெண் அவனுக்கு உதவிக்கொண்டு இருந்தாள் என்பதாகக் கதை அமைந்திருக்கிறது. இந்த வகைக் கதைகள் தான்சானியக் கடலோர மக்களுக்கும் கடலுக்குமான ஆழமான உறவை வெளிப்படுத்துகின்றன.
ந்யாம்வேஸி மக்களின் ‘சந்திரன் மக்கள்’
‘ந்யாம்வேஸி’ (Nyamwezi) தான்சானியாவின் இரண்டாவது பெரிய மக்கள் இனம். அந்தச் சொல்லுக்கு ‘சந்திரனின் மக்கள்’, ‘மேற்கத்திய மக்கள்’ என்று பொருள். டபோரா, ஷின்யாங்கா, ம்வாஞ்சா முதலிய பகுதிகளில் பெருவாரியாக வாழும் வேளாண் குடியான இவர்களின் வாய்மொழிக் கதைகளில் சந்திரனுடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கிறது. சான்றாக, ‘ந்யாம்வேஸி’ என்னும் கதையைச் சுட்டலாம். கதை, ஆரம்பத்தில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்தான். அப்போது மனிதர்கள் அவனுடன் பேசலாம், அவனது ஒளியில் தினமும் வேலை செய்யலாம். ஒரு நாள் ஒரு கிழவி தன் குழாயால் சந்திரனைத் தட்டிவிட்டாள். சந்திரன் வலியால் பின்னோக்கிச் சரிந்தான். பிறகு வானத்தில் ஏறி இப்போது அவன் தூரத்தில் இருக்கிறான் என்பதாக அமைந்திருக்கிறது. இது ந்யாம்வேஸி மக்களின் சந்திரக் காலண்டருடனான தொடர்பை விளக்குகிறது. அவர்கள் இன்றளவும் வேளாண்மையில் சந்திரச் சுழற்சியைப் பின்பற்றுகிறார்கள். மழைக் காலத்தைக் கணித்து விதைக்க அவர்களுக்குச் சந்திரனின் நிலைகள் உதவிக்கொண்டு இருக்கின்றன.
இதைப் போல ‘ஹெஹே’ (Hehe) மக்களின் வீரக் கதைகளும் குறிப்பிடத்தக்கன. தென் மலைப்பகுதிகளில் (Southern Highlands) வாழும் ஹெஹே மக்கள் 19ஆம் நூற்றாண்டில் ஜெர்மனின் காலனிய ஆட்சிக்கு எதிராக வீரமாகப் போரிட்டவர்கள். சிகே உட்வல்லே (Chief Mkwawa) என்பவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். அவர்களிடம் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடந்த மோதல், அதில் மனிதர்கள் பெற்ற வெற்றியைச் சிறப்பித்துச் சொல்லுதல் என்பதான கதைகள் நிறைய இருக்கின்றன.
தென்கிழக்குத் தான்சானியாவில் வாழும் ‘மகொண்டே’ (Makonde) மக்கள் தச்சு, மரச்சிற்ப வேலைகளுக்குப் பிரபலமானவர்கள். அவர்களின் கதைகளில் அலியே (Aliwe) சீதாணி (Sheitani) என்ற தீய ஆவிகள் முக்கியமான பாத்திரங்களாக வருகின்றன. கதைக்களம் பெரும்பாலும் காடுகள்தான். காட்டுமரங்கள் அனைத்தும் பேசுகின்றன. இவை மகொண்டேக்கள் இயற்கையுடன் கொண்டிருந்த தொடர்பை வெளிப்படுத்துகின்றன. ஒரு மரத்தை வெட்டும் முன் அந்த மரத்திடம் அனுமதி கேட்க வேண்டும், ஒரு ஆற்றில் இறங்கும் முன் அதை வணங்க வேண்டும் என்ற விதிகள் மகொண்டேக்களின் அன்றாட வழக்கமாக இருந்திருக்கின்றன.
இப்படியாக, தான்சானியப் பிராந்தியங்களில் வசிக்கும் பெரும்பான்மை மக்களின் மொழியாக இருக்கும் சுவாஹிலி, தொன்மையான வாய்மொழி மரபைக் கொண்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வாய்மொழியாக இருந்த சுவாஹிலி இலக்கியங்களை, அந்த இலக்கியத்தின் ‘தந்தை’ என்று போற்றப்படும் ஷாபான் ரோபர்ட் (Shaaban Robert) என்பவர் தான் எழுத்துக்குக் கொண்டு வந்தவர். அவரது கவிதைகளிலும் கதைகளிலும் பாரம்பரிய சுவாஹிலியின் தாக்கம் அதிகமிருந்தன. யூஃபிரேஸ் கேஸிலஹாபி (Euphrase Kezilahabi) போன்ற நவீன தான்சானிய எழுத்தாளர்கள் வாய்மொழி மரபின் வடிவங்களை உள்வாங்கிப் புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கினர். 2021ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னா (Abdulrazak Gurnah) தன்னுடைய எழுத்துகளில் கிழக்கு ஆப்பிரிக்க வாய்மொழி நினைவுகளைத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
(நிறம் ஒளிரும்…)
‘Art from maishahuru.com
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.







Leave a Reply