தலித்துகள் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடையாக இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் பற்றி காலச்சுவடில் வெளியிடுவதற்காகக் கட்டுரை கேட்டு ரவிக்குமார் அழைத்திருந்தார். “பழக்கங்கள் மரபுகள் என்பவற்றின் குறுக்கீடுகள் இல்லாத சட்டத்தின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நான் எழுதி அனுப்பிய கட்டுரை சிறுசிறு வாக்கிய திருத்தங்களோடு அடுத்த இதழில் (ஜூன் 2005) முழுமையாக வெளியாகியிருந்தது. இவ்வாறு என்னுடைய முதல் கட்டுரை காலச்சுவடில் வெளியான போது அதன் ஆசிரியராக அரவிந்தன் இருந்தார். அடுத்த முறை ரவிக்குமாரோடு பேசிக் கொண்டிருந்த போது “நீங்கள் அந்தக் கட்டுரையை விரிவாக எழுதியிருக்க வேண்டும். ஆனால் உங்கள் கட்டுரை அரவிந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். அதன் பிறகு அரவிந்தன் ஆசிரியத்துவத்தின் போதே காலச்சுவடில் ஓரிரு கட்டுரைகள் வெளியாயின. என் எழுத்தில் மற்றுமொரு மாற்றமும் அரவிந்தன் தொடர்பில்தான் நடந்தது. அப்போது நான் மதுரையிலிருந்து வெளியாகி வந்த புதிய காற்று இதழில் நிறைய எழுதி வந்தேன். அவற்றில் சினிமா கட்டுரைகளும் அடங்கும்.
2007 ஆம் ஆண்டின் தொடக்கம் என்று நினைக்கிறேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை சார்பாக அ.ராமசாமி நடத்திய கருத்தரங்கில் நானும் அரவிந்தனும் கலந்துகொண்டிருந்தோம். கருத்தரங்கு முடிந்ததும் அப்போது வெளியாகியிருந்த பருத்திவீரன் படம் பற்றிய பேச்சு வந்தது. படம் பற்றிய என்னுடைய கருத்துகளைக் கேட்ட அரவிந்தன் “இந்தப் பார்வை கண்டிப்பாக எழுத வேண்டியது. காலச்சுவடுக்கே அனுப்புங்கள்” என்றார். குறிப்பான பிரச்சினைகள் சார்ந்தே காலச்சுவடில் எழுத முடியும் என்றிருந்த நான் அனுப்பிய பருத்தி வீரன் திரை விமர்சனம் அடுத்த மாத இதழில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. அந்த மாதம் வெளியான குமுதம் இதழில் “அரசு கேள்வி பதில்” என்ற பகுதியில் தமிழில் தீவிரமாக எழுதும் எழுத்தாளர்களின் பெயர் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. கடைசி வரை என் சினிமா கட்டுரைகளின் வாசகராக இருந்து அவற்றிலிருக்கும் தனித்துவத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார் அரவிந்தன். காலச்சுவடுக்குப் பிறகு வேறு இதழ்களில் பணியாற்றிய காலத்திலும் என்னோடு தொடர்பு கொண்டு கட்டுரைகள் வாங்கி வெளியிட்டார்.
அரவிந்தன் முழுமையான பத்திரிகையாளராகத் திகழ்ந்தார். இங்கு பத்திரிகையாளர் என்றால் குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்தவர்கள், அதற்காக எழுதியவர்கள் என்றே பெரும்பாலும் அறியப்படுகின்றனர். இவற்றிலிருந்து அரவிந்தன் மாறுபட்டிருந்தார் என்று சொல்லலாம். அவர் ஒரே நேரத்தில் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். அடுத்து பல்வேறு தரப்பையும் அவர் ஏற்றிருந்த விதம் முக்கியமானது. அவர் எழுத்தாளராகவும் இருந்ததால் படைப்பூக்கமுடைய பத்திரிகையாளராகச் செயற்பட முடிந்தது. அவர் பலரை இனங்கண்டார், எழுதவைத்தார். பலருடைய முதல் பிரசுரம் அவர் வழியாக நடந்தேறியிருக்கிறது அல்லது பலர் அடுத்த கட்டத்திற்கு நகர காரணமாக இருந்திருக்கிறார். இந்தவகையில் பல பத்திரிகையாளர்களைக் கூறி விட முடியும். ஆனால் இதில் அரவிந்தன் இன்னமும் கூட வேறுபட்டிருந்தார். தன்னுடைய கருத்து சாராதவர்களையும் அவர் இனங்கண்டு எழுத வைத்தார். ஒரு விஷயம் சார்ந்து வெவ்வேறு கோணங்கள் வெளிவருவதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டிருந்தார். இவ்வாறு பல்வேறு தரப்புகள் வெளியாக வேண்டும் என்பதில் மட்டுமல்ல அவை ‘எழுத்தாக’மாறவும் உதவினார். சொற்கள், வாக்கிய அமைப்பு, சொல்லும் முறை, வாசகர்கள் சார்ந்து அவருடைய செழுமைப்படுத்தல் அமைந்தது.
அந்தச் செம்மைப்படுத்துதல் இலக்கணம் சார்ந்தது மட்டுமல்ல. மாறாத இலக்கிய நுட்பத்தையும் சரடாகக் கொண்டிருந்தது. அவருடைய இலக்கிய முன்னோடிகள் வழியாக மொழி குறித்த பிரக்ஞையையும், பயன்பாட்டு மொழி சார்ந்து இலக்கணம் குறித்த கவனத்தையும் அவர் கொண்டிருந்தார். இதுபோன்ற நேரங்களில் தன்னுடைய அரசியல் சார்பை ஒட்டி அவர் திருத்தங்களை அமைத்ததில்லை. என்னுடைய அனுபவத்தில் அவரோடு இரண்டு விசயங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று எழுதிய கருத்தை மேலும் விரிவாக்கவும் கூர்மையாக்கவும் கருத்துகளைச் சொல்வார். இது ஒன்று. எழுதியிருக்கும் கருத்திற்கு எதிரான, மாற்றான பார்வை ஒன்றைச் சுட்டி “இப்படியொன்றும் இருக்கு. அதையும் யோசித்துப் பாருங்களேன்” என்பார். தடை வினா போல் அமைந்து புதிய கேள்விகளுக்கான பதிலையும் உள்ளடக்கி அக்கட்டுரையை விரிவாக்க அச்சுட்டல் உதவியிருக்கிறது. இது இரண்டாவது விசயம். அவர் சுட்டிய விசயம் அவருடைய அரசியல் சார்பா என்பதை விட, நம்முடைய பார்வையை விரிவாக்க உதவியிருக்கிறது என்ற முறையில் அவற்றை முக்கியமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு பத்திரிகையாளராக அவர் செய்த முக்கியமான பணியென்று நான் கருதுவது இனங்கண்டது – எழுத வைத்தது மட்டுமல்ல, இந்தக் கருத்து எழுதப்பட வேண்டியது என்பதைக் கண்டு கொண்டு எழுத வைத்ததுதான். இந்த விதத்தில் நபர்களை விடக் கருத்துகளை மையப்படுத்தி இயங்கியிருக்கிறார் என்று கூறலாம். உரையாடல்கள், சிறு குறிப்புகள் மூலம் அத்தகைய கருத்துகளை அவர் கண்டு கொண்டிருந்தார். பலவேளைகளில் அவரால் எழுதக்கூடியவற்றையும் மற்றவர்களை எழுத வைத்து வெளியிடுவார். காலச்சுவடு, மின்னம்பலம் போன்ற இதழ்களில் சில கட்டுரைகள், தலையங்கங்கள் விசயத்தில் அவரிடம் எனக்கு இந்த அனுபவங்கள் உண்டு. இந்த விசயத்தை நீங்கள் எழுதும் போது பிறரால் சொல்ல முடியாத கோணத்தைச் சொல்ல முடியும் என்று காரணம் கூறுவார். எழுதியனுப்பிய பின்னால் அழைத்து அதில் வெளிப்பட்டுள்ள வேறுபட்ட கோணத்தைச் சொல்லி விடுவார். பத்திரிகையாளனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அவனும் மற்றவர்களுக்கு அந்தச் சுதந்திரத்தை வழங்க வேண்டும். அரவிந்தன் இந்த வகை.
அரவிந்தன் ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பில் (ஆர்எஸ்எஸ்) செயற்பட்டு வெளியேறியவர் என்பதைப் பின்னாட்களில் தெரிந்துகொண்டேன். அவற்றைப் பற்றி அவரோடு பேசியதில்லை. அவரும் சொல்லியதில்லை. அந்த அமைப்பின் முரண்பாடுகளைச் சில நேரம் உரையாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருடைய வாழ்விடச் சூழல் சார்ந்து படிந்திருக்க வாய்ப்புப் பெற்ற சில பண்பாட்டுப் பிடிமானங்கள் தவிர இந்து மேற்பண்பு வாதத்தைத் தம் கருத்துகளாக வெளிப்படுத்திய தொனியை அவரிடம் கண்டதில்லை. பொதுவாக தலித்துகள் தங்கள் மீதான வன்முறை, உரிமை மறுப்பு போன்ற விசயங்களை எழுதும் போது அவை சார்ந்து அவர்களை ஆதரித்து வருபவர்கள் கூட அவர்கள் பண்பாடு தொடர்பான விமர்சனங்கள் எழுதும் போது மெளனமாகிக் கொள்வார்கள். தலித்துகளைப் பண்பாட்டு நிலையில் வறுமையுற்றவர்களாகவே பார்க்கும் நிலை இங்கிருக்கிறது. சமீப வருடங்களில் செல்வாக்கு பெற்று வரும் தலித் வரலாற்றியல் அவற்றை மறுக்கிறது. அவற்றின் மீது உரிமை கோரி எழுதும் போது சாதியமைப்பு, பிராமண அதிகாரம், இந்து மத ஏகபோகம் ஆகியவற்றை மையப்படுத்தி விமர்சிப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இந்த வகையில் நான் எழுதிய விமர்சனங்களை எந்தவித மறுப்பும் இல்லாமல் அரவிந்தன் வெளியிட்டு இருக்கிறார். தனக்குப் பிடிக்காத, தான் ஏற்காத கருத்தாக இருந்தால் அதை முடக்க நினைப்பவர்கள் அதிகமிருக்கும் சூழலில் அரவிந்தனின் இப்பண்பைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
அவர் காலச்சுவடில் ஆசிரியராக இருந்த காலத்திலேயே அயோத்திதாசர் பற்றிய என்னுடைய கட்டுரையை வெளியிட்டார். இந்து தமிழ் திசை நாளேட்டில் நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கட்டுரை எடிட்டிங்கின் போது இதழிலிருந்து அழைத்து யாரேனும் பேசுவர். புத்தர் சிலையே முனீஸ்வரன் சிலையாக வணங்கப்படுகிறது என்பதைப் பற்றி “தலைவெட்டி முனீஸ்வரனும் புத்தரும்” கட்டுரையை எழுதியனுப்பியிருந்த போது அந்த முறை எடிட்டிங்குக்காக அரவிந்தன் தொடர்பில் வந்தார். கட்டுரை பற்றி அவர் கருத்தை அறிய விரும்பினேன். ரொம்ப புதுசா இருக்கு என்றார். கட்டுரையின் உள்ளடக்கத்தோடு உடன்பட்டு அதைச் சொன்னாரா என்று தெரியவில்லை. அத்தகைய கோணம் சொல்லப்பட வேண்டும் என்று கருதியிருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்து தமிழ் திசை சார்பான சித்திரை மலருக்காகக் கட்டுரை கேட்ட போது இன்றைக்குத் தமிழ் அடையாளமாகக் கருதப்படும் ‘திரு’என்பது சிரமண மரபுகளின் ‘திரி’க்கு மாற்றாக பக்தி மரபுகளால் உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதை விளக்கி கட்டுரை எழுதியிருந்தேன். நீளமாக அமைந்து விட்டதே என்பதைச் சொல்லிவிட்டுக் கட்டுரையை பிரசுரித்தார். அதேபோல நீலம் பண்பாட்டு மையத்தின் வேர்ச்சொல் இலக்கிய நிகழ்வுகளில் நான் தமிழிலக்கிய மரபுகளில் இடம்பெறும் சாதி, தலித்துகள் பற்றிய குறிப்புகளை வரிசைக்கிரமமாகப் பேசி வந்தேன். அவற்றில் வைதீகச் சமயங்கள் மற்றும் பிராமண எதிர்ப்புக் கருத்துகள் தீவிரமான தொனியில் இடம்பெற்றிருந்தன. இந்த வரிசையில் இரண்டு கட்டுரைகள் காலச்சுவடில் வெளியாயின. வேறொரு தருணத்தில் இக்கட்டுரை வரிசைகளைச் சுட்டி என்னிடம் பேசிய அரவிந்தன் “இந்தக் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன. இவற்றை ஒரு வரலாற்று வரிசையில் எழுதி நூலாக்குங்கள்” என்றார்.
பல்வேறு தரப்புகளை அனுமதிக்கும் அவருடைய பண்பை பத்திரிகை நடத்துவதற்கான தொழில் உத்தி என்பதாக யாரும் சுருக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. மாறாக அது அவருடைய பண்பாக இருந்தது. இலக்கியம் வழியாக வசப்பட்ட பண்பு அது என்று நினைக்கிறேன். அதனால்தான் பத்திரிகைக்கு அனுப்பப்பட்டவற்றை முழுமையாக வாசித்தார். எழுதியவர்களோடு அவரால் உரையாட முடிந்தது. சமயங்களில் கருத்தைச் சிதைக்காமல் செம்மையாக்கம் செய்தார். பத்திரிகைப் பணியை ஒரு ‘ஜாப்’பாகக் கருதுபவர் இதனைச் செய்ய முடியாது. இன்னாரைப் பிரசுரித்தோம் என்பதை விட அவரை பிரசுரிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய கருத்துகள் எவை என்ற பார்வையே அவருடையதாக இருந்தது.
ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்திலும் வெளிப்படும் தனித்தன்மையைச் சொல்லக்கூடியவராக இருந்தார். அண்மைக் காலமாக அந்தக் கண்ணோட்டத்தில் கூட்டங்களில் பேசக்கூடியவராகவும் மாறியிருந்தார். கடந்தாண்டு நாமக்கல்லில் டி.எம்.கிருஷ்ணா பற்றி அவர் ஆற்றிய உரையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெருமாள் முருகன் பற்றி ஆற்றிய உரையும் இந்த நோக்கில் சிறப்பானது என்பதை அறிந்தேன். பெருமாள் முருகன் பற்றிய உரை உயிர் எழுத்து இதழிலும் வெளியானது. ஆ.இரா.வேங்கடாசலபதி, இமையம் பற்றிய உரைகளையும் இந்த வகைகளில் சொல்லலாம். கருத்து சார்ந்து ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கொள்கிறவர்கள் பற்றிப் பேசும்போதும் அவர்களை எதிரெதிராக நிறுத்தாமல் அவர்களின் தனித்துவங்களை முன்வைத்துப் பேசக் கூடியவராகவே அரவிந்தன் இருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன்பு என் கல்லூரி தமிழ்த்துறைக்குப் பேச அழைத்திருந்தேன். எழுத்தாளர்களைப் பேச அழைக்கும் வரை இல்லாத அச்சம், அவர்கள் பேசத் தொடங்கிய பின்னால் நமக்குள் புகுந்துகொள்ளும். வந்தவர்கள் சிறப்பாகப் பேசாவிட்டால் அதையே குறையாக மாற்றுகிறவர்கள் குறித்த அச்சம் அது. ஆனால் அரவிந்தனின் உரை அந்த அச்சத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவதாக அமைந்தது. அவருடைய உரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. இலக்கியப் பிரக்ஞையும், விமர்சனக் கண்ணோட்டமும் இயைய மாணவர்களை மனதில் வைத்து வழங்கப்பட்ட அந்த உரையைப் பதிவு செய்யாமல் போனது பெரும் வருத்தமே.
இவ்விடத்தில் விளிம்பு நிலைப் பார்வைகளோடு அரவிந்தன் கொண்டிருந்த தொடர்பை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். சென்னைத்தமிழ் பற்றி அவர் கொண்ட ஈடுபாடு அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற எழுத்தாளர்களின் கவனத்திலும் இல்லாதது. சென்னையின் ‘கொச்சைத் தமிழ்’பற்றிய ஒவ்வாமை மொழி சார்ந்தது மட்டுமல்ல அதைப் பேசும் மக்கள் பற்றிய எண்ணங்களோடு தொடர்புடையது என்பதே அவர் பார்வையின் அடிப்படை. இதன் தொடர்ச்சியில் எழுத்தாளர்கள் சிலரின் முக்கியத்துவத்தையும் அவர் உணர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு எழுத்தில் மின்னும் பலரோடு அவர்கள் எழுதத் தொடங்கிய காலத்திலும், எழுத்துப் பயணத்தின் இன்றியமையாத கட்டத்திலும் அரவிந்தனுக்குத் தொடர்பிருந்திருக்கிறது. அரவிந்தன் காலச்சுவடில் ஆசிரியராக இருந்த போது ரவிக்குமார் ஆதவன் என்ற பெயரில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தார். ரவிக்குமாரின் கட்டுரைகள் மட்டுமல்லாது இதழின் தலையங்கம், சிறப்புப் பக்கங்கள் ஆகியவை சார்ந்து தொடர்ந்து அவரோடு உரையாடி வந்தவர் அரவிந்தன். அரசியலுக்குச் சென்று காலச்சுவடோடு கொண்டிருந்த உறவை நிறுத்திக்கொண்ட பின்னாலும் தமிழின் இன்றியமையாத அறிவுஜீவியாக இருந்தவர் ரவிக்குமார் என்ற மதிப்பை அரவிந்தன் குறைத்துக் கொண்டவரில்லை. காலச்சுவடில் ரவிக்குமாரோடு இயங்கிய அனுபவம் தலித் குரல்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவியது. அரவிந்தனின் தலித் அக்கறையைப் பல தரப்புக் கருத்துகளுக்கு அவரளித்து வந்த ஆதரவுகளுள் ஒன்றாக மட்டும் சுருக்கி விட முடியாது. அந்தக் குரலுக்கு அளிக்க வேண்டிய மதிப்பு அளிக்கப்படவில்லை, எனவே அதைச் செய்வதுதான் நியாயம் என்ற பொருளில் அக்கறை கொண்டிருந்தார். அவர்களின் குரலிலிருந்து கற்றுக்கொள்வதற்கான விசயங்கள் இருக்கின்றன என்பதைப் பூரணமாக நம்பினார்.
இதேபோல எழுத்தாளர் இமையத்தோடு கொண்ட உறவு பற்றியும் குறிப்பிட வேண்டும். இமையத்தின் அரசியல் நிலைப்பாடு எல்லோரும் அறிந்ததே. ஆனால் இமையத்தின் படைப்புகள் மீதான மதிப்பீட்டை இந்த அன்றாடம் சார்ந்த அரசியலின் சாயல் இல்லாது பார்க்க முடியும் என்று அரவிந்தன் கருதியிருந்தார். அரவிந்தன் கருத்துகளுக்காக எவர் மீதும் வெறுப்பையோ, கோபத்தையோ காட்டியவரில்லை என்று கூறுவதன் பொருள் கறாரானவர் இல்லை என்பதல்ல. படைப்பின் அழகியல் குறித்து கறாரான பார்வை கொண்டிருந்தார். அதைச் சார்ந்து தன் கருத்துகளை எந்த இடத்திலும் தயக்கமில்லாமல் வெளிப்படுத்தியவராக இருந்தார். கடைசியாக அவர் கலந்து கொண்ட ஓசூர் புரவிக் கூட்டத்தில் நக்கீரன் எழுதிய காடோடி நாவல் மீது அத்தகைய விமர்சனத்தைத் தயக்கமில்லாமல் வெளிப்படுத்தினார். அதற்கெனப் படைப்பு சார்ந்த காரணங்கள் அவரிடமிருந்தன. இமையத்தின் நாவல்கள், சிறுகதைகள் குறித்து அவரெழுதிய 10 கட்டுரைகள் அடங்கிய “இமையம்: அடையாளத்தை அழித்துக் கொள்ளும் கலைஞன்”(க்ரியா வெளியீடு) என்ற தலைப்பில் நூலொன்றையும் வெளியிட்டார். இமையத்தின் படைப்பு முக்கியத்துவத்தைச் சொன்ன அந்நூலில் கறார்த்தன்மையின் சிறு நெகிழ்வைப் பார்க்க முடிந்தது. இமையத்தின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பு நெகிழ்விற்கான காரணமாக அமைந்து விட்டதோ என்று தோன்றியது.
அரவிந்தன் பற்றிப் பேசுவதற்கு அதிக விசயமுடைய இன்னொருவர் ஜே.பி.சாணக்யா. அவர்களின் நட்பைப் பூரணமாக விவரிக்கக்கூடிய அளவுக்குத் தகவல்கள் என்னிடமில்லை. ஆனால் இருவருக்குமிடையே அத்துணை ஆழமான நட்பு நிலவியது. அரவிந்தனின் மரணம் கே.பி.சாணக்யாவைப் பெரிய அளவில் குலைய வைத்திருக்கும் என்பது இருவரின் நட்பை அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். சாணக்யா எழுத வந்த காலத்திலிருந்து தொடரும் நட்பு அது என்று நினைக்கிறேன். எழுத்தைத் தாண்டியும் இருவரின் நட்பும் புரிதலும் அமைந்திருந்தது. கடந்தாண்டு (2025) நாகர்கோவிலில் நடந்த “அரவிந்தன் 60” நிகழ்வில் இருவரின் நட்பையும் பிணைத்து சாணாக்யா பேசிய பேச்சு பெரும் நெகிழ்வைத் தந்ததாக நண்பர்கள் கூறினர். அதேபோல விளிம்பு நிலை சார்ந்த புதிய எழுத்துகளை ஊக்குவிப்பதிலும் அரவிந்தன் அக்கறை காட்டி வந்தார். தமிழ்ப் பிரபாவின் முதல் நாவல் பேட்டை. பலர் தான் செய்யாத வேலைக்காகப் பெருமை வந்து சேருமானால் மெளனமாக இருப்பது மூலம் அதை உண்மையாக்கி விட முயலுவர். தமிழ் பிரபாவின் பேட்டை நாவலின் எடிட்டிங் பற்றி பல கருத்துகள் நிலவி வந்த சூழலில் “காலச்சுவடுக்கு அனுப்பப்பட்ட நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்துப் பதிப்பிக்க வேண்டிய நாவல், நன்றாக எடிட் செய்து பதிப்பித்தால் முக்கியமான படைப்பாக அமையும் என்று பரிந்துரைத்தது மட்டுமே நான்” என்று கூறிக் கொண்டவர் அரவிந்தன். தான் ஆதரிக்கிறேன் என்ற உரிமைக் கோரல் இல்லாமல் விளிம்பு நிலை அக்கறைகளைக் கொண்டிருந்தவர் அரவிந்தன். கடந்த வருடங்களில் ஊ.முத்து பாண்டி, திருக்குமரன் கணேசன் ஆகியோர் நூல்கள் காலச்சுவடு மூலம் வெளிவருவதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார் அரவிந்தன்.
அரவிந்தன் பற்றித் தனிப்பட்ட முறையில் சொல்வதற்கு நிறைய அனுபவங்கள் இருக்கின்றன என்றாலும் அவருடைய ஒழுங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. அவரின் வாழ்வு ஒழுங்குகள் கை கூடாவிட்டாலும் எழுத்து ஒழுங்குகள் தேவை என்று நினைப்பதுண்டு. அந்த அளவிற்கு எழுத்தில் ஒழுங்குகளைப் பின்பற்றியவர். பிப்ரவரி இறுதியில் நாங்கள் ஒரு கூட்டத்திற்காக பெங்களூருவில் தங்கியிருந்தோம். அங்கு எதிர்பாராமல் இடுப்பு பிடித்துக் கொண்டு கடும் வலியால் துடித்தேன். அரவிந்தன் அங்கேயே சில உடற்பயிற்சிகளைச் சொல்லித் தந்தார். ஊருக்கு வந்த சில நாட்களில் இடுப்பு வலிக்கான அறிகுறிகள் திரும்பவும் தென்பட ஆரம்பித்தன. நடைப்பயிற்சியிலிருந்த நான்”வீட்டுக்குப் போனதும் அரவிந்தனுக்கு போன் போட்டு முன்பு சொல்லித் தந்த பயிற்சிகளைத் திரும்பக் கேட்டுப் பின்பற்ற வேண்டும்” என்று நினைத்துக் கொண்டே வந்து வீட்டில் போனை எடுத்தேன். அரவிந்தன் காலமான செய்தி வந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். நான் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அரவிந்தன் மூலமாக கற்றுக் கொண்ட விசயங்களுக்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். கற்றுக் கொள்ள முடியாத விசயங்களுக்காக வருந்தினேன்.
அரவிந்தனுக்கு அஞ்சலி.
ஸ்டாலின் ராஜாங்கம் திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தலித் வரலாறு, தலித் இலக்கியம், அயோத்திதாசரியம் ஆகிய துறைகளில் ஆய்வுகளைச் செய்து வருபவர். அயோத்திதாசர் வாழும் பௌத்தம், ஆணவக் கொலைகளின் காலம், எண்பதுகளின் தமிழ் சினிமா, தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம், சாதியம் கைகூடாத நீதி உட்பட பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.








Leave a Reply