கனவின் எல்லையில்
எல்லாம் உண்மை
ஆனால்
அந்த உண்மை
எங்களுக்குச் சொந்தமல்ல
சுவர்க் கடிகாரம்
அதிகாரத்தின் நேரத்துக்கு
எதிராக ஓடுகிறது
நாம் மட்டும்
அதன் நிழலாக நிற்கிறோம்
ஜன்னல் கைப்பிடிகள்
எங்கள் மூச்சை
அளந்து ஆணவத்திற்கு அப்பால் எறிகிறது.
ஆச்சரியத்தின் கதவுகள்
பூட்டப்பட்டுள்ளன
அக்கறையின்மை
காவலாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது
மதவெறி
சாவியைத் தன் கொம்புகளில் தொங்கவிட்டிருக்கிறது
நட்சத்திரங்களை நோக்கும்
ஏணியின்
நடுவே
எங்கள் கனவுக் கம்பங்கள்
உடைந்து விழுகின்றன
மென்மை
பலவீனமாகப் பெயரிடப்படுகிறது
இழப்பு பழக்கப்பட்ட மிருகமாய்ப் பக்கத்தில் படுத்திருக்கிறது
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கு முன்
அனுமதி கேட்கின்றன
அவை அதிகாரத்தின் படிகளில் பூக்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன.
கனவில் மட்டும்
நாங்கள்
விதிகளை உடைக்கிறோம்
கோட்பாடுகளை எரிக்கிறோம்
அறிவியலைச் சந்தேகிக்கிறோம்
விழித்தவுடன்
மீண்டும்
அடிமைகளாகிறோம்
கனவில் மட்டும்
மது அனுமதிக்கப்படுகிறது
விழித்தவுடன்
கண்ணீருக்கான வரி விதிப்பைக் காண்கிறோம்
சந்திரன் அருகே
தலையைச் சாய்க்கச் சொல்கிறாய்
சாய்க்கிறோம்
நகரின் விளக்குகளின் நிறச்சுமையைக்
கேட்கச் சொல்கிறாய்க் கேட்கிறோம்.
இவ்வளவேன் எங்களைக் கொண்டு எங்களையே மேய்க்கும்
உங்களால்தான்
பிரபஞ்சம் தன் தன்மையை இழந்து
மீளமுடியாமல் கிடக்கிறது.
♠
மூடிய அறையின் சப்தம்
மூடிய கதவுகள் பேசுவதைக்
கேட்க யாரும் இல்லை
உள்ளே அடைக்கப்பட்ட காயம்
சுவரைத் தட்டிக்கொண்டு அழுகின்றன.
நினைவுகள் கறுப்பாகக் கனத்து
அதே மூலையில் உட்கார்கின்றன.
ஒரு காலத்தில்
ஆறுதலாய் இருந்த அறை
இப்போது மாயப் பூட்டுடன் நிற்கிறது
அதன் பின்னால் நான் இன்னும்
அமைதியாய்ச் சிதைந்து கொண்டிருக்கிறேன்.
வலி என்னைத் தட்டிக்கொண்டே இருக்கிறது,
யாரும் திறக்கவில்லை.
அந்த அமைதியின் நிலம்
என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
கதவு மூடியதே என் அனுமதியின்றியே.
♠
கடிகாரத்தின் பொய்
கடிகாரம் நகர்கிறது,
ஆனால் என் துடிப்புகள் நின்றுவிட்டன.
மெதுவாகத் திறக்கிறேன்
என் பச்சை முகம்
என்னைப் பயந்திடச் செய்கிறது
நேரம் என்னை விட்டு ஓடுகிறது
நான் அதை எப்போதும் என்னோடு அமர்த்த விரும்பியதில்லை
நொடிகள் உப்பாய்க் கசிகின்றன
யாரும் அதை நம்பவில்லை
மணி ஒலிக்கும் போது
என் இதயம் உடைந்து குலுங்குகிறது
கடிகாரத்தின் ஊசிகள்
கோபத்தில் கத்துகின்றன
நேரம் ஒரு மருந்து
அதன் நடுக்கத்தில்
சலித்துக் கொள்கிறது வாழ்க்கை.
♠
நீலச் சொல்
இன்று நிலா
அதன் தன்மையில் இல்லை
அது நீலமாக மாறியிருந்தது
ஒளி எல்லாம் ஒடுங்கி
இருள் மட்டும் இறுக்கமாய்ச் சுடுகிறது
நட்சத்திரங்கள் பயந்து
உடலைச் சுயவிசாரனைக்கு அழைத்துக் கொண்டன
அது ஒளியைக் கொடுக்கவில்லை
அதன் வலியை நீலத்தால் பகிர்கிறது
இரவு முழுவதும்
ஒரு நாள் மறைவுக்காகக் காத்திருக்கிறது.
♠
நிழலின் நாடி
என் நிழல் மட்டும் என்னுடன் இருக்கிறது
இடதும் வலதுமாய்
அது என்னை விட்டுப் போகவில்லை
ஒளி இருக்கும் வரை என்னைத் தொடர்கிறது
நிழல் என்னை விடாப்பிடியாய் வைத்திருந்தது
நான் யாருடன் இருப்பேன்?
அது என் வடிவம்
இருந்தாலும் எனக்கு அந்நியமானது
நான் சிரித்தால் அது சிரிக்காது,
நான் அழுதால் அது அழுதிடாது
நிழல் ஒரு போலி
அது என்னைப் பிரதிபலிக்கிறது
ஆனால் என்னை உணரவில்லை.
நான் மட்டும் உணர்கிறேன்,
என் தனிமையை.
Art By : Tony Kalemba







Leave a Reply