Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

21 கவிதைகள் : கல்யாணராமன்

கல்யாணராமன் .
கல்யாணராமன் .
May 1, 2026
21 கவிதைகள் : கல்யாணராமன்

88. ஒரு ஒரு ஒரு

ஒரு வீடியோ கால் வந்தது ஒரு பாபா படம் தெரிந்தது
ஒரு பெண் குரல் ஒலித்தது ஒரு வலிநீக்கி விற்றது
ஒரு கண்திறந்தது ஒரு கண்மூடியது புதுத்தியானமாம்
ஒரு மலை மேல் ஒரு குருவி ஒரு கடல் மீது ஒரு படகு
ஒரு பல்நிற ஜொலிப்பினூடே ஒரு கொலாஜ் முகம் நீட்ட
ஒரு ஃபியூசன் மோனம் அதிர ஒருகணம் வெறுந்திரை
மறுகணம் பெருமழை ஒரு தலைவெட்டி அரிவாளில் ஒரு
செக்கச் சிவந்த ரோஜா ஒரு சாவு வீட்டுக் கானா பூனையின்
யானைப் பிளிறல் திடீர் நிசப்த அசலனம் ஒரு சுழி மாறும்
மூச்சு ஒரு மரம் தாவும் குரங்கு ஒரு பிருமாண்ட எறும்பு நீர்
சொட்டும் ஒலி புதிய மாயாஜாலம் ஒரு பர்சனல் வெளி காலி
ஒரு புத்திக் கொள்முதல் லாபம் ஒரு வீடியோ காலையும் நீ
எடுக்காதே முடிந்தால் ஒவ்வொரு மணிக்கும் ஒரு குட்டிக்
கரணமிடு நூறு வயது நீடூழி வாழ்வாய் நீ நோய்நொடியின்றி

89. தூசு

ஒரு வீட்டில் ஒரு ஜோடி ஏசியே போதும் இவளுக்கு
ஃபேனும் வேண்டும் இவனுக்கு சூரியவிடியலில் நடந்து
பேப்பருடன் திரும்புவாள் இழுத்துப்போர்த்தித் தூங்குவான்
இவன் குளிக்கப் போனால் முக்கால் மணியாவது பிடிக்கும்
இவளுக்குப் பத்தே நிமிடம் தினமும் இட்லியே இவனுக்கு
இஷ்டம் எனில் இவளோ இயற்கை உணவின் பரம ரசிகை
நன்றாகவே ஸ்விஃப்ட் ஓட்டுவாள் முன்சீட்டில் ஆப்பிள்
தின்றபடி மெதுவா… பார்த்து ஓட்டுப்பா என்பான் இவன்
டிரஸ் வாங்குவதும் இவளே ஜூரம் தலைவலி என்றால்
லேட்டஸ்ட் மாத்திரை தருபவளுக்கே சம்பளமும் அதிகம்
எப்போதும் ரீடிங் ரூமில் இவள் டிவி ஹாலில் இவன் உயிருடன்
இருந்தால் மட்டும் போதும் எல்லாமும் இவளே பார்த்துவிடுவாள்
கல்லூரியில் உடன்படித்த காலத்தில் ஸ்டடி டூர் போனபோது
மலையுச்சியிலிருந்து குதித்துவிடுவதாய் மிரட்டிக் கைத்தலம்
பற்றிவிட்டான் சரி குதியெனத் தள்ளியிருக்கலாம் இவள் நாடி
நரம்பில் கலந்த பரிவு தன் தலையில் தானே மண்தள்ளிவிட்டது
ஒரு வீட்டில் ஒரு ஜோடி இவனே இகபரம் இவளுக்கு அவள்
என்ன பெரிய லோகமாதா என் இவள் கால் தூசாவாளா அவள்

90. பட்சி

சென்ற வாரம் ஊரிலிருந்தேன் அங்கெனக்கு யாருமில்லை
கூடப்படித்தவன் வரச்சொன்னான் முப்பதாண்டுக்குப் பின்
கிடந்த கோலத்தில் என் நவநீதக்கிருஷ்ணனைப் பார்த்தேன்
அவன் பிரகாரத்தில்தான் என் பால்யம் நிறைந்து கழிந்தது
ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் வேதமும் பிரபந்தமும்
கோஷ்டி கானமாய் உருப்போட்ட மண்டபம் உற்சாகம் கட்டிப்
புரண்ட அக்காலம் முன்பார்த்திராத ஒரு நிசப்தத்துடன் இப்போது
பாழோய்ந்திருக்கிறது கோதை நாச்சியாரும் மாறனும் என் நெஞ்சு
புகுந்தது அங்கேதான் கண்டாமணி நாதத்தில் சுயம் மறந்த லயம்
முங்கியெழுந்த அகண்ட காவேரி எல்லாமும் எங்குப் போயின
இது வேறு நான் இந்த மண் எனக்கு இன்று முழுதும் அந்நியம்
நில்லாப் பிரவாகம் முந்திவிட்டது நான் பின்தங்கியே நிற்கிறேன்
ஒருவேளைகூடப் பட்டர் வருவதில்லையாம் அறுபது வீடுகளும்
திரண்ட பழைய மார்கழி மாதம் எங்கே நித்தியவிபூதிப் பித்தின்
மயக்கம் மண்பாண்டம்போல் விறகடுப்புப்போல் அகல்தீபம்போல்
பூசனிப்பூக்கோலம்போல் பழுதுபோய் அழிந்தொழிந்ததோ எனது
அகம் முங்கிய பரமெலாம் இகமாயிற்றோ எங்கிருக்கிறாய் எப்படி
இருக்கிறாய் என்ன செய்கிறாய் நீ எதுவும் எனக்குத் தெரியாது
தேடவுமில்லை தொலையவுமில்லை கால் நூற்றாண்டை நான்
எப்படியோ கடந்துவந்துவிட்டேன் இன்னுமின்னும் என்று விடாது
முட்டிமுட்டித்தான் பார்க்கிறது உறைந்த அபூர்வ ருசியின் எச்சம்
எப்படிச் சொல்வேன் கோவிலும் விக்கிரகமும் வெளித்தெரிந்தாலும்
உள்மன இருளில் இழுபடுபவை வெறும் கருட நிழல்கள் மட்டுமே

91. அந்தி

நீ ஒரு கிளி என்று ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் பறந்துவிட்டாள் நீ ஒரு பனித்துளி என்று
ஒருத்தியிடம் சொன்னேன் அவள் மறைந்துவிட்டாள்
நீ ஒரு பசு என்று நான் ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் மரத்துவிட்டாள் நீ ஒரு அரிய ரோஜா என்று
ஒருத்தியிடம் சொன்னேன் அவள் குத்திவிட்டாள்
நீ ஒரு வீணை என்று ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் இறுகிவிட்டாள் நீ ஒரு மயில் என்று நான்
ஒருத்தியிடம் சொன்னேன் அவள் நழுவிவிட்டாள்
நீ ஓர் அருவி என்று ஒருத்தியிடம் சொன்னேன்
அவள் வறண்டுவிட்டாள் ஒவ்வொருத்திக்கும் ஒன்று
என்றாலும் எல்லாரும் பூரித்திருக்கிறார்கள் ஒருத்திக்குமே
ஒருகுறையுமில்லை மாலைச் சூரியனையும் எகிறிவரும் சிறிய
அலைகளையும் கண்களால் அளந்தபடியே கடற்கரையில் தனித்து
நடக்கையில் தோன்றுகிறது எவ்வளவு அதிருப்தி இருந்தென்ன
ஒரு சிறு திருப்தியும் இருக்கிறதே சுய ஏமாற்றின் மெய்ம்மையாய்

92. வாள்

மழை வரும் முன் குடை பிடித்துவிடுகிறாய் குறுக்கே ஒரு
நாய் புகுவதற்குள் பிரேக் போட்டுவிடுகிறாய் தலைவலிக்கு
முந்தியே அனாசின் விழுங்கிவிடுகிறாய் ஷேர் ஏறுவதற்குள்
விற்று நஷ்டப்பட்டுவிடுகிறாய் பச்சைவிளக்கு எரிவதற்குள்
சிக்னல் தாண்டிவிடுகிறாய் உன் எதிரி தோன்றும் முன்னே
வாள்சுழற்றிக் காற்றை வெட்டிவிடுகிறாய் காதலிப்பதற்குள்
குழந்தையே பெற்றுவிடுகிறாய் மோட்சம் தருவதற்குள் நீ
கடவுளையே கொன்றுவிடுகிறாய் மாயை ஏது யாவும் சாயையே

93. விலை

என்ன மாயம் இலையும் முள்ளும் தராத ஒரு முழுமன
நிறைவைப் பூ தருகிறதே என் வீட்டு மொட்டைமாடித்
தொட்டியில் பூத்த ரோஜாவைப் பறித்துச் சூடிக்கொள்ளக்
கண்டவருக்கெல்லாம் பேராசை மூண்டாலும் பூத்தது ஒரே
ஒரு பூதான் யாருக்குத் தருவது பார்த்து மகிழவே அது
சூடிக்கொள்ளக் கிடையாது என்றது ஃப்ளாட் கமிட்டி
மறுநாள் காலையில் செடியில் பூ இல்லை புகாரா தர
முடியும் இவளா அவளா யாரைத்தான் ஐயுறுவது மண்
தொட்டியைப் போட்டுடைத்து வாடிய இளஞ்செடியைத்
தூக்கிக் குப்பை லாரியில் வீசிவிட்டேன் ஏதோ ஒரு
மேல்மாடியிலிருந்து எறியப்பட்ட ரோஜாவும் லாரியில்
போய்ச் சேர்ந்தேதான் விழுகிறது கண்ணீர்த்துளியுடன்
நேசிப்பின் விலையா இது லாரி போய்விட்டது உடனேயே
எட்டடுக்ககம் முழுதும் நாசிக்குப் பிடிபடா ஒரு நாற்றம்

94. பலூன்

தேன் என்பது சொல் மான் என்பது உயிர் சில
பல வேளையில் மானைவிடத் தேனே முக்கியம்
தேனைவிட மான் மிடுக்குதான் ஆனால் தேனுக்கே
ருசி கூடுதல் கையும் காலும் கொம்பும் தேனுக்கு
முளைத்து மானானால் அது மயங்கித் தேனானால்….
ஒருத்தி இருக்கிறாள்… அவளுக்குக் காது சிறிது மந்தம்
என்ன நான் சொன்னாலும் சரி சார் என்பாள் என் சிறு
உதட்டசைவை டக்கெனப் பிடிப்பாள் அப்படுசுட்டிக்குக்
கூர்ப்பான கண் நுனி சிவந்த மூக்கு முகம் பூக்கும் முறுவல்
சர்வதேச அநாதை ஆசிரமத்தில் செலவுக் கணக்கெழுதுகிறாள்
என் கார் நின்றவுடன் அவள் ஓடிவந்து கதவு திறப்பாள் நான்
கிளம்புகையில் கனிவாய்க் கதவை மூடுவாள் தினந்தினமும்
நடக்கும் காட்சி இது என்ன வேணும் என்றால் ஏதுமில்லை
என்ற பதிலே வரும் அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு இன்னும்
ஏறவில்லை அந்தக் கவலை அவளசைவுகளிலும் இல்லை
ஒரு நாய்க்குட்டியின் துறுதுறுப்பு நம்பகமான பணிவடக்கம்
காலைப் பனித்துளியின் தூய்மை எத்தனை உற்சாகம் எத்தனை
உள்நெகிழ்ச்சி உயிர் எதனால் உடலில் ஒட்டுகிறது கற்பனைக்கு
ஏன் இவ்வளவு சக்தி எல்லாம் இந்நான் படுத்தும் பாடு மான் வருக
தேன் தருக மயர்ந்தயர்வோம் தன்மறதியில் என்ன இருக்கிறது
வாய்வைத்துக் காற்று ஊதிய பலூனாய்த் தன்நினைவல்லவோ….

95. சிலந்தி

ஒரு மலர்த் தோட்டத்தின் எல்லா மலர்களிலும் போய்
எந்த வண்டாலும் அமரவே இயலாது ஓயாதொழியாது
எண்ண அலையே சுழல்கிறது இறங்கிவரும் நட்சத்திரம்
வானத்தை இழக்கிறது மண்பாவாத மென்மையான கால்
நிலவேறி அயர்கிறது உள்புழுங்கும் அம்மோனம் இலைப்
புழுவாய் நெளிய ஆடியதிர்கிறது அடிமரம் இயல்பில் ஊறிக்
கிளம்பும் பச்சைமொழி ரணமாற்றும் மருந்தாகிறது விழுங்க
வரும் பாலையைப் புரிந்துகொண்டு மலரும் வண்டும் கூடி
மீண்டும் நட்புறுகின்றன சற்றே இடைத்தங்கிநகர்தல்தான்
ஓடிக்கொண்டேயிருப்பதில்லை தோள்மாற்றிய பாவனைதான்
புதுப்பிறப்பில்லை மேலும் கீழுமாகக் குடைராட்டினம் சுற்றட்டும்
நினைவே சிலந்தி இரைச்சலே உள்மனப் புண்ணுக்கு மாமருந்து

96. அநாமி

இப்போதெல்லாம் யார் கோலம் போடுகிறார்கள் என்று
நீங்கள் கேட்டுவிட்டால் போதும் உடனேயே அவள்
துள்ளியெழுந்து திருப்பியடிப்பாள் இன்று எவனுக்குத்
தனிவீடு வாங்கத் துப்பிருக்கு நீங்கள் பார்த்துத்தான்
பேசவேண்டும் அவளிடம் வகுப்பறையில் ஒருநாள் யுரேகா
என்றபடி நிர்வாணமாய் ஓடிய ஆர்க்கிமிடீஸ் பற்றிப் பாடம்
சார் ஒரு சிறு சந்தேகம் எந்தக் காலத்தில் ஒரு பெண் இப்படி
ஓடமுடியும் என்றாள் அதற்கு ஒருவாரம் அவள் சஸ்பெண்ட்
ஏழுநாளும் டைட்டானிக் பார்த்தாள் கடலும் கப்பலும் காதலும்
எளிமைக்கு இடமேயில்லையா சார் இந்த உலகில் என்றாள்
எப்போதவள் என்ன பேசுவாள் என்று யாருக்குத்தான் தெரியும்
அவள் வாயே ஓர் அணுகுண்டு கற்பூர ஆரத்தி காட்டுகையில்
சிகரெட் பற்றவைக்காவிட்டாலும் நவக்கிரகம் ஒவ்வொன்றுக்கும்
முத்தமிட்டுப் பீதி கிளப்பியவளாச்சே இப்போது எங்கிருக்கிறாள் அப்
பித்தி என்பதுதானே உம் வினா வேறெங்கிருப்பாள் வீடுவீடாகத்
தேடுங்கள் நாலு சுவருக்குள்தான் அந்நாமங்கெட்டவள் நிற்பாள்

97. மாடு

கொம்பு சீவப்பட்ட ஓர் இளங்கன்று என்ன செய்யும்
சீவிவிட்டவனையே சீண்டிப் பதம் பார்க்கத் துள்ளும்
மூக்கணாங் கயிறிட்டு நீ வீட்டுப் பிராணியாக்கினாலும்
கனலும் ஊமைக் கோபம் குட்டிச்சுவரையேனும் முட்டிச்
சாய்க்காமலிராது எவ்வளவு துள்ளியென்ன ஒருநாள் அது
வண்டிமாடாகி விடும் பொங்கல் முன்தினம் கழுத்தில் விழும்
மாலை அதற்கு மகிழ்ச்சியா தரும் ஏதோ ஓர் இளைப்பாறல்
துடுக்கடங்கிப் பேதுற்றுக் கிழடு தட்டித்தானே வெறிக்கும்
அதன் மேனி புகும் தார்க்குச்சி கொசுக்கடி வலிகூடத் தராது
விலகி நடக்கும் அந்த வாஞ்சை உயிர்ப்பலியா கேட்கிறது
உறுமி மேளம் ஓங்காரமிடத் தலைகலைக்கிறது காற்று
கழுநீர் ஊற்றும் பையன் அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு
குதூகல முத்தமிடுகிறான் கருமி வானம் திறந்தூற்றுகிறது
அசுத்தங்களை அடித்தபடி செல்கிறது அவளாகும் மழை

98. களம்

குறிவைத்தால் குறிவைத்ததுதான் நீ அம்பைப் பிடுங்கலாம்
கண்ணைப் பிடுங்கமுடியாது அடிக்கசடைத் தேடிப்போயடிக்கும்
பாதியில் விலக ஏலாது எங்கும் ஓடவும் முடியாது பொறி புலன்
சுழன்றாலும் களமாடித் தானாகணும் நேர் நேரே எதிர் எதிரே
அப்படியும் ஈடுநின்று வசங்கிய உன் பிடி மீண்டால் இலக்கைத்
திருப்பலாம் ஆனால் எப்படியானாலும் பலி நிச்சயம் நீ நெஞ்சு
நிமிர்த்தலாம் முதுகும் வளைக்கலாம் புலனில்லை பிரச்சனை
கிழங்கின் மூலம் விழுதின் வேர் அதைப் பறிக்காமல் எதைக்
கிள்ளியென்ன போக்குக்காட்டிப் போக்குக்காட்டிப் போகிறது
பொழுது எப்படியோ நழுவியதைக் கண்குத்திக் கொத்தினாலும்
தப்பியது தப்பியதுதான் மார்புக்கு வில்லை வளைத்தவளேதான்
அடிபட்டெழுகிறாள் பகையே நட்பாகிக் கடந்துவிடுகிறது காலம்

99. நாண்

விடியும்போதும் அகம் துவண்டிருக்கிறது எப்படியதைத் தட்டி
எழுப்பி என் இயல்புக்குப் பழக்குவதெனத் தெரியவில்லை
மலையுச்சிக்குப் போனாலும் கீழே குதிப்பதற்கே பரபரக்கிறது
வேண்டாதவை வரிசை கட்டுகின்றன ஆரோக்கியமுதைக்க
உள்நிழல் மோதியுடைகிறது கண்ணீர் சிதறுவதற்குள் ஒருகை
எங்கிருந்தோ நீள்கிறது மூளைக்குழாய் வெடிக்கவே உணர்வு
நரம்பு அறுபட்டு எல்லாமே ஸ்தம்பிக்கிறது உதறுகிறது மூச்சு
முதுகில் கண் முளைக்கிறது ஈரந்தேடிக் கனைத்து நகர்கிறது
குதிரை லாடம் அடித்த பாதத்தில் ஒரு திடீர் வேகம் இரைப்பின்
அலயம் உச்சந்தலை மீதேறுகிறது கல்லாகும் சொல்லின் நாண்
இழுக்க மிதக்கிறது மனத்தேர் ஒரு முடிவிலிருந்து முதற்கணம்
நடுங்கும் நாடியிலோடுகிறது என் இஷ்டத் தேவதையின் ரத்தம்

100. மேற்கடத்தல்

பேரீச்சம் தின்று அசைபோடும் தொண்ணூறு வயது
மாமியார்ப் பசு மீண்டும் ஒரு கன்றுக்குட்டியாகிறது
புதிதாய்க் கொலு வைக்கிறாள் பழைய பெண்டாட்டி
தன் வால் சுருட்டிய அனுமார் வேடிக்கை பார்க்கிறார்
பட்டாபிஷேகக் கோலத்தில் சக்கரவர்த்தித் திருமகன்
மிதிலைச் சீதை பூச்சூடி நிற்கிறாள் உள்விழி பாய்கிறது
ஜோடிப்பொருத்தம் வெளியேதான் உறுமலுமில்லை ஓர்
உளறலுமில்லை வா என்றால் நீ வந்துவிடவேண்டும்
போ என்றாலும் நீ போய்விடக்கூடாது கேள்விகூடக்
கேட்கலாம் பதிலைத்தான் எதிர்பார்க்கக்கூடாது துருப்
பிடித்த அம்பு இலக்கை மேற்கடக்கையில் மைதானமே
காலி ஒன்றுக்கும் ஒருமதிப்புமில்லை யாவும் தேய்மானமே
உடலுள்ளம் ஊமை மூச்சே முனகல் காலே விலங்கு
ராவணன் ராமனாகும்போது சீதை சபரியாகிவிடுவாள்

101. பளிங்கு

கண்கள் கத்திகள் காதுகள் கூரம்புகள் முகம் கண்ணாடி
விரல்கள் வீணை நரம்புகள் இதயம் துடித்தும்தான் என்ன
உதடுகள் அசைவதாயில்லை மூக்குக்கண்ணாடியின் வலது
கண் பளிங்கு எப்படிக் கீழே விழுந்தது அது மீளக் கிடைத்ததும்
என் புத்தியில் உறைக்கவேயில்லை ரத்தம் ஏறியிறங்குகிறது
இமை தடவிய ஈரம் நண்பகல் உஷ்ணத்தில் கண்ணுக்குள்ளே
படமாய்ப் பம்மியடங்குகிறது நரைமுடி சிரிக்கிறது நாணமிழைகிறது
ஒன்றும் ஒன்றும் ஒன்றே இரண்டும் இரண்டும் இரண்டில்லை
டூவீலர் கிளம்பிவிட்டது ஆட்டோவும் வந்துவிட்டது ஹோட்டல்
காஃபியில் மொய்க்கும் எறும்புகள் அகாலம் காலமாகிவிட்டது

102. சைகை

தூண்டிலில் சிக்காத மீன் கொக்கு வாயில் இரையாகிறது
வயிற்றில் உதைக்கும் சிசு பூமியில் விழுந்தபின் அழுகிறது
ஆடிவெள்ளி இறங்கிவிட்டது ஏழரைச்சனியோ ஏறிவிட்டது
கைவளையல் சுழன்று மூலதனமாகிறது துள்ளி ஓடும் ஒரு
கன்றுக்குட்டி மூக்கணாங்கயிற்றில் தனிஇன்பம் பழகுகிறது
நினைத்தால் வலிக்கும் துக்கம் மறந்தால் போயே போச்சு போ
துறுதுறுக்கும் கண்கள் தூண்டும் மின்னலில் ஓயாது சென்று
உழல்கிறது மனம் ஒரு சைகையே போதும் ஒரு நூறு வழிகள்
திறக்கும் ஈரங்கொல்லிப் பாறைக்குள் ஓடி ஒளியும் அந்தத் தேள்
தன்னையே கொட்டிக்கொள்கிறது வார்த்தை தவறிய நாமகளின்
புத்தி முறிவுக்கு மருந்தேது வெளிவராத அவ்வினைச்சொல்லே
மகாமோனமாகிறது அதன் நிழலில் அந்தராத்மாவே திரிகிறது
பல்டி என்பது ஒரு வித்தையே என்கிறார் நண்பர் வித்தையும்
ஒரு பல்டிதான் என்கிறேன் புரிகிறதா அவ்வளவே வேறுபாடு

103. கருங்கல்

உன்னைப் பார்த்தால் ஒரு நல்ல பாம்பைப் பார்ப்பது போலவே
இருக்கிறது அத்தனை நல்வசீகரம் நீ என்னிடம் மகுடியில்லை
நீ படமெடுக்காவிட்டாலும் உன் முகமே அடுத்ததைக் காட்டிவிடும்
ஒரு பளிங்குதான் எத்தனை காலம்தான் இருட்டோடு இருட்டாய்க்
கிடந்துழல்வேன் நடுக்காம்பு கழன்ற பூவாய் மெல்லவே உதிர்கிறேன்
தரைதொடுமுன் உள்ளங்கை ஏற்கிறாய் உடன்சிலிர்த்தெழுகிறேன்
நிலவோடு பேசுவேன் நட்சத்திரம் பிடிப்பேன் தென்மேகத்தில் படுத்துக்
கண்ணயர்வேன் அர்த்தஜாமத்தில் யாருமற்ற பாழில் சட்டை எரித்த
ராஜநாகமாய் அதிர்ந்தடங்குவேன் எந்தக் குயில் கூவியும் இச்சோகம்
கரையாது அந்தக் கனம் அப்படியே இதயத்தில் இறங்கியிருக்கிறது
யார் வந்து நீவினாலும் வலியே எஞ்சுகிறது உன் விழி வெட்டிய
பள்ளம் குடற்புண்ணாகிறது மூளைப்புற்று கனல்கிறது சீச்சீ போ
வெறும் பூச்சில்லை காலாதீதக் கருங்கல் மண்ணில் கருப்பிடித்து
மழைவெயில் தாங்கிப் பளீரிடும் வைரம் பார்த்தால் ஏறும் கேட்டால்
இறங்கும் முகந்தால் கிறுகிறுக்கும் தொட்டால் ஓடும் துரத்தினால்
ஜடமாகும் உனக்குப் பிடிபடாது ருசியின் பசியான இப்புலனொட்டி

104. கடல்மகள்

நாமதாரிக் கோவில் யானை ஒரு மாதமாய்க் காவிரிக்குக்
குளிக்கப் போகவில்லை தெற்கு பார்த்தே படுத்திருக்கிறது
பாகனையே காணோமே பக்தனா வரப்போகிறான் இங்கு
மூக்கும் வாயும் மூடிய பட்டர் மிதமிஞ்சிப் பயப்படுகிறார்
கோயில் நடை திறப்பதற்குள் வரும் ஒரு குட்டி மழையில்
சுதாரித்தெழுந்து தன் தும்பிக்கை தூக்கிக் குட்டியையே
ஆசீர்வதிக்கிறது பழக்கதோஷத்தில் களிறு தேங்காயும்
கிட்டாத ஒரு நமைச்சலில் தரையை உதைக்கிறது பிடி
இடைப்போது வானம்மூடித் திடீர் இருட்டு சூழ்ந்துவிட
யானை மூன்றும் பிளிறப் பத்தே நொடியில் ஓர் அற்புதம்
வானவில் ஒளி பின் மீண்டும் பளீர் வெயில் கோபுரத்தின்
உச்சிக்கேறிய கருடன் செத்துக் கிடக்கிறான் பித்தேறிப்
பீதாம்பரம் கிழித்து வெளியோடுகிறார் ஜலசயனப் பெருமாள்
பட்டர் அலறுகிறார் கருவறையில் கடல்மகளைக் காணோம்

105. சற்று

அன்பு மனைவியின் பிறந்தநாளை மறந்துவிடுகிறான்
மறக்கக்கூடாத மணநாளையும்தான் ஒரே குழந்தை அது
பிறந்த பின்பு தன் அப்பாவின் திதியும்கூட நினைவிலேயே
நிற்பதில்லை மறதி வெறும் ஒரு வியாதியில்லை அது ஒரு
வரமுமில்லை ஞாபகத்தின் அஞாபகம் இலையும் பூவுமான
பச்சைமரத்தைப் பாழ்போல் வெறித்துக் கடக்கிறது சினமேறிய
நீலகண்டப் பறவை நாளும் நாளும் நல்நீர் குடித்த தாய்வேர்
ஊற்றிய கரங்களின் பரிவையுறிஞ்சிவிட்டுக் கசப்பின் வெறுந்
திரட்சியாகிறது அண்மையும் தொலைவும்கூடத் தீராநினைவில்
நொடியில் தீர்ந்துவிடுகின்றன கடல்போல் அன்பும் ஈர்க்கவில்லை
நீண்ட நட்பின் பகையோ விட்டுவிடாது சுற்றிச் சுற்றியே வருகிறது
ஆலும் வேலும் கிலிபிடித்து நடுங்குகின்றன புயலுக்கு உருப்போட்ட
நூற்றெட்டு நாமாவளியெல்லாம் சொல்லி இனி என்ன பெரிய பயன்
இறுதியில் திரிசங்கு ஜெயித்துவிட்டான் பகீரதன் தோற்றுவிட்டான்
மனம் இறந்த அந்நாளில் தானும் ஒரு மனிதன் என்பதையே இவனும்
மறந்துவிடுகிறான் சூழும் பல்லாயிரம் இயந்திரங்களில் தானுமே ஓர்
இயந்திரமாகிவிடுகிறான் இப்போதுதான் சற்று நிம்மதியாக இருக்கிறது

106. கோமியம்

இந்திரர்கள் இயற்கையானவர்கள் அகலிகைகளை எப்படித் தடுப்பது
வழிசொன்னான் மனு பழம்பனுவல்களைப் பண்பாட்டுத் தணிக்கை
செய்தால் போதுமென்றான் நீதியாளன் கண்ணாடி போட்ட மகரிஷி
கோதமரின் கீழே ஒரு பெருங்குழுவே சேர்ந்தியங்கிப் பச்சைச்சொல்
நீக்கும் பணியில் அல்லும் பகலும் திளைத்தது அதன் லாபம் என்ன
ஏசி கார் அலவன்ஸ் உயர்மட்டப் பாதுகாப்பு சில எதிர்பாரா வசதிகள்
அதிகபட்ச ஊதியம் எல்லாமும் வந்தன உபரிமதிப்புடன் கபிலர்
பரணர் வள்ளுவர் இளங்கோ கம்பர் பட்டினத்தாரோடு ஈரமின்றித்
திருமூலர் சொற்களும் தழைக்கவிடாது வெட்டப்பட்டன வால்மீகி
வியாசன் காளிதாசன் பவபூதியும்கூடத் தப்பவில்லை இலக்கியங்கள்
அகராதிகளாயின படிந்தவள் பத்தினி படிதாண்டியவள் தாசி படுத்தவள்
பாவி படுக்காதவள் உத்தமி ஆண்களை மட்டும் கோமியம் தெளித்துப்
புனிதர்களாக்கிவிட்டார்கள் கங்கை யமுனாவுக்குத் தீப்பாய்தலும்
உதவவில்லை முதலில் எழுத்தில் பின் பேச்சில் என்றது குழு
உம் பேச்சும் சுதந்திரமில்லை உம் எழுத்தும் சுதந்திரமில்லை
எண்ணத் தணிக்கையே எம் இலக்கு இனி மனமும் நினைவுமே
எம் கட்டுப்பாட்டில் என்கிறார் கோதமர் அதிகாரமே அவர்தானே
அன்பைக் கோதமர் போதிக்காது பின் அகலிகையா போதிப்பாள்
நான் வேண்டுமானால் இந்திரனாயிருக்கலாம் நீ ஒன்றும் அகலிகை
இல்லை அவளுக்கும் முந்திய உணர்வுச்சுனையே நீ என்கிறேன்

107. எதிரொலி

உலகின் மிக உயரமான ஏழாவது கட்டடமான அந்த
எம்பயர் ஸ்டேட் பில்டிங்கிலிருந்து ஏதோ ஓர் உருவம்
கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்வதாகக் கனவு
கண்டெழுந்தேன் நனவிலும் இன்று அதுவே நடக்கிறதோ
பொதுமக்களுக்கு இதுவரை முகங்காட்டாத அந்த மாபெரும்
சர்வாதிகாரிதான் ஒரு நிறைசூலி நடிகையின் வீடியோவுக்குப்
பயந்து தன்னை அகோரமாக மாய்த்துக்கொண்டாரென வதந்தி
தீயாய்ப் பரவிய வெகு சில நிமிடங்களில் உலகின் அனைத்துக்
காட்சி ஊடகங்களும் அப்படியேதும் நடக்கவேயில்லை எனப்
பதறி மறுத்து ஒரே குரலில் வெறிநாய் கடித்த வாயாய் அலறின
இந்தக் களேபரங்களுக்கிடையில் அப்படிக் குதித்துப் பார்க்க
வேண்டுமென்ற அந்நூதன ஆசை எனக்குக் கிளம்பிவிட்டது
கணுக்கணுவாய் ஒவ்வொரு நாளும் என்னைக் கொல்லும் பேய்
நீ அதற்கப்புறம் யாரோடு இப்படி வினையாட முடியும் என்று உன்
மீது பரிதாபப்பட்டு என்னுள்ளே மிகக் கம்பீரமாய் எழும்பி நிற்கும்
அந்தக் குட்டி எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை முழுவதும் இடித்து
உடனடியாக உருத்தெரியாமலே சிதைத்துப் பூரண அமைதி
உறுகிறேன் கண்ணே அல்லது குறைந்தபட்சம் அப்படித்தான் நினைத்துக்கொள்கிறேன்
போ போ போடி செத்துப் பிறந்துவிட்டது

போலிருக்கிறது நீயும் இல்லை அட நானும்தான் இல்லை காற்றும்
வெளியும் கடலும் மலையும் வானும் மேகமும் நெருப்பின் ரத்தச்
சிவப்புமே நெடுநெடுவெனச் சுற்றிச் சூழ்கின்றன ஓ என்னதான்
நடக்கிறது இப்போது எதிரொலியின்றி எண்ணங்களுமிறந்த அந்த
ஆரம்பக்கணங்களின் ஆரம்பக்கணமாய் உயிர் மட்டும் துடிக்கிறது

108. அய்யம்பேட்டைக்காரன்

அறிவியலுக்கும் விளங்காத முழுமுற்றான சித்தக்கலக்கம்
நவக்கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரிசைமாறாதின்று
வந்துவிட்டன சூரியக்கிரகணம் மட்டும் விட்டுவிட்டால் போதும்
குறிசொல்லி வெளிக்கிளம்பிவிடுவான் அவன் வந்துதான் இங்கே
சொல்ல என்ன இருக்கிறது கருந்துளையாய் இரவுதான் நன்கு
கறுத்துக்கிடக்கிறதே ஒரு நினைவை மீட்டினால் அதற்குள்ளே
ஒன்பது பேர் நான் முந்தி நீ முந்தியென முண்டியடிக்கிறார்கள்
எல்லாம் கலந்துகட்டித் திரண்டுநிற்கிறது ஒன்றைத் தொடுத்தால்
ஒன்று சிடுக்குகிறது ஒன்றை விடுத்தால் ஒன்று நெரிக்கிறது காசி
நீங்கி அய்யம்பேட்டைக்கு வருகிறாள் ஜூலி பூர்வாசிரமத்தில் சூலி
பத்தாம்வகுப்பில் படிக்கும்போது அவளை ஒருத்தன் கும்பகோணம்
லாட்ஜில் வைத்துச் சோலி பார்த்துவிட்டான் எப்படியோ ஏஜெண்ட்
தயவில் ஒரு கைடாகிக் கங்கைக்கரையில் செட்டிலாகிவிட்டவள்
பின் பதினேழு வருஷம் கழித்துச் சும்மா இப்போ ஊர் மீள்கிறாள்
வெற்றாடு அவனைத் தேடிக்கண்டு வேங்கையவள் தூணில் கட்டி
வைத்தடிக்கிறாள் முதல் குழந்தைக்குப் பெயர் சூலி என்கிறான்
கண்ணீர் வழிகிறது இருவருக்கும் அய்யம்பேட்டைக்காரன் என்று
தோற்றிருக்கிறான் சிரிக்கிறாள் சூலியாகவே முடியாத என் ஜூலி


Art : Karina Ortiz

கல்யாணராமன் .
கல்யாணராமன் .
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026
  • 21 கவிதைகள் : கல்யாணராமன்

    21 கவிதைகள் : கல்யாணராமன்

    May 1, 2026
  • இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (16)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (5)
  • கட்டுரை (105)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (83)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (16)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • முட்டுக்கட்டை

    முட்டுக்கட்டை

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • வன்புணர்வு எனும் பேரின்பம்

    வன்புணர்வு எனும் பேரின்பம்

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (16)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (5)
  • கட்டுரை (105)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (83)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top