ஆல்வரோ தி கம்போஸ் (ஃபெர்னாண்டோ பெஸ்ஸோவா)
தமிழில் : பிரவீண் பஃறுளி
மின்-ஆலை விளக்குகளின் நோவுதரும் ஒளியில்
எனக்கொரு காய்ச்சல் பீடித்து எழுதுகிறேன்.
ஒரு விலங்கெனப் பற்களை நரநரத்தபடி எழுதுகிறேன், இந்தப் பேரழகுக்காக,
புராதனர்க்கு ஏதும் தெரிந்திராத
இந்த சமாசாரத்தின் நூதனத்துக்காக .
ஆ சக்கரங்களே, பற்சக்கரப் பொறிகளே, சாசுவத ர்-ர்-ர்-ர்-ர் களே!
ஆவேசப் பொறியமைவின் பலத்த கட்டுண்ட வலிப்புகளே!
எனக்கு உள்ளும் வெளியுமான சீற்றத்தின் கொந்தளிப்பில்
நரம்புகள் அனைத்தும் வெடித்துப் பிளவுற, என்
ஒவ்வொரு உணர்தலும் தொட்டு நெஞ்சகம் புடைத்தெழுகிறது!
ஆ, மகத்துவ நவயுகப் போரொலிகளே, உங்களை நெருங்கச் செவிகூர்ந்து
என் அதரங்கள் வறண்டன.
உமைக் கவிபாடும் வெறியில் என் தலை பற்றி எரிகிறது.
எனது சகல உணர்ச்சிகளின் மிதமிஞ்சிய வெடிப்பில்
உங்களைப் போன்றதேயான ஒரு மிதமிஞ்சிய பெருக்கில்
ஆ இயந்திரங்களே!
ஜ்வரத்தில், எந்திரப்பொறிகளை வெம்மைக் பெருங்காடென
இரும்பும் நெருப்பும் சக்தியுமான பரந்த மனிதக்காடெனக் கண்டு..
நான் பாடுகிறேன், நிகழ்காலத்தை, கடந்ததை, வரவிருப்பதை.
நிகழ்காலமே எல்லா கடந்தாலமும் எதிர்காலமும்.
விர்ஜிலும் பிளாட்டோவும் இன்று எந்திரங்களில், மின்விளக்குகளில் உறைகிறார்கள்.
மானுடரான விர்ஜிலும் பிள்ளாட்டோவும் வேறுயுகத்தில் ஜீவித்தவர் ஆனதால்,
ஐம்பதாம் நூற்றாண்டில் மகா அலெக்சாண்டரின் துண்டுகள்
நூறாம் நூற்றாண்டில் ஏஸ்கிலசின் சித்தத்தை அதிரவைத்த அணுக்கள்
இந்தப் பரிமாற்ற பட்டைகள், உந்துதண்டுகள், எந்திரச் சுழலிகளில் சுழன்று
அலறி அரைத்து சலசலத்து, ஆரவாரமாய்த் தடதடத்து
சரீரத்தின் மிதமிஞ்சிய உணர்ச்சி வருடல்கள்
எனது ஆவியில் ஒரே தொடுதலாகிச் சுண்டுகிறது.
ஒரு சுழல்பொறி தன்னைத்தான் வெளிப்படுத்துவது போல
நானும் முழுதாக வெளிப்படுத்திக்கொள்ள இயன்றால்!
முடிவற்று, ஒரு எந்திரப்பொறி போல!
நவரக தன்னூர்தி போல வாழ்வினூடாக வெற்றிகரமாக முன்செல்வதற்கும்,
இவை யாவையும் எனது சரீரத்துள் பொதிந்துகொள்ளவும்
என்னை முழுதாய்க் கிழித்து, முழுதாய்த் திறந்து,
இந்த வினோதக் கருப்பும் செயற்கையும், நுகர்ந்து தீரா எந்திர வனக்கூட்டத்தின்
நிலக்கரி, வெப்பம், எண்ணெய் நறுமணமனம் என்னுள் ஊடுருவத் திறந்து!
ஒவ்வொரு எந்திரவிசையோடும் சகோதரத்துவம்!
இவற்றின் ஒரு வகிபாகன் ஆதலின் மட்டிலா ஆவேசம்.
உறுதிப்படு இரும்புசெய் ரயில்களின் உலகச் சுற்றுகள்,
சரக்கேந்தி ஊறும் கப்பல்களின் சலித்த உழைப்பு,
மசகெண்ணெய் உருளும் பளுதூக்கிகளின் நயமான மந்தத் திருப்புகள்,
தொழிற்சாலைகளின் ஒழுங்குபடு அமளி
பரிமாற்றப் பட்டைகளின் மௌன முணுமுணுப்பு, சலித்த சுழற்சி!
எந்திர அமைவுகளுக்கும் பயனுறு தொழிற்பணிகளுக்கும் நடுவே நசுங்கிய
ஐரோப்பிய மணிநேரங்கள், உற்பத்தி புரிவோர்!
சிற்றுண்டியகங்களில், மகா நகரங்கள் ஸ்தம்பித்துள்ளன.
அவை, பயனிலாத ஆரவாரத்தின் ஓய்விடங்கள்.
அங்கே அந்தப் பயனுடையர்களின் கிசுகிசுப்பும் சைகைகளும்
கூடிப் படிந்து சேகரமாகின்றன.
அந்த முன்னேற்றப் புரட்சியின் சக்கரங்கள், பற்சக்கரங்கள், தாங்கிகள் !
கப்பற்தளங்களின், ரயில் நிலையங்களின் ஆன்மாவிலாத புத்துலக மினர்வா !
இத்தருணத்தின் மகத்துவம் தூண்டும் புதிய உணர்வெழுச்சிகள்!
துறைமுகங்களில் சாய்ந்து களிப்புறும், அலைவனை எஃகின், உலோகக் கப்பல் முதுகுகள்.
அவை சாய்வான மேடைகளில் செம்மாந்திருக்கும் பழுதுதளங்கள்!
கனடிய -பசிஃபிக் வழி, அட்லாண்டிக் கடந்து
சர்வதேசியத்தில் பரபரக்கும் செயல்முனைவுகள்!
ஒளி ஜாலங்கள், பித்தேறிய நேர விரயங்களின் விடுதிகள், மதுக்கூடங்கள்,
லாங்சாம்ப், தெர்பி, அஸ்காட் குதிரைப் பந்தயங்கள்,
பரபரத்த பிக்காடில்லி, அவென்யூஸ் டி ஆப்பரா வீதிகள்
எல்லாம் என் ஆன்மாவின் அடித்தளத்தை ஊடுருவுகின்றன.
வாழ்க வீதிகள், வாழ்க சதுக்கங்கள், வாழ்க ஜனக்கூட்டம்.
அங்காடிகளின் காட்சிப் பெட்டிளை நின்று நோக்கும் வழிப்போக்கர்!
வாணிபர், தெருச் சுற்றிகள், சிங்கார உடையணிந்த மோசடிப் பேர்வழிகள்;
பிரபுக்குல மன்றங்களின் கனவான்கள்,
அழுக்கடைந்த சந்தேகத்துக்குரிய உருவத்தோர்,
மங்கலான மகிழ்ச்சியின் குடும்பத் தலைவர்கள்,
மேலங்கியின் ஒரு பையிலிருந்து மறுபைக்குத் தொங்கும் தங்கக் கடிகாரச் சங்கிலியிலும்
ஒரு பெருமிதம் தோன்றும் குடும்பத் தலைவர்கள்!
ஒவ்வொன்றும் கடந்து போகின்றன. முடிவற்றுக் கடந்து போகின்றன!
மிகைப்படப் பகட்டித் திரியும், மயக்குறு வஞ்சிகள்,
ஈர்ப்புதரும் சாதாரணர்கள் (உள்மறைந்திருப்பதை எவர் அறிவார்)
மனதில் ஏதோ ஒன்றைக் குறித்தபடி வீதியில் நடந்துபோகும்,
சிறுசெல்வக் குலப் பெண்கள், பொதுவாக அன்னையரும் மகள்களும்.
பெண்மைபோலும் பாவனை நயத்துடன் மெல்ல அசைந்துபோகும் ஆடவர்,
பிறர் கண்படவே உலாப் போகும் நாகரீக உடையினர்
அவருக்குள்ளும் ஒரு இதயம் இருக்கும்!!
ஆ, இதையெல்லாம் காட்சியாக்கிப் பகட்ட விரும்புகிறேன்
அரசியல் மோசடிகளின் பிரமிக்கும் அழகு
ருசீகர நிதி, ராஜநுட்ப ஊழல்கள்
வீதிகளில் அரசியல் வெறியாட்டம்
சிலபோது, தினசரி நாகரீகத்தின் வெற்று ஆகாயத்தில்
அட்டகாசமும் அரவாரமுமாக ஜொலிக்கும்
அரசகுலப் படுகொலையின் வால்மீன்!
பத்திரிகைகளில் ஒன்றுக்கொன்று முரணான செய்திகள்
உண்மையெனப் பகட்டும் உண்மையற்ற அரசியல் கட்டுரைகள்
பரபரப்பாகச் சந்தையாகும் மிதமிஞ்சிய குற்றச் செய்திகள்
இரு பத்திகளுக்கு மேலாக அது அடுத்த பக்கத்திலும் வழியும்.
அச்சு மையின் புது நறுமணம்
இன்னும் ஈரம் காயாத, சுவரொட்டிகள்!
வெண்ணிற உறைக்குள் மஞ்சள் இதழியல்,
உங்கள் யாவையும் எத்தனை நேசிக்கிறேன், யாவையும்! யாவையும்!
ஒவ்வொரு விதத்திலும் நேசிக்கிறேன்.
எனது கண்களால், செவிகளால், நுகர்தலால்,
தொடுகையால் (உங்களின் மெய்படு ஸ்பரிசத்தால் எத்தனை கிளர்ச்சி!)
எனது நுண்மதியை ஓர் உணர்கொம்பென அதிர்வித்தீர்.
ஆ, எனது புலன்களெலாம் உமை விரும்பி எத்தனை சூடேறியுள்ளன!
வேதி உரங்கள், நீராவிக் கதிரடிப்பிகள், உழுவு அபிரிவிருத்திகள்!
வேளாண் வேதிமம்! விஞ்ஞானமுறும் வணிகம்!
ஓ, பயணித்திருக்கும் விற்பனை மாந்தரின் கைப்பெட்டிகளே,
தொழில்துறைகளின் அலைந்து திரியும் வீரத்திருமகன்களே,
தொழிற்சாலைகளின், சாந்த அலுவலகங்களின் மனித நீட்சிகளே!

ஆ, காட்சிப் பெட்டிகளின் பல்பொருள்களே,
உடுப்பணிந்த காட்சிப் பொம்மைகளே!
புத்தம்புது ஆடை பாணிகளே!
ஒவ்வொருவரும் வாங்க விழையும் பயனிலாத பொருட்களே!
பல்பொருள் பேரங்கடிகளே!
ஆ, ஒன்றடுத்து ஒன்றாய்த் தோன்றி மறையும் நியான் விளம்பரங்களே!
நேற்றிலிருந்து இன்றை வேறுபடுத்தும்,
‘இன்று’ தன்னைத்தான் உருவார்த்துக் கொள்ளும் சகலப் பொருட்களே, வந்தனம்!
ஓ, வலுவேற்றிய கற்காரை, சிமிட்டிக் கலவை, புதிய செயல்முறைகளே!
மகத்துவக் கொலை ஆயுதங்களின் அபிவிருத்தியே!
கவசங்கள், பீரங்கிகள், எந்திரத் துவக்குகள், நீர்மூழ்கிகள், போர் விமானங்களே!
உங்கள் எல்லோரையும் காமுறுகிறேன், ஒரு மிருகத்தைப் போல.
விகாரப்பட்டு எனது பார்வை உருத்திரியும் வகையில்
உங்களை வெறிகொண்டு நேசிக்கிறேன்.
ஓ உம்மிடத்து
மகத்துவமும் அற்பங்களும், பயனுள்ளதும் வீணடிப்புமான காரியங்களே
ஆ, முற்றான நவயுக வஸ்துகளே
எனது சமகாலத் துடிப்புகளே,
பேரண்ட கோலத்தின் நிதர்சன இக்கண ரூபமே!
உலோகங்களும் அசைவியக்கங்களுமான
கடவுளின் புதிய திருவெளிப்பாடே!
ஆ தொழிற்சாலைகளே, பரிசோதனைக் கூடங்களே, இசையரங்குகளே,
குதூகலிப்புப் பூங்காக்களே,
போர்க் கப்பல்களே, பாலங்களே, மிதவைத் துறைகளே,
எனது கொந்தளித்த, எரிந்தொளிரும் மனதில்,
ஓர் அழகிய நங்கையைப் போல உங்களை அகப்படுத்துகிறேன்.
தற்செயல் சந்திப்பில் கவர்ந்திழுக்கும் பேரழகு நங்கையை
காதலில்லாமல் மோகிப்பது போல,
முழுதாக உங்களை உடைமைகொள்கிறேன்..
பிரமாண்ட அங்காடிகளின் முகப்புகள், என்னே!
உயர் கட்டடங்களின் மின்தூக்கிகள், என்னே!
ராஜசபை பதவி மாற்றங்கள், என்னே!
பாராளுமன்றம், அரசியல், நிதியறிக்கை புரிவோர்,
பொய்மை நிதியறிக்கைகள்!
(நிதித்திட்டம் ஒரு மரத்தைப் போல இயல்பென்றால்
பாராளுமன்றம் ஒரு வண்ணத்துப் பூச்சி போல அழகு)
வாழ்வின் அனைத்தின் மீதும் வீசகரம், என்னே!
ஒவ்வொன்றிலும் வாழ்வின் உயிர்ப்பு,
கண்ணாடிப் பெட்டிகளின் கண்பறிக்கும் பொருள்களிலிருந்து
நட்சத்திரங்களினிடையே வளைந்த புதிரான இரவு வானம் வரை,
தன் மாணவனாக இன்னும் ஆகியிராத அரிஸ்டாட்டிலுடன்,
ஆவியும் சரீரமுமாக, தனது நிஜ இருப்புடன்,
பிளேட்டோ பிளாட்டோவாக நடமாடிய யுகத்து
அதே பரிவுடன், இன்றும் சாந்தமாகக்
கரைகளை அலையாட்டும் அநாதிக் கடல்கள், என்னே!.
பித்தேறிய பெண்ணின் மனமுவந்த சரணாகதிபோல
நான் ஒரு சுழல்பொறியில் அரைபட்டுச் சாக முடியும்.
என்னை, உலைக்கூடத்துள் வீசுங்கள்!
ரயில்களின் அடியில் தள்ளுங்கள்!
கப்பல்களின் மேல்தளத்தில் வைத்துப் புடையுங்கள்!
இயந்திரங்களின் வழியே சுயவதை இன்பியல் !
எனதும், கூச்சல்களும், நவ உலகச் சகலத்துமான வக்கிரப் பரவசம்!
ஆ! இருவண்ணத் தொப்பியைக் கவ்விக் குதூகலிக்கும்
தெர்பி களம் வென்ற பந்தயக் குதிரைச் சாரதியே, வாழ்க!
(அதீத உயரத்தால் எந்தக் கதவிலும் நுழைய முடியாது ஆனேன்!
ஆ, எனக்குப் பார்வையின் அணைப்பே ஓர் உன்மத்த வெறிதான்!)
என்னே! என்னே! உயர் தேவாலயங்களே!
உங்கள் கல்முனைகளில் மோதி என் தலை சிதறட்டும்,
நான் யாரென அறியாதவர்கள், இரத்தம் வழிய
என்னைத் தெருக்களில் தூக்கிச் செல்லட்டும்.
ஆ ட்ராம் வண்டிகளே, கம்பிவட ஊர்திகளே, சுரங்க ரயில்களே,
கலவி உச்சம் சிலிர்க்கும் வரை என்மீது தேய்ந்து உரசுங்கள்.
ஹில்லா! ஹில்லா! ஹில்லா ஹூ!
என் முகத்தின் மீது உரக்கச் சிரியுங்கள்,
ஓ, குடிகாரர்களும் வேசிகளும் நிரம்பிச் செல்லும் தன்னூர்திகளே
ஓ, தெருக்களின், களிப்போ துக்கமோ அற்ற தினசரி ஜனப் பெருக்குகளே
நான் விரும்பிய வகையில் மூழ்க முடியாத பலநிறங்களின் அநாமதேய நதியே!
ஆ, எத்தனை சிடுக்கான வாழ்நிலைகள், வீடுகள்தோறும் என்ன மர்மக் காரியங்கள்!
ஆ, இந்த வாழ்திறங்கள் மொத்தமும் அறிய, பணத்துடன் மல்லுக்கட்டு,
இல்லறச் சச்சரவுகள், ரகசியப் பாலின்ப வெறிகள்
தனிமை அறையில் நமதேயான நினைப்புகள்
யாரும் பார்க்காத போதான நமது செய்கைகள்!
இதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியாமை, எதுவுமே தெரியாமைதான்
எனும்போதான என் ஆற்றாச் சீற்றமே,
காய்ச்சலை, வேட்கையை, பசியைப் போல
என் முகத்தை வருத்திடும் சீற்றமே,
மலினக் கூட்டத்தின் மத்தியில்
சந்திப்புகள் அலைமோதும் தெருக்களில்
அனர்த்த நரம்பு நடுக்கங்களில்
என் கைகளைத் துடிக்க வைக்கிறாய்!
ஆ, மக்கள், எப்போதும் ஒரேமாதிரி தெரியும் சாதாரண அழுக்கு மனிதர்கள்
வாடிக்கையாகவே அசிங்க வசைகள் பேசுபவர்கள்,
அவர்களது மகன்கள் மளிகைக் கடைகளில் திருடவும்
எட்டு வயது மகள்கள், படிக்கட்டு மறைவுகளில்
கண்ணியவான்களுக்குக் கர மைதுனம் செய்துவிடவும்..
இவற்றை நான் அழகுமிக்கதாகப் பார்க்கிறேன், நேசிக்கிறேன்.
கட்டடச் சாரங்களில் வேலை பார்க்கும் இழிமக்கள், அழுகி நாற்றமடிக்கும்
நம்பமுடியாத குறுக்குச் சந்துகளில் வீடு திரும்புகிறார்கள்.
ஒவ்வொரு ஒழுக்க அமைப்பின் கீழும்
நாய்களைப் போல வாழும் அற்புதர்கள்,
அவர்களை
எந்த மதமும் பொருட்படுத்துவதில்லை
எந்தக் கலையும் படைப்பதில்லை
எந்த அரசியலும் வரையறுப்பதில்லை!
உங்களை எல்லாம எத்தனை நேசிக்கிறேன், தன்னியல்பில் இருக்கிறீர்கள்,
கீழ்நிலையால் அறப்பிறழ்வோ, துர்குணமோ நற்குணமோ இல்லாமல்
முன்னேற்றக் கதியால் தொடப்படாமல்
வாழ்க்கைக் கடலின் அடிமட்டத்தில் உயிர்க்கும் அற்புத ஜீவராசிகளே!
(என்வீட்டுப் புழக்கடையில், நீரிறைக்கப் பிணைத்த
கழுதை ஒரு வட்டத்தில் சுற்றுகிறது, வட்டத்தில் சுற்றுகிறது,
இந்த உலகத்தின் மர்மம் அதன் அளவுதான்.
சலிக்கும் உழைப்பாளியே, வியர்வையைக் கைகளால் துடைத்துக்கொள்.
சூரிய ஒளி கோளங்களின் சாந்தத்தை நெருக்குகிறது.
நாம் எல்லோரும் சாகவே வேண்டும்.
ஆ, இருள்பூசிய அந்திமங்கலின் பைன் மரச் செறிவுகளே!
தற்போதைய திதியிலிருந்து, எனது குழந்தைமை
வோறொன்றாக இருந்த பைன் மரச் செறிவுகளே…)
ஆனால், ஆ, திரும்பவும் இடையறாத எந்திரச் சீற்றம்!
திரும்பவும், நகரும் பல்திறன் பேருந்துகளின் மயக்கப் பீடிப்பு.
பூவுலகின் அத்தனை பாகத்திலும்
ஒவ்வொரு ரயிலிலும் ஒரே நேரத்தில் இருப்பதன் சித்த வேகம்.
அதே கணத்தில், இரும்பை ஏற்றிக்கொண்டும் தளங்களை விட்டகன்றும்
ஒவ்வொரு கப்பலிலும் நின்று கையசைத்தலில் எனது பித்து.
ஓ இரும்பே, எஃகே, அலுமினியமே, ஓ மெருகேறிய எஃகுத் தகடுகளே!
ஓ கப்பற் தளங்களே, துறைமுகங்களே, ரயில் நிலையங்களே, இழுபடகுகளே!
ஹே-லா மகத்தான ரயில் விபத்துகளே!
ஹெ-லா இடிந்துவிழும் சுரங்கக் குடைவுகளே!
அட்லாண்டிக் கடக்கும் பெருங்கப்பல்களின் ருசிகரமான மூழ்கடிப்புகளே!
ஹே-லா-ஹோ இங்கே, அங்கே, எல்லா இடங்களிலும்
புரட்சிகள், அரசியல் சாசன மாற்றங்கள், போர்கள், கோட்பாடுகள்,
பட்டையெடுப்புகள், ஓலம், அநீதி, வன்முறை,
மேலும் ஐரோப்பாவின் மீது
ஆசிய முரடர்களின் மகா படையெடுப்பு விரைவில் வரக்கூடும்,
புதிய தொடுவானில் புதியதொரு சூரியன்!
அதனாலென்ன, பிரகாசிக்கும் குருதிச் சிவப்பான சமகால ஓலத்தின் முன்னால் இதற்கெல்லாம் என்ன மதிப்பு.
இன்றைய நாகரீகத்தின் கொடியதும் இனியதுமான இரைச்சல்,
தற்கணம் தவிர சகலமும் ஆவியாகிவிட்டது
அனல்மிகு நிர்வாண மார்பும் உலையூட்டியோடுமான இக்கணம்
உரத்த இரைச்சலின் எந்திரகதியான இக்கணம்.
மதுரச பக்தர்களான ஒவ்வொரு இரும்பு, வெண்கலத்தையும் தழுவி,
உலோகங்களின் குடிமயக்கக் களியாட்டத்தில், அதிர்கிற இக்கணம்.
வாழிய ரயில்களே, வாழிய பாலங்களே, வாழிய விருந்துநேர விடுதிகளே
வாழிய, எல்லாக் குணங்களின் கருவிகளே, இரும்பினது, கடியது, எளியது,
துல்லிய கருவிகளே, அரைப் பொறிகளே, அகழ்பொறிகளே, விசைப்பொறிகளே,
துளைப்பான்களே, சுழல் பொறிகளே!
வாழி! வாழி! வாழி!
வாழி மின்விசையே, பருப்பொருளின் வலியுறு நரம்புகளே!
வாழி கம்பியில்லாத் தந்திகளே, நனவிலியுடனான உலோகப் பிணைப்பே!
வாழி சுரங்கவழிகளே!, கால்வாய்களே, பனாமா, கீய்ல், சூயஸ்!
வாழி, வாழி, வாழி !
சர்வதேசியத்துத் தொழிலகத் தருவின் பயனுறு இரும்புக் கனிகளே!
வாழி, வாழி, வாழி ! ஓ…!
அகத்தில் நான் உயிர்க்கிறேனா தெரியவில்லை
நான் சுழல்கிறேன், சக்கரமாய்ச் சுற்றுகிறேன், என்னையே பொறியமைக்கிறேன்.
ஒவ்வொரு ரயிலோடும் என்னைப் பூட்டுக
ஒவ்வொரு கப்பற் தளத்திலும் என்னைக் கொடியேற்றுக.
ஒவ்வொரு கப்பலின் முடுகுப் பொறிகளிலும் நான் சுழல்கிறேன்.
என்னே! ஆ.., என்னே!
ஆ!, நானே இயந்திர உஷ்ணமும் மின்சக்தியும்
ஆ! நானே ரயில்தடங்கள், எந்திர-உறைவிடங்கள் – ஐரோப்பா!
ஆ…வெற்றி! எனக்கும் அனைத்திற்கும், வினைசெய் எந்திரங்களே, வெற்றி!
ஹூப்லா! அனைத்தையும் சேர்த்துக்கொண்டு அனைத்தையும் மீறிய பாய்ச்சலுக்கு
ஹூப்லா! ஹூப்லா! ஹூப்லா ஹூ!
ஹே-லா ! ஹே-ஹோ! ஹூ..!
ஜிஸ்..ஸ்..ஸ்..ஸ்..ஸ்..ஸ்…..!
எல்லோராகவும், எவ்விடமாகவும் நானே தரிக்க முடிந்தால்!
– லண்டன், ஜுன் 1914
ஆங்கில மூலம் :
ரிச்சர்ட் ஸெனித் -தெரெசா ரீட்டா லோப்ஸ் பதிப்பிலிருந்து.
பிரவீண் பஃறுளி, இயற்பெயர் நா.பிரவீண் குமார். சென்னை, குருநானக்கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் விமர்சன வரலாறு குறித்து ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். புறனடை, இடைவெளி, பாபல் ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியராகப் பங்களித்துள்ளார். அயல்மொழிக் கவிதைகளை ‘திணை மயக்கம்’ என்னும் நூலாக மொழிபெயர்த்துள்ளார்.
சிற்றிதழ்களில் அறிவியல் புனைவுகளை மொழிபெயர்த்துள்ளார்.
கல்குதிரை, மணல் வீடு, இடைவெளி, வனம், கனலி,ஓலைச்சுவடி உள்ளிட்ட சிற்றிதழ்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக “அளாவும் புல்” என்னும் நூல் வெளிவந்துள்ளது. தனி-மை வெளி, சிறுபத்திரிகை, வனம், கல்குதிரை ஆகிய இதழ்களில் புனைகதைகள் எழுதி வருகிறார். பல மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்புடன் முன்னோடியான உலக அறிவியல் சிறுகதைள் பலவற்றைத் தொகுத்து ” மீ : உலக விஞ்ஞானப் புனைவு புத்தகம் என்னும் பெருந்தொகுப்பைக் யாவரும் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார்.








Leave a Reply