Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

39 கவிதைகள் – கல்யாணராமன்

கல்யாணராமன் .
கல்யாணராமன் .
April 1, 2026
39 கவிதைகள் – கல்யாணராமன்

50. கடுகு

உள்ளே ஓடும் ஏதோ ஒன்று
என் கழுத்தைப் பிடித்து
உன்னிடம் தள்ளுகிறது
வெட்கமின்றி மண்டியிடுகிறேன்
உன் உடல் பொருள் ஆவி
அனைத்தும் கேட்கிறேன்
உன் கனவிலும் நனவிலும்
என்னையும் உடன்கொள் என்கிறேன்
உன்னையழித்து என்னை
ஒளியேற்றக் கெஞ்சுகிறேன்
அழுது அடம்பிடித்து ஆர்ப்பரிக்கிறேன்
குருதேவிக்குத் தர
ஒரு கடுகுகூட மிச்சமில்லை
உன் நயன தீட்சை நடக்கட்டும்
நீல நாகத்தின் சட்டை உரித்து
உள்ளாடையாய் என்னைச் சுற்றிக்கொள்
கசந்து வெளியே துரத்திவிடாதே
போக ஓர் இடமில்லை
செய்ய வேறு ஒரு காரியமுமில்லை
பிச்சை கேட்பது தப்புதான்
பிச்சை போடுவதுமா

51. அசரீரி

ஒரு கைக்கு வளையல்
இவ்வளவு பிடிப்பதை
இப்பொழுதுதான்
இப்படிக் காண்கிறேன்
ஒரு முகத்திற்கு மூக்குத்தி
இவ்வளவு சேர்வதை
இப்பொழுதுதான்
இப்படி நுகர்கிறேன்
ஒரு காதுக்குத் தோடு
இவ்வளவு நிறைவதை
இப்பொழுதுதான்
இப்படிப் பருகுகிறேன்
ஒரு நெற்றிக்குப் பொட்டு
இவ்வளவு பொருந்துவதை
இப்பொழுதுதான்
இப்படி வியக்கிறேன்
ஓர் உதட்டில் முறுவல்
இவ்வளவு தவழ்வதை
இப்பொழுதுதான்
இப்படி ரசிக்கிறேன்
ஓர் இடக்கண் மூடி
ஒரு வலக்கண் திறப்பதை
இப்பொழுதுதான்
இப்படிக் கவனிக்கிறேன்
ஓர் ஒற்றை முடிக்கற்றை
தலைமேற்பொலிவதை
இப்பொழுதுதான்
இப்படித் தொடர்கிறேன்
படங்களாய் வந்து வந்து
மேல்விழுகிறது உன் மனம்
பதுங்குகிறது என் உடல்
தூமலராய்த் தலைமேலே அசரீரி
அவள் முன்செல்லும் கரிய நிழல்
நீ திக்குத் தெரியாத வெறும் அருவம்

52. நமைச்சல்

கொளுத்திவைத்த ஊதுவத்தி
அணைந்து போகும்போது
எழுந்துவிடுகிறது பிணம்
இரண்டு கடல்கள் ஒன்று சேராமல்
எங்கே ஓடுகின்றன
முழு முப்பது நிமிடம்
வெண்திரையில் கண்கள்
வீடியோ காலிலும்
முகம் தெரியவில்லை
தூர்ந்த மூக்குத்துளை மட்டும்
மங்கலாகத் தெரிகிறது
எல்லா அலைகளும்
உள்ளடங்கட்டும் ஒருகணம்
இருபத்தேழு நாள்
மௌன விரதத்திற்குப் பின்
உதடு பிரித்தவள் சொன்னாள்
வாயை மூடு
பிஞ்சுப்பாதம் நடந்த சுவடு
நீர் மேலேயே நிற்கிறது
சிறுமியின் கையில் கிளிஞ்சல்
மன நமைச்சல் தீரக்
குளிக்கப் போகிறது எருமை
கரை கண்டது தெரியாமல்
கடற்காகம் இன்னும் கத்துகிறது
வழிமயக்கம் விலகிவிடவில்லை
ஒளிரும் இருளில் எதிரே சூரியன்
கண்ணைக் கட்டியிழுக்கும்
ஒரு வெள்ளைக்களிற்றுக்குத்
தும்பிக்கையில்லை
கேட்ட பிடிக்குப்
பிய்த்துத் தந்துவிட்டதாம்

53. கடல்

நஞ்சுமுறி மருந்தாய்ப்
பொங்கும் சொற்களைக்
களவாடியழித்துவிட்டுப்
போனால் போகிறது
இந்தா தின்றுகொள் என்று
வெறும் நஞ்சாய்க்
கிளியும் கொத்த மறுக்கும்
சில வேப்பங்காய்களை
என்னை நோக்கி எறிகிறாய்
ராமேஸ்வரம் போகிறேன்
ரயில் ஜன்னலில் வந்து
இரண்டு பக்கமும்
முட்டுகிறது கடல்
நானும் பார்க்கிறேன்
கடலும் பார்க்கிறது
பார்த்துக்கொண்டே போகிறோம்
நன்றாக விடிந்துவிட்டது
நீர் நீர் ஒரே நீர்தான்
தொலைவில் சில படகுகளும்
பாம்புக்குப் பல்லில்தான் விஷம்
பாம்பைப் பார்ப்பவனுக்குக்
கண்ணிலேயே விஷம் என்பதாய்
நினைவின் நாகங்கள் எழுந்தாடுகின்றன
அலைகள் உள்வந்துவிட்டன
கடலைத்தான் காணோம்
பாம்பன் பாலத்திலேயே
வீடு கட்டித் தங்கிவிட்டாலும்
கடலை அறிந்துவிட முடியாதோ

54. பித்தி

ஒரு சாயுங்கால ஆகாயத்தில்
ஒற்றைக்குருவி அலைபாய்கிறது.
ஒரு மலை மீது
சூரியன் கீழிறங்குவதுபோல்
அடிவாரம் வரை
மிகத்தாழவந்துவிட்டுப்
பூமியைக் கடந்துவிடுகிறான்
பெருமூச்சின் நெடுவெப்பம்
குத்தும் நடுநிசிப் பனியாகிறது
சுடலையில் கால் மாறும் நடராஜன்
ஆடல் துறந்த உமையின் கூந்தலில்
தானே கொய்து சூட்டிவிடுவானா
ஒரே ஒரு கொன்றைப் பூவை
என்று கேட்கிறாள் பித்தி
அவள் கையிலிருந்து விடுபட்டுத்
தன் சிறகுகளைப் புறா கோதும்போது
திடீர்க் கோடை மழை
குதூகலிக்கிறது புறா
மழையில் தான் நனைவதற்காகத்
துள்ளவில்லை அது
தன் மீது வந்து பொழியும்
மழையின் கருணையை எண்ணி
விக்கித்து நிற்கிறது
மழையில் நிற்க முடியவில்லை அதற்கு
தூரதூரமாய்ப் பறக்கிறது
ஆயிரம் மைல் தாண்டிவந்தபிறகும்
அஞ்சுகிறது அது
தனக்காக மழை எங்கும் வரும் என்பது
அதற்குத் தெரிந்துவிட்டது
தன்னைத் தந்து மழையைத் திருப்பிவிட்டது
அதன் நிலத்திற்கே
பித்திதான் பாவம்
இன்னும் சுடலையிலேயேதான் நிற்கிறாள்
முடியவே முடியாத அந்தத்
திருவாலங்காட்டு விபரீத நடனத்துடன்

55. ஓஹோஹோ

ஓர் ஓங்கோலாய்
வானுக்கும் பூமிக்குமாக
எகிறி எகிறி நீ குதிக்கையில்
அலையலையாய் ஆர்ப்பரித்துக்
குதூகலிக்கும் இக்கடல்
நிசப்தமாய் நீ தண்ணீருக்குள் முடங்குகையில்
கட்டுமரத்தைத் தள்ளிவிட்டுக்
கரையேற்றிவிடத் துடிக்கிறது
கடலென்றால் கடல் மட்டுமில்லை
கட்டுமரமும் அதன் மீதேறிய மனமும்தான்
ஒன்றைப் பெறத் திறக்கும்
அநிச்சையின் சூசகங்களைச்
சீச்சீ என்று அதட்டியே
நாணம் பூசி மூடிவிடுகிறாய்
உட்சுழலும் இச்சையின் நாவை
முடக்கித் தடுத்துவைத்திருக்கிறாய்
அருகில் வரும் வண்டைப்
புருவ நெரிப்பால் விரட்டுகிறாய்
கண்ணில் ஒளியும் கனிவால்
தூரப்போகவிடாமல்
அண்மையிலேயே நிறுத்துகிறாய்
ஓஹோஹோ புரிகிறது
சில நொடிகளைவிடப்
பல மணி நீளவே துடிக்கிறாய்
ஆமாம் இப்படித் தவிப்பதற்குக்
கொடுத்தேயிருக்கலாமே அதை.

56. குழிவு

வலது முழங்கால் முட்டியைத்
தரையில் ஊன்றி
இடது முழங்காலைக்
கோலப்பாத்திரம் பிடித்த
வளையலிட்ட இடது கையால்
பதமாய் அணைத்தபடி
நெற்றிக்கற்றையும்
உள்திரும்பிய முகமும்
மைதீட்டிய கண்களும்
தாழும் முலையும்
பின்கொண்டையும்
நிலமே காண
வலது முழங்கையின் பார்க்கக்
கிடைக்காத அந்தச் செங்குழிவில்
ஒரு நாவல் கனியாய்க் கண்ணன் வந்தமர்ந்து
வெண்கோட்டுக் கோலத்தில்
இளங்கோதை தீட்டும்
செங்கல் நிற அடுக்கு வட்டங்களைக்
கண்ணோடுகிறான்
வட்ட வெளி உயிர்த்தெழுந்து
உணர்வாகித் ததும்புகிறது
நாடகம் முடிந்து திரை விழுகிறது
முகம் பார்க்கும் கண்ணாடியில்
கடுகடுக்கும் என் முகத்தோடு
ஒட்டித்தெரிந்து சிரிசிரிக்கும்
உன் அழகு முகத்தை
இன்னும் ஆயிரந்தடவை பார்த்திருப்பேன்
ஒவ்வொரு முறையும்
உருமாறி உருமாறிக் கடைசியில்
உன் முகமேயாகிவிடும் போலிருக்கிறது
நவநவமாய் நெளியும்
என் கண்ணாடி முகமும்

57. கணு

தன் தலையில் தானே
தீவைத்துக்கொண்டு
எரிகிறது ஒரு மனம்
காம்பிலிருந்து கழன்ற பலா
தரைதொடுமுன்
தாங்கிப்பிடிக்கக் கையா உண்டு
தெறித்துச் சிதறும்
சில கண்ணாடித் துகள்கள்
நுரையீரலில் நுழைகின்றன
தெருவில் படர்ந்த ஓர் அருள்
அத்துமீறலின் உரிமையைத்
தாய்ப்பாலாய்ப் பிதுக்கிக்கொள்கிறது
வெளிவழிந்தது சிறிதெனினும்
உட்கசிந்ததே அதிகம்
ரத்தம் குடித்த பிடாரி
இன்னுமின்னும் கேட்கிறாள்
வயிறு வெடித்த பலூன்
அந்தரத்தில் டப்டப் டப்பென்கிறது
ஒரு நீர்க்குமிழி காற்றில் மிதக்கிறது
இரண்டு காதுகளையும்
இரண்டு கைகளால் மூடிக்கொண்டு
கண்கள் மலர்த்திக் கன்னம் சிலிர்த்து
லேசாய் உதடு திறந்து
மலைப் புல்வெளியில் அவள்
கிறங்கி நிற்கிறாள்
மகிழ்ச்சியைச் சிலரே
மகிழ்ச்சியாய் அறிகின்றனர்
கண்ணில் தெரியும் வேம்பின் கணு
அடிக்கரும்பாகிவிட்டது

58. மூச்சு

இலை மறைத்த கனியைக்
கண்டுபிடித்த செங்குரங்கு
அதைக் கைநீட்டித் தொடும்போதா
கொட்ட வேண்டும் தேனீ
அந்தக் குரங்கைப்போல் நான்
முருங்கைக்கு மாற்றாய்த்
என் தோளிலேறிவிட்டது
இப்போது வேதாளம்
ஏறியது பின்னிறங்குவதாயில்லை
நானும் விடுவதாயில்லை
வேதாளம் இறங்கிவிட்டால்
அதன் நுரையீரலைக்
கடன்வாங்கிக் கட்டிக்கொண்ட
என் மூச்சல்லவோ நின்றுவிடும்
மண்பானைத் தண்ணீரின்
உள்விழுகிறது எறும்பு
வெயிலுக்குப் பயந்து
அந்த எறுப்பைப்போல் நான்

59. லயம்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
என்னிடமுள்ள ஒவ்வொன்றையும்
உன் காலடியில் கொண்டுவந்நு
வெகுபத்திரமாய் வைத்துவிட்டு
ஓசையின்றித் திரும்பிவந்துவிட
வேண்டும் போலிருக்கிறது
இரண்டு உள்ளங்கைகளையும்
ஒன்றோடொன்று இறுக்கி
மூடிக் கோத்துக்கொண்டு
புறங்கைமேல் கன்னமிட்டுப்
படுத்திருக்கும் குழந்தையின்
திறந்த கண்களுக்குள்
மூடப்படாத ஓருலகம்
புதுறெக்கை கட்டிக்கொள்கிறது
சிரிப்பா அழுகையா
இரண்டுமே முட்டிமோதப் பிறக்கிறது
நூதனச் சேர்ந்திசை
மூளையின் இசைவைக் கேட்கும்
தொல்லை அதற்கில்லை
அனிச்சையின் தாள லயத்தில்
உயர்ந்துதாழ்கிறது லப் டப்
என்ன நடப்பென்றே தெரியாமல்
எங்கோ தொலைதூரத்தில்
சந்தன மரத்தில் முளைவிடும்
ஒரு புதிய கிளையில் போய்
ஒட்டிக்கொள்கிறது உயிர்

60. குடைப்பூ

காலை நண்பகல் எற்பாடெனப்
பல மாறும் வெப்ப அளவுகளில்
சூரியனே வந்து உசுப்பினாலும்
நாள் முழுதும் தூங்கும் நான்
ஏதும் அவசியமிருந்தாலொழிய
ஓர் இம்மியும் அசையப்போவதில்லை
உறுப்புமாற்று அறுவைபோல்
பகீரதப் பிரயத்தனத்திலிருக்கிறேன்
விடைபெற்றுப் போன கொக்கு
உலகமெல்லாம் கண்டுலவி விட்டுத்
திரும்பவும் என்னிடம் வரும்போது
நான் உயிரோடிருக்க வேணும்
அவ்வளவே என் ஒரே வேண்டுதல்
கம்பியிட்ட வீட்டுச் சுவருக்குள்
துள்ளி வரும் நிலவைச்
சும்மா வெறித்தபடியேதான்
படுத்துக்கிடக்கிறேன்
என் மேலே ஏறியிறங்கட்டும்
குடைப்பூவாய் விரிந்து
வெப்ப மூச்சிடும் செந்நாகம்

61. அசடு

முதல் சந்திப்பில்
செய்யக்கூடாததைச் செய்கிறான்
தொடக்கூடாத இடத்தில்
தொட்டுவிடுகிறான்
ஐயாயிரமாண்டுகளுக்கு
முன்பிறந்த காட்டுமிராண்டிக்கு
நிலவில் மனிதன்
கால்பதித்தபின் பிறந்தவள்
நல்ஒழுங்கைக் கற்றுத் தருகிறாள்
அவள் சொல்வது சரி என்று கூசித்
தனைமறந்து தீண்டிய கரங்கள்
மெட்டி தொட்டுப் பணிகின்றன
ஒருநொடி இயங்கமறந்த இதயம்
மீண்டும் துடிக்கும்போது
நிகழ்காலம் நின்றுபோய்
முழுமரணமே செத்துவீழ்கிறது
தலை விழுந்தால் கிடையாது
பூ விழுந்தால் உண்டு
ஆம் இல்லையைத் தீர்மானிக்க
மேலே சுண்டிவிட்ட நாணயம்
கீழே விழுவதற்குள் பிடித்துக்
கைக்குள் அமுக்கிக்கொள்கிறாள்
தலைவிழாமல் பூவிழுந்துவிட்டால்
என்ன செய்வது என்ற பயம்தான்
காரணம் என்பதை
எவ்வளவு மறைத்தாலும் அவள்
முகத்தில் வழியும் அசடு
காட்டிக் கொடுத்துவிடுகிறதே
என்கிறான் நாணயமாகிவிட்டவன்

62. மீன்

குகைக்குள் குகையாய்
இருட்டின் இருட்டாய்
ஒளியில் ஒளியாய்ப்
உட்புகுந்து தடவிக்
கடிபட்டு வெளியேறி
மூடிய கதவோடு முட்டித்
திறந்த ஜன்னலில் சிதறிச்
சிலையாய்ச் சமைந்து
பூச்சியாய்க் கீச்சிட்டுக்
கண்ணீரைக் கனலாக்கி
உணர்வைத் தீண்டாமல்
ஓடியொளியும் என் நினைவை
உதைக்கிறேன் முடிந்தவரை
பின்வரும் நிழலுக்கு மிரண்டு
தோகையொடுங்கும் மயில் நீ
விடாமல் உசுப்பும் மழை நான்
இன்னுமா புரியவில்லை
நெடுங்காலம் ஏங்கியேங்கி வந்து
தலையெட்டியெட்டிப் பார்க்கிறது
விலாங்கு மீன்
சிறிய குட்டைக்குப் பக்கத்தில்
ஒதுங்கியொதுங்கிப் போகிறது
வற்றா நதி

63. துளை

கையில் நெரித்துக் கொன்ற
ஒரு நல்ல பாம்பைத் தூக்கியபடி
பாம்புக்கடி என்றோடி வந்தான்
குருதியில் நஞ்சேறிவிட்டிருந்தது
காப்பாற்ற முடியவில்லை
அநாதைப் பிணத்திற்குச்
சுடுகாட்டில் தீமூட்டிவிட்டுக்
குளிர்காய்ந்து கொண்டிருந்த
பரம்பரை வெட்டியான்
ஏதோ ஓர் ஆவேசம் பற்றியேறப்
பாம்பையும் கடிபட்டவனையும்
ஒவ்வோர் உறுப்பாய் வெட்டி
வெட்டித் தீயிலெறிந்தான்
கைகூடாத கனவை நினைத்துப்
பெட்ரோல் ஊற்றிக்கொண்டு
செங்குத்தாய் நின்றெரியும்
நெடுந்தீக்குள் பாய்ந்துவிட்டான்
அவன் உடலிலிருந்து கிளம்பி
வெளியே ஓடும் நீலச் சுழல்
வானில் நட்சத்திரமாகிறது
வெகுகாலம் கழித்து
எழும்பிய அவன் சமாதியில்
நாகதோஷத்திற்குப் பாலூத்தக்
கைப்பிள்ளையுடன் வந்தவள்
தாழம்பூவை வைக்கிறாள்
பெய்யும் அடைமழையில்
படைபடையாய்ப்
படமெடுத்துச் சீறுகின்றன
தண்ணீர்ப் பாம்புகள்
இதையே பேசிப் பேசி
நாக்கு வறண்டுவிட்டது
இதையே கேட்டுக் கேட்டுக்
காது தூர்ந்துவிட்டது
இதையே கண்டு கண்டு
கண் மங்கிவிட்டது
இதையே மோந்து மோந்து
மூக்கு நாறிவிட்டது
இதையே தொட்டுத் தொட்டுக்
கை மரத்துவிட்டது
இதையே குடித்துக் குடித்துக்
குடல் வெறுந்துளையாகிவிட்டது
இதையே எழுதியெழுதிச்
சொற்களும்கூடச் செத்துவிட்டன

64. ஜோடி

பௌர்ணமியில் பிறந்தவனுக்கும்
அமாவாசையில் பிறந்தவளுக்கும்
ஜோடிப்பொருத்தம் வெகு ஜோர்
மானைக் கண்டு மயங்கும்
புலி இழப்பது இரையை
புலியைக் கண்டு மயங்கும்
மான் இழப்பது உயிரை.

65. தெம்பு

மழையால் கிணறு நிரம்பும்
உவர்ப்புக் கடலா இனிக்கும்
ஒரு சொல்லை ஏந்திப்
பெறுபவரைத் தேடுகிறேன்
கொடுக்கல் வாங்கல் இல்லை
இது பகிர்ந்துகொள்ளல்
உதிரும்வரை காம்பும் பூவும்
எப்படி ஒட்டியிருக்கின்றன
சிறிய தலையூற்று நீர்தானே
ஜீவநதியாகிறது
ஒருகைப்பிடி விதையில்
பெருந்தோட்டமே எழும்பிவிடுகிறதே
ஒருமுறை குடித்த நீருக்குச்
செஞ்சிவப்புப் பூவால்
நாணி நன்றி சொல்கிறதே
கல்யாணமுருங்கை
மெல்லும் வாய் சிவக்காமல்
வெற்றிலையா திருப்திப்படும்
களிமண்ணைச் சுடும் வெயில்
எத்தனை பேறு பெற்றது
கொட்டிக் கொட்டிக் குழவி
பின்னிப் பின்னிச் சிலந்தி
ஒலியும் எதிரொலியுமாய்
ஜோடியாய் நடந்து நடந்தே
பாதையிட வேண்டாமா கால்கள்
ஒரு சொல்லை ஏந்திப்
பெறுபவரைத் தேடுகிறேன்
வாங்கத் திறந்த இதயம்
வெருண்டோடுகிறது
வருடி வரும் மயிலிறகைத்
தாங்கும் தெம்பின்றி

66. வாசனை

கிழக்கே போகும் நதியை
மேற்கே திருப்ப முடியும்
மலையைக் கொஞ்சம் நகர்த்தி
ரயில் பாதையே போட முடியும்
கடலைத் தூக்கிப்போய்ப்
பாலைவனத்திலே வைப்பதும்
வானை வில்லாய் வளைத்துக்
கயிறாய்த் திரிப்பதும் முடியும்
ஆயிரம் ஜென்மம் பழகினாலும்
ஒரு மனித மனதை மட்டும்
முழுதாகத் திறக்கவே முடியாது
இன்னொரு மனித மனதால்
என்கிறாள் என் நீலி
அப்படியா சரி என்கிறேன்
பக்கத்துப் பக்கத்தில் வந்தபின்
வேறு சொல்ல என்ன இருக்கு
என்றா சொல்ல முடியும்
கண்தீண்டா ஒளிப்பொட்டைப்
புருவ மத்தியில் நிறுத்தித்
தியானத்தில் விளைந்த தேனை
உள்ளத்திற்கொண்டு
ஆடிப்பாடி வரும் ஒரு பரபரப்பை
அப்படியே கைமாற்றிக்கொள்வது
அசாதாரணமானதில்லை
யெனினும் அது அப்படிச்
சாதாரணமானதுமில்லை
கோடிச் சருகில் ஒன்றே
மலையுச்சி ஏறியமரும்
அதுவே மீண்டும் விழுந்து
மண்ணின் மீது தவழ்கையில்
ஏந்தும் உள்ளங்கையிலேறிச்
சட்டெனப் பிடிபட்டுவிட்டால்
அந்தக் கணம் ஈடிணையற்றது
வேட்கை தீர்க்கும் ஒருதுளி நீர்
தானாக ஊறிப் பொங்கித்
தொண்டையை நனைக்கையில்
நன்றி என்பது அங்கு நிற்பதே
பாத்திரமறிந்த பிச்சை
பிச்சையறிந்த பாத்திரம்
பல்லூழி கழிந்த பின்னும்
வைத்தது வைத்தபடியே
கல்லறையின் மேலே
செம்மஞ்சள் பூ
உள்ளே தீரா வாசனை

67. வெட்டு

கடற்கொண்டு உண்டுவிட்ட
தனுஷ்கோடியில்
நிராயுதபாணியாய் நிற்கிறேன்
விமானத்தில் பறக்கிறாய் நீ
துணிந்து கட்டுமரமேறிப் போய்ப்
பிடித்துவிடுகிறேன் தூரப்படகை
தொடர்கிறது ஆகாயக்கழுகும்
இந்தக் கடலுக்கும் அலைக்கும்
நான் ஒன்றும் அஞ்சவில்லை
கரை பாதுகாப்பாயிருந்தாலும்
கடலின் விரிவு கரைக்கில்லை
துடுப்புப் போடும் கைகளிலேயே
கண்கள் குறியாயிருந்தாலும்
அவ்வப்போது பயணம் சலித்துப்
பின்னுக்கிழுக்கிறது காற்று
முன்னொரு நாள்
முன்னொரு நாள்
குதியாட்டம் போட்ட
அதே கடலா இது
என்ன மிச்சம் இப்போது
போனதெல்லாம் அப்படியே
போகட்டுமென்று போகவிட்டுத்
துடுப்பைக் கைநெகிழ்கிறேன்
நீரிழுப்பில் தள்ளாடும் படகு
நடுக்கடலில் கவிழ்கிறது
ஒரு மூக்குத்தி ஒளிப்பிடித்து
எப்படியோ தீவில் ஒதுங்கிச்
சற்றே இளைப்பாறும்போதும்
கடற்கொள்ளாத அப்பழைய
தனுஷ்கோடியிலேயே போய் நிலைக்கிறது
என் பாழும் மனம்
கடைசியாய் அது சொல்வதுதான் என்ன
என்னை வதைக்கும் பாவம்
உன்னைச் சும்மா விடாது
என்றது பச்சைமிளகாய்ச் செடி
திறந்த வாய் மூடுவதற்குள்
அதைத் கத்திரித்துவிட்டது வெட்டுக்கிளி

68. வேட்டை

இலை மூடிய கனியைப்
பறிக்க நீளும் கரம்
சுருக்கென்று கடிக்கும் சிற்றெறும்பு
எலி மீது பாயும் பூனை
பூனையை விரட்டும் நாய்
நாயைத் துரத்த வைக்கும்
கொடுங்காட்டு மான்
அதனின் அதனின் துர்வேட்டை வெறி
உண்மைகளை விடுங்கள்
பொய்கள்கூட இப்போது என்னிடமில்லை
அவ்வளவு தூர்ந்துவிட்டன
என் ஊற்றுக்கண்கள்
அர்த்தம் தேடும் மூளை
லயிப்பதில்லை எழிலில்
சும்மாயிருக்கும் பிரக்ஞை
கரிப்பதில்லை பாழில்
காலவெளியின் இறுதி எச்சம்
கடலை நோக்கும் வானம்
என்றாலும் சொல்லிவிடுகிறேன்
தோகை மயிலுக்கு
இரங்காத மழை
என்ன மழை

69. நெரிப்பு

மரக்கிளையேறும் கரடி
மலைக்குகையுறங்கும் சிங்கம்
இருட்டுப் பாழ்மண்டபங்களில்
தலைகீழாய்த் தொங்கும்
பிணந்தின்னி வெளவால்
வனந்திரியும் கழுதைப்புலி
இவையே பரவாயில்லை
நாகரீகப் பாசாங்குகளைப் பேணி
உள்விரிவு செய்வதுபோல்
முண்டிவரும் வாஞ்சையோடு
ஒட்டி மிகநெருங்கி வந்துவிட்டுப்
பின்னெதிரே பாராதபோது
குரல்வளையைக் கருணையின்றி
விலங்குகள் நெரிப்பதில்லை

70. பிசின்

தொல்லுறவின் பிசின் அறுபடா
நேரிழையாய் அல்லும் பகலும்
தலைகோதிக் கூடவே நடந்த ஈரம்
வழிநடுவில் காணாமல் போய்க்
காலம் உறைந்த பாழில்
ஒரு குட்டியாடு தாண்டலாய்
ஒரே இமைப்பில்
மீளாத் தவிப்பின் மூச்சேறிச்
செங்குருதியாய்ச் சிவக்கும்
என் காவேரி நீலி
சதுரங்கமாட விளிக்கிறாள்
நெஞ்சு நிமிர்த்திய சிப்பாய்கள்
தலையில் ஒரே போடு
குதிரைகளை வெட்டியாச்சு
பிஷப்கள் காலி
யானைகளும் பலியாச்சு
ராஜாவால் நகர முடியவில்லை
ராணியோ துடிக்கிறாள்
ஜெயிக்கவும் வேண்டாம்
மீளமீளத் தோற்பதும் கூடவே கூடாதாம்
ஆடிக்கொண்டேயிருக்க வேண்டுமாம்
சதுரங்கமல்லாச் சதுரங்கம்
என் காவேரி நீலிக்கு

71. வைரம்

குழந்தைகளோடு குழந்தையாய் ஓடுகிறாள்
ஓடும் இவளை அவை பிடித்துவிடுகின்றன
இவளால்தான் குழந்தைகளைப் பிடிக்கவே
முடிவதில்லையெனப் புலம்புகிறாள்
அம்மா பெரிய ஆள்
அப்புறம் எப்படியோ அரிதின் முயன்று
பிடித்த குழந்தையின் கன்னத்தில்
கன்னமிழைத்துக் கொஞ்சுகிறாள்
இவள் கண்களில் முத்தமிட்டுக்
கேவுகிறது குழந்தை
அதை நிறுத்தக் கதை
சொல்கிறாள் தாய்
காட்டில் நீர் தேடிப்
பிடியும் களிறும் நடந்தலைந்தன
ஓடை வருவதற்கு முன்னே
களிறு விழுந்துவிட்டது
ஓடையைப் பிடி தாண்டிவிட்டது
கதை முடிந்ததும்
கேவல் அழுகையாகிவிட்டது
ஒரு குட்டியாடு தூக்கச் சொல்கிறது
வைரம் பாய்ந்த தோளை

72. நிழல்

முன்வாசல் மல்லிகைப்பந்தலில்
எம்பிக் குதித்துக் கொடியிழுத்துப்
பூக்களைச் சிதறி விழச்செய்து
அதில் ஒன்றே ஒன்றை எடுத்துத்
தரையில் மண்டியிட்டுத் தன்
உள்ளங்கையில் வைத்தவன் நீட்டக்
கூந்தலில் செருகிக் களித்த
மறக்க முடியாக் கன்னிப் பருவம்
எவ்வளவு நினைந்துருகினாலும்
கைப்பேசியிலேயே கதை நடத்தும்
குட்டிச் செல்லத்திற்குப் புரியாது
ஸ்மார்ட் ஃபோன் உலகில்
ரகசியங்களுக்குக் காதில்லை
நாற்றமிழுக்கும் மூக்குமில்லை
ஆயிரம் வாய் மட்டுமே உண்டு
எல்லாமே வெறும் ரூபங்களே
பிம்பம் உண்டு பசியாறும் உலகில்
அம்மாவானாலும் மகளானாலும்
அவனானாலும் இவரானாலும்
கடக்கமுடியாமல் கடந்துவரும்
நின்று நிதானிக்கவே முடியாத
அந்த ஓட்டப் பந்தயத்தில்
எவ்வளவுதான் முன்சென்றாலும்
கைமீறிப் பின்நழுவவிட்ட அந்த
இடைவெளிகள் இடைவெளிகளே
எறும்புப் புற்றில் பாம்பின் நிழல்

73. தினை

கண்ணில் நெளியும் நாக்குப்பூச்சி
தலை மேலே சிலந்தி
கையெதிரே வான்பருந்து
உட்செவிக்குள் குருவிக்கூவல்
தியான மோனத்தில் மடிப்புறா
துள்ளிப் பாயும் கன்றுக்குட்டி
உடற்சோர்ந்து வீழும்
வெகு உயரப் பறக்கும் காகம்
வீட்டுக் கூரையையே சுற்றும்
தோகை விரிக்கும் அழகு மயில்
உடனே மூடிக்கொள்ளும்
சூல்மேகங்கள் நகர்ந்துவிட்டன
பூஜைகளும் நின்றுவிட்டன
தடுப்புக்கவசம் முகம் மறைக்கலாம்
ஒன்று மட்டும் உறுதி
மூச்சு நிற்கும் கடைசி நொடியிலும்
என் நினைவில் எட்டிப் பார்க்கும்
முற்றாத் தினை கொத்திப் போன
என் சிவப்பு மூக்குக் கிளி

74. விதை

இலையும் பூவும் பேசிக்கொண்டன
ஏ இலை! உனக்கு மட்டுமா
இந்தச் செடிக்கே நான்தானே
அழகு சேர்க்கிறேன் என்றது பூ
ஏ பூ! நீ மொக்காயிருந்தபோது
மூடி மூடி உன்னை.நான்
பாதுகாத்ததால்தானே இன்று
நீ பூவானாய் என்றது இலை
இரண்டுமே உண்மைதான்
இரண்டுமே பொய்தான்
இலையின்றிப் பூ உதிப்பதில்லை
பூவின்றி இலை செழிப்பதில்லை
இலையும் பூவும் சருகாகும்
செடிதானே தாயாகும்
செடியின்றி இலையாவது பூவாவது
என்று புத்தி சொன்னபடியே
செடியை மொட்டையடித்துத்
தின்றுவிட்டுப் போனது ஆடு
இங்கே ஒரு செடியிருந்ததே
எங்கேயென்று தென்றல் வந்து
இப்போதெல்லாம்
வெறுங்குச்சியைத் தடவுகிறது
திருப்தியா தான்தோன்றி விதையே

75. ச்சூ ச்சூ

மணங்கழியாத் தம்பிக்காகத் துடித்து
மும்முறை தாலி கட்டிக்கொண்டும்
கன்னியாகவே ஓடிவந்துவிட்ட அக்கா
முருங்கை மரத்துப் பேயாகிப்
பாடியாடும் பெருந்துணங்கை
வனமும் நதியும் வேண்டாமெனத்
தோளேறித் தொற்றும் வண்ணக்கிளியை
மடக்கித் திருப்பத் திணறும் தம்பிக்குக்
கதைசொல்லித் தெம்பூட்டுகிறது
ஏழு பெண்களைப் பெற்றவளின்
கண்ணீர்த் துளிகள் ஒனறுகூடிக்
கையில் மந்திரக்கோலாகிறது
ச்சூ… ச்சூ… நிதம்பசூதனி…
கோலால் தாய் தொட்ட கற்கள்
ஏழு ஆண்பிள்ளைகளாகின்றன
இப்போது ஏழு அக்கா ஏழு தம்பி
கூடவே வளர்கிறது காலமும்
திரண்டு நிற்கும் கன்னிகளைக்
கரையேற்றும் பொறுப்பைத்
தம்பிகளிடம் விட்டுவிட்டுக்
கண்மூடுகிறாள் பெற்றவள்
காவிரி வைகை நர்மதை சிந்து
கோதாவரி கங்கை யமுனையென
ஏழாறும் கடந்து சப்த ரிஷிகளைத்
தம்பிகள் பேசி முடிக்கிறார்கள்
ஏழு நாள் மண விருந்து முடிந்து
கிளம்புகையில் ஒரு குட்டிக் கலகம்
அடர்வன முனிக்குடில்களுக்குப்
பத்தினிகள் உடன்வர மறுக்கிறார்கள்
ஏழு தம்பிகளுக்கும் ஏழு நதிகளைக்
கேட்கிறார்கள் மனுஷப் பெண்கள்
இது ஏதடா வம்பெனத் திகைத்துத்
தம்பிகளின் கைகளில் நதிகளைப்
பிடித்தளிக்கிறார்கள் ரிஷிகள்
அன்றிலிருந்து தொடங்கியதே இது
தம்பிகளே முக்கியம் அக்காக்களுக்கு
என்று சொல்லி முடிக்கிறது பேய்
கதையைக் கேட்டு மழை வானம்
ஹூம் ஹூம் ஹூம் என்று
உறுமிக் கொட்டி முடித்தபின்
அடங்காவனமாகிறது அக்காப்பேய்
வெள்ளம் பெருகிய நதியாகிறது
வாயடைத்துப்போன வண்ணக்கிளி
மிதக்கும் தெப்பமாகிறான் தம்பி
வானவில்லின் ஏழு வண்ணங்கள்
வெறுங்கனவாகிக் கலைகின்றன
அற்புதமான சூரியாஸ்தமனம்

76. சாபம்

நல்ல நாட்டுத் தேக்கால் செய்த
அப்பாவோடு உடனாடிக் களித்த
மிகப் புராதன ஊஞ்சலைத்
தொண்ணூறு வயதாகிவிட்ட
அம்மாவின் ஆட்சேபனையை மீறிக்
காயலான் கடையில் தள்ளிவிட்டுப்
அந்தப் பெரிய தனிவீட்டையும்
தன் மாலினி கூறியும் கேளாமல்
கோபாலன் விற்றுவிட்டான்
இடம் மாறிப் புது ஃப்ளாட் வாங்கி
இங்கே குடிவந்துவிட்டபோதும்
அவ்வப்போது அழுதுகொண்டு
சரியாக உண்பதேயில்லை அம்மா
தினம் டைரியெழுதும் கோபாலன்
இன்றிப்படி எழுதியிருக்கிறான்
அப்பாடா ஒழிந்தது அந்தச் சனியன்
அதைப் பார்க்கும்போதெல்லாம்
அன்றொரு நாள் அதன் மீதமர்ந்து
என் இஷ்டத் தேவதை விட்ட
அந்தக் கொடிய சாபம்
போய்த் தொலையட்டும்
யாருக்கும் தெரியாமலேயே
என்னை மட்டும் தின்றுவிட்டு

77. கருங்கடல்

ஞாயிற்றுக்கிழமைகளை
என்ன செய்வதெனத் தெரியாமல்
தொடங்கிய ஒரு பழக்கம்
தானென்றாலும் கூடக்
கடலுக்குள் போய் வருதல் என்பது
வெறுந்தினவாயில்லை
கடலோடு பேசிப்பேசி
என் நாக்கு ஊமையானது
கடலோடு இசைந்திசைந்து
என் காது செவிடானது
மாய்ந்து மாய்ந்து உழைத்தாலும்
உருவாக்கவே முடியாத கடலைக்
காணக் காண
என் கடலும் கானலாகிறது
கடலைக் கடலென்று பெயரிடாமல்
கண்ணீரின் தண்ணீராய்
உணர்ந்துவிட்டதன்பின்
எல்லா நாளுமே ஞாயிறாகிவிட்ட இந்நனவில்
இனி எனக்குக் கடலெதற்கு
கடல் நாடி நான் போவதில்லை
கடல்தான் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறது
இப்போதெல்லாம்
தன் ரகசியங்களைப் பகிர

78. நிறமிலி

ஒரு சிறிய இலைத் துளிர்கூடத்
தப்பித் தவறியும் ஒட்டியிராமல்
சித்திரை வெயிலில் பற்றியெரியும்
மொட்டைக் கிளையில் ஏறியமர்ந்த
பழந்தின்னிப் பறவையின்
திறந்த அலகிலிருந்து நழுவிப்
பச்சை பச்சையாய் இலைவிட்டு
மஞ்சள் மஞ்சளாய்ப் பூத்துக்
கத்திரி கத்திரியாய்க் காய்த்துச்
சிவப்புச் சிவப்பாய் வெடித்து
நீலம் நீலமாய்ப் படர்ந்து
ஊதா ஊதாவாய் வெளிறி
ஆரஞ்சு ஆரஞ்சாய்ப் பழுத்துக்
கறுப்புக் கறுப்பாய் உதிர்ந்து
வெள்ளை வெள்ளையாய்ப் பறந்து
நிறங்களின் ராணியே
நிறமிலிக் கனவின் கனிகள்
கீழே கீழே விழுந்தபடியே
ஏந்தும் கரங்களின்றி

79. தவம்

தியானமா பழகுகிறாய்
இரு இரு பதரே
ரூபங்கொண்டுவிடுகிறேன்
என்கிறாள் பார்வதி
நான்தான் அரூபியாயிற்றே
உன் ரூபம்
என்னை என்ன செய்யும்
என்கிறான் சிவன்
வெறும் வாய்ப்பேச்சு
உனக்காச்சு எனக்காச்சு
வா வா ஒருகை பார்த்துவிடுவோம்
என்கிறாள் பார்வதி
மீதிக் கதையா தெரியாது
தியானமே மறந்துவிட்டது
லிங்கேச்வரனுக்கு
ஆயிரமாண்டுத் தவம் பாழ் பாழ்
மீண்டும் முதல் புள்ளியிலிருந்து
தொடங்கியாக வேண்டும்
எல்லாமே

80. இன்கனி

ரயிலில் படுத்தபடி
வானம் திளைக்கிறேன்
விமானத்தில் அமர்ந்தபடி
பூமி வியக்கிறேன்
தலையால் நடந்தபடி
மூளை குடைகிறேன்
காலால் பறந்தபடி
கண் சுழற்றுகிறேன்
எங்கும் நான் எதிலும் நான்
என்றுதானேயிருந்தேன்
என்ன நடந்துவிட்டது திடீரென எனக்கு
சருகு மலராவது கண்டு
கடவுள் கதிகலங்குகிறார்
சடாரென நீ முகந்திருப்பினாலும்
அதையே பெருந்தயவாய்ப் பற்றிக்கொண்டு
கனவிலும் தாண்டமுடியாத தடைகளை
எப்படியோ தாண்டிவந்துவிட்டேன்தான்
அப்படியும் அப்படியும்
வெட்கம் மானம் வேகம் ரோஷம்
சூடு சொரணை சுயமரியாதை
இத்யாதிகளை விட்டுவிட்டாலும்
நெடுநெடுவென வளர்ந்து நிற்கும்
இக்கோரைப்புல்லைக் கண்டு
அடக்கமாட்டாமல் ஏன் குறுகுறுக்கிறது
தானாய் உருண்டுவந்த இன்கனியைப்
பிசைந்து கருங்கல்லாக்கிவிட்ட
உன் அழும்பு

81. துளி

ஓர் அருவி
அது மயக்கும் கானல்
ஒரு நதி
முழுதும் அது மணல்
ஒரு கிணறு
அது வெறும் பள்ளம்
தலை மேல் வானம்
துளி மேகம் காணோம்
கடலாய் நீ பொங்கியென்ன
காற்றாய் நான் வீசியென்ன
உலர்ந்துவிட்ட மனங்களில்
எங்கே எங்கே ஈரம்

82. பிரமை

வெற்றுக் கூந்தலுடன்
கல்யாண வீட்டில்
வற்றிய கடலாய்
ரோஜாவின் ராணி
தணியாத எரிமலை
பலிபீட மோனம்
கேள்விக் கண்கள்
முகம் துளைக்கும்
கலைந்த மேகம்
மண்ணில் விழாது
பார்வதி சாபம்
சிவனையா எரிக்கும்
ஊமை வாய்
ஒன்றுமே சொல்லாது
திறந்த செவி
எதையுமே கேட்காது
பச்சை நரம்பு
கழுத்தில் புடைக்கும்
தீயில் பொலியும்
திகைப்பின் மூச்சு
நரசிம்ம வெறியின்
திருமகள் சாயை
கோடி வீணை
மீட்டும் கூளம்
பொங்கும் பாலில்
ஒருதுளி நீர்
உப்பிய பலூன்
கனிந்து உடைகிறது
குழந்தையின் எச்சில்
கன்னத்தில்
கிணறு கிணறுதான்
குளம் குளம்தான்
அருவி அருவிதான்
நதி நதிதான்
மழை மழைதான்
கடல் மட்டும்தான்
கடலில்லை
நீல வானின் நிழல்

83.அசாங்கியம்

ராமனின் வில்
ராவணனிடம்
சகுனியின் சொல்
தர்மனிடம்
யசோதரையின் சிரிப்பு
புத்தனை மிரட்டுகிறது
சிலுவையில் யூதாஸ்
இயேசுவைக் காணோம்
எருமையில் முல்லா
கழுதையில் கண்ணன்
மறுபடி பிறந்தால்
ஹெகலாகி விடுவான் மார்க்ஸ்
பச்சைத் தண்ணீர் மதுவாகும்
சோதிடனாவானோ பாரதியும்
என்ன நடந்தாலும்
ஒன்று மட்டும் நிலைமாறாது
வானம் கவிழ்ந்துவிடாது
அவள் தலையில்

84.மிதி

ஒரு பந்து
விட்டேனா பார் என்று
உஷ்ண மூச்சு விட்டு
எகிறி வருகிறது
நட்டநடு நெஞ்சுக்கு
திடீர் முதுகுகாட்டியால்
என்ன முடியும்
மட்டை என்ற மனம் இற்றுவிட்டது
வீரன் விழுந்துவிட்டான்
எகிறி வந்த பந்து
சாந்தமாய்த் திரும்பிவிட்டது
முறைக்கும் காலி மைதானத்திலா
கொடிநாட்டிச் சிரிப்பது
விளையாட்டின் அர்த்தம் விளையாட்டிலில்லை
எல்லாமே பதிலிகளே
உருகும்வரை எரியாத மெழுகால்
யாருக்கு லாபம்
கவிழ்ந்த படகை உருட்டிக்
கடல் கர்ச்சிக்கிறது
உடைந்த வலம்புரிச்சங்கு
கரையொதுங்குகிறது
கிளிஞ்சல் பொறுக்கும்
சிறுவன் காலில் மிதிபட
ஐயோ இது என்ன
இது என்ன
கண்ணைக் கட்டிக்
காட்டில் விட்டாற்போல்
என்னைக் கட்டி
உன்னில் விட்டால்
என்ன இது
என்ன இது
கரும்புக் கொல்லையை
யானைவாயில் வைத்தால்
யார் சொன்னது
யார் சொன்னது
தொழுவை வசக்கி
மாட்டில் பூட்டினால்
சொன்னது யார்
சொன்னது யார்
சர்வநாசம்தான்
சர்வமங்களமோ

85. செடி

பச்சைக்கிளியின் சிவப்பு மூக்கில்
ஊர் மணம் அடிக்கிறது
காரியம் முடிந்ததும்
மனிதர்கள் கழன்றுகொள்கிறார்கள்
ஒரு செடி வைத்துக்
கண்ணால் வளர்த்து
முதல் பூ வந்தபோது
பிடித்த பணியிடம் மாறிவிட்டது
உதிர்ந்தாலும் பூ
மரத்தடியிலேயே சருகாகிறது
இப்போதும் செடி வைக்கிறாள்
தீய்ந்த மனதில்
கிளிப்பச்சை வண்ணத்தில்

86. வால்

ஒரே இடத்திலேயே
நின்றுகொண்டிருக்க முடியாது
நெடுங்காலம்
எதற்காக நின்றோமோ அதைப்
பார்த்தாகிவிட்டது என்றான பிறகு
இங்கேயா நின்றோம்
இவ்வளவு யுகமாய்
என்ற கேள்வி வந்துவிடுகிறது
நிற்கும்போது அப்படித்
தோன்றவில்லையே என்றால்
ஆமாம் அதுவும் உண்மைதான்
ஆனால் இப்போது இப்படித்தான் எண்ணம்
என்ன செய்வது
நகர்ந்துகொண்டேயிருக்கிறோம் அல்லவா
நகராமல் நிற்க முடிவதில்லையே
நின்றவன் வேறு நகர்ந்தவன் வேறா
இல்லை இருவரும் ஓராள்தானா
யாருக்குத் தெரியும்
முந்தாநாள் மேகமா இன்றிருக்கிறது
வானமே அப்படியில்லையே
காலும் மனமும் அலைபாயாதிருப்பதெப்படி
மண்ணாய்க் கல்லாய்க் கண்கள் மாறுவதெப்படி
சுழல்வதெல்லாம் நின்றாலும்
நிற்பதெல்லாம் சுழல்வதில்லையே
கோப்பர் நிகஸ் – கெப்ளர் விதிப்படி
சூரியனைப் பூமி சுற்றலாம்
இங்கே சூரியனே பூமியைச் சுற்றவேண்டும்
நான் உன்னைச் சுற்றுவதுபோல
வெட்டவெளியில்
பறந்துகொண்டிருக்கும் குருவிக்கு
அமர மரமில்லை
இருப்பதையெல்லாம் மரமாக
உணரவும் முடியவில்லை
திசைமருட்சி பூமிக்குத் தள்ளினாலும்
வெளியிலேயே நீந்துகிறது
ரெட்டை வால் குருவி

87. கண்

ஒரே கல்லில்
மூணு மாங்காய் அடிக்கிறவன்
கையொடிந்து கிடக்கிறான்
காய்த்துக் குலுங்கும் மரமும்
கூர்ப்புக் கல்லும்
நலம் விசாரிக்கின்றன
கடித்துத் தின்ற வாயும்
நிறைந்த வயிறும்
சும்மாயிருக்கின்றன
சுவரை வெறிக்கிறான்
நின்ற மின்விசிறியை முறைக்கிறான்
கைப்பேசியில்
நீர் வேட்கை கொண்ட
யானையின் பிளிறல்
ஒலித்தபடியேயிருக்கிறது
தடாகத்திற்கு மாற்றாய்ப்
புளிப்பு மிட்டாய்
எதிரே பிளாஸ்டிக் பூ
ஒரு மங்கிய மஞ்சள் ஒளி
தோன்றி மறைகிறது
பின்தங்கிய நினைவு
மீண்டும் படமெடுத்தாடுகிறது
யானை தன்னை எறும்பாக நினைத்துக்கொள்கிறது
எறும்பு தன்னை யானையாக நினைத்துக்கொள்கிறது
எறும்புக்குத் தான் எறும்பு
என்று தெரிந்துவிட்டால்
நிற்காது நகரும்
யானையும்தான்
மலையிறங்குவதுபோல்
அடிவயிறு குளிர்கிறது
மலையேறுவதுபோல் உள்மூச்சிரைகிறது
கண்ணை மூடினால் தெரியும் கடல்
கண்ணைத் திறந்தால் தெரிவதில்லை

88. ராணி

ஒரு காடு
ஒரு மலை
உச்சியில் ஒரு ரோஜாச் செடி
தான் மலர்களின் ராணியைச்
சிருஷ்டிக்கிறோம் என்று
செடிக்குத் தெரியாது
எத்தனையோ வெயிலும் மழையும் தாண்டிப்
பருவம் தப்பாமல்
பூத்துக்கொண்டேயிருக்கிறது ரோஜா
கீழே கிடக்கும் ஒரு சருகு
எப்படியோ ஒரு காற்றில்
அதனருகில் ஏறிவந்துவிடுகிறது
தனைமறந்து பறந்த சருகுக்கும் தெரியும்
ரோஜாவின் மணம்
விந்தையிலும் விந்தையாய்
ரோஜாவுக்குத் தெரிவதில்லை
தெரிந்தால் மலர்களின் ராணி
வெறும் மலராகிவிடும்


Art : Leunberger

கல்யாணராமன் .
கல்யாணராமன் .
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top