Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

”நதியோரம்”

சசிகலா பாபு
சசிகலா பாபு
April 1, 2026
”நதியோரம்”

வங்காளம் – சுநீல் கங்கோபாத்தியாய
ஆங்கிலம் – ஷீலா சென்குப்தா
தமிழ் : சசிகலா பாபு


இந்திரா காந்தியிடம், “உங்களுக்குப் புத்தகங்கள் வாசிக்கப் பிடிக்குமா?” என்று அடுத்து கேட்டேன்.

திருமதி காந்தி லேசாகச் சிரித்து, “சிறு வயதிலே நான் ஒரு புத்தகப் புழு தெரியுமா” என்றார்.

“ஆனால் உங்களுக்கு இப்போது வாசிக்க அவ்வளவாக நேரம் கிடைக்காதே?.” “ஆமாம், கிடைப்பதில்லைதான். ஆனால் ஒரு இடத்திலே இருந்து இன்னொரு இடத்துக்குப் பயணம்போகும்போது அடிக்கடி இப்படிப் போகவேண்டியிருக்கும். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் யாரிடமும் பேசாமல் நான்பாட்டிற்கு வாசிப்பதுண்டு, அப்படித்தான் ஒருமுறை அஸ்ஸாமிற்குப் போனபோது ஆண்ட்ரே மால்ரோவின் ‘Anti Memories’ புத்தகத்தைக் கொண்டுபோயிருந்தேன், வழியில் என்னால் நாற்பத்தெட்டுப் பக்கங்கள் மட்டுமே படிக்க முடிந்தது. பக்கத்தைக் குறித்துவைத்துக் கொண்டேன். ஆனால் அந்தப் பயணத்தில் அதைத் தொடர முடியவில்லை. அதன்பிறகு லக்ஸம்பர்க் சென்ற சமயத்தில்தான் குறித்துவைத்த நாற்பத்தொன்பதாவது பக்கத்தில் இருந்து புத்தகத்தைத் தொடர்ந்தேன்.”

“அந்தப் புத்தகத்தில் உங்கள் தந்தையாரைப் பற்றிய பல அற்புதமான விஷயங்கள் உண்டே.”

“ஆமாம்.”

நான் பேசுவதை நிறுத்திவிட்டு அருகிலிருந்து வாசனையூட்டப்பட்ட டிஷ்யூ ஒன்றை எடுத்துக்கொண்டேன். முகத்தைத் துடைத்துக்கொள்ளும்போது மனதுக்கு இனிய சுகந்தத்தையும் பரப்பும் இவ்வகை ஈரமான மெல்லிய காகிதங்கள் அனைத்து விமானங்களிலும் வழங்கப்படுகின்றன. இந்தத் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து விமானப் பணிப்பெண் கொண்டுவந்தபோது ஒன்றுக்குப் பதிலாக நான் மூன்று துண்டுகளை எடுத்துக்கொண்டேன். பொதுவாக யாரும் இப்படிச் செய்வதில்லை, அப்படிச் செய்தாலும் யாரும் கண்டுகொள்வதுமில்லை.

திருமதி காந்தியும் இதேபோல் – அதாவது, ஒன்றுக்குப் பதிலாக மூன்று துண்டுகளை – எடுத்திருப்பாரோ என்று யோசித்தேன். அவர் அப்படிச் செய்யவேண்டிய அவசியமே இல்லை என்பது எனக்குப் பிறகுதான் உறைத்தது. அதுபோன்ற சந்தர்ப்பங்களையே அவர் சந்தித்திருக்க மாட்டார்.

திருமதி காந்தி கால்மேல் கால் மாற்றிப்போட்டுக் கொண்டார். சேலை மடிப்புகளை நீவிவிட்டுக் கொண்டு, குழந்தைத்தனமாக மோவாயை உயர்த்தி, ஏதோ சிந்தனைவயப்பட்டு மௌனமாக இருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து, அவர் எங்கேயோ பார்த்துக்கொண்டே, “எத்தனையோ விதமான கேள்விகளோடு மக்கள் என்னிடம் வருகிறார்கள் தெரியுமா. ஆனால் நான் யாரிடமும் எதைப்பற்றியும் கேட்பதில்லை. என்னுடைய வேலை கேள்விகளுக்குப் பதிலளிப்பது மட்டுமே” என்றார்.

“அதில் பல அற்பமான கேள்விகளாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.”

“நிறையவே.”

“இன்னமும் ஒரே ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறேன். இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது உங்களுக்கு? ‘பேரின்பம்’ என்பீர்களா?”

“பேரின்பமா?”

“ஆமாம்.”

“ஓ, நான் பேரின்பத்தைப் பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை. என் வாழ்க்கையில் எப்போதெல்லாம் இக்கட்டான நிலைமையைச் சந்திக்கிறேனோ அப்போதெல்லாம் நான் நினைப்பது ஒன்றை மட்டும்தான் – என்னை யாரும் தோற்கடித்துவிடக் கூடாது! நான் தோற்றதேயில்லை என்பது வேறுவிஷயம்! எவ்வளவோ விஷயங்கள் அரைகுறையாக நின்றுபோயிருக்கலாம், ஆனால் நான் தோற்றதேயில்லை.”

“ரவீந்திரநாத்தின் ‘காந்தாரியின் மன்றாட்டு’ நீங்கள் வாசித்ததில்லை போலிருக்கிறது. அதில் துரியோதனின் வார்த்தைகள் மூலம் இதையேதான் அவரும் சொல்கிறார்:

பகவானே, எனக்குப் பேரின்பம் வேண்டாம்

வெற்றி! எனக்கு வேண்டியது வெற்றி, இன்று நான் வெற்றிபெற்றவன்!

சிற்றின்பங்களால் நிரம்பாதது ஒரு சத்திரியனின் இதயம்.”

“என்னைத் துரியோதனோடு ஒப்பிடுகிறீர்களா?”

“இப்போது நீங்கள்தான் கேள்வி கேட்கிறீர்கள்!”

“இல்லை, இது எதிர்க்கேள்வி, பதிலை எளிதாக்கக் கேட்கப்படுவது.”

“நான் ஒப்பிடவில்லை. வாழ்க்கையோடு நாவலை ஒப்பிட முடியாது. எப்படிப் பார்த்தாலும், மகாபாரதத்தின் துரியோதனனும் ரவீந்திரநாத் வடித்திருந்த கதாபாத்திரமும் ஒன்றல்ல. ஆட்சி அதிகாரம் படைத்த எவருமே வெற்றியைத்தான் தம் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் சொல்லவருகிறேன். அரசதர்மத்தில் பரிவுக்கோ நட்புக்கோ இடமில்லை, வெற்றி மட்டும்தான் அவர்கள் கொண்டிருக்கும் ஒரே தர்மம்.”

“உண்மையில் என் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்துதான் நான் அப்படிச் சொன்னேன்.”

“உங்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கையோ அந்தரங்க வாழ்க்கையோ கிடையாது. நீங்கள் தனியாக எங்காவது சென்றே எவ்வளவோ காலமாகிறது, நீங்கள் ஒரு நதியைப் பார்த்தே ரொம்ப நாளாகிறது.”

“நான் நதியைப் பார்த்ததில்லையா?”

“பார்த்திருப்பீர்கள், ஏதேனும் பாலத்தைத் திறந்துவைத்தபோது.”

அவர் சட்டென எழுந்து நின்று, “சரி கிளம்புங்கள்”என்றார்.

அவர் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டதோ, அதனால்தான் என்னையும் கிளம்பச் சொல்கிறாரோ என்று நினைத்தேன்.

ஆனால் திருமதி காந்தியோ மீண்டும், “கிளம்புங்கள், உங்களோடு வந்து நதியைப் பார்க்கப் போகிறேன்” என்றார்.

“பொதுவாக உங்கள் வயதுப் பெண்களோடு வெளியே செல்வதில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் உங்களிடம் ஒருவித வசீகரம் இருக்கிறது. நாட்டின் தலைவர் என்பதால் அல்ல. உங்கள் வயதையும் மீறி உங்களிடம் ஒரு இளமைத்துடிப்பு இருக்கிறது. இன்றும் உங்கள் நடை, உடை, பாவனையில் இளமைத்துள்ளல் தென்படுகிறது. நீங்கள் தயவுதாட்சண்யம் பார்க்காதவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அதன் சுவடு உங்கள் முகத்தில் தெரியவேயில்லை.”

“நாம் நதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். போய்ப் பார்க்கலாமா?”

“உங்களின் ஐம்பத்தேழு மெய்க்காப்பாளர்களும் நம்மோடு வருவார்களா?”

அவர் லேசாகச் சிரித்து, “ஐம்பத்தேழா? அதையும் கூட எண்ணியிருக்கிறீர்களோ? எனக்கு இது தெரியாதே!” என்றார்.

“ஆமாம், ரவீந்திரர் சதானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உங்களைப் பார்த்திருக்கிறேன். உங்கள் பாதுகாப்பிற்காக உங்களின் ஐம்பத்தேழு மெய்க்காப்பாளர்களும் அங்கு இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பொதுக்குழாயில் தண்ணீர் குடிக்க வெளியே வந்தபோது அங்கும்கூட ஒருவர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். பார்த்ததுமே தெரிந்துவிட்டது அவர் உங்கள் மெய்க்காப்பாளர்தான் என்று. அவர் அங்கு நின்றுகொண்டிருப்பதால் யாருமே அந்தக் குழாயில் நீர் குடிக்க வரவில்லை என்று அவர் என்னிடம் குறைபட்டுக்கொண்டார். பாவம், அதற்கு அவர் என்ன செய்வார்? அவரை அங்கு காவலுக்குப் போட்டுவிட்டார்கள்.”

“அட, இதெல்லாம் வாடிக்கைதானே? இருக்கட்டும், கிளம்புங்கள். கங்கைக்கரைக்கு இன்று நான் தனியாகப் போகப்போகிறேன். உலகம் முழுக்கச் சுற்றிவந்திருக்கிறேன் என்பதென்னமோ உண்மை, உள்ளங்கை ரேகையைப் போல் இந்த உலகைப் பற்றித் தெரியும் எனக்கு. ஆனால், சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியோரம் நான் அமைதியாக நின்று நீண்டகாலம் ஆகிவிட்டது. கல்கத்தாவின் நதிக்கரை அழகாக இருக்குமா?”

“இல்லையா பின்னே, உலகத்தின் வெகு அழகான காட்சிகளில் அதுவும் ஒன்று. ஆனால் உங்களால் அங்கு போக முடியாதே. நீங்கள் தடுத்தாலும்கூட உங்களின் மெய்க்காப்பாளர்கள் உங்கள் பேச்சைக் கேட்கமாட்டார்கள். தூரத்தில் இருந்தாவது உங்களைத் தொடந்து வந்துகொண்டே இருப்பார்கள். அத்துடன்….”

“அத்துடன்?”

“இதைச் சொல்ல எனக்குச் சற்றுத் தயக்கமாக இருக்கிறது. நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் சொல்கிறேன்.”

“சொல்லுங்கள்.”

“அந்தக் கொலைகாரன் நதியோரம் நின்றுகொண்டிருக்கிறான்.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“உங்களைக் கொல்ல எல்லா இடங்களிலும் ஒருவன் காத்துக்கொண்டிருக்கிறான் இல்லையா? இல்லையென்றால் ஏன் உங்களுக்கு இத்தனை மெய்க்காப்பாளர்கள்?”

பெருமூச்செறிந்துவிட்டு திருமதி காந்தி சொன்னார், “அதென்னமோ உண்மை. அப்படியொருவன் இருக்கிறான்தான், ஆனால் இதுவொன்றும் அசாதாரணமான விஷயமில்லை. என்னை ஒழித்துக்கட்ட நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா நாட்டுத்தலைவர்களுக்கும் இதுதான் கதி.”

“எனக்கும் அது தெரியும். ஆனால் என்னைக் கொல்ல வெளியே ஒருவன் காத்துக்கொண்டிருக்கிறான் என்ற நினைப்பே என்னைக் கதிகலங்கச் செய்கிறதே.”

“எப்போதும் அந்த நினைப்பு இருப்பதில்லை.”

“எப்போதும் மெய்க்காப்பாளர்களோடு இருப்பதே நாம் தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பீதியை ஒப்புக்கொண்டுவிட்டோம் என்றே அர்த்தமாகிறது.”

“போகப் போக அது பழகிவிடும். ஆட்டத்தில் அதற்கும் ஒரு பங்கு உண்டு.”

“ரவீந்திரர் சதானில் குழாயருகே நின்றுகொண்டிருந்த காப்பாளரின் தோரணையில் எதுவோ வித்தியாசமாகத் தென்பட்டது. அதனால்தான் நான் அவரைச் சந்தேகமாகப் பார்த்தேன். ஒரேசமயத்தில் இயல்பாகவும் விழிப்போடும் இருந்தார். ஏதோ நினைப்பில் இருப்பவரைப்போல் தெரிந்தாலும் கவனத்தோடு இருந்தார். அவரிடம் ஆயுதம் வேறு இருந்தது. அவரை நான் கொலைகாரனென்று வெகு எளிதாகத் தப்புக்கணக்குப் போட்டிருப்பேன். ஆனால் அவர் ஒரு மெய்க்காப்பாளர்.”

யோசித்துப் பார்த்தால், கொலைகாரனுக்கும் மெய்க்காப்பாளனுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.”

இதைக் கேட்டு திருமதி காந்தி லேசாகக் கலங்கியதுபோல் தெரிந்தது. அவருக்கே உரிய பிரத்யேகப் பாணியில் புருவங்கள் நெரிய எங்கோ கொஞ்ச நேரம் வெறித்தார். பிறகு, “பேசினால் பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நான் தனியாக நதிக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.

“தனியாகவா!”

“ஆமாம், அதற்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும். உங்களுக்கே தெரியும், எந்த நகரத்தின் சாலைகளைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. இங்கேயே என்னைத் தனியாக விட்டுச்சென்று விட்டீர்களென்றால், ஒரு சிறுமியைப் போலத் தொலைந்து போய்விடுவேன்.”

“ஆனால் அதற்கு முன்பு நதிக்கரையில் காத்துக்கொண்டிருக்கும் கொலைகாரனை என்ன செய்வது?”

“அங்கே எந்தக் கொலைகாரனும் இல்லை என்றே எனக்குப் படுகிறது. அது ரொம்ப அழகான இடம் என்று சொன்னீர்கள் இல்லையா?”

“ஆப்ரகாம் லிங்கன் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் கொலைகாரன் மேடையில் இருந்து பாய்ந்துவந்து அவரைக் கொன்றான் என்பது நினைவிருக்கட்டும். இந்தக் கொலைகாரர்களுக்கு இங்கிதம் என்பதே கிடையாது—-”

“ஆனால் எதற்காக என்னைக் கொல்லவேண்டும்? என்னால் முடிந்தவரை நாட்டைக் காத்துக்கொண்டுதானே இருக்கிறேன்?”

“உண்மையில் நாட்டைக் காப்பது முக்கிய விஷயமேயில்லை! யார் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் முக்கியமாகி விடுகிறது! தான் எனும் எண்ணம் மற்ற எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிடுகிறது. ஒருவர் இறக்கும் வரையிலோ அல்லது கொல்லப்படும் வரையிலோ தானொரு மீட்பராக வேடம் போடுவதை நிறுத்த விரும்புவதேயில்லை.”

“நாம் நதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்!”

“நதியைப் பற்றி இல்லை, நதியோரம் தனியாக நிற்பதைப் பற்றி.”

“சரிதான்! ஏன் திடீரென்று அப்படியொரு கேள்வி வந்தது உங்களுக்கு? ரொம்ப காலமாக நானும் நதியைப் பார்க்கவில்லைதான்.”

“உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நீங்கள் ஏதோ சொன்னபோது உங்களுக்கென்று அந்தரங்க வாழ்க்கை இல்லை என்று நான் சொன்னேன். அப்போதுதான் இந்த நதி விஷயம் வந்தது. உங்களிடம் விமானங்கள் இருக்கின்றன, உங்களிடம் அதிகாரங்கள் இருக்கின்றன, உங்களிடம் திறப்புவிழா நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்பதென்னமோ உண்மைதான், ஆனால் உங்களிடம் நதிகள் கிடையாது.”

“அது அத்தனை முக்கியமா என்ன?”

“கிடையாது.”

“பிறகென்ன?”

“அப்படியிருந்தும் உங்களுக்கு நதியைப் பார்க்க வேண்டுமென்று திடீர் ஆசைவந்திருக்கிறதே.”

“கிளம்புங்கள். யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது. நான்தானென்று யாருமே நம்ப மாட்டார்கள். மிஞ்சிப்போனால், ‘இவரைப் பார்த்தால் திருமதி காந்தி போலவே இருக்கிறது, ஆனால் இவர் திருமதி காந்தியாக இருக்கவே முடியாது’ என்றுதான் சொல்வார்கள்.”

“அதுபோல் திரை நடிகர்களுக்கு வேண்டுமானால் நடக்கலாம், உங்களுக்கு நடக்க வாய்ப்பில்லை. உங்களின் புகைப்படங்களும், எல்லாக் கோணங்களில் இருந்து உங்கள் முகமும் தினம்தினம் செய்தித்தாள்களில் வந்துகொண்டே இருக்கின்றனவே.”

“பேச்சு வளர்ந்துகொண்டே போகிறது.”

“சரி வாருங்கள், என்னதான் நடக்கிறதென்று போய்ப் பார்ப்போம்.”

ராஜ் பவனுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தேன். வெள்ளை சால்வையைப் போர்த்திக்கொண்டு வாயிலைக் கடந்து வந்தார் அவர். சூரியன் மறைந்து சிறிது நேரம் ஆகியிருந்தது. அவருக்காகக் காத்திருந்த நேரத்தில் நான் இரண்டு சிகரெட்டுகள் புகைத்துத் தீர்த்திருந்தேன்.

என்னருகே வந்ததும் அவர், “இந்த வாயில் கதவுகள் வழியாக நான் நடந்து வந்ததே இல்லை. அதனால்தான் யாரும் என்னைக் கவனிக்கவில்லை. எல்லோரும் இன்னமும் என் கார்களைக் காவல்காத்துக் கொண்டு நிற்கிறார்கள்” என்றார்.

“உங்களைச் சந்திக்க ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஆட்கள் திரள் திரளாக வந்துகொண்டே இருக்கிறார்கள். எவ்வளவோ கோரிக்கைகளும், விண்ணப்பங்களும், எதிர்ப்புகளும் இருக்கவேண்டுமே.”

“ஆமாம், இருக்கின்றனதான். அதற்காக நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள் இளைஞரே. எனக்கு நீங்கள் கைட் மட்டும்தான் என்பது நினைவிருக்கட்டும்.”

“அப்படியென்றால் அதோ நதி அங்கு நேரெதிரில் இருக்கிறது. நீங்களே போய்க் கொள்ளுங்கள்.”

“நான் சொன்னதைக் கேட்டுக் கோபமா?”

“கொஞ்ச நேரம் முன்னால்தான் உங்களிடம் சொன்னேன் மாலைவேளைகளில் பெண்களுடன் காலாற நடைபோக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் பெரிய அதிர்ஷ்டசாலி என்றே நினைத்துக்கொள்வேன், ஆனால் உங்கள் விஷயத்தில் அப்படியில்லை.”

இதைக் கேட்டதும் திருமதி காந்தி வாய்விட்டுச் சிரித்தார். வளர்ந்த பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் – அது ஆணோ பெண்ணோ – அவ்வப்போது குழந்தையின் சாயல் வந்துவிடுகிறது!
ஸ்டேடியத்தின் சுவர்களை அடுத்திருந்த ரேடியோ ஸ்டேஷனை ஒட்டி நடந்து சென்றோம். மங்கிய மாலை வேளை. அங்கங்கே ஆட்கள் இருந்தனர், ஆனால் யாரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. தங்களுக்குள் மெய்மறந்துபோய்ச் சில இளஞ்ஜோடிகள் எங்களைக் கடந்து சென்றனர். ஒரு சிறுவன் கொஞ்ச நேரமாய் எங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். பணம் எடுத்துவரவில்லையே என்று திருமதி காந்தி சங்கடப்பட்டார். அவர் எங்குமே பணம் எடுத்துச் சென்றதே இல்லையோ என்னவோ, குறைந்தபட்சம் கடந்த சில வருடங்களிலாவது.

என்னைப் பார்த்தார்.

“என்னிடம் சில்லறை இருக்கிறது, ஆனால் பிச்சை போடுவது சரியான காரியமா?”

“உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்களேன்.”

“அட, என் மனசாட்சி சமயத்துக்கு ஏற்றாற்போல விதவிதமாகப் பதில் சொல்லும். அதனால்தான் உங்களிடம் கேட்டேன்.”

“நான் யாருக்கும் நீதிநெறிகளைப் போதிப்பதில்லை.”

பிச்சைக்காரச் சிறுவனுக்குப் பத்து பைசா கொடுத்தேன். அவன் அங்கிருந்து நகர்ந்ததும், “புண்ணியத்துக்காக ஒன்றும் அவனுக்குப் பிச்சை போடவில்லை. நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருக்கட்டும் என்றுதான் கொடுத்தேன்” என்றேன்.

“கல்கத்தாவில் இவன் ஒருவன்தான் பிச்சைக்காரனா?”

“இல்லை, மொத்தம் மூன்று லட்சத்து ஒருவன் இருக்கிறார்கள்.”

“அதென்ன ‘ஒருவன்’?

“என்னையும் சேர்த்துச் சொன்னேன்.”

“அப்படி என்ன பிச்சை எடுக்கிறீர்கள்?”

நான் சிறிதுநேரம் பேசாமல் இருந்தேன், பிறகு, “அன்பைப் பிச்சை எடுப்பவனென்று சொல்லலாமென்று நினைத்தேன். ஆனால் அது சொல்லிச் சொல்லிப் புளித்துப்போன விஷயமென்று உறைத்தது. புளித்துப்போன விஷயமானாலும் அது உண்மைதானே என்றும் பிறகு தோன்றியது, இதுபோன்ற விஷயங்களை இப்போது வெளிப்படையாகப் பேசவும் முடிவதில்லை.”

“உங்களுக்கு அன்பு கிடைத்ததே இல்லையா?”

“கிடைத்திருக்கிறதுதான், இருந்தாலும் ஏக்கமும் இருக்கிறது.”

“இதுபோன்ற ஏக்கங்கள் இருப்பவர்களால் தங்கள் வாழ்க்கையில் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது.”

“உங்களுக்கு அந்த ஏக்கம் இல்லையா?”

“இருந்தது, ஒருமுறை. ரொம்ப காலத்துக்கு முன்பு, என் அம்மா உடல்நலமில்லாமல் இருந்தபோது… !”

“சிறுவனாக இருந்தபோது ‘இந்திய கிராமத்தில் சாக்ரடீஸ்’ என்றொரு புத்தகம் வாசித்திருக்கிறேன்.”

“ஓ அது என் விஷயத்தில் ஒத்துவராது.”

ஈடன் கார்டனின் ஒரு மூலைக்கு வந்ததும் நின்றோம். சாலையின் நட்டநடுவில் வட்டவடிவ நினைவுச்சின்னம் ஒன்று இருந்தது – ஒருகாலத்தில் ஆங்கிலேய இளவரசர் ஒருவரின் சிலை இங்கு இருந்தது – இப்போது பீடம் காலியாக இருக்கிறது. திருமதி காந்தி அதையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். கூதற்காற்று வீசிக்கொண்டிருந்தது. அவர் சட்டென, “கைட், இங்கிருந்து எந்தப் பக்கம் போகவேண்டும்?” என்று கேட்டார்.

“நாம் சாலையைக் கடக்கவேண்டும். உங்களால் முடியுமா?” என்று கேட்டேன். சில கார்கள் கடந்து கொண்டிருந்தன, சில நேரங்களில் பெரிய பெரிய லாரிகள் கூடக் கடந்து போயின. அவர் தன்னந்தனியாகச் சாலையைக் கடந்து நீண்ட நாட்களாகியிருக்கும், அதுவும் இப்படியொரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில். ஆனால் அவர் செய்த காரியங்களிலெல்லாம் சமயோஜிதம் இருந்தது. முதலில் இடப்பக்கம் பார்த்தார், பிறகு வலப்பக்கம், அடுத்து மெதுவாகச் சாலையைக் கடந்து அந்தப் பக்கம் சென்றார். அவரது நடையில் ஒருவித விவேகம் இருந்தது. விடுவிடுவெனச் செய்வது அவருக்குப் பொருந்தவில்லை.

நேராகக் கங்கைக்குப் போகாமல் அவருடன் கோட்டையை ஒட்டி நடந்தேன். காற்று இப்போது மேலும் பலமாக வீசியது. காற்றில் குளிரின் கடுப்பு இருந்தது. அவர் சால்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போலப் பேசினார், “கல்கத்தாவில் இருக்கிறேன், ஆனால் எனக்கென்று இவ்வளவு நேரம் கிடைத்திருப்பதே ஆச்சரியம். மற்ற நகரங்களை விடவும் இங்குதான் புகார்கள் ஏராளம்.”

நான் அமைதியாக இருந்தேன். தீக்குச்சிகள் தீர்ந்துவிட்டதால் என்னால் சிகரெட் பற்றவைக்க முடியவில்லை. அந்த நொடி என் மனம் அதைமட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது. எதிரில் ஒருவர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவர் கையில் சிகரெட் இருப்பதைப் பார்த்த நான் அவரை நிறுத்து, “அண்ணே, என் சிகரெட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு தர முடியுமா?” என்று கேட்டேன். அந்த மனிதர் ஆச்சரியப்பட்டுப்போய் நின்றுவிட்டார். நான் என் சிகரெட்டைப் பற்ற வைத்த அந்தக் கொஞ்ச நேரத்தில் அவர் இந்நாட்டின் – இல்லையெனில் இவ்வுலகின் – மிகப் பிரபலமான பெண்மணியை ஏறிட்டுப் பார்த்தார். அவரை அடையாளம் கண்டுகொண்டாரோ இல்லையோ, யாருக்குத் தெரியும். முதலில் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர் திருமதி காந்தியைப் பார்த்தும் ஆச்சரியப்பட்டார்.

திருமதி காந்தி கொஞ்சம் தள்ளி நின்றபடி எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சட்டென என் மனதுக்குள் ஒரு எண்ணம் வெட்டியது – நதியோரம் காத்திருக்கும் கொலைகாரன் இவர்தானோ? அவர்கள்தான் எல்லா விவரங்களும் தெரிந்தவர்களாயிற்றே.

நெருப்பு கொடுத்ததற்கு நான் அம்மனிதருக்கு நன்றி சொன்னேன்.

அந்த மனிதர் திருமதி காந்தியை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்பாட்டிற்கு அவர் வழியில் சென்றுவிட்டார். நான் திருமதி காந்தியைப் பார்த்து, “நான் அடிக்கடி புகைப்பேன், உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இருக்காதென்று நினைக்கிறேன்” என்றேன்.

அவர் வெகு இயல்பாக அவருக்கே உரிய பாணியில் கையை ஆட்டி என் கேள்வியை ஒதுக்கிவிட்டு, “நாம் ஏன் இன்னமும் நதிக்குச் செல்லவில்லை?” என்று கேட்டார்.

“உண்மையைச் சொல்வதென்றால் உங்களை எந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றால் சரியாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு டூரிஸ்ட் கைடுக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கிறது பாருங்கள்” என்றேன்.

“நான் நதியைப் பார்க்க வந்திருக்கிறேன் என்பது ஞாபகமிருக்கட்டும். உயரமான மேடை எனக்கு வசதியானதுதான், ஆனால் இப்போது வந்திருப்பது வேறு ஒன்றிற்காக” என்றார் அவர். குறுகலான ரயில்வே பாதையைக் கடந்து நதிக்கரையை அடைந்தோம். அங்கு ஆள் அரவமே இல்லை. நதி இருளாக, சாந்தமாக இருந்தது. வெளிநாட்டுக் கப்பலொன்று விளக்குகள் பளீரென்று ஒளிர கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டிருந்தது, அதன் நீள நீளமான வெளிச்சக் கீற்றுகள் நீரில் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. தொலைதூரத்தில் இருந்த சிறுசிறு படகுகளின் வெளிச்சத்துணுக்குகள் மின்மினிப்பூச்சிகளாக மினுங்கின.

திருமதி காந்தி நதியைப் பார்த்து, “அப்படியொன்றும் பெரிதாக நடந்துவிடவில்லையே” என்றார்.

“என்ன?”

“இங்கே வந்ததும் ஏதேனும் வித்தியாசமாக உணர்வேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்குத் தெரிவதோ ஃபரக்காவும், கல்கத்தா துறைமுகப் பிரச்சினைகளும், இம்மாநிலத்தின் தேவைகளும், இரண்டாவது பாலமும்….”

“நீங்கள் இன்னமும் அந்த உயரமான மேடையிலேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள், இல்லையெனில் ராஜ் பவனில் பிரதிநிதிகள் சந்திப்பில் இருக்கிறீர்கள், மனதளவில் நீங்கள் இன்னமும் நதியை அடையவே இல்லை” என்றேன் நான்.

அவர் ஒருமுறை கண்களை மூடித் திறந்தார்.

“என்னால் இப்போது நதியை நன்றாகப் பார்க்க முடிகிறது.”

“வெற்றியா, பேரின்பமா, எதுவாக இருக்கிறது அது?”

“என்னை எதுவும் கேட்காதீர்கள்.”

“அடடா, உங்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறதே.”

“பாவமாகவா? ஏன்?” என்று கேட்டபடியே அலட்சியமாகத் திரும்பிப் பார்த்தார்.

“வெற்றியா, பேரின்பமா, உங்கள் மனதில் எது மேலோங்கியிருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியவில்லையே.”

“நான் என்னைப் பற்றி யோசிப்பதேயில்லை. நான் ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.”

“ஆனால் இங்கு நாடு இல்லை. உங்களெதிரே ஒரு நதி மட்டுமே இருக்கிறது. நிலையான பேறுடைய ஒரு நதி.”

அவர் நதியை ஏறெடுத்துப் பார்த்தார், அகந்தையும், சொல்லமுடியாத வேதனையும் அவர் முகத்தில் மாறி மாறி பிரதிபலித்தன. எதையோ சொல்ல வருவதுபோல அவரது உதடுகள் துடித்தன.

படிகளில் சரசரவென்று இறங்கி நதியோரம் சென்று நின்றார். லேசாகக் குனிந்து நதிநீரைத் தொட்டார்.

சிறிது நீரை அள்ளித் தன் தலையில் தெளித்துக்கொள்ள அவர் விரும்பியிருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் நதியிடம் வெகு அந்தரங்கமான எதையோ பகிர்ந்துகொள்ளவே சென்றிருக்கிறார் என்று அடுத்த நொடி தோன்றியது. என்ன செய்வது, அவருக்கு வேறு யாரும் இல்லை.


சுநீல் கங்கோபாத்தியாய :

இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுநீல் கங்கோபாத்தியாய வங்காளதேசத்தில் உள்ள ஃபரித்பூர் மாவட்டத்தின் மைச்பாரா கிராமத்தில் 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பிறந்தார். உரைநடை, கவிதை ஆகிய இரண்டிலும் சம தேர்ச்சி பெற்ற இவர், நவீன வங்காள இலக்கியத்தின் மிகவும் படைப்பாற்றல் மிக்கத் துடிப்பான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். நினைவில் நிற்கும் பல கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களை எழுதிய இவர், தனது குறிப்பிடத்தக்கத் திறமைகளை விமர்சனங்கள், கருத்துகள் மற்றும் சிறுவர் இலக்கியங்களிலும் வெளிப்படுத்துகிறார். இவரது தலைசிறந்த படைப்பும், 1985 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை வென்றதுமான ‘சேய் சமயா’, 19 ஆம் நூற்றாண்டு வங்காள மறுமலர்ச்சியின் போது நிலவிய சமூக-அறிவுசார் வாழ்வின் முரண்பாடுகள் குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சியின் விளைவாகும். ஆனால், கவிதைதான் அவரது முதல் காதலாக இருந்துவந்தது; சமூகத் தீமைகளுக்கு எதிராகத் தனது தனித்துவமான கவிதைகளில் மீண்டும் மீண்டும் குரல் எழுப்பினார்.

இவரது உணர்திறன், வீரியமான வெளிப்பாடு, கைதேர்ந்த படைப்புத்திறன் ஆகியவை இவருக்கு 1982 ஆம் ஆண்டின் பங்கிம் புரஸ்கார், 1985 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது, ஆனந்த புரஸ்கார் (இருமுறை) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன. இவர் 1998 முதல் 2002 வரை புது தில்லி சாகித்ய அகாதமியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.

சுநீல் கங்கோபாத்தியாவின் நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கின்றன, அவை:

“தன் வெளிப்பாடு” – மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.

“கிழக்கு மேற்கு” – பாகம் 1, 2 – மொழிபெயர்ப்பாளர் மா.இராமலிங்கம்.

“அந்தக் காலம்” – மொழிபெயர்ப்பாளர் புவனா நடராஜன்.

சசிகலா பாபு
சசிகலா பாபு

உயிர்மை வாயிலாக ”ஓ.ஹென்றியின் இறுதி இலை”, காலச்சுவடு வாயிலாக “மறையத் தொடங்கும் உடல் கிண்ணம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “கல்குதிரை”, “காலச்சுவடு” ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ”பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் – ரோகிணி சவுத்ரி”, “வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய்”, “பாஜக எப்படி வெல்கிறது – பிரசாந்த் ஜா”, “சூன்யப் புள்ளியில் பெண் – நவல் எல் சாதவி”, “குளிர்மலை – ஹான் ஷான்” ஆகிய இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர் வெளியீடு வாயிலாக வெளியாகியுள்ளன. வாக்குறுதி, அமாவும் பட்டுப்புறாக்களும், சொல்லக் கூடாத உறவுகள் போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் வெளிவந்துள்ளன.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top