கீழே வீட்டின் வரவேற்பறையில் நான்கைந்து பெண்களின் சலசலப்புச் சத்தம் கேட்டதும் என் அறைக்குள்ளிலிருந்து வெளியே வந்து மாடிப்படியின் இடுக்கு வழியாக எட்டிப் பார்த்தேன். அவனுக்கு முன்னால் இருந்த சோபாவில் ஐந்து பேர் நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். எண்ணெய் தேய்த்துத் தலையைப் படிய வாரி கருப்பு ரிப்பன் வைத்து ஒற்றை ஜடை மடித்துக் கட்டியிருந்த அந்தப் பெண் சோபாவுக்கு அருகில் இருந்த உட்கார வாட்டமில்லாத சிறிய ஸ்டூலில் ஒடுங்கியபடி அமர்ந்து கைகளை முன்னால் கட்டிக்கொண்டாள். அண்ணாந்து என் கண்களை அவள் எதேச்சையாகச் சந்தித்தபோது திடுக்கென்றிருந்தது. கண்களைச் சிரமப்பட்டு விலக்கி அறைக்குள் சென்றேன். அநேகமாக இருபது இருபத்தியொரு வயது அவளுக்கு இருக்கலாம் என்று தோன்றியது. அறைக்கதவை மட்டும் திறந்துவிட்டுக் கொண்டு என் மடிக்கணினிக்கு முன் அமர்ந்து கொண்டேன்.
நீண்ட அமைதிக்குப் பின் அவனின் செருமல் சத்தம் கேட்டது. அதன் முடிவில் அந்தப்பெண் பதறிய தொனியில், “அண்ணே, அவென் என்ன லவ் பண்றேன்னு சொன்னாம்ண்ணே. அவன என்கூட வாழ வைக்க முடியுமாண்ணே” என்று சொன்னாள். கீழே சென்று அவளை ஓங்கி ஒரு அறை விட வேண்டும் போல கை பரபரத்தது. ஏதோ இந்த உலகத்தில் வேறு ஆண்களே இல்லாதது போல என ஆத்திரம் வந்தது. “பைத்தியங்கள்” என்று தலையில் அடித்துக் கொண்டேன்.
“இல்லம்மா. அப்படி யாரையும் இன்னொருத்தர் கூடச் சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்த முடியாதும்மா. வேணும்னா அவன ஜெயில்ல புடிச்சுப் போடலாம். என்ன சொல்ற” என ரூபன் தன் கார்வையான குரலில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத தொனியில் கூறினான். எனக்கு அவனின் வக்கீல்தனத்தின் மேல் எப்போதும் வரும் எரிச்சல் அப்போது வந்தது. அவர்கள் முன் அவன் உணர்வற்று அமர்ந்திருக்கும் அந்தக் காட்சியை ஓட்டிப் பார்த்தபோது மேலும் எரிச்சல் வந்தது.
என்னால் அவனைப் போல இறுக்கமாக இருக்க முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் உளச் சிகிச்சைக்காக என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட ஒரே வகையான உறவுச்சிக்கல் என்றாலும் அதன் நுட்பமான வேறுபாடுகளைக் கண்டு பதற்றத்திற்கு உள்ளாகிறேன். எத்தனை ஆழமாகச் சென்று அவர்களின் வாழ்க்கையை, ஆன்மாவைக் கீறிப் பிளந்து பார்த்தாலும் திருப்தி கொள்ளாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். சட்ட விதிகளைப் போல திட்டவட்டமான வரையறைகள் இங்கு இல்லை. மிக மங்கலான சில கோடுகளை உளவியல் அறிஞர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். அதில் அமிழ்ந்து நான் ஒவ்வொரு முறையும் அதை மீண்டும் திட்டமாக வரைந்தும் அழித்தும் என மேலும் மங்கலாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு முனையில் நின்று கொண்டு அதன் அனைத்துச் சாத்தியங்களையும் ஆழம் வழியாகக் கண்டடைய முற்படுகிறேன்.
ரூபன் வேறு முனையில் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. இல்லை. அவன் முனைகளுக்குச் செல்வதில்லை. அவனுக்கெனச் சில எல்லைகள் உள்ளன. அதற்குள் மிகப் பாதுகாப்பாக அவன் நின்று கொள்கிறான் என்று தோன்றியது. அத்தகைய வரையறை ஒன்று எனக்கு இருந்திருக்கலாம்.
“அய்யோ. வேணாம்ணே. அவன் பாவம்ணே. ஜெயில் வேணாம்” என்று அந்தப் பெண் சொன்ன அடுத்த நொடி அவளுக்கு அறை விழுந்திருக்க வேண்டும். அந்தச் சலசலப்பு பெரியவர்களின் குரல்களில் தென்பட்டது. “ நீ செத்தாத்தான் என்ன! பாதகத்தி. ஒங்கப்பனும் என்ன விட்டுப் போய்ட்டான். இப்ப நீ என் உயிரையும் பழியையும் வாங்கதுக்கு நிக்கியோ” என ஆக்ரோஷமான ஒரு குரல் அவளை மேலும் மேலும் அடிப்பது போன்ற சத்தம் வந்தது. சமாதானப்படுத்தும் குரல்கள் கலைந்து கலைந்து கேட்டன. மீண்டும் அமைதி. இப்போது ரூபனின் குரல் அதட்டலாக ஒலித்தது. “என்ன பண்ணணும்னு நீங்க சொல்லுங்க. அவ சின்னப்பொண்ணு”
“அய்யா. ராசா. நீயே புள்ளைக்கு பாத்து எதாச்சும் செய்யுய்யா” என்றது அழும் குரல். அதை மறித்தபடி, “அண்ணே, அவன எங்கூடச் சேர்ந்து வாழச் சொல்லுங்கண்ணே”
“அவன்கிட்ட பலதடவ கேட்டாச்சும்மா. அவன் முடியாதுன்னு சொல்லிட்டான். செத்துக்கூடப் போவேன். அவ கூட வாழ மாட்டேன்னு சொல்றான். இப்ப என்ன பண்றது.”
“அண்ணே அவனுக்கும் சேத்தமானைக்கு ஒவ்வொரு நாளும் சட்டில சோறு கொண்டு போவேம்ண்ணே. பஞ்சு கம்பெனில நாங்கன்னா எவ்ளோ ஒன்னாமன்னா இருப்போம்னு எல்லாருக்கும் தெரியும்” என்றாள்
“ம்”
இப்போது வேறு யாரோ மூக்கை உறிஞ்சும் ஒலியும், தலையில் அடித்துக் கொள்ளும் ஒலியும் கேட்டது.
“அண்ணே, என்கூட அவன வாழ வைக்க முடியுமாண்ணே”
“இல்லமா. எத்தன தடவச் சொல்றது. அப்படி யாரையும் இன்னொருத்தர் கூடச் சேர்ந்து வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்த சட்டத்துல எடமில்ல. வேணா அந்தத் தாயோலிய ஸ்டேசன்ல வச்சிக் கையக் கால முறிச்சுப் போடலாம்”
“அய்யோ. வேணாம்ணே. அவன் என்னய லவ் பண்றேன்னு சொன்னியாம்னே”
“ம்”
“கட்டிக்கிடுவின்னா மட்டும் சொல்லு. சும்மா என் மனசுல ஆசைய வளக்காதன்னு சொன்னப்ப, கைல அடிச்சுச் சத்தியம் செஞ்சாம்ணே.”
“ம்”
“அவன் என்கூடப் பிள்ளைகுட்டியெல்லாம் பெத்துக்கணும்னு சொன்னாண்ணே.”
மீண்டும் அவள் அம்மா அந்தச் சொல்லுக்காக அவளை அடித்திருக்க வேண்டும். அந்த ஒலி கேட்டது. “ஆம்பளைக அந்த நேரத்துக்கு ஆயிரம் சொல்லுவானுக. பொட்டச்சிக்கு எங்க போச்சு புத்தி” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அடியும் உதையும். என் அக்காவின் நினைவு சட்டென வந்து முட்டியது. எங்கிருந்து இத்தனை பிடிவாதமாக அந்த நபரே தான் வேண்டும் என்ற எண்ணம் வருகிறது இவர்களுக்கு என்று தெரியவில்லை.
அவள் குரலில் அழுகை தென்படவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன். மிகத் திடமான குரலில் மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அண்ணே, அவன்…”
“எம்மா எத்தன தடவச் சொல்றது. அவன் அப்பா அம்மா சொல்றதத்தான் கேப்பானாம்” ரூபன் கோபமாகச் சொன்னான்.
“அண்ணே சின்னதுல இருந்து வேல பாத்து இருபது பவுனு சேத்து வச்சிருக்கேண்ணே. அதக் குடுக்கேம்னு சொல்றியளா”
“இது வேற பிரச்சன ஆத்தா. சாதி, குடும்பம், சொத்துன்னு எல்லாமே பிரச்சனை. அப்பறம் ஆம்பளைக்குப் புதுசு புதுசா பாக்கணும்னு தோணிடுச்சுனா அவ்ளோதான். அதக் கட்டுப்படுத்த முடியாது. அவன நீயே கட்டிக்கிட்டாலும் வேற எவளையாவது தேடித்தான் போவான். நல்ல பையனாப் பாத்துக் கல்யாணம் பண்ணலாம். அவன விட்டுடு”
“அதெல்லாம் ரொம்பப் பழகறதுக்கு முன்னாடியே கேட்டேண்ணே. அவஞ்சொன்னான் என்ன வித்தியாசம்னாலும் எல்லாப் பொம்ளைக்கும் ஒன்னுதானேன்னு” அந்தக் குரலில் அவளால் எதையும் நம்ப முடியவில்லை என்ற தொனி இருந்தது. மீண்டும் அடி விழும் சத்தம். “அவ்ளோ பெரியவக சொல்றாகல்ல. கேக்காளா பாரு. செத்த மூளி. பழி வாங்க கெடயாக் கெடந்து என் புள்ளைய அலைக்கழிக்காளே” என்று கத்தியபடி ஓங்கி அடிக்கும் ஒலி கேட்டது.
“சும்மா இரு கிட்ணம்மா அவ மண்ட கலங்கிறப்போவுது” என அருகில் ஒரு குரல்.
“ஒக்காந்திருக்கவ அவ இல்ல. வேற ஒருத்தி” என்றபடி மாரடித்து ஒப்பாரி பாட ஆரம்பித்துவிட்டாள். அது வீட்டைப் பிளந்தபடி ஒலித்தபோது என் உடல் நடுங்க ஆரம்பித்தது.
பட்டுச்சேல கட்டினா
பச்சவுடம்பு நோவும்முன்னு
என்னப்பெத்த குயிலாலுக்கு
பருத்திகட்டி பாலூட்டினேனே
நடுபட்ட வகிடெடுத்து
சரஞ்சரமா குண்டுமல்லி வச்சு
குயிலாளே
நெத்தியில பொட்டு வச்சி
எம் புள்ள போகையில
மயிலாளே
ஊரு கண்ணு பட்டுபோச்சே
கொண்டலறி பூ அறுத்து
தேருகட்ட வச்சிடுவையோ
என் குயிலாள
“ஆத்தா ராசாத்தி இப்டி வெள்ளந்தியா இருக்க என் மவள கைவிட்டுட்டியே! இப்ப நானு எங்க போயி மொறயிட. அவன் நாசமாப்போவ. கொள்ளைல போவ. வெளங்காமப் போவ. நல்லா இருப்பானா. என் ஒத்த மவளையும் எடுத்துக்கிட்டு இப்புடி என் குடியைக் கெடுத்துட்டியே. தாயே. நான் உசிரோட இருக்கனுமா. நான் என்ன பாவம் பண்ணினேன்னு தெரியலையே தாயே. ஒனக்குப் பொங்க வச்சு பூசை செய்யறேன்டி மகமாயீ! விட்டுறுடி!” என்று கதறியபடி முடிவில் அவள் எழுப்பிய ஒற்றைக் குலவைச் சத்தம் அந்த இடத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது.
“யம்மா அப்படி சாபமெல்லாம் குடுக்காதம்மா” என்று அந்தப் பெண் சொன்ன கணத்தில் அவளுக்கு மறுபடியும் அடி விழுந்தது. கீழே பெரிய சண்டையாகிவிட்டது போலத் தெரிந்தது. உடன் வந்த மற்ற பெண்கள் அவர்களை விலக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் அமைதியானது.
“அண்ணே, அப்படின்னா முடியாது என்னண்ணே”
“ஆமா. எத்தன பேரு கல்யாணத்துக்கு அப்பறமா பிரியறாங்கன்னு தெரியுமா. இப்பவே தெரிஞ்சிடுச்சுன்னு நினச்சிக்கிட்டு ஆகற காரியத்தப் பாரு”
“அவன் மேல கேஸு குடுப்போம். வாரத பாப்போம்.” எனக் கும்பலிலிருந்து ஒருத்தி சொன்னாள்.
“இல்ல. கேஸு வேணாம்ணே. முடிஞ்சா இன்னொருவாட்டி கேட்டுப் பாருங்கண்ணே. இல்லன்னா நான் பாத்துக்கிடுதேன்.”
மீண்டும் அமைதி. “செரிய்யா பாப்போம்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டு விடைபெற்றுச் சென்றதும் கூடமும் வீடும் காலியாக ஆனது போல இருந்தது. கீழிருந்து ரூபனின் குரல் கேட்டது. “சுப்பு. சின்ன வேல. வந்துடறேன்” என்ற சத்தத்திற்குப் பின் கதவு மூடும் சத்தம் கேட்டது. எனக்குச் சட்டென அக்காவின் நினைவு மீண்டும் வந்து மொபைலை எடுத்துப் பார்த்தேன்.
“நான் தற்கொலை செய்து கொள்ளட்டுமா. ரொம்ப முடியல” என்ற குறுஞ்செய்தி வந்து மூன்று நிமிடங்கள் ஆகியிருந்தது. அவள் அவ்வாறு செய்து கொள்ள வாய்ப்பில்லை என்பதை அறிந்திருந்தும் பதற்றத்துடன் அவளுக்கு அழைத்தேன். எதிர்முனையில் நீண்ட அமைதி நிலவியது.
“செத்துப் போகணும்னா செத்துப்போ. உன் சேலை, சுடிதார் எல்லாத்தையும் நான் எடுத்துப்பேன்” என்றேன். “போடி” என்று சினுங்கலுடன் அழ ஆரம்பித்தாள். குழந்தை என மனதில் நினைத்தபடி, “வரட்டுமா” என்று கேட்டேன். “இல்ல வேணாம், சமாளிச்சிடுவேன். டேப்லட் போட்ருக்கேன். நீ பேசு போதும்”
மெல்ல அவளிடம் சில கேள்விகள் வழியாக அவளுக்குள் சென்று அவளைத் தொந்தரவுக்கு உள்ளாக்கும் அவன், அவன் தொடர்பான நிகழ்வுகள், வரிகள் எனச் சென்று இதுவரை அவள் சிறுவயதிலிருந்து சாதித்த அனைத்தையும் பட்டியலிட்டு அவள் தூங்கும் வரைத் தைரியப்படுத்தி ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
♦
எழுந்து அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு சாம்பல் நிறத்தில் விரிக்கப்பட்ட படுக்கையில் சாய்ந்தேன். என் அக்காதான் எனக்கு எல்லாமும். சிறு வயதிலிருந்து அவள் என்ன செய்வாளோ எப்படி இருப்பாளோ அப்படித்தான் நானும் இருக்க வேண்டும் என விரும்புவேன். அவளைப்போலவே நானும் அலங்காரம் செய்து கொள்வேன். மேலிமைகளுக்கு மட்டுமே கண்மை இழுக்கும் அவளின் லாவகத்தை அணுவணுவாக ரசித்துக் கற்றுக் கொண்டிருந்திருக்கிறேன். அவள் வைத்திருக்கும் பேனாக்களும், பென்சில்களும் தான் உள்ளதிலேயே அழகு என்று தோன்றும். அவள் எப்படி பேனா வைத்து எழுதுவாளோ அப்படியே அதே லாவகத்துடன் எழுத முயற்சிப்பேன். என் நடை உடை பாவனை என அனைத்திலும் அவ்வாறுதான் நிறைந்திருந்தாள்.
எல்லாவற்றையும் அவளிடமிருந்து அவள் அறியாமல் எடுத்துப் பயன்படுத்தும்போது உலகத்தையே ஜெயித்துவிட்டது போல ஒரு உணர்வு வரும். சமயத்தில் பயன்படுத்துகையில் உடைந்துவிடும் பொருட்களுக்காக அவளிடம் அடி வாங்குவேன். அப்போதெல்லாம் என்னிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதங்களில் ஒன்றான அழுகையைப் பயன்படுத்துவேன். வீரிட்டுக் கத்தினால் அம்மா வந்து என்னைக் காப்பாற்றுவாள். அதன்பின் அவள் புலம்பிக் கொண்டு சென்று விடுவாள். பாவம்.
என் அக்கா தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. முதன் முதலில் எங்கள் ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வேலைக்குச் சென்றவள். அவள் விடுமுறைக்கு வரும்போது அவள் மேல் அடிக்கும் ஹாஸ்டல் வாசனையும் அவள் சூட்கேஸும், எனக்காக அவள் வாங்கி வரும் பரிசுகளும் என என் நினைவுகளின் பெரும்பகுதி அவளால் ஆனது.
எதற்காகவும் அவள் கலங்கி நின்று பார்த்ததில்லை. அவளைப் பார்த்து தான் நான் படித்தேன். ஜெயாவின் தங்கை என்றுதான் பள்ளியில் அறியப்பட்டேன். அதில் எப்போதுமே எனக்குப் பெருமைதான். சிறு பொறாமை இருந்ததும் மறுப்பதற்கில்லை. எனக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டே இருப்பாள். எரிச்சலாக வந்தாலும் அவள் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன். பெரிய அளவில் எனக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை என்றாலும் அதன் போக்கிலேயே சென்று எனக்கான வேலையை நான் கண்டு கொள்ளக் கற்றுக் கொடுத்தாள்.
அப்படித்தான் மனிதர்களிடம் அதிகம் பழக விருப்பமுள்ள நான் சேல்ஸ் துறையிலும் பின்னர் அதிலுள்ள புறச்சூழல் பிடிக்காமல் வெளியேறி உளவியல் ஆலோசகருக்கான துறையில் பட்டயப்படிப்பு பயின்று அது சார்ந்த வேலைவாய்ப்புகள் வழியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். பல கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்களில் சிறப்புப் பயிற்சிகள் வழியாக அதைப் பற்றி மேலும் பயின்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் புதிய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களின் பிரச்சனைகளைக் கேட்பதிலும் எனக்கு ஆர்வம் இருந்ததை நாட்கள் செல்லச் செல்லவே உணர்ந்தேன். இந்தத் துறைக்கு வரவிருக்கும் வாய்ப்புகளை அவள் முன்னரே கணித்திருந்தாள் என்று இப்போது தோன்றுகிறது. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆழம் செல்ல வேண்டும் என அக்கா எப்போதும் சொல்வாள். அது எனக்கு இந்தத் துறையில் சாத்தியமானதை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
ஆனால் திருமணம் அவளை அசைத்துப் போட்டதைப் பார்த்தேன். காதலித்துதான் திருமணம் செய்து கொண்டாள். அதைப் பார்த்து தான் எனக்கும் காதலிக்கலாம் என்ற எண்ணமே வந்தது. முதல் முறையாக அவள் தொலைபேசி அழைப்பின் மறுமுனையிலிருந்து அழுகுரல் கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. என் அக்காவால் அழ முடியும் என்பதையே அப்போதுதான் அறிந்தேன். என் மாமாவைப் போன்ற தோற்றமும், குணமும் உள்ள ஒருவர் என்பதுதான் உறவில் எனக்கு அதிகப்பட்ச இலக்காக நிர்ணயித்திருந்தேன். அவளுக்கு நான் ஆறுதல் சொல்லும் நிலைமை அமையும் என்று நினைத்திருக்கவேயில்லை. ஏனெனில் அப்போதுதான் நான் ஒரு மோசமான காதலிலிருந்து விடுபட்டிருந்தேன். கிட்டத்தட்ட என்னைப் பிய்த்துக் கொண்டு வெளிவந்து மனம் வெறுத்திருந்தேன். அதிலிருந்து பத்திரமாக வெளிவந்தபோது அக்கா இதை அறிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாள் என்றுதான் முதலில் தோன்றியது. அவள் அறிவாளி. நான் முட்டாள் என்று நினைத்து நொந்திருக்கிறேன். அதைத் தகர்க்கும்படியான அவளின் அழுகுரல் உள்ளூர எனக்குக் கிளர்ச்சியையும் உண்டாக்கியது.
அவளுடன் ஆழமாகப் பேசிய போது அவள் நிஜ உலகை, மனிதர்களை அறிந்திருக்கவேயில்லை என்று தோன்றியது. அனைத்தையும் தவிர்த்தபடி முன் சென்று கொண்டிருந்திருக்கிறாளே தவிர அவள் வாழவில்லை என்று புரிந்தது. உறவு முறிந்து மாமாவிடமிருந்து பிரிந்து வாழ ஆரம்பித்தபின் மெல்ல சகஜமாக ஆனாள்.
அதன்பின் அவள் ஒழுக்கம் என்பதைப் பற்றி அடிக்கடி பகடி செய்தது எனக்கு நெருடலாக இருந்தாலும் அவளிடம் நான் எதையும் பேசத் துணியவில்லை. புதிய உறவு ஒன்றுக்குள் அவள் மிக விரைவில் சென்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் ததும்பி வழிபவள் போல இந்த உலகத்தை முழுவதும் வாழத் துடிப்பவள் போல அவனுடனான உறவை என்னிடம் குறிப்பிட்டாள். நான் கவுன்சிலிங் கொடுக்கத் தேவையில்லாதது போலவே புறச்சூழல் தோற்றமளித்தாலும் என்னால் அதன் விளைவுகளை ஓரளவு ஊகிக்க முடிந்திருந்தது.
ஆனால் நல்ல ஆணாக அவன் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலைத் தவிர நான் என்ன செய்ய முடியும். பேசும்போது முடிந்த அளவு அவளிடம் அதைப் பற்றிய போதத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். எனக்கும் திருமணமானது. பெற்றோர் பார்த்த வரன்தான். யார் கிடைத்தாலும் அவர்களை வைத்து முடிந்தவரையில் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததால் பெரிய எதிர்பார்ப்போ ஏமாற்றமோ எனக்கு இல்லை. எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது.
ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் கொடூரமான ஏமாற்றத்தை அக்கா அடைந்ததை அவள் கவுன்சிலிங்கிற்கு மீண்டும் உட்கார்ந்தபோதுதான் உணர்ந்தேன். விவாகரத்து பெற்றவர்கள், விவாகரத்தாகி சிங்கில் பேரண்டாக இருக்கும் பெண்களாகப் பார்த்து உறவில் ஈடுபட்டுக் கைவிட்டுச் செல்லும் திருமணமான ஒருவனிடம் பல வகையான மரியாதைக் குறைவுகளை அனுபவித்து யாரிடமும் சொல்லாமல் அழுந்திப்போய் மனநோய்க்கு ஆளாகியிருந்தாள்.
அப்போது தான் தனியாக கிளினிக் ஆரம்பித்திருந்தேன். கிட்டத்தட்ட தனியாகக் கற்றுக் கொண்டிருக்கும் பருவம் என்று கூடச் சொல்லலாம்.
அவளைக் கைவிடுவதற்கு முன்தினம் அவன் அவளிடம் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை” என்று சொன்னதை ஓயாமல் சொல்லி அழுதாள். தன் குழந்தை பெற்ற வயிற்றை தான் சந்தித்த இளம் பெண்களுடன் ஒப்பிட்டு அவளை உடல் ரீதியாக மட்டுப்படுத்தியிருக்கிறான். அவள் உடலில் அங்கக் குறைகள் ஒவ்வொன்றையாகச் சுட்டி முதலில் அவள் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறான்.
என் வாழ்நாளில் நான் மிக அழகான பெண் என்று கண்டவர்களில் முதன்மையானவள் என் அக்கா. எப்போதும் நம் தோற்றத்தின் பொருட்டு உடையின் பொருட்டு குழைவு இருக்கக் கூடாது என அவள் சொல்லிக் கொடுத்ததால்தான் நான் அப்படியொருவளாக என் இளவயது முதல் இருந்தேன். ஆனால் “சுப்பு நான் அழகா இருக்கேனா?” என அடிக்கடி கேட்க ஆரம்பித்தபோதுதான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தேன். அவள் இருந்து கொண்டிருந்தது மிக மோசமான உறவு என்றும் அதிலிருந்து அவள் விடுபட்டது மிக நல்லது என அவளைப் புரிய வைக்க முற்பட்டேன். அவன் புகைப்படத்தைக் காண்பித்து அவன் எத்தனை அழகு குறைவாக, வயதாளியாக இருப்பதாக, அவளை விட பொருளாதாரத்திலும் குறைந்த ஆளாக இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். அவள் அனைத்தையும் “காதல்” என்ற ஒற்றை வரியில் கடந்து செல்ல முற்பட்டாள். இப்படிப் பெண்களிடம் ஏமாந்து போகும் ஆண்களையும் உளச்சிகிச்சையின் போது கண்டிருப்பதால் அதை நான் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னொரு முறை அவன் “உன்னைவிட்டு விலகுவதில்லை. ஆனால் கைவிடுவதுண்டு” என்று சொல்லியிருக்கிறான். பலமுறை தொடர்ச்சியாக விளையாடிய தேர்ந்த விளையாட்டு ஒன்றை அவன் அவளிடம் விளையாடிக் கொண்டிருந்தான். எல்லாம் அறிந்தும் மேலும் மேலும் வீழும் சுகத்தை அனுபவித்த வண்ணம் அதில் அவள் அமிழ்ந்து கொண்டிருந்தாள்.
ஒரு நாள் அவன் அவளை எல்லாச் சமூக வலைதளங்களிலிருந்தும் தொடர்வதை நிறுத்திவிட்டு எந்த அழைப்புக்கும் குறுஞ்செய்திக்கும் மறுமொழி செய்யாமலானபோதுதான் அவன் முழுமையாகக் கைவிட்டதை உணர்ந்தாள். அதன்பின் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நான் கவுன்சிலிங் கொடுப்பவளாக ஆனேன்.
ஒருமாதம் சரியாகும்போது அவன் மீண்டும் தொடர்பு எல்லைக்குள் வந்தான். அப்போது அவள் ஓடிச் சென்று மண்டியிட்டபடி அவனை ஏற்றாள். அவன் மீண்டும் வெளியேறினான். ஒவ்வொரு முறையும் அவளை நான் சரிசெய்ய நீண்ட காலம் எடுத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவள் உணர்விழந்தவளாக ஆகி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனநல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்றபின் அவள் வேறுவிதமான சிகிச்சைகள், மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தாள். ஆனாலும் அவளுக்குத் தேவைப்படும் போது ஆலோசனை செய்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவளால் அவன் உறவின் போது பேசிய எந்தச் சொல்லையும் நினைவிலிருந்து அகற்ற முடியவில்லை என்பதைக் கண்டேன். மனிதர்களை, அவர்களின் நடத்தைகளை, மாறிக் கொண்டே இருக்கும் முகங்களை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கும் கூட இதுகுறித்த கேள்விகள் உண்டு. எது ஒருவரின் உண்மையான முகம் என்பதை யார்தான் சொல்ல இயலும். ஒருபோதும் இன்னது என வகுத்துவிட இயலாதபடிக்குச் சதா மாறிக் கொண்டிருக்கும் நுண்தளத்தில் நின்று இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டிருப்பதை உணர்கிறேன்.
இப்போது கூட வீட்டிலிருந்து வெளியேறிய அந்தச் சின்னப்பெண்ணைக் காதலித்துக் கைவிட்டுப் போனவனை விளங்கிக் கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். காதலித்த அந்தத் தருணத்தில் அவன் உண்மையாக இருந்திருப்பானா? தொடர்ச்சியாக ஏமாற்றுபவன் வேண்டுமானால் தெரிந்து செய்யலாம். முதல் முறை அவ்வாறு செய்யும் ஒரு நபர் உண்மையில் காதலுடன் தானே அணுகியிருப்பார். திடீரெனக் கைவிட வேண்டும் என்ற அந்த எண்ணத்தை விதைப்பது யார் என்ற கேள்வி பெரிதாக எழுந்து என் மேல் நின்றது. இது இந்தக் காலகட்டத்தின் சிக்கல் மட்டும் தானா என்ற எண்ணம் எழுந்தபோது எனக்கு சகுந்தலையின் கதை நினைவில் எழுந்தது. தேவயாணியின் முகமும் கூட அப்போதே நினைவை முட்டியது. துஷ்யந்தர்கள், கசன்களின் உள்ளம் அவ்வாறு ஆனதற்கான காரணம் அவர்களே அறியாமல் நிகழ்ந்தது போலத்தான் இதுவுமா என்ற கேள்வி என்னைத் துளைத்தது. சகுந்தலைகளின் வலியை அறிய முடியாதபடிக்கு துஷ்யந்தர்களைக் கொண்டு போய் வேறொரு தளத்தில் வைத்த அந்த ஒன்று எது?
சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் சத்தம் காதைக் குடைந்தது. அதைக் கண்களைத் திறந்து பார்க்க மனமில்லாமல் எழுந்து அமர்ந்தபோது மூச்சு முட்டியது. தண்ணீரை எடுத்து மண்டியபடி மீண்டும் மடிக்கணினி முன்னால் அமர்ந்தேன். கேள்விக்குறி ஒன்று வரையும் பொருட்டு மடிக்கணினியின் வலது ஓரத்தில் இருந்த ஷிஃப்ட் பட்டனையும் அதன் அருகிலிருந்த பட்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக அழுத்தினேன். சிறிய கேள்விக்குறி ஒன்று வந்து வெள்ளைத்தாளில் பதிந்தது. அதன் அளவைப் பெரிதாக்கிப் பெரிதாக்கி மேலும் ஆக முடியாததாகி அது முட்டி நின்றபோது அதைப் பார்த்தபடிச் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். எழுந்து வெளியில் செல்லலாம் என்று தோன்றியது. அப்படியொரு தெய்வம் உண்டெனில் அதைச் சபிக்கிறேன் என்று சொல்லியபடி எழுந்தேன்.
♦
அறைக்கதவைத் திறந்தபோது வெளியில் வரவேற்பறை இருந்தது. சட்டென வேறு காலத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வை அளித்து படபடக்கச் செய்தது. வெளியில் செல்லவில்லையானால் மொத்த வீடும் என்னை அழுத்திக் கொன்றுவிடும் என்ற எண்ணம் எழ கதவைத் திறந்து வெளியில் வந்தேன். லிஃப்ட் இருந்தது. அதைத் தவிர்த்து படிகளில் இறங்கி ஓடினேன். அது சுழன்று முடிவில்லாமல் சென்று கொண்டே இருந்தது. கீழே இறங்கி வெளியில் வந்து நின்று திரும்பிப் பார்த்தால் அத்தனை பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் எங்கோ சின்ன மூலையில் மூச்சு முட்டிக் கொண்டு சாகக் கிடந்ததைப் போல உணர்ந்தேன். மேலும் நின்று நிதானிக்க மனமில்லாமல் முன்னால் திரும்பி ஓடினேன். குடியிருப்புப் பகுதி மிகுந்த நிசப்தமாக இருந்தது. காவலாளி ஒரு தேய்ந்துபோன சிரிப்பை என்னை நோக்கி வீசினார். அதைத் தவிர்த்து தார்ச்சாலையின் ஓரத்தில் வாகன நெரிசலைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றேன். நொய்மையான அத்தனை விஷயங்களும் இங்கு பற்றி எரிந்து உடைந்து கொண்டிருக்கும் போது இங்கு மிக இயல்பாக உலகம் பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருந்தது எனக்கு அருவருப்பாக இருந்தது. உறைந்த கச்சிதமான பனிப்பாலத்திற்குக் கீழே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகம் சற்று அழிந்து அழுகிக் கொண்டிருப்பதை யாரும் கவனிக்கவேயில்லையா? கடுகடுப்பான முகங்கள் அத்தனையும் முடுக்கப்பட்டு எங்கோ சென்று கொண்டிருந்தன. எங்கே எதை நோக்கி என்று கேட்டபடி அதைப் பார்த்துவிடலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன். வியர்த்து வழிந்து உடல் ஈரமாகி பிசுபிசுத்தது.
மூன்று முக்குச் சாலையை வந்தடைந்தபோது எந்தப்பக்கம் செல்வது என்பதை அறியாமல் அப்படியே நின்று விட்டேன். முக்குச்சாலைகள் நடுவில் நிற்பவர்களை இல்லாதவர்கள் என்ற கணக்கில் சேர்த்துக் கொண்டு சுற்றிலும் பரபரப்பாக இயங்கிச் சுழல்வது. உச்சி வெயில் தலைக்கு ஏறியிருந்தது. அங்கு சாலையின் வலது ஓரத்தில் எனக்கு எப்போதும் தென்படும் அந்தக் கறுப்புவெள்ளை நாய் படுத்திருப்பதைப் பார்த்தேன். அருகில் சென்றால் ஈ மொய்த்துக் கொண்டிருக்கும் அதன் உப்பிய உடல் என் மேல் வெடித்துச் சிதறிவிடும் என்று நினைத்து மேலும் உறைந்துபோய் நின்று விட்டேன். என் மேல் சதைத்துண்டங்கள் சிதறுவது போல கற்பனை செய்தபோது உடல் குமட்டிக் கொண்டு வந்தது.
அதைத் தவிர்க்கும் பொருட்டு அண்ணாந்து சூரியனைப் பார்த்தேன். அது அத்தனை உவப்பானதாக இல்லை. அனைத்தையும் வீங்கச் செய்து வெடித்து இல்லாமலாக்கும் ஊற்று அதனிடம் இருப்பது போலத் தோன்றியது. அதை நேருக்கு நேராகப் பார்க்கக் கூடாது என என் அக்கா என்னைச் சிறுவயதில் கடிந்து கொண்டது அவள் குரல் வழியாகவே கேட்டது. ஒன்றும் குடி முழுகப் போவதில்லை என்று நினைத்தபடி அதைப் பார்த்தேன். உன் மேல் எனக்கு பயமில்லை என்பது போல நெஞ்சை துருத்திக் கொண்டு அதைப் பார்த்தேன். பெரிய கழுகு ஒன்று வட்டமடித்தபடி இருந்தது. சூரியன் ஒரு ஒளிப்புள்ளியெனச் சுருங்கி அதைச் சுற்றிலும் உள்ள இடம் இருளடைந்தது.
இருள் எப்போதும் அங்கேயே இருந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் வந்தபோது உடல் படபடப்பாக ஆனது. ஆனாலும் நான் அதேபோல நெஞ்சை நிமிர்த்தியபடி அந்த ஒளிப்புள்ளியைப் பார்த்தேன். சுற்றிலும் மேலும் இருள் கூடியபடி என்னை அழுத்தியது. “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற வரி நினைவிலெழுந்து உடலின் முறுக்கத்தைத் தளர்த்தியது. அது எங்கிருந்து வருகிறது. யார் சொல்வது. அவன் தான். “பாஸ்டர்ட்” என்று வாய் முணுமுணுத்தது.
ஆம்! மிக நிச்சயமாக இருளே எப்போதும் இங்கு இருந்து கொண்டிருக்கிறது. ஒளி வந்து அதைத் துரத்துகிறது என்ற சித்திரம் எத்தனை பெரிய போலிபாவனை என்ற எண்ணம் எழுந்தது. எங்கும் இருளே வியாபித்திருப்பதாக, ஒருபோதும் ஒளியால் தீண்ட முடியாத பகுதிகள் இங்கு நிலத்தில் இருப்பதாகத் தோன்றியது. கைகளை விரித்தபடி ஒரு ஏளனப் புன்னகையுடன் அந்த வரியைச் சொல்லிக் கொண்டிருந்தது அவன்தான்.
கைவிட்டுச் செல்லச் சாத்தியமானது ஒளியே. இருள் மேல் தன்னைப் படியச் செய்து பிரகாசமாக்கிப் பாவனைகள் வழியாக நம்மை அதை நோக்கி வரச் செய்து பின் கைவிட்டுச் செல்கிறது. நீ ஒரு பாஸ்டர்ட்! என நான் சூரியனைச் சொன்னேன். அருகில் அவன் அப்பாவி போல “இப்போதாவது என்னைப் புரிந்து கொண்டாய்” என்று சொல்வது போல இருந்தது. அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அதுவும் இல்லையோ என்று நினைப்பதற்குள் நான் தவிர்த்துக் கொண்டிருந்த அந்த எல்லைக் கோட்டைக் கண்டேன். அனைத்து எண்ணங்களையும் அழிக்கும் கோடு அது. ஒரு அடி எடுத்து வைத்தால் அந்தப் பக்கம் சென்று விடலாம். அந்தப்பக்கம் இருப்பது என்ன என்று தெரியவில்லை. அது வரும்போதெல்லாம் மூச்சு சீராக இருப்பதில்லை. சென்று விடாதே என உள்ளிருந்து இன்னொன்று பிடித்து இழுத்தபோது உடல் பற்றிய போதம் வந்தது. பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு மொபைலை எடுத்து ரூபனிற்குக் கை நடுங்கியபடி கால் செய்தேன்.
“சொல்லு சுப்பு. ஏதும் அர்ஜெண்டா. க்ளையண்ட்”
“பயமா இருக்குடா ரூபன். இங்க ஒரே இருட்டா இருக்கு. என்ன இங்க இருந்து கூட்டிட்டுப் போறியா”
“என்ன விளையாடற. வெளில போனியா!”
“சாரிடா”
”எங்க இருக்க இப்ப”
“தெரில.”
“லைவ் லொகேஷன் அனுப்பு”
“அண்ணா ஆர்ச் இருக்கு எனக்குப் பக்கத்துல”
“ம்.. லைவ் லொகேஷன்” என உறுமினான். உடனேயே தொலைபேசியைத் துண்டித்துவிட்டு அவனுக்கு ஒரு மணி நேரம் நான் இருக்கும் இடத்தைக் காண்பிப்பது போல லொகேஷனை அனுப்பினேன்.
டிராஃபிக் கான்ஸ்டபில் என்னைப் பார்த்தார். நான் நிற்பது பெரிய இடையூறாக வாய்ப்பில்லையெனினும் அவர் என்னை நோக்கி வர எத்தனித்தது போல இருந்ததால் அவரைத் தவிர்க்கும்பொருட்டு அங்கிருந்த பில்லர் ஒன்றில் மறைவாக நின்றேன். ரூபன் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டான். என் வாயில் சில மாத்திரைகளைத் திணித்து தண்ணீர் ஊற்றினான். காரில் அமர்ந்து கொண்டபோது எல்லாமே நிதானமாக ஆனது போல உணர்ந்தேன். “ரூபன்.. அக்கா..”
“ஒன்னுமில்ல… சரியாகிடும் அவங்களுக்கு”
“இல்ல ரூபன். நான் அன்னைக்கு அங்க போயிருந்தா அவ செத்துருக்க மாட்டால்ல.”
அவன் காரை மிக விரைவாக அடுக்ககத்திற்குள் செலுத்தி பார்க் செய்யாமல் ஓரமாக நிறுத்திவிட்டு பின்னிருக்கைக்கு வந்து என்னை அணைத்துக் கொண்டு அழுதான். “சுப்பு… அதெல்லாம் இல்ல. அவங்க…”
“நம்ம ஊர்ல வீட்டுக்கு வந்திருந்த அந்த சின்னப்பொண்ணு அடுத்த நாள் மருந்தக் குடிச்சு இறந்துட்டான்னு சொன்னியே. அவளுக்குக் கூட நான் கவுன்சிலிங் கொடுத்திருந்தா கொஞ்சம் பொழச்சிருப்பா இல்ல. அவ பார்த்த அந்தப் பார்வை கண்ணுக்குள்ளயே நிக்குது”
“எல்லாரையும் காப்பாத்த நீ என்ன கடவுளா?”
“இல்ல. மனுஷங்களுக்கு மனுஷங்க தான இருக்கோம். மத்த எல்லாமே பொய்.”
“அப்டிச் சொல்லிட முடியாது. நாம உணராத பலதும் நம்ம கூடத்தான் இருக்கு. இல்லன்னா நீ இப்படி டக்குன்னு சரியாகியிருப்பியா. ஒரு வருஷமா ஒவ்வொரு நாளும் உயிரக் கைல புடிச்சிட்டு இருக்கேன்டி”
“ரூபன்.. அக்கா பாவம்டா. அந்த பாஸ்டர்ட்… அவன ஒரு தடவைப் பாக்கணும். அவன்கிட்ட கேக்கணும். அவன் நல்லா இருப்பானா”
“அத விட்று சுப்பு. ஜஸ்ட் ஸ்கிப் தட் ஷிட்”
“ரூபன்”
“ம்”
“என்னைக் கைவிட்ற மாட்டல்ல.”
“லூசு. எனக்கு உன்ன விட்டா யாருடி இருக்கா” என்று தழுதழுத்த குரலில் சொல்லி என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
Art : Dana Andrews








Leave a Reply