18. சூல்
எங்கிருந்து வந்தது
யார் அனுப்பியது
எதுவும் தெரியாது
திசை மணந்து
காற்றில் வந்ததைக்
கையில் ஏந்திக்
கண்ணில் ஒற்றித்
தலையில் சூடுகிறாய்
சூலாகிறது மலர்
19. தீ
ஆகாயத்தில் ஒரு விமானம்
எங்கோ பறக்கிறது
கண்ணில் தெரியாததன் ஓசை
காதில் எப்படியோ கேட்கிறது
ஒரு மூளைத் திசு வெடித்து
வெளியே ஓடுகிறது
கையில் கிடைத்த பொருள்
கண்ணாடியை உடைக்கிறது
அதோ அதோ என்கிறது மூச்சு
இதோ இதோ என்கிறது குருதி
புல்லாங்குழல்கள் இசைக்கவில்லை
வீணைகள் முறிந்துவிட்டன
ஹாரன்களே அலறுகின்றன
தரையில் ஊரும் சிற்றெறும்பைக்
கால்கள் தேய்க்கின்றன
கட்டிப் புரண்ட நாகங்கள்
கூட்டுச் சேர்ந்து பிடாரனைக்
கொத்தத் துரத்துகின்றன
சற்றும் அடங்காமல் காலம்
பத்துத்தலை விரித்தாடுகிறது
ஒட்டடை ஒவ்வொன்றும்
மேற்கூரையைத் தின்கிறது
கூரலகு மரங்கொத்திகள்
தேம்பியழும் நெட்டோசை
காட்டின் உயிரறுக்கிறது
மேலே பறந்த விமானம்
சுக்குநூறாய்க் காது வெடிக்கக்
கீழே விழுந்தழிகிறது
சூழும் களேபரத்திற்கிடையில்
பிறவாத ஓர் இன்சொல்
செந்தீயைச் சொடுக்கிவிடுகிறது
முற்றும் வேகாத பிணம்
உடனலறிச் சாம்பலாகிறது
ஓம் அஷாந்தி
20. லாடம்
ஒரு கோழிக்குஞ்சைப் பருந்து
கொத்தித் தூக்கும்போது
நான் தாய்க்கோழியாய்ப்
பரிதவித்திருந்தேன்
ஒரு பிணாவைப் புலி
குத்திக் கிழிக்கும்போது
நான் கலைமானாய்த்
துடிதுடித்திருந்தேன்
ஓர் ஆட்டுக்குட்டியை
மலைப்பாம்பு அப்படியே
முழுசாய் விழுங்கும்போது
செம்மறியாய் வெருண்டிருந்தேன்
ஒரு சிலந்தி வலையில் சிக்கிய
வண்ணத்துப்பூச்சியாய்
லாடம் கழன்ற வண்டி மாடாய்
மழைக்கு மறுநாளே
தீப்பற்றியெரிந்த மூங்கில் காடாய்
வெள்ளம் கொண்டுபோன
என் ஆபத்துதவிப் படகாய்
எப்படியெப்படியோ இருந்துவிட்டேன்
இப்போதும் நடந்தது
என்ன என்றே தெரியாமல்
அணுவணுவாய் நான்
இற்றுவிழுந்து கொண்டிருக்கிறேன்
ஒரு மதயானைப் பசிக்குள்
21. கணம்
ஊழியூழி வினையின்
வழியல்லா வழிநின்ற
நட்டநடுப்பாழின்
ஒருவகையறியாக் கணத்தில்
என் கதவைத் தட்டிய மரணம்
தோடு மூக்குத்தி கழுத்துவடம்
கைவளை கால்கொலுசு பூச்சூடிப்
புன்முறுவலுடன் வந்து திறந்த
உன்னைப் பார்த்தவுடன்
பயந்தோடிவிட்டது எங்கோ
22. எதிரொலி
நடுநிசியைத் தாண்டிவரும்
இரவுப்புறா இப்போதெல்லாம்
ஏனோ சிறகை விரிப்பதில்லை
அதன் கீதம் கேட்காமல்
எனக்கு ஒன்றுமே முடிவதில்லை
யாரும் பார்த்துவிடுவார்களோ
என்ற ஒரு பதற்றத்திலேயே
என்னைத் தேடிவருவதை அது
நிறுத்திக் கொண்டுவிட்டதோ
என் ஜன்னலுக்கு வெளியே
வேப்பமரக் கிளையிலமர்ந்து
தன்னை மறந்த திளைப்பில்
அது நெடுங்கீச்சிடும்போது
முதுகுத்தண்டில் ஒரு சொடுக்கு
தலைக்கு மேலே கைதூக்கிக்
கண்மூடி ஒரு ஒரு நொடியாய்ப்
பிறந்து பிறந்து நிறைவேன்
புறாவுக்குப் பெருந்திகைப்பு
தன் நனவுக்குள்ளே நுழையும்
என் அத்துமீறலைக் கண்டு
என்ன செய்வதெனத் தெரியாமல்
குரலைப் பதுக்கிப் பழக்கித்
தனக்குள்ளேயே அது
பாடத் தொடங்கிவிட்டது போலும்
என்ன செய்தும் என்ன
ரீங்காரத்தின் எதிரொலியாய்
அதன் தொண்டைக்குள்
கிளம்பும் புதிய ஸ்வரத்தை
அதற்கா இனந்தெரியாது
23. இலக்கு
ஒரு கொசுவைப் பிடித்து
என் காதுக்குள்ளே நீயேன்
புகுகிறாய் என்று கேட்டால்
என்ன பதில் சொல்லும் அது
உன் கைப்பட்டு நசுங்கவே
என்றா காதல் மொழி பேசும்
ரத்தம் புதுக்கும் கொசுவாய்ப்
பிறக்க யாருக்குப் பிடிக்கும்
நசுக்கும் கையாவதுதானே
நம் இலட்சியம்
24. ருசி
ஒரு பலா மரக் கிளையில்
தலைகீழாய்க் கட்டி
என்னைத் தொங்கவிட்டாலும்
வேர்ப்பலாவைத் தொடவே
என் கைகள்
பரபரக்கும்
25. அலை
ஒரு கடலுக்கு முன்னால் நின்று
எவ்வளவு பிருமாண்டம் என்கிறேன்
என் நெஞ்சளவு உயரம் எழும்பி
ஆரவாரிக்கிறது அலை
ஒரு மலைக்கு முன்னால் நின்று
மகோன்னதமெனக் கத்துகிறேன்
மீண்டும் எதிரொலியாய்த்
திரும்புகிறது என் வாக்கு
தொடுவானைத் தொடர்ந்துபோய்
நான் கரைந்துவிடும்போது
ஏதோ ஒன்று விலகிவிடுகிறது
யானையின் தும்பிக்கையைப்
பணிந்து நான் தொடுகையில்
உள்விரிகிறது என் நுரையீரல்
மரங்களைப் பார்க்கும்போது
அவற்றின் அடியில் நிற்கும்போது
எத்தனையெத்தனை காலமாய்
இப்படியே நின்று பார்த்துக்
கொண்டிருக்கிறேன் என்று
ஒரு திளைப்பின் திகைப்பு
இவ்வளவும் நடக்கிறது
உன் அண்மையின்
அண்மையில்
26.சூம்பல்
வைக்கோல் போருக்குப் பக்கத்தில்
வீட்டெருமை படுத்திருக்கிறது
எழுந்து தின்னச் சோம்பல்
வேளாவேளைக்குக் கால்வயிறாய்க்
கிடைப்பதே போதுமென்ற மனம்
அதற்கு ருசியும் பசியும் பழகிவிட்டது
பாலைப் பொழியும் பசுவோடு
புல்கட்டுக்குப் போட்டியில்லை
பழைய நீராகாரமே போதும்
காய்ந்த இலை தழைகளிலேயே
முழுத்திருப்தியும் வந்துவிடுகிறது
ஊர்க்குளம் குட்டை தாண்டிப்
போகும் ஏக்கமில்லை
கொம்பிருக்கும் நினைவில்லை
மடியும் சூம்பப் போகிறது
அசைபோட்டபடியே கிடக்கிறது
பூமிக்கு வந்த முதல் நாளை
எருமை எருமை என்கிறேன்
பைத்தியம் பைத்தியம் என்கிறாய்
வைத்தியம் செய்துகொள்ளாக்
காட்டெருமைகளாகிவிட்டோம் நாமும்
நகரம்தான் நம்மைக் கொல்கிறதே
27. ஐயம்
நீ ஏறும் உயரம்
எங்கோ இருக்கிறது
என் ரத்தம் உறைகிறது
நான் அண்ணாந்து அண்ணாந்து
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
அடிவாரத்தில் நிற்கும் மாட்டிடையன்
உனக்குத் தெரியமாட்டான்
ஏ அடங்காக் கிடாரி!
நீ வியப்பின் வியப்படி
நான் சொல்கிறேன்
என் நாக்கை நம்பு
நீ தாவியெம்புவதில்
ஆயிரம் கண்கள் திறந்துவிட்டன
நாளை உன் தலைச்சூலில்
இந்த உலகமே விடியப்போகிறது
ஐயப்பட்டு அழியாதே சனியனே
இது கோடாங்கிக் குரலில்வை
உதைக்க வரும் வெறியைத்
தழுவித் தானே பலியாகும்
சூன்யத்தின் சூன்யமிது
28. தளிர்
குப்பையில் ஏற்றிய அகலாய்
உள்ளிருட்டைத் துருவுகிறது
முகத்தோடொட்டிக்கொள்ளும்
ஒரு மறுதோன்றியின் முகம்
சிறியதோர் ஒளிப்பொட்டுதான்
நேர்நோக்கவே முடிவதில்லை
தலைகுனிந்தே நடக்கிறேன்
நடுப்பாதிக் கனவில் வந்து
குத்தும் கூர்ப்பைத் தட்டிவிட்டுப்
போர்த்திக்கொள்கிறேன்
மீண்டும் முளைத்தொட்டுகிறது
என் முகமல்லா அம்முகம்
இரு கை நிறைய நெருப்பள்ளி
வீசுகிறேன் வீசுகிறேன்
அஞ்சித் தப்பியோடுவதாய்ச்
சும்மா பயம் காண்பித்துவிட்டுப்
வசந்தத்தின் புதுத்தளிராய்த்
தழைத்தெழுந்துவிடுகிறது
அழிக்கயழிக்கக் தோன்றும்
அழியாத அந்நீர்வண்ண முகம்
அதனொரு பார்வை விழுந்து
எரிந்து முடிந்த பஞ்சுப்பொதி
திரும்பப் பருத்தியாகிவிடுகிறது
கடலில் மூழ்கிய சூரியன்
எழுந்து கிழக்கில் தகதகக்கிறான்
கூடவே நடக்க வந்துவிட்டது
இப்பிறவியின் இணைமுகமும்
29. தோத்தோ
குளிர்க்கண்ணாடிக்குள்ளிருந்து
ரசிக்கும் இவன் கண்ணையா
அவள் பிடுங்கியெறிய முடியும்
தன் விழியே பட்டுவிடுமென்று
தன் கன்னக் குழிவில்
தனக்குத் தானே அவள்
திருஷ்டிப் பொட்டிட்டுக்
கொள்கிறாள்
சிவப்புச் சேலையும்
கறுப்பு ரவிக்கையும் அணிந்து
கையில் தூரிகையுடன்
ஒரு தற்படமெடுத்தனுப்புவதற்குள்
வீடியோ காலிலேயே
வந்துவிடுகிறான் இக்கடங்காரன்
கழிவறைக்குப் போகும்போதும்
காலிங்பெல் ஒலித்துவிடுமோ
எனப் பதற்றமாயிருக்கிறது
இவனுக்கு மூக்கும் நீளம்
இவன் நாக்கும் தாராளம்
ஒரு பாம்பைப் பிடித்துக்
கழுத்திலிறுக்கிக்கொண்டது
போலிருக்கிறது
இப்படியே எப்படியிருப்பது
எப்போதும் ஊதியூதியுடைக்கும்
கைப்பலூனா என்ன
இழுத்திழுத்து ரத்தசுத்தி செய்யும்
உயிர்மூச்சல்லவோ இது
கதிர்வீச்சாய்ப் பாயும் கனிவைச்
சுட்டுக் கொல்வதெப்படி
தாலாட்டும் இத்தோத்தோவைக்
கார்ப்பரேஷன் லாரிக்குப்
பிடித்துக் கொடுப்பதெப்படி
இருந்துவிட்டுப் போகட்டும்
இலுப்பைப்பூவும் என்கிறாள்
30. அகம்
கைகோத்துக் காவேரியில்
இறங்கினோம்
எதிர்பாராமல்
வெள்ளம் வந்துவிட்டது
கையில் தட்டுப்பட்ட துரும்பைப்
பிடித்துக் கரையேறிவிட்டாய்
நீச்சல் தெரியாமல்
நீர்ச்சுழியிலேயே
நான் தொலைந்துபோனால்
கூடவே நீ வரவா முடியும்
மண்குதிரையே தேவலாம்
இது மனக்குதிரையாச்சே
31. ரத்தம்
ரத்தம் தொட்டு
ரத்தம் தொட்டு
வரைகிறாள் பாஞ்சாலி
ரத்தம் குடிக்கும்
பாண்டவர்களை
32. நீலி
இன்னுமா எழுந்துகொள்ளவில்லை
என்கிறது முழுதாகப்
பூத்துவிட்ட ஒரு செம்பருத்தி
இரண்டு வாரம் நீரூற்றி வளர்த்த
வளைக்கரங்களைப்
பார்க்க வேண்டும் அதற்கு
சூரியனுக்கு முன்னெழுந்து
முதல் பூவைப் பரிசளிக்கக்
காத்திருக்கிறது அது
மெட்டி கழன்றது தெரியாமல்
எப்போதோ தூர்ந்துவிட்ட
மூக்குக் குத்திய துளையைக்
கனவில் வருடியபடியே
தொல்லைப்பட்டுறங்குகிறாள்
சாபங்களின் துர்க்கை
செம்பருத்தியின் புதுமணம்
அவளைத் தழுவும்போது
நரை படர்ந்த கூந்தலுக்குப்
பூசிய கறுப்புச் சாயம்
வெளுத்துப் போயிருக்கிறது
தன் தலைசூடும்
ஒரு பூவைப் பார்ப்பதுபோல்
நிறைசூலியால்
பார்க்க முடிவதில்லை
செம்பருத்தியை
யாராலும் பறிக்கப்படாமல்
செடியிலேயே
பூத்துக்கொண்டிருக்கிறது
செம்பருத்தி
தன் விழிகள் மலராமல்
தூங்கிக்கொண்டேயிருக்கிறாள்
என் ரகசியங்களின் நீலி
33. சுயவதை
யோக நித்திரையின்
உச்சிக்கேறிவிட்ட சிவன்
பார்வதியை நினைத்துத்
தரைக்கிறங்கி வருகிறான்
விநாயகனையும்
முருகனையும் தாண்டிச்
சிவனிடம் வரமுடியாமல்
தவியாய்த் தவிக்கிறாள்
தவம் மறந்த பார்வதி
தட்சனின் வயிற்றெரிச்சல்
விண்ணையும் மண்ணாக்குகிறது
மனிதர்களாக முடியாமல்
தற்கொலை செய்துகொள்கின்றன
பெருந்தெய்வங்கள்
34. தினவு
பார்த்து வந்த கணத்திலிருந்து
குளிர் ஜுரமடிக்கிறது
உச்சிப் பூவைத் தொட்டு மருண்ட
என் ஒவ்வொரு கணுவிலும் வலி
உருளும் சக்கர அதிர்வின்
நரநரப்பில் தேயும் ஒலிச்சுருள்
வெளித்தள்ளிய ஒரு நாதம்
தயங்கிக் கேவித் தலைநீட்டும்
மூடப்பட்டது தட்டப்படும்
மறுக்கப்பட்டது கேட்கப்படும்
காணப்படாதது தேடப்படும்
விரித்த உள்ளங்கையில் உலகம்
ஒரு சுற்றுச் சுற்றி முடியும்
இக்கணம் தொடங்கும்போது
செரிக்க முடியாத ஓர் உறுத்தல்
நினைவினில் கரகரக்கும்
வாந்திபேதி தலைநோவுக்கு
மாதுளம் பழச்சாறா மருந்து
மாசு உறிஞ்சும் வேப்பங்காற்றை
வீட்டுக்குள்ளே யார் விடுவார்
தலைக்குள் ஏறும் மடிக்கனம்
அரைச்சோதியாய்ச் சுழல்கிறது
திரும்பி வராத ஒரு லாங் டிரைவ்
உன் காரில் கூட்டிப் போனால்
ஒருவேளை சரியாகிவிடக்கூடும்
என் காயசண்டிகைப் பசி
35. நித்தியம்
மழை மாலை வானம்போல்
நீர்வண்ணங்களாலேயே
கண்ணடைத்துப் போடுகிறாய்
பேயறைந்ததுபோல்
புத்தி பேதலித்து வதங்குகிறேன்
மைதீட்டிய புறாக் கண்களில்
ஒரு பெரும் பரிவின் கனிவு
நாத்துணிவுற்றழைக்கிறேன்
ஏ ஏ! என் ஆட்டுக்குட்டி!
இங்கே வாடி மிக விரைந்து
வந்தேனடா முரட்டிடையா
என்ன வேண்டும் உனக்கு
என் தோளில் ஏறிக்கொள்ளேன்
இதோ இதோ ஏறிவிட்டேனடா
உலகம் சுற்றப் போவோமா நாம்
ஓ ஓ! சுற்றலாமே தடையென்ன
உள்ளே உடைந்து நொறுங்கும்
மாபெரும் பனிமலை
பொடியாகிக் கடலில் கரைகிறது
உப்புக் கரிக்கும் உமிழ்நீர்
இப்போதினிக்கிறது
எப்போதுமா இனிக்கும்
36. மீட்சி
இவள் சிவப்பாலானவள்
உள்ளும் புறமும் ஒரே நிறம்
பல் சிவப்பு கண் சிவப்பு
கழுத்தும் காதும் சிவப்பு
கையும் காலும் சிவப்பு
இதயமும் ஈரலும் சிவப்பு
எங்கெங்கோ போய்
எதையெதையோ தொழுகிறாள்
இங்கோ சிவப்பு நுணுங்கிச்
செந்நாதமாய்ப் பொலிகிறது
செம்பருத்தி செவ்வரளி
ரத்த ரோஜா செவ்வண்டு
நாகமுறங்கும் செந்தாமரை
செங்கடல் செஞ்சூரியன் செந்திரு
இவள் செந்தீயுமாவாள்
ஒருகணம் எதிர்நிற்க முடியாது
மிரண்டோடியொளிகிறேன்
உள்நாக்கின் செஞ்சிவப்பில்
நடுநடுங்கி நாணுறுகிறேன்
வெளவால் வீச்சமடிக்கும்
பாழடைந்த கர்ப்பக்கிரகத்தின்
பூர்வ ஜென்ம வாசனை
ஆறு கால பூஜை நடக்கும்
புதுக்கோவிலுக்கும் வருவதுண்டு
ஆதரிக்கவேணும் அன்னையே
வழிமீளும் இக்கறுப்பனை
37. முடிவிலி
என் எதிரே கனிகளோடு
ஒரு பப்பாளி மரம்
ஒரு தேன் வண்டு வந்து
என் காதில் ரீங்காரமிடுகிறது
தன் மணத்தால் ஒரு ரோஜா
என்னை வருடிக் கொடுக்கிறது
வானில் மிதக்கும் புறாக்கள்
ஒருகணம் நிலமிறங்கிக்
கண்நிறைக்கின்றன
இலவம் பஞ்சுப் பாதையில்
வலக்கால் என்னை இழுக்கிறது
காலம் காலமாய் நடந்து
மணல் மணலாய்க் கடந்து
எப்படியோ எப்படியோ
இக்கடலில் இறங்கிவிடுகிறேன்
என் சுவடுகளைக் கரையில் விட்டு
38. இது ஜூவாலை
மூன்று சூலங்கள்
வாய் பிளந்து நிற்கின்றன
ரத்தம் பூசிக்கொண்டு
அறுபட்டது ஆடோ கோழியோ
தலைச்சன் பிள்ளையோ
ஆயிரந்தலை நாகம் காக்கும்
வனாந்திரப் பிடாரி கோவிலில்
ஓர் அமாவாசை இரவில்
நூறு தீவட்டிகள் கொளுத்திப்
பேயோட்டியாகிறது
தலைமுழுகாதிருக்கும்
என் கன்னியாகுமரிக்கு
ஆதியோகி அலறியோடச்
சிவன் நெற்றிக்கண் திறக்கிறான்
39. அல்லி
பாதித் தூக்கத்தில்
பெரிய குளத்தைத்
தேடி நடப்பவளுக்குப்
பாதம் நக்கும் மழையைத்
தடமறியும் உட்புலன்களில்லை
எப்போதோ ஊற்றிய பாலுக்குக்
கொத்தாமல் போகிறது நாகம்
கைநிறைய அல்லிகள்
பறிக்க வேண்டும் அவளுக்கு
தேடி வரும் குயிலோசைகள்
அவள் செவி புகுவதேயில்லை
தானே தனக்காகித்
தன்னையே தான் ருசித்துத்
தின்ன வேண்டுமாம்
ஏழு கர்ப்பம் கலைந்த
என் பிள்ளைத்தாச்சிக்கு
40. கண்ணி
ஆற்றில் ஒரு மீன்
நீருக்குக் கீழும் மேலுமாய்த்
துள்ளித் தாவிப் புரண்டு
கரையில் ஒரு மரம்
கிளைகள் தாழ்ந்து வளைந்து
அதில் ஒரு கொக்கு
மிகக்கூரிய அலகுடன்
ஆடாது அசையாது வெறித்து
அதே பழைய கதைதான்
தவமிருக்கும் கொக்கு வாயில்
போய்விழத்தான் போகிறது மீன்
இந்த ஆறு மட்டும் என்ன
கடலில் சென்று கலக்காமல்
தன் காலம் முழுக்கக்
கன்னியாகவேவா ஓடப்போகிறது
அடியெண்ணிக் கண்ணி வைத்த
வலைஞனின் கையில்
கொக்கின் கழுத்து
நெரிபடாமலா…
போ போ
போய் வாழப் பார்
41. லூசிஃபர்
திறந்தவெளியில் மண்டியிட்டுக்
கைவிரியும் ஓர் இசுலாமானவர்
நெற்றி நிலம்படத் திசையைத்
தொழுதெழுவதுபோல்
தென்மேற்கில் முளைக்கும்
ஓர் ஏழிலைக் கிழங்கை வரைந்து
நூற்றெட்டுத் தடவை
நான் தெண்டனிட்டெழுகிறேன்
பனிமலை மீது விலகும் நிலவு
உள்ளம் நீட்டித் தொடுபவனிடம்
நெருங்கியொட்டுகிறது
நித்தம் தவம் செய்யும் குமரி
இன்று அயர்ந்துறங்குகிறாள்
ஜெருசலேமில் ஒரு கிறித்தவன்
பரிசுத்த ஆவியால் இனங்காட்டப்பட்ட
லூசிஃபரை விரட்டியடிக்கிறான்
உடும்புப்பிடியாய் என் வாய்
உன் நாமாவளியிலேயே
ஒட்டிநின்று நிலைக்கிறது
தீதும் நன்றும் பிறர் தர வாரா
எனச் சொல்வதற்கு நீ எதற்கு
கல்லும் மண்ணும் போதுமே
தன்னையறிதலுக்கு
சூரியகாந்திப்பூ தவிக்கிறது
சூரியன் வரவில்லையே என்று
எருக்கம்பூ அழுகிறது
என்னை யாரும் பார்க்கலையே என்று
42. வீழ்ச்சி
ஒரு ரத்தச் சிவப்பு
ரோஜாச் செடி
தான் பூக்கும்
ஒரு ஒரு பூவையும்
கணக்கு வைப்பதில்லை
தோட்டக்காரனின் மனம் மட்டும்
எண்ணிக் கொண்டேயிருக்கிறது
கீழே உதிரும்
ஒரு ஒரு சருகையும்
43. அடுக்கு
வலது முழங்கால் முட்டியைத்
தரையில் ஊன்றி
இடது முழங்காலைக்
கோலப்பாத்திரம் பிடித்த
வளையிட்ட இடக்கையால்
பதமாய் அணைத்தபடி
நெற்றிக்கற்றையும்
உள்திரும்பிய முகமும்
மைதீட்டிய கண்களும்
தாழும் முலையும்
பின்கொண்டையும்
நிலமே காண
வலது உள்முழங்கையின்
பார்க்கக் கிடைக்காத
அந்தச் செங்குழிவில்
ஒரு நாவல் கனியாய்க்
கண்ணன் வந்தமர்ந்து
வெண்கோட்டுக் கோலத்தில்
இளங்கோதை தீட்டும்
செங்கல்நிற அடுக்கு வட்டங்களை
அடிக்கண்ணோடுகிறான்
அவளறியவில்லை அவனை
அவனறிந்துவிட்டான் அவளை
தன் செல்ல மகளுக்கு
கேஸ் அடுப்பை வரைந்து தருகிறவள்
செத்த பாம்பைத் தூக்கி
உன் மீதெறிகிறாள்
கனகனவென்றெரியும் அடிவயிற்றுத் தீயும்
வறுத்தெடுக்கும் சூரியக்கதிரும்
எப்படி ஒன்றாக முடியும்
44. செரு
உலகைச் சுற்றி வந்த
என் அம்மாக்குட்டிச் சிவப்பூ
யாகத்தில் வரிக்கப்பட்ட சூரியனாய்
இப்போது தியானத்திலிருக்கிறது
முருங்கையைக் கைவிட்டுச்
சமநிலையாய்த் தங்கிவிட
நீல வீடு தேடிய பேய்
பஞ்சாக்னி நடுவில் வைத்த
பஞ்சுப்பொதியாய்
என் சிவப்பின் நெடிதெழுந்த
பிறைசூடி சாந்நியத்தின்
குறுக்கில் புகமுடியாமல்
தன்னை விட்டால் போதுமென்று
அரண்டோடுகிறது
கண்மூடினால் காலருத்ரி
திறந்தால் மகாமாயா
ஒருகணம்கூடத் தான்
ஓய்ந்திருக்கலாகாதென
இடிதாங்கிக் கோபுரமாய்ச்
சிலிர்த்தெழுகிறாள் என் சிவப்பூ
இவ்வளவு அமைதி
ஒரு முகத்தில்
எப்படித்தான் குடியேறியதோ
சிவப்பின் சிவப்பாய்ப் பற்றிய
அக்காமனை எரித்த
கன்னி ரதியின் செங்கோபம்
உடன்தணிந்த சாந்தரூபியாய்க்
கதைமுடியாப் பெருமோனத்தைப்
பசுமஞ்சள் தொட்டு
நீல நீலமாய்த் தீட்டுகிறாள்
அவள் கனவில் விரியும்
ஆலமரத்தடி பீடத்தில்
பின்னிப் பிணைந்த நாகங்கள்
சடாரென விலகி
ஒன்றோடொன்று முரணிச் சீறுகின்றன
பாலூத்த வந்தவள் நிதானித்துக்
கைப்பேசியில் தற்படமெடுக்கிறாள்
உஷ்ண மூச்சு இரைய
ஆரத்தி காட்டி முடித்துத்
திருஷ்டி கழித்துச் சுற்றி வருகிறாள்
புற்றுக் கோவிலை
கழுத்தில் ரெட்டைவடத் தாலியுடன்
தலையாலங்கானச் செரு முடிந்து
அனைத்தும் நீர்வண்ணமாகும்போது
நனைவிலி அறுந்து பூமியில் விழுதூன்றிப்
பித்த வெறி தீர்ந்து
இயல்பின் இயல்பாகிறாள்
பச்சை ரத்தம் குடிக்கும்
அணங்கின் அணங்கு
என் அம்மாக்குட்டிச் சிவப்பூ
45. பயணம்
தும்பிக்கு இறக்கைகள் இருப்பது
அதற்குத் தெரியாது
சிறுமியின் தோளே அதன் உலகம்
இறக்கைகளை ஏன் நினைவூட்டினாள்
என்று தேம்புகிறது தும்பி
சிறுமியின் கரங்களே
அதற்குப் போதும்
இறக்கைகள் வேண்டாம்
இனிமேல் பறந்து
எங்குப் போகும் தும்பி
46. ஆணி
ஊற்றிய தண்ணீரின்
ஒவ்வொரு சொட்டையும்
உறிஞ்சியிழுத்தது செடி
இலை பூ காய் கனி
பறித்துக்கொண்டு யார் யாரோ
என்னென்னவோவெல்லாம்
சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்
இவன்தான் ஒன்றுமே சொல்லவில்லை
அங்கிருந்து நகரவுமில்லை
அதிவியப்பின் உச்சியில்
ஆணியடித்தாற்போல்
இவன் நின்றுகொண்டேயிருந்தான்
புத்தி பேதலித்துவிடும்
பிற வேலைகளையும் கொஞ்சம் பார்
அசடே என்றது ஒரு குரல்.
இதற்காகத்தானே காத்திருந்தேன்
அனுமதித்துவிட்டாய் நன்றி என்றபடியே
உள்வந்தமர்ந்துவிட்டான்
பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கும்
ஊனக்கண்ணுக்குத் தெரியாத
எரிமலை ஊற்றின் மேலே
47. நேர்
வெள்ளைப்பூனையைப் பார்த்த
எரியும் கேஸ் அடுப்பை
அந்த வெள்ளைப்பூனையால்
பார்க்க முடியவில்லை
பசும்பாலையேதான் அது
பார்த்துக்கொண்டிருந்தது
கரண்டியால் கிளறி விடப்படாமல்
பாத்திரத்தில் என்னவோ
வெந்து கொண்டிருந்தது
பொங்கும் பாலை அந்தப் பூனை
பார்ப்பதுபோல் நானும்
உன்னையேதான் பார்த்தேன்
பூனை அடுப்பு நீ நான்
எல்லாம் ஒரே நேர்க்கோட்டில்
ஆனால் தலைகீழ்ப் பிம்பங்களாய்
48. குத்து
குழந்தைகளோடு
குழந்தையாய் ஓடுகிறாள்
குழந்தைகள் ஓடிப்போய்
இவளைப் பிடித்துவிடுகின்றன
இவளால்தான் குழந்தைகளைப்
பிடிக்கவே முடியவில்லை
வந்தால் விரட்டுவதும்
சென்றால் துரத்துவதுமாய்
என்ன நடக்கிறது அங்கே
வானம் உனது என்பதற்காக
இப்படியுமா அட்டகாசம்
பண்ணுவாய் நீ
ஒன்று சொல்கிறேன் கேள்
எல்லாமே நிகழ்ந்துவிட்டன
எல்லாமே இங்குள்ளன
இல்லாதவை இங்கில்லை
நிகழாதவை ஒன்றுமில்லை
ஒரு சிறிய அகல் விளக்கு
இருட்டான இருட்டை
எப்படி விரட்டியடிக்கிறது பார்
இவ்வளவு பெரிய சூரியன்
ஒரு பசும்புல்லை ஏன்
இப்படிப் பொசுக்குகிறது
பல்லாங்குழியையே எனக்கு
ஒண்டியாய் ஆடத் தெரியாது
கங்கையில் போய்த் தனியே
நீ முழுகச் சொன்னால்
நான் மட்டும் எப்படி
குத்துக் குத்தாகத்தானே
மூங்கில் தழைக்கிறது
உன் ஆதிசேஷன் நான்
நிலைதடுமாறிப் புரண்டால்
என் பூமிப் பிராட்டியாய்த்
தாங்கிக்கொள்ள வேண்டாமா நீ
கேட்கப்படுவது கொடுக்கப்படுவதில்லை
கொடுக்கப்படுவது கேட்கப்படுவதில்லை
49. தடம்
பெருவெடிப்புக்கும் முந்திய
முடிவில்லா ஒரு காட்டுக்குள்
நெடுந்தூரம் ஒவ்வோரடியாய்
நடந்தேவந்துவிட்டோம்
தன்நினைவற்ற கணங்களில்
வேட்டையின் ருசிவெறி பழகித்
தன்னந்தனியே காடோடு காடாய்ப்
போகப் பிடிக்கிறது திடீரென உனக்கு
பதிந்த காலடித்தடம் பிடித்து
வந்தவழியே துணையின்றிப்
பின்நகரக்கூட மறுக்கின்றன
எட்டிப்பார்க்கும் என் கண்கள்
உள்ளே கனன்றெரிந்த செந்தீ
வெளியேயும் தாவிவிழுந்தது
மலை மண்ணாகி
நடக்கும் காடு கடலாகிப்
பறக்கும் கடல் வானாகி
அந்த நீலவானும் காற்றாகிப்
“பயிர் விளைய அடித்த எருவில்
களை மண்டிவிட்டது”
ஐயையோ தாங்கவே முடியவில்லை
இதயம் நொறுங்கும் அந்த வலியை








Leave a Reply