முதன்மையாக ‘அறிவியல் புனைவு’ என்பது புனைவுதான் அறிவியல் விளக்கக் கையேடு அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை தொடக்கத்தில் ஏற்படுத்தும் வியப்புக்கு அப்பால் அறிவியலின் சிக்கல்கள் வாழ்வின் மீது எப்படிப் பாதிப்பைச் செலுத்துகிறது, அறிவியல் தொழில்நுட்பச் சாத்தியங்கள் எழுப்பும் அடிப்படை வினாக்களை எதிர்கொள்வது, வாழ்க்கையின் அடிப்படை வினாக்களை அறிவியல் வழி எதிர்கொள்வது ஆகியவற்றை நிகழ்த்தும் போது அவற்றுக்குத் தீவிர இலக்கிய வெளியில் ஒரு இடம் உருவாகிறது. அறிவியல் புனைவு வருங்காலத்தில் மட்டுமே நிகழ வேண்டியதில்லை. தொழில்நுட்பக் கற்பனை மட்டும் அறிவியல் புனைவு இல்லை.
முற்காலத்தில் எழுதப்பட்ட பல அதிபுனைவுக் கதைகளை இன்று நாம் அறிவியல் புனைவாக வாசிக்க இடமுண்டு என்றாலும், மேரி ஷெல்லி எழுதிய ‘பிராங்கன்ஸ்டீன்’ முதல் நவீன அறிவியல் புனைவு எனக் கொள்ள முடியும். முதல் அறிவியல் புனைவே கூட ஒரு வகையில் அறிவியலின் புகழ் பரப்பாமல் அதன் அழிக்கும் ஆற்றல் குறித்து எச்சரிக்கும் ‘எதிர் அறிவியல் புனைவாக’ உருவாகி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டு அறிவியல் புனைவுகள் பலவும் அறிவியலின் முக்கியத்துவத்தை வெகு மக்களுக்கு எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவை. எனினும் வலுவான இலக்கியப் பிரதிகளாக நிலை பெற்றவை பெரும்பாலும் எதிர் அறிவியல் புனைவுகள் என்று சொல்லலாம். அறிவியல் புனைவை மென் அறிபுனைவு வன் அறிபுனைவு என இரண்டாக வகுப்பது வழமை. நாம் பெரும்பாலும் வாசிப்பது மென் அறிவியல் புனைவைத்தான். அறிவியல் சிக்கலின் சமூகத் தாக்கத்தைப் பேசுபவை. ‘இப்படி இருந்தால்’ எனும் கேள்வியை மட்டும் எடுத்துக்கொள்ளும். அறிவியல் நிரூபிக்கப் அல்ல, சாத்தியம் போதும். வாசிப்பை விட திரைப்படங்கள் வழி நமக்கு அறிவியல் புனைவுகள் அறிமுகம். மரபணு மாற்றம் என்றொரு சாத்தியக்கூறை கொண்டு விதவிதமான அதிமானுட ஆற்றல்கள் கொண்ட அதிமானுடர்களைக் கற்பனை செய்கிறது எக்ஸ் மேன் தொடர். அசிமோவ், ரே பிராட்பெரி, பிலிப் டிக் போன்ற முக்கிய ஆளுமைகளைத் தாண்டி தற்போது டெட் சியாங், சார்லஸ் யூ, கென் லியூ, சிக்ஸின் லியூ போன்ற எழுத்தாளர்கள் இன்று முக்கியமான அறிபுனைவு எழுத்தாளர்களாக அறியப்படுகிறார்கள்.
இந்திய அளவில் அறிவியல் புனைவுகளில் வேர்களைத் தேடினால் ஜெகதீஸ் சந்திரபோஸ் எழுதிய கதை முதல் கதையாக இருக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். அவரது தாவரவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக நினைவுகூறப்படும் முன்னோடி இந்திய விஞ்ஞானி போஸ். அவர் ஒரு அறிவியல் புனைவை எழுதியுள்ளார் எனும் தகவலே நமக்கு வியப்பளிப்பதாக இருக்கும். ‘கூந்தலின்’ எனும் தலை முடி எண்ணெய்க்கு விளம்பரம் அளிக்கும் நோக்கத்துடன் 1896 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசு வென்ற கதை ‘தொலைந்து போன புயல்’ எனும் தலைப்பில் வெளியானது. இரண்டு பகுதிகள் கொண்ட அந்தக் கதையில், முதல் பகுதியில், கல்கத்தாவைத் தாக்க வந்த பெரும் புயல் பற்றிய எச்சரிக்கைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் மர்மமான முறையில் அந்தப் புயல் கல்கத்தாவைத் தாக்காமல் மறைந்துவிடுகிறது. அது குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளை விவரிக்கிறார். வால் நட்சத்திரத்தின் விளைவு என ஒரு விஞ்ஞானி கூறுகிறார். இன்னொரு ஜெர்மன் விஞ்ஞானி எழுதிய வெற்று துறை சொற்களால் நிரம்பிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி அளிக்கப்படுகிறது. அடுத்த பகுதியில் என்ன நடந்தது என்பது தர்க்கபூர்வமாக விளக்கப்படுகிறது. உடல்நலமற்ற கதைசொல்லிக்குக் கப்பல் பயணம் பரிந்துரைக்கப்படுகிறது. இலங்கைக்குப் பயணமாகிறார். தீவு என்றால் என்ன என மகள் கேட்கும் போது தனது தலையில் ஆங்காங்கு இருக்கும் முடிகளைக் காட்டுகிறார். மகள் தலைமுடியைக் காக்க தலைமுடித் தைலம் ஒரு புட்டியை வைக்கிறாள். கடல் புயல் வந்து கப்பல் கவிழும் சமயத்தில் அறிவியல் இதழில், நீரலைகளில் எண்ணெயின் விளைவுகளைப் பற்றி, எண்ணெய் அசையும் நீர்ப்பரப்பை ஆற்றுப்படுத்தும் என்பதைப் படித்தது நினைவிற்கு வருகிறது. கூந்தல் கேசரி தைலக் குப்பியை நீரில் வீசுவதால் புயல் அமைதி அடைந்து தப்புகிறார்கள். தண்ணீரின் மேற்பரப்பு அழுத்த மாற்றம் புயலைத் தணிக்கவல்லது எனும் அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. அறிவியல் கோட்பாட்டின் நடைமுறைப் பயன்பாட்டைப் பேசும் புத்திசாலித்தனமான கதை.
அடுத்த முக்கியமான இந்தியப் படைப்பு 1905 ஆம் ஆண்டு ருக்கியா பேகம் எழுதிய ‘சுல்தானாவின் கனவு’. ருக்கியா பேகம் வங்காள எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர், பெண்ணியச் சிந்தனையாளர். கதையில் கனவு காணும் நாயகியை சகோதரி சாரா எனும் பாத்திரம் வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்கிறது. ‘லேடிலேன்ட்’ எனும் அந்த உலகில் எல்லோரும் இரண்டு மணி நேரம் மட்டுமே உழைக்கிறார்கள். முதலில் அவர்கள் காண்பது சூரிய ஆற்றலால் இயங்கும் சமையல் அறையை. ஊரே அழகாக இருக்கிறது. ஆண்கள் எல்லாம் வீட்டிலேயே அடைத்து வைக்கப்படுகிறார்கள். பாலியல் பங்களிப்புத் தலைகீழாக்கம் பெறுகிறது. பிரமாண்டப் பலூன்களுடன் குழாய்களை இணைத்து மேகங்களில் இருந்து நேரடியாக நீரைத் தருவிக்கிறார்கள். ஆகவே மழையோ புயலோ ஏற்படுவதில்லை. நிலம் மின் சாதனங்களால் உழப்படுகிறது. நாட்டில் போர் ஏற்படும்போது ஆண்கள் பங்குபெற்று தோல்வியடைகிறார்கள் என்பதால் எஞ்சியவர்களுக்கு பர்தா அணிவித்து வீட்டுக்குள் முடங்கச் செய்கிறார்கள். பெண்கள் சூரிய சக்தியின் வெப்பத்தையும் ஒளியையும் ஒரு படிகக்கல் வழியாகப் பிரதிபலித்து போரை வெல்கிறார்கள். இரு ஹைட்ரஜன் கோளங்களையும் ரெக்கைகளையும் இணைத்துப் பறக்கும் காரைத் தயார் செய்கிறார்கள். சுவாரசியமான இன்ப உலகுக் கற்பனை. காலயந்திரம் எனும் கற்பனை தோன்றுவதற்கு முன் பெரும்பாலும் வெவ்வேறு காலங்களுக்கும் உலகங்களுக்கும் கனவு வழிப் பயணம் என்பதே ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் அனில் மேனன், மஞ்சுளா பத்மநாபன், சமித் பாசு ஆகியோர் முக்கியமான அறிவியல் புனைவு எழுத்தாளர்கள். தருண் கே செயின்ட் இந்திய அறிவியல் புனைவுகள் என இரண்டு தொகுதிகள் தொகுத்துள்ளார்.
தமிழ் அறிவியல் புனைவுகளைப் பற்றிப் பேசும்போது, அ.கா.பெருமாள் தொகுத்த ‘இராமன் எத்தனை இராமனடி’ எனும் தொகுதியில் இடம்பெற்றுள்ள இராமாயண நாட்டார் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ராமனின் கணையாழியை ஏந்தி சீதையைச் சந்திக்கச் செல்லும் அனுமன், கடல் தாண்டுவதற்கு முன்பு ஓய்வெடுக்க எண்ணுகிறான். அப்போது அங்கே தவம் செய்யும் முனிவரிடம் கணையாழியைப் பாதுகாக்கக் கோருகிறான். கமண்டலத்தைக் காட்டி அதில் போட்டுவிடும்படிச் சொல்கிறார் முனிவர். ஓய்வெடுத்துக் கிளம்பும் போது கமண்டலத்தில் கைவிட்டுப் பார்க்கிறான் அனுமன், உள்ளே ஒன்று போலவே அநேகக் கணையாழிகள், குழம்பியவன் முனிவரிடம் ‘எது எனது என்று கேட்க’ முனிவரோ அனுமனின் செருக்கை அடக்கும் விதமாக, ‘எத்தனையோ அனுமன்கள் எத்தனையோ கணையாழிகளை இங்கே போடுகிறார்கள்’ எனக்கெப்படித் தெரியும் என்கிறார். மார்வல் அறிவியல் அதி புனைவு சாகச உலகில் பேசப்படும் இணைப் பிரபஞ்சம் எனும் சிந்தனையோடு இந்த நாட்டார் கதையைச் சேர்த்து வாசிக்கலாம். கால- வெளியைக் குலைத்து வளைக்கும் கற்பனை அறிவியல் புனைவுகளுக்கும் உண்டு. இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், பாரதியின் ‘ஞானரதம்’ இந்தியத் தொன்மங்களில் உள்ள ஈரேழு உலகம் எனும் கற்பனையைக் கொண்டு கால – வெளித் தகர்வை ஏற்படுத்தும் முயற்சி என்று குறிப்பிடலாம். எவையெல்லாம் முன்பு மாயாஜாலக் கதைகளாக இருந்தவனோ அவையே பிற்காலங்களில் அறிவியல் புனைவாகப் பரிணாமம் கொண்டன. மெய்யியலில் கடவுளின் இடம் அறிவியலால் நிரப்பப்பட்டதைப் போலவே கதைகளில் மாயாஜாலத்தின் இடம் அறிவியலால் நிரப்பப்பட்டது.
1925 ஆம் ஆண்டு பஞ்சாமிர்தம் இதழில் அரங்கசாமி ஐயங்கார் எழுதிய ‘கோபாலன் விஷயம்’ ஒரு சுவாரசியமான கதை. அரங்கசாமி ஐயங்கார் அ.மாதவய்யாவின் புனைபெயராக இருக்கலாம் என்றொரு ஊகம் உண்டு. இரண்டு நல்ல வசதியுள்ள நண்பர்கள் விருந்துகளுக்குச் சென்று இன்பமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். எல்லோரும் சுதந்திரக் காய்ச்சலில் சுதேசி ஆடையை உடுத்திக் கொண்டிருக்கும் பொழுது அந்த ஊரில் இவர்கள் இருவர் மட்டும் கோட்டு சூட்டு அணிந்து நடமாடுவது ஏன் என்பதற்கு விடையாக ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகிறார் கதைசொல்லி. கதை சொல்லியின் தாத்தா ரசவாத மருந்துகளைச் செய்பவர். அவரது அலமாரியை கோபாலன் அவ்வப்போது வேவு பார்ப்பான். ஒரு நாள் திருமண விருந்தில் வயிறு முட்ட உண்டு விட்டுத் திணறிக்கொண்டிருக்கும் பொழுது தாத்தாவின் அலமாரியில் உடலை இலகுவாக்க எனும் குறிப்புடன் இருக்கும் ஒரு குப்பியைக் காண்கிறான். கதை சொல்லி எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அதை உட்கொண்டு விடுகிறான். மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு கதை சொல்லியை கோபாலன் தனது வீட்டுக்கு அழைக்கிறான். கோபாலன் மிகவும் இலகுவாகி அந்தரத்தில் ஒரு பலூன் போல மிதந்து கொண்டிருக்கிறான். அவனை இழுத்துக் கட்ட வேண்டியதாக இருக்கிறது. கதை சொல்லி ஒரு நூதனமான திட்டத்தைக் கண்டடைகிறார். கர்லாக்கட்டை எடையைக் கூட்டுவதற்காக அதன் உள்ளே குடைந்து ஈயம் காய்ச்சி ஊற்றும் வழக்கம் உள்ளதைக் கவனிக்கிறார். அப்படியாக ஈயத்தகடுகளைக் கோட்டு சூட்டுக்கு நடுவே வைத்து அவற்றை அணியச் செய்து நடமாட விடுகிறார். எடை காரணமாகப் பறக்காமல் இருக்கிறான். ஒரு அசாதாரணச் சிக்கலுக்குத் தர்க்கப்பூர்வ தீர்வு முன்வைக்கப்படுகிறது. ஜெகதீஷ் சந்திரபோஸ் கதை போலவே கோட்பாட்டின் சாமார்த்தியமான நடைமுறையாக்கம்தான் கதைக்கரு.
விசாலாட்சி அம்மாள் எழுதிய தூரத்து பச்சை சிறுகதையைத் தமிழில் வந்த முதல் அறிவியல் புனைவு என்று சொல்ல முடியும். 1925 ஆம் ஆண்டு வெளியான கதை. ஒரு சிறுவனின் மரணம் சித்தரிக்கப்படுகிறது. அவனுடைய அம்மாவான விதவையை எல்லோரும் வசை பாடுகிறார்கள். இப்பொழுது அங்கே ஒருவர் வருகிறார், பக்கத்து வீட்டுக்காரர் யாரென அவரை விசாரிக்கிறார். தூரத்து கிரகத்திலிருந்து ஆகாய விமானத்தில் வருவதாகச் சொல்கிறான். பயணத்தில் அவனது விமானமும் கருவிகளும் பழுதடைந்து விட்டன, திரும்பிச்செல்ல வழியில்லை. அவர்களது ஊரின் தொன்மங்களில் அந்த கிரகத்தில் இறப்பவர்கள் அதைவிட மேம்பட்ட உலகமான “தீயா” எனும் கிரகத்தில் பிறப்பார்கள் என்றும், அப்படி படிப்படியாக மேலேறி இறுதி உலகமான “கொவர்னேஜ்” எனும் சுவாமி இருக்கும் உலகிற்குச் செல்வார்கள் என்றும் நம்பப்படுகிறது என்கிறார். தீயா உலகின் அடையாளமாகச் சில சொல்லப்பட்டுள்ளன. தாமரை தடாகம், பசுமை, யாரும் யாரையும் கடுஞ்சொல் பேச மாட்டார்கள். இதுதான் தீயா என நம்பி வந்தவருக்குக் குழந்தையை இழந்த துக்கத்தில் இருக்கும் அன்னையை வசை பாடியதைக் கேட்டதும் இதுவும் தங்கள் உலகைப் போன்ற உலகம்தான் என்பது புரிகிறது. பெண்ணைப் பழிப்பது எனும் சமூகச் சிக்கல், அதற்கு எதிரான எதிர்வினை / ஆற்றாமை கதையாகிறது. மேலேழு கீழேழு உலகங்கள், மறுபிறப்பு போன்றவை இந்தியச் சிந்தனை. ஆனால் வேறொரு கிரகம், ஆகாய விமானம் மற்றும் உலகங்களில் பெயர்களில் உள்ள புதுமை அறிவியல் தன்மையைப் பேசுகிறது. ஒரு சாதாரணக் குடும்பக் கதைதான். ஆனால் அதில் வேற்று கிரகவாசி ஒரு புதிய கோணத்தைக் கொணர்கிறார். நம் வாழ்வின் சிறுமைகளைக் காட்ட இத்தகைய புற உலகுக் கற்பனை ஒரு உத்தியாகக் கையாளப்படுகிறது. வோல்டேரின் மைக்ரோமெகாஸ் கதையில் பூலோக வாசிகள் பசிபிக் பெருங்கடல் தனது கணுக்காலைக் கூட நனைக்காத மைக்ரோமேகஸிடம் பூமி எங்களுக்காகப் படைக்கப்பட்டது எனச் சொல்வார்கள்.
இக்காலகட்டத்தில் வெளியான அறிவியல் புனைவுக் கதைகளில் மிக முக்கியமானது ந.பிச்சமூர்த்தி எழுதிய ‘விஞ்ஞானத்துக்குப் பலி’. ப்ராங்கைன்ஸ்டீன் தாக்கத்தில் உருவாகி இருக்கக்கூடும். ஆல்பா எனும் உலோக மனிதன் அதை உருவாக்கியவரையேஅழிக்கிறான். 1933 ஆம் ஆண்டு வெளியானது. மின்சாரத்தில் இயங்குபவன் இரைந்து கத்தினால் அவ்வூரின் கண்ணாடிகள் நொறுங்குகின்றன. ஆல்பாவை உருவாக்கியவர் ஜெர்மன் விஞ்ஞானி எச்.மே. “ஆல்பாவின் சிருஷ்டி கர்த்தர் ஆல்பாவின் அடிமையானார்.” கடவுளுடன் போட்டி போடுவது தவறு எனும் எண்ணம் விவாதிக்கப்படுகிறது. டாக்டர் சேதுராவ் கண்ட கனவுதான் மொத்தக் கதையும். சென்னைத் தெருக்களில் ஆல்பா சுற்றி அலைவதாகக் கனவு காண்கிறார். கதைக்குள் அறிவியலுக்கு அறம் உண்டா என்பது குறித்து விவாதம் நடைபெறுகிறது. இரண்டு மேற்கோள்களை அளிக்கிறேன்.
“மேற்படி மே என்பவர் எழுந்திருந்து என்னைப் போல் பேசுகிறவர்கள் இயற்கையால் அருளப்பட்ட சிருஷ்டி சக்தியைக் கற்பனா யுக்தியை -உபயோகித்து மாசுபடியாமல் வைத்திருக்கச் சக்தியற்ற பேடிகளென்றும், ஸயன்ஸின் வெற்றிகளைப் பழிப்பவர் மானிட வகுப்பின் எமன்களென்றும், அவர்களை ஒழிப்பதும் இகழ்வதும் விஞ்ஞானிகளின் முதல் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் ஆரவாரத்துடன் பேசிச் சண்டை இட்டார்.”
விசுவநாத அடவியார் எம்.எல்.ஏ.எனும் பாத்திரம் பேசுவதாக வரும் பகுதி.
“உண்மையில், ராயர்வாள், யுத்தத்துக்காசுக் கொலைக்- காற்று. ஆகாய விமானம், விஷவாசனை, டார்ப்பிடோ இவைகளை ஸயன்ஸ் பண்டிதர்கள் கண்டு பிடித்ததிலிருந்து எனக்குக் கோபம். வரவர ஹிம்சை செய்வதற்கும் பொழுது போக்குக்கும் ஈசுவரன் கொடுத்த உயர்ந்த மூளையை மேல்நாட்டுப் பண்டிதர்கள் செலவழிப்பதைப் பார்த்தால், அடுத்த யுத்தத்தில் மனிதன் பூண்டற்றுப் போவான் என்றே தோன்றுகிறது. இதைத்தான் புத்தியின் விபசாரமென்று நான் சொல்லுவேன். இந்த விஷம் புத்தி, நமது இந்தியருக்குள்ளும் பரவிவருவது, எனக்குச் சகிக்கவில்லை. எதற்காக நமது ஜனங்கள் வெடிகுண்டும் துப்பாக்கியும் பழகிக்கொள்ள வேண்டும்? இதெல்லாம் நமக்கு வேண்டாம். இவைகளைத் கெடுப்பதுதான் சுத்த சைவனாகிய என் நோக்கம். சரிதானா?”
புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’கதையைக் கறாராக அறிவியல் புனைவு என்று சொல்ல முடியாத அதிபுனைவுதான் எனினும் கூட காலவெளி யாத்திரையைப் பேசுகிறது. அறிவியலுக்கும் யோகம்- ஆன்மீகத்திற்கும் இடையேயான உரையாடல் நிகழ்கிறது. தமிழ் அதி புனைவு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு நல்லதோர் முன்னோடி. கன்னி கோவிலுக்குள் மாட்டிக்கொள்பவன், கனவில் கடல் வற்றுகிறது, குன்றுகளையும் கோவில்களையும் கடக்கிறான், கன்னியின் தலைமட்டும் பேசுகிறது, அசரீரி துணை வருகிறது, ரசக்குழம்பைப் பூசிக்கொண்டு எரிமலைக்குழம்பின் வெப்பத்தைத் தணித்துக்கொள்கிறான். பாதாளக் கங்கையில் முங்கி, முண்டங்களால் ஆன புனையில் ஏறி ஸித்தலோகம் செல்கிறான்.முண்டங்கள் மாட்டுத்தலையை அணிந்து கொள்கின்றன. தன்னை மாடர்கள்/நந்திகள் என்கிறார்கள். ஒரு மனிதனை மரம் உண்கிறது. அதன் சதையிலிருந்து அம்பு குத்தி பீறிடும் பாலை அருந்தக்கொடுக்கிறார்கள். காலயாத்திரை செய்ய வேண்டுமா எனக் கேட்டு சித்தர்கள் கபாடபுரம் அழிந்த கதையைக் காட்டுகிறார்கள்.
ஜி. நாகராஜனின் ‘அணு யுகம்’ ஜப்பானைக் களமாகக் கொண்டது. டாக்டர் பியூஜிடாவுக்கும் அவரது கிராமத்து மனைவி மாரூவாவுக்கும் இடையேயான உறவை நாகசாகி அணு விபத்து பின்புலத்தில் அணுகுகிறது. அணுயுகத்தில் லட்சியத்தின் பயன்மதிப்பு என்ன? பிண்டமாகப் பிறக்கும் குழந்தை மாருவாவைத் திசைமாற வைக்கிறது. பெரிய வரலாற்று/ புற நிகழ்வு மனித உறவுகளை எப்படிப் பாதிக்கிறது? அணு யுகத்துக்கான அறம் மாறுபடும். அதிபுனைவு கற்பனை ஏதுமற்ற யதார்த்த கதை. மா. அரங்கநாதனின் ‘மயிலாப்பூர்’ ஏதோ ஒரு பேரழிவுக்குப் பின்பு சென்னையில் மனிதர்களே அற்ற அமானுடச் சூழலை விவரிக்கிறது. Alice in borderland இணையத் தொடரைப் பார்த்த போது அரங்கநாதனின் இந்தக் கதையும் இது ஏற்படுத்திய திகில் உணர்வும் நினைவுக்கு வந்தது.
தமிழில் அறிவியல் புனைவு எனும் வகைமை முறையாகத் தொடங்கியது சுஜாதாவின் காலத்தில், அவரது பங்களிப்பில்தான். என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்றவை பரவலாக வாசிக்கப்பட்டன. வாட்டர் கார் விவகாரம், உபகிரகம், மஞ்சள் ரத்தம் போன்ற பல அறிவியல் புனைவு சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் 1970களில் எழுதிய ‘சூரியன்’, ‘நகர்வலம்’ ஆகிய கதைகள் பேரழிவிற்குப் பின்பான அறிவியல் புனைவு வகைமைக்குத் தமிழின் முன்மாதிரி. ‘நகர்வலம்’ கதையில் ஆஸ்ட்ரா 7 எனும் வேற்றுக் கிரகத்திலிருந்து தனது மனைவி நித்தியாவுடன் ஆத்மா பூமிக்கு வருகிறான். 500 கி.மி வேகத்தில் செல்லும் கப்பல், அதுவே நீர்மூழ்கியாகவும் மண்மீதும் செல்லும். தனது முன்னோர்களின் பூர்வீகமான நகரையும் அவர்களின் வீடிருந்த திருவல்லிக்கேணி தேரடித் தெருவையும் காண வருகிறான். மொத்த நகரமும் நீரில் மூழ்கி இருக்கிறது. நீருக்குள் சென்றபடி கப்பலில் நகரத்தை வலம் வருவதுதான் கதை. சென்னை நகரம் வருங்காலத்தில் கடல்மட்டம் உயர்வால் நீருக்குள் போய்விடக்கூடும் எனும் அச்சத்திலிருந்து எழுந்த கதை.
‘சூரியன்’ என் நோக்கில் சுஜாதாவின் சிறந்த அறிவியல் கதைகளில் ஒன்று. அணுஆயுதப் போரின் விளைவாகப் பேரழிவு ஏற்பட்டு எங்கும் அணுக்கதிர்வீச்சு. ஆகவே மண்ணுக்கு மேலே வாழ முடியாத சூழலில் மனிதர்கள் மண்ணுக்குக் கீழே / அடியில் வாழ்கிறார்கள். சூரியனையே பார்த்திடாத பத்து வயது மகன் சூரியனைப் பற்றிக் கவிதை எழுதுகிறான். மண்ணுக்கு அடியில் எல்லாமே பற்றாக்குறை. காகிதங்களுக்குக் கணக்கு உண்டு. காகித விரயத்திற்காகக் கதை நாயகன் ஆத்மா கண்டிக்கப்படுகிறான். செயற்கைச் சூரியனை மண்ணுக்குள் உருவாக்கி அதன்வழி தானிய விளைச்சலை ஏற்படுத்தத் திட்டமிடுகிறார்கள். பொந்துக்குள் வாழ்வது போல நிலத்திற்கு அடியே வாழ்கிறார்கள். மகனையும் மனைவியையும் மண்ணுக்கு மேலே மின் நிலையத்திற்கு மின்தூக்கியில் அழைத்துச் சென்று, வானத்தையும், கடலையும், சூரியனையும் காண்பிக்கிறான். சில ஆண்டுகளில் நிலைமை சரியாகிவிடும் எனச் சொல்லிக்கொண்டாலும், கதிர்வீச்சின் பாதிப்பு ஓய்வதற்கு 170 ஆண்டுகள் ஆகும். 1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நல்ல துன்ப உலகுக் கற்பனைக் கதை. சூரியன் எனும் அனுபவமே இல்லாதவன் அது குறித்து கவிதை எழுதுகிறான். அணுகுண்டும் கூட ஒருவகையில் சூரியன்தான். புரதச் சத்து குறைபாட்டுக்கு மாத்திரைகள், நீரும் உணவும் அளந்து அளிக்கப்படுகிறது. ஃபால் அவுட் எனும் இணையத் தொடரைக் காணும் போது சுஜாதாவின் இக்கதை நினைவுக்கு வந்தது.
இரா.முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா, ஆர்னிகா நாசர், மாலன் ஆகியோர் சுஜாதா பாணியிலான அறிவியல் புனைவுகளைப் படைத்தார்கள். மாலனின் ‘வித்வான்’ இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பாய்ச்சலை முன்னூகித்துள்ளது. செயற்கை நுண்ணுணர்வு காலத்தில் மேதமைக்குப் பொருள் என்ன? தனித்துவம் என்பது ஒரு வகைமாதிரி தானா? போன்ற ஆதாரக் கேள்விகளை எழுப்புகிறது. க.சுதாகர் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார்.
எம்.டி. முத்துக்குமாரசாமி எழுதிய ‘ஒரு துண்டு வானம்’ அறிவியல் புனைவு என்பதை விட வருங்காலத்தில் நிகழும் துன்ப உலகுக் கதை. ஒரு தத்துவவாதி சிந்தித்ததற்காகத் தண்டிக்கப்படுகிறான். சிந்தனை கண்காணிக்கப்படுகிறது. அழகியலைப் பிராதனப்படுத்தியதே அவனுடைய குற்றம். எவருக்கும் பெயர்கள் இல்லை, எண்கள் மட்டுமே உள்ளன. தனித்துவமான ரசனை என ஏதும் உலகமயமாக்கலுக்குப் பிறகு உண்டா எனும் ஆதாரக் கேள்வியை எழுப்புகிறது. அழகியல் என்பதும் காமம் என்பதும் இயற்கையுடன் நெருங்கிய உறவில் உள்ளது என்பதே தரிசனம் .
முத்துலிங்கம் சில சுவாரசியமான அறிவியல் புனைவுகளை அவருக்கே உரிய மொழியில் எழுதியுள்ளார். ‘எலி மூஞ்சி’ கதையில் 2030ல் பால் மாறுவது 3 முறைக்கு மேல் வாழ்நாளில் நிகழக்கூடாது எனும் பிற்போக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கிக் கார்கள் பற்றிச் சொல்கிறார். 12 வயதில் காரில் தனியாகச் செல்லலாம். ஒரே சினிமா ஒவ்வொருமுறையும் வேறுவேறாக ஆகும் தொழில்நுட்பத்தைக் கற்பனை செய்கிறது. பால் அடையாளம் என்பது இறுக்கமானதல்ல, ஒரு நிலை/ தேர்வு என ஆகிவிடுகிறது. ஆசிரியர் பெண்ணாகிறார். இன்னொரு கதையான ‘புவியீர்ப்புக் கட்டணத்தில்’ மின்சாரம், நீர், போல புவியீர்ப்பு ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு வரி விதிக்கப்படுகிறது. கட்டாமல் போனால் விண்கலத்தில் ஏற்றி விண்வெளியில் இறக்கி விடப்படுவார். அதற்கான செலவையும் சேர்த்துக் கட்ட வேண்டும். எனும் சுவாரசியமான கற்பனை. ‘பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்குத் தெரியும். ஒரு முறை பூமி சூரியனைச் சுற்றும்போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள், இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல். இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்குக் கட்டணம் கட்டவேண்டும்’ என்கிறார். தமிழ் அறிவியல் புனைவு இலக்கியப் பரப்பில் ஜெயமோகனின் ‘விசும்பு’ தொகுதி ஒரு முக்கியமான வரவு. குறிப்பாக விசும்பு, பித்தம், ஐந்தாம் மருந்து போன்றவை சமகாலத்தில் நிகழ்பவை. இந்திய மெய்யியல் போக்கை முன்வைப்பவை. அறிவியல் மீதான வியப்பைப் பதிவு செய்வதைக் கடந்து தற்கால அறிவியல் புனைவுகள் ஓரளவு ஆழமான கேள்விகளை எழுப்புவதை நோக்கி நகர்ந்திருக்கின்றன.
அரூ இணைய இதழ் அறிவியல் புனைவுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளது. ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட கதைகள் வெளியாகி உள்ளன. அறிவியல் புனைவுக்கெனப் போட்டிகள் நடத்திக் தொகை நூல்கள் வெளியிட்டனர். அரூவின் வருகைக்கு முந்தைய மொத்தத் தமிழ் அறிவியல் புனைவுகளைக் காட்டிலும் அரூரில் வெளிவந்தவை அதிகம் என்று எண்ணுகிறேன். ரா.கிரிதரன், நம்பி கிருஷ்ணன், சுசித்ரா, சித்துராஜ் பொன்ராஜ், லோகேஷ் ரகுராமன், கே. பாலமுருகன் எனப் பலரும் அறிவியல் புனைவுகளை எழுதி வருகிறார்கள். பிரவீண் பஃறுளி தொகுத்த ‘மீ’ உலக அறிவியல் புனைவுகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. சொல்வனம் இணைய இதழ் அறிவியல் புனைவுச் சிறப்பிதழ் வெளியிட்டது. தமிழ்ச் சூழலில் வலுவான தனித்த வகையாக அறிவியல் புனைவு உருவாகி நிலைக்கொள்ளவில்லை. எனினும் இலக்கிய எழுத்தாளர்கள் பலரும் அறிவியல் புனைவு எழுதி வருவது நல்லதோர் தொடக்கம்.
Art : Isa
சுனில் கிருஷ்ணன் பாண்டிச்சேரியின் காரைக்காலில் பிறந்தவர். அம்புப்படுக்கை, விஷக் கிணறு ஆகிய சிறுகதை நூல்களையும் நீலகண்டம், குருதிவழி ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். அம்புப் படுக்கை நூலுக்காக யுவபுரஸ்கார் விருதுபெற்ற இவர் ஆயுர்வேத மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.








Leave a Reply