ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் என ஆறு துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களுக்கு நோபல் பரிசானது வழங்கப்படுகிறது. இத்தகைய பெருமைக்குரிய நோபல் பரிசை முதல் இந்தியராக, இல்லை இல்லை முதல் ஆசியராக இயற்பியல் துறைக்கெனப் பெற்றவர்தான் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர வெங்கட ராமன்.
https://share.google/pkM64D1pF1s0cHwOj

நாம் பன்னிரண்டாம் வகுப்பில் நெடுவினாவாகப் படிக்கும் ‘ராமன் விளைவு’ (raman effect) தான் அவருக்கு இந்த உலகளாவிய புகழுக்குக் காரணம். சர்.சி.வி.ராமன் என்று அழைக்கப்படும் இவர், ஒற்றை ஒளியானது (monochromatic light) ஒரு ஒளி புகவிடும் பொருளின் (transparent material) உள்ளே சென்று வெளிப்படும்போது, அந்தச் சிதறிய ஒளியின் (scattered light) ஒரு சிறிய பகுதியின் அலைநீளத்தில் (wavelength) மாற்றம் அடைந்திருப்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்.
https://share.google/nVblG2t3aHS0mAej9

திருமதி ஏ.வி.நரசிம்ம ராவ் (AVN) கல்லூரி விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தில் இயற்பியல் மற்றும் கணித விரிவுரையாளராக இருந்த திரு.சந்திரசேகர ஐயரின் மகனாகப் பிறந்த வெங்கட ராமன், தனது இடைநிலைப் பள்ளிப் படிப்பை 11ஆம் வயதிலேயே முடித்தார். 13 வயதில் அவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார், அங்கிருந்து இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் 18 வயதிற்குள் அதே துறையில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். தனது முதுகலைப் பட்டப் படிப்பைத் தொடரும்போது, ராமன் தனது முதல் ஆய்வுக் கட்டுரையை ‘ஃபிலாசஃபிகல் மேகசின்’ இதழில் வெளியிட்டார். ஒரு சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட பிரசிடென்சி கல்லூரியின் முதல் அறிவியல் கட்டுரை இதுவாகும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், 1907 ஆம் ஆண்டில் ராமன் கல்கத்தாவில் இந்திய நிதி சேவையில் (Indian Finance Services) அரசுப் பணியில் சேர்ந்தார். அதுதான் அரசு வேலை கிடைத்துவிட்டதே என்று இருந்துவிடாமல் அறிவியலின் மீதுள்ள பற்றினால், தனது அரசாங்கப் பணிகளுடன் இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science) ஒளி விளிம்பு விளைவு மற்றும் இசைக்கருவிகளின் இயற்பியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவரது ஆராய்ச்சிகள் உலகளாவிய கவனம் பெறவே, 1917-ல் அவர் இந்திய நிதிச் சேவையில் இருந்த தனது பதவியைத் துறந்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள ராஜாபஜார் அறிவியல் கல்லூரியில் தாரக்நாத் பாலித் இயற்பியல் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் அவரது கற்பித்தல் பணி தொடங்கியது. 1926-ல் அவர் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ்’ என்ற இதழை நிறுவினார்; இது இந்தியாவில் இயற்பியல் ஆய்விதழ் வெளியீடுகளின் வளர்ச்சிக்குப் பங்களித்தது.
https://www.iacs.res.in/ijp/ijp_august_08_abstract.pdf

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நோபல் பரிசு பெரும் அளவிற்கு அவர் என்னதான் செய்தார்? ஒளியை வைத்து விளையாடினார். 1928 ஆம் ஆண்டில் ராமனும் அவரது மாணவர் கே.எஸ்.கிருஷ்ணனும் ஒளி அதன் அலைநீளத்தை விடச் சிறிய துகள்களைச் (particles) சந்திக்கும்போது, அந்த ஒளி வெவ்வேறு திசைகளில் சிதறுகிறது, என்பதைக் கவனித்தனர். உதாரணமாக, ஒளித் துகள்களான ஃபோட்டான்கள் ஒரு வாயுவில் உள்ள மூலக்கூறுகளைச் (molecules) சந்திக்கும்போது இது நிகழ்கிறது. 1928-ல் வெங்கட ராமன், சிதறிய ஒளியின் ஒரு சிறிய பகுதி அசல் ஒளியின் அலைநீளத்திலிருந்து வேறுபட்ட அலைநீளங்களைப் பெறுகிறது என்பதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம், வரும் ஃபோட்டான்களின் ஆற்றலில் ஒரு பகுதி ஒரு மூலக்கூறுக்கு மாற்றப்பட்டு, அதற்கு அதிக ஆற்றல் மட்டத்தை வழங்க முடியும்.
https://share.google/pKwVmju6J41l756E1

ராமன் விளைவின் பயன்பாடுகள் அறிவியல் மட்டுமல்லாத தொழில்துறை, பாதுகாப்புத் துறை எனப் பல்வேறு துறைகளில் விரிந்து வளர்ந்துள்ளன, முக்கியமாக ராமன் நிறமாலையியல் (Raman Spectroscopy) இதற்கு காரணம்.
பொருள் அறிவியலில் (Material Science), பொருள் பண்புகளை அடையாளம் காணவும், அசுத்தங்களைக் கண்டறியவும் மற்றும் படிக அமைப்புகளின் (crystal structure) பகுப்பாய்வு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. மருந்தியல் பகுப்பாய்வில் (Pharmaceutical Analysis) மருந்தியல் ஆராய்ச்சி மற்றும் தரக் கட்டுப்பாட்டிற்கு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தடயவியல் அறிவியலிலும் இழைகள் (fibers), வண்ணப்பூச்சுகள் மற்றும் மருந்துகள் போன்ற நுண்ணிய தடயங்களை அடையாளம் காணவும், அவற்றின் தன்மைகளை அறியவும் தடயவியல் விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
https://share.google/zAmncQTFUCnPSENG4

1933 ஆம் ஆண்டில், அவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) இயற்பியல் துறைக்குத் தலைமை தாங்குவதற்காக அங்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் ஆராய்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தியதுடன், ஹோமி ஜே.பாபா மற்றும் விக்ரம் சாராபாய் போன்ற எதிர்கால இயற்பியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். ஒரு வருடம் கழித்து, 1934 இல், அவர் இந்திய அறிவியல் கழகத்தை (Indian Academy of Sciences) நிறுவினார். IISc-யிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 1948 இல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தை (Raman Research Institute) நிறுவினார், அங்கு அவர் இயக்குநராகப் பணியாற்றினார். ராமன் உபயோகித்த ஆராய்ச்சிக் கருவிகள், இப்பொழுதும் அவர் பணி எடுத்த அதே அறையில் IACSன் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தகையச் சிறப்பு வாய்ந்த சர் சி.வி.ராமனைப் பெருமைப்படுத்தும் விதமாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
Reference:
https://www.nobelprize.org/prizes/physics/1930/raman/biographical/
https://www.britannica.com/biography/C-V-Raman
https://avantierinc.com/resources/application-note/applications-of-raman-spectroscopy/
https://khened.blogspot.com/2019/11/raman-his-spectrometer-and-city-of-joy.html#:~:text=The%20Raman%20Spectrometer%20had%206,developed%20and%20used%20this%20instrument.
நான் ‘ஹரிஷ் குருமூர்த்தி’, புதுக்கோட்டையில் எனது பள்ளிப் படிப்பை முடித்து, 2021 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை அறிவியல் (B.Sc.) பட்டம் பெற்றேன்.
2023 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் இயற்பியலில் முதுகலை அறிவியல் (M.Sc.) பட்டத்தை முடித்தேன்.
முதுகலை அறிவியல் படிக்கும்போதே 2023 ஆம் ஆண்டில் GATE தேர்வில் வெற்றிகரமாகத் தகுதி பெற்று, திருவனந்தபுரத்தில் உள்ள CSIR–NIIST (National Institute for Interdisciplinary Science and Technology) நிறுவனத்தில் திட்ட ஆய்வாளராகப் (Project Associate) பணிபுரிந்து மதிப்புமிக்க ஆராய்ச்சி அனுபவத்தைப் பெற்றேன்.
பிறகு ராஜஸ்தானில் உள்ள CSIR–CEERI (Central Electronics Engineering Research Institute) நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்று, பணிபுரிந்து வருகின்றேன்.







Leave a Reply