Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

அமெரிக்க அரசை விமர்சித்த மூன்று லெஸ்பியன் கைதிகளின் பேட்டி

Thadari.com ,
Thadari.com ,
February 1, 2026
அமெரிக்க அரசை விமர்சித்த மூன்று லெஸ்பியன் கைதிகளின் பேட்டி

1992 பிப்ரவரி நிறப்பிரிகையில் வெளியான பேட்டியைத் தடாரி மறுபிரசுரம் செய்கிறது.
குறிப்பும் மொழியாக்கமும் கவிதா. யார் இந்தக் கவிதா என்பதை அறிந்தவர்கள் தடாரிக்குத் தகவல் கொடுக்கவும். இப்பிரதியை நகலெடுக்க உதவிய ரோஜா முத்தையா நூலகத்திற்கு தடாரி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.


அமெரிக்கா என்றால் எப்படியிருக்கும்? “கலாச்சாரச் சீரழிவுடன், ஜன நாயகத்துடன், பின்பற்றத் தக்க சந்தைப் பொருளாதார அமைப்புடன் இருக்கும் முன்னேறிய நாடு” என்று தினமணி பதிலளிக்கலாம். இந்த தமாஷ்களை விட்டுவிட்டுப் பார்த்தால் அமெரிக்காவை அடையாளம் காண இந்த மொழிபெயர்ப்பு ஒருவேளை உதவலாம். அரசியல் கைதிகளுக்கான பிரத்தியேகமான லெக்ஸிங்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூஸன் தோஸன்பர்க், லிண்டா இவான்ஸ், லாரா வைட்ஹார்ன் என்ற மூன்று லெஸ்பியன்களின் பேட்டி. பேட்டி எடுத்தவர் யாரென்று தெரியவில்லை.
1988-ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இந்த மூவரும் உள்ளனர். “அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து, விமர்சித்து, மாற்ற முயன்றதற்காக” இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1983-85 காலகட்டத்தில் நடந்த அமெரிக்க இராணுவத் தளவாட நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற தலைமறைவு அமைப்புகளுடன் ‘’இவர்களுக்குத் தொடர்புண்டு” என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இந்த மூவருடன் ஆலன்பெர்க்மன், மரிலின் பக், டிம் ப்ளாக் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டரை சிறைவாசத்துக்குப் பின்பு அமெரிக்க அரசாங்கம் இவர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. சூஸன் தேராஸன்பர்க், டிம் ப்ளங்க், ஆலன் பெர்க்மன் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. 1985- ஆம் ஆண்டு கிரனடா மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்ததைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கத் தலைமைச் செயலகம் அருகில் வெடிகுண்டு வைத்த குற்றத்தை லாரா, லிண்டா, மரிலின் ஆகியோர் ஒப்புக் கொண்டு விட்டனர். இதனால், ஏற்கெனவே 70 வருடச் சிறைத்தண்டனை பெற்ற மரிலினுக்கு இன்னும் பத்து வருடங்கள் கடுங்காவல்; இன்னும் ஐந்து வருடங்கள் கடுங்காவலைச் சேர்த்து லிண்டாவுக்கு 40 வருடம் தண்டனை; லாராவுக்கு 20 வருடங்கள் கடுங்காவல்; சூஸன், டிம் ப்ளங்க் இருவருக்கும் வெடிகுண்டுகள் போ’லி’ அடையாள அட்டைகள், ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்துக்காக ஏற்கெனவே 58 வருடத் தண்டனை. ஆலன் பெர்க்மன் மட்டும் அடுத்த ஜூனில் விடுதலை செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

சூஸன், லிண்டா, லாரா பற்றிய சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இந்தக் குறிப்பும் மொழி பெயர்ப்பும் கவிதா. அமெரிக்கா போய்விட்டு வந்து பெண்நிலைவாதம் பற்றி இங்கே பேசுபவர்கள் மரபுரீதியாகப் பேசுவதால் இப்பேட்டியிலுள்ள பிரச்சனைகள் இன்னும் முக்கியமாகின்றன. நுண் – அரசியல் பற்றிய ஆய்வுகள் உட்பட அமெரிக்காவிலுள்ள பெண் அரசியல் கைதிகள் பற்றி அதிக விவரம் பெற விரும்புபவர்கள் எழுதுக. Women in Supprort of Political Prisoners, Box 565, Madison, Wi 53701. USA.
குறிப்புகள் : 

லிண்டா:

1947-இல் பிறந்தவர். 1967 முதல் அமெரிக்க ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர். அமெரிக்கா வியட்நாமில் செய்த யுத்தத்தை எதிர்ப்பதில் முன் நின்ற மாணவி. 1969 இல் வியட்நாமுக்குப் போய் போர்க் கைதிகள் பரிமாற்றத்தின் போது பார்வையாளராக இருந்தவர். தெரு நாடக இயக்கம், பெண்களுக்கேயான இசைக்குழு இயக்கம் ஆகியவற்றில் பங்கெடுத்தவர். பெண்கள் உரிமை இயக்கத்திலும் லெஸ்பியன் குழுக்களின் விவாதங்களிலும் பங்கெடுப்பவர். குக்ளக்ஸ் க்ளான் போன்ற வெள்ளை நிறவெறி அமைப்புகளை எதிர்த்து கறுப்பு இன, சிகானோ / மெக்ஸிகானோ இன அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டவர். சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்காகவும் அரசியல் கைதிகளின் மனித உரிமைகளுக்காகவும் போராடுபவர். 1985 மே 11, அன்று இவர் கைது செய்யப்பட்டார். தேடப்பட்டுவந்த ஒருவரைப் பாதுகாத்துப் புகலிடம் தந்ததற்காகவும் நான்கு துப்பாக்கிகளை போலி அடையாள அட்டை கொண்டு வாங்கியதற்காகவும் தண்டிக்கப்பட்டார்.

லாரா:

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகரச் செயல்பாடுகளில் கடந்த இருபது வருடங்களாக ஈடுபட்டுவருபவர். கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகவும் ப்யுர்டோ ரிக்கோவின் சுயநிர்ணய உரிமைக்காகவும் பெண்கள், தன்புணர்ச்சியாளர்கள் ஆகியோரின் போராட்டங்களிலும் களத்தில் நின்று வந்தவர். பாஸ்டன் நகரத்தில் கறுப்பின மக்கள் மீது நடத்தப்பட்ட வெள்ளை நிறவெறி அட்டகாசங்களை எதிர்ப்பதில் துணை நின்றவர். அமெரிக்க உள்நாட்டு உணவு- நிறுவனமான FBI-யின் ரகசிய நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர். 1975-இல் வியட்நாமுக்குச் சென்று வந்தவர். 1985-இல் கைது செய்யப்பட்ட இவர், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சூஸன்:1955 ஆம் வருடம் நியூயார்க்கில் பிறந்த இவர் பள்ளி நாட்களில் Black Panther கட்சியில் ஈடுபாடு காட்டிவந்தார். பின்பு வியட்நாமில் யுத்த எதிர்ப்பு மற்றும் பெண்கள் இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். 1976-இல் கியுபாவுக்குப் போய் அங்கே சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார். சீன மருத்துவ முறையான அக்குபங்ச்சரை முறையாகக் கற்று மாற்று மருத்துவராகப் பணிபுரிந்தார் 1985-இல் கைது செய்யப்பட்டார்.

பேட்டி

கேள்வி:

நானும் களச்செயலில் ஈடுபடும் ஒரு பெண்தான். ஆனால் இதுவரை உங்களில் யாரைப்பற்றியும் கேள்விப்பட்டதே இல்லையே!

லிண்டா:

‘அமெரிக்காவில் அரசியல் கைதிகள் கிடையாது” என்று அரசாங்கம் அடிக்கடி கூறிவருகிறது. எங்கள் செயல்பாடுகளுக்கான அரசியல் நோக்கங்களை இந்த அரசாங்கம் அங்கீகரிப்பதில்லை. மேலும் நாங்கள் சார்ந்துள்ள இயக்கங்கள், அமைப்புகளுக்கான அரசியல் – சமுதாய அடிப்படைகளையே இந்த அரசாங்கம் மறுத்து வந்துள்ளது என்பதை உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, இந்தச் சிறையின் கட்டமைப்பைப் பாருங்கள்: இங்கேயுள்ள அரசியல் கைதிகளைச் சந்திக்க அவர்களுடைய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அனுமதி கிடையாது. அரசியல்-கைதிகளின் அறைகள் அடிக்கடி மாற்றப்படும்; கடிதங்கள் தணிக்கை செய்யப்படும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனிமைச் சிறையிலும் நாங்கள் அடைக்கப்படுகிறோம். இந்தச் சூழ்நிலையில் வாழ்கிற எங்களைப் பற்றி நீங்கள் தெரிந்திராதது ஆச்சரியமல்ல. அதே சமயத்தில் நமது இயக்கங்கள் அரசியல் கைதிகள் பற்றிக் கவலைப்பட்டதில்லை என்பதையும் இங்கே கூறியாக வேண்டும். இதற்குக் காரணம் நிறவெறி என்றுதான் கூறுவேன். அமெரிக்காவின் பெரும்பான்மையான அரசியல் கைதிகள், போர்க் கைதிகள் எப்போதுமே கறுப்பு இனத்தவராகவோ ப்யுர்ட்டோ ரிக்கோ இனத்தவராகவோ இருந்து வந்துள்ளனர். பத்துப் பதினைந்து வருடங்களாக அடைத்துவைக்கப்பட்டுள்ள இவர்களைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை என்றால் அதற்கு நிறவெறிதானே
காரணம்? வெள்ளை இனத்தவர்களில் முற்போக்காளர்களாக இருப்பவர்கள் கறுப்பின மக்களின், ப்யூரர்ட்டோ ரிக்கோ இனமக்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்ததில்லை. இது வருத்தத்தக்க விஷயம்.

அரசியல் கைதிகளுக்குத் தாங்கள் வழங்கிவந்த ஆதரவைப் பலர் வாபஸ் பெற்றுக் கொண்டு-விடுகிற சூழல் இப்போதிருக்கிறது. இதற்குக் காரணம் செயல்பாடுகள் குறித்து நம்மிடையே இருக்கிற வித்தியாசங்கள்தான். இப்படி ஆதரவு வாபஸ் பெறப்படுவதால் தமக்கிடையே பொய்யான முரண்பாடுகள் தோற்றவிக்கப்பட்டு அதனால் அரசியல் கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு விடுகின்றனர். நாம் அனைவரும் சமுதாய மாற்றத்துக்காகவும் வெகுஜன- நீதிக்காகவும் போராடுகிறோம் என்கிற பட்சத்தில், நமக்கிடையிலான வித்தியாசங்கள் தந்திரோபாய ரீதியானுவை (Tactical) மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

லாரா :

நாட்டின் சிறைகளில் யார், யார் எதற்காக இருக்கிறார்கள் என்பது பற்றி இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் வெகு காலமாகவே கவலைப்பட்டதில்லை. இப்படிக் கவனிக்கப்படாமல் போயிருப்பவர்களில் அரசியல் கைதிகளும் போர்க்கைதிகளும் அடக்கம்.

உதாரணமாக, எய்ட்ஸ் பற்றிய விழிப் புணர்ச்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் உங்களில் ஒருவருக்கு எய்ட்ஸ் கைதிகள் பற்றி ஏதாவது தெரிய வாய்ப்பிருக்கிறதா? கிடையாது, சிறையின் சுகாதார நிலைமைகள்பற்றி ஏதாவது தெரியுமா? கிடையாது Gay Community News பத்திரிகையின் மைக் ரீகில் ஒருவரைத்தவிர எத்தனை பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் சிறைப்பக்கம் வந்து இங்குள்ள கைதிகளில் தன்புணர்ச்சியாளர்கள் படுகிற கொடுமைகளை எழுதியிருக்கிறார்கள்?

இந்த நாடே அடைக்கப்பட்டிருக்கிற கைதிகளை மறக்க முயற்சித்து வருகிறது என்பேன். அரசியல் கைதிகளைப் பற்றிய மறதியோ இன்னும் பன்மடங்காக இருக்கிறது! இதற்கெல்லாம் காரணம், எங்களைப் போன்றவர்கள் இந்த அமைப்பை நடுங்க வைப்பவர்களாக இருப்பதுதான். நாங்கள் யார் என்று வெளியில் தெரியாமல் செய்வதில் இந்த அரசு – அமைப்பானது மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. “குற்றவாளிகள், பயங்கரவாதிகள்” என்றெல்லாம் நாங்கள் அழைக்கப்படுவதும் இதனால்தான்.

சூஸன் :

இப்போது களச்செயலில் ஈடுபடவிரும்பும் உங்களைப் போன்றவர்கள் கடந்த இருபது ஆண்டுகளின் எதிர்ப்பு பற்றிய வரலாற்றை (History of resistance) மீட்டெடுக்க வேண்டிய தேவையை உங்கள் கேள்வி சுட்டுகிறது. மேலும், பேசப்படுகிற விஷயங்களாக முக்கியத்துவம் பெறுவது எவைஎவை என்பதை அரசாங்கமும் வெகுஜனத் தொடர்பு சாதனங்களும் தீர்மானம் செய்துகொண்டிருக்கும் வரை எங்களுடைய போராட்ட அனுபவங்கள் எல்லாமே தொலைந்து போய்விடுகிற அபாயம் இருந்துகொண்டுதான் இருக்கும்!

எங்களை மக்கள் இன்னும் கேட்கிற நிலை உருவாகவில்லை. எங்கேயாவது செய்தித் தலைப்பு ஒன்றில் படித்திருப்பார்கள், அவ்வளவுதான்!… சிறையில் அடைக்கப்பட்ட புரட்சிவாதிகளைப் பற்றிய செய்திகள் வெளிவராமல் இருப்பதில் அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது; அரசாங்கத்தின் இந்தச் செயல்பாட்டை ஓர் எதிர்ப்புரட்சி உத்தியாகக் கொள்ளலாம். உதாரணமாக, ஆறுவருடங்களாக அவ்வப்போது சிறையில்தான் இருந்திருக்கிறேன். இதில் பாதிநாள் தனிமைச் சிறைதான். சிறைச்சாலைக்கு என்னுடைய உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி வர முடியாது. அவர்கள் வசிக்கிற இடத்திலிருந்த இச்சிறைச்சாலை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் இருப்பதுதான் இதற்குக் காரணம். அமெரிக்காவிலுள்ள முக்கிய அரசியல் கைதிகளான 100-150 பேரின் அனுபமும் இப்படித்தான். இப்படி அரசியல் கைதிகளைத் தனிமைப்படுத்தி அழிப்பது, இக்கைதிகள் சார்ந்துள்ள அரசியல் இயக்கங்களின் அடிப்படைகளையே கரைத்துவிடுவது என்பதுதான்.

கேள்வி :

உங்கள் குற்றங்களாகக் கூறப்படும் செயல்களில் நீங்கள் ஈடுபட்டீர்களா? ஆம் என்றால் அதற்கான காரணம் என்ன என்று கூறுவீர்களா?

லிண்டா :

அமெரிக்காவில் புரட்சி ஒன்று தோன்றுவதற்காகவும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்காகவும் என்றும் நான் ஆதரவு அளிப்பேன். அவ்வித ஆதரவை அளிக்க விழைகிற ஆயுதரீதியான இயக்கத்தில் பங்குபெற்றேன் என்பதைச் சொல்லிக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன். ஆனால் இந்த அரசாங்கம் எங்கள் செயல்பாடுகள் அத்தனையையும் தீர்த்துக்கட்டியது. அதற்காக எங்களை ‘’பயங்கரவாதிகள்” என்று பெயர் சூட்டி அழைத்தது; ”எங்கள் நோக்கமும் செயல்பாடுகளும் மக்களைக் கொல்வதுதான்” என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது; சமுதாயத்துக்கோ நாங்கள் எதிரிகள் என்று சொல்லிப் பார்த்தது.

இதற்கெல்லாம் மாறாக, கடந்த இருபது ஆண்டுகளாக எங்கள் இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் பிடிபடும் : இந்தச் செயல்கள் அத்தனையுமே மனித உயிர்களைக் கொல்வதைக் கூடியவரையில் தவிர்த்தே இருந்துவந்துள்ளன: ஆனால் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பாருங்கள் : உலகெங்கும் கூலிப்படைகளையும் சாவுக்குழுக்களையும் ஊக்குவிப்பதுதான் இந்தப் பயங்கரவாத அரசாங்கத்தின் முக்கியப் பணி. நிகரகுவாவில் காண்ட்ராக்கள், அங்கோலாவில் யுனிட்டா (UNITA) அமைப்பு பாலஸ்தீனர்களை வதைக்கும் இஸ்ரேல் அரசாங்கம்… இப்படி எல்லோருக்கும் அமெரிக்க அரசாங்கம் உதவி செய்யவில்லையா! இதுதவிர இங்கேயுள்ள கறுப்பு இன மக்களின் மீதான, மூன்றாம் உலக நாட்டுமக்களின் மீதான தினசரி போலீஸ் ஒடுக்குமுறை நடக்கவில்லையா! 1985இல் (MOVE) என்ற ஃபிலடெல்ஃபியாவிலுள்ள கறுப்பு இன மக்களின் குடியிருப்பின்மீது இந்த அரசாங்கம் விமானத்தாக்குதல் நடத்தி அதில் 11 பேர் இறந்துபோனது நினைவில் இல்லையா!

லாரா :

நாங்கள் செய்ததாக அரசாங்கம் அறிவித்த விஷயங்கள் கட்டுக்கதைதான். ஆனாலும் நிறவெறி, பாலியல்-ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியம் ஆகியவற்றை அதீதமான எனது இந்த உடலின் ஒவ்வொரு திசுவும் எதிர்த்துக்கொண்டுதான் இருக்கும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை “நீதி” என்பது அவர்களின் ஏகபோக விஷயமாகும்; புரட்சிகரச் செயல்பாடுகள் எல்லாமே அவர்களுக்கு ‘பயங்கரவாத வன்முறை” யாகவே தெரியும்.

சூஸன்:

இன்றைய ன்றைய பல பிரச்னைகள் அமைப்புரீதியானவை என்றுதான் கருதுகிறேன். இந்தச் சமுதாய அமைப்பை மாற்றி இதிலிருந்து மீள்வதற்கு நானும் சரி, பிறரும் சரி, பல்வேறுவகையான வழிமுறைகளைக் கையாண்டு பார்க்கிறோம். இங்கேதான் அரசு என்கிற அமைப்பை எதிர்க்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறோம்.

என்னைப் பொறுத்தவரை 1960களில் சமாதான ஆர்வலராகவும் (Peace activist)1970 களில் அரசியல் ஈடுபாட்டுடனும் 1980களில் வளர்ந்துவந்து கொண்டிருந்த தலைமறைவு எதிர்ப்பு இயக்கத்தில் பங்குபெற்றும் இருந் துள்ளேன். என் வாழ்க்கை பூராவுமே இப்படிப் புரட்சிவாதியாகவே கழித்திருக்கிறேன். ஆக, ஏகாதிபத்தியத்தைப் புரட்சிகர ரீதியில் எதிர்த்த குற்றத்தை எப்போதுமே நான் செய்து வந்துள்ளவள்தான்.

அரசாங்கம் எங்களைப் போன்றவர்களைப் பற்றிய பொய்யான பிரச்சாரத்தைச் செய்து வருகிறது. “எங்களைப் பயங்கரவாதிகள்’’ என்று முத்திரை குத்த முயல்கிறது. ஆனால் உண்மையில் நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். 1950களில் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் என்பது எப்படி ஒரு கெட்டவார்த்தையாக ஆக்கப்பட்டதோ அதைப்போல இன்று 1980-90களில் “பயங்கரவாதி” என்ற வார்த்தை வருகிறது. அமெரிக்க அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பல்வேறுவகையான ‘பயங்கரவாதிகள்” இருக்கிறார்கள்! இதெல்லாம் உண்மைதானா என்பதை நீங்களே பரிசோதித்துக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விக்கான நேரடியான பதிலை நான் சொல்லவில்லை என்று நினைக்க வேண்டாம். சிறையில் அடைக்கப்பட்ட புரட்சிவாதி யாருமே தனது புரட்சிகரப் பணிகள் பற்றிய எல்லா விவரங்களையும் கூறமாட்டார் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா!

கேள்வி :

நமது “எஜமானர்களின் வீடாகிய அரசு – அமைப்பை: அதே “எஜமானர்களின் கருவியாகிய” வன்முறையால் தகர்க்கமுடியாது என்று கூறுகிறார்கள்! ஆக, வன்முறை என்பதுபற்றிய உங்களுடைய நிலைப்பாடுதான் என்ன?

லிண்டா :

வன்முறை தொடர்பான இக்கேள்வி அமைக்கப்பட்டுள்ள விதத்திலேயே பிரச்னை இருக்கிறது. இங்கே பிரச்னை வன்முறை பற்றியது மட்டுமல்ல; பிரச்னையானது இங்கே அரசியல் மற்றும் அதிகாரத் தொடர்பானது. உலகெங்கும் ஏகாதிபத்தியம் தனது இராணுவபலத்தைக் காட்டியே தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது; எங்கெல்லாம் மக்கள் சமுதாயமாற்றத்துக்காகப் போராடுகிறார்களோ அங்கெல்லாம் வன்முறையைக் கிளப்பிவிட்டு ஏகாதிபத்தியம் மிரட்டுகிறது. இந்தச் சூழ்நிலையில் மக்களை ஒடுக்கிக் கொல்லுகிற அமைப்பைத் தோற்கடிக்க எல்லா வழிமுறைகளும் பயன்படுத்தப்பட்டாக வேண்டும். இங்கே போராட்டம் என்பதே தற்காப்புப் போராட்டம்தான்; அதிகாரத்துக்காகவும் சுயநிர்ணய உரிமைக்கானதுமான போராட்டம்தான்.

ஆக, “வன்முறை” என்பது வெறும் வழிமுறை குறித்த பிரச்னையல்ல; வெறும் உத்தி சார்ந்த பிரச்சினை அல்ல. இப்படிப் பிரச்னையைக் குறுக்கினால் புரட்சிகர இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பி விடுவதற்கான சாத்தியக் கூறுகளை நம்மால் பார்க்கவே முடியாது. மக்கள் – அமைப்புகளைக் கட்டி ஒடுக்கப்பட்ட மனிதக்குழுக்கலான அதிகாரத்துக்கான போராட்டத்தை நடத்துவதற்கான திட்டத்தைத் தயாரித்து, மக்களை அதற்கான பணியில் ஈடுபடவைப்பதிலுள்ள பிரச்னைகளை நம்மால் பார்க்கவே முடியாது.

சீனப்புரட்சியின் முழக்கம் ஒன்றுதான் இங்கே நினைவுக்கு வருகிறது:

“வெகுஜனப் போராட்டம் இல்லாமல் புரட்சி என்பதில்லை
ஆயுதப் போராட்டம் இல்லாமல் வெற்றி என்பதில்லை.”

லாரா :

“வன்முறை” என்பதை ஒரே வகையானது என்று கூறமுடியாது. எனவே அது ”எஜமானர்களுடைய கருவியாக” மட்டுமே கருதப்படமுடியாது. அதே சமயத்தில் அமெரிக்க அரசாங்கத்தைப் போலவே மனித உயிர்களைப் பற்றி புரட்சியாளர்களும் கவலைப் படாமலிருந்தால் அது தவறு என்பதையும் சொல்ல விரும்புவேன். ஒடுக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காக “வன்முறை” உட்பட்ட பல வழிகளில் போராட முற்பட்டால் அதை ஆதரிப்பது நமது கடமையாகும்.

‘வன்முறை’ பற்றிக் கேட்கும் உங்களுக்கு ஓர் எதிர்க்கேள்வி : அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகள் தமது எஜமானர்களைக் கொன்றுபோட்டதை ”வன்முறை’ என்று கூறி நீங்கள் எதிர்ப்பீர்களா? எனவே நமது விடுதலைக்காக நாம் எவ்வாறு மனிதாபிமானத்துடன் போராடுகிறோம் என்பது மட்டுமே இங்கு முக்கியம். நமது போராட்ட வழிமுறைகள் பற்றியும், இலக்கு பற்றியும் விமர்சனரீதியாக இருக்கவேண்டியது மிக அவசியம். அதே சமயத்தில் வெற்றியை நோக்கி நமது போராட்டம் இருக்க வேண்டும் என்றால் அதிகாரத்தை நோக்கியதாக அது அமைய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குச் சாட்சியாக நான் இருந்து வந்திருக்கிறேன். இந்தச் சூழ்நிலையை மாற்றங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எங்களைப் பற்றிப் பேசியாக வேண்டியிருக்கிறது. இதற்காகத்தான் அரசியல் கைதிகளுக்கு வெளியிலிருந்து ஆதரவு கோருகிறோமே ஒழிய, இதர கைதிகளிலிருந்து வித்தியாசமான வர்க்கமாக நாங்கள் எங்களைக் கூறிக்கொள்ளவில்லை!

லாரா :

அமெரிக்கச் சிறைகளில் அரசியல் கைதிகளாகிய நாங்கள் எங்களுக்கும் இதர கைதிகளுக்கும் தீர்க்க முடியாத முரண்பாடு எதையும் வளர்த்தோம் என்று நீங்கள் கூற முடியாது. எல்லா விதமான கைதிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட்டாக வேண்டும். அதேசமயத்தில் முற்போக்கு இயக்கங்கள் சமுதாயத்தில் கொடுமையாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசியல்கைதிகளின் பாதுகாப்பும் விடுதலையும் மிக முக்கியமாகின்றன. நிறவெறியை எதிர்க்கும் நீங்கள் அதனை எதிர்த்துச் சிறைக்குப்போன ஒருவரை நிச்சயம் ஆதரித்தாக வேண்டும். அப்படி ஆதரிப்பதன் மூலம் நிறவெறி எதிர்ப்பு என்கிற கொள்கையை, செயல்பாட்டை நீங்கள் வளர்த்தெடுக்கிறீர்கள். அரசியல்கைதிகளை ஆதரிப்பதன் மூலம் சமுதாய நிலைமைகளை அம்பலப்படுத்த நீங்கள் ஒத்துழைக்கிறீர்கள். அரசியல்கைதிகள் என்று துவங்கி எல்லாக் கைதிகள் பற்றியும் கவலைப்படுவதாக நீங்கள் மாறிவிட முடிகிறது என்றால் அதற்கு அறிவு உற்பத்திதான் காரணம். சிறைகள் பற்றிய விழிப்புணர்ச்சி வெளியில் ஏற்பட நீங்கள் உதவுகிறீர்கள்.

சூஸன் :

எல்லாக் கைதிகளுக்கும் ஆதரவு என்பது தேவைதான். இதன்மூலம் சிறை என்கிற இடம் போராட்டத்துக்கான களமாக மாறுகிறது, சிறை- அமைப்பு மூலமாக மனிதர்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் அம்பலப்படுத்தப்படுகிறது.

அரசியல் கைதிகளான எங்களுக்குக் குறிப்பிட்ட அரசியல்ரீதியான, சமுதாயரீதியான இலக்குகள் உண்டு என்பதால் எங்களுக்கு ஆதரவு அளிக்கப்படுவது முக்கியமாகிறது. எங்களுக்குச் சுதந்திரம் கிடையாது என்பது உங்களுடைய சுதந்திரம், சுதந்திரமின்மைக்கு ஓர் அளவுகோலாகும். எங்களை இன்று அழிக்கிறார்கள்; நீங்கள் நாளை அழிக்கப்படலாம்.

கேள்வி :

லெஸ்பியனாக நீங்கள் இருப்பது உங்கள் அரசியல் செயல்பாடுகளை எந்தெந்த விதத்தில் பாதிக்கிறது?

லிண்டா :

ஒரு புரட்சிவாதியாக நான் இருப்பதற்கான பல காரணங்களில்தான் லெஸ்பியனாக இருப்பதும் ஒன்று, இதைப் பற்றி முன்பு அவ்வளவு பிரக்ஞையோடுதான் இருந்ததாகக் கூற முடியாது.

“லெஸ்பியனாக இருப்பது’ என்பதை என் வாழ்க்கையின் இதர விஷயங்களிலிருந்து நான் பிரித்துப் பார்க்கவில்லை. லெஸ்பியனாகவும் பெண்ணாகவும் நான் இருப்பதாலேயே, அவ்வாறு இருப்பதால் நான் அனுபவித்துவருகிற கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை உணர்வதாலேயே எல்லாப் பெண்களுக்கும் லெஸ்பியனுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேண்டும் என்று நிச்சயமாகக் கூறுவேன். இவ்வித ஒடுக்கு முறைகளற்ற எதிர்காலச் சமுதாயம் உருவாக வேண்டும் என்ற லட்சியம் எனக்குண்டு மேலும் ஒரு லெஸ்பியனாக இருப்பதாலேயே ஒடுக்கப்பட்ட இதர மக்களின் அமைப்புகளுடன் இணக்கம் கொண்டு இயங்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்துள்ளேன். இவ்வாறு இணையும்போது இதற்கான கூட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளும்போதும் நிறவெறி, பாலியல் ஒடுக்குமுறை மற்றும் எதிர்ப்பால்புணர்ச்சி மேலாதிக்கம் (heterosexual hegemony) ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இவ்விதக் கூட்டமைப்புக்கள் தேவை என்பதை நான் உணர்ந்துள்ளேன். ஏனென்றால், ஏகாதிபத்தியம் நமது பொது எதிரியாக இருக்கிறது அல்லவா! மேலும் இவ்விதக் கூட்டமைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளும்போது நமது இயக்கங்களின் தனித்தன்மை பேணப்படவும் வேண்டும்.

லாரா :

லெஸ்பியனாக இருப்பது என் வாழ்க்கையின் முக்கிய அம்சம். லெஸ்பியனாக இருப்பதாலேயே பாலியல் – ஒடுக்குமுறையை நான் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தேன். மேலும் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் இதர மக்கள் தொகுதியினரின் துன்பத்தையும் என்னால் உணர முடிவதற்கும் நான் லெஸ்பியனாக இருப்பதே காரணம்.

லெஸ்பியனான எனக்குச் சிறைவாழ்க்கை என்பது மிகவும் சிரமமான காலகட்டமாக இருக்கிறது. ஆனால் லெஸ்பியனான நான் அதை வெளிப்படையாக அறிவித்திருப்பது எனக்கு அதிக மனோபலத்தை அளித்துள்ளது தன்புணர்ச்சியாளர்கள் சிறையில் மேற்கொள்ளும் போராட்டங்களைக் கண்டும் கேட்டும் நான் பெருமையடைகிறேன்.

சூஸன்:

லெஸ்பியனாக இருப்பதை அண்மையில்தான் நான் வெளியிட்டேன். இதற்குக் காரணம் தன்புணர்ச்சியாளர்களாகிய எங்களுக்குப் புரட்சிகர லட்சியங்கள் தேவை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். பாலியல் ஒடுக்குமுறைக்கும் இதர ஒடுக்குமுறைகளுக்கும் உள்ள தொடர்புகளைப் பேணிக் கொணர்வதில் நாங்கள் இப்போது ஈடுபடுகிறோம்.

லெஸ்பியனாக இருப்பதை நான் வெளியிட்டதற்குக் காரணம், எனக்கு மிகவும் நெருங்கிய, முக்கியமான தோழிகளாக இருப்பவர்கள் எல்லோருமே சிறையில் அடைக்கப்பட்டுத் துன்பமடைந்ததுதான். லாராவும் லிண்டாவும் எனக்கு முன்பே வெளியிட்டு விட்டார்கள். அவர்கள் லெஸ்பியன்களாக இருப்பதை அறிவித்துவிட்டது என்னைப் போன்ற பலருக்கும் ஆதரவாக அமைந்தது.

கேள்வி:

நீங்கள் பணியாற்றி வந்துள்ள குழுக்களிடையே உள்ள பாலியல்-ஒடுக்குமுறையையும் எதிர்ப்பால்புணர்ச்சி மேலாதிக்கத்தையும் எவ்வாறு எதிர்த்துப் போராடி வந்துள்ளீர்கள் என்பதை விளக்க முடியுமா?

லாரா :

தன்புணர்ச்சியாளர்களின் விடுதலை என்பது வார்த்தைகளின்றி உண்மையான லட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக நான் போராடி வந்திருக்கிறேன். பாலியல் – ஒடுக்குமுறை மற்றும் எதிர்ப்பால்புணர்ச்சி மேலாதிக்கம் ஒருவரிடம் தென்படுகிறதோ அவரை நேரடியாகக் கேள்வி கேட்டு மடக்குவதன் மூலமே இது சாத்தியமாகிறது. இந்தமாதிரிச் செய்யாமல் நான் பணியாற்றிய குழுக்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்…

எனக்கென்னவோ போராடவேண்டிய விஷயங்களுக்கான பிரத்தியேகமான ‘லிஸ்ட்’ ஒன்றை வைத்துக்கொள்ளாமல் பல்வேறு விஷயங்களுக்காக ஒரே சமயத்தில் போராடுவதே சரி என்று தோன்றுகிறது. ஆக, பாலஸ்தீன விடுதலையையோ ப்யூர்ட்டோ ரிக்கே இன விடுதலையையோ இலக்காக வைத்துப் போராடுகிற அமைப்புக்களுடன் இணைவதற்கு நான் எப்போதுமே தயாராக இருப்பேன். பெண்கள் மற்றும் லெஸ்பியன்களின் விடுதலை போல இவையும் முக்கியமானவை தானே! என்னுடைய விடுதலையை ஒவ்வொரு போராட்டத்தின் வேலைத்திட்டத்திலும் இருந்தாக வேண்டும் என்று நான் எப்போதுமே கூறிக் கொண்டிருக்க முடியாது. அதே சமயத்தில் என்னுடைய தனித்துவத்தையும் எனது சுயமரியாதையையும் லெஸ்பியன்கள், பெண்கள் விடுதலைக்கான உடனடித்தேவையையும் நான் வலியுறுத்திக் கொண்டே இருப்பேன்.

சூஸன் :

கடந்த சில வருடங்களில் பெண் நிலைவாதம் பற்றிய தெளிவான பார்வை எனக்கு உண்டாகியிருக்கிறது. இக்காலகட்டத்திலேயே பெண்நிலைவாதியாக தான் மாறியதாக உணர்கிறேன். கடத்தகாலகட்டத்தில் பெண்கள் மற்றும் தன்புணர்ச்சியாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக சரிவரப் போராட்டங்கள் நடத்தப்பெறவில்லை என்றே கூறுவேன், அரசியல் போராட்டங்களின் போது, ‘பெண்’, ‘லெஸ்பியன்’ என்ற எனது ஆளுமையை, தனித்துவத்தைப் பல சமயங்களில் தான் விட்டுக் கொடுத்திருப்பதை உதாரணமாகக் கூறமுடியும். நிகராகுவாவில் சாண்டினிஸ்டா அமைப்பிலுள்ள பெண்கள் பலர் புரட்சியின்போது தமது இலட்சியங்களை “சமூகத்தன்மைக்காக” விட்டுக்கொடுத்துவிட்டு இப்போது அதைப்பற்றி மறுபரிசீலனை செய்துகொண்டிருக்கின்றனர். இப்படி விட்டுக் கொடுத்ததால் இன்றைய நிகரகுவாவில் பெண்களுக்குப் புதிய பிரச்னைகள் கிளம்பியுள்ளன. இன்று அங்குள்ள புரட்சி-உணர்வற்ற சமுதாயத்தில் கருச்சிதைவைச் சட்டரீதியாக்கும் போராட்டம் பின்தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போக்கை எதிர்க்கும் அளவுக்குப் பெண்களுக்கு அங்கே விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. ஆக, பெண்களின் கோரிக்கைகளையும் தன்புணர்ச்சியாளர்களுடைய கோரிக்கைகளையும் “சமூக மாற்றத்துக்கான” போராட்டத்துக்காக விட்டுக் கொடுப்பது என்பது தவறு என்றே தெரிகிறது.

கேள்வி :

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று உள்களுக்குத் தோன்றியது ஏன்?

லிண்டா :

துவக்கத்தில் ஒரு சமாதானப் பிரியையாக போர் – எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தேன். அகிம்சாரீதியாகவே இந்தச் சமுதாயம் மாறும், மாறமுடியும் என்று பகற்கனவு கண்டுகொண்டிருந்தேன். பென்டகன் (Pentagan) அருகே நடத்தப்பெற்ற போராட்டத்தில் எனக்குச் சரியான தடியடிவீச்சும் கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சும் கிடைத்தது.

அப்போதுதான் இந்தச் சமுதாய – அமைப்பு வன்முறையைக் கொண்டே ஒவ்வொரு தளத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கட்டமைத்துக் கொள்கிறது என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. போருக்கு எதிர்ப்புக் காட்டுபவர்கள் அடிக்கப்படுவதையும் வெள்ளையற்ற நிற-இன மக்கள் இங்கே ஒடுக்கப்படுவதையும் கொலை செய்யப்படுவதையும் வியட்நாமில் மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் நடத்திய போரையும் இணைத்துப்பார்க்க முடிந்தது. இதற்கெல்லாம் எதிராக கறுப்பு இன, வியட்நாமியப் பெண்கள் நடத்திய போராட்டத்தின்மூலம் அவர்களுக்குக் கிடைத்த மனோபலம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. அப்படித்தான் எனக்கு ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வந்தது. மால்கம் எக்ஸ், சேகுவாரா, ஹோசிமின் போன்றவர்களின் எழுத்துக்களும் செயல்களும் எனது ஆர்வத்தை இன்னும் தூண்டின. Black Panthers கட்சி அலுவலகத்தின்மீதும் அக்கட்சி உறுப்பினர்கள் மீதும் அமெரிக்கப் போலீசார் நடத்திய தாக்குதல்களைக் கண்டு இன்னும் ஆத்திரமடைந்தேன். இந்த அமைப்பை நிலைகுலையச் செய்கிற எந்த ஒரு போராட்டத்தின் மீதும் அமெரிக்க அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவிவிடுவதைப் பார்த்தேன்; புரிந்து கொண்டேன்: இதன்மூலம் எங்களையும் எங்கள் தோழர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான அவசியத்தைப் புரிந்துகொண்டேன்.

லாரா :

1970 களில் கறுப்புஇன மக்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களைப் பார்த்தபின்பே நான் ஆயுதப்போராட்டத்தின் ஆதரவாளராக மாறினேன். Black Panther கட்சித் தலைவர் ஃப்ரெட் ஹாம்படன் கொலை செய்யப்பட்டதும் என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது. அமெரிக்க அரசாங்கம் இங்கே ஒடுக்கப்பட்டுள்ள இனங்களுக்கு மனித உரிமைகளை ஒருபோதும் வழங்காது என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். மேலும் போராட்டம் என்பது வெற்றியை இலக்காக வைத்து இயங்கவேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகள் பல்வேறுவகைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் அப்போது புரிந்து கொண்டேன்.

சூஸன் :

கறுப்பு இன மக்களின்மீது இந்த அமைப்பு தொடுத்துள்ள வன்முறையை, குறிப்பாக நியூயார்க் நகரத்திலுள்ள தெற்கு ப்ராங்க்ஸ் (South Bronx) பகுதியில் அரசாங்கம் செய்த இரசாயன இனக்கொலையைச் சாட்சியாக இருந்து பார்த்து வருகிறேன். அக்குபங்ச்சர் மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன், இங்கே கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடிய நோய்களை எங்களால் எதிர்த்துப் போராடமுடியாமல் போயிற்று. இதையெல்லாம் பார்த்தபின்புதான் ஆயுதப்போராட்டத்தின் தேவையை உணர்ந்து கொள்ள என்னால் முடிந்தது.

கேள்வி: சிறையில் உங்கள் தினசரி வாழ்க்கை எப்படி?

லிண்டா :

வேலை, உடற்பயிற்சி, வேலை, உடற்பயிற்சி,வேலை…

லாரா:

சிறைச் சூழ்நிலைகளை மாற்றுவதற்கான தினசரிப் போராட்டம் எப்போதும் இருக்கிறது. எனது அரசியல் மற்றும் சட்டரீதியான பணிகளும் உண்டு. இவை தவிர எனது நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவேன். இதர கைதிகளுடன் பேசுவதும் பிரச்னைகளை விவாதிப்பதும் நிச்சயமாக உண்டு. உண்டு. எனது தோழர் ஆலன் பெர்க்மன் இப்போது கான்ஸர் நோயால் அவதிப்படுகிறார்; சங்கிலியால் படுக்கையுடன் கட்டிப்போடப்பட்டுள்ள அவரைப் பற்றிய செய்தியைச் சேகரிப்பேன். பிற பெண் கைதிகளுடன் எய்ட்ஸ் நோய் பற்றி விவாதிக்கிறேன். இங்குள்ள பெண் கைதிகளில் பாதிப் பேருக்கு HIV + என்று பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது; இருந்தாலும் எய்ட்ஸ் பற்றி இங்கே எந்தவிதக் கல்வியும் மருத்துவ ஆலோசனையும் கிடையாது என்றால் இங்கே நிலைமை எவ்வளவு மோசம் என்று நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

சூஸன் :

அக்குபங்ச்சர் மருத்துவர் என்ற முறையில் என்னிடம் மருத்துவ ஆலோசனை கேட்க ஏகப்பட்ட பேர் வருகிறார்கள். குறிப்பாக எய்ட்ஸ் பற்றிக் கேட்பார்கள். இந்தச் சிறை நிர்வாகத்தினர் எங்களை அடைத்தே வைத்திருக்கிறார்கள் என்பதால் மருத்துவ ஆலோச னையை முழுமையாக வழங்க முடியவில்லை.

கேள்வி :

நீங்கள் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் உங்களுக்குச் சிறையில்
பிரத்தியேக உரிமைகள் இருக்கின்றனவா? இந்தப் பிரச்னையை எப்படி எதிர் கொள்
கிறீர்கள்!

லிண்டா :

வெள்ளை இனத்தவர் என்ற முறையில் எனக்குக் கிடைத்துள்ள கல்வி, அறிவு ஆகியவற்றை மற்ற கைதிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையைப் புரிந்து கொண்டேன். குறிப்பாக, எய்ட்ஸ் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. பிற இனக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் போராடுவற்காகவும் எனது அறிவு பயன்படுகிறது. அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி, மன நலம் ஆகியவற்றுக்காக அடிக்கடி போராடுவதற்கு எனது கல்வியும் அறிவும் பயன்படுகின்றன.

லாரா :

நிறவெறியை எதிர்த்துப் போராடுவதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. எய்ட்ஸ் நோய் பற்றிய அறிவு எனக்கிருப்பதால் அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்கிறேன்.

சூஸன் :

நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடுகிற வெள்ளை-இனத்தைச் சேர்ந்த நான் பிற இனத்தவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பதைச் சிறையில் புரிந்து கொண்டேன். நிறையப் பொறுமை- கேட்பதில்தான்-எனக்கு வந்திருக்கிறது!


 

Thadari.com ,
Thadari.com ,
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    May 1, 2026
  • தூக்கிடல்

    தூக்கிடல்

    May 1, 2026
  • ஹிம்சானா கவிதைகள்

    ஹிம்சானா கவிதைகள்

    May 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 5

    May 1, 2026
  • கே. கணேஷ்ராம் கவிதைகள்

    கே. கணேஷ்ராம் கவிதைகள்

    May 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (20)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (107)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)

Archives

  • May 2026 (20)
  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    இன்கா நாடோடிக்கதைகள் – 10 : மலைக்கழுகு தேடிய மனைவி

    May 1, 2026
  • தூக்கிடல்

    தூக்கிடல்

    May 1, 2026
  • ஹிம்சானா கவிதைகள்

    ஹிம்சானா கவிதைகள்

    May 1, 2026

Categories

  • அஞ்சலி (2)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (19)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இதழ் 12 (20)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (107)
  • கட்டுரை (5)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (84)
  • கவிதை (19)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (15)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (47)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (46)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top