தீ என்பது ஒரு நேரடியான முரட்டாட்டம். அது எப்போதுமே பம்மிப் பதுங்குவதில்லை.
அ.
ஒரு படுக்கையென்பது
அன்றைய நாளின் ஞானத்தின் ஊற்று
உள்ளத்தைத் தைப்பதும், தடவுவதுமாகவுள்ள
மனதை
இன்னும் கொஞ்சம் உறங்கு அல்லது விழித்துக்கிடவென்று
பணிப்பது ‘தீ’ தான்
ஆ.
யாராவது
யார் காயத்தின் தழும்பையாவது
தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா?
பொன் தட்டாலான பலி பீடத்தில்
எந்நேரமும் சிவப்புக் கொட்டுகின்றது
“அமைதி கொள்”
எனத் தகவல் சொன்ன ‘தீ’ யின் கண்களில்
ஆகாரமளிக்கும் நிலத்தின் முகம் தெரிந்தது.
இ.
நிறைய மாறுபாடான நாக்குகள்….
பார்த்துக் கொண்டிருக்கும்
‘தீ’
சந்தையில் விற்கப்படுவதை
நடுவமாக நின்று பார்! எனக்
கண்ணைச் சுருக்கிக் கூறியது.
ஈ.
இங்கு எதுவுமே மீந்துக் கிடக்கவில்லை
எல்லாமே கொஞ்ச கொஞ்ச காலத்திற்கான
துரித சேவைகள் மட்டுமே…
பலவந்தப்படுத்தி விற்க எதுவுமேயில்லை
புதுப்புது இசைக் கோவைகளில்
நிறைய காதுகள் மன்றாடிக் கொண்டேயிருக்கும் போது
ஹெட்போனோடு
‘தனித்து நடக்க’ தீ தோள் தட்டிக் கூறியது.
உ.
ஒரு பொருளாதாரச் சூழல்
தேவையினைக் கணக்கிடுகின்றது.
வரலாறு காணாத உச்சமென்று
செய்திகள் பதிவிடப்படுவதைப்
பார்த்த ‘தீ’
கோட்டைத் தாழ்ப்பாள் கலவரத்தில்
சுலபமாகத் திறக்க முடியாது.
“சமாதானக் காலம்” வருமென
நட்புடன் கூறியது
ஊ.
மாதாந்திரப் பராமரிப்பு என
அடியோடு வெட்டாதீர்கள்
உரசுகிற கிளைகளை அப்புறப்படுத்துதல்
சகாயமானது
என்ற தீயின் கண்களில்
அதிகரிக்கப்போகும் வெப்பத்தின் கடுங்கோபம் சுட்டது.
எ.
திருவிழா காணவிருக்கும் சூழலில்
மனுக்கள் வேகமெடுக்கின்றன
ஆதாரங்களின் அடிப்படையில்
விசாரணைத் தொடங்கபடுமென்பதைப்
பார்த்த ‘தீ’
முன்போ, பின்போ
மட்கிப்போன தாள்களை
ஏற்ற காலத்தில் மட்டுமே
நுகர முடியுமென நேரடியாகக் கண்ணைப் பார்த்துச் சொன்னது.
Art : Pintrest








Leave a Reply