1. இருள்
ஒரு சிறிய பிறை வந்து தோன்றாவிடில்
அவ்வளவு
பெரிய வானம்
எவ்வளவு
இருண்டுவிடுகிறது
2. பேய்
கோவர்த்தனத்தைக்
குடையாய்த் தூக்கிப் பிடித்த கண்ணனையே
தலைமேல் தூக்கிப் பிடிப்பேன்
பேயேறிய ராதை நான்
3. ‘வாக்’
வந்து அரை மணி ஆகிவிட்டது உனக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்த
இரண்டு காஃபியில் ஒன்றை எப்போதோ குடித்து முடித்துவிட்டேன்
நாற்காலி நுனியில் அமர்ந்தும் எழுந்து வாசலுக்கு நடந்தும்
தலைப்பிரசவத்தில் வெளிவரத்துடிக்கும் சிசுவின் தலையாய்
நீ வரப்போகும் பாதையெங்கும்
என் கண்கள் இழுபடுகின்றன
கைப்பேசியில் விளித்தபடியே
சிணுங்கி எதிர்ப்பட்டுவிட்டாய்
வணக்கம் வணக்கமென்றபடி
என் காதும் கேட்கவில்லை
நாக்கும் நகரவில்லை
கையும் காலும்கூட
என் வசமில்லை
கடலோடு கலக்கும் நதியாய் நான் உருவழிந்துவிடுவேன் போலிருக்கிறது உருகியுருகி
ஏய்… மிஸ்டர்…
என்று பதறித்
துடுப்பைத் திருப்பிவிடுகிறாய்
நீ காஃபி குடிக்கும் அமைவில்
அற்பாயுளில் போய்விட்ட என்
ஒன்றுவிட்ட அக்கா நினைவில் வந்து மோதுகிறாள்
ஒரு ‘வாக்’ போகலாம் என்கிறாய்
உடனெழுந்துகொள்கிறோம்
இரு புறமும் மரங்களடர்ந்த
ஒரு நீண்ட பெரிய சாலையில்
கைப்பிடித்தபடியே இருவரும்
நடக்கிறோம் நடக்கிறோம்
நடந்துகொண்டேயிருக்கிறோம்
சாலையும் முடிவதாயில்லை நாமும் கைகளை நெகிழவிடுவதாயில்லை
ஒரு லாரி வந்து மோதிவிட்டால்
தேவலாமென்று
தோன்றுகிறது
4. பேறு
ஓர் ஐம்பது வயது வாழ்வில்
எத்தனை முறை நாம்
கொட்டும் மழையில் நனைந்திருப்போம்
பத்துத் தடவை?
அதுவேகூட அதிகம்தான்
ஏன் இப்படியென்ற கேள்விக்கு
நனிநயமான சமாதானமின்றிப் பதிலே கிடையாது
அல்லது இப்படியும் சொல்லலாம்
எது நம்மை
ஆழத்தொடுகிறதோ
அதைப் பின்தொடர்ந்து செல்லப்
பெரும்பாலும் நாம் விரும்புவதில்லை
எப்போதும்
ஒரு பயம் நமக்குள் சுழன்றபடியேயுள்ளது
நடப்புக்குள்
வெகு அபூர்வமாய்
நம்மோடு ஒக்கும்
ஒரு மனதை
உட்பிரக்ஞையுடன் சந்திக்க நமக்கு வாய்க்கும்போதும்
இப்படியேதான் எப்படியோ அது வேகவேகமாய்க் கடந்துவிடுகிறது
எதையும் நாம்
காணாதது போலவே நழுவியொதுங்கி நகர்ந்தோடி விலகி வந்துவிடுகிறோம்
அதன் வலி பின் உறுத்தினாலும்
தப்பித்தலின்
சிறிய மகிழ்ச்சியே
நமக்குப் பெரிதாகத் தெரிகிறது
உண்மை யாருக்கு வேண்டும் நமக்கு
ஒத்தடமே போதும்
வயலிருந்த அவ்வெளியில்
ஒரு சாலை
வீடிருந்த இடத்தில் ஒரு காம்ப்ளக்ஸ்
நிறைய நிறையச் சேரும்போது
அடைசல்
பெருகிப் பெருகிப்
பறிபோகிறது தன்னுணர்வு
இரவல் மனமே இயல்பாகிறது
இதேதான் இதேதான்
ஒட்டடைக்கோல் சாட்சியாய்
இங்கு நமக்கும் நடந்தது
இதை நாம் அறிந்ததே
ஒரு பேறுதானே
5. ஆதி
எங்குப் போய்விடுவாய்
தூங்குவதும் எழுவதும்
கழிப்பதும் உலவுவதும்
குளிப்பதும்
தின்பதும்
அணிவதும் களைவதும்
நினைப்பதும் மறப்பதும்
அலைவதும் சலிப்பதுமன்றி
எங்குப் போய்விடுவாய்
சோப்பிட்டுக் கைகழுவிவிட்டால் ஊட்டிய அமுதா வெளிப்போகும்
செல்ஃபோனை அணைத்துவிட்டால்
சூடிய மலரா உதிர்ந்துவிடும்
பதறிக் கதவை மூடிவிட்டால் காற்று
நின்றுவிடுமா என்ன
எங்குப் போய்விடுவாய்
கடலுக்குள்ளே சென்றவர்கள்
மீளக் கரை திரும்புவதுபோலே
விண்ணேறிச் சாடியவர்கள்
மண்ணிற்குக் கீழிறங்குவதுபோலே
நாதவெளியில் உட்கலந்தவர்கள்
கீரைக்குப் பேரம் பேசுவதுபோலே
எங்குப் போய்விடுவாய்
மலையேறியின் பாதங்களும்
தரைதொடுவதுபோலே
நீயும் வந்தேயாக வேண்டும்
போதியிலிருந்து ஆதிக்கு
6. சாம்பல்
ஒன்றாகவே முடியவில்லை
இரண்டாகவே தெரிகின்றன இங்குள்ள எல்லாமே என்கிறேன்
ஒவ்வொரு குளத்திலும் ஒவ்வொரு சூரியன் தெரிவதில்லையா
பிரதிப் பிம்பங்கள் என்கிறாய்
கயிற்றரவே காட்சியாகும்போது
மிதிக்கவும் பயம்
தாண்டவும் வெட்கம் என்கிறேன் முழுமுற்றாகக் குழம்பியபடி
கயிறால் பாம்பு பாம்பால் கயிறு
இதுவால் அது அதுவால் இது
இரண்டுமில்லை உண்மை
மாறுவதே மாயை என்கிறாய்
அவியாத நெருப்பாய் வேட்கை
முண்டுகிறதே என்கிறேன்
உலகமும் இல்லை இல்பொருளே உள்ளமும் என்கிறாய்
நாம் என்கிறேன் வீம்புடன்
சாயையின் சாயைகள் என்கிறாய்
காசியில் நிற்கிறோம்
கங்கையில் முங்கியெழுகிறோம்
பிறவி முடிந்தது என்கிறாய்
வாழவேயில்லையே என்கிறேன்
கட்டியணைத்து முத்தமிடுகிறாய்
போன நொடியைப் பிடித்துவைக்கப்
போன நொடிக்கே போனால்தான் முடியும் என்கிறாய்
இந்நொடியை
என்ன செய்வது என்கிறேன்
காலத்தைத் தாண்டிவிட்டால்
கைலாயம் சமீபம் என்கிறாய்
நம் காதல் என்கிறேன்
இது காசி
இது கங்கை
இங்கே எல்லாமே எரிகிறது என்கிறாய்
சாம்பல்தான் முடிவா என்கிறேன் உன்னையே பார்த்தபடி
இரண்டு சாம்பல் இல்லை
ஒன்றே சாம்புகிறது என்கிறாய்
நன்று என்று சொல்ல
நாக்குத்தான் துணியவில்லை
7. கோணி
எப்போதோ ஒருமுறை
உரலை நினைத்துக்கொண்டோ
அவலை இடித்துக்கொண்டோ
பெர்சனல் மெயிலில்
தேதி மறந்த
பிறந்தநாள் வாழ்த்து
அத்தருணம்
மருண்டு விழுகிறது
அமெரிக்க நிலக்காட்சிப் படம்
மிகச்சரியாகச் சிவராத்திரியின் நடுநிசிக்குத் தொப்பென்று
வாட்ஸ்ஆப்பில் குதிக்கிறது
நீயே எடுத்தது
என்ற குறிப்புடன்
ஒவ்வொரு மார்கழியிலும்
உன் குரலில் நீ பாடியனுப்பாத
சூடிக்கொடுத்தவளின் ஒரு பாசுரம்
மானசீகமாய்க் காற்றில் நடந்து
நோன்பின் கடைசி நாளில் என் செவியை முட்டுகிறது
யாரோ ஷேர் செய்த
யூடியூப் வீடியோவில் பார்த்தேன்
கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஒரு நீக்ரோ குழந்தைக்குப்
பாசமாய் நீயே
ஊட்டிவிடுவதை
இரண்டு மாமாங்கம் முன்பு காவேரியில் தலைமுழுகிவிட்டு
மேனி ஈரம்
சொட்டச்சொட்டக்
கண்கொட்டாமல் கரையிருந்து
பிழிந்து தின்ற நெடுங்கனவில்
ஒருமுறை
உருவிப் போன உயிர்
அப்புறம் திரும்பவேயில்லை
ஒரு மாபெரும் மோனம்தான்
காலவெளியில்
அரிதாகக் கரைகிறது
தாங்கவே முடியாமல்
பதறி உன் எண்ணை விளித்தால்
அணைக்கப்பட்டிருப்பதாகவே ஒலித்து
இணைப்புத் துண்டிக்கப்படுகிறது
உடனிசைந்து நடக்கவே முடியாமல்
பாதியிலேயே முறிந்து திரும்பும்
ஒருவழிப்பாதை யாவும் இப்படித்தான் குறுக்கில் கோணிச்
சுருக்கெனத் தைக்கும்போலும்
8. சிம் கார்ட்
இவ்வளவு தூரம் தாண்டியெல்லாம்
அலை வராது
என்று நம்பியே
மணலில் நீ வரைந்திருந்த
உன் கனவின் உருவத்தைக்
கல்லடி வாங்கி ஓடும் வெள்ளை நாய்
வகைதெரியாது காலால் இடறிக்
கலைத்துவிட்டுப் போகிறது
சரியென்று எழுந்து முன்நடந்து
முழந்தாளிட்டுக் கடற்தாயிடம்
கையேந்தித் தொழும்போது
ஒரு பெரிய அலை திடீரெனக் கிளம்பித் தலைமுழுக்காட்டி விடுகிறது
கண்கரித்துப் பின்திரும்பி
ஒட்டும் ஈர மணல் உதறிக் கற்பாறையில் சாய்ந்தமர்கையில்
இரை மீனுடன்
எதிரே ஒரு காகம்
உட்குமுறும் நீள்நெடுமூச்சுடன்
இடக்கால் எத்தி விரட்டியடித்துச்
சேலை கொஞ்சம் உலர்ந்தவுடன்
கரைநோக்கி உடனே விரைகிறாய்
வராதவனைப்
பாராத கோபத்துடன்
சிம் கார்டைக் கழற்றிக்கொண்டு
கைப்பேசியைத் தூர எறிந்துவிட்டுத்
தலைகோதியபடி
9. முறை
ஐம்பதில் அடியெடுத்து வைத்துவிட்டதால் சிறிதே தலை நரைத்துவிட்டதைச்
கருஞ்சாயம் மெழுகி ஒளிக்கவேண்டாத ஒரு புதுத்தெம்பில்
செத்துப்போனவனைக்
கூசாது கட்டிப்பிடித்து முத்தமிட்டுப் பின் செருமிச் செருமிப் பெருங்குரலெடுப்பாள்
என் உசுரு போவுறதுக்குள்ளயும்
உன் ஒவ்வொரு உறுப்பையும்
ஒருவாட்டியாச்சும்
என் நாக்கால் வருடி விடுவேன் என்ற அவனின் பழைய கிசுகிசுப்பைக்
கேட்காதிருக்கவே இச்செருமல்
உயிரோடிருந்த போது அவன் எத்தனை ஏங்கியேங்கி நொந்திருப்பான்
ஒரு இலட்சம் முத்தம் கேட்டுவிட்டு ஒன்றும் தராமல் பெறாமல்
போய்விட்டவன்
பேயாய் நாயாய்
அலைந்துகொண்டிராமல்
சிவனடியாச் சேர்ந்திருப்பான்
மண்ணு தின்னறத மனுஷன் கொஞ்சம்
தின்னாத்தான் என்ன
இந்தப் புத்தி
இப்போ வந்தென்ன
வராதிருந்து தானென்ன சவமே
என்றபடி மூக்கை உறிஞ்சிவிட்டு
வீட்டுக்கொல்லைக் குளத்தில்
அப்படியே காட்டெருமையாய்ப் புரண்டுவிட்டு ஊமையாவாள்
முறைபிறழாத மண்ணாங்கட்டி
10. மகாசொல்
அவர் ஜடாயு மாதிரி என்கிறோம்
அவன் ஒரு யூதாஸ் என்கிறோம்
சீதைக்கே அக்கா என்கிறோம்
யயாதிக்குத் தம்பி என்கிறோம்
மண்ணுலக மேனகை என்கிறோம்
இவள் மரியே எனத் தொழுகிறோம்
சகுனி சாணக்கியன் என்கிறோம்
நீ என்ன கண்ணகியா போடி தெரியாதா பெரிய நளாயினி
என்கிறோம்
முல்லாபோல்
மேதை என்கிறோம்
சாட்சாத் சரஸ்வதியே என்கிறோம்
புதிய நந்தனார் என்கிறோம்
துலுக்க நாச்சியார் என்கிறோம்
அவனைக் கர்ணன் என்கிறோம் இவனை இந்திரன் என்கிறோம்
அவளைக் கைகேயி என்கிறோம்
இவளைக் கூனி என்கிறோம்
நீயா இராமச்சந்திரன் என்கிறோம்
அகலிகையாகாதே என்கிறோம்
புத்தனாய் வந்த காந்தி என்கிறோம்
தர்மனின் ராஜ்யம் என்கிறோம்
மனிதர்களே செத்துப்போவார்கள்
சாவதேயில்லை தொன்மங்கள்
என்று மகாசொல்லுரைக்கிறான்
ஊர்மிளையின் லக்ஷ்மணன்
11. அடி
நடனத்திற்குச் சிவன்தான் குரு
ஆனா பார்வதி ஆடினா மட்டும்
அவனுக்குப் பிடிக்காது
பிராட்டின்னா பெருமாளுக்கு உசிரு
ஆனா சீதையா
அவ வந்தா மட்டும்
அக்னிப்பிரவேசம்தான்
வள்ளியில்லாம முருகனில்ல
ஆனா பிரும்மோபதேசம் மட்டும்
சிவனுக்குத்தான் வள்ளிக்கில்ல
மன்மதன எரிச்சு ரதிய தனியா தவிக்க வெச்சாத்தான்
ஆதிகவிகளுக்குப் பேரின்பம்
நல்லவேளை விநாயகனுக்குக்
கல்யாணம் பண்ணாம விட்டுட்டானுங்க
இல்லாட்டா சரஸ்வதி பிரும்மா கிட்ட
பட்ட பாடுல்ல அவளும் பட்டிருப்பா
இங்கேதான் தலைகீழாகிவிட்டது
அடிபடுவதற்காகப் பிறந்தவள்
அடித்துக் கொண்டேயிருக்கிறாள்
அடிப்பதற்காகப் பிறந்தவன்
அடிபட்டுக் கொண்டேயிருக்கிறான்
என்ன கொடுப்பினையோ இது
12. குழவித் திங்கள்
மலையின் உச்சி நோக்கி மெல்ல
நான் ஏறுகிறேன்
ஆயிரத்திற்கும் மேலாய்ப் படிகள்
பத்துப் பத்துப் படிக்கு
ஒரு குரங்கு
வெறுங்கையினை வெறிக்கிறது
சீறும் மூச்சு வெளியிறைகிறது
இடையமர்ந்தமர்ந்தேறினாலும்
உடும்புப்பிடியாய் விட்டுவிடாத அழற்சி
கண்ணில் அருவி காதில் நாதம்
தூரப்புள்ளியாய்
வானில் கருடன்
மேலே வழிநடத்த
இங்கெப்படி வந்தேன்
ஊஞ்சலோடு உடன்பறந்த சிசுவாய்
இதோ மீஉயரத்தில் நிற்பவன் கீழே குதித்துவிடுவேனோ
கூடவே பதறியெழும்
இரவின் பீதிக்குத்
தலைவணங்கிக் கையேந்துகிறேன்
மலையைக்
குலுக்கும் சிரிப்பு
எட்டுத்திசையும் அதிரப் பூத்து மணக்கும் யாமப் பூவைத் தேடுகிறேன்
ஒருகணம்கூட நிலைநிற்க முடியவில்லை
ஏறியது போலிறங்கி விடவேண்டும்
வெடவெடக்கிறது பேய்க் குளிர்
எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்துத்
தலைசொறிந்து கொள்ளலாம் போலிருக்கிறது
வேலியில் போகும் ஓணானை மடக்கி
என் மூளையில் வைத்த திடீர் அவதி…
என்ன செய்வதெனப் புரியாது கீழும் மேலும் உற்றுற்றுப் பார்த்துப்
பிணங்கியும் இணங்கியும் அயர்கிறேன்
முழுதாகப் பார்த்து முடிப்பதற்குள்
என் எதிரே வந்து சிணுங்கிய குழவித் திங்கள் மறைந்தே போய்விடுகிறது
இரவை இங்கேயே கழித்துவிட்டு
விடியலில் எழுந்து மலையிறங்கினால்
ஒருவேளை என்றேனும் ஒருநாள்
பூர்ணிமையிலேனும்
தெரியாமலா போகும்
இருளில் பூத்த என் யாமப் பூ
13.
கல்லணை
பார்க்க வருகிறான்
வசையில் குரிசில் கரிகாலன்
அவன் தேவியும் உடன்வருகிறாள்
வழியெங்கும் கோலாகல வரவேற்பு
சோழநாடும் காவேரியும் பார்த்துவிட்டு
நூறு நூறு கோவில்களையும் தொழுதுவிட்டு
இருவரும் கல்லணையில் தன்னந்தனியே
நடுநிசியில்
மெய் மயங்கி நிற்க
அகங்குளிர்ந்து சொல்கிறாள் வெள்ளம் வென்றவனின் தேவி
காலா!
வரலாறு உன்னை வாழ்த்துகிறது
நாம் ஆண்ட நமது மண்ணில் நீடுபுகழ்
நீ பெற்றுவிட்டாய்
எனக்குப் பெருமிதமாயிருக்கிறது
இன்றே நான் புதிதாய்ப் பிறந்தேன்
என்கிறாள் சொல்லின் செல்வி
அட எல்லாம் சரிதான்
ஒன்றே என் நீங்காக் குறை மாதேவி!
நான் எவ்வளவு கொடுங்கோலன்
உன் பெயரின்
சிறிய தடம்கூட எங்கும் தெரியாமல் அழித்தா
இப்புகழ்முடி நான் சூடவேண்டும்
என்றுடல் குழறிக் குறுகுகிறான் ஈடிணையற்ற அம்மாமன்னன்
நங்கைக்குக் கொண்டவனா எதிரி
நாம் வாழ்ந்த அந்தக் காலத்தைத் தாங்கி நின்றதா நம் பிழை
விடுவிடு காலா!
என் பெயர் என்றும் ஓடும் காவேரி என்று
உன் வாயால் ஒரே
ஒரு மெய் பேசிவிடு
அது ஒன்றே எனக்குப் போதும் என்கிறாள் காவேரியின் காவேரி
அங்குப் புள்ளும் மரமுமாய் இருந்த
நீயும் நானும் கேட்டு மகிழ்ந்து அழ
14. நீலன்
எல்லாரும் கன்னத்தில் கைவைப்பார்கள்
இவள் முகவாய்க் கட்டையில்தான்
கைவைத்துக்கொள்வாள்
பிறர் தம் காதை மறைத்து
முடிக்கற்றையைச் சூழவிடுவார்கள்
இவள் காது நன்றாகத் தெரியும்படி
குழலொதுக்கிக்கொள்வாள்
பழகிய நிறங்களுக்கு இவள் எதிரி
நூதனப் புதுநிறங்களையே மங்கலமாக்கி உடுத்திக்கொள்வாள்
இப்போது
இக்கணம் எல்லாமே
நீலம் நீலமாகத் தெரிகிறதிவளுக்கு
நீலமுடுத்திய
இந்த என்
நீலவேணியேதான் நிதம்பசூதனி
கண்ணில் தெரிந்த அந்த முதல் நீலக் கனியைக் கடித்துக்
கட்டுக்கடங்காமல் பொங்கும் நீலப்பூ மிதக்கும் நீலக் கடலைப்
பசும் பாலாய்க் குடித்துவிட்டேன்
அழுதாலும்
சிரிக்கும் நீல முகம்
சிரித்தாலும்
அழும் நீல மனம்
இவளை வகைப்படுத்தினால்
கோபம் கரைபுரண்டுவிடும்
எதிர்நின்று சபித்தாலோ
துள்ளல் எல்லை மீறிவிடும்
வாழ்வதற்காகப் பிறந்தவளை
வேடிக்கை பார்க்கக்கூட
அனுமதிக்கப்படாத நீலமேகன்
அங்கே என்ன செய்ய முடியும்
வாங்கிவந்த நல்வரத்தைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைக்கவேண்டியதுதானா நீலமுண்ட அநாகரீகன்
15. இணைவு
ஒரு புத்தகத்தைக் குழந்தைபோல்
கையில் பிடித்து மடியில் வைத்துக்
கண்ணூன்றிப் படிக்கும்போதும்
கன்னச்சிவப்பும் கழுத்துக்குழைவும்
எவ்வளவு ஒன்றித்தோய்ந்து
கூர்ந்த காதின் விடைப்பில் முறுக்கேறிப் பூரிக்கின்றன
அப்படியே
ஒரு குழந்தையைத் தூக்கிக்கொள்வதுபோல் தூக்கிக் கொஞ்சணும் போலிருக்கு
ஒன்றைப்
பற்றி நிற்பதும்
எதையுமே பற்றாதிருப்பதும்
இரண்டுமே
வேறு வேறா என்ன
மௌனம் பதிலோ தீர்வோ இல்லை
அடம்பிடிக்கும் குழந்தை அறிவது
அடக்கும் தாய்க்குத் தெரியலையே
என்று நகர்ந்து விலகியோடும்
மணி முள்ளும்
நிமிட முள்ளும்
நொடி முள்ளும்
நடுநிசியிலும் உச்சியிலுமே
ஒன்றுசேர்கின்றன
இரண்டே கணம்தான் இணைவு அதற்கா
இத்தனை பாடு
16. வால்
நெடிய ஏணி வைத்தேறி
எட்டாத மாங்காய் பறிக்கலாம்
அலக்கு கொண்டாட்டிப்
பிடித்த கொடுக்காப்புளி உலுக்கலாம்
தொறட்டியால் இலைகழித்து
ஆடுதின்னப் போடலாம்
பாதாளக்கரண்டியால்
கிணற்றில்
விழுந்த வாளியை
மேலே தூக்கிவரலாம்
தொடர்ந்து புண்பட்டுத் தேம்பும் ஒரு குழந்தையை
மிட்டாய் தந்தே திருப்பிவிடலாம்
ஒரு கங்கையையே
உள்ளே ஓடவிட்டுக் கொண்டு தவிச்ச வாய்க்கு ஒரு துளி நீர் தரக் கைவிரிக்கும் கேடுகெட்ட சுயநலத்தின்
பின்முன்னே வாலாட்டியபடி
எவ்வளவு அடித்து விரட்டினாலும் போகவேமாட்டேன் என்று பூச்சுற்றும்
ஒரு மூளைகெட்டதை
என்ன சொல்லிச் சமாதானப்படுத்த
17. யூகலிப்டஸ்
ஒரு வாழை மரத்தின் முன் ஒரு நொடி நிற்க முடியாத நீ
ஒரு செயற்கை நீரூற்றின் முன்
எப்படி நாணிக் கோணுகிறாய்
ஊட்டியில் கொண்டுபோய் உன்னை நட்டு வைத்தால்
ஒரு பூசணிக் கொடியாய்த்
தரையோடு தரையாய்ப்
படர்ந்திருப்பாய்
திருச்சிக்குத் திருப்பிவிட்டால்
அகண்ட காவேரியாய்
நிலம் உழுதிருப்பாய்
புராதனப் பூம்புகாரில்
கடலாய்ப்
பொங்கியிருப்பாய்
கொசுக்கள் மொய்க்கும்
கூவம் நதிக்கரையில்
என்ன இருப்பு இதுவென்று
சிறிதே சலித்துப் புலம்பினாலும்
ஊரென்ன உறவென்ன உனக்கு
முகமறையும் முரட்டுக்காற்றாய்
அருகில் வரும் குழந்தைக்குத்
தலைவலிக்கச் செய்தாலும்
மலையெல்லாம் மணக்கும்
யூகலிப்டஸ்தானே நீ
உன் எதிரே நிற்பது
ஒரு மாடில்லை மனுஷன்
நீ பாராவிட்டால்
நீ பேசாவிட்டால்
நீ நினைக்காவிட்டால்
செத்தாபோய்விடுவேன்
எல்லா உதயமும்
அஸ்தமித்தாலும்
எல்லா அஸ்தமனமும் உதிக்கத்தானே செய்கிறது
பாலைவனம் என்றாலும்
பொழியத்தானே பொழிகிறது
பேய் மழை
Pablo Picasso Paintings








Leave a Reply