1
பையன் உடைகளை அவனாகக் கழற்றுவதில்லை
அதற்கு அம்மாவைக் கூப்பிடுவான்
அம்மா வரும் வரை நாள் முழுக்கக் காத்திருப்பான்
பெண்பிள்ளை யாரையும் கூப்பிடக் கூடாது
அவளே உடைகளை மாற்றிய பின் வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்த பின்
அம்மா வருவதற்குத் தாமதமானால்
காய்கறிகளை நறுக்கிச் சமைக்க வேண்டும்
சமையல் ஆன பின்பும் அம்மா வரவில்லை என்றால்
சாப்பிட்டுச் சிறு நேர ஓய்வுக்குப் பின் துணிகளைத் துவைக்க வேண்டும்
மாலை காபி டீ யார் கேட்டாலும் போட்டுக் கொடுத்து
இரவுணவு நேரம் வரும் வரைப் படிக்கலாம்
டிவி பார்க்கக் கூடாது
சத்தமாப் பேசக் கூடாது
பையன் வெளியே போக வேண்டும்
வீட்டை விட்டு வெளியே போகாதவன் ஆம்பிளை இல்லை
போகாவிட்டால் அடித்துத் துரத்த வேண்டும்
அடுப்படிக்கு அவன் போகக் கூடாது
ஊர் சுற்றலாம்
நண்பர்களோடு இருக்கலாம்
வெளிவேலை செய்ய வேண்டும்
சத்தமாகப் பேச வேண்டும்
நாலு பேர் அவனைப் பார்த்துப் பயப்பட வேண்டும்
அப்பாவுக்கு வேலையிருக்கிறது
அலுவலகத்திலிருந்து திரும்பி வராத படி அவருக்குப் புதிர்ப்பாதை இருக்கும்
அம்மாவுக்கும் வீட்டிலிருந்து வெளியேறாத படி மிகப்பெரிய புதிர்ப்பாதை இருக்கும்
காலம் மாறும்
அப்பனை மீறி பிள்ளை வருவாள்
அம்மாவைத் தின்று பையனும் வளர்வான்
எனக்கு இந்தப் பழக்கங்கள் இல்லை. நான் மனிதனே இல்லை.
2
பத்து வருடம் கழித்து ஊருக்கு வரும் போது பெரிதாக முகவரி மாறியிருக்காது
இன்னொரு முறை அதே இடத்தில் மீண்டு வரும் நினைவைச் சந்திக்க முடியும்
கவலையெனச் சுருங்கிப் போகும் துயரத்தை மர நிழலில்
ஒரு சிறுமி தற்செயலாகப் பார்ப்பாள்
அவள் அதிலொரு கப்பலைச் செய்து மழை பெய்யும் நேரம்
ஓடும் நீரில் விடுவாள்
அறியாமல் போன பருவங்களின் வாசனை எல்லாம் அவள் பேச்சிலிருந்து வரும்
யாருடைய பெயராலும் எழுதப்படாத வெறும் பூக்களால்
வீழ்த்தப்பட்ட மக்களின் முகங்களைக் காண்பேன்
வீழ்வதற்கும் அழிவதற்கும் கண்டுபிடிக்கப்பட்ட இளைப்பாறல்
விடுதியில் நாயொன்று காலை நக்கும்
சொல்ல முடியாத உணர்வை வலியெனப் பெயரிட்டவன் துரோகி
என்று சொல்வதற்கும் நாயைத் தொடர்ந்தும் பெரியவர் வருவார்
காயம் காதலை வேரறுத்து நமக்குப் போர்களைக் கொண்டு வருகிறது
நீயே தான் அந்தப் போர்க்குரல்
நானே தான் போரைத் தொடங்கும் கைத்துப்பாக்கி
நாமே அப்போர்ப் பதற்றம்
அப்படியென்றால் உலகின் அழிவிலிருந்துதான் கலை பிறக்கிறதா?!
ஓர் அழிவின் கண்ணிலிருந்து அழகைப் பிரிக்கும், தீமைக்கு வசீகரமிருக்கிறது.
பெரும்பாலும் எதுவும் செய்ய முடியாத ஒருவனின் நிலைமைகள்,
இந்த வார்த்தைகளை நிர்வாணமாக்குகிறது.
திறந்த கடலின் முன் கேள்விகளை உப்பால் கழுவுகிறது
இதனிடையே,
அழிய வேண்டிய உலகின் நிர்பந்தங்களுக்கு மத்தியில்
ஒரு குழந்தை பிறக்கவும் விரும்புகிறது
நானும் பிறக்க விரும்புகிறேன்
என்றும் மாறாத
எதற்கும் எவற்றுக்கும் வித்தியாசம் தெரியாத மொழியை
கோணலாய்ச் சொல்லும் மிகச்சிறிய குரலுக்காகத்தான்.
3
தன் பழைய
பகையை யாரிடமும் பகிராமல்
தனக்குத் தானே என்று சாராயத்தில் கலக்கிக் கிழவி குடிக்கிறாள்
உட்பகை தீராமல்
முழுவதும் மூர்க்கம் ஆகாமல் பார்த்துக்கொள்ளும்
கிறக்கத்தில் போர்களை அழைத்து வரும் சாராயங்களில்
உடும்பு வாழ்கிறது
உடும்பு போடும் போதைக்குப் பாடுகிறாள் கிழவி
“தெருவில் இறங்கி நடக்கும் நோய்களை அறிவேன்
மறுக்காமல் நோயை அரவணைத்துச் சாகும் குழந்தைகளை அறிவேன்
எனக்கிப்போது விஷங்களின் தனிமையைப் பற்றித் தெரியும்
ஒரு பூ காயாகி பழமாகும் இலைகள் நிறைந்த மரங்களின்
சலசலப்பு மிக்க அசையும் இசையும்”
உடும்பின் கழுத்தைச் சுருக்குக் கயிறு இறுக்குகிறது
தரையில் புரண்டும் மிரண்டும் அரளும் உடும்பைப் பிடிக்க உருள்கிறாள் கிழவி
சும்மா கிடந்த காற்று புழுதியை வாரி அடிக்கிறது
4
உச்சியிலிருந்து பாய சகுனப்பயிற்சி கொடுக்கும்
கழுகின் தொழிற்சாலையில் உன்னைப் பார்த்திருக்கிறேன்
மழை கருக்கல் கூடும் போதெல்லாம் நீ உறங்க விரும்பவில்லை
மழை ஈரம் காயும் வரைக் காத்திருக்கிறாய்
கடலைப் போல் காய்ச்சல் ஏறுமளவுக்கு உடலெங்கும் உனக்கிருக்கிற கருப்பே
என்னைக் கயிறு கட்டி இழுத்து வந்தது உன்னிடம்
எனது வீடு
பாலைமணலின் அனல் கொண்டது
அதை உன்னால் மட்டுமே காணாமலாக்க முடியும்
உன்னிடம் டால்பீன்கள் இருக்கின்றன
உப்புக்கடலைக் குடிக்கும் பூனைகளும்
காலைச் சூரியன் முளைக்கும் நேரம்
வானம் நொடி நொடியாய்ச் சுக்கு நூறாக உடையும்.
மீண்டும் இணையும் உடைபடும் துண்டங்களால்
ஒரு மிடறு தண்ணீரைக் கூட முழுமையாகக் குடிக்க முடியாது.
அணைந்து அமைதியாக இயலாத மோதலில் உருவாகும்
சூரியப் புயல்கள் போல பேசிக்கொண்டே இருக்கிறது.
சொற்களாக நிறம் ஆகிறது.
சொற்களோ, மணலில் ஒரு குழந்தை கட்டும் கோட்டை போன்றது.
மண் வானத்தைக் கண் கூசும் மஞ்சள் நிலமாகவும் அந்தியைத் தங்கமாகவும் ஆக்கலாம்.
தங்கமோ, பல்லாயிரம் கொலைவாள் குடித்த இரத்தம்.
நாம் மாபெரும் அலைச்சலில் உழலும் மிகச்சிறிய நிலம்.
நம் குறுக்கே ஒரு கோடு பிரிக்கிறது,
நீ, … தீ மூட்டும் கொள்ளிக்கடையை வாங்கியழிந்து பிறந்து காட்டு.
நான் விஷத்தை உண்டும் கொலையாகாமல் உயிர் பிழைக்கும் வித்தையைக் காட்டுகிறேன்.
அல்லது இருவரும் கட்டியணைத்து உறங்கிப் போனாலும் போதும்.
Art : Mukarram Sousli
டோனி பிரஸ்லர் – பொறியியல் பட்டதாரி. திருச்சி மாவட்டம் பொன்மலையைச் சேர்ந்தவர். பிறப்பு 1995. தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வரும் இவருக்கு நவீனத்துவ மயக்கங்களின் மீது கோபமிருக்கிறது. 2023இல் பாலைநிலவன் : தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பின் ஆசிரியராகவும், 2024இல் ககனம் என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். மேலும் நிறுவனமயப்படும் எப்பொருள் மீதும் கல்லெறிவது இவருக்குப் பிடித்த வேலையாகவிருக்கிறது.








Leave a Reply