நான் சென்னையில் பிறந்து வளர்ந்த தேஜா ஸ்ரீ. இன்று எனக்கு 25 வயது. என் கலைப் பயணம் மூன்றாவது வயதில் நடந்த ஒரு சிறிய அனுபவத்திலிருந்து துவங்கியது — அப்போது நான் முதன்முதலாக வரைதல் வகுப்பில் அமர்ந்து கையில் பென்சிலைப் பிடித்த தருணம். அந்நொடியில் உருவான ஆர்வம் இன்று வரை என் வாழ்வின் ஓர் அங்கமாகவே உள்ளது.
வயது கூடிக்கொண்டே வரும்போது, கலை பற்றிய ஆர்வமும் என்னுடன் கூடிக் கொண்டே வந்தது. கலரிங், பென்சில் ஷேடிங், பேன் ஷேடிங், கலர் பென்சில்ஸ், வாட்டர் கலர்ஸ், அக்ரிலிக், போஸ்டர் கலர்ஸ்… எந்த மாதிரியான ஊடகத்தையும் நான் தவறாமல் சோதித்துப் பார்த்தேன். ஓவியம் என் மன அழுத்தத்தைக் கலைக்கும் ஒரு மருந்தாகவும், நான் நானாக இருக்கக்கூடிய ஒரு நிம்மதியான இடமாகவும் மாறியது.
என் குருவின் பாதிப்பு என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. அவர் கற்றுக் கொடுத்தது ஓவியத் திறமையை மட்டும் இல்லாமல், ஒவ்வொரு சாதாரண விஷயத்திலும் ஒரு அழகைக் கண்டுபிடிக்கும் பார்வையையும்தான்.
இதுவரையிலான என் கலைப் பயணம் எனக்கு பெருமிதத்தை அளித்திருக்கிறது. வருங்காலத்தில், என் ஓவியங்கள் என் உணர்ச்சிகளையும், என் தனித்துவத்தையும் வெளிப்படுத்தி, அதைப் பார்ப்பவர்களுடன் ஓர் இணைப்பை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான் பேசாமல் இருந்தாலும், என் கலை பேசட்டும், அதுதான் என் இலக்கு.
















ஓவியர் பார்வதி பாலா திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வரும் இவர், இதன் வாயிலாகக் கலைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்பவராகவும் திகழ்கிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது ரேகை ஓவியம்.
TNMAI அறக்கட்டளையைச் சேர்ந்த மாதவன் பிள்ளை அவர்களின் முன்னெடுப்பில், 2022 மே மாதம் One Two Art Gallery இல் இயற்கை வண்ண ஓவியங்கள், தேங்காய் ஓடு, விதைகள், சிப்பிகளால் செய்யப்பட்ட அணிகலன்களைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
ம.செந்தமிழனின் ‘ஊழி’ உட்பட செம்மைப் பதிப்பக நூல்களுக்கு முகப்பு, உள் ஓவியங்கள் வரைந்துள்ளார். 2016 இல் தனது ஓவிய வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். வானகம், வள்ளுவம், செம்மை, பொதிகைச் சோலை போன்ற அமைப்புகளில் சிறார்களுக்கு ஓவியம் மற்றும் இயற்கை வண்ணப் பயிற்சி அளித்துள்ளார். வழிபாட்டு ஓவியங்கள், கருத்து ஓவியங்கள், ஆடை ஓவியங்கள், திருமணப் பதாகை ஓவியங்கள், புடைப்புச் சிற்பப் பலகைகள் செய்தல், விதைகள் – களிமண் – தேங்காய் ஓடு போன்ற பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் செய்தல், சுவர் ஓவியங்கள், லோகோ வடிவமைப்பு ஆகிய வெவ்வேறு கலைவடிவங்களில் தொடர்ந்து செயல்பங்காற்றி வருபவர் ஓவியர் பார்வதி பாலா.








Leave a Reply