Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

நாய்கள் சூழ் உலகு

கவிப்பித்தன் .
கவிப்பித்தன் .
December 1, 2025
நாய்கள் சூழ் உலகு

சுரபி எழுந்துகொள்வதற்கு முன்னதாகவே எழுந்து நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் மணிகண்டன். மனதை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வேகவேகமாக நடந்தார். கையில் நாய்க்குட்டி மிகக் கனமாகத் தெரிந்தது. அது நாய்க்குட்டியின் கனமா அல்லது அவரது மனதினுடைய கனமா என அவருக்குத் தெரியவில்லை. பதற்றத்தில் முகம் முழுவதும் வியர்த்து ஊற்றியது.

நடக்க நடக்க நீண்டுகொண்டே போவதைப் போல இருந்தது அந்தப் பாதை. எத்தனையோ வருடங்களாக அவர் நடந்து நடந்து பழகிய பாதைதான். ஆனாலும், கடக்கவே முடியாத வாழ்க்கைப் பாதையைப் போல அன்று அவருக்குத் தெரிந்தது.

மனதின் தள்ளாட்டம் அவரது கால்களிலும் தெரிந்தது. மனதுக்கும் உடலுக்கும் அப்படி என்னதான் ஒப்பந்தமோ…? மனம் உள்ளே நினைப்பதைத்தான் உடல் வெளியே செய்கிறது. ஆனால் அந்த மனம் அவர் சொல்வதை மட்டும் கேட்பேனா என அடம்பிடிக்கிறது. நாம் நினைக்கிற மனமும் நமக்கு எதிராகவே செயல்படுகிற மனமும் ஒன்றுதானா அல்லது வேறு வேறா என்கிற சந்தேகமும் அவருக்கு வந்தது.

எப்படியோ, மனப் போராட்டமும் உடல் போராட்டமுமாக நடந்து நடந்து ஒரு வழியாக அந்த முள்புதரை நெருங்கியவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே அந்த நாயுமில்லை, அதன் குட்டிகளுமில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் அப்படியே நின்றார்.

விடிந்தும் விடியாத அந்த அதிகாலை வேளையில் வேகவேகமாகக் கைகளை வீசியபடி நிறைய்ய பேர் நடந்து கொண்டிருந்தனர். கைப்பேசியில் பக்திப் பாடல்களைக் கேட்டபடி சிலர் சாவகாசமாக நடை போட்டுக் கொண்டிருந்தனர்.

தரதரவென இழுத்துக்கொண்டு ஓடுகிற சாம்பல் நிற நாயின் சங்கிலியை இழுத்துப் பிடித்தபடி மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர்.

மணிகண்டனுடன் சேர்ந்து நடந்துகொண்டிருந்த உமாபதி அதைப் பார்த்துவிட்டுதான் சிரித்தபடியே மணிகண்டனிடம் கேட்டார்…

“மணி சார்… நீங்க நாய் எதுவும் வளக்கலியா…?”

“அதல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது சார்…” என்று சிரித்தார் மணிகண்டன்.

அப்படி நாய்களுடன் மல்லுக்கட்டியபடி நடப்பவர்களை மணிகண்டனும் நிறைய்யப் பார்த்திருக்கிறார். நாய்களுக்காக அவர்கள் நடக்கிறார்களா… அவர்களுக்காக நாய்கள் நடக்கின்றனவா என்கிற கேள்வி எல்லோரையும் போல மணிகண்டனுக்கும் வரும்.

ஆனாலும், நாய் வளர்ப்பதும், அதைப் பொது வெளியில் அப்படி இழுத்துக்கொண்டு அலைவதும் ஒரு கவுரவம் என அவருக்கும் தெரியும். இருந்தாலும் அப்படி ஒரு நாயை வளர்ப்பதில் அவருக்கு விருப்பமே இல்லை.

தானாகத் தெருவில் திரிந்து, எதிர்ப்படுகிற கம்பமோ, மரமோ காலைத் தூக்கி மூத்திரம் பெய்து, வருகிற நேரத்தில் இருக்கிற இடத்தில் மலம் கழித்து எனத் தன்பாட்டுக்கு வளர்கிற நாய்களின் கழுத்தில் சங்கிலியைக் கட்டி, கால் கடுக்க வாசலில் நிற்க வைத்து, வேளாவேளைக்குத் தட்டில் சோறு போட்டு, அலாரம் வைக்காத குறையாக உச்சா போ, கக்கா போ என நேரம் பார்த்து அல்லது அவர்களுக்கு நேரம் கிடைக்கிற போது  அவர்களுக்குத் தெரிந்த மொழியில் அதனிடம் அதிகாரம் செய்து அப்படியெல்லாம் ஒரு நாயை வளர்க்க அவருக்கு விருப்பமே இல்லை.

நாய் என்றால் வளர வேண்டும். வளர்க்கக் கூடாது என நினைப்பார். செடியை வளர்க்கலாம். கொடியை வளர்க்கலாம். மலையை வளர்க்க முடியுமா?

ஆனால், விதவிதமான நாய்களைத் தொலைக்காட்சியில் பார்க்கிற போதெல்லாம் அவரின் கைகளைச் சுரண்டிக் கொண்டே இருப்பாள் அவருடைய ஒரே மகள் சுரபி.

வாடகை வீட்டில் நாயை வளர்ப்பது ஆப்பிரிக்கக் காட்டிலிருந்து ஒரு யானையைப் பிடித்துவந்து வளர்ப்பதற்குச் சமம் இல்லையா? முதலில் மனதுக்குப் பிடித்த ஒரு யானை சே ஒரு நாய் கிடைக்க வேண்டும். அது இவர்களைவிட இவர்களின் வீட்டு உரிமையாளருக்குப் பிடிக்க வேண்டும். அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கிற காரியமா?

“நாம வீடு கட்னப்பறம் வளர்க்கலாம் குட்டிமா” என சுரபியின் கன்னத்தை வருடி செல்லம் கொஞ்சி, அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.

இப்போது வீடு கட்டத் தொடங்கி, முடிகிற நிலையில் இருக்கிறது. இதற்கு மேலும் சுரபியை ஏமாற்ற முடியாது. இந்த நேரத்தில்தான் உமாபதியின் இந்தக் கேள்வியும் சேர்ந்து அவரை உசுப்பிவிட்டது.

சரி ஒரு நாயை வளர்த்துதான் பார்க்கலாமே என மகளுக்காக மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

கைப்பேசியில் விதவிதமான நாய்களின் படங்களைத் தேடித் தேடி அவரிடம் காட்டினாள் சுரபி. அவற்றில் எதையுமே பிடிக்கவில்லை அவருக்கு. அவரைப் பொறுத்தவரை நாய் என்றாலே அது நாட்டு நாய்தான்.

“அய்ய ஸ்ட்ரீட் டாகா?” எனத் தன் சின்ன உதடுகளைக் குமட்டினாள் சுரபி.

“டவுனுக்கு வந்து பத்து வருசம் ஆச்சி இன்னும் உங்க புத்தி போவல?” எனக் கிண்டலாகச் சிரித்தாள் அவர் மனைவி சுலோச்சனா.

அவளின் கிண்டலுக்காகவே வளர்த்தால் ஒரு தெருநாயைத்தான் வளர்க்க வேண்டும் எனத் தனக்குள் முடிவு செய்து கொண்டார்.

அது புரட்டாசி மாதத்தின் கடைசி வாரம். ஆடி மாதத்தில் கருத்தரிக்கும் தெருநாய்கள் அப்போதுதான் குட்டிகளை ஈனும். புதிய வீட்டில் ஐப்பசி மாதக் கடைசியில் குடியேறுவதாகத் திட்டம். அப்போது போனால் கைக்கு அடக்கமான சின்னக் குட்டிகள் கிடைக்காது.

உடனே ஊருக்குப் போய் ஒரு நல்ல குட்டியாகப் பார்த்து எடுத்து வரவேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

அடுத்த ஞாயிறு காலையில் வழக்கமான நடைப்பயிற்சி. விடுமுறை நாளென்பதால், வழக்கமாகத் திரும்புகிற கல்யாண மண்டபத்தையும் கடந்து காரைச்செடியம்மன் கோயில் வரை போய் வரலாமே என மேலும் நடந்தார்.

மிலிட்டரி கேன்டீனைக் கடந்து, தரைமட்டப் பாலத்தில் கால் வைத்தார். பாலத்தின் மேற்குப் பக்கத்தில் “உய்ங்…. உய்ங்… உய்ங்…” என ஏதோ முனகல் சத்தம் கேட்டது. உற்றுக் கேட்டார். அட அது நாய்க்குட்டிகளின் முனகல் சத்தம். சட்டென முகம் மலர அப்படியே நின்றார்.

வலது புறத்திலிருந்த புளிய மரத்தைச் சூழ்ந்திருந்த முள் புதரிலிருந்துதான் அந்தச் சத்தம் வந்தது. உடனே சாலையிலிருந்து கீழே இறங்கி, மெதுவாக அந்தப் புதரை நெருங்கினார். ஏராளமான மூக்குத்திப் பூச்செடிகள் சூழ்ந்திருந்த புதருக்குள் ஒரு வெள்ளை நிறப் பெட்டை நாய் கால்களை விரித்து, ஒருக்களித்துப் படுத்திருந்தது. அதன் தடித்த கருமை நிறப் பால் காம்புகளை உறிஞ்சியபடி ஐந்தாறு குட்டிகள் வசவசவென நெளிந்து கொண்டிருந்தன.

கண்களை மூடியிருந்த நாய் இவரின் காலடிச் சத்தம் கேட்டதும் காதுகளை விடைத்தது. சட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தது. லொள் என ஒரு ஒற்றைக் குரைப்பு. அதை உதாசீனப்படுத்திவிட்டு மேலும் சில அடிகள் முன்னே எடுத்து வைத்தார்.

சடாரென எழுந்த நாய் உடலை ஒரு உலுக்கு உலுக்கியது. புளியம்பழங்கள் உதிர்வதைப் போல குட்டிகள் சிதறிக் கீழே உதிர்ந்தன. காம்பைக் கெட்டியாகக் கவ்வியிருந்த ஒரு குட்டி மட்டும் காம்பிலிருந்து கீழே தொங்கியது. மீண்டும் ஒரு உலுக்கு. அதுவும் கீழே விழுந்தது.

வாசிவாசியான வெளிர் மஞ்சள் நிறப் பற்களைக் காட்டி லொள் லொள் எனக் குரைத்தபடி அவரை நோக்கி எகிறப் பார்த்தது. சடாரெனக் கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார். அடிப்பதைப் போல கையை வீசி பாவனை செய்தார். பயந்து போன நாய் அப்படியே திரும்பிப் புதருக்குள் புகுந்து ஓடியது. சற்றுத் தூரத்தில் போய் நின்று தவிப்போடு பார்த்தது. குட்டிகள் குய்… குய்… குய்… என முனகிக் கொண்டு ஒன்றின் மீது ஒன்று ஏறி மிதித்தபடி நெளிந்தன.

குட்டிகளை உற்றுப் பார்த்தார். உடல் முழுக்க கரிச்சாம்பலைக் கரைத்து ஊற்றியதைப் போல அட்டைக் கருப்பாக இருந்தது ஒரு குட்டி. இரண்டு குட்டிகள் செம்மறி ஆட்டைப் போல சாயம் போன பழுப்பு நிறம். ஒன்று மட்டும் பால் வெள்ளை நிறத்தில் செம்பழுப்பு நிறத் திட்டுகளுடன் மிக அழகாக இருந்தது. அதன் வாயும், மூக்கின் முனையும் அடர் கருப்பு.

குனிந்து அதைத் தூக்கினார். அதன் பஞ்சு போன்ற உடல் மெலிதாக நடுங்கியது. தலைக்கு மேலாகத் தூக்கிப் பார்த்தார். ஆண் குட்டிதான். பிறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அதன் கால் பாதங்கள் பட்டுத் துணியைத் தொடுவதைப் போல அவ்வளவு மிருதுவாக இருந்தன.

அதை எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். இதை எதிர்பாக்காத நாய் ஆவேசமாகக் குரைத்துக் கொண்டு அவர் பின்னாலேயே ஓடி வந்தது. மீண்டும் கல்லால் அடிப்பதைப் போல கையை வீசினார். சட்டென நின்றது. அதன் கண்களில் பயம். கூடவே பெரும் பதைபதைப்பு.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி விறுவிறுவென நடக்கத் தொடங்கினார். நெற்றியில் வியர்த்து வழிந்தது. அரை மணி நேர வேக நடை. காம்பவுண்ட் கேட்டைத் திறந்து, மாடிப் படியேறி வீட்டுக்குள் நுழைந்தார்.

நாய்க்குட்டியைப் பார்த்த சுரபி மகிழ்ச்சியில் குதிக்கத் தொடங்கி விட்டாள். கண்கள் விரிய விரிய அந்தக் குட்டியை வாங்கி, தடவிப் பார்த்தாள். ரோசாப்பூவின் இதழைப் போன்ற சின்ன நாக்கை நீட்டி அவள் புறங்கையை நக்கியது நாய்க்குட்டி.

“புது வீட்டுக்குப் போற வரைக்கும் இங்கியே இருக்கட்டும்பா இன்னும் ஒரு மாசம்தான” என்றார் சுலோச்சனாவிடம்.

சுலோச்சனாவுக்கும் அந்தக் குட்டியின் அழகு பிடித்துவிட்டது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பால் ஊற்றி அதன் முன்னால் வைத்தாள். நாக்கை நீட்டி “சளப் சளப்” என நக்கத் தொடங்கியது.

மளிகைச் சாமான்கள் வாங்கக் கடைக்குக் கிளம்பிய மணிகண்டன் வழியெல்லாம் நாய்க்குட்டியின் நினைவிலேயே வண்டியை ஓட்டினார். மீண்டும் வீடு திரும்பிய போது, சுரபி அதைத் தன் மடியில் வைத்து அணைத்தபடி சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

“ஏங்க… இத எட்த்துகினு போயி எட்த்தாந்த எடத்துலயே உட்டுட்டு வந்துருங்க….” என்றாள் சுலோச்சனா.

“ஏம்பா?”

“ம் போயும் போயும் பொட்ட நாய்தானா கெடச்சது உங்குளுக்கு…?”

“பொட்டயா….? இல்லியே… கடாதான…?”

“க்கும்”

நாய்க்குட்டியை சுரபியிடமிருந்து பிடுங்கி வயிற்றுப் பக்கத்தைத் திருப்பி மல்லாக்கக் காட்டினாள்.

வாலுக்குக் கீழே சின்னதாய்ப் பூவின் அரும்பு போன்ற பிறப்புறுப்பும், வயிற்றில் புள்ளி புள்ளியாய் இளஞ்சிவப்பு நிறத்தில் பால் காம்புகளின் தடங்களும் தெரிந்தன. அடடா அவர் அதைக் கவனிக்கவில்லையே.

“மா… இந்த புஜ்ஜிக்குட்டியே இருக்கட்டும்… இது நல்ல புஜ்ஜி…” என்றாள் சுரபி.

“அடி நீ வேற” எரிச்சலுடன் சொன்னாள் சுலோச்சனா.

“பொட்ட நாய வளக்கக் கூடாதுனு நாட்ல சட்டமா போட்டு கீறாங்க?” என வீம்பாகக் கேட்டார் மணிகண்டன்.

“ம் பொட்ட நாய வளத்தா… ஊர்ல இருக்கற மொத்தக் கடா நாய்ங்களும் நம்ப ஊட்ட சுத்திதான் மாநாடு போடும்”

அதுவும் சரிதான்.

ஆனாலும் பெட்டை நாய் என்பதற்காகவே அந்தக் குட்டியைக் கொண்டு போய் விட அவருக்கு மனசு வரவில்லை. அந்த ஊசலாட்டத்திலேயே அன்றைய பகல் பொழுது ஓடிவிட்டது. சுலோச்சனா நாள் பூராவும் அவரையும், அந்த நாய்க்குட்டியையும் திட்டிக்கொண்டே இருந்தாள். மறுநாள் காலையில் கொண்டு போய் விட்டுவிடுவதாக அவளிடம் சொல்லிவிட்டார்.

அன்று இரவு வாசல் கதவுக்கு வெளியே ஒரு அரிசிப் பையை மடித்துப் போட்டு, அதன் மீது அதைப் படுக்க வைத்தார். முன் கால்களுக்குள் தலையை நுழைத்துச் சுருட்டிப் படுத்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்கத் தொடங்கியது. அவர்களும் படுத்து கண்கள் செருகத் தொடங்கிய நேரம் வெளியிலிருந்து “குயோ குயோ குயோ” எனச் சத்தம். நேரம் ஆக ஆக அந்தச் சத்தம் சகிக்க முடியாத அளவுக்குப் போனது. எரிச்சலுடன் எழுந்த சுலோச்சனா பிரிஜ்ஜிலிருந்து கொஞ்சம் பாலை எடுத்துப் போய் நாயின் தட்டில் ஊற்றினாள்.

வேகவேகமாக நக்கிக் குடித்தது. வயிறு நிரம்பியதும் மீண்டும் படுத்துக் கொண்டது. உள்கதவைப் பூட்டி, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள்.

நடு இரவில் மீண்டும் கத்தியது. எரிச்சலோடு புரண்டு படுத்த சுலோச்சனா வாய்க்குள் என்னவோ முனகினாள். மணிகண்டனே எழுந்து போய்ப் பாலை ஊற்றி வைத்தார். வாலை ஆட்டியபடி குடித்ததும் சத்தமில்லாமல் படுத்துக் கொண்டது.

வாசல் விளக்கை அணைத்ததும் மீண்டும் கத்தியது. விளக்கை எரிய விட்டுக் கதவைச் சாத்தினார். கட்டிலில் படுத்தவருக்குக் கண்கள் எரிந்தன.

காலையில் அவருக்கு முன்னதாகவே எழுந்த சுரபி, நாய்க்குட்டியைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சத் தொடங்கிவிட்டாள். இரவெல்லாம் அது கத்தியது அவளுக்குத் தெரியவேயில்லை.

மணிகண்டன் நடைப்பயிற்சிக்குக் கிளம்பிய போது, குட்டியைக் கொண்டு போக அவள் விடவே இல்லை. அழுகையோடு ஒரே ஆர்ப்பாட்டம்.

“சரி ஒரு நாள் போவட்டும் சுலோ” எனச் சொல்லிவிட்டுப் படியிறங்கினார்.

கேட்டைத் திறக்கும்போது பலமான செருமல் சத்தம். திரும்பிப் பார்த்தார். போர்ட்டிகோவில் உட்கார்ந்திருந்த வீட்டின் உரிமையாளர் கைகளில் தினத்தந்தியை விரித்துப் பிடித்திருந்தார்.

“இன்னா சார் ராத்திரிலாம் மேல ஒரே சத்தம் புதுசா நாய்க்குட்டியா?”

“ஆமா சார்…”

“பாத்துங்க சத்தம் அதிகமா இருக்கு” எச்சரிப்பதைப் போலச் சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போய்விட்டார்.

அவருக்காகவே காத்திருந்து சொல்லிவிட்டுப் போனதைப் போல இருந்தது.
கீழ்த்தளத்தில் வீட்டின் உரிமையாளரும், வலது பக்க போர்சனில் பொறியாளர் ஒருவரும் குடியிருந்தனர். மாடியில் இவர் குடியிருந்த போர்சன் போக மீதி இடம் மொட்டை மாடியாக இருந்தது. அதில்தான் மூன்று குடும்பங்களும் துணிகளைக் காயப்போடுவார்கள்.

மறு நாள் காலை மணிகண்டன் நடைபயிற்சிக்கு கிளம்பும்போதும் சுரபி நாய்க்குட்டியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அழுகையும் ஆர்ப்பாட்டமும் மேலும் கூடிவிட்டது.

“இந்த பொட்ட நாயி வேணாம்மா இத உட்டுட்டு வேற ஒரு கடா நாயி எட்த்துகினு வர்றங்”

“பொட்ட நாயி ஏங் வாணா?”

பதில் சொல்வதற்கு அவருக்குச் சங்கடமாக இருந்தது.

“சுரபி பொட்ட நாயி வாணா அப்பாகிட்ட குடு” என அதட்டினாள் சுலோச்சனா.

“பொட்ட நாய்னா இன்னா?”

“பொட்ட நாய்னா கேர்ள் டாக்”

“ஹை என்ன மாதிரி கேர்ளா?”

அவள் மீண்டும் அதைத் தன் வயிற்றுடன் அணைத்துக் கொண்டாள். வேறு வழியில்லாமல் அன்றும் வெறுங்கையோடுதான் கிளம்பினார் மணிகண்டன்.

இப்படியே நான்கு நாட்கள் கடந்துவிட்டன. அதற்குள் அந்த நாய்க்குட்டி தனது சின்ன வாலை ஆட்டியபடி மொட்டை மாடியெங்கும் துறுதுறுவென ஓடத் தொடங்கியது. கருப்புத் திராட்சையைப் போன்ற மூக்கை உறிஞ்சி உறிஞ்சி மோப்பம் பிடித்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவருக்கே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. ஆனால் சுலோச்சனா அப்போதும் பிடிவாதமாகவே இருந்தாள்.

அது மொட்டை மாடியில் உலவிய போது ஒரு இடத்தில் கொஞ்சமாக மலம் கழித்து வைத்திருந்தது. அதை சுலோச்சனா கவனிக்கவில்லை. ஆனால் வீட்டு முதலாளியம்மாள் பார்த்துவிட்டாள்.

“இப்டி மாடில கலீஜ் பண்ணி வெச்சா எப்டி துணிய காயப் போடறது? டெட்டால் போட்டு நல்லா கழுவி உடுங்க கீழ சின்னக் கொழந்திங்க இருக்கு துணில பட்டா இன்பெக்சன் ஆவாதா? நாய்க்குட்டிலாம் சொந்தமா வீடு கட்டி அதுல வளக்கணும்”

கொண்டு வந்த ஈரத் துணிகளை உலர்த்தாமலே திரும்பிவிட்டாள். படியிறங்கும்போது மேலும் என்னவோ முணுமுணுத்தாள். உற்றுக் கேட்டாள் சுலோச்சனா.

“இதுங்களுக்கு வீடு உட்டதே பெரிசு இதுல இதுங்குளுக்கு ஒரு நாயி இதுக்குத்தான இதுங்கள எவனும் கிட்ட சேக்கறதில்ல…”

சுருக்கெனக் குத்தியது சுலோச்சனாவுக்கு.

நாய்க்குட்டியின் மீதும், மணிகண்டன் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அதே ஆத்திரத்தோடு அந்த மலக்கழிவை இரும்பு முறத்தில் வாரிக் கொண்டுபோய்க் கீழே கால்வாயில் கொட்டினாள். பக்கட் பக்கட்டாகத் தண்ணீரைப் பிடித்துப் போய், டெட்டால் கலந்து மாடி முழுவதும் ஊற்றிக் கழுவினாள். கழுவி முடித்த போது இடுப்பும் முதுகும் புண்ணாகி விட்டதைப் போல பயங்கர வலி.

எப்படியோ மனதைக் கல்லாக்கிக் கொண்டு வீட்டிலிருந்து நாய்க்குட்டியோடு கிளம்பிய மணிகண்டன் வெற்றுப் புதரின் முன்பாக நின்று திகைத்துக் கொண்டிருந்தார். தாய் இல்லாத இடத்தில் குட்டியை எப்படி விட்டுப் போவது? வேறு நாய்கள் வந்தால் கடித்துத் தின்று விடுமே.

நடப்பது நடக்கட்டும் என மீண்டும் நாய்க்குட்டியுடனே வீட்டுக்குத் திரும்பினார்.

இவர் சொல்கிற கதையை நம்பாமல் கத்தத் தொடங்கினாள் சுலோச்சனா. குட்டியைப் பூப்போல ஏந்தி கொஞ்சத் தொடங்கினாள் சுரபி. அதைப் பார்த்த சுலோச்சனாவுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. சுரபியையும், நாய்க் குட்டியையும் சேர்த்தே இரண்டு அறை விட்டாள்.

“நீயின்னா பொம்பளயா பேயா? எதுக்குப் பச்ச மண்ணுங்கள இப்டி அடிக்கிற?” என ஆத்திரத்தோடு கத்தினார் மணிகண்டன்.

“ம் நாக்கப் புடிங்கிக்கற மாதிரி அந்தப் பொம்பள கேட்டது எனுக்குத்தான தெரியும்”
“செரி ஒண்ணு செய்வமா? வீட்டு வேல முடியறதுக்கு இன்னும் இருவது நாளுதான இருக்குது இத புது வீட்ல கொண்டு போய் உட்ருவமா?

“ஆளில்லாத வீட்ல விட்டுட்டா அங்க யாரு சோறு போடறது…? எங்கனா தெருவுல கொண்டு போயி விடுங்க… தெரு நாய் தான… எப்டினாலும் பொழச்சிக்கும்…”

“வாணா சுலோ… புது வீட்லயே கொண்டு போய் விடலாம்… பகல்லதான் வேல செய்றவங்க இருப்பாங்களே… ராத்திரில கேட்டுக்கு உள்ளய படுத்துக்கட்டும்… மதியானத்துல நீ அங்க போவும்போது கொஞ்சூண்டு சோறு எடுத்தும்போயி போட்டுடு…”

சுலோச்சனா எதுவும் சொல்லாமல் கோபத்தோடு சமையலறைக்குள் போய்விட்டாள். குளித்து, சாப்பிட்டு, அலுவலகம் கிளம்பும்போது, நாய்க்குட்டியையும் ஒரு கட்டைப் பையில் வைத்து, அதை வண்டியில் மாட்டிகொண்டு கிளம்பினார்.

புது வீட்டில் ஒயரிங் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. நாய்க்குட்டியைப் பையிலிருந்து எடுத்து போர்ட்டிகோவில் விட்டார். தாராளமான புதிய இடத்தில் துள்ளிக்கொண்டு ஓடியது. படியின் கீழே ஆச்சாரி கழித்துப் போட்டிருந்த மரத்துண்டுகளையும், காலியான டைல்ஸ் பெட்டிகளையும் கிளறி, முகர்ந்து குதியாளம் போட்டது.

“நாய்க்குட்டி இங்கயே இருக்கட்டும்பா… கேட்டுக்கு வெளிய போவாம பாத்துக்க… சாயந்தரம் போவும்போது காம்பவுண்டுக்கு உள்ளயே விட்டு பூட்டிட்டுப் போய்டு….”

எலக்ட்ரீசியன் தலையாட்டினார்.

மதியம் அங்கே போன சுலோச்சனா, கேட்டைத் திறந்து உள்ளே நுழையும்போதே… வாலை ஆட்டிக் கொண்டு ஓடிவந்த நாய்க்குட்டி, அவள் புடவையின் மீது முன் கால்களைத் தூக்கிப் போட்டுத் தாவியது.

கொண்டு போன சோற்றில் கொஞ்சமாகப் பாலைக் கலந்து… வேண்டாவெறுப்பாக அதன் முன்பாக வைத்தாள். மாலை இருட்டத் தொடங்கியதும், மீதமிருந்த சோற்றையும் அதற்குப் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

அன்று இரவெல்லாம் நாய்க்குட்டியின் நினைவாகவே இருந்தது மணிகண்டனுக்கு. இரவில் அது தனியாகக் கத்துவதைக் கேட்டு… தெருநாய்கள் உள்ளே புதுந்துவிட்டால்… கடித்துக் குதறிக் கொன்றுவிடுமே. ஆனால் அந்த கேட்டில்… குட்டி நாய்கள் கூட உள்ளே நுழைய முடியாது. ஆனாலும் இரவெல்லாம் அவருக்குத் தூக்கமே வரவில்லை.

மறுநாள் காலையில் சீக்கிரமாகவே கிளம்பி அங்கே போனார். கேட்டைத் திறக்கும் போதே கேட்டை நோக்கி ஓடிவந்த நாய்க்குட்டி அவரைப் பார்த்து வாலை வேகவேகமாக ஆட்டியது.

அப்போதுதான் அவருக்கு நிம்மதி வந்தது. டிபன்பாக்சில் கொண்டு போன பாலை தட்டில் ஊற்றி வைத்ததும் அசுர வேகத்தில் நக்கிக் குடித்தது.

எலக்ட்ரீசியன் வந்து வேலையைத் தொடங்கினார். அவருக்குப் பிறகு வந்த ஆச்சாரி கட்டைகளை இழைக்கத் தொடங்கினார். நாய்க்குட்டி போர்ட்டிகோவில் ஓடுவதும், வீட்டுக்குள் நுழைந்து எகிறுவதுமாக ஆடத் தொடங்கியது.

“சார் இது குறுக்க நெடுக்க ஓட்னா எங்களால வேலயே செய்ய முடியாது ஓரமா கட்டி வைங்க சார்” என்றார் எலக்ட்ரீசியன்.

ஒரு நூல் கயிறைத் தேடிப்பிடித்து, அதன் பிஞ்சுக் கழுத்தில் கட்டி, அதைக் கேட்டில் கட்டும் போது அவருக்கே மனசு கனத்தது.

“சாயந்தரமா போவும்போது அவுத்து உட்ருப்பா” என்றார் எலக்ரீசியனிடம்.

ஒரு வழியாகப் புதுமனைப் புகுவிழா முடிந்தது. பழைய வீட்டிலிருந்து கொண்டுவந்த சாமான்கள் முழுமையாக அடுக்கி முடிந்தபாடில்லை. வந்திருந்த உறவினர்களெல்லாம் போன பிறகு, அந்தச் சாமான்களை அடுக்கவே சுலோசனாவுக்கு இடுப்பு ஒடிந்தது. நாய்க்குட்டியோ பகலெல்லாம் காம்பவுண்டுக்குள் குதூகலமாகக் குதித்துக் குதித்து ஆடிக்கொண்டிருந்தது. சுரபியும் அதனுடனே ஆடிக்கொண்டிருந்தாள்.

ஐப்பசி மாத ஊமை வெய்யிலில் வீட்டுக்குள் புழுக்கமாக இருந்தது. பெயின்ட் வாசனை வேறு. அந்த லட்சணத்தில் இருட்டுகிற நேரத்தில் மின்சாரமும் போய்விட்டது. ஒரு மணி நேரமாகியும் மின்சாரம் வரவில்லை.

“கரண்டு வர்லனா ராத்திரி எப்டி தூங்கறது?” என்றாள் சுலோச்சனா.

“போர்ட்டிக்கோல படுத்துக்கலாமா.?“ நெற்றியில் துளிர்த்த வியர்வையை டவலால் துடைத்தபடி கேட்டார் மணிகண்டன்.

“வெளியவா?“ தயக்கமாகக் கேட்டாள் சுலோச்சனா.

“அய் ஜாலி புஜ்ஜிக் குட்டி கூடவே படுக்கலாம்பா” எனக் குதித்தாள் சுரபி.

அவளை முறைத்தாள் சுலோச்சனா.

“இந்தப் புழுக்கத்துல உள்ள எப்டிபா படுக்கறது?”

“அந்தச் சனியன கேட்ல கட்டிப் போட்டுட்டுதான் படுக்கணும் இல்லனா மேல வந்து எகிறி குதிச்சி தூங்கவே உடாது” என்றாள் சுலோச்சனா.

எமர்ஜென்சி விளக்கு வெளிச்சத்திலேயே உணவு சமைத்து, சாப்பிட்டு முடிந்ததும், இரவு உடைக்கு மாறினாள் சுலோச்சனா. முகம் கழுவி முகத்திற்கும் கழுத்திற்கும் லேசாகப் பவுடர் பூசிக்கொண்டாள். பிளாஸ்டிக் பாயை போர்ட்டிகோவில் விரித்து, அதன்மீது ஒரு விரிப்பையும் விரித்தாள். வரிசையாக மூன்று தலையணைகளை வைத்தாள். நாளெல்லாம் ஓயாத வேலை. அடித்துப் போட்டதைப் போல அசதி. அலுப்புடன் பாயில் விழுந்தாள்.

நாய்க்குட்டிக்கு ஒரு தட்டில் கொஞ்சம் சோறும் பாலும் கலந்து வைத்து, அதை கேட்டில் கட்டினார் மணிகண்டன். கட்டிப் போட்டதும் எகிறி எகிறிக் குதித்து முன் கால்களை நீட்டி குயோ குயோ எனக் கத்தியது.

சுலோச்சனாவின் பக்கத்தில் படுத்த மணிகண்டன் சுரபியை நடுவில் படுக்க வைத்தார். நாய்க்குட்டியைப் பார்த்தபடி ஓரமாகத்தான் படுப்பேன் என அடம்பிடித்து அவருக்கு முன்பக்கமாக கேட்டைப் பார்த்படி படுத்துக் கொண்டாள் சுரபி.

அது புறநகர்ப் பகுதி. அப்போதுதான் சில வீடுகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. தெரு விளக்குகள் இன்னும் வரவில்லை. நட்சத்திரங்களின் மங்கலான வெளிச்சத்தில் சுற்றிலும் பீர் இருட்டு குழைந்து கிடந்தது. வனாந்திரத்தைப் போன்ற பெரும் அமைதி. இவர்களின் பிளாட்டுக்குப் பக்கத்திலேயே விளை நிலம். அதில் ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த தீவனப் புற்கள். அதைச் சுற்றிலும் பெரிய பெரிய முள்புதர்கள். வேலியில் கத்தும் செடிப் பூச்சிகளின் தொடர் இரைச்சல்.

நாய்க்குட்டியும் அவர்களைப் பார்த்துப் பார்த்துக் கத்தத் தொடங்கியது.

“இது இப்டியே கத்திகினு இருந்தா எப்டி தூங்கறது? வெரட்டி உடச் சொன்னா அப்பாவும் பொண்ணும் எங்க கேக்கறீங்க” சலித்துக் கொண்டாள் சுலோச்சனா.

“கொஞ்ச நேரம் கத்திட்டுப் படுத்துடும்…”

சுலோச்சனாவை மார்போடு சேர்த்து அணைத்து, அவளுடைய பின் கழுத்தின் பவுடர் வாசனையை முகர்ந்தபடி கண்களை மூடிக் கொண்டார் மணிகண்டன்.

நாய்க்குட்டி படுக்காமல் கத்திக் கொண்டே இருந்தது.

“இந்தச் சனியன் நிம்மதியா தூங்க உடாது” என முணுமுணுத்தவாறு புரண்டு படுத்தாள் சுலோச்சனா. அவளுக்குத் தூக்கமே வரவில்லை. நாய் கத்திக் கத்திக் களைத்துப் போய்ப் படுத்துக் கொண்டது. சுரபியும், மணிகண்டனும் தூங்கி நீண்ட நேரம் கடந்த பிறகுதான் அவளுக்குத் தூக்கம் வந்தது.

நடுநிசியில் மூவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். நாய்க்குட்டி மீண்டும் கத்தத் தொடங்கியது. இருட்டில் சங்கிலியை டர் டர் என இழுத்துக்கொண்டு ஆவேசமாகக் குறைப்பதும் எகிறி எகிறிக் குதிப்பதுமாக இருந்தது. சுலோச்சனாவுக்கு விழிப்புத் தட்டிவிட, ஒரே எரிச்சலாக இருந்தது.

மனதுக்குள்ளேயே நாயைத் திட்டியபடி, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். மீண்டும் அவள் தூங்குவதற்கு நீண்ட நேரமானது. நாய்க்குட்டி கத்துவதும். எகிறிக் குதிப்பதும் கனவில் கேட்பதைப் போல கேட்டுக் கொண்டே இருந்தது.

வேலியிலிருந்த நுனா மரத்தில் குருவிகள் கத்துவதைக் கேட்டதும் சட்டெனக் கண் விழித்தாள் சுலோச்சனா. மசமசவெனப் பொழுது விடியத் தொடங்கியிருந்தது. உடனே மணிகண்டனை உசுப்பினாள்.

“ஏங்க… எழுந்து உள்ள போயி படுங்க வாசலத் தெளிக்கணும்”

என்றபடி எழுந்து தலைமாட்டிலிருந்த சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு, கேட்டைப் பார்த்தாள். அரைகுறை இருட்டில் கால்களைப் பரப்பியபடி படுத்துக் கிடந்தது நாய்க்குட்டி. அதைப் பார்த்ததும் அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

“ராத்திரிலாம் தூங்க உடாம கத்திட்டு கால களப்பிகினு நல்லா தூங்குது பாரு சனியன்”

முனகிக்கொண்டே கேட்டை நோக்கி நான்கடி எடுத்து வைத்தவள் அப்படியே துள்ளிக் குதித்தாள். பயத்தில் தடதடவென அவள் உடல் அதிரத் தொடங்கியது.

ஒரு முழம் நீளமுள்ள பாம்பு ஒன்று நாய்க்குட்டியின் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது.

“பாம்பு… பாம்பு…” எனக் கத்தினாள்.

அவளின் அலறலைக் கேட்டுப் பதறி எழுந்தார் மணிகண்டன். கண்களை விரியத் திறந்து பார்த்தார். கருப்பும், பழுப்பும் கலந்த அழுக்கு நிறத்திலிருந்தது பாம்பு. அதன் உடல் முழுவதும் மணிகளைக் கோர்த்து வைத்ததைப் போல வளையம் வளையமாக இருந்தது.

“அய்யோ கட்டு விரியன் பாம்பு தூரமா வா” எனக் கத்தினார்.

சட்டெனப் பின்னால் வந்தாள் சுலோச்சனா. ஓடிப் போய்ப் படியின் கீழிருந்த ஒரு பெரிய கம்பை எடுத்து வந்தார். பாம்பை அடிக்கக் கம்பை ஓங்கினார். ஆனால் அவ்வளவு சத்தத்திற்கும் அசையாமல் படுத்திருந்தது பாம்பு. சந்தேகத்தோடு அதை உற்றுப் பார்த்தார். அதன் உடலில் சில இடங்களில் காயங்கள் தெரிந்தன. நாய்க் குட்டியும் பாம்பைப் போலவே அசைவின்றிப் படுத்துக் கிடந்தது. அவருக்குப் புரிந்து போனது.

“நாய்க்குட்டி பாம்ப கட்ச்சி சாவச்சிட்டு கீது அய்யோ பாம்பும் நாய்க்குட்டிய கட்ச்சிச்சா?”

அதைக் கேட்டதும் மேலும் உடல் நடுங்கியது சுலோச்சனாவுக்கு.

“கேட்ல நாய்க்குட்டி மட்டும் இல்லனா பாம்பு நேரா நம்ப கிட்டதான வந்திருக்கும் அய்யோ” என மீண்டும் அலறினார்.

அவரை பீதீயோடு பார்த்தாள் சுலோச்சனா.

“நம்ப பக்கமா வந்திருந்தா முன்னால பட்த்துகினு இர்ந்த சுரபியதான கடிச்சிருக்கும்” கம்பைக் கீழே வீசிவிட்டுத் திரும்பிய மணிகண்டன் சட்டென ஓடி சுரபியைத் தூக்கி அணைத்துக் கொண்டார்.

“கட்டுவிரியன் பொல்லாத விசமாச்சே” என்றார் திகிலுடன்.

சுலோச்சனாவின் உடல் நடுக்கம் நிற்கவே இல்லை. சுரபியை அவரிடமிருந்து வாங்கி, மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளின் கன்னத்திலும் கழுத்திலும் ஆவேசமாக முத்தமிட்டாள்.

“நாய்க்குட்டி அசையவே இல்லியே… செத்துட்ச்சா…”

சுலோச்சனாவும் மனம் பதைக்க நாய்க்குட்டியைப் பார்த்தாள். இமைகளைச் சுறுக்கியபடி கண் விழித்த சுரபி முதலில் நாய்க் குட்டியைத்தான் பார்த்தாள்.

“புஜ்ஜி… ஸ்… ஸ்….” என்றாள்.

அது எந்த அசைவுமில்லாமல் அப்படியே கிடந்தது. மணிகண்டனுக்கும் சுலோச்சனாவுக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“புஜ்ஜி… புஜ்ஜி….” என மீண்டும் சத்தமாகக் கத்தினாள் சுரபி.

திடீரெனக் காதுகளை அசைத்தது நாய்க்குட்டி. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தது. படாரென எழுந்து நின்றது. சடசடவென வாலை ஆட்டியது.

மணிகண்டனும் சுலோச்சனாவும் நம்ப முடியாமல் பார்த்தனர். முன் கால்களைத் நீட்டி பின் கால்களில் நின்று சுலோச்சனாவைப் பார்த்துக் குதிக்கத் தொடங்கியது. கைகளை நீட்டித் தூக்கச் சொல்லி குதிக்கும் சுரபியைப் போலவே தெரிய….

சுரபியைக் கீழே இறக்கிவிட்டு, இரண்டே எட்டில் அதை நெருங்கினாள் சுலோச்சனா.


Art : mavenart.com

கவிப்பித்தன் .
கவிப்பித்தன் .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீவாநதிக்கரை (பொன்னை நதி) கிராமமான வசூர் கிராமத்தில் பிறந்தவர். விலங்கியலில் இளம் அறிவியல் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கியவர். தற்போது தமிழக அரசின் வருவாய்த்துறையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

வட மாவட்ட மக்களின் வாழ்வியலை, அம்மக்களின் வட்டார வழக்கிலேயே தொடர்ந்து எழுதிவருகிறார்.
இதுவரை 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 2 கவிதைத் தொகுப்புகள் என எழுதியுள்ளார். சிறந்த நாவலுக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, எஸ்.ஆர்.எம்.தமிழ்ப்பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, சைளமா இலக்கிய விருது, சிறுகதைத் தொகுப்புகளுக்காக ஜெயந்தன் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எழுச்சித் தமிழர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
பல்வேறு பத்திரிகைகளில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

Share :

One response to “நாய்கள் சூழ் உலகு”

  1. பாரத் தமிழ்
    பாரத் தமிழ்
    December 2, 2025

    நல்ல கதை அண்ண. பெட்டை நாயையையும் வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைப்பதே கதையின் நோக்கமாகப் புரிந்து கொள்கிறேன்.அதோடு, சுலோச்சனாவை அது வென்றது நல்ல முடிவு.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top