வாளினால் மரத்தை அறுக்கும் ஒலியைக் கேட்டு கண்விழித்தவன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, பால்கனிக்குச் சென்று தெருவைப் பார்த்தான். குத்திருட்டில் ஒன்றும் தெரியவில்லை. எதிரில் ஒரு விளக்கு சிறிய அளவிலான இடத்தை வெளிச்சமாக்கியது. தடிமனான கயிறு மேலிருந்து கீழாக இறங்கிக்கொண்டிருந்தது அதில் தெரிந்தது. டார்ச்சை அடித்துப் பார்த்தபோது. முன்னிருந்த பழமையான வேப்பமரத்தின் ஒரு பெரிய கிளையை முறித்து, அக்கம்பக்கத்தினரின் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்று நிதானமாக இறக்கிக்கொண்டிருந்தார்கள். மரச்செதில்களின் உட்புறம் இருட்டிலும் லேசாகத் தெரிந்தது. அதற்குள் ஓரிரு கொசுக்கள் உள்ளே நுழைந்திருக்கும் என்று நினைத்தவன் கதவை மூடிக்கொண்டு படுத்தான். கண்கள் செருகிக்கொண்டு வரும் நேரம் கதவு தட்டப்பட்டது. தட்டப்பட்ட நேரம் “நான் யார்?” என்ற தன்னிலை சார்ந்த ஆழமான கேள்வி மூளையில் உருவாகி நடுக்கத்தை உருவாக்கியது. அதற்கு இணையான பதற்றம் இந்த நேரம் கதவின் மறுபக்கம் யார். பயத்துடன் டார்ச்சை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தான்.
வெளியிருந்து எட்டு மனிதர்கள் மூச்சு வாங்கியபடி உள்ளே நுழைந்து கைகளில் இருந்ததைக் கீழிறக்கி வைத்தார்கள். சில விநாடிகள் அவர்களால் எதுவும் பேச முடியாதபடிக்கு அதன் கனம் இருந்தது. “யார் நீங்கள்? இந்த நேரம் என்ன நடக்கிறது?” என்று பதறிக்கொண்டிருந்தார்கள். “எங்கள் முதலாளி பணம் கொடுத்து இதைச் செய்யச் சொன்னார். அவர் இங்குதான் வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தொந்தரவாக இருக்கப் போகிறது” என்று சொல்லி குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். இத்தனை கனமுள்ள மரக்கிளையை மூன்று மாடி தூக்கி வந்ததில் அவர்களின் மொத்த ஆற்றலும் இழந்து காணப்பட்டார்கள். நீரைக் குடித்துவிட்டு உடனே கிளம்பிவிட்டார்கள். கதவை மூடிக்கொண்டவன் குழப்பமடைந்தான். இத்தனை ஆண்டுகள் நின்றுகொண்டிருந்த மரத்தின் கிளை இப்போது எதற்காக என் வீட்டின் நடுவில் இருக்கிறது என்று கேட்டுக்கொண்டு ஜன்னலைத் திறந்து பார்த்தான்.
கிளை வெட்டப்பட்ட இடத்தில் வானம் பிரகாசமாகத் தெரிந்தது. மின்சாரம் இல்லாதபோதிலும் நல்ல வெளிச்சம் இருந்தது. சிறுவயதிலிருந்து நேர்கோட்டில் தெரியும் அந்த மூன்று நட்சத்திரங்கள் தெரிகிறதா என்று பார்த்தான். அது இரவு ஒன்பது மணிக்குத்தான் இந்த இடத்தில் தெரியும். காற்று அதிகமாக இருந்த ஒருநாளில் மரக்கிளைகள் இடையே ஒருநாள் பார்த்திருந்தான். இந்நேரம் மூன்று மடங்கு தூரத்தைக் கடந்திருக்கும். இருந்தபோதிலும் பளிச்சென்று மின்னும் ஒரு நட்சத்திரத்தையும் அருகே லேசாக மின்னும் ஒரு நட்சத்திரத்தையும் அப்போது கண்டான். ஜன்னலை மூடிவிட்டு அந்த மரத்தின் வெட்டப்பட்ட பகுதியைப் பார்த்துக்கொண்டு அவனை அறியாமல் கால்கள் மரத்தைச் சுற்றிவரச் செய்தது. அப்போது அங்கே அழுகிய திராட்சைப் பழத்தின் வாசம் வீசத் தொடங்கியது. இந்தக் கிழமையில் பழக்கடையில் திராட்சை வாங்கவில்லையோ என்று யோசித்தவன், ஒருவேளை இந்த அதிர்ச்சியில் திராட்சை வாங்கியிருந்ததை மறந்திருக்கலாம் என்று பழங்கள் வைக்கும் கூடையில் பார்த்தான். அத்திப் பழங்களும், உலர்ந்து போயிருந்த ஒரு மாதுளைப் பழமும் இருந்தது. தொட்டால் புகை வந்துவிடும் அளவிற்குக் காய்ந்து போயிருந்தது. இவ்வளவு உலர்ந்து போகுமளவிற்குக் கடந்த மூன்று தினங்கள் வெயில் இருந்ததா என யோசித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
இப்போது அவர்களின் முதலாளியாகத்தான் இருக்கும் என்று கதவைத் திறந்தான். ஒரு வயதானவர் சட்டையில்லாமல் கையில் ஒரு சாக்குமூட்டையை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். “நீங்களெல்லாம் யார்? எதற்காக இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது அவர்கள் கதவை அடைத்துவிட்டு கோணிப்பையில் இருந்து ஒரு கூர்மையான வாளை எடுத்து வெளியே வைத்தார். அவர் கண்கள் மிகவும் உக்கிரமாகக் காணப்பட்டன. வாயில் எதையோ மென்று கொண்டிருந்தவர் “எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கீழே வை” என்றார். பதற்றத்தில் எடுத்து வைக்கப் போனவனைத் தன் வாளினால் தடுத்து, “நான் உன்னைச் சொல்லவில்லை, என் சிஷ்யனைச் சொல்கிறேன்” என்றான். அவர் அப்படிச் சொன்னதும் அவன் உடல் பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. “சிஷ்யனா? என்னையும் இந்த முதியவரையும் தவிர இந்த வீட்டில் யார் உள்ளது?” என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது கோணிப்பையில் இருந்த பொருட்கள் அதுவாகத் தரையில் வந்தன. உளிகள் ஆணிகள், உட்பட சில கருவிகள் தரையில் அமர்ந்துகொண்டன.
அதற்குப்பின் அங்கே என்ன நடந்தது என்று அவன் நினைவில் தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து முதியவர் கைகளில் இருந்து நீர் அவன் கண்களை நனைப்பது போல் இருக்க பதற்றமாக எழுந்தான். “நான் கிளம்புகிறேன். வந்த வேலை முடிந்தது. நான் ஒரு நேர்மையான தச்சன். பணி என்று வந்துவிட்டால் இரவுபகல் பார்க்காமல் வேலையை முடித்துக்கொடுப்பேன். நானும் என் உதவியாளரும் உங்களைத் தொந்தரவு செய்ததாக நினைத்தால், தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள். கிளம்புகிறோம், வாசலை நன்றாக அடைத்து வையுங்கள்” என்று சொல்லி புறப்பட்டார்கள். அவர்கள் கிளம்பும்போது மழைத்துளிகள் விழத்தொடங்கின. சிறு சாரல் மழை என்றபோதிலும் வீட்டிற்குள் எப்படி மழை பெய்யும் என மேலே பார்த்தான்.
கான்கிரீட் கூரை பிளக்கப்பட்டிருந்தது. காற்று அடித்ததில் அவன் முகத்தின் முன்னால் தூக்குக் கயிறு ஒன்று ஆடிக்கொண்டிருந்தது. ஆம், அவன் முன்னால் ஐம்பது அடியில் பிரமாண்டமான தூக்குமேடை உருவாக்கப்பட்டிருந்தது. காற்று அதிகமாக வீசி மழையை வேறு திசை நோக்கி நகர்த்திச் சென்றது. அவர்கள் சென்றபிறகுதான் அங்கே என்ன நடந்திருக்கிறது என்று முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடிந்தது. மின்சாரம் மட்டும் போகாமல் இருந்திருந்தால் இது எதுவுமே நடந்திருக்காது என்று எரிச்சலில் மின் அலுவலகத்திற்கு போன் செய்தான். நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார். மீண்டும் ஜன்னலைத் திறந்து பார்த்தான். இதற்கு முன்பாக பார்த்த இரு நட்சத்திரங்களும் இடம் மாறாமல் அங்கேயே இருந்தன. ஜன்னலை அடைத்துவிட்டு, கோபமாக அந்தத் தூக்குமேடையை அப்புறப்படுத்தலாம் என்று தன் முழுப்பலத்தையும் செலுத்து நகர்த்திப் பார்த்தான். தூக்குமேடை தரையோடு ஒட்டிவைக்கப்பட்டிருப்பது ஒரு இன்ச் கூட நகராமல் இருந்தது.
இந்தமுறை கதவு தட்டும்போது அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. அதற்குமுன்பாக குதிரை கணைப்பது கேட்டபோதே கதவு தட்டும் சப்தம் அடுத்ததாகக் கேட்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டான். கடைசியாக அந்த மனிதன் வந்தான். இவன் மனதிலிருந்து கற்பனைகள் நெஞ்சை அடைக்கும் விதமாக இருந்தது. “நீ யார்.. எதற்கு வந்தாய்? என்னைக் கொலை செய்யப் போகிறாயா?” இதுபோன்று திரும்பத் திரும்பக் கேட்கும் அர்த்தமற்ற இரைச்சல்களைப் பொருட்படுத்தாதவனாக, வந்தவன் நிழல் அசைவது போல் அவன் காலில் விழுந்து வணங்கினான். அதுவரை ஒடுங்கிப் போயிருந்தவனின் உடல் விறைப்பாக மாறத்தொடங்கியது.
அவன் முகம் தெரியவில்லை. வடிவம் தெரிந்து இப்படியாக இருப்பான் என்று மனதில் கற்பனையாக ஓர் உருவத்தை எண்ணிக்கொண்டு அவனைப் பார்த்தான். காலில் விழுந்தபிறகு இவன் வாயிலிருந்து ஒரு சொல் கூட சப்தமாக வெளிவரவில்லை. சிறு இடைவெளி விட்டு, “என்னைத் தெரியவில்லையா? இதை நீங்கள்தான் என்னிடம் தந்தீர்கள்” என்று ஒரு வெள்ளி மோதிரத்தைச் சட்டைப்பையில் இருந்து எடுத்துக்கொடுத்தான். அதை ஜன்னலருகே வைத்துப் பார்த்தபோது செந்நிறத்தில் செங்கோல் முத்திரை ஒன்று காணப்பட்டது. நட்சத்திரங்கள் நகரவில்லை. துகள்கள் நகர்ந்துகொண்டும், சுழன்றுகொண்டுமிருந்தன.
இரவின் சப்தங்களும் சீராக இருந்தன. வந்திருப்பது யார் என்பது இப்போது அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது. அவன் பேசத் தொடங்கினான். “எங்கள் வம்சத்தில் உள்ளவர்கள் அயோக்கியர்கள்தான். பலநூறு மக்களை என் தந்தையும், பாட்டனும் கொன்று குவித்தது உண்மை. அதை நான் ஒருநாளும் மறுக்கவில்லை. அவர்கள் இரத்தம் என்பதற்காக என்னையும் தீய சக்தி என்று ஏன் நினைத்தீர்கள்? என் வாரிசுகளை ஏன் கொன்றீர்கள்? அவர்களைக் கொன்றதில் எனக்கு வருத்தம் இல்லை. அது என் பாட்டனின் வினை. என்னை நீங்கள் அவர்களைப் போன்றவன் என்று நினைத்ததுதான் என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை” என்று சொல்லும்போது அவன் குரல் கவ்வத் தொடங்கியது. கண்ணீரின் நிழலைக் கற்பனை செய்துகொண்டிருக்கையில் மீண்டும் திராட்சைப்பழ வாசனை. உலர்ந்திருந்த மாதுளை உடையும் சப்தம். புகை வெளிவருகிறதா என்று திரும்பிப் பார்த்தான். மீண்டும் பேசத் தொடங்கினான். “நான் இந்த இரவில் உங்களைத் தேடி வந்ததன் காரணம், நான் மோசமான மனிதன் இல்லை என்பதனைப் புரிய வைக்க அல்ல.”
என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது விறைப்பாக இருந்த உடல் தளர்வாகி ஒடுங்குவதும், ஒடுங்குவது விறைப்பாகவும் மாறுவதாக அவன் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. “நான் என் காதலி மேல் வைத்த பாசம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவன் தூக்கு மேடையில் பிணமாகத் தொங்குவதைப் பார்த்துக்கொண்டே ஒயின் அருந்த ஆசைப்பட்டாள். அந்த ஆசைக்காகத்தான் உரிமையோடு தூக்குமேடையைச் செய்துகொண்டு உங்களைப் பார்க்க வந்தேன். என் மனைவியின் ஆசையை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டீர்கள். அவள் எவ்வளவு துடிதுடித்துப் போயிருப்பாள் என்று கற்பனை பண்ண முடிகிறதா?. ஒத்துக்கொள்கிறேன். எங்கள் குடும்பத்தினர் கொலைகாரர்கள் என்று தெரிந்தபின்னரும், என்னோடு இருந்தவர்களுக்கு நல்ல பதவிகளையும், கார், வீட்டைக் கொடுத்து அழகு பார்த்தீர்கள். என்னால்தான் அனைத்தும் நடந்தது என்று இதோ சற்று முன்பாக நான் இங்கே நுழைந்தபோது எப்படி உங்கள் காலில் விழுந்து வணங்கினேனோ, அவ்வாறாக அனைவரும் எனக்கு மரியாதை செலுத்தினார்கள். அவன் ஒருவனைத் தவிர. எவ்வளவு ஆணவம்? எனது உறவினன்தான். மறுக்கவில்லை. என்னால் அவனுக்கு வசதி வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அது என்ன அவன் தகுதியினாலா? சரி தகுதி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஊரில் தகுதி உள்ளவர்கள் அனைவருக்கும் இவனுக்குக் கிடைத்தது போல் அனைத்தும் கிடைத்ததா? என்னால் தானே நடந்தது? சரி அதையாவது விடுவோம். இவன் என்னிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்வதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இவனைப்போல் மரியாதையைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் ஆழ்மனம் யோசிக்காதா?” அவன் பேசுவதை மெளனமாக நகராமல் இருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தான்.
“அதற்காக அவன் தலையைக் கொய்து ஒரு தட்டில் வைத்து அவன் காரின் முன்பாக வைக்கவேண்டும் என்று ஒருமுறை மனதில் நினைத்தது உண்மை என்றாலும் அப்படிச் செய்ய நினைத்ததில்லை. கோபம் ஒருநாள் தலைக்கேறியபோது அப்படி நினைக்கத் தோன்றியது. நான் வந்து உங்கள் முன்பாக மண்டியிட்டது என் அன்பிற்காக, காதலியின் ஆசைக்காக, அதற்குப் பின் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? தூக்குமேடையில் தொங்கும் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு ஒயின் குடிக்க முடியாததால் அவள் அதற்குப்பிறகு நீராகாரத்தை முழுவதும் நிறுத்திச் சில தினங்களில் உயிர் துறந்தாள். நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளேன்.
இந்த முறையாவது திமிர்பிடித்த அவனைக் கண்டுபிடித்துத் தூக்கில் போடவேண்டும். நாற்பது அடிக்கு மேல் உயரமாக இருப்பதால் வந்த ஆணவம். அவனுக்காக அப்போது செய்த தூக்குமேடை செதில் அரித்துப் போய்விட்டது. இளம் பலா மரம். சீக்கிரம் உளுத்துவிட்டது. இது நல்ல வயதான மரம். அவள் ஆத்மா சாந்தி அடைவது உங்கள் கையில்தான் உள்ளது” என்று மூச்சுவிடாமல் பேசிமுடித்துவிட்டு மீண்டும் அவன் காலில் விழுந்து வணங்கினான்.
அதுவரை அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் பேசத் தொடங்கினான். “கண்டிப்பாக உன் காதலியின் ஆசையை நிறைவேற்றுகிறேன். அதற்கு முன்பாக ஒன்றைத் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. உன் குடும்பம் சதிகாரர்கள் என்பதனால், நீயும் கெட்டவனாக இருப்பாய் என்று நம்பவில்லை. அப்படி நம்பியிருந்தால் உனக்கும், உன் நண்பர்களுக்கும் நல்ல காரியங்களைச் செய்திருக்க மாட்டேன். உன் காதலியின் ஆசையைக்கூட நிறைவேற்றலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று அதிகாலை நான் கண்ட கனவுதான் என் முடிவை மாற்றச் செய்தது. என் காதலியும் ஒரு முக்கியக் காரணம். அதைச் சொல்வதில் தயக்கமில்லை. அவள் எப்படிக் காரணமாவாள் என்பதை உன்னுடயை சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். சரி இத்தனை ஆண்டுகள் கழித்து அவனை நாம் எப்படி கண்டுபிடிப்பது?” என்று சொன்னபோது மீண்டும் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
இருவரும் ஒருவர் நிழலை ஒருவர் பார்த்துக்கொண்டு கதவைத் திறந்தார்கள். சற்று முன்பாக தூக்குமேடையைத் தயாரித்துவிட்டுச் சென்ற நேர்மையான தச்சன் நின்றுகொண்டிருந்தார். “மன்னிக்கவும், நான் கிளம்பிச் செல்லாமல் இங்கே என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் சுவருக்கு மறுபக்கமாக நின்று நீங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தேன். நான் செய்தது தவறுதான். என்றாலும் உங்களுக்குத் தேவையான உதவியை என்னால் மட்டும்தான் செய்ய முடியும். ஆம், நீங்கள் தேடும் மனிதன் எங்கிருக்கிறான் என்று என்னால் சொல்ல முடியும்? எப்படி என்று யோசிக்கிறீர்களா? ஒருநாள் கட்டில் செய்வதற்காக என்னைத் தேடி வந்தான். அதற்காக அவன் ஒரு லாரி நிறைய மரத்துண்டுகளை இறக்கினான். மொத்தம் எத்தனை கட்டில்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வமாகக் கேட்டேன். ஒரே ஒரு கட்டில் செய்தால் போதும் என்றான்.
ஒரு கட்டில் செய்ய இத்தனை பலகைகளா? அப்புறம்தான் தெரிந்தது ஐம்பது அடியில் ஒரு கட்டில் செய்ய வேண்டும் என்றும், அந்த மனிதன் நாற்பது அடிக்கு மேலே இருப்பான் என்றும். அத்தனை பெரிய கட்டிலை என் வாழ்வில் செய்வேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. நாங்கள் கட்டிலைச் செய்து முடித்து வீட்டிற்குப் போகும்போது அவன் அங்கில்லை. ஆனால் வீடு தெரியும்.”
மறுநாளே மூவரும் அவன் வசிக்கும் தெருவிற்கு வந்தனர். அவனைப்பற்றி அங்கிருந்த மக்களிடம் விசாரித்தபோது எல்லாரும் சொன்ன ஒரே வார்த்தை “அவன் ஒரு பைத்தியக்காரன்”. அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று கண்டுபிடித்துத் தேடிச் சென்றபோது தேநீர்க்கடையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த சக தேநீர் பிரியர்கள் “பைத்தியம் பேப்பர் படிக்குது பாரு ” என்று கேலியாகச் சிரித்தார்கள். அவன் கொஞ்சம்கூட அவர்களைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. வாசித்து முடிக்கும் வரையிலும் சோர்வடையாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள். வாசித்து முடித்தவன் நெருப்புப்பெட்டியை எடுத்துவந்து செய்தித்தாளின் நடுவில் பற்றவைத்து எரித்துவிட்டு,கொஞ்சம் எரிந்ததும் கையினால் அணைத்தான். வட்டவடிவில் நெருப்பு எரிந்திருந்தது. அத்துவாரத்தின் வழியாக அவன் அவர்களை பார்த்தான்.
அவர்கள் சிரிக்காமல் முகத்தைப் பதற்றத்துடன் வைத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினார்கள். அருகேயிருந்த செங்கற்சூளையில் செங்கல்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். இவன் உயரத்தைப் பார்த்ததும் பணியாள்கள் பதறிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவன் ஒவ்வொரு செங்கலையும் தரையில் போட்டு உடைக்கத்தொடங்கினான். சிறுசிறு கற்களாகக் கிடந்தவற்றை மண்ணாக்கி மண்ணோடு கலக்கினான். என்ன நடக்கிறது என யோசித்தவாறு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த முதியவரின் வெண்மயிரில் செங்கல்தூளை போட்டதும், “பைத்தியம், பைத்தியம்” திட்டிவிட்டுச் சென்றார். மனிதர்களின் உச்சந்தலையை அவனால் எளிதாகப் பார்க்க முடிவதால் அவன் சேட்டை பெரும்பாலும் அங்கேயே இருந்தது. இவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று ஆச்சரியமாக மூவரும் பின்தொடர்ந்து சென்றார்கள். பின்னால் குதிரை வண்டியில் தூக்குமேடை பட்டுத்துணியினால் மூடப்பட்ட நிலையில் மெதுவாக வந்துகொண்டிருந்தது. ஒரு சோம்பேறியின் உடல்மொழியோடு, கண்களில் மிதப்போடு தூங்கி வழிவதுபோல் பாவனையுடன், திடீர்ப் புன்னகையுடனும் நடந்துகொண்டிருந்தான். அவன் காதுகளில் விழுந்த மனிதக்குரல்கள் கால்களை நிற்க வைக்கவோ, முகத்தை வலது புறமாகவோ, இடது புறமாகவோ திருப்பிப் பின்னோக்கிப் பார்க்கவோ இல்லை.
கால் போன திசையில் நடந்துகொண்டிருந்தான். இவர்கள் மூன்று பேரையும் கடந்து அந்தக் கூட்டம் சென்றது. அங்கிருப்பவர்களுக்கு ஏதோ விபரீதமாக நடக்கப்போகிறது என்று வேடிக்கைப் பார்க்கத்தொடங்கினார்கள். “இந்தப் பைத்தியம் இனிமேல் நம் ஊரில் இருக்கக்கூடாது” என்பது போன்ற குரல்கள். இப்போது எதிர்ப்புறமாக நடக்க முடியவில்லை. மனிதர்கள் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் வட்டமாக அசைந்துகொண்டு ஒலி மாசடைந்துகொண்டிருந்தது. ஒருவன் உரத்தக்குரலில் “இவனைக் கைது செய்து சிறையிலோ, மனநலக்காப்பகத்தில் அடைக்க வேண்டும்”. மற்றொருவன் “இல்லை இவனைக் கொலை செய்வதுதான் நல்லது”. “இவன் மிகவும் உயரமாக இருக்கிறான். கால்களை வெட்டிவிட்டால் நம் உயரத்திற்கு வந்துவிடுவான் இல்லையா?”
அவர்கள் அவனை ஏதாவது செய்துவிட்டால் தூக்குமேடைக்கு வேலை கிடைக்காது என்று உணர்ந்தவன் மேகமாக அந்தக் கூட்டத்தில் அவனுக்காக மன்னிப்புக்கேட்டான். அப்படி என்ன தவறு செய்தான் என்று கண்கள் கேள்விக்கேட்பதை உணர்ந்த மக்கள், அவனை இழுத்துக்கொண்டு ஒரு கடைவீதிக்கு வந்தார்கள். ஈ மொய்த்தது போல் கூட்டம் கடுமையாக இருந்தது. வாருங்கள் தைரியமாக உள்ளே செல்லலாம். இவன் உயரமாக இருப்பதால் தப்பிக்க முடியாது. எளிதாகப் பிடித்து விடலாம் என்று ஒருவன் நம்பிக்கையளிக்கக் கூட்டத்தில் புகுந்து ஒவ்வொரு கடைக்காகச் சென்று, இவன் “இங்கே ஏதேனும் பொருட்கள் வாங்கியிருக்கிறானா?” திருதிருவென முழித்த முதலாளிகளின் தலை இல்லை என்பதனை உணர்த்தும்விதமாக அசைந்தது. கடைசியில் “இப்போது சொல்லுங்கள் இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று கேட்டவர்களிடம் அவன் சார்பாக ஒவ்வொரு கடையில் இருந்தும் ஒவ்வொரு பொருள் வாங்கி அவனைக் காப்பாற்றினான்.
அதற்குப்பிறகு அவனோடு எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல், நன்றியைச் சிறிதும் கண்களில் கூட வெளிப்படுத்தாமல், திரும்பிப் பார்க்காமல் சென்றான். கூடநின்ற தச்சனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. இந்த இடம் அவன் கண்களின் கருவிழி வழியாக வேறொன்றைக் கண்டதாகச் சொல்லி, மனம் பேதலித்தது போல் உளறிக்கொண்டிருந்தார். அவன் அந்தக் கூட்டங்களில் புகுந்து நடக்கத்தொடங்கினான். முன்நகர நகர அவன் உயரம் இன்ச் இன்சாகக் குறைவாகிக்கொண்டிருந்தது. அவன் கண்களில், நிர்வாண மனிதர்கள். தலையில் தெரியும் மேடுபள்ளமான மூளைகள், இரத்தக்கறையுடன் வாயில் குறிகள், தலையின் மேல் மனிதக்கால்கள். இரும்புக்கூண்டிற்குள் ஊர்ந்து செல்லும் மனித உடல்கள்.
Art : Leonardo Tomaz
ஐசக் பேசில் எமரால்ட் – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், முதுகலை மென்பொருள் பொறியியல் முடித்துவிட்டு ஊடகத்துறையில் பணிபுரிகிறார். “அபினி” (நாவல்), “பற்றி எரியும் நரம்புகள்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது படைப்புகள் நீலம், யாவரும்.காம், வனம், நகர்வு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது.








Leave a Reply