தீ என்பது அமர்க்களமானது. எந்தப் புகார் முகாமும் அதற்கில்லை.
(அ)
ஒரு மங்கிய ஒளியைப்
பிடித்துக் கொண்டு நகரலாம்
எத்தப்புமில்லை
காரணமற்ற திருப்பங்களில்
வேண்டும், வேண்டாம்கள்
நிறைய கொட்டிக்கிடக்கும்
சிறு வெளிச்சத்தின் நிழலில்தான்
பற்பல தலைமுறையின் தேவைகள்
அசைந்து கொண்டிருக்கின்றன.
(ஆ)
ஒரு சுவர் பேசவில்லை
என நினைக்க வேண்டாம்
அதைத் தட்டுங்கள்
மௌனத்தை உதிர்க்கும் தீச்சிவப்பில்
பொய்யென்று எதுவுமில்லை.
(இ)
ஒவ்வொரு மூடிய கண்ணிலும்
கனம் பொருந்திய
“தீ “ விழித்திருக்கின்றது.
(ஈ)
ஒரு சமதள அறை
சில சத்தங்கள்..
கொஞ்சமான கிசு கிசுப்புகள்..
லேசான தீண்டல்கள்..
விடைத்துக் கொள்ளும் காதுகள்….
குறுக்கிடப்படும் பேச்சுகள்…
குனிந்த, நிமிர்ந்த சிரிப்புகளுக்கிடையே
வயிற்றில்
சாட் மசாலா போல
“தீ”
தூவப்படுகிறது.
(உ)
மரணத்தில்
அமைதி என எதுவுமில்லை.
தடுப்பற்ற தீயில்
மீந்திருப்பதைப்
பெருங்குரலோடுதான்
அள்ளத் தொடங்குவர்.
(ஊ)
ஓர் அசையும் தீயில்
கோபித்தலென யாதுமில்லை
மாறாக,
கரிசனமும், அக்கறையும், அருளும்
கனன்றெரிகின்றன.
(எ)
ஒரு கிடு கிடுப்பான
தீப்பற்றலில்
பல தாறுமாறுகள்
நடந்திருக்கும்.
எத்தீயும் வீணாய்ப்
பற்றியெரிவதில்லை.
(ஐ)
ஒவ்வொரு பொழுதிலும்
வெடித்துச் சிதறும் தீயினைக்
கவனமாக, பொறுமையாக, நிசப்தமாக
நகர்த்த வேண்டும்.
சுடுவது மட்டும் “தீ” அல்ல.
(ஒ)
“தீ “என்பது ஆற்றுதல்
நிமிடந்தோறும் ஏற்றப்படும் தீச்சுடரில்
கம்பீரமான பசி
சற்றே நாணி
ஒளிந்துகொள்கிறது.
(ஓ)
மூர்ச்சையற்ற மௌனங்களில்
துல்லியமாகக் கணக்கெடுத்து வாழ்ந்த
அளவைகள்
பற்ற வைப்பது
எல்லோருக்கும்
ஒரே அளவுதானாம்
என்றபடி
முகவாயில் கை வைத்தன.
Art : Kent Ekranı








Leave a Reply