மாலை எண்ணம்
நடைப் பயிற்சியில்
சாலை ஓரத்திலிருந்த மரத்தை
முன்னால் சென்றவன்
பார்த்துக் கொண்டு சென்றான்
அவனுக்குப் பின்னால் வந்த
நான் பார்க்க
அந்த மரத்திற்கு வயதாகிவிட்டது
அந்த மரமும் என்னுடைய
வயதான கண்களைக் கண்டது
சீக்கிரம் வயதாகின்ற பொருட்கள்
மனிதர்கள் புழங்குகின்ற மாலை
அங்கிருக்கின்ற மாலை
மறைபொருள்
அப்பொழுதுதான் நடப்பட்ட செடி
செடியையே பார்த்துக்கொண்டிருந்தேன்
செடி கனியை மறைத்து நிற்கின்றது
செடியிலிருந்து கண்களை இன்னும்
நான் அகற்றவில்லை
அதனால் நானுமே
கனியை மறைத்து நிற்கின்றேன்
ஒருபொருள் கைகளைப் பயன்படுத்தி
மட்டும் தானா மறைத்தால் மறையும்
சைக்கிள் பயணி
சைக்கிளில் செல்லுகையில் வானம்
விலகுமென்று சொன்னார்கள்
அது பச்சைப் பொய்
வானம் என்னை வாங்குகிறது
நான் என்னைக் கொடுக்கிறேன்
மனிதர்கள் புக முடியாத
மாலை நேரத்தைய
அதுவொரு மஞ்சள் நிறப் பாதை
நான் சைக்கிள் ஓட்டுகிறேன்
என்பதுதான்
இருப்பதிலேயே நல்ல கற்பனை
நாங்கள்
நான் மலையில் இருக்கிறேன்
மலையும் என்னோடு உள்ளது
மலையை இப்பொழுது
அங்கிருந்து கீழே தள்ளிவிட்டேன்
மலையிலிருந்து இறங்க
இதை விட வேகமான ஒரு வழி
என்னிடம் கிடையாது
இப்பொழுது கீழே நிற்கிறேன்
இதை விட மெதுவான ஒரு வழி
மலையிடமும் கிடையாது
ஒரே குடும்பம்
பத்துக்குப் பதினைந்து அறையில்
நான்கு பேர் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்
இவர்கள் எழுந்து விட்டால்
எல்லாரும் சேர்ந்து கட்டுகிற அற்புத உலகம்
உடைந்துவிடும்
இந்தக் காட்சியைக் கொண்டாடுவோம்
இவர்கள் ஒற்றுமை ஓங்குக
யாரும் யாரையும் எழுப்பிவிட முடியாத
இவர்களுடைய தூக்க வாழ்விற்குப் பாராட்டுகள்
மிதவை
ஓடத்தைப் பார்த்தேன்
அது நகர்ந்து கொண்டிருந்தது
என் கண்ணையும் நகற்றியது
எல்லாவற்றையும் நகர்த்துகிறது
என எல்லாமும் சொன்னது
ஓடம் தண்ணீரில் போகின்றது
நாங்கள் தரையில் போகின்றோம்
மரச் செயல்
கை குலுக்குவது போல
கிளைகள் நீட்டியுள்ளன
அங்கு நீங்களும் இல்லை
நானும் இல்லை
அளிக்கப்பட்டுக் கொண்டே
பழங்கள் இருக்கின்றன
உங்கள் கைகளும் இல்லை
எனது கைகளும் இல்லை
இது மர மகிழ்ச்சி
மனிதர்களுக்கு அங்கு
வேலை இல்லை
பொறுப்பான குற்றவுணர்ச்சி
தன் கையில் இருக்கின்ற
கல்லைப் பார்க்கின்றவன்
சுற்றி இருக்கின்ற பொருட்களை
தெரியாமல் மங்கலாக்கினான்
அவனை அறியாமல் நடந்த ஒன்று
என விலகிச் செல்லாமல்
பொறுப்பாகக் களத்தில் குதித்தான்
அவனுடைய குற்றவுணர்ச்சி
கண் பார்வை இல்லாதவர் முன்னால்
இருக்க நேருகின்ற
பொருட்களின் குற்றவுணர்ச்சி
மஞ்சள் ஞானம்
எங்கள் வீட்டு முன்னர் தான் இரவு இருந்தது
அதனை நோக்கித்தான் எங்கள் வீட்டு
மஞ்சள் விளக்கு ஒளிர்ந்தது
இரவை மஞ்சள் விளக்கு சொன்னது
மஞ்சள் விளக்கை இரவு கூறியது
இரண்டும் சேருகின்ற இடம்
நிற்கிறதா நகர்கிறதா என வாசலில் உட்கார்ந்து
நாங்கள் பார்த்துக் கொண்டு வந்தோம்
Art : Jean-Michel CORIOU
விருதுநகரில் பிறந்தவர். அரசு உதவிபெறும் கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2008 லிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவரும் இவர் ஆதவன் ( கே.எஸ்.சுந்தரம் ) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ), கனிவின் சைஸ் ( 2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் ( 2022), மத்தியான நதி ( 2022), வெறுங்கடல் ( 2024 ) ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிற இவரது கவிதைகள் அநேக இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
சௌமா இலக்கிய விருது பெற்றுள்ளார்.








Leave a Reply