“காலனி” என்ற சொல் பண்டைய ரோமானியக் காலனியிலிருந்து உருவானது. இது ஒரு வகையான ரோமானியக் குடியேற்றமாகும். “காலனிசம்” என்ற சொல் 1500களின் பிற்பகுதியில் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் மற்ற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியபோது பயன்பாட்டுக்கு வந்தது.
காலனிசம் என்ற சொல் காலனித்துவச் சக்திகள் பிற நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வளங்களைச் சுரண்டுவதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
காலனி என்ற சொல் இரண்டு முக்கியப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. குடியேற்றம், பண்ணை வீடு ஆகிய இரண்டு பொருள்களிலும் இது வரலாற்று ரீதியாக, ஆதிக்கத்தின் அடையாளமாகவும், ஒடுக்கப்பட்ட பிரிவினரைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சரியான பொருள் பயன்படுத்தப்படும் சூழலைப் பொருத்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவே காலனி என அழைக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் காலத்தில் சாதியை ஆராய்ந்த உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இருந்தார்கள். ஆனால், இந்தியாவில் கிராமங்கள் ஊர், சேரி என ஏன் இரண்டாகப் பிரிந்தது? இந்தியப் பிரிவினை அமைப்பு எப்படித் தோன்றியது என்று யாரும் கவனம் கொள்ளாததால் அது ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது? என்பது போன்ற கேள்விகளும் தோன்றாமல் போய்விட்டன.
ஆனால், அக்கேள்விகள் அம்பேத்கருக்குத் தோன்றின. அதனால் பிரச்சனையின் மூலத்தை அவர் கண்டறிந்தார். ஆனால், அவருக்குப் பின் வந்த அறிஞர்களோ தலைவர்களோ, ஊர், சேரி, காலனி ஆகியவற்றின் தோற்றம் அதன் இயக்கம், ஒழிப்பு ஆகியவை பற்றி அதிகமாக யாரும் பேசியதில்லை.
தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் குடியிருப்பைக் கிராமம் என அழைக்கின்றோம். இச்சொல்லுக்கு மூலச்சொல் “கிராம” என்னும் வடச்சொல் ஆகும். தொல்காப்பியத்தில் ஊரும் அயலும் சேரியும் என மூன்று நாட்டுப்புறக் குடியிருப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் ஊர், சேரி ஆகியவை ஒரே பொருளில்தான் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கால மாற்றம் நிகழ்ந்து ஊர் என்பது இடைச்சாதியினர் வாழும் இடமாகவும், சேரி என்பது தலித்துகள் வாழும் பகுதியான காலனி என்றும் வழங்கப்படுகிறது.
இதன் பின்னணி இதுதான். வெற்றி கொள்ளப்பட்ட இந்தியா வெற்றி கொண்ட பிரிட்டனின் காலனியாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக காலனி என்ற சொல்மீது மோகம் பற்றிக் கொண்டது.
சாதியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட சாதியற்ற தலித்துக்களை வெற்றி கொண்டதைக் குறிக்கும் வகையில் காலனி மக்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
இப்போது காலம் மாறிவிட்டது. ஆனால், கிராமப்புறங்களில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஊர், சேரி என்ற பாகுபாடும் பிரிவினையும் இன்றும் நிலைத்தபடியே இருக்கின்றன. இதை ஒழிக்க வேண்டும் என்ற செயல் திட்டம் எந்த அமைப்பிடமோ கட்சிகளிடமோ இல்லை.
ஜப்பானில் “புரோக்குமின்கள் (ஒதுக்கி வைக்கப்பட்டோர்) அமெரிக்காவில் (கெட்டொக்கில் புறக்கணிக்கப்பட்ட வாழிடம்) ஆகியவற்றில் வசித்த கறுப்பின மக்களுக்கு அந்நாடுகளில் எழுந்த குரல் இந்தியாவில் இல்லை. அண்மையில் “கேரளம்” என்கிற பெயர் மாற்றத்தின்போது அங்குள்ள தலித் குடியிருப்புகள் சேரி எனும் பொருள்படும் பெயர்களில் அழைக்கப்படக் கூடாது என்று ஓர் அறிவிப்பு வெளியானது. ஆனால், அது சரியான முன்னெடுப்பல்ல. பெயரை மாற்றுவதல்ல தேவை. அதன் பண்பை மாற்றவதுதான் முதல் தேவை.
தமிழகத்தில் அண்மையில் காலனி என்று சொல்லக்கூடாது என்றும், பெயர் மாற்றம் செய்திட வேண்டுமென்றும், சட்டமியற்றப்பட்டது.
சேரி, காலனி ஆகியவற்றை பெயர் மாற்றம் செய்வதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது?. ஊர், சேரி, காலனி என்கிற சமூக அமைப்பு நில அடிப்படையில் இருப்பதால் இது சாத்தியப்படுமா? அதிகபட்சம், அரசு ஆவணங்களில் காலனி என்றும் சேரி என்றும் இருப்பதை மாற்றலாம். ஆனால், நடைமுறையில் அப்படி நிகழ்வதற்குச் சாத்தியமே கிடையாது.
சேரி என்ற சொல்லும், தீண்டாமையின் அடையாளம்தான். 69% இடஒதுக்கீடும் ஜாதி அடிப்படையில் நிகழ்கிறது.
சென்னை மவுண்ட் ரோட்டில் ஜெமினி பாலம் உள்ளது. இதை அண்ணா மேம்பாலம் என்று பெயர் மாற்றி அண்ணா சிலையை வைத்து எவ்வளவோ முயன்றும் இன்றும் அது ஜெமினி பிரிஜ்தான். பெயர் மாற்றுவதால் எந்தப் பயனுமில்லை என்பதற்கு இதுவும் சான்று. தமிழ்நாடு அரசு வீட்டுவசதிவாரிய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் தீண்டாமை உறைந்து கிடக்கிறது.
குடிநீர், குளிக்கும் நீர், விளையாட்டுத் திடல், மின்சாரம், டீக்கடை, ரேசன் கடை, ஆண்டு விழா, கோயில் விழா போன்ற எதுவாகினும் எளியோர்களை வலியோர்கள் புறக்கணிப்பது நீட்சியாக உள்ளது. ஒரே அலுவலகத்தில் ஒரே பதவியில் இருந்தாலும் அங்கே சாதி தலை தூக்கிப் பிரிவினையை உருவாக்குகிறது.
படிப்பறிவற்ற கிராமத்தில் காலனி மக்களை எப்படி நடத்துவார்களோ அதைவிடப் பன்மடங்கு படித்த நல்ல நிரந்தர அரசு பணியில் உள்ள குடியிருப்புகளிலும் தீண்டாமை உள்ளது. எனவே, அகற்ற வேண்டியது காலனி என்ற பெயரையல்ல–மாறாக சாதி என்ற ஆணி வேரையே அடியோடு களைய வேண்டும்.
ஒரே அலுவலகத்தில் ஒரே பணியில் இருபது ஆண்டுகள் பணிபுரிந்தாலும், தோள் மீது கைப்போட்டு தோழா, நண்பா என வாஞ்சையாக உறவாடினாலும் மதிய உணவு மேஜையில் முற்படுத்தப்பட்டவர் தலைமையில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து உணவு அருந்துமிடத்தில் ஒரு தலித் இருக்க மாட்டார். ஆனால், உணவுக்குப்பின், மீண்டும் ஒன்றாக அலுவலகப் பணியைக் கவனிக்கும் சாதியத் தீண்டாமை இந்நொடிவரை எல்லா அலுவலகங்களிலும் இருக்கிறது.
இவையனைத்தும் கடந்து – சூழ்நிலை காரணமாகத் தலித்தும் சேர்ந்து அமர்ந்து உண்ண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் எல்லோரும் அவரவர் உணவுக் கோப்பைகளில் உள்ள கூட்டுப் பொரியல் குழம்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு தலித்தின் உணவுப் பதார்த்தம் எவ்வளவு மனம், ருசி மிகுந்தாக இருந்தாலும் யாரும் அவரிடம் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அந்தத் தலித்துக்கு எல்லோரும் கொடுப்பார்கள். இதை அவர் வாங்கி அருந்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது தோழமை ரீதியாக நட்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளும் மனதை அவருக்குள் வலுக்கட்டாயமாகத் திணித்து விடும் சாதியச் சமூகம்.
நவநாகரீகமாக விலை உயர்ந்த உடையணிந்து, வாசனைத் திரவியத்தால் உடல்மெழுகி நேர்த்தியாகத் தலைவாரி, முழுப்பாதணி அணிந்து அலுவலகம் வந்தாலும் சக ஊழியர் என மதிக்க மாட்டார்கள். மேலும், ஒரு தலித் வீட்டில் ஏதேனும் விஷேசம் நடக்கிறதென்றால் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு அலுவலர்களுக்கு மரியாதையாக அழைப்பிதழ் கொடுப்பார். அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்டு அலுவலக நண்பர்கள் அல்லது தோழர்கள் ஒரு குறிப்பிட்ட பரிசுப் பொருட்களையோ அல்லது ஒரு தொகையையோ எல்லோரும் சேர்ந்து போட்டு அந்த விழாவிற்கு அனைவரும் சென்று வாழ்த்த மாட்டார்கள். மாறாக, ஒருவரையோ இருவரையோ அனுப்பி வைப்பார்கள். அந்த நபர்கள் செய்முறை செய்துவிட்டு அந்த விழாவில் ஏற்பாடு செய்திருக்கும் உணவுப் பண்டங்களை உண்ண மாட்டார்கள். அப்படிப்பட்ட நபர்களுக்குக் குளிர்பானம் தனியாக வாங்கிக் கொடுப்பார் தலித் ஊழியர். ஏன் சாப்பிடவில்லையெனக் கேட்டால், அவர் காலையிலிருந்து மூன்று விஷேச வீட்டிற்குச் சென்று வந்துள்ளேன். சாப்பிட முடியவில்லை எனத் தயார் நிலையில் வைத்திருக்கும் அந்த வறட்டுச் சிரிப்பை, தலித் ஊழியருக்குத் தந்துவிட்டு இடம் பெயர்ந்து விடும் நிலை இந்நொடி வரை நிகழ்வது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
இதையும் தாண்டி தொழிற்சங்கம் அதிலுள்ள கொள்கையை நம்பி அந்த இயக்கத்திலும் ஒரு தலித் பங்கேற்றுச் சிறப்பாக அமைப்புக்காக, சமரசமின்றிப் போராடி உரிமைகளை மீட்டெடுக்க “குண்டாந்தடிகள் தாக்கிய போதும் குண்டுகள் நெஞ்சைப் பிளந்த போதும் அஞ்சிடோம், அஞ்சிடோம், வெஞ்சிறைக்கு அஞ்சிடோம்” என்று சிறையேகினாலும் ஒரு தலித் தலைமைப் பொறுப்புக்கு வரமுடியாது. அதையும் தாண்டி வந்துவிட்டால் அந்தத் தலித் தலைவரின்மீது ஏதாவது குற்றச்சாட்டு வைத்து விரைவில் அப்பதவியிலிருந்து தூக்கி விடுவார்கள். எப்போதும் எங்கேயும், முற்போக்கு அமைப்பானாலும் சரி பிற்போக்கு அமைப்பானாலும் சரி சோஸலிசம் பேசும் அமைப்பானாலும் சரி அங்கே சாதி என்று வருகிறபோது பாஸிசம் மேலோங்கும். சும்மா சொல்லிக் கொள்ளலாம் நாங்கள் எல்லோரும் சமநிலைவாதிகள் என்று. நாங்கள் எல்லோரும் தோழமைவாதிகள் என்று. அங்கு அது உதட்டளவில் மட்டுமே. ஏன் மேலை நாட்டுக் கலாச்சாரப்படி ஒருவரை ஒருவர் கைகொடுப்பதும் கட்டித் தழுவிக் கொள்வதும் போல் இங்கே ஒரு தலித்துக்கும் மற்ற பிரிவினர்களுக்கும் நடந்தேறுவதில்லை. அதையும் தாண்டி சபை நாகரிகம் கருதி ஒரு முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ஒரு தலித்துக்குக் கைக்கொடுத்து விட்டு அடுத்த நொடியை பாத்ரூம் சென்று வாஷ்பேசனில் கை அலம்பும் நிகழ்வு அந்தக் கண்ணாடியில் பிம்பம் மங்காமல் எப்போதும் இருக்கும்.
கி.மு.1500 ஆம் ஆண்டுக்கு முந்தையது மற்றும் பண்டைய இந்திய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள கடுமையான சாதிப்பிரிவுகளில் வேரூன்றியுள்ளது பலநூற்றாண்டுகளாகத் தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களுக்குக் கீழ்த்தரமான வேலைகள் தரப்பட்டன. தனித்தனியாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ஊருக்கு வெளியே காலனி உருவாக்கப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டார்கள் தலித்துகள்.
இவர்கள் வரலாற்று ரீதியாகத் ‘தீண்டத்தகாதவர்கள்’, ‘சண்டலா’, ‘அச்சுதா’, ‘தலித்’ போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டனர். இந்தச் சமூகம் கோயில்களுக்குள் நுழைவதோ அல்லது பொதுச் சேவைகளை அணுகுவதோ தடை செய்யப்பட்டன. ஒரு தலித்தின் நிழல் அல்லது தொடுதல்கூட உயர் சாதி மக்களை மாசுபடுத்தும் என நம்பும் அளவுக்கு நிலைமை மிகக் கடுமையாக இருந்தது.
ஆனால், நெடுநாட்கள் போராடி, தலித் உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கி, கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று ஒரு தலித் அரசுத் துறையில் அல்லது தனியார்துறை, பொதுத்துறை போன்றவற்றில் முற்பட்டவர்களுக்கு இணையாகப் பணியாற்றும் சூழல் ஏற்பட்டாலும், அங்கே சாதி என்ற படிமம் அகற்றப்படாமல் தடித்து வீங்கிய வண்ணமே இருக்கிறது.
இதற்கு இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் அம்பேத்கர் வந்தாலும் மாற்றிவிட முடியாது. மாற்றம் என்பது மாறாது என்பது பொது விதியல்ல. அரசியல் லாபத்திற்காக, சுய முன்னேற்றத்திற்காக காலனி என்ற பெயரை மாற்றிவிட்டால் தலித் என்ற பெயர் மாறி விடுமா? மாறாது. மாறாக இன்னும் வலுவடையும். தலித் அரசியல்வாதிகள் ஒரு சில கருத்தாளர்கள், தலித் எழுத்தாளர், காலனி என்கிற பெயர் மாற்றத்தால் சாதியம் அழிந்துவிடும் என நம்புகிறார்கள். இதனால் பெரிய சமூகம் மாற்றம் உருவாகிவிடாது. ஒரு கட்சியின் வேட்பாளர் அல்லது மாவட்ட நிர்வாகப் பதவி சாதியின் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் வாக்கு வங்கி! அதனால் அது அசுரத்தனமாக வளர்ந்தோங்கி உள்ளது. ஆனால், சாதியை ஒழிப்பேன், சாதிய ஆணவத்தை ஒழிப்பேன் என மேடைதோறும் வீர வசனம் பேசிவிட்டுக் குறிப்பிட்ட இனத்தின் வாக்கை வாங்கிக் கொண்டு வழக்கம்போல் சாதிக்கு ஆதரவாகத் தொன்றுதொட்டு நெடு ஆண்டுகளாய்ச் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றன திராவிடக் கட்சிகள்.
நாடார் சுடுகாடு, நாயக்கர் சுடுகாடு, முக்குலத்தோர் சுடுகாடு என்று இருப்பதைப் பொதுச் சுடுகாடு என்று பெயர் மாற்றம் செய்திடுமா ஆளும் அரசு?
காலனியின் மறு வடிவம் சமத்துவபுரம். ஏன் அது ஊருக்கு வெளியே உள்ளது? ஜாதியை ஒழிக்க வழியில்லை. காலனி என்ற பெயரை அகற்றிவிட்டால் எல்லாம் மாறிவிடுமா? மாற்ற வேண்டியது காலனி என்ற பெயரை அல்ல! சாதி என்ற கொடூரத்தின் ஆணி வேரைத்தான் அடியோடு அகற்ற வேண்டும்!
ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைமைப்பொறுப்பு, பதவிகள் – சாதியின் அடிப்படையில் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்த வேண்டுமென்றால், கல்வித்துறையில் மாணவ மாணவிகள் சேர்க்கையில் சாதிப் பதிவை நிறுத்தி அங்கிருந்து சாதி ஒழிப்பைத் துவங்க வேண்டும்.
ஒரு கட்சி சாதி ஒழிப்பேன் என்று பரப்புரை செய்து ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. மற்றொரு கட்சி மதத்தைத் தூக்கிப்பிடித்து எதிரானவர்களையும், கருத்தாளர்களையும் சுட்டுக்கொல்கிறது.
நான் தலித்துக்கு ஆதரவானவன், தலித் வன்கொடுமை நிகழ்ந்தால் நான் முதல் குரல்கொடுப்பேன் என்று ஓங்கி உரைத்துக்கொண்டு, அதைத் தொன்றுதொட்டு நிகழ்த்துவோர்களோடு பதவிக்காகக் கைகோர்த்துக்கொண்டு அம்பேத்கரின் அடுத்த வாரிசு எனப் பொய்யுரைத்து, பூணூல் போடாத பார்ப்பனக் கொள்கையைக் கையேந்தி நிற்கும் மற்றொரு கட்சி.
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், ஒரு உழைப்பாளியின் வியர்வைத் துளி மண்ணில் விழுந்து உயர்வதற்குள் அவனுக்கான உரிமையைக் கொடுக்க வேண்டும் என்று கூக்குரல் கொடுத்தும் குடிசை வாசியின் பசியைப் பற்றி பல்வேறு உயர் ரகப் பதார்த்தங்களை உண்டுகொண்டு, குளிரூட்டப்பட்ட அறையில் இளைப்பாறிக் கொண்டும், தொழிலாளியின் வியர்வை பற்றிப் பேசியும், அதற்கு எதிரான இயக்கமும் நடத்துகிறது பிரிதொரு கட்சி.
இங்கு மாறுவதும் மாற்றுவதும் பெயர்களை அல்ல! சாதியை மாற்ற வேண்டும்! மாற்ற வேண்டியது பெயர்ப் பலகை அல்ல! ஒவ்வொரு குடிமகனின் உணவு அட்டையில் உள்ள ஜாதி அடையாளங்களை ஒவ்வொரு ஆளறியும் அட்டையில் காலனி என்ற சொல்லை மாற்றி ஊர் எனக் குறிப்பிட வேண்டும்.
காலனி என்ற சொல் மாற்றி விட்டால்…
தலித் என்ற வசைச்சொல் மாறிவிடாது…!
Image : munaivu.com
ஆர்.பி.கண்ணன் என்னும் இயற்பெயர் கோண்ட R.பாண்டியக்கண்ணன் விருதுநகர் மாவட்டம் கட்ராம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துறத் துறையில் பணி செய்கிறார். 2008 ஆம் ஆண்டு சலவான், மழைப்பாறை, நுகத்தடி, மேடை, துயர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply