Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

கேட்காத குரல்களின் ஓலம்

றியாஸ் குரானா
றியாஸ் குரானா
November 3, 2025
கேட்காத குரல்களின் ஓலம்

ஒரு கலைப்பிரதியை வாசிப்பதென்பது, அதன் வடிவ நேர்த்தியை மட்டும் துழாவிச் செல்வதா, அல்லது அது பிறந்த மண்ணின் வலி, வியர்வை, கண்ணீர் ஆகியவற்றின் வழியே அதன் அர்த்தத்தை மீட்டெடுப்பதா என்ற கேள்விக் கணைகள் சமீபகாலமாகக் கலைத்தளத்தை இடைவிடாது துளைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்த விவாதம் புதியதல்ல என்றாலும், ஒவ்வொரு காலகட்டத்தின் சமூக, அரசியல் நெருக்கடிகளும் இதை புதிய தீவிரத்துடன் முன்னிறுத்துகின்றன. செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல் என் கைகளில் தவழும்போது, இத்தகைய ஒரு விவாதப் புள்ளி தவிர்க்க முடியாததாகிறது. இந்தப் பிரதியின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு மௌனமும் இருளர் என்ற மனிதக் குழுவின் இருப்பை, அதன் சமூகச் சூழலிலிருந்து கிழித்தெடுத்துப் பார்க்க முடியாது என அறைகூவுகின்றன. ஆக, இந்த நாவல் வெறும் அழகியல் வாசிப்பை மட்டும் கோரவில்லை. அது ஒரு தார்மீக, அரசியல் வாசிப்பிற்கான அழைப்பை விடுக்கிறது. நமது இலக்கிய விமர்சனப் பாதையில், ஒரு கட்டத்தில் “பிரதிக்கு வெளியே எதுவுமில்லை” என்ற கடுமையான கோஷம் எழுந்தது. பிரதியின் உள்ளே உள்ள மொழி, கட்டமைப்பு, உருவம், அழகியல் சமன்பாடு ஆகியவைதாம் பிரதானம், மற்றதெல்லாம் அற்பம் என்று சொல்லி, பிரதியை அதன் சமூக மண்ணிலிருந்தும், வரலாற்றின் இரத்தக் கறைகளிலிருந்தும் விடுவிக்கப் பார்த்தது அது. அமைப்பியல்வாதத்தின் அந்தப் பேரொளியில், மனித வாழ்வின் சிக்கல்களும், சமூகத்தின் முரண்களும் வெறும் மொழி விளையாட்டுகளாகவோ அல்லது வடிவத்தின் அழகியல் சிதறல்களாகவோ மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால், ‘ஊத்தாம் பல்லா’ போன்ற ஒரு பிரதியின்மீது அத்தகைய பார்வையைத் திணிப்பது எவ்வளவு பெரிய அநீதி? இருளர் மக்களின் தலைமுடி வெட்டாத ‘பம்பதலையான’ உருவத்தையும் (ப. 13), “அவர்கள் எப்போதும் அடிக்கிற மாதிரியான கலர் துணிதான் போடுவார்கள்” (ப. 13) என்பதையும் வெறும் கதைசொல்லலின் உத்தி என்றோ, மொழியின் அழகியல் சிக்கல் என்றோ நம்மால் கடந்துவிட முடியுமா? அந்த அழுக்கும், அந்த நிறமும், அந்த ‘பம்பதலையும்’ அவர்களை “ஆளப் பாத்தாலே இருளன் என்று சொல்லிவிடுவார்கள்” (ப. 13) என சமூகம் முத்திரை குத்தியதன் வரலாற்று வலியின் நிஜமான பிரதிபலிப்பு அல்லவா? பிரதியின் உள் அமைப்பையே பிரதானமாகப் பார்க்கச் சொல்லும் அந்த முதல் கோணம், இந்தக் கசப்பான எதார்த்தத்தை, இந்தக் கண்ணீரை நிராகரிக்கச் சொல்கிறது. மறுபுறம், “பிரதிக்கு வெளியேதான் எல்லாம் உள்ளது” என்ற பார்வை, நாவலை ஒரு சமூகவியல் ஆய்வு அறிக்கையாகவோ, மானிடவியல் கள ஆய்வுக் குறிப்பாகவோ சுருக்கிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பௌர்ணமி தன் கணவன் காத்தவராயனுடன் கூடி மகிழ்ந்து, “புணர்வது என்பது ஒரு தியான நிலை… அந்தத் தருணத்தில் உடல் பெறும் சந்தோசத்திற்கு அளவே இல்லை” (ப. 58) என உணர்வதையும், சேட்டுவின் தாகம் உச்சத்தை அடையும் குரலையும் வெறும் “இருளர் சமூகத்தின் உறவுமுறைப் பதிவு” என்று வகைப்படுத்தி, அதன் கவித்துவமான உச்சகட்ட உணர்ச்சி வெளிப்பாட்டை நாம் புறந்தள்ள நேரிடும். இந்த உணர்வுச் சலனங்களை ஆழமாக உள்வாங்காமல், வெறும் தரவுகளாகப் பார்ப்பது, கலைக்கும் மனித உணர்வுக்கும் செய்யும் துரோகமாகும். ஆக, ‘ஊத்தாம் பல்லா’ நம்மிடம் கோருவது, இந்த இரண்டு தீவிர நிலைப்பாடுகளுக்கும் நடுவே ஒரு முரணியக்கப் புள்ளியை உருவாக்குவதையே. 21ஆம் நூற்றாண்டின் இலக்கிய விமர்சனம், பிரதியின் வடிவ நேர்த்தியை மதித்துக்கொண்டே, அந்த வடிவம் எந்தச் சமூக, பொருளாதார, அரசியல் அநீதியைத் தாங்கி வெளிவருகிறது என்று பார்க்கச் சொல்கிறது. இங்கு அழகியலும் அரசியலும் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன. பிரதிக்குள் இருக்கும் அழகியலையும், பிரதிக்கு வெளியே இருக்கும் சமூக வலியையும் ஒருசேரப் பார்க்கும் ஒரு முரணியக்கப் பார்வைதான் இந்த நாவலுக்கு நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச நியாயம்.

‘ஊத்தாம் பல்லா’ நாவல், இருளர் எனும் பூர்வகுடிச் சமூகத்தின் வாழ்நிலைகளை இனவரைவியல் துல்லியத்துடன் ஆவணப்படுத்துவதோடு, நவீன அரசு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் அந்த மக்களை எப்படி நிலமற்றவர்களாகவும், பண்பாட்டு அநாதைகளாகவும் ஆக்கி, அவர்களை ஒரு ‘வேட்டைப் பொருளாகவே’ கருதுகிறது என்பதை அதன் அத்தனை வலிகளோடும் முன்வைக்கிறது. இது வெறும் புனைவல்ல. மாறாக, விளிம்புநிலையில் வாழும் ஒரு மக்கள் திரளின் கண்ணீராலும், வதைகளாலும் எழுதப்பட்ட ஒரு சமூகவியல் ஆவணம். ஆசிரியர் தனது நீண்ட கால ‘பங்கேற்பு உற்றுநோக்கல்’ அனுபவத்தின் மூலம் இந்த நாவலை வெறும் பார்வையாளனாக அல்லாமல், அந்த மக்களின் துயரங்களுக்குச் சாட்சியாக இருந்து எழுதியிருக்கிறார். “இவர்களின் வாழ்க்கைப் பாடுகளை நான் ஏன் எழுத வேண்டும்? என்று உங்களைப் போலவே நானும் கேள்வியைக் கேட்டுக்கொள்கிறேன்” (ப. 5) என்று அவர் தனது என்னுரையில் எழுப்பும் கேள்வி, இந்தப் பிரதியின் ஆதாரமான அறச்சீற்றத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒரு சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட அழுகுரலை இலக்கியத்தின் வழியே சமூக மனசாட்சியின் முன் நிறுத்துவதே இந்தப் பிரதியின் தலையாய நோக்கமாகிறது.

இருளர் வாழ்வின் மிக அடிப்படையான அம்சம், அவர்களின் வேட்டைச் சமூகம் சார்ந்த மரபறிவு. வேட்டை என்பது இவர்களுக்குப் பெரு விலங்குகளை வீழ்த்துவதல்ல. மாறாக, “முயல், காட்டுப்பன்றி, உடும்பு, பாம்பு, எலி என விவசாய நிலம் சார்ந்த இடத்தில் வாழும் உயிரினங்களையே வேட்டையாடுகிறார்கள்” (ப. 4). இந்த வேட்டையறிவு, இயற்கையோடு தங்களைப் பொருத்திக்கொண்ட ஒரு சூழலியல் ஞானத்தின் வெளிப்பாடு. இந்த ஞானத்தின் நுட்பத்தை நாவலின் பல தருணங்களில் நாம் எதிர்கொள்கிறோம். நாவலின் தலைப்பான ‘ஊத்தாம் பல்லா’ என்பதே, எலியைப் பிடிப்பதற்கான ஒரு நுட்பமான வேட்டைக் கருவியைக் குறிக்கிறது (ப. 148). “மண்ணால் செய்யப்பட்ட பல்லா” (ப. 148) என்று குறிப்பிடப்படும் இந்தக் கருவி, களிமண்ணையும் வைக்கோலையும் கொண்டு வேட்டைக்கான உத்திகளை உருவாக்கும் அவர்களின் தனித்துவமான அறிவியலின் சான்றாகும். இது, அவர்களின் அறிவிற்கும் நிலத்திற்குமான ஆழமான பிணைப்பைக் காட்டுகிறது. பூர்வகுடிகளின் இந்த நுட்பமான சூழலியல் அறிவு, முதலாளித்துவத்தின் கச்சாப்பொருளுக்கான உழைப்புச் சந்தையில், எந்த மதிப்பும் அற்ற, உதவாக்கரைப் பண்டமாகிச் சிதைந்துபோவதே இங்குள்ள சமூக யதார்த்தம். இந்த வரலாற்றுச் சிதைவை உணராமல் ‘ஊத்தாம் பல்லா’ என்ற சொல்லை வெறும் அழகியல் குறியீடாக வாசிப்பது பிரதியின் ஆன்மாவையே சிதைப்பதாகும்.

ஆனால், இந்த மரபறிவு அதிகாரத்தின் பார்வையில் ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது. காசி என்ற கதாபாத்திரம், பாம்புத் தோலை உரித்து, உப்பு தடவிப் பதனிட்டு விற்கும் ஒரு சிறிய பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுகிறான். இது அவர்களின் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதி. ஆனால், இந்த வாழ்வாதாரம் அரசதிகாரத்தின் கண்களுக்குப் படாமல், அச்சத்தின் நிழலில்தான் இயங்குகிறது. “நெல்ல காலம், இடுப்புல மறச்சி கட்டியிருந்த பாம்புத்தோல பாக்கல. மவனே பார்திருந்தா, நடுராத்திரின்னு கூட பாக்காம பாம்ப உசிரோட கொண்டாந்து வுடுன்னு மூங்கில் கொம்பால வெளாசி இருப்பாங்க போலீஸ்காரங்க” (ப. 16) என்ற அச்சம், அவர்களின் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தம். அடிநிலை மக்களின் வாழ்வாதாரங்கள் எப்படி அரசால் குற்றச்செயல்களாகப் பார்க்கப்படுகின்றன என்பதற்கு இந்த ஒற்றை வரியே சாட்சி. காசியையும் சேட்டையும் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லும் காவல்துறை, “ஏரிக்கரையிலன்னா…. இருளங்களாடா?” (ப. 19) என்று கேட்கும் தொனியிலேயே அவர்களின் அதிகாரம் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய உளவியலைப் புரிந்துகொள்ளலாம். அதிகாரம், சட்டத்தின் பெயரால் அந்த மக்களின் மீது நிகழ்த்தும் வன்முறைக்கு இந்த நிகழ்வுகள் ஒரு குறியீடு. இவர்களின் உணவு முறையும் இதே போன்ற பண்பாட்டு முரண்களுக்குள் சிக்கியுள்ளது. சேட்டு போன்ற பாத்திரங்களுக்கு, “பனங்கிழங்கு, பனங்குருத்து… ஈச்சம்பழம்… ஈசல்” (ப. 35) என இயற்கையில் கிடைக்கும் காய் கனிகளே முதன்மை உணவு. வேட்டையில் கிடைக்கும் உயிரினங்களை உண்பது அவர்களின் சூழலியல் சார்ந்த இயல்பான ஒரு பழக்கம். ஆனால், இந்த உணவுப் பழக்கம், நாகரிகச் சமூகத்தின் ‘ஒழுக்கங்கள்’ மற்றும் உணவுத் தடைச் சட்டங்களால் மறுக்கப்பட்டும், அருவருப்பாகவும் பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர்களின் வேட்டை அறிவும், உணவுப் பண்பாடும் அரசதிகாரத்தாலும், பொதுச் சமூகத்தின் பார்வைகளாலும் தொடர்ந்து குற்றமாக பார்க்கப்படுகின்றன.

இருளர் சமூகத்தின் உறவுமுறை குறித்த ஆசிரியரின் அவதானிப்பு, மிகவும் கூர்மையானதும், சமகாலச் சமூகவியலுக்குப் புதியதுமாகும். “குழந்தைகள், கணவன், மனைவி, அம்மா, அப்பா என பந்தம் எல்லாம் வெறும் காட்டுச் செடிகளாகவே பார்க்கிறார்கள். இங்கே யாரும் தண்ணீரையும், எருவையும் ஊட்டுவது இல்லை” (ப. 5) என்ற ஆசிரியரின் குறிப்பு, நடுத்தர வர்க்கம் கட்டமைத்து வைத்திருக்கும் குடும்பம் எனும் புனித பிம்பத்தை உடைக்கிறது. இங்குள்ள உறவுகள், இறுக்கமான சட்டகங்களுக்குள் அல்லாமல், இயற்கையான போக்கில் வளர்கின்றன. சிதைகின்றன. சேட்டுவின் வாழ்வில், தாயும் தந்தையும் ஆந்திராவிற்கு வேலைக்குச் சென்று திரும்பாததால், அவன் ‘தனிக்கட்டையாக’ அநாதரவாக விடப்படுகிறான் (ப. 35). இது ஒரு தனிநபரின் துயரம் மட்டுமல்ல. பொருளாதாரச் சுரண்டல் ஒரு சமூகத்தின் குடும்ப அமைப்பை எப்படிச் சிதைக்கிறது என்பதற்கான அடையாளம். இருந்தபோதும், இந்தச் சிதைவுக்கு மத்தியிலும், ‘கொத்து’ என்ற பங்காளிகள் உறவுமுறை, நல்லது கெட்டதுகளுக்குக் கூப்பிடாமலே வந்து நிற்கும் ஒரு தார்மீகப் பிணைப்பை அவர்களுக்குள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இவர்களின் திருமண உறவுகளும் அரசதிகாரத்தின் வரையறைகளுக்குள் அடங்குவதில்லை. “பொண்ணு சமஞ்சியிருந்தா போதும்” (ப. 25) என்றும், ஒரு மஞ்சள் துண்டும் ஒரு முழம் கயிறும் திருமணத்தை முடித்துவிடும் என்றும் அவர்கள் எளிமையாக வாழ்கிறார்கள். ஆனால், இந்த எளிமைக்குள் அரசு இயந்திரம் தன் சட்டங்களையும் ஒழுக்கங்களையும் திணிக்கும்போது, அது வன்முறையாக மாறுகிறது. “சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கறது தப்புன்னு சொல்லுவாங்க. கூடவே திட்டும் விழும். அதுக்குப் பயந்துக்குனே யாரும் ஆஸ்பத்திரிப் பக்கம் போக மாட்டாங்க” (ப. 25) என்ற பதிவு, அவர்களின் பண்பாட்டு உரிமைக்கு எதிராக அரசதிகாரம் எப்படி ஒரு வன்முறைச் சுவரைக் கட்டமைக்கிறது என்பதைக் காட்டுகிறது. ‘நலன்’ என்ற பெயரில் திணிக்கப்படும் சட்டங்கள், எப்படி அந்த மக்களை அடிப்படை மருத்துவ வசதிகளிலிருந்து அந்நியப்படுத்துகின்றன என்பதற்கு இது ஒரு துயர்மிகுந்த உதாரணம். இந்த உறவுச் சிக்கல்களின் மற்றொரு பரிமாணத்தை அல்லியின் பூப்பெய்தல் சடங்கு காட்டுகிறது. காத்தவராயன்-பௌர்ணம் தம்பதியரின் ஒரே மகளான அல்லியின் பூப்பெய்தல் சடங்கானது, தாய்மாமன் சாமிநாதனின் பாலியல் சுரண்டல் பார்வைக்கு மத்தியில் நிகழ்கிறது. பழங்குடிச் சமூகத்தின் எளிய சடங்குக்குள் ஊடுருவும் இந்த ஆணாதிக்கப் பார்வை, அதன் புனிதத்தைக் குலைக்கிறது. “உன் அண்ணனும் அண்ணியும் பொண்ணு கொடுக்கலன்னா பஞ்சாயத்து வச்சிடுவாங்க” (ப. 65) என்று சாமிநாதனின் தாய் விடுக்கும் மிரட்டல், உறவுச் சிக்கல்களுக்குப் பின்னுள்ள சாதிய மற்றும் சமூக நிர்ப்பந்தங்களின் அச்சுறுத்தலை உணர்த்துகிறது.

அரசாலும், சமூகத்தாலும் கைவிடப்பட்ட நிலையில், இருளர் சமூகத்தின் நம்பிக்கையும், மீட்புக்கான ஏக்கமும் கன்னியம்மன் வழிபாட்டில் குவிந்துவிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்வின் அத்தனை நெருக்கடிகளிலிருந்தும் தப்பித்து ஆறுதல் அடைய உதவும் ஒரு ‘பண்பாட்டுப் புகலிடமாக’ இந்த வழிபாடு செயல்படுகிறது. செங்கல் சூளைக்குக் கொத்தடிமைகளாகப் புலம்பெயர நேரிடும்போது, அவர்கள் அரசிடமோ, வேறு எந்த அதிகார மையத்திடமோ அனுமதி கேட்பதில்லை. மாறாக, தங்கள் குலதெய்வமான கன்னியம்மனிடம் பூப்போட்டு உத்தரவு கேட்கிறார்கள் (ப. 36). பொருளாதார நிர்ப்பந்தங்கள் அவர்களைச் செலுத்திக்கொண்டிருந்தாலும், தங்கள் வாழ்வின் மீதான சுய உரிமையை அவர்கள் தங்கள் தெய்வத்தின் முன் மட்டுமே கோருகிறார்கள். இது அதிகாரமற்றவர்களின் ஒருவிதப் பண்பாட்டு எதிர்ப்பாகும். “தாயே… நீதான் எங்களுக்குத் தொணை…” (ப. 37) என்று அவர்கள் வேண்டுவது, அதிகாரம் கைவிட்ட நிலையில், தங்கள் பண்பாட்டுக் கடவுளின் மீதான அரசியலற்ற நம்பிக்கை. இந்த வழிபாட்டின் உச்சபட்ச கலை-அரசியல் வடிவமாக ‘மெரளு’ (சாமியாடுதல்) அமைகிறது. சாமியாடுபவர்களின் உடலில் வெளிப்படும் ஆவேசம், அவர்களின் நூற்றாண்டுகால ஒடுக்கப்பட்ட ஆதங்கங்களையும், ஆதிக்கத்தின் மீதான ஆத்திரத்தையும் ஒரு கலை வடிவமாக வெளிப்படுத்துகிறது. கதிர்வேல், தன் மனைவி சந்திராவை மூக்குத்தியைக் கேட்டு அடித்து, குடிசையை எரிக்க முயற்சிக்கும்போது, இல்லூட்டாவின் மீது மெரளு வந்து, “அணைக்கச் சொல்லு… அணைக்கச் சொல்லு… அணைக்கச் சொல்லு…” (ப. 88) என்று ஆக்ரோஷமாகக் கத்துவது, அநீதிக்கு எதிராகப் பேசும் ஒரு சமூக மனசாட்சியாகத் தெய்வத்தை நிறுத்துகிறது. இங்கு, தெய்வம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அதுவே சமூக நீதியை வழங்கும் ஒரு மாற்று அதிகார மையமாகச் செயல்படுகிறது. “கல்பூரம் இல்லாம கெளம்பாது சாமி” (ப. 13) என்று அவர்கள் பாடும்போது, அது அவர்களின் ஆன்மாவின் மொழியாகவே ஒலிக்கிறது.

‘ஊத்தாம் பல்லா’ நாவல் முன்வைக்கும் மிக அடிப்படையான அரசியல் விமர்சனம், நிலமற்ற ஒரு சமூகத்தின் மீது அரசதிகாரம் செலுத்தும் வன்முறை பற்றியதுதான். இருளர் சமூகம், “நிலமற்ற சமூகமாய் இன்னும் கடை நிலையில் வாழ்பவர்களாக இருக்கிறார்கள்” (ப. 4). நிலமற்றவர்களுக்கு இந்தச் சமூகத்தில் எந்த அடையாளமும் இல்லை. குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் போன்ற அரசின் அடிப்படை ஆவணங்களைப் பெறுவதில் கூட அவர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் நாடோடி வாழ்க்கை முறையை ஒரு காரணமாகக் காட்டி, அதிகாரிகள் அவர்களை எளிதாக நிராகரித்துவிடுகிறார்கள் (ப. 4). அவர்களின் இந்த நிலமற்ற இருப்பே, அவர்களைப் புரோக்கர் மனோகர் போன்ற சுரண்டல் சக்திகளிடம் எளிதாக சிக்க வைக்கிறது. செங்கல் சூளை வேலைக்காக, “தலைக்கி 25 ஆயிரம் ரூபாய். ஜோடிக்கு 50 ஆயிரம்” (ப. 28) என்று ஆசை காட்டி, அவர்களின் ஆதார் அட்டையையும், கைநாட்டுப் பத்திரத்தையும் வாங்கிக்கொண்டு அவர்களைக் கொத்தடிமைத்தனத்திற்குள் தள்ளும் பொருளாதாரச் சுரண்டல் வலை மிக இயல்பாகப் பின்னப்படுகிறது. “கை நீட்டி காச வாங்கிட்டா, அத்தோட அடுத்த பொங்கலுக்குத்தான் திரும்ப முடியும்” (ப. 28) என்ற நிபந்தனை, நவீன அடிமைத்தனத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது. நிலத்திற்காக அவர்கள் நடத்தும் போராட்டம் நாவலில் மிகத் துயர்மிகுந்த ஒரு பகுதியாகப் பதிவாகியுள்ளது. தாசில்தார் நிலம் ஒதுக்கிய பிறகும், உள்ளூர் ஆதிக்க சக்திகள், “சுடுகாட்டுக்குப் போற வழி” என்றும், “ஊர்மாடுங்க மடக்கிற இடம்” (ப. 50) என்றும் பொய்க் காரணங்களைக் கூறி அவர்களைத் தடுக்கின்றன. இறுதியில், தாசில்தாரின் உத்தரவோடு அவர்கள் கொட்டகை அமைக்க முற்படும்போது, “காலையில வந்து பார்க்க எல்லாம் புதிய குடிசைகளும் எரிந்து இருந்தது” (ப. 50) என்ற காட்சி, அரசதிகாரமும், சாதிய அதிகாரமும் எப்படி ஒன்றாகக் கைகோத்து அடிநிலை மக்களின் கனவுகளைச் சாம்பலாக்குகின்றன என்பதை உணர்த்துகிறது. “எளியவர்களின் எந்த கண்ணீர் துளிகளையும் சமூகம் கணக்கில் கொண்டதில்லை” (ப. 50) என்ற ஆசிரியரின் குரல், இந்த எரிப்பின் மீது நின்று ஒலிக்கும் ஒரு சாபம்போலத் தோன்றுகிறது.

ஒரு இலக்கியப் பிரதியானது, அது எழுதப்பட்ட காலத்தின் அதிகார உறவுகள், சட்டப் பிரதிகள், சமூகச் செய்திகள் போன்ற பிற பிரதிகளுடன் இணைத்துப் பார்க்கப்படும்போதுதான் அதன் முழுமையான அரசியல், சமூகப் பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல், இருளர் சமூகத்தின் நிகழ்காலத் துயரங்களை ஒரு புனைவாக முன்வைக்கும் அதே வேளையில், அத்துயரம் எவ்வாறு ஒரு இழந்த வரலாற்றுப் பெருமிதத்தின் நிழலாகவும், நவீன சட்ட அமைப்பின் தோல்வியாகவும் நீள்கிறது என்பதை, ஒரு புதிய வரலாற்றியல் அணுகுமுறையின் வழியே நமக்குப் புரியவைக்கிறது. இந்த நாவலில், கடந்த காலத் தொன்மங்கள், நிகழ்காலத்தின் கொத்தடிமைச் சுரண்டல், மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட சமூக வன்முறை ஆகிய மூன்றும் எவ்வாறு ஒன்றோடொன்று பிணைந்து, இந்தப் பழங்குடிச் சமூகத்தின் மீட்சியற்ற நிலையைத் தீர்மானிக்கின்றன என்பதை ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது. நாவல், தான் பேசும் நிலப்பரப்பின் வரலாற்று ஆழத்தை மிக அழுத்தமாக முதன்மைப்படுத்துகிறது. செஞ்சி பகுதி, ராஜா தேசிங்கு ஆண்ட தொண்டை மண்டலம் என்றும், நடுநாடு என்றும் பெருமை பேசப்படும் ஒரு வரலாற்றுப் பூமி. இந்தப் பெருமைமிகு வரலாற்றுச் சூழலில்தான், நாவலின் கதாபாத்திரங்கள் “மீட்சியற்ற மாந்தர்கள்” (ப. 13) என்ற அடைமொழியுடன் அறிமுகமாகிறார்கள். ஒருபுறம் வீரத்தின் அடையாளமாக ராஜா தேசிங்குவின் குதிரை கால்பதித்த நிலம், மறுபுறம் அதே நிலத்தில் சொந்த நிழலுக்குக்கூட வழியற்று நிற்கும் இருளர்கள் என்ற முரண், இந்தப் பிரதியின் மையமான வரலாற்று விமர்சனத்தைத் தொடக்கிவைக்கிறது. பென்னகர் கிராமத்தின் வரலாற்றைக் காத்தவராயன் விவரிக்கும்போது, அல்லிக் கல்லு அல்லது அல்லிராணியின் கதை, இந்த நிலத்தின் பூர்வகுடித் தற்காப்புக் கூறுகளை எடுத்துரைக்கிறது. அல்லி, கால்நடைகளைத் திருடிச் சென்றவர்களிடமிருந்து அவற்றை மீட்டுத் தந்தவள். பஞ்சம் வந்த காலத்தில், ஏரி மதகில் அடைத்திருந்த மண்ணை அகற்றத் தன் உயிரையே தியாகம் செய்தவள் (ப. 52-53). அவள் ஒரு வீர நடுகல் தெய்வமாக வணங்கப்படுகிறாள். இந்தப் பழங்குடிச் சமூகத்தின் தொன்மத்தில், பெண்கள் தலைமை தாங்கியவர்களாகவும், சமூகத்தின் தற்காப்பாளர்களாகவும் இருந்திருக்கின்றனர். மலையனூர் அம்மா போன்ற பாத்திரங்களின் ஆளுமையும், குடும்பத்தைக் காக்கப் போராடும் சந்திரா போன்ற பெண்களின் தீரமும் இந்த வரலாற்று நீட்சியின் சமகால வடிவங்களாகத் தென்படுகின்றன. ஆனால், இந்த வரலாற்றுப் பெருமிதம், நிகழ்காலத்தின் கையறுநிலையோடு கடுமையாக முரண்படுகிறது. தங்கள் குடிசையைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும், தங்கள் உழைப்பைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் காசி, கதிர்வேலு போன்றோரின் துயரமான நிகழ்காலம், அல்லிராணியின் வீரத்தோடு ஒப்பிடும்போது ஒரு வரலாற்று வீழ்ச்சியாகவே தோன்றுகிறது. “பண்டைய மன்னர்களின் வீரம் என்பதுகூட நிலங்களை அபகரிக்கிற போராட்டமே” (ப. 6) என்றும், அதில் வெற்றி பெற்றவர்கள் அடிமைகளை உருவாக்குகிறார்கள் என்றும் ஆசிரியர் குறிப்பிடுவது, இருளர் மீதான இன்றைய சுரண்டல் என்பது, சமூகப் படிநிலை தோன்றிய காலத்திலிருந்தே நீடிக்கும் ஒரு வரலாற்று வன்முறையின் தொடர்ச்சிதான் என்பதைக் காட்டுகிறது. நிகழ்காலத்தை நிகழ்காலத்திலேயே செலவு செய்யும் இந்த மக்களின் மனப்பான்மை, அவர்களின் இயல்பான பண்பாடாகத் தோன்றினாலும், அது கடந்த காலத் தோல்விகளாலும், தொடர் ஒடுக்குமுறையாலும் ஏற்பட்ட ஒரு வரலாற்று மனத்திரிபாகவும் இருக்கலாம்.

நவீன அரசு, அதன் சட்டங்கள் மூலம் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறது. ஆனால், விளிம்புநிலை மக்களின் வாழ்வில், இந்தச் சட்டப் பிரதிகள் எவ்வாறு செயலிழந்துபோகின்றன அல்லது அவர்களின் மீதான ஒடுக்குமுறைக் கருவியாகவே மாறுகின்றன என்பதை ‘ஊத்தாம் பல்லா’ கூர்மையாக அலசுகிறது. செங்கல் சூளைக்கு அட்வான்ஸ் வாங்கும் மனோகரன் போன்ற புரோக்கர்கள், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் பிடியிலிருந்து நழுவ, இந்த ‘அட்வான்ஸ்’ முறையைப் பயன்படுத்துகிறார்கள். இங்கு, சட்டத்தின் மௌனம், சுரண்டலுக்கு மறைமுக அங்கீகாரத்தை வழங்குகிறது. காத்தவராயன், ஓட்டு அட்டையைக் காட்டி நிலவுரிமை வாங்க முயல்வது, குடிமைசார் ஆவணத்தின் மீது அவன் வைத்திருக்கும் எளிய நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆனால், அந்த முயற்சி உள்ளூர் ஆதிக்க சக்திகளால் முறியடிக்கப்படும்போது, “சட்டம் சாதகமா இருந்தாலும், அதிகாரிகள் மனசு வைக்கனுமில்ல” (ப. 51) என்ற சேட்டுவின் ஆதங்கத்தில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மனித அதிகாரத்தின் மீதுள்ள நம்பிக்கையிழப்பை நாம் காண்கிறோம். இங்கு, சட்டம் என்பது வெறும் எழுத்து வடிவப் பிரதி மட்டுமல்ல. அது அதிகார மனோபாவம் கொண்ட மனிதர்களின் கைகளால் வளைக்கப்படும் ஒரு கருவியாக மாறிவிடுகிறது. காவல்துறையும் இதேபோல சட்டத்தை வளைக்கும் ஒரு கருவியாகவே செயல்படுகிறது. காசி, சினிமா பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், பாம்புத் தோலுக்காகக் காவல்துறையால் அச்சுறுத்தப்படுவது, வன விலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற பிரதிகள், அவர்களின் மரபார்ந்த வேட்டை அறிவைக் குற்றமாகப் பார்க்கும் பார்வையின் விளைவேயாகும். ஒரு கட்டத்தில், “இன்னு ஒன்னு போலீஸ்காரங்க மீசைய பார்த்தாலே பத்திக்குனு வருது” (ப. 18) என்று காசி வெளிப்படுத்தும் அச்சமும் வெறுப்பும், காவல்துறை மீதான நீண்டகால அதிகார ஒடுக்குமுறையின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே இருக்கிறது. இந்தவகையில், ‘ஊத்தாம் பல்லா’ நாவல் என்பது, பழங்குடி மக்களின் துயரத்தைப் பதிவு செய்யும் பிரதியாகவும், அதே சமயம், கொத்தடிமைச் சட்டம், வன விலங்குச் சட்டம், நில உரிமைச் சட்டம் போன்ற அரசின் அதிகாரப் பிரதிகளின் தோல்விகளை அம்பலப்படுத்தும் ஒரு துணை வரலாற்றுப் பிரதியாகவும் உருவெடுக்கிறது.

‘சேட்டு’ எனும் பாத்திரம், இந்த நாவலின் விளிம்புநிலைக் குழுவுக்குள் இருக்கும் ஒரு துணை-விளிம்புநிலை ஆளுமையாகக் காட்சியளிக்கிறான். அவன் சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்புகளிலிருந்தும், கூட்டு முடிவுகளிலிருந்தும் தொடர்ந்து விலகி நிற்கிறான். பெற்றோரால் கைவிடப்பட்டு ‘தனிக்கட்டையாக’ இருக்கும் அவன் (ப. 35), சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணையாத, தனித்த வாழ்வின் பிரதிபலிப்பாக இருக்கிறான். அவன், ஊத்தாம் பல்லா முறைக்காக மூங்கில் குச்சிகளைச் சீவுவது, நூல்வலைகளில் முடிச்சி இடுவது எனத் தனது நுட்பமான அறிவைச் சுயமாய் வெளிப்படுத்துகிறான். அவன் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. அவனது “ஒழுக்கங்கள் எல்லாம் சரிப்பட்டு வராது” (ப. 5) என்று சமூகமும் அவனைத் தனித்து விடுகிறது. சேட்டுவின் குரல், நாவலில் பெரும்பாலும் ஒரு எதிர்க்குரலாகவே ஒலிக்கிறது. செங்கல் சூளைக்குக் கிளம்பும் முடிவை சமூகம் எடுக்கும்போது, “அங்க போனா மட்டும் வாழ்ந்திருவீங்களா? இந்தச் சமுகம் வாழ வுட்டுடுமா?” (ப. 35) என்று அவன் கேட்பது, கூட்டு முடிவுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அபாயத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. அவன்மீது ‘மெரளு’ இறங்கும்போது, “ஓடணுமா? உன் மக்கா ஓடணுமா?” (ப. 37) என்று அவன் கூவும் குரல், புலம்பெயர்வு எனும் நிர்ப்பந்தத்தின்மீது எழும் ஒரு தீர்க்கதரிசனமான எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. சேட்டுவின் இந்தச் சுயமான, தனித்த குரலை, நாவலிலுள்ள மற்ற பாத்திரங்களான மலையனூர் கிழவி, பரவதம் போன்றவர்கள்கூட முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், அவனை ‘கிறுக்கன்’ என்றோ, ‘அபசகுணமாய்’ பேசுபவன் என்றோ ஒதுக்குகிறார்கள். இது, விளிம்புநிலைச் சமூகத்துக்குள் இருக்கும், அமைப்பை விமர்சிக்கும் மற்றொரு குரல் எவ்வாறு அங்கேயே நசுக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

ஒரு பிரதியின் சமூகக் கடப்பாடு என்பது எவ்வளவு உயர்வானதோ, அவ்வளவு முக்கியமானது அதன் கலைத் தரமும், அழகியல் தேர்வும். ‘ஊத்தாம் பல்லா’ நாவல், இருளர் சமூகத்தின் மீதான சுரண்டல், வறுமை, மற்றும் பண்பாட்டுச் சிதைவு ஆகியவற்றை வீரியத்துடனும், உணர்ச்சி வேகத்துடனும் பதிவு செய்த ஒரு மகத்தான சமூக ஆவணம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், ஒரு விமர்சகனின் பணி, அறவியல் பிரக்ஞையுடன் கூடிய இந்தப் பிரதியின் இலக்கியக் கட்டமைப்பின் மீதும், அதன் கலைத் தேர்வு மீதும் கேள்விகளை எழுப்புவதுமாகும். நாவலில், சில இடங்களில், கதைசொல்லி ஒரு தீர்க்கமான அறிவுரையாளராகவும், சமூகப் பிரச்சாரகராகவும் மாறி, பாத்திரங்களின் வாயிலாக அல்லாமல், தன் நேரடிக் கூற்றுகள் மூலம், இருளர்களின் அவலங்களை நிரூபிக்க முயல்கிறார். உதாரணமாக, “பிறர் துயரை உணர்தல் என்பது களைவதற்கான முதல் படி” (ப. 6) அல்லது “அரசியல் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற அதிகாரப் பரவல்… கல்வி உரிமைகள்கூட முழுமையாகப் பயன்படுத்தாமல் வாழ்கிற அவலம் தொடர்கிறது” (ப. 4) போன்ற கூற்றுகள், கதைக்குள் இருக்கும் உணர்ச்சி வேகத்தை சட்டென உடைத்து, ஒரு ஆவணப்படுத்தும் நோக்கத்தை மிகைப்படுத்தி வெளிப்படுத்துகின்றன. இந்த அதிகப்படியான சமூகப் பிரக்ஞை, படைப்பில் இருக்கக்கூடிய கவித்துவமான மெளனங்களை நிரப்பிவிடுகிறது. **‘சேட்டு’**வின் தனிமை, சந்திராவின் மௌனத் துயரம் போன்ற இடங்களில், அவர்களின் உளவியல் அலைச்சலை, கதைசொல்லி விரைவாகச் சமூகவியல் காரணிகளால் முடிச்சுப் போட முயல்வதால், பாத்திரங்களின் தனிப்பட்ட உணர்வின் ஆழம் சில இடங்களில் குறைகிறது. இது, ஒரு கலைஞன், சமூக அவலத்தைப் பதிவுசெய்யும் வேகத்தில், அதன் கலைப் பரிமாணத்தை முழுமையாக்கத் தவறியிருக்கிறானோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும், இந்தப் பிரதி விளிம்புநிலை மக்களின் குரலைப் பேசினாலும், அதன் பாத்திரங்கள் சில இடங்களில் “ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடுகளாகவே” சுருக்கப்படுகின்றனவோ என்ற விமர்சனமும் எழுகிறது. கதிர்வேல் போன்ற பாத்திரங்கள், குடியின் காரணமாகப் பெண்களைத் தாக்கும் வறுமைச் சுழலின் ‘கணவன்’ என்ற ஒற்றைச் சட்டகத்துக்குள் அடைக்கப்படுகின்றன. அவர்களின் தனிப்பட்ட முரண்கள், அல்லது இந்த வறுமையின் மீதான அவர்களின் உளவியல் போராட்டம் ஆகியவை, அவர்களின் குடிநோயாளி என்ற அடையாளத்தை அழுத்தமாக நிறுவுவதற்காக, சில இடங்களில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மலையனூர் அம்மா (கிழவி) போன்ற பாத்திரங்கள், சமூகத்தின் ஒட்டுமொத்த ஞானத்தையும், போராட்டத் தலைமையையும், தாய் தெய்வத்தின் வடிவமாகத் திரட்டி, ஒரு “அரசியல் மீட்பராக” நிலைநிறுத்தப்படுகின்றன. இது, பழங்குடிச் சமூகத்தின் பெண்களுக்கு தலைமைப் பண்பு உண்டு என்பதைக் காட்டினாலும், ஒரு யதார்த்தமான பாத்திரத்தின் முரண்களை மறைத்து, அவர்களை ‘சமூக நீதி வழங்கும் கடவுள்’ என்ற குறியீடாக மாற்றுகிறது. புரோக்கர் மனோகரன் போன்ற சுரண்டல் பாத்திரங்கள், வெறும் “இழிவான முதலாளித்துவத்தின் முகவராகவே” வரையறுக்கப்படுகின்றன. இத்தகைய பாத்திரங்களின் உளவியல், அவர்கள் ஏன் இந்தப் பணியைச் செய்கிறார்கள், அல்லது அவர்களிடமிருக்கும் எந்த மனிதத்தன்மையும் வெளிப்படுத்தப்படாமல், முற்றிலும் மோசமானவர்களாகவே சித்திரிக்கப்படுவது, பின்-நவீனத்துவத்தின் பார்வையில், எளிமைப்படுத்தப்பட்ட சமூக நீதி என்ற விமர்சனத்துக்கு இடமளிக்கிறது. இங்குப் பாத்திரங்களின் செயல்பாடு, கதையின் சமூக நோக்கம் மற்றும் அறவியல் கடமை ஆகியவற்றுக்குத் துணையாக மட்டுமே செயல்படுகிறதே தவிர, அவற்றின் உளவியல் சுயம் சில இடங்களில் கேள்விக்குள்ளாகிறது.

இத்தகைய விமர்சனங்கள் இருப்பினும், ‘ஊத்தாம் பல்லா’ ஒரு மிக முக்கியமான சமூகப் பிரதியாக, காலத்தின் கட்டாயமாக எழுதப்பட்ட ஒரு நாவல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த நாவல் எழுப்பும் அறச்சீற்றம், தமிழ் வாசக மனசாட்சியைத் துளைத்தெடுக்கும் வல்லமை கொண்டது. இருளர்களின் வாழ்வின் அழகை, ஊத்தாம் பல்லா வேட்டையை, கன்னியம்மன் சடங்குகளைப் பதிவு செய்தாலும், சமூக அவலம் இந்த அழகியலை முழுவதுமாக விழுங்கிவிடுகிறது. ஒருவேளை, அதுதான் இந்தப் பிரதியின் நோக்கமாகவும் இருக்கலாம். ஒரு கலைஞன், சமூக அவலத்தைப் பதிவுசெய்யும் வேகத்தில், அதன் கலைப் பரிமாணத்தை முழுமையாக்கத் தவறியிருக்கிறான் என்பதைவிட, அந்த அவலத்தின் தீவிரமே கலையை மீறி வெளிப்படுகிறது என்பதே இங்கு பொருத்தமானதாக இருக்கும். செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல், இருளர் சமூகத்தின் சிதைக்கப்பட்ட கனவுகளையும், அரசாலும் பொதுச் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட வலிகளையும் ஒரு வரலாற்று ஆவணமாகத் தருகிறது. “அறம் என்பது எப்போதும் இங்கே நிறம் மாறுகிறது. சக மனிதனை மதிக்கிற மாண்பு பேணப்பட வேண்டும்” (ப. 6) என்ற ஆசிரியரின் பெருமூச்சு, இந்தப் பிரதியின் ஒவ்வொரு பக்கத்திலும் பரவிக் கிடக்கிறது. வேட்டையையும், களியாட்டத்தையும், சடங்குகளையும் கொண்டாட்டமாக வாழ்ந்த ஒரு சமூகம், இன்று தன் இருப்பிற்கான அங்கீகாரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. அவர்களின் வேட்டைக் கருவிகளைப் போலவே அவர்களின் வாழ்வும் “மிக எளியவை” (ப. 5) என்று ஆசிரியர் குறிப்பிடும்போது, அந்த எளிமையின் பின்னால் இருக்கும் நூற்றாண்டுகாலத் துயரத்தையும் நாம் உணரத் தவறக்கூடாது. இந்த நாவல், வெறுமனே ஒரு சமூகத்தின் கதையைச் சொல்லவில்லை. மாறாக, தமிழ் சமூகத்தின் மனசாட்சிக்கு முன்பாக, இருளர் சமூகத்தின் இருப்பை ஒரு மானுடவியல் அறைகூவலாக நிறுத்துகிறது. இந்த அறைகூவலுக்குச் செவிமடுப்பதும், அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதுமே இந்தப் பிரதிக்கான உண்மையான வாசிப்பாக இருக்க முடியும். ஏனெனில், ‘ஊத்தாம் பல்லா’ என்பது வெறும் புனைவு அல்ல. அது அதிகாரத்தால் எழுதப்படாத வரலாற்றின் ஒரு கண்ணீர்த் துளி, கேட்கப்படாத குரல்களின் ஒருமித்த ஓலம், நம் அனைவரின் அறவுணர்வின் மீது தொடுக்கப்பட்ட ஒரு தவிர்க்கவியலாத கேள்வி.


Art : Charmaine

றியாஸ் குரானா
றியாஸ் குரானா

றியாஸ் குரானா – இலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர், கவிதை சொல்லி. ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளியில் பின்நவீனத்துவ எழுத்துக்களுக்கான களத்தினைக் கட்டமைத்த முன்னோடி என இவரைக் குறிப்பிடலாம். பின்நவீனத்துவக் கருத்தியல் சார்ந்து ஈழத்தில் வெளிவந்த “பெருவெளி” சிற்றிதழின் நிறுவனர்களில் ஒருவர். பரந்துபட்ட வாசிப்பும் காய்தல் உவத்தல் அற்ற விமர்சனமும் இவரது அடையாளங்கள். இவரது கவிதைகள் யாவுமே குறிப்பான ஒரு பாடுபொருளை மையமாகக்கொள்ளும் பொதுவான போக்கிலிருந்து விலகிப் பல்முனைத் தளங்களை அக்கறைகொள்பவை. நவீனம் கடந்த கவிதைகளை அக்கறை கொண்டு செயற்படுபவர். ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை (நுண்காவியம், முதற்பதிப்பு 2003, இரண்டாம்பதிப்பு 2006), வண்ணத்துப்பூச்சியாகிப் பறந்த கதைக்குரிய காலம் (நுண்காவியம் 2006), நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு (கவிதைத் தொகுதி 2011), மிகுதியை எங்கு வாசிக்கலாம் (கவிதைத்தொகுதி 2013), மாற்றுப்பிரதி (கவிதைத்தொகுதி 2016) என்று இதுவரை ஐந்து படைப்புக்களைத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு இவர் தந்துள்ளார். வாசகர்களைத் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்ட இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top