1. உருளைக்கிழங்குச் செல்ல குட்டி
உருளைக் கிழங்கு செல்லக் குட்டி உருண்டு உருண்டு வந்ததாம்!
அம்மா பேச்சைக் கேட்காம ஊட்டிய விட்டு வந்ததாம்!
மலைக்குக் கீழே வந்த பின்னே ஹாரன் சத்தம் கேட்டுதாம்!
பயத்துடனே மரத்தின் பின்னே ஓடி ஒளிந்து நின்றதாம்!
செல்லக்குட்டி என்றுதானே அம்மா குரல் கேட்டதும்!
திரும்பிப் பார்த்த உருளைக்கிழங்கு
அம்மாவப் பார்த்துச் சிரித்ததாம்!!
2. யானை யானை யானை
யானை யானை யானை எனக்குப் பிடிச்ச யானை!
ஈக்குமாத்துக் குச்சி போல
வாலைக் கொண்ட யானை!
மூட்டை மணலைப் போல
பாதம் கொண்ட யானை!
பலூன் போல ஊதிப் பெருத்த வயிறு கொண்ட யானை!
காதுகளை விசிறி போல ஆட்டுகின்ற யானை!
தந்தமாக சாக்பீஸ் இரண்டை ஒட்டிக்கொண்ட யானை!
கோலிக்குண்டு போல
கண்கள் கொண்ட யானை!
நீண்டு கருத்த புழுவைப் போல்
தும்பிக்கை கொண்ட யானை!
யானை யானை யானை
எனக்குப் பிடிச்ச யானை!
3. பறக்குது பறக்குது! பலூன் பறக்குது!
பறக்குது பறக்குது பலூன் பறக்குது!
ஆகாயத்தில் அசைந்து அசைந்து பறக்குது பறக்குது! பலூன் பறக்குது!
காற்று போகும் திசைக்கு ஏற்ப பறக்குது பறக்குது! பலூன் பறக்குது!
சுழன்று அடிக்கும் சூரக் காற்றில் பறக்குது பறக்குது! பலூன் பறக்குது!
நானும் தானே பறக்கின்றேன்! மேகத்தில் மிதக்கப் போகின்றேன்!
நிலவில் வடை சுடும் பாட்டியை நானும்
பார்க்கத்தானே போகின்றேன்!
பறக்குது பறக்குது! பலூன் பறக்குது!
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் பிறந்தவர். தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தமிழகம் முழுவதும் இதுவரை அரசு தனியார் பள்ளி கல்லூரிகளிலும் பல்வேறு தனியார் அமைப்புகளிலும் 1000க்கும் மேற்பட்ட கதை சொல்லல்களை நிகழ்த்தியுள்ளார்.
சிற்றூளி இலக்கிய இதழின் இணை ஆசிரியராகவும் இயல் சிறார்களுக்கான மின்னிதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
நீல மரமும் தங்க இறக்கைகளும், கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி, கிளியோடு பறந்த ரோகிணி உட்பட பல சிறார் சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள இவர், அசோகமித்திரன் நினைவு படடைப்பூக்க விருது, திருப்பூர் சக்தி விருது, உலகத் தமிழ் பேரியக்கத்தின் தங்க மங்கை விருது, தனிஷ்க் புதுமைப்பெண் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் புழுதி இணைய இதழில் ‘சாவ்பாடி’ என்னும் மிக முக்கியமான கட்டுரை எழுதியவராவார்.








Leave a Reply