Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

இன்கா நாடோடிக் கதைகள் – 3

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
October 1, 2025
இன்கா நாடோடிக் கதைகள் – 3

(தென்னமெரிக்காவின் ஆண்டியன் மலைத்தொடரில் தோன்றிய பல நாகரீகங்களுள் இறுதியாக வந்த இன்கா இனம் குறிப்பிடத்தக்கது. சாவின், நாஸ்கா, மொச்சி, வாரி, சிமு என்று தொடர்ந்த பண்டைய இனங்களுக்குப் பிறகு பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய இன்காப் பேரரசு பதினைந்தாம் நூற்றாண்டில் உச்சமடைந்தது. வடக்கே இன்றைய ஈக்குவேடாரிலிருந்து தொடங்கி பெரு, பொலீவியா என்று தொடர்ந்து தெற்கே சிலி வரை வியாபித்திருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் புதிய உலகம் தேடி வந்த ஸ்பானியர்களின் துப்பாக்கிகளுக்கு எதிரான போரில் இன்கா இனம் போராடித் தோற்றுப் போனது) 

விண்மீன் இளவரசி

வெகுகாலத்துக்கு முன்பு ஆண்டியன் மலையடிவாரத்தின் ஒரு கிராமத்தில் பூர்வகுடித் தம்பதியர் இருவர் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரே மகன்; அவன் பெயர் கோரிசிப்பாஸ். அவர்கள் மலையடிவாரத்தின் நிலங்களில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார்கள். சில நாட்களாகவே அந்நிலங்களில் திருட்டுத் தொல்லை. திருடர்கள் இரவில் வந்து உருளைக்கிழங்கைத் தோண்டி எடுத்துச் சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கோரிசிப்பாஸின் பெற்றோர் அவனை இரவுக் காவல் காக்க நிலத்துக்குச் செல்ல வலியுறுத்தினர். “வலுவான இளைஞன் நீ வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கிறாய்; அங்கே நிலங்களில் திருடர்கள் உருளைக் கிழங்குகளையெல்லாம் திருடிச் சென்று விடுகிறார்கள். இன்று இரவிலிருந்து நீ விளைநிலங்களுக்குச் சென்று காவல் காத்து வா. திருடர்கள் வந்தால் அடித்துத் துரத்திவிடு” என்றார்கள்.

அன்று இரவு கோரிசிப்பாஸ் விளைநிலங்களுக்குச் சென்று காவல் காக்க ஆரம்பித்தான். இரவு முழுவதும் விழித்திருந்து திருடர்கள் எவராவது வருகிறார்களா எனக் கவனித்துக் கொண்டே இருந்தான். விடியும் நேரத்தில் உறக்கம் துரத்தச் சற்றே கண்ணயர்ந்தான். அந்த நேரத்தில் திருடர்கள் வந்து கிழங்கு தோண்டி எடுத்துச் சென்றுவிட்டனர். விழித்துப் பார்த்த கோரிசிப்பாஸ் திருடு போயிருப்பதைக் கண்டு வருத்தம் கொண்டான். வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் சொல்ல அவர்கள், “சரி, பரவாயில்லை. இன்று இரவாவது விழிப்பாயிருந்து கவனித்துக்கொள்” என்றனர். 

திரும்பிச் சென்ற கோரிசிப்பாஸ் அன்றைய இரவு முழுதும் விழித்துக் காவல் காக்க உறுதி பூண்டான். நள்ளிரவு வரை விழித்துக் கவனித்துப் பார்த்தவனுக்குத் திடுமெனக் கண்கள் சுழற்றி உறக்கம் அழைத்தது. அந்தச் சிறு கணத்தில் திருடர்கள் தங்கள் வேலையைக் காண்பித்துச் சென்றுவிட்டனர். விழித்த கோரிசிப்பாஸ் அன்றைய இரவின் மீதியை உறங்காமல் காவல் காத்துக் கழித்தான். விடிந்ததும் வீடு திரும்பி நடந்ததை தாய் தந்தையிடம் சொன்னான். “இரவெலாம் நான் கண் விழித்துக் காவல் காத்துக் கொண்டிருந்தேன். நள்ளிரவில் கண நேரமே கண்ணயர்ந்தேன். அந்தக் கண் சிமிட்டும் நேரத்தில் திருடர்கள் வந்துவிட்டுப் போய்விட்டார்கள்” என்றான் ஏமாற்றத்துடன். “இப்படியே இந்த நாடகத்தைத் தொடரவிடாதே! விரைவில் திருடனைப் பிடித்துவிடு” என்றனர் பெற்றோர். 

அன்றைக்கு எப்படியாவது திருடனைப் பிடித்துவிடவேண்டும் என்ற முடிவுடன் திரும்பிச் சென்றான் கோரிசிப்பாஸ். ஒரு கணமும் தூங்கிவிடாது விழிப்புடன் உருளைக்கிழங்குத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். அதிகாலை நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில் அவன் விழிகள் உறக்கம் நோக்கி இலேசாகச் சுழன்றன. அந்த வேளையில் மூன்று இளவரசிகள் பளபளக்கும் உடையில் வானிலிருந்து பறந்து வந்தனர். நிலவின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்க கோரிசிப்பாஸின் உருளைக்கிழங்குத் தோட்டத்தினில் இறங்கினர். அவர்களது முகங்கள் மலர்களைப் போல வண்ணங்கள் சிந்தின. அவர்களது கூந்தல்கள் தங்க நிறத்தில் மின்னின. வெள்ளியாலான உடைகளை அவர்கள் உடுத்தியிருந்தனர். தோட்டத்தில் இறங்கியவுடன் அவசர அவசரமாக உருளைக்கிழங்குகளைத் தோண்டியெடுக்க ஆரம்பித்தனர். இளவரசிகளாகத் தோன்றிய அவர்கள் உண்மையில் நட்சத்திரங்கள்; வானிலிருந்து தரை வந்த நட்சத்திரங்கள். 

கண்விழித்துப் பார்த்த கோரிசிப்பாஸ் ஆச்சரியத்தில் வாய் பிளந்தான். “இவ்வளவு அழகிய பெண்களா? இவர்களைப் பிடித்தே தீரவேண்டும். காண்பதற்கு மின்னும் அழகுடைய இவர்கள் செய்யும் காரியமென்னவோ ஒவ்வாதிருக்கிறதே!” என்றான் தனக்குள். அவர்களது அழகு அவனது இருதயத்தை நொறுக்கியது. “அவர்களில் இருவரைப் பிடித்து நாமே வைத்துக்கொண்டால் என்ன?” என்று எண்ணினான். அந்த எண்ணத்துடனே அவர்களை நோக்கிப் பாய்ந்தான். எவ்வளவோ பெருமுயற்சி செய்தும் அவர்களில் ஒரேயொருத்தியை மட்டுமே அவனால் பிடிக்க முடிந்தது. மற்ற இருவரும் மின்னல் வேகத்தில் வானில் எழுந்து சடுதியில் மறைந்துவிட்டனர். 

அவளை இழுத்துக் கொண்டுவந்து குடிசையில் தள்ளிக் கதவை அடைத்தான். “ஏன் எனது தந்தையின் தோட்டத்தில் திருடினீர்கள்? இனிமேல் நீ இங்குதான் எனக்கு மனைவியாய் இருக்கப் போகிறாய்” என்றான். அந்தப் பெண்ணோ மறுத்தாள். “என்னைப் போக விடு! என்னை விட்டு விடு! கருணை கொள் என்மீது. பறந்து சென்ற என் சோதரிகள் எனது பெற்றோரிடம் இதனைச் சொல்லிவிடப் போகிறார்கள். நான் உனது உருளைக்கிழங்குகள் அனைத்தையும் தந்துவிடுகிறேன். என்னை விட்டுவிடு. என்னை இந்தப் பூமியில் வாழும்படிச் செய்துவிடாதே!” என்று இறைஞ்சினாள். 

அவளது கெஞ்சல்களுக்குச் செவிமடுக்காத கோரிசிப்பாஸ் அவளை அந்தக் குடிசைக்குள்ளேயே அடைத்து வைத்தான். அவனது பெற்றோரைப் பார்த்து நடந்ததைச் சொல்லவும் அவனுக்கு விருப்பமில்லை. அந்த விண்மீன் மங்கையுடனேயே குடிசைக்குள் தங்கிவிட்டான். 

இதனிடையே, கோரிசிப்பாஸ் வீடு திரும்பாததால் அவனது பெற்றோர் கவலை அடைந்தனர். திருடர்களை இன்னும் பிடிக்கமுடியவில்லை போலும், அதனால்தான் வீட்டிற்கு வரப் பயந்து தோட்டத்திலேயே இருக்கிறான் என்று எண்ணினர். வெகுநேரம் கழித்தும் அவன் வராததால், என்னவாயிற்று என்று பார்ப்பதற்கு கோரிசிப்பாஸின் தாய் உருளைக்கிழங்குத் தோட்டத்தை நோக்கிக் கிளம்பினாள், அவன் உண்ண உணவையும் எடுத்துக்கொண்டு. 

தொலைவில் அன்னை வருவதைப் பார்த்துவிட்டனர் கோரிசிப்பாஸும் விண்மீன் மங்கையும். “உனது தந்தையோ அன்னையோ என்னைப் பார்த்துவிடக் கூடாது. தயவுசெய்து நீ அவர்களைத் திருப்பி அனுப்பிவிடு” என்றாள் அவள். அவளைத் தன் மனைவியாக்க மறுத்துவிடுவார்களோ என்றஞ்சிய கோரிசிப்பாஸும் அவள் சொல்வது சரியென்றே நினைத்தான். குடிலை விட்டு வெளியே ஓடினான். தொலைவில் வந்துகொண்டிருக்கும் தனது தாயைப் பாதி வழியிலேயே நிறுத்தினான். “நீங்கள் அங்கே வரவேண்டாம் அன்னையே. உணவை என்னிடம் கொடுத்துவிட்டுத் திரும்பிவிடுங்கள். நான் இங்கேயே தங்கிக் காவல் காப்பதைத் தொடர்கிறேன்” என்றான். சரியென்று வீடு திரும்பினாள் அவனது தாய். தனது கணவனிடம், “கோரிசிப்பாஸ் உருளைக்கிழங்கு திருடிய ஆளைப் பிடித்துவிட்டான். வானத்திலிருந்து பூமிக்கு வந்த நட்சத்திரப்பெண்தான் அந்தத் திருடி. குடிசையில் அவளை அடைத்து வைத்திருக்கிறான். அவளையே மணந்துகொள்வான் என்று நினைக்கிறேன். ஆனால் அருகில் ஒருவரையும் நெருங்கவிட மாட்டேனென்கிறான்” என்றாள். 

குடிசையில், அவளுடன் உணவு உண்ட கோரிசிப்பாஸ், இரவு நேரமாகி விட்டபடியால் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான். அவளோ, “உனது தாய் தந்தையரை நான் ஒருபோதும் சந்திக்க முடியாது” என்றாள். கோரிசிப்பாஸ் தனக்குச் சொந்தமாக ஒரு வீடு இருப்பதாகப் பொய் சொன்னான். அங்கு செல்லாலாம் என்று அவளை ஏமாற்றி அழைக்க, நம்பிய அவளும் அவனுடன் சென்றாள். இருண்ட வழியில் அவளை நடத்திச் சென்று தனது பெற்றோரின் வீட்டினையடைந்தான். அவளது அழகைக் கண்ட கோரிசிப்பாஸின் பெற்றோர் வாயடைத்து நின்றனர். 

அவளைத் தங்களது வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருமகளாக்கிக் கொண்டனர். அவள் மீது மிகுந்த அன்பு செலுத்தினர். அவளது ஒளிவீசும் ஆடையை ஒளித்துவைத்துச் சாதாரண உடையிலேயே அவள் அங்கு வாழ்ந்தாள். இவ்வாறு நெடுங்காலம் சென்றது. விண்மீன் இளவரசி கருவுற்றாள். சில நாட்களில் ஆண்மகவு பிறந்தது. ஆனால் சில நாட்களிலேயே அந்தக் குழந்தை மர்மமான முறையில் இறந்துவிட்டது. ஒருவருக்கும் ஏனென்று விளங்கவில்லை.

ஒருநாள் கோரிசிப்பாஸ் ஏதோ வேலைக்காக நெடுந்தூரம் சென்றான். அவனது பெற்றோரும் தோட்டத்துக்குச் சென்றுவிட்டனர். அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி விண்மீன் இளவரசி தப்பித்து விட்டாள். வீட்டிலிருந்து வெளியேறி வானத்தில் பறந்து மறைந்துவிட்டாள். திரும்பி வந்த கோரிசிப்பாஸ் தனது மனைவியைக் காணாது தவித்தான். எல்லா இடங்களிலும் தேடினான். ஆனால் அவள் கிடைக்கவில்லை. அழுது புலம்பினான். மலை மீதேறி மலைச்சிகரத்தில் அழுதுகொண்டே தேடினான். 

அந்த மலையுச்சியில் தெய்வீகத்தன்மை வாய்ந்த மலைக்கழுகு ஒன்று வசித்து வந்தது. அழுதுகொண்டே வந்த கோரிசிப்பாஸைக் கண்டது. “இளைஞனே, ஏனப்பா அழுகிறாய்?” என்று கேட்டது. “கழுகுப் பெரியவரே, எனது மனைவியைக் காணவில்லை. அவளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்” என்றான். கழுகு சொன்னது, “நீ அவளை இங்கு தேடிப் பயனில்லை. அவள் தனது இருப்பிடமான வானுலகுக்குப் பறந்து சென்றுவிட்டாள்.” அதுகேட்ட கோரிசிப்பாஸ் இன்னும் பெருங்குரலெடுத்து அழுதான். 

அதைப்பார்த்து இரக்கப்பட்ட கழுகு சொன்னது, “அந்த விண்மீன் இளவரசியின் மீது நீ கொண்ட அன்பு அளவிட முடியாதது போலத் தோன்றுகிறதே! வருத்தப்படாதே இளைஞனே! நீ அவளைச் சந்திக்க ஆசைப்பட்டால் வானலோகத்துக்கு உன்னை நான் சுமந்து செல்கிறேன். அவ்வாறு செல்ல வேண்டுமெனில் எனக்கு நீ இரண்டு லாமாக்களைக் கொண்டு வரவேண்டும். ஒரு லாமா இந்தவிடத்தில் கொன்று உணவாகக் கொள்வதற்கு; இரண்டாவது லாமா, வானுலகத்துக்குப் பறந்து செல்லும் வழியில் உண்பதற்கு.”

கோரிசிப்பாஸ் உடனே சம்மதித்தான். மலையடிவாரப் பள்ளத்தாக்கிலிருக்கும் தன் வீட்டிற்குச் சென்று இரண்டு லாமாக்கள் கொண்டு வருவதாக வாக்களித்து விட்டு விரைந்து வீடு திரும்பினான். தனது பெற்றோரைப் பார்த்துச் சொன்னான், “தாயே! தந்தையே! எனது மனைவி வானுலகம் பறந்து சென்று விட்டாள். அவளைக் காணச் செல்கிறேன் நான். மலையுச்சியில் வசிக்கும் கழுகார் என்னைச் சுமந்து செல்வதாகச் சொல்லியிருக்கிறார். இரண்டு லாமாக்களை உணவாகக் கேட்டிருக்கிறார். நான் விரைந்து செல்ல வேண்டும்.” அவர்களிடமிருந்து விடைபெற்று இரண்டு லாமாக்களை ஓட்டிக்கொண்டு மலையுச்சியை நோக்கி ஓடினான்.

அங்கே மலைக்கழுகு காத்திருந்தது. மலைக்கழுகின் இருப்பிடத்திற்கு இரண்டு லாமாக்களுடன் கோரிசிப்பாஸ் வந்து சேர்ந்தான். உடனே ஒரு லாமாவைக் கொன்று தின்றது மலைக்கழுகு. இன்னொரு லாமாவின் குரல்வளையைக் கொத்தி அதனைக் கொன்றது. “இந்த லாமா வானுலத்துகுப் பயணம் செய்யும் வழியில், நான் எப்போதெல்லாம் “பசி” என்கிறேனோ, அப்போது என் அலகில் நீ சிறிது லாமா இறைச்சியைத் தரவேண்டும்” என்றது கோரிசிப்பாஸிடம். “சரி பெரியவரே” என்றான். “இன்னும் ஒரு நிபந்தனை. நாம் பறந்து செல்கையில் நீ எக்காரணம் கொண்டும் கண்களைத் திறந்து வைத்துக்கொள்ளக் கூடாது. பயணம் முழுவதும் நீ கண்களை மூடிக்கொண்டே வரவேண்டும். கண்களைத் திறந்து நீ பார்த்தேயானால் அக்கணமே நான் உன்னை என் முதுகிலிருந்து உதிர்த்து விடுவேன். நீ பின்னர் கீழே புள்ளியாய் விழுந்து உடல் சிதற வேண்டியிருக்கும்” என்றும் எச்சரித்தது மலைக்கழுகு. அதற்கும் ஒத்துக்கொண்டான் கோரிசிப்பாஸ்.

லாமா இறைச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு மலைக்கழுகின் முதுகில் ஏறி அமர்ந்தான். கழுகு விர்ரென வானம் நோக்கிப் பாய்ந்தது. கண்களை இறுக்க மூடிக்கொண்டான். அது நீண்ட நெடிய பயணம். கழுகுக்குப் பசித்த வேளையிலெல்லாம் “பசி” என்றது. தன்னிடமிருந்த லாமா இறைச்சியில் சிறிதை மலைக்கழுகின் அலகில் வைத்தான். அதை உண்டவுடன் மீண்டும் சீறிப்பாய்ந்தது கழுகு. சில மாதங்களிலேயே இறைச்சி முழுவதும் கழுகுக்கு உணவாகி விட என்ன செய்வது என்று யோசித்தான் கோரிசிப்பாஸ். மாமிசம் இல்லையேல் கழுகு சினங்கொண்டு தன்னைக் கீழே தள்ளிவிடுமோ என்று பயந்தான். தனது கெண்டைக்காலின் தசைப்பகுதியைச் சிறிய மாமிசத் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொண்டான். கழுகு “பசி” என்றவுடன் தனது உடல் மாமிசத்துண்டைக் கழுகின் அலகில் வைத்தான். இப்படியாகப் பயணம் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிவிட்டது. அவர்கள் வானுலகம் வந்து சேர்ந்தனர்.

அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். ஒரு வருடப் பயணத்தில் இருவரும் மிகவும் களைத்திருந்தனர். இருவரின் முகங்களிலும் உரோமம் நீண்டு வளர்ந்திருந்தது. மீண்டும் பறக்க ஆரம்பித்தது கழுகு. சில நாட்களில் அவர்கள் ஒரு பெரிய வானுலக ஏரிக்கு வந்து சேர்ந்தனர். “முதலில் நாம் இருவரும் இந்த ஏரியில் நீராட வேண்டும்” என்றது கழுகு. அந்த ஏரியில் இருவரும் நீராடினர். வானுலக ஏரியின் நீர் மாயவித்தைகள் செய்யவல்லது. இருவரும் களைப்பு நீங்கி மீண்டும் இளமையாக உணர்ந்தார்கள். முகத்தின் உரோமங்கள் கூட நீங்கிவிட்டன. 

பின்னர் மலைக்கழுகு கோரிசிப்பாஸிடம் சொன்னது, “கேள் இளைஞனே! இந்த ஏரியின் மறுகரையில் பெரிய கோவில் உள்ளது. வானுலக நட்சத்திர மங்கைகளுக்கெல்லாம் பெற்றோர்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் எழுப்பப்பட்ட கோவில் அது. அந்தக் கோவிலுக்கு இன்னும் சிறிது நேரத்தில் நட்சத்திர இளவரசிகள் அனைவரும் வருகை தரப்போகிறார்கள். அவர்கள் தினமும் அந்தக் கோவிலுக்கு வந்து தங்களது பெற்றோரை வணங்குவது வழக்கம். நீ அங்கே சென்று காத்திரு. அங்கே உன் மனைவியும் வருவாள்”. “சரி” என்று கூறிப்புறப்பட்டான் கோரிசிப்பாஸ். “நில், இன்னும் ஒரு தகவல் – அந்த விண்மீன் இளவரசிகளெல்லாம் காண்பதற்கு ஒரே மாதிரித் தோற்றத்தில் இருப்பவர்கள். உனது மனைவியை உன்னால் அடையாளம் காண முடியுமா?” என்று கேட்டது கழுகு. குழப்பமடைந்தான் கோரிசிப்பாஸ். “நீ கோவிலுக்குச் சென்று நின்று வரும் மங்கைகளைப் பார்த்துக் கொண்டே இரு. ஒருவரும் உன்னைக் கவனிக்க மாட்டார்கள். உனது மனைவி மட்டும் உன்னைக் கடந்து செல்கையில் தன் தோள்களால் உன்னை உரசிச் செல்வாள். அப்போது நீ அவளைப் பிடித்துவிடு” என்றும் சொன்னது கழுகு. 

மலைக்கழுகுக்கு நன்றி கூறிப் புறப்பட்ட கோரிசிப்பாஸ் ஏரியின் மறுகரையை அடைந்தான். அங்கே கோவிலின் மிகப் பெரிய சுற்றுச்சுவரைப் பார்த்தான். கோவிலின் வாயிலுக்குச் சென்று அங்கே காத்திருந்தான். சிறிது நேரத்தில் நட்சத்திர மங்கைகள் வர ஆரம்பித்தனர். எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருந்தனர். வெள்ளியிலான உடை தரித்து வந்த அந்த நங்கைகளின் முகங்களில் தனது மனைவியைத் தேடினான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா நட்சத்திர இளவரசிகளும் ஒரே உருவமாய் அவனுக்குத் தெரிந்தார்கள். அவனைக் கடந்து செல்கையில் அவனைப் பார்த்த அந்த நங்கைகளின் முகங்களில் எந்தவொரு சலனமும் தென்படவில்லை. 

கடைசியாய் வந்த நங்கைகளுள் ஒருத்தி மட்டும் அவனை நெருங்கி வந்து அவனின் தோளைத் தன் தோளால் உரசிச் சென்றாள். கோரிசிப்பாஸ் அவளைத் தொடர்ந்து சென்று அவளைப் பிடிப்பதற்குள் கோவிலுக்குள் சென்றுவிட்டாள். எல்லா நட்சத்திர மங்கைகளும் கோவிலுக்குள் சென்றுவிட இப்போது வழிபாடு ஆரம்பித்தது. ஒருமித்த குரலில் எல்லோரும் சூரியனை வணங்கி வழிபாட்டுப் பாடலை இனிய இசையுடன் பாடினர். கோவிலின் வாசலில் இருந்த கோரிசிப்பாஸ் மெய்சிலிர்த்தான். அவன் இத்தகைய இசையையோ பாடலையோ முன்னெப்போதும் கேட்டதேயில்லை. சிறிது நேரத்தில் வழிபாடு நிறைவடைந்து எல்லோரும் கோவிலைவிட்டு வெளியேறினர். கோரிசிப்பாஸ் காத்திருந்தான். திரும்பிச் செல்கையிலும் அவனது மனைவி அவனது தோள்களை உரசிச் சென்றாள். விரைந்து சென்று அவளைப் பிடித்துக் கொண்டான் கோரிசிப்பாஸ். 

அவள் உதறிச் செல்ல முயன்றாள். இறுகப் பற்றிக்கொண்டான் அவளை. “இங்கு ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? நான் இன்னும் சில நாட்களில் பூமிக்குத் திரும்பி வந்திருப்பேனே. ஏன் வீணாக நீ இங்கு வந்தாய்?” என்று கேட்டாள் அவனை. கோரிசிப்பாஸ் பதில் ஏதும் பேசவில்லை. அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் வானமங்கை. அவளது வீட்டினை அடைந்தார்கள் இருவரும். மிகுந்த களைப்பிலிருந்த கோரிசிப்பாஸ் தனக்குப் பசிப்பதாகச் சொன்னான். மூட்டையிலிருந்து மிகச் சிறிய அளவில் வரகு எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இந்த வரகைச் சமைத்து வரகுக் கஞ்சி செய்துகொள். நான் எனது பெற்றோரைப் பார்த்துவிட்டு வருகிறேன். நீ இங்கேயே இரு. உன்னை யாரும் பார்த்துவிடக்கூடாது. முக்கியமாக என் பெற்றோர் உன்னைப் பார்த்துவிடக்கூடாது” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

அவள் கொடுத்துவிட்டுச் சென்ற வரகின் அளவோ மிகக்குறைவு. இது எப்படி என் பசியைத் தீர்க்கும் என்று எண்ணியவன் வரகு மூட்டையிலிருந்து நிறைய வரகு எடுத்துச் சட்டியில் போட்டு வரகுக் கஞ்சி சமைத்தான். சிறிது நேரத்தில் சட்டியிலிருந்து கஞ்சி பொங்கிவர ஆரம்பித்தது. அவன் கஞ்சியை அள்ள அள்ள அது வந்துகொண்டேயிருந்தது. குறையவே இல்லை. கோரிசிப்பாஸ் தன்னால் முடிந்தமட்டும் கஞ்சியைச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தான். சட்டியிலிருந்து வரகுக் கஞ்சி இன்னும் பொங்கி வழிந்துகொண்டே இருந்தது. கஞ்சியை எடுத்துத் தரையில் குழி தோண்டிப் புதைத்தான். மிகச் சிறிய அளவு வரகை ஏன் மனைவி தன்னிடம் கொடுத்தாள் என்று அவனுக்குப் புரிந்தது. 

திரும்பி வந்த நட்சத்திர இளவரசி கோரிசிப்பாஸ் வரகுக் கஞ்சியுடன் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டாள். “ஏன் இப்படி நிறைய வரகை எடுத்து வீணடிக்கிறாய்?” என்றவள் கஞ்சி மேலும் பொங்கி வழியாமல் தடுத்து நிறுத்தினாள். அவர்கள் இவ்வாறாய்த் தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்தனர். வெளியே சென்று திரும்பும் நட்சத்திர மங்கை தினமும் அவனுக்குப் பலவிதமான உணவுகளைக் கொண்டுவந்து கொடுத்தாள். ஒருவருடத்துக்கும் மேல் சென்றது. சிறிது சிறிதாய் நட்சத்திர மங்கையின் அன்பு மங்கத் தொடங்கியது. அவள் அடிக்கடி வீட்டுக்கு வருவதை நிறுத்தினாள். எப்போதாவது உணவு கொண்டு வந்தாள். கோரிசிப்பாஸ் வருத்தமடைந்தான். 

ஒருநாள் வீட்டுக்கு வந்தவள், “அவ்வளவுதான், நான் விடைபெறும் வேளை வந்துவிட்டது. இனிமேல் நான் இங்கு வரமாட்டேன். நீ திரும்பிச் செல்லலாம்” என்று சொல்லிச் சென்றுவிட்டாள். பின்னர் திரும்ப வரவேயில்லை. சில நாட்கள் காத்திருப்புக்குப் பின் கோரிசிப்பாஸ் மனமுடைந்தான். அவளைத் தேடி அங்குமிங்கும் அலைந்தான். கடைசியில் வானலோகத்து ஏரிக்கு வந்து சேர்ந்தான் அழுதுகொண்டே. 

அங்கே மலைக்கழுகு வந்து சேர்ந்தது. மிகக் களைப்பாகி வயதான தோற்றத்தில் இருந்தது கழுகு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அழுதனர். “கழுகுப் பெரியவரே, என் மனைவி என்னை விட்டு நீங்கிச் சென்றுவிட்டாள்” என்றான் வருத்தத்துடன். கழுகு தனது விரிந்த சிறகுகளால் அவனை ஆதரவாகத் தடவிக்கொடுத்தது. “கழுகாரே, என்னை மீண்டும் பூமிக்கே திரும்பக் கொண்டு செல்வீர்களா?” என்று கேட்டான் கோரிசிப்பாஸ். அதற்கு விலையாக இரண்டு லாமாக்களைக் கேட்டது கழுகு. பூமியில் தனது வீட்டை அடைந்தவுடன் லாமாக்களைத் தருவதாக வாக்களித்தான் கோரிசிப்பாஸ். கழுகு ஒத்துக்கொண்டது. “நாம் பூமி திரும்பலாம். அதற்கு முன் இந்த ஏரியில் நீராடிப் புத்துணர்வு பெறலாம்” என்றது கழுகு.

இருவரும் வானுலக ஏரியில் நீராடியவுடன் களைப்பு நீங்கிப் புத்துணர்வு பெற்று இளமையாய் உணர்ந்தார்கள். கழுகின் தோள்களில் ஏறிக்கொண்டான் கோரிசிப்பாஸ். பூமி நோக்கிய பயணம் தொடங்கியது. ஏறத்தாழ ஒரு வருடப் பயணத்தில் பூமியை வந்தடைந்து கோரிசிப்பாஸின் வீட்டை அடைந்தனர். வாக்களித்தபடியே இரண்டு லாமாக்களை கழுகுக்குக் கொடுத்தான் கோரிசிப்பாஸ். விடைபெற்றுச் சென்றது கழுகு. 

வீட்டுக்குள் சென்ற கோரிசிப்பாஸ் தனது பெற்றோரைக் கண்டான். அவர்கள் வயதாகிக் கிழப்பருவம் எய்திவிட்டிருந்தனர். கோரிசிப்பாஸைக் கண்டு விழிநீர் உகுத்தனர். “பெற்றோரே, நான் வானுலகம் சென்று எனது மனைவியைக் காணச் சென்றிருந்தேன். ஆனால் அவள் என்னைப் புறக்கணித்துச் சென்றுவிட்டாள். இனிமேல் இங்கு எனக்கு வேறு மணம் செய்யவேண்டாம். நான் வானமங்கையின் நினைவிலேயே என் வாழ்நாளைக் கழித்துக் கொள்கிறேன்” என்றான். “உன் விருப்பப்படியே செய்துகொள்” என்றனர் பெற்றோர்.

இன்றும் அப்படியே வாழ்ந்துகொண்டிருக்கிறான் கோரிசிப்பாஸ், நள்ளிரவு வேளைகளில் உருளைக்கிழங்குத் தோட்டத்தில் திருட விண்மீன் இளவரசி வருகிறாளா என்று தினமும் எதிர்பார்த்தபடி. 


 

எழில் சின்னதம்பி
எழில் சின்னதம்பி
பெயர்: எழில் மயில் வாகனன். தந்தை பெயருடன் இணைத்து, எழுதுவதற்காக வைத்துக்கொண்ட பெயர்: எழில் சின்னதம்பி.
சொந்த ஊர்: தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்திலுள்ள சென்னம்பட்டி எனும் சிற்றூர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ஜெர்மனி, சுவீடனில் பணிபுரிந்து தற்போது அமெரிக்காவின் சாண் டியாகோ நகரில் வசிப்பு – தரப்பகுப்பாய்வு இயக்குனராகப் பணிப்பொறுப்பு.

மொழிபெயர்ப்புக் கதைகளும், கலை இலக்கியக் கட்டுரைகளும் கல்குதிரை, சிறுகதை, தினவு, தடாரி, காலச்சுவடு, சிறுவர்களுக்கான ‘இயல்’ போன்ற இதழ்களில்  வெளியாகியிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ‘கடைசி வருகை’ முதல் புத்தகம், மார்ச் 2022-ல்வெளியானது. ‘லத்தீன் அமெரிக்கப் பெண்ணெழுத்து’ எனும் இரண்டாவது மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘கடலோடியின் மனைவி’ 2024 டிசம்பரில் வெளியானது. ‘இயல்திரிபுப் புனைகதைகளின்’ மொழிபெயர்ப்புத்தொகுப்பான ‘சிலந்தி’ டிசம்பர் 2025ல் வெளியாகியிருக்கிறது.
Share :

One response to “இன்கா நாடோடிக் கதைகள் – 3”

  1. அ.எபநேசர்‌அருள் ராஜன்
    February 4, 2026

    அருமை ஐயா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top