அவனின் அவன்
எதற்காகவோ
என்பின்னால் வந்துகொண்டே இருக்கிறான்
அவனுக்கு என்ன தேவையென்று
எனக்குத் தெரியவில்லை
கோபத்தில் அவனுக்கு
என்னைவிடக் கைகள் நீளமாக இருக்கின்றன
நான் நின்றால் நிற்கிறான்
படுத்தால் படுக்கிறான்
ஓடினால் விரட்டுகிறான்
மிகவும் துயரமாக இருக்கிறது
அவனை
என் நிழல் என்கிறார்கள்
அதுதான் அச்சமாக இருக்கிறது.
நம்பிய நிலம்
அந்தச் சிறுவன்
நட்டு
நீர் ஊற்றிய செடியில்
ஐந்து பூக்கள்
முதலில் பூத்து
தெருவில்
அவனுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கிய
பூச்செடியின் பெயர்
கனகாம்பரம்
அவன் உலகின்
சிறந்த பூ
வாசனையற்ற கனகாம்பரம்
தந்தைமை
மகன் கைவிட்ட கிழவனுக்கு
திசைகளின் இருள்வெளியில்
வேக நடை
ஹிருதயத்தில் வெளிச்சத்தின்
பேரோசை
கடலைத் தூக்கத் துணிந்த
திமிர்
லாந்தர்விளக்குடன் குன்றின்மீதேறும்
வைராக்கியம்
பிள்ளை இடறிவிழுந்த நாளின்
பதற்றம்
வெற்றுக் கைகளில் நிரம்பியிருக்கும்
குறையாத ஆசிகள்
பிதாவிடம் விண்ணப்பம்
உலகைக் காணத் துடிக்கும்
பார்வையற்ற கண்களின்மேல்
பூமியிலிருந்து மண்ணள்ளி வைத்தீர்
நம்பமுடியாத ஆச்சரியங்களோடு
குருட்டுத்தன்மை நீங்கி
ஒருவன்
இவ்வுலகைப் பார்த்தான்
’உன் நம்பிக்கை உன்னை நலமாக்கியது’
என்றீர்
தவறானவற்றைக் காட்டுபவர்களுக்கு
தவறையே பார்ப்பவருக்கு
உலகின் கொடுங்காட்சிகளைப் பார்க்க
விரும்பாதவர்களுக்கும்
வெறியூறிய காட்சிகளை ஆதரிக்கும்
கண்களெல்லாம்
இருள் மூடிட
ஒரு பிடி மண் வேண்டும் பிதாவே
உண்மையின் குரல்
ஒன்றுமில்லை எனும் முடிவில்
ஒன்று இருக்கிறது
எல்லாம் இருக்கிறது எனும் நிலையில்
எதுவும் இருப்பதில்லை
இருப்பது இருக்கும்
இல்லாதது இருக்காது என்ற முடிவில்
மமதை கொண்டால்
இல்லாதது உருக்கொள்ளும்
இருப்பது மறையும்
Art : craigkrullgallery








Leave a Reply