கருஞ்சிவப்பு மனம்!
(I )
துருவேறிய பழங்கால மனம்
யுகம்தோறும்
அதன் வினைக்கு
தன்னையே ஆயுதமாகக் கொண்டு
மிக நீண்ட காலமாகிவிட்டது இல்லையா?
எனக்குச் சலிப்பாக இருக்கிறது.
மனம் சமைந்த காலம் முதல்
தன்
காலாதீதம் வரை
தன்னைப் பலி கொடுக்காத
மனித இருப்பு சாத்தியமா?
அதன்
குருதிச் சிவப்பில்
இருள்குகையில்
செம்மலர்தலில்
பைத்தியத்தில்
நீந்தாத மானுடர் உண்டா ?!
( II )
கற்கோடாரி
முதல்
தங்கக்கோடாரி வரை
சின்னஞ்சிறிய மலர்
முதல்
சிறு வித்துவரை
தன்னைக் கீறி
பிறரைக் கீறி
வழியும் குருதியால்
வாழ்ந்து அழிந்து
உருவாகி
மீண்டும் அழித்து
உருவாகி,
மானுட குலத்தையே
பலியாகக் கொடுத்தும்
தீரத் தீர
பலி கேட்கும்
வேட்கையை என்ன செய்வது
அண்டமே?!
( III )
பல்லூழிக் காலம் முதல்
உழற்றும் உளையால்
குருதிச் சிவப்பினால்
இருளினால்
உன்
வசீகரத்தை இழந்துவிட்டாய்
என்பதாவது
உனக்குத்
தெரியுமா மனமே?
(IV)
மானுட குலத்தின்
எல்லாச் சாபங்களையும்
காம
குரோத
மோகங்களையும்
நீ
ஏன்
உன்
மணிமுடியில்
வைத்திருக்கிறாய்?
உன்
மணிமுடியை
ஞானிகள் சிறு கல்லைப் போல
உருண்டோடச் செய்வார்கள்
என்பதாவது
உனக்குத்
தெரியுமா ?
( V )
என் முறை
வரும்.
உன்னை
ஒரு
மலரைப் போல
கிள்ளி எறிவேன்.
மீண்டும் முளைத்தெழாதபடி!
மென்மரணம்
அழகான வெள்ளைப் பூனை
அதன் இரண்டு காதுகளும்
மேல் நோக்கிச் சிலிர்த்திருந்தன.
அதன் முதுகில்
சிறிதே சிறிது அளவு
இரத்தச் சிவப்புப் புள்ளி.
அதன்
நாக்கு
தரையை நக்கியபடியே
அதன்
உயிர் நீங்கியிருந்தது.
அதன் செயல்கள்
பாதிக்காமல்
அதற்கொரு மரணம்.
முசுமுசுப்பின் ஞானம்
மிகச் சிறிய
கம்பளிப்பூச்சி
சாலையை மிக
நிதானமாகக் கடந்து செல்கிறது.
பிறகு
தன்னைக் கடந்து செல்கிறது
தன் முசுமுசுப்பை
ஒவ்வொன்றாக
உதிர்த்தபடியே!
நிரம்பாத பாத்திரம்
உடலால் ஊர்ந்து சென்று
யாசகம் கேட்கும்
முதிய மனிதனை
வெகுகாலமாக எனக்குத் தெரியும்.
அவன் இவ்வூரில்
உள்ள
நானாவிதமான துக்கங்களையும்
நானாவிதமான உண்மைகளையும்
தனது
உடலால் அளப்பவன்
மனதால் அளப்பவன்
ஆனாலும் .
அவன் பாத்திரம்
ஒரே ஒரு முறைகூட
நிரம்பியதில்லை.
அவன் அதைப் புன்னகையோடு
கடந்துவிடுவான்.
ஆனால்
அவனின் பாத்திரத்தை
இட்டு நிரப்ப இயலாத
இவ்வூரில்தான் தெய்வம்
ஓஹோ என்றிருக்கிறது.!
மனோதுன்பம்
காதறுந்த முதிர்ந்த
பன்றி அதன் குட்டிகளோடு
தெருவோரம்
சுற்றிக் கொண்டிருந்தது.
அதற்கு அதன் காதறுந்தது
குறித்து எந்தக் கவலையும் இல்லை.
அதன் அருகிலே
அமைதியற்ற ஆன்மாவினால்
குழம்பித் தவிக்கும் ஒருவன்
அதனிடம்
உரையாடிக்கொண்டிருந்தான்.
அதுவும் இப்பொழுது
அவனோடு உரையாடத் துவங்கி இருந்தது.
அதன் குறையை
அதன் முறையீட்டை
அவனும்
அவன் குறையை
அவனின் முறையீட்டை
அதுவுமாக!
இரா.சசிகலாதேவி என்னும் இயற்பெயர்கொண்ட சசி இனியன் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். 2024 ‘நீலி வனம்’ என்னும் முதல் கவிதை நூல் சால்ட் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.








Leave a Reply