குரல் வளையிலிருந்து ஏற்றப்பட்ட கொடி
செந்நிறத் தாள்களில் இருந்து அவைகள்
காணாமல் போய்விட்டதாகப் பிதற்றும்
அதிகாரியின் இருபுறத் தோள்களிலும்
ரேகைகள்
சாட்சியாய் நிற்கின்றன.
முன்பு
அவைகள் மலைகளிலிருந்தும்
காடுகளில் இருந்தும்
மணல் மேடுகளில் இருந்தும்
முகாம்களில் இருந்தும்
கூடாரங்களில் இருந்தும்
காணாமல் போயிருந்தன.
அவைகளின் குரல்வளையிலிருந்து
ஏற்றப்பட்ட கொடிக்குப்
பிரத்தியேகப் பாடலும்
அதைப் பாடுபவனுக்கு
தேசத்துரோகி என்ற பெயரும் உண்டு.
நீ அப்பாடலைக் கேள்
அவை உன்னைப் பாடும் பார்.
கறுப்பு மதுவிற்கான சிவந்த இதழ்
மதுவின் சூத்திரதாரி யாரெனக் கேட்டேன்
அவனொரு பிழைக்கத் தெரியாதவனாகத்
தோன்றி மறைந்தான்
புண்களின் மீது அவனூற்றிய மதுவுக்கு
வெளிக்காயங்களை ஆற்றும் தரமிருந்ததாகக் கூறினார்கள்
குடுவைகளில் மதுவூற்றிப் புலம்பும்
ஓய்வூதியம் அற்ற ஒருவனைக் குறித்து
காற்றில் எழுதிச் செல்கிறான்
பித்தனென்றும் சித்தனென்றும்
பெண் உடல் மீது மதுவை ஊற்றிப்
புணர்ந்ததாகச் சத்தியம் செய்தவனின்
காய்ந்த உடலுறுப்பை
அந்திகளில்
அவன் மனைவி
குப்பைத்தொட்டி நாய்களின் அரவணைப்பிலிருந்து
பிய்த்து எடுக்கிறாள்
பிரேதத்தின் சிவந்த இதழில் முத்தமிடும் முன்
எரிந்து முடியாத சொக்கப்பனையிலேறிக்
களவாடிக் குடிக்கும் கள்ளுக்குப்
பாதங்களால் நசுக்கப்பட்ட திராட்சை ரசத்தின்
நாகரிகச் சாயல் இல்லை.
அங்கதம்
ஒற்றைக் கால்களில் நிற்கும் கொக்குகள்
தங்களை வயற்காட்டின்
பிதாமகரென நம்பிக் கொள்வதில் பிழையென்ன
அவை
உலகிற்குக் காட்டிய பாதத்தில்
எந்த மீனுமில்லை
எந்தப் புழுவுமில்லை
எந்தத் தவளையுமில்லை.
Art : news.cgtn.com
நலிஜத் என்னும் இயற்பெயர் கொண்ட பாலைவன லாந்தர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர். 2016- ஆம் ஆண்டு ‘உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து லாடம், ஓநாய், பெருந்தச்சன், World Class Sins (English Translation)
மீளி சிறுகதை தொகுப்பு ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுகதைகளும் கட்டுரைகளும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
சமூகநலச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெரு நோய்த்தொற்று கொரோனா காலத்தில் இவர் தயாரித்த ‘ஊரடங்கு’ என்ற விழிப்புணர்வு குறும்படம் பெரும் கவனம் பெற்றது. ஜெர்மனியில் வாழும் நிம்மி சிவா என்னும் எழுத்தாளரோடு இணைந்து உலகெங்கிலும் உள்ள இருபது பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இவர் எழுதிய “மனமே யுத்தம் செய்” என்னும் நெடு நீள விழிப்புணர்வு கவிதையை வாசிக்கச் செய்தார்.
LANTHAR ART ENTERTAINMENT – லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் என்னும் கலை இலக்கியச் செயற்பாட்டிற்கான தளம் ஒன்றை உருவாக்கித் தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.








Leave a Reply