கடந்த 2025 ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் கத்தோலிக்கக் கிறித்துவச் சமயத் துறவிக்கான படிப்பை மேற்கொண்டிருக்கும் இளந்துறவிகளுக்கு எழுதும் கலை குறித்த பயிற்சி வழங்கினேன். இலக்கியத்தை அணுக வேண்டிய முறையை விளக்குவதற்கு உதவுமென்று சான்றாக நிறைய கவிதைகளையும் சில சிறுகதைகளையும் அவர்களுக்கு வாசிக்கக் கொடுத்தேன். அப்படிக் கொடுக்கப்பட்ட கவிதை நூல்களுள் ஒன்றுதான் ப.நடராஜன் பாரதிதாஸ் எழுதிய ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்’. நல்ல கவனத்தைப் பெற்றிருக்க வேண்டிய தொகுப்பு. அதில் நல்ல கவிதைகள் அதிகமிருக்கின்றன.
அந்த நூலை வாசிக்க ஆரம்பித்த இளந்துறவி ஒருவர் ‘பிரசவம் பார்த்துவிட்டுவரும் / அம்மாவும் / சவத்துக்கு ஈமச்சடங்கு முடித்துவரும் / தகப்பனும் / புணர்கையில் எந்தவாடை தூக்கலாயிருக்கும் / பிரசவவாடையா / பொணவாடையா’ என்ற கவிதையைப் படித்ததும் ஒருகணம் திடுக்கிட்டுப் போனார். அந்தப் பக்கத்தின் ஓரத்தை மடித்துப் புத்தகத்தை மூடி அடுத்தவர்களுக்குக் கடத்தினார். அனைவரும் படித்தார்கள். அனைவருக்குள்ளும் ஓர் அதிர்ச்சி. ஒருவர் புத்தகத்தை மூடிய கணமே முன் பின் அட்டையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அபோது அந்தக் கவிதை அவர்களைப் பாதித்திருக்கிறது என்பதை எந்தச் சிரமமுமில்லாமல் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று புத்தகத்தின் நுவல்பொருள். இரண்டு பயிற்சிக்கு வந்திருந்தவர்களின் வாசிப்பனுபவம். பயிற்சி பெற்ற இளந்துறவிகள் வாசித்தவை பெரும்பாலும் கிறித்தவம் தொடர்பானவை. சர்ச் வரலாறு, கிறித்தவப் புனிதர்கள் வரலாறு, தியானம், மனதை ஒருமுகப்படுத்தும் விதம், அதற்கான தேவை, விவிலியத்தின் வழி சமூகத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தல் என்பதாகத்தான் அவர்கள் படித்திருப்பார்கள். தற்கால இலக்கியங்கள் குறித்து ஓரளவு தெரிந்து வைத்திருப்பார்கள். இந்தப் பின்னணியில் அவர்களின் வியப்பைக் கவனத்தில் கொள்ளும் போது ஏன் ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பாரக்’ வியப்பை ஏற்படுத்த வேண்டும்? என்று யோசிக்க வேண்டியது முக்கியமாகப்படுகிறது.
ஆன்மிகத்தில் அவர்கள் பெற்ற பயிற்சியின் வழியாகக் கண்ட உலகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட உலகத்தைக் காட்டியிருக்கிறார் நடராஜன் பாரதிதாஸ். ‘உலகம் ஒன்றே’ என்று சொன்னாலும் உண்மையில் அது ஓர் உலகம் அல்ல. அதற்குள் விதவிதமான உலகங்கள் இருக்கின்றன. கையிலிருக்கும் காசுக்குத் தக்கபடி ஒருவர் அவருக்கான உலகத்தை வாங்கி வசிப்பதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பார்ப்பதற்கு ஒரே ரயிலாகக் காட்சியளிப்பதற்குள் வெவ்வேறு கட்டணங்களுக்கு ஏற்ற வசதிகளுடன் பல வகுப்புகள் இருப்பதைப் போல உலகத்திற்குள் பல உலகங்கள் உண்டு. யாருக்கு எந்த உலகம் என்பதைக் கையிலிருக்கும் பணம் தீர்மானிக்கும். ஏழை உலகத்தின் வசிப்பாளி பணக்கார உலகத்தில் சட்டென்று நுழைய முடியாது. ஆனால் பணக்கார உலகத்தின் வசிப்பாளி ஏழை உலகத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி காந்தியைப் போல எளிதாக நுழைந்து விடலாம். அதற்குக் கருணை, தியாகம் என்கிற பகட்டான பெயர்கள் கிடைத்துவிடும். அத்தகைய பணக்கார உலகத்தின் நுகர்வுவாசிகளுக்கு அவர்கள் அறியாத இன்னோர் உலகம் அறியக் கிடைக்கும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். அதற்கு அவர்களும் உலகமும் காரணமாக இருக்கிறார்கள். கவிஞன் காரணமாக முடியாது.
நடராஜன் பாரதிதாஸ் காட்டும் உலகம் எந்த உலகத்துவாசிகளுக்கும் புதியதல்ல. பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. யாரும் அறியாத அரண்மனை முதல் அடித்தளம் வரையிலான மர்மங்களை அறிந்து வைத்திருப்பது. அரிய மருத்துவ முறைகளைக் கொண்டது. சமூகத்தின் அனைத்து மனிதர்களோடும் வளர்ப்புப் பிராணிகளோடும் ஊடாடியிருப்பது. அப்படியிருந்தும் அது இன்னும் விளிம்புநிலை வரலாறாகக் கூடக் கொள்ளப்படாமல் இருப்பதுதான் துரதிஷ்டம். அகநிலையில் நோக்குவதை வரலாறாக / இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் இந்திய மனநிலை புறநிலை நோக்கு வரலாற்றை / இலக்கியத்தைக் கண்டுகொள்வதே இல்லை. புறநிலை நோக்கு வரலாற்றை / இலக்கியத்தைத் தமக்கேற்றவாறு எழுத முடியாது என்பதால் அதை விட்டுவிட்டார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. வரலாற்றை / இலக்கியத்தை அதன் மெய்த்தன்மையோடு எழுதாமல் தமக்கேற்றவாறு எழுதிக் கொள்வதாலும் வரலாற்று / இலக்கிய எழுத்தாளர்கள் பலரும் புறநிலை நோக்கில் வரலாறும் இலக்கியமும் இல்லை என்று கருதியதன் விளைவாலும் நடராஜன் பாரதிதாஸ் காட்டும் உலகம் மையக் கவனிப்புக்குள் வராமலே போய்விட்டது. அதை அவரே எழுத வேண்டியதும் ஆகிவிட்டது. ஒரு சமூகத்தின் முழுமையான உளக்கிடக்கையை அறிந்துகொள்ள அகநிலை, புறநிலை நோக்கு இரண்டுமே கைக்கொள்ளப்பட வேண்டும். அது ‘ஒரு சகலகலா சவரக்காரன் பாரக் பராக்’கில் வேண்டிய மட்டும் நிகழ்ந்திருக்கிறது. அந்த வகையில் அந்நூல் முக்கியமானது எனலாம்.
புறநிலை நோக்கு உலகத்தை எழுதும் போது எழுதுகிறவர்களின் முகமூடிகளும் உதிர்ந்துபோகும் என்பதால் நடுநிலை வரலாற்றாளர்களும் / படைப்பாளிகளும் ஓரம் ஒதுங்கிய சம்பவங்கள் ஏராளம் உண்டு. ஆகவேதான் நமக்கான வரலாற்றைப் புறநிலை நோக்கில் யாரோ ஒருவர் எழுதுவார் என்றில்லாமல் அவரவர் எழுதத் தொடங்கினர். அது அகநிலை நோக்கு வரலாற்றின் மற்றொன்றாகவே ஆகிப்போனது காலத்துயர். இதன் பொருள் புறநிலை நோக்கு வரலாறே எழுதப்படவில்லை என்பதல்ல. எழுதப்பட்டிருக்கும் சொற்பப் புறநிலை நோக்கு வரலாற்றைக் கூட யாரைப் பற்றி யார் எழுதியது என்று கேட்டு வைக்க வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் ஒரு கவிதைப் புத்தகத்தை வரலாற்றுத் தளத்தில் வைத்துப் பேச முடியுமா? பொருத்தமானதா? என்கிற கேள்விகள் வரலாம். நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் வரலாற்றுத் தளத்தில் வைத்துப் பேசுவதற்கான அனைத்துப் பொருத்தப்பாடுகளையும் கொண்டிருக்கிறது. கவிதையை வரலாற்றுத் தளத்தில் பார்க்க முடியுமா என்கிற காலாவதியாகிப் போன கேள்வியைக் கைவிட்டால் ஒழிய புனைவுக்குள் தத்தளித்து நிற்கும் வாழ்வையும் வரலாற்றையும் கண்டுகொள்ள முடியாது. இந்தச் சிக்கல்தான் இளந்துறவிகளின் அதிர்ச்சிக்குக் காரணம்.
பக்க எண் 52 இல் ‘பெரிய ஆறு பெரிய ஓடையானது / பெரிய ஓடை பெரிய கால்வாய் ஆனது / பெரிய கால்வாய் பெரிய கரையானது / பெரிய கரை பெரிய காரை வீடானது / அந்தப் பெரிய காரை வீட்டுக்காரருக்குப் பெரிய கடாமீசை வரைந்து கொண்டிருக்கிறேன் நான்’ என்னும் கவிதையில் நடராஜன் பாரதிதாஸ் பேசுவது தத்துவார்த்த தாத்பரிய விசாரணை. பெரிய x சிறிய என்னும் இரண்டு முரண்களில் சிறியது சொல்லப்படாமலேயே சொல்லப்படுகிறது. இக்கவிதையைப் பெரியதைப் பேசும் கவிதை என்பதை விடச் சிறியதைப் பேசும் கவிதை எனக் குறிப்பிடுவது சரியாக இருக்கும். உதாரணத்திற்கு இக்கவிதையை மாற்றி எழுதிப் பார்க்கலாம். ‘சிறிய ஆறு சிறிய ஓடையானது / சிறிய ஓடை சிறிய கால்வாயானது / சிறிய கால்வாய் சிறிய கரையானது / சிறிய கரை சிறிய காரை வீடானது / அந்தச் சிறிய காரை வீட்டுக்காரருக்குச் சிறிய மீசையை வரைந்து கொண்டிருக்கிறேன் நான்’ என்று எழுதினோமானல் ஏற்கெனவே நடராஜன் பாரதிதாஸ் எழுதிய கவிதைக்குள் உறையும் ‘சிறிய’ கவிதையைக் கண்டடைய முடியும். கவிதையில் இப்படி எழுதுவது அற்புதமான உத்தி. ஆதலால்தான் இதை ‘தத்துவார்த்த தாத்பரிய விசாரணை’ என்று குறிப்பிடுகிறேன். இந்த உத்தியால்தான் புறநிலை, அகநிலை நோக்குகளை ஒருசேர எழுத்துக்குள் கொண்டுவர முடியும். புலப்படுத்தாது விட்ட உலகத்தைப் புலப்படுத்த உதவும். ப.நடராஜன் பாரதிதாஸ் தொடர்ந்து எழுத வேண்டும். அதுபோன்ற எழுத்துகள் பிறரிடமிருந்தும் வெளிவர அது தூண்டுதல் செய்யும். குரல்கள் பெருகும் போது அதற்கான வரலாற்றை அதுவே எழுதிக் கொள்ளும்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.








Leave a Reply