ஈரம் புரியா மழை
மஞ்சளோடு கமழும் உன்னை
அத்தனை நிதானமாய் நுகரும் வாய்ப்பாகிறது
நாள்தோறும் காதுகளோடு ஒட்டிவரும் நுரை
பிரித்து உலர வைத்திருக்கும் குடைக் கம்பியின்
கடைசித் துளிபோன்றது இத்தருணம்.
இறுகக் கட்டியிருந்து
உலர உலர ஒவ்வொன்றாய் விலகும்
பக்கவாட்டு முடியிழைகளை
விரல்பிடித்து நடத்தி
காதுகளில் சென்று மாட்டிவைக்கிறாய்
அச்சம் நீங்கியதென
மெல்லக் கொம்புகள் நீட்டும்
நத்தை போலானது இத்தருணம்.
முத்திக்கொள்கையில்
ரகசியமாய் இயல்புக்குத் திரும்பும் உன் சருமம்
செல்லமான பற்களுக்குப் பொத்துக்கொள்வது
ஓவியத்திற்குக் கண் திறப்பதையொத்தது.
இலைக்குக் கீழேதான் நிழல்
ஆனால் நீயெழுதும் வாழ்வின் கலையைக்
கண்கள் மூடி
நீயே இரசியேன் ஒருமுறை.
மணற் துகள் வார்த்தைகள்
இந்தச் சின்னஞ்சிறு கூரையின் மேல்
முனகிக் கிடக்கிறாய்
வெளியேறிடாமல்
மடக்குமுன் விரல்களிந்தச் சில்லிடும் கம்பிகள்
பாதங்களில் குறுமணற் துகள்கள்
பிரிவைச் சொன்ன வார்த்தைகள்
உனக்கு பதில் மழை
மழையென நீ
எப்போதும் இருக்கிறது
ஒரு காதல்
ஒரு பிரிவு.
பட் டப்
பரபரப்பான நெடுஞ்சாலையில்
அல்லாடுகிறது ஒரு பலூன்
பரபரப்பான நெடுஞ்சாலையில் சொல்லொண்ணா பிரிவைச் சுமந்து
அவளின் மடியில்
தூக்கத் தூக்கச் சறுக்கிச் செல்கிறது குழந்தை.
பின்னேயே பார்த்தபடிச் செல்லும் குழந்தையின் கண்களில்
இரண்டு பலூன்கள்
குதியாட்டம் போடுவதாய்க் காட்டிக்கொள்ளும்
இரண்டு பலூன்கள்.
thanks : stockcake
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் கவிஞர் இயற்கை. இயற்பெயர் ஏ.சுரேஷ். செஞ்சியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேரச் சமூக அறிவியல் பாட ஆசிரியராகவும் மீத நேரம் விவசாயியாகவும் பணி செய்து வருகிறார்.
கட்டை விரல்களின் கல்லறை, கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை என இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இதில் இரண்டாவது தொகுப்பு சௌமா இலக்கிய விருதைப் பெற்றுள்ளது.
வெயில்நதி என்னும் நவீன இலக்கியச் சிற்றிதழை நடத்தி வந்தவர். நடுநாட்டு வட்டார மொழியிலான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவற்றில் ஆர்வம்கொண்டு இயங்கி வருகிறார்.








Leave a Reply