இன்கா நாடோடிக்கதை
(தென்னமெரிக்காவின் ஆண்டியன் மலைத்தொடரில் தோன்றிய பல நாகரீகங்களுள் இறுதியாக வந்த இன்கா இனம் குறிப்பிடத்தக்கது. சாவின், நாஸ்கா, மொச்சி, வாரி, சிமு என்று தொடர்ந்த பண்டைய இனங்களுக்குப் பிறகு பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய இன்காப் பேரரசு பதினைந்தாம் நூற்றாண்டில் உச்சம் அடைந்தது. வடக்கே இன்றைய ஈக்குவேடாரிலிருந்து தொடங்கி பெரு, பொலீவியா என்று தொடர்ந்து தெற்கே சிலி வரை வியாபித்திருந்தது இன்கா இராச்சியம். பதினாறாம் நூற்றாண்டில் புதிய உலகம் தேடி வந்த ஸ்பானியர்களின் துப்பாக்கிகளுக்கு எதிரான போரில் இன்கா இனம் போராடித் தோற்றுப் போனது.)
நீண்ட ஆண்டியன் மலையின் அடிவாரத்தில் அமைந்த பள்ளத்தாக்கில் ஒரு சிற்றூரில் வாமான் என்னும் ஏழை விவசாயி தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு சிறிய நிலம் இருந்தது. அதில் விவசாயம் செய்து தன் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பயிரிட்டு வந்தான். வாமானுக்கு ஒரு லாமாவும் இருந்தது. அந்த லாமா அந்தக் குடும்பத்தின் விலை மதிக்கமுடியாத சொத்து. ஒட்டக இனத்தைச் சேர்ந்த லாமாக்கள் ஆண்டியன் மலைப்பகுதியில் வசிக்கும் விலங்குகள். அதன் உரோமம் மக்களின் குளிர்காலக் கம்பளி உடையாகப் பயன்பட்டது. நிலத்தில் விளைந்த விளைச்சலை வீடு கொண்டு வந்து சேர்க்கும் பொதி சுமக்கும் விலங்கும் லாமாதான். விளைந்த விளைச்சலை விற்று வேறு பொருள்கள் வாங்கும் பண்டமாற்றுப் பொருள்களைச் சுமப்பதும் லாமாக்கள்தான். வாமானின் குழந்தைகளுக்கும் விளையாட்டுத் தோழன் அந்த லாமா.
ஒருநாள் காலையில் எழுந்த வாமான், தனது நிலத்துக்குச் செல்லக் கிளம்பினான் தனது லாமாவோடு. லாமா மிகவும் சோர்வாய் இருந்ததைக் கவனித்தான். முந்தின நாள் சரியாகப் புல் மேயவில்லையோ என எண்ணிக்கொண்டு லாமாவைப் புல்நிலத்துக்கு ஓட்டிச் சென்றான். மலைச்சரிவில் வளரும் புல்லின் பெயர் ‘இச்சு’. இச்சுப்புல்லானது லாமாக்களின் நல்ல உணவு. செழித்து வளர்ந்திருந்த இச்சுப்புல் நிலத்தில் லாமாவை மேயவிட்டான் வாமான். ஆனால் லாமாவோ ஒரு புல்லையும் மேயாமல் அப்படியே படுத்துக் கொண்டது. வாமானுக்கு ஒன்றும் புரியவில்லை. லாமாவை எழச் செய்து மீண்டும் இச்சுப்புல் அருகே இழுத்துச் சென்றான். லாமா புல்லருகே மீண்டும் படுத்துக்கொண்டது. வேறு வழியில்லாமல் வீட்டுக்குத் திரும்பினார்கள் வாமானும் லாமாவும். மனைவியிடம் நடந்ததைச் சொல்ல அவள் லாமாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கும் என்று சொல்லிவிட்டு வரகுக் கஞ்சி காய்ச்சப் போய்விட்டாள்.
மறுநாள் லாமா இன்னும் சோர்வாயிருந்தது. மீண்டும் புல்நிலத்துக்கு ஓட்டிக்கொண்டு சென்றான் வாமான். மேய்ச்சல் நிலத்தை அடைந்த லாமா படுத்துக்கொண்டது. வாமான் எவ்வளவோ முயன்றும் லாமாவைப் புல் தின்னவைக்க முடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அருகில் கிடந்த மக்காச்சோளத் தட்டையை வைத்து லாமாவை அடிக்கப்போனான். நெருங்கிப் பார்த்தவன், லாமாவின் கண்களில் நீர் வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிப் போனான். “அய்யோ, லாமாவே உனக்கு என்னவாயிற்று” என்றபடி லாமாவைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“அய்யா, வாமானே” என்ற குரல் வர, பேசியது யார் எனச் சுற்றும் முற்றும் பார்த்தான்.
“நான்தான் ஐயா, லாமா” என்றது லாமா.
இதுவரை லாமா பேசிக் கேட்டிராத வாமான் அதிர்ச்சியடைந்தான். “லாமாவே, உன்னால் எப்படிப் பேச முடிகிறது?” என்று ஆச்சரியப்பட்டான்.
“லாமாவே, உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படிச் சோகமாக இருக்கிறாய்? ஏன் உணவு உண்ண மறுக்கிறாய்? உடல்நிலை சரியில்லையா” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
“ஐயா, எனது மனதுக்குள் ஒரு பெரிய இரகசியம் ஒளிந்து கிடக்கிறது. அதைச் சொன்னால் நீ நம்புவாயா?” என்று கேட்டது லாமா.
“என்ன இரகசியம் லாமாவே?”
“விரையில் இந்த உலகம் அழியப் போகிறது.”
“ஆ! அப்படியா? உனக்கு எப்படி அது தெரியும்?”
“சில நாட்களாகவே எனக்கு இந்தக் கனவு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. கடல் தெய்வமான மாம்மகொச்சா என் கனவில் வந்து எனக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறாள்.”
“ஓ! இந்த உலகம் எப்படி அழியப் போகிறது என்று மாம்மகொச்சா சொன்னாளா?”
“மிகப்பெரும் புயல் ஒன்றை மாம்மகொச்சா உருவாக்கப் போகிறாள். தனது அலைகளை மிக அதிக உயரத்துக்குப் பொங்கி எழச் செய்யப் போகிறாள். அந்த அலைகள் நிலப்பகுதிகளை மூழ்கச் செய்து உயிர்களை எல்லாம் அழிக்கப் போகிறாள் மாம்மகொச்சா.”
“அய்யோ. அப்போது நாம் அனைவரும் தப்பிக்க வழியில்லையா லாமாவே?”
“ஒரு வழி இருக்கிறது. இங்கே இருக்கும் உயர்ந்த மலைகளுக்கெல்லாம் உயர்ந்த மலையான வில்கா-காட்டோ, அதன் சிகரத்தின் நுனி வரைக்கும் அலைகள் உயர்ந்து எழும்பி வரப் போகின்றன. வில்காகோட்டோ மலைச் சிகரத்தில் ஏறி நுனியில் நின்றுகொண்டால் தப்பிக்கலாம்.”
“அப்படியா, நல்லது. நாம் அங்கே சென்றுவிடலாம்.”
“கால அவகாசம் குறைவாகவே இருக்கிறது ஐயா. நாம் உடனே புறப்படவேண்டும்.”
வாமான் லாமாவை ஓட்டிக்கொண்டு விரைந்து திரும்பினான். மனைவியிடம், “நாம் உடனடியாக வில்காகோட்டோ மலையுச்சிக்குப் புறப்படவேண்டும். பெரும்புயலை மாம்மகொச்சா உருவாக்கி ஆர்ப்பரிக்கும் அலைகளால் உலகை அழிக்கப் போகிறாள். சில நாட்களுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள். நமக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொள்” என்றான்.
மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. “உனக்கு எப்படி இது தெரியும்?” என்று கேட்டாள்.
“லாமா என்னிடம் சொல்லியது” என்றான் வாமான்.
“என்ன, லாமா பேசியதா? உனக்கென்ன புத்தி பேதலித்துவிட்டதா?”
“உண்மையாகத்தான். லாமாவின் கனவில் கடற்தெய்வம் மாம்மகொச்சா வந்து இந்த உண்மையைச் சொன்னாளாம். பேசிக்கொண்டே இருக்காதே. உடனடியாகப் புறப்படு.”
வாமானின் மனைவி சில நாட்களுக்குத் தேவையான உணவை மூட்டையாகக் கட்டி லாமாவின் முதுகில் வைத்துக் கட்டினாள். இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள். லாமா வழிகாட்டியாய் முன்னால் செல்ல வாமான் குடும்பத்தினர் பின்தொடர்ந்தார்கள்.
அவர்கள் கடந்துசென்ற விளைச்சல் நிலங்களில் சில சீமைப்பெருச்சாளிகள் தங்கள் குட்டிகளுடன் ஓடிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. அவைகளைக் குனிந்து பார்த்த லாமா, அவைகளுடன் மிருகமொழியில் பேசியது.
“விளையாடியது போதும் பெருச்சாளிகளே. பெரும்புயல் வந்து கடல் இந்த வயல்களை மூழ்கடிக்கப் போகிறது. உயிர் பிழைக்க வேண்டுமெனில் எங்களுடன் வாருங்கள். மலையுச்சிக்குப் போய்த் தப்பிக்கலாம்.”
“வயல்களுக்குள்ளே ஆழத்தின் ஆழத்தில் உள்ளன எங்கள் வீடுகள். அங்கே போய் நாங்கள் தப்பித்துக் கொள்வோம்” என்றன பெருச்சாளிகள்.
“கடலின் நீர் ஆழத்தின் ஆழத்தையும் ஊடுறுவி உங்களைக் கொன்றுவிடும் என்பது உங்களுக்குத் தெரியாதா? உயிர் பிழைக்கவேண்டுமெனில் எங்களைத் தொடர்ந்து வாருங்கள்” என்றது லாமா. பதில் பேசாமல் பெருச்சாளிகள் லாமாவைத் தொடர்ந்துவந்தன.
அவர்கள் ஏரி ஒன்றின் கரைவழியே நடந்து செல்ல வேண்டியிருந்தது. ஏரிக்கருகே பூத்திருந்த மலர்களைச் சுற்றிலும் நிறைய ஓசனிச்சிட்டுக்கள் இருந்தன. பாடுபறவைகளான இந்தச் சிட்டுக்கள் தங்களது குஞ்சுகளுக்கு மலர்களிலிருந்து தேனை எப்படி எடுப்பது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தன. லாமா தலையை உயர்த்தி அவைகளிடம் பேசியது.
“பெரும்புயல் வருகிறது. வாருங்கள், வில்காகோட்டோ மலையுச்சிக்குப் போய் மாம்மகொச்சாவின் கோப அலைகளிலிருந்து தப்பிக்கலாம்.”
“எங்களது சிறகுகள் முன்னோக்கியும் பின்னோக்கியும் வெகு வேகமாகச் செல்லும் தன்மையின. நாங்கள் பறந்து தப்பித்து விடுவோம்” என்றன ஓசனிச்சிட்டுகள்.
“அடிக்கப்போகும் பெரும்புயலை எதிர்த்து உங்கள் சிறகுகளால் பறக்க முடியாது. உங்கள் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டுமெனில் எங்களைத் தொடர்ந்து வாருங்கள் வில்காகோட்டோ மலையுச்சிக்கு” என்றது லாமா. ஓசனிச் சிட்டுக்கள் ஒன்றும் சொல்லாமல் நடைபயணத்தில் சேர்ந்துகொண்டன.
ஏரியைக் கடந்து மலைச்சரிவில் ஏற ஆரம்பித்தனர். அங்கே லாமா இனத்தைச் சேர்ந்த வானக்கோ, அல்பாக்கா, விக்குனியா ஆகிய விலங்குகள் உணவு மேய்ந்துகொண்டிருந்தன. நடைபயணம் செய்யும் கூட்டத்தைப் பார்த்து அருகில் வந்தன.
லாமா அவைகளிடம், “எங்களோடு சேர்ந்து மலையுச்சிக்கு வந்து உயிர் பிழைத்துக்கொள்ளுங்கள். மாம்மகொச்சாவின் பெரும்புயலிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்” என்றது.
அதைக்கேட்ட வானக்கோக்களும் அல்பாக்காக்களும் விக்குனியாக்களும் மறுமொழி சொல்லாமல் கூட்டத்தில் சேர்ந்துகொண்டு நடக்க ஆரம்பித்தன.
இன்னும் சிறிது தூரம் மலைப்பாதையில் தொடர்ந்தது நடைபயணம். எதிரே பூமா என அழைக்கப்படும் ஆண்டியன் மலைச்சிங்கம் தனது குட்டிகளுக்கு இரையைப் பிடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தது. லாமா தலைமையில் வரிசையாய் வந்து கொண்டிருந்த விலங்குக்கூட்டத்தையும் மனிதர்களையும் கண்ட பூமாவுக்கு மகிழ்ச்சியாயிற்று. தனது குட்டிகளுக்கு இரைபிடிக்கும் கலையைச் சொல்லித்தரத் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. விலங்குகள் மீது பாயத் தயாரானது சிங்கம்.
அதைப்பார்த்த லாமா, “இரை பிடித்துப் பழக இது உகந்த நேரமல்ல பூமாவே. கொடும்புயலை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் கடல்தெய்வம் மாம்மகொச்சா. அவளின் அலைகள் இந்நிலத்தையெல்லாம் விழுங்கப் போகின்றது. எங்களுடன் இணைந்து நடந்து மலையுச்சிக்குச் சென்றால் நீயும் உன் குட்டிகளும் பிழைத்துக் கொள்ளலாம். இல்லையேல் உன் விருப்பப்படி வேட்டைப்பயிற்சியைத் தொடரலாம்” என்றது.
யோசனை செய்த சிங்கம் லாமாவின் வார்த்தைகளை நம்பி, வேட்டையாடும் ஆவலை ஒத்தி வைத்தது. தனது குட்டிகளுடன் பயணத்தில் கலந்து கொண்டது. பாதித் தூரத்துக்கு மேல் நடந்து கடந்தாயிற்று.
லாமா முன்செல்ல வாமானின் குடும்பமும் பிற பறவைகளும் விலங்குகளும் தொடர நீண்டது பயணம். இவ்வளவு கூட்டமும் நடந்து வருவதைக் கண்டது ஒரு நரிக்கூட்டம். புரியாமல் விழித்து நின்றன அந்த நரிகள்.
லாமா அவைகளைப் பார்த்துச் சொன்னது, “பெரும்புயல் வருகிறது. மாம்மகொச்சா பேரலைகளை எழுப்பி உலகை அழிக்கப் போகிறாள். மலையுச்சிக்கு வந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.”
தந்திர நரிகள் யோசித்தன. லாமாவை நம்புவதா வேண்டாமா என்று அவைகளுக்குக் குழப்பம் ஏற்பட்டது. கடைசியில் அவை சொல்லின: “உங்களை நாங்கள் நம்பப் போவதில்லை. நாங்கள் இங்கேயே இருந்து கொள்கிறோம். உங்களுடன் வரப்போவதில்லை.”
“சரி, உங்களது விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு லாமா தொடர்ந்து நடந்தது.
மலையுச்சியை நெருங்கிவிடும் உயரத்துக்கு நடந்துவந்து விட்டனர். எதிரே மலைக்கழுகு கோட்டா, தனது குஞ்சுகளுக்கு அந்த உயர்ந்த மலையில் பறப்பதெப்படி என்று பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தது. கூட்டமாய் எல்லா விலங்குகளும் வருவதைக் கண்ட கழுகு திகைத்து நின்றது.
லாமா கழுகிடம் சொன்னது, “மலைக்கழுகே, உன் குஞ்சுகளுக்குப் பயிற்சி தருவதை நிறுத்தி எங்களுடன் இணைந்துகொள். மாம்மகொச்சா பெரும்புயலை எழுப்பிப் பேரலைகளால் உலகை அழிக்கப்போகிறாள். வில்காகோட்டோ மலைச்சிகரத்தின் நுனியில் நின்று தப்பித்துக்கொள்ளலாம், வா.”
அபாயத்தை உணர்ந்த மலைக்கழுகு தன் குஞ்சுகளுடன் நடைபயணக் குழுவுடன் இணைந்துகொண்டது.
ஒருவழியாய் வில்காகோட்டோ மலையுச்சியை அடைந்தனர் லாமாவும், வாமானின் குடும்பத்தினரும், பறவைகளும் மற்றும் விலங்குகளும். பெருங்காற்று வீச ஆரம்பித்தது அப்போது. மேகங்கள் திரண்டன. கடலலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. கடல் அன்னை மாம்மகொச்சாவின் கோபம் அதிகரித்துக்கொண்டே சென்றது. தனது பேரலைகளை உயரத்துக்கும் உயரே எழுப்பினாள். கடலருகே இருந்த நிலங்கள் அவளது அலைகளுக்குள் சுவடு தெரியாமல் மூழ்கின. மலைகளின் அடிவாரம் வரை அலைகள் பொங்கி இரைச்சல் ஏற்படுத்தின. மாம்மகொச்சாவின் மூச்சுக்காற்று சுழன்று வீசியது. பயந்த உயிரினங்கள் மலையுச்சியின் மீது ஒன்றையொன்று நெருக்கி நின்றபடி கடலன்னையின் கோபவிளைவுகளைக் கவனித்துக்கொண்டிருந்தன. மலைகளின் உயரத்தையும் நெருக்கின கடலலைகள்.
தொலைவில் யாரோ ஓடிவருவது தெரிந்தது. உற்றுப்பார்த்தது லாமா. மலையுச்சிக்கு வரமாட்டோம் என்று சொன்ன நரிக்கூட்டம் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தது. “விரைந்து வாருங்கள், இன்னும் வேகமாக ஓடி வாருங்கள்” என்று லாமா நரிகளைப் பார்த்துக் கத்தியது. ஒருவழியாக நரிகள் மலையுச்சியை அடைந்தன. நெருக்கியடித்துக் கொண்டு நின்ற உயிரினங்களுடன் நரிக்கூட்டமும் சேர்ந்து நின்றது. நிற்கவே இடமில்லை. மிகச்சிறிது இடமே கிடைக்க, நரிகளால் தங்களது உடல்களை மட்டுமே உச்சியில் நிறுத்த முடிந்தது. நரிகளின் வால்களை மலையுச்சியில் வைக்க முடியவில்லை. முடி நிறைந்து பொசுபொசுவென்று இருந்த அந்த வால்கள் மலையுச்சியிலிருந்து சற்றுத் தொங்கிக் கொண்டிருந்தன.
வெள்ளம் மலையுச்சிக்கு அருகில் வரை வந்து சுழன்று சென்றது. விலங்குகளும் மனிதர்களும் பயந்துபோய் கடலன்னை மாம்மகொச்சாவை வணங்கினார்கள். தொங்கிக் கொண்டிருந்த நரிகளின் வால்களில் வெள்ள நீர் உரசிச் சென்றது.
திடீரென்று சூரியன் மறைந்துவிட இருண்மை நிறைந்தது எங்கும். குளிர்ச்சி பெருகி உயிர்கள் நடுங்கின; பயத்திலும் குளிரிலும் அவை உறைந்தன. “சூரியக்கடவுள் இண்ட்டி, மறைந்து விட்டான். அவன் வானத்திலிருந்து விழுந்து வெள்ளத்துக்குள் சிக்கிக் கொண்டான். மாம்மகொச்சா இண்ட்டியை விழுங்கி விட்டாள்” என்று உயிரினங்கள் அலறின.
“அச்சப்படாதீர்கள். இண்ட்டியை யாரும் கொல்லமுடியாது. அவன் கடலுக்குள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான். இந்த இருள் நிரந்தரமில்லை. காத்திருங்கள்” என்று லாமா அனைவரையும் அமைதிப்படுத்தியது.
நெடுநேரங்கழித்து சூரியக் கடவுள் இண்ட்டி தோன்ற உயிர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. வெள்ளநீர் உயர்வதும் நின்றது. சிறிது சிறிதாக நீர் வடியத் தொடங்கி நிலம் தெரிய ஆரம்பித்தது. அனைத்து உயிர்களும் இண்ட்டிக்கும் மாம்மகொச்சாவுக்கும் நன்றி சொல்லி வணங்கினர்.
வெள்ளம் முற்றிலுமாக வற்றியவுடன் உயிரினங்கள் வில்காகோட்டா சிகரத்திலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தன. முதலில் கீழே இறங்கியவை அந்த நரிகள்தாம். கடலின் இருண்மை நீரில் நனைந்த நரிகளின் வால்களின் நுனிகளில் அந்த இருண்மை நிலைத்துவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, நரிகளின் வால்களின் நுனி கறுத்திருப்பது இருப்பது இதனால்தான்.
விலங்குகளெல்லாம் லாமாவுக்கு நன்றி சொல்லின. வீடு திரும்பியவுடன் வாமானும் லாமாவுக்கு நன்றி சொல்லி அனைவரும் விழாக் கொண்டாடினர். ‘கீனா’ என்றழைக்கப்பட்ட இன்கா இன மக்களின் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டாடினர். லாமா தனது காதுகளைச் சாய்த்து அந்த இசையைக் கேட்டு மகிழ்ந்தது. இச்சுப் புல்லை மேய்ந்து வழக்கம் போலவே வாமானின் குடும்பத்திற்கு உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தது. ஆனால் அதன்பிறகு, வாமான் எவ்வளவு முயற்சி செய்து பேச்சுக் கொடுத்தபோதும் லாமா மீண்டும் பேசவேயில்லை. அவனது கட்டளைகளைக் கேட்டு நடக்க மட்டும் செய்தது.
ஆண்டியன் மலையின் சரிந்த பள்ளத்தாக்குகளில் இன்றைக்கும் லாமாக்கள் இச்சுப் புல்லை மேய்ந்து கொண்டு ஆண்டியன் மலையில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. ஏதேனும் புல்லாங்குழல் ஓசை கேட்கையில் காதுகளை உயர்த்திக் கூர்ந்து கேட்கின்றன.
Art : tomek_larek
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply