Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

கவித்துவத்திற்குப் பயன்படு பொருளாகும் பிறன்மை

இமாம் அத்னான்
இமாம் அத்னான்
August 1, 2025
கவித்துவத்திற்குப் பயன்படு பொருளாகும் பிறன்மை

கெவின் கார்ட்டர் எனும் புகைப்படக் கலைஞர் 1993 வாக்கில் சூடான் நாட்டிற்குச் செல்கிறார். ஐக்கிய நாடுகள் சபையினது ஏற்பாட்டின் கீழ், மனிதநேய நெருக்கடியை ஆவணப்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்கு நிலவும் பஞ்சத்தைக் குறித்து ஆவணப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவவே செல்கிறார். அப்பயணத்தின் போது அவர் க்ளிக்கிய ஒரு புகைப்படம், அவருக்கு ஒருங்கே பெரும் புகழையும் விமர்சனங்களையும் தேடிக் கொடுக்கிறது.

அவர் க்ளிக்கிய அந்தப் புகைப்படத்தில், போசாக்கின்மைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுமி வறண்ட தரையில் ஆடைகளற்று அமர்ந்திருக்கிறார். அமர்ந்திருக்கிறார் என்றால், உண்மையிலையே அமர்ந்தபடி அல்ல. அமர்ந்திருக்கும் சிறுமியின் நலிந்த உடல் இடுப்பால் முன்பக்கம் வளைந்து தலை தரையைத் தொடுகிறது. அந்தச் சிறுமியின் பின்னால் ஒரு ராஜாளி கழுகு காத்திருக்கிறது; அச்சிறுமியைத் தனது இரையாக்க.

இந்தப் புகைப்படத்தினை ‘The Vulture and the Little Girl’ என்ற தலைப்பில், அவர் அதே ஆண்டு The New York Times இல் வெளியிடுகிறார். அந்தப் புகைப்படத்திற்காக 1994இல் புலிட்ஸர் விருதும் அவருக்குக் கிடைக்கிறது. அந்தப் புகைப்படம் அய்ரோப்பா எங்கும் தீயாய்ப் பரவிப் பேசுபொருளாகியிருக்கிறது. சூடானில் நிலவும் உணவுப்பற்றாக்குறை, போசாக்கின்மை, அம்மக்களுக்கான தேவைகள் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றை அப்புகைப்படம் ஏற்படுத்தினாலும், அதனையும்விட, அது புகைப்படக் கலைஞரின் அறம் சார்ந்த விமர்சனங்களையும் விவாதங்களையுமே அதிகம் உருவாக்கின.

கார்ட்டர் குழந்தையின் துயரத்தினை லாபமாக்கிக் கொண்டார் என விமர்சித்தார்கள். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அதனை எடுத்தவர் பெயர்தான் இருக்கிறது. அந்தக் குழந்தையின் பெயரோ, அப்படிப் புகைப்படமெடுக்க அக்குழந்தையின் அனுமதியோ அல்லது பெற்றோரின் அனுமதியோ பெறப்பட்ட எந்த விசயமும் அதனுடன் இணைந்ததாக இல்லை. அந்தக் குழந்தையைப் புகைப்படமெடுத்தீர்கள் சரி, அதன்பிறகு அந்தக் குழந்தைக்கு என்ன நடந்தது தெரியுமா எனக் கேட்டார்கள். புகைப்பட ஊடகவியலாளர்கள் வெறும் அவதானிகளாக மட்டுமே நடந்துகொண்டு, பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தினை லாபமாகவும் புகழாகவும் மாற்றும் வேலைகளில்தான் அக்கறை கொள்கிறார்கள். ஒரு நலிந்த குழந்தையை இரையாக்க ஒரு ராஜாளி கழுகு அருகில் காத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதைப் புகைப்படமெடுப்பதற்கான அற்புதத் தருணமாகப் பார்க்கும் குரூரமான கலைமனதை விமர்சித்தார்கள். அவர் தனக்கான புகைப்படத்தினை க்ளிக் செய்வதனைத் தாண்டி, அக்குழந்தையைப் பார்த்ததுமே உடனடியான உதவிகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அப்படி ஏதும் செய்தாரா? இவ்வாறான கேள்விகள் அவரை நோக்கிப் பாய்ந்தன.

விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல கார்ட்டரிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. அந்தக் குழந்தையை நெருங்க வேண்டாம், அக்குழந்தையிடம் நோய்கள் ஏதும் இருந்து தொற்றிக் கொள்ளலாம் என எனக்குச் சொல்லப்பட்டது என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அந்தப் புகைப்படம் தன்னை அதிகம் பாதித்திருக்கிறது என கார்ட்டர் தெரிவித்திருக்கிறார். அவருக்குப் புலிட்ஸர் விருது கிடைத்த பிற்பாடு, ஒரு மாதம் கழித்துத் தற்கொலையும் செய்துகொண்டார். அதன்பிறகான தேடலில்தான் அக்குழந்தை சிறுமி அல்ல, ஒரு சிறுவன் என்றும், அவனது பெயர் ‘கொங்க் ங்யொங்க்’ என்றும் அறிந்து கொள்கிறார்கள். புகைப்படம் எடுக்கப்பட்ட அந்நாள் அவன் சாகவில்லை. உயிருடன்தான் இருந்திருக்கிறான். ஆனால் அடுத்த வருடமே ஒரு காய்ச்சலினால் இறந்துவிடுகிறான் போன்ற தகவல்கள் ஊடகங்களில் பதிவாகின்றன.

கார்ட்டரின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை உற்றுநோக்கினால், பிரதானமான மூன்று விடயங்களை அவதானிக்கலாம்.

  1. புகைப்பட ஊடகவியலாளரின் அறம்: புகைப்படக் கலைஞர்கள் வெறுமனே ஆவணப்படுத்த மட்டும் செய்ய வேண்டுமா அல்லது குறித்த சூழலில் புகைப்படமெடுப்பதைத் தாண்டி வினையாற்றவும் வேண்டுமா எனும் கேள்வி பற்றியது.
  2. வறுமை, நெருக்கீடு, துயரம், இழப்பு போன்றவற்றில் உழலும் மக்களை வைத்து எடுக்கும் தாக்கம் மிகுந்த படங்களிலிருந்து யார் பயனடைகிறார்கள்?
  3. மனிதாபிமான நோக்கத்திற்கேயானாலும் புகைப்படமெடுக்க எடுக்கப்படுபவர்களை மதிக்கவும் அவர்களின் சம்மதம் பெறுதலும் அடிப்படை எனும் விசயம்.

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், வாசிப்பிற்காக எடுத்துக்கொள்ளும் றியாஸ் குரானாவின் கவிதைக்கும் அதன்மீது நிகழ்த்த முனையும் ஒரு வாசிப்பிற்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. குரானாவின் அந்தக் கவிதைப் பிரதி அவரது ‘மாற்றுப் பிரதிகள்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் முதலாவது கவிதை. முதலில் அக்கவிதையை வாசித்து விடுங்கள் :

உண்மைச் சம்பவம்

உபதலைப்பு

குண்டு வெடிப்பொன்றில் இறந்துபோன சிறுமியை
பல காலங்களுக்குப் பின் காப்பாற்றுதல்

பெயர் தெரியாத அந்தச் சந்தியில் நிற்கிறேன்
நான் நிற்குமிடத்தை விளங்கப்படுத்த
கடினமாகத்தானிருக்கிறது
அதுவொரு நாற்சந்தி
மிகவும் சனநெரிசலான அந்த இடம்
நிமிடத்திற்கொரு முறை
தனது அடையாளங்களை மாற்றிக் கொள்கிறது
எப்படி தன்னை மாற்றிக் கொண்டாலும்
ஒருமுறை இங்கு வந்தவர்கள்
அந்தச் சந்தியை அடையாளம் கண்டுவிட முடியும்

அம்புக்குறி ஒரு திசையைச் சுட்டுகிறது
பயணிக்கிறேன்
பலகாலப் பயணத்திற்குப் பிறகு
ஒன்றுமற்ற ஓரிடத்தில் அந்த வீதி முடிவடைகிறது
திரும்பவும் வந்து பழைய இடத்தில் நிற்கிறேன்
வேறொரு திசையை இப்போது சுட்டுகிறது
ஏலவே நடந்தது போலதான் இதுவும் முடிவடைகிறது
மீண்டும் வந்து பழைய இடத்தில் நிற்கிறேன்

யாராலும் எங்கும் போக முடியவில்லை.

எப்போதாவது ஒரு முறைதான்
அந்த அம்புக்குறி சரியான பாதையைச் சுட்டும் என
அந்த இடத்தில் நிற்பவர்களின் மூலம் அறிகிறேன்
மிகவேகமாக தான் சுட்டும் திசைகளை
அது மாற்றிக் கொண்டே இருக்கிறது
எழுமாறாக ஒரு திசையில் புறப்படுகிறேன்
மிகப் பரீட்சயமான நகர் ஒன்றினுள்
நுழைந்துவிட்டதைப் போல இருக்கிறது
தெரிந்த இடங்கள்

தெரிந்த முகங்கள்
இஞ்சப்பாருங்கடா நம்முட பொன்னிமாமிட
கள்ளுக்கட எனக் கத்தணும் போல இருந்திச்சி

சும்மா ஆற்றலா பயணிச்சிக்கிட்டே இருந்த எனக்கு
அந்தச் சிறுமியைச் சந்திக்கும்வரை
எந்தக் குழப்பங்களும் இல்லை
பத்து வருடங்களுக்கு முன்
குண்டுவெடிப்பொன்றில் இறந்த
அவளைப் போலவே இவள் இருந்தாள்
அருகில் சென்று உறுதி செய்துகொள்கிறேன்
ஆம் அந்தச் சிறுமிதான் இவள்

வீட்டுக்குக் கூட்டிவருகிறேன்
எல்லோரும் விசித்திரமாக
என்னைப் பார்க்கத் தொடங்குகிறார்கள்
ஏன் இன்னும் சாகவில்லை
உயிரோடு இருப்பதற்கான காரணம்
10 வருடங்களின் பின்னும் சிறுமியாக இருப்பதின் மாயம்
குண்டுவெடிப்பின் பின்புலம் எனப்
பலவகை விசாரணைகளுக்கு
எல்லோரும் தயாராகுவதை அறிகிறேன்
சிறுமி இப்போது உலகப் புகழடைகிறாள்

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த நான்
அவளைச் சாகடிக்க வேண்டியதன் அவசியத்தை அறிகிறேன்
உடனடியாக அந்த விசித்திரமான சந்தியில்
அவளோடு நிற்கிறேன்
நான் வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீம்
அவளின் கைகளில் கரைந்து கொண்டிருக்கிறது
அம்புக்குறி சுட்டும் திசையில் நடக்கவைத்து
எதிரே வரும் வாகனத்தில் மோதி
இறந்துவிடுவதைப் போல அந்தக் காட்சியை அமைக்கிறேன்
கொலை விபத்தாக மாறிவிடுகிறது
அதுவும் உலகப் புகழ்பெற்ற விபத்தாகிறது
10 வருடங்களின் பின் உயிர்த்தெழுந்து வந்த
பிரபல சிறுமியின் மரணம் என,
எங்கும் தலைப்புச் செய்தியாகி
பரபரப்பாகப் பேசப்பட்டபடி இருக்கிறது

எல்லோர் வீட்டிலும் அவளின் புகைப்படம்
பெரும் துயரத்தினதும், அதிசயத்தினதும்
குறியீடாகத் தொங்குகிறது.
தொலைக்காட்சியின் முன்னமர்ந்து
இவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நான்,
நினைத்ததைச் செய்துவிட்டதாக சந்தோசத்திலிருக்கிறேன்
அதை அறியும் ஆவலுள்ளவர்களுக்கு மாத்திரம்
இந்தச் செய்தி…

சிறுமியின் முதல் மரணம் நிகழ்ந்த போது,
உற்றார் உறவினர்களைத் தவிர
யாருக்கும் தெரிந்திருக்கவில்லை
ஆதலினால், அவளது மரணத்தை
உலகப் பரபரப்பாக மாற்ற விரும்பினேன்
அதற்காகவே இந்த உண்மைச் சம்பவத்தை
உருவாக்கினேன்
நீங்கள் நம்பமாட்டீர்கள் என்பதற்காக
கனவில் நடந்தது என
வருத்தத்தோடு முடிக்க நேர்ந்தது.

இந்தக் கவிதைப் பிரதி பிரஸ்தாபிக்கும் சம்பவங்களைக் கிரகித்துக் கொள்வது ஒன்றும் கடினமானது அல்ல. இலகுவான கதைச் சம்பவங்கள்தான். இதில் வைக்கப்பட்டிருக்கும் கவிதை சொல்லி சில சாகசங்களை நிகழ்த்திக் காட்டுகிறார். அதனை எல்லாம் உண்மைச் சம்பவம் எனவும் முன்வைக்கிறார். வாசகராகிய நாம் நம்பமாட்டோம் என்பதை அவராகவே தீர்மானித்துக் கொண்டு இதுவெல்லாம் கனவில் நடந்தது எனவும் சொல்லி முடிக்கிறார். அப்படிச் சொல்லி முடிப்பதற்காக வருத்தப்படவும் செய்கிறார். இந்த வருத்தப்படுதல் என்பது அவராகக் கொள்ளும் தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்று. அதாவது, வாசகர்கள் இந்தச் சம்பவத்தை நம்பவே மாட்டார்கள் என வாசகர்களின் மீது ஒரு முடிவான தீர்மானத்தை அவராகவே கற்பிதப்படுத்திக் கொண்டதன் விளைவு.

இப்படியான தவறான தன்னிச்சைத் தீர்மானத்தை வாசகர்களின் மீது மட்டுமல்ல, பிரதிக்குள் இருக்கும் ஏனைய பிறன்மைகளின் மீதும் மேற்கொள்கிறார். அவர் எங்கெங்கு அப்படியான தவறான தீர்மானங்களைத் தன்னிச்சையாக அல்லது கவிதை சொல்லி எனும் அதிகாரத்துடன் கைக்கொள்கிறார் என ஒவ்வொன்றாக வாசித்துப் பார்ப்போம்.

குண்டுவெடிப்பில் இறந்த பின்பும் உயிருடன் இருந்த சிறுமியை எதேச்சையாகக் காண்கிறார் இந்தக் கவிதைசொல்லி. அப்படிச் சந்தித்த சிறுமியை அழைத்து வந்து, கொலைத் திட்டமிடலைச் செய்து அவளின் மரணத்தை விபத்தாக்குகிறார். தான் நினைத்தது போல் வெற்றிகரமாக மிஸனினை முடித்த களிப்புடன் ஏன் அப்படிச் செய்தாரென இறுதிப் பகுதியில் அறியத் தருகிறார்:

“சிறுமியின் முதல் மரணம் நிகழ்ந்த போது, *உற்றார் உறவினர்களைத் தவிர* யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆதலினால், அவளது மரணத்தை உலகப் பரபரப்பாக மாற்ற விரும்பினேன்”

இது இந்தக் கவிதை சொல்லியின் தனிப்பட்ட விருப்பம். அந்தச் சிறுமியினுடையதோ அல்லது உற்றார் உறவினர்களினுடையதோ அல்ல. அவர்கள் எவரும் இவரிடம் வந்து கொஞ்சம் ‘ஃபேமஸ் ஆக்கிவிடுங்கோ’ எனக் கேட்கவில்லை. சரி, அது ஒருபக்கம் இருக்கட்டும். குண்டுவெடிப்பில் இறந்த சிறுமி பற்றி உலகறியச் செய்யவும், அதனூடாக அந்தச் சிறுமி மீது மற்றவர்களின் அனுதாபத்தைக் கோரவுமே அப்படிச் சுயமாக முடிவெடுத்தார் என வைத்துக் கொள்வோம். அல்லது நம் ஊடகக்காரர்களின் நடத்தைக் கோலமும் இப்படித்தானே இருக்கிறது என அதனை விமர்சிப்பதற்காகத்தான் இப்படியான ஒரு கவிதைசொல்லி உருவாக்கப்பட்டிருக்கிறார் என்றும் ஒரு வாசிப்பிற்கு வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படியெல்லாம் குறிப்பிடுவதை ஏற்பதற்குக் கொஞ்சமும் பொருந்தாத தர்க்க முரண்கள்தான் இப்பிரதியின் வடிவமைப்பில் இடம்பெற்றிருக்கிறது.

அம்புக்குறி காட்டிய திசையில் சென்ற கவிதைசொல்லி அச்சிறுமியை அழைத்துவரும் போது இப்படிச் சொல்கிறார்:

“(சிறுமியை) வீட்டுக்குக் கூட்டிவருகிறேன். *எல்லோரும்* விசித்திரமாக என்னைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஏன் இன்னும் சாகவில்லை? உயிரோடு இருப்பதற்கான காரணம், 10 வருடங்களின் பின்னும் சிறுமியாக இருப்பதின் மாயம், குண்டுவெடிப்பின் பின்புலம் எனப் பலவகை விசாரணைகளுக்கு *எல்லோரும்* தயாராகுவதை அறிகிறேன். சிறுமி இப்போது *உலகப் புகழடைகிறாள்”

ஆக அந்தச் சிறுமியைக் கூட்டிவரும் பொழுதே “எல்லோருக்கும்” அந்தச் சிறுமி யாரெனத் தெரிந்திருக்கிறது. அப்பெடியென்றால், சிறுமியின் முதல் மரணம் நிகழ்ந்த போது, உற்றார் உறவினர்களைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என இறுதிப்பகுதியில் சொன்னது பச்சைப் பொய். இந்தக் அக்விதைசொல்லி கூட அந்த உற்றார் உறவினர் அல்ல. அவருக்கும்கூடத் தெரிந்திருக்கிறது. இந்தத் தர்க்க முரணைக் கூட கிரகித்துக் கொள்ளாத கவிதைசொல்லியைத்தான் நாம் பிரதிக்குள் பார்க்கிறோம். அவர் போலித்தனமான ஒரு காரணத்தைத் தனக்குள் வரித்துக் கொண்டு சிறுமியைக் கொலைசெய்கிறார். இதில் மிஸன் சக்ஸஸ் என்று புளகாங்கிதம் வேறு.

இது இப்பிரதியில் இருக்கும் தர்க்கப் பொருந்தாமைகளில் ஒன்றுதான். அங்கு இடம்பெறும் மற்றொரு தர்க்கமுரணும் உண்டு. அந்தச் சிறுமியை அழைத்து வரும் பொழுதே எல்லோரும் விசித்திரமாகப் பார்க்கிறார்கள், எல்லோரும் பலவகையான கேள்விகளுடன் தயாராகுகிறார்கள் எனச் சொல்லிவிட்டு, “சிறுமி இப்போது உலகப் புகழடைகிறாள்” என்றும் குறிப்பிட்டிருப்பார். அதாவது இவர் சிறுமியைக் கொல்வதற்கு முன்பே அவள் உலகப் புகழடைந்துவிட்டாள். அப்படி உலகப் புகழடைந்துவிட்டிருக்கும் ஒரு சிறுமியைக் கொன்றுவிட்டே, “அவளது மரணத்தை உலகப்பரபரப்பாக மாற்ற விரும்பினேன்”. அதற்காகவே கொலைத் திட்டம்தீட்டி விபத்தாக்கினேன் எனக் கதையளப்பதைத்தான் வாசகராகிய என்னால் நம்பமுடியாமல் இருக்கிறதே ஒழிய, இதுவெல்லாம் உண்மைச் சம்பவம் என வாசகராகிய நீங்கள் நம்பமாட்டீர்கள் எனக் கவிதைசொல்லி பிரஸ்தாபித்து வருத்தப்படுவதை அல்ல. அந்த வருத்தப்படுதல் ஒரு பம்மாத்து.

இங்கு நமக்கெழும் முக்கியக் கேள்வி, உயிருடன் அழைத்துவரும் பொழுதே உலகப்புகழடைந்த சிறுமியை ஏன் கொலை செய்து மீண்டும் உலகப் பரபரப்பாக்க வேண்டும் எனக் கவிதைசொல்லி ஆசைப்படுகிறார்?

இக்கவிதைப் பிரதியின் பிரதான தலைப்பு “உண்மைச் சம்பவம்”. அந்த உண்மைச் சம்பவம் என்பது, இக்கவிதையின் முழுப்பகுதியும் அல்ல. சிறுமியைச் சந்திக்கும் வரை ஜாலியாகத்தான் கவிதைசொல்லி பயணம் செய்து உலவித் திரிகிறார். அந்தச் சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் எல்லாம் அவர் பயணிக்கவில்லை. அந்தச் சிறுமியைக் கண்டபிறகும், கூட்டிக்கொண்டு வரும் பொழுதும்கூட அந்தச் சிறுமியைக் கொலைசெய்து ஃபேமஸாக்க வேண்டும் எனும் ஐடியா அவருக்குத் தோன்றவில்லை. இவருடன் வரும் அவளைப் பார்த்த எல்லோரும் பல கேள்விகளுடன் விசாரணைக்குத் தயாராகியதைத் தொடர்ந்தும், அவள் உலகப்புகழ் பெற்றதைத் தொடர்ந்தும்தான் அவளைக் கொலை செய்ய அவருக்கு ஐடியா வருகிறது. அந்த ஐடியா உருவாகியதைத் தொடர்ந்து அவர் செய்யும் சம்பவம்தான் அவர் குறிப்பிடும் அந்த ‘உண்மைச் சம்பவம்’.

“உடனடியாக அந்த விசித்திரமான சந்தியில் அவளோடு நிற்கிறேன். நான் வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீம் அவளின் கைகளில் கரைந்து கொண்டிருக்கிறது. அம்புக்குறி சுட்டும் திசையில் நடக்கவைத்து, எதிரே வரும் வாகனத்தில் மோதி இறந்துவிடுவதைப் போல அந்தக் காட்சியை அமைக்கிறேன்” என வரும் பகுதிதான் பிரதிக்குள் கவிதைசொல்லியின் உருவாக்குதல் நிகழும் பகுதி. அந்த ஒரு பகுதி மாத்திரம்தான். அதனையே இறுதிப் பகுதியில் “அவளது மரணத்தை உலகப்பரபரப்பாக மாற்ற விரும்பினேன் அதற்காகவே இந்த உண்மைச் சம்பவத்தை உருவாக்கினேன்” எனக் கொலை வாக்குமூலமாகக் குறிப்பிடுகிறார்.

ஆக, இதிலிருந்து நாம் ஒன்றை ஊகிக்க முடியும். இந்தப் பிரதியினை வடிவமைத்தவருக்கு இப்படியொரு சம்பவத்தைக் கவிதைசொல்லியினை வைத்து உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பது குறிக்கோளாக இருந்திருக்கலாம். இப்பிரதியின் கவிதைசொல்லியும் இப்பிரதியின் தலைப்பும் பிரஸ்தாபிக்கும் அப்படியொரு “உண்மைச் சம்பவத்தை உருவாக்கி” பிரதிக்குள் சாகசம் செய்துகாட்டும் நோக்கைத்தான் என்னால் அவதானிக்க முடிகிறது. அப்படி அவர் சாகசம் செய்துகாட்டுவதற்கான ஒரு பயன்படுபொருளாகவே அச்சிறுமி கையாளப்பட்டிருக்கிறாள். அதற்காகப் பிரதிக்குள் அச்சிறுமி கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட விலை உயிரிழப்பு”.

கவிதைசொல்லி அந்தச் சிறுமியைச் சந்திக்கும் வரை அவள்பாட்டிற்கு அங்கு உயிருடன்தான் இருந்தாள். அவளை அங்கு பார்த்து நலன் விசாரித்துவிட்டு வந்திருக்கலாம். அவளைக் கூட்டிக்கொண்டு வரும் பொழுதே அவள் உலகப்புகழ் அடைகிறாள். அப்பொழுதும் அவள்பாட்டிற்கு இருக்கட்டும் என விட்டிருக்கலாம். ஆனால் பிரதியை வடிவமைத்தவருக்கோ, அக்கவிதைசொல்லியை வைத்து ஒரு சாகசத்தைச் செய்துகாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் போலிருக்கிறது.

குறித்த பிரதி தனது எல்லைக்குள் தன்னைக் கவிதையாக நிகழ்த்திக் காட்ட என்ன செய்கிறது, எப்படியான கற்பனைகளையும் புனைவுச் சம்பவங்களையும் மேற்கொள்கிறது என அக்கறைகொண்டு வடிவமைக்கும் போக்கினை குரானாவின் பிரதிகளில் அவதானிக்க முடியும். அப்படியொரு வேலையைச் செய்வதற்கே கவிதைசொல்லியினை வைத்து இந்தப்பிரதியிலும் முயன்றிருக்கிறார் என ஊகிக்க முடிகிறது. அதாவது, குண்டுவெடிப்பில் இறந்துபோன சிறுமியை மீண்டும் விபத்தில் இன்னொருமுறை இறக்கவைத்துக் காட்டும் ஒரு சாகசச் செயலினைச் செய்யவே முனைந்திருக்கிறார். எதனைச் செய்தாலும், குறித்த செயல் ஏன் தெரிவு செய்யப்படுகிறது, அதற்காக உருவாக்கும் தர்க்கங்களும் இயங்குவெளியும் எப்படி அமைகின்றன என்பதில் எல்லாம் கவனம் செலுத்தாமல், சாகசம் செய்துகாட்டினால் மாத்திரம் போதும் எனக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டினைத்தான் இப்பிரதி வடிவமைப்பிற்குள் அவதானிக்க முடிகிறது.

சமூகவெளியிலும் பிரதிகளுக்குள்ளும் மோசமாகக் கையாளப்படும் மனிதர்களுக்குள் அதிகம் மோசமாகக் கையாளப்படுபவர்கள் சிறுவர்கள்தான் என றியாஸ் குரானா எழுதியிருந்ததும் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவரது இந்தக் கவிதைப் பிரதியில் வரும் இந்தச் சிறுமியோ, வெறுமொரு செயற்படுபொருளாகவே (Object) கவிதைசொல்லியினால் கையாளப்படுகிறார். அந்தச் சிறுமி எங்குமே பேச அனுமதிக்கப்படவில்லை. சிறுமியின் அபிப்பிராயம் என்னவாக இருக்கிறதென அறிந்துகொள்ளும் முனைப்பும் கவிதைசொல்லியிடமும் கிடையாது. எப்படி நம் குடும்பங்களில் குழந்தைகளுக்கான முடிவுகள் பெற்றோரால் தீர்மானிக்கப்படுகின்றனவோ, எப்படி பாடசாலைகளில் ஆசிரியர்களால் தீர்மானிக்கப்படுகின்றனவோ அப்படித்தான் பிரதிக்குள் கவிதைசொல்லியால் கையாளப்படுகிறாள்.

குண்டுவெடுப்பில் மரணித்த சிறுமியைச் சந்தித்து, அவளை ஊருக்குள் அழைத்து வந்து, திட்டமிட்டுக் கொலைசெய்தமை அடிப்படையில் தவறு என்ற நிலைப்பாட்டில் இருந்து இந்தப் பிரதியை நான் அணுகவில்லை. அதனை வாசகர்களாகிய நாம் துப்புத் துலக்கிக் கண்டுபிடிப்பதற்கான அவசியம் இந்தப் பிரதியிலும் இல்லை. தான் செய்த திட்டமிட்ட கொலையினைப் பற்றிக் கவிதைசொல்லியே வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார். ஆனால் ஏன் அப்படிக் கொலை செய்தார் என்பதற்கான ஒரு காரணமாக எதனை நம்மால் அவதானிக்க முடிகிறது என்றால், குறித்த பிரதிக்குள் கவிதைச் செயலினை (அவர் குறிப்பிடும் உண்மைச் சம்பவத்தினை) நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்பதைத்தான். அதற்கான பயன்படு பொருளாகவே அச்சிறுமி கையாளப்பட்டிருக்கிறாள் என்பதைத் தாண்டி, இன்னொன்றினை என்னால் ஊகிக்க முடியாமல் போகிறது. (பிரதிக்குள் கவிதைசொல்லி குறிப்பிடும் காரணம் தர்க்கப் பிழையானது)

இந்தப் பிரதியின் மீதான வாசிப்பினை, கவிதை சொல்லியினைப் பின்தொடர்ந்து சென்று, அவரின் கூற்றுக்களினதும் பார்வைகளினதும் அடியாகப் பார்க்காமல், பிரதிக்கு வெளியே நின்றுகொண்டு பார்த்தால் இப்படியும் வாசிக்க முடியும். அதாவது, கவிதைப் பிரதிகளும் அவற்றில் வைக்கப்படும் கவிதைசொல்லிகளும் இதுபோலவே பிறன்மைகளைப் பிரதிக்குள் கையாள்கிறார்கள். தங்களின் கவிதைச் செயலினை அல்லது அழகியலை நிகழ்த்திக் காட்ட பிறன்மைகளைச் சுயதிகாரமற்ற பொருட்களாகப் (object) பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை சொல்லவே இக்கவிதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என வாசிப்பதை வரித்துக் கொண்டு ஆசுவாசம் கொள்ளலாம். ஆனால் அங்கும் இடித்துக் கொண்டிருக்கும் விசயம், பிரதான காரணமாக முன்வைக்கும் விடயத்தின் முன்னுக்குப் பின்னான உள்முரண்கள்தான்.


artwork : artstation

இமாம் அத்னான்
இமாம் அத்னான்

இமாம் அத்னான் – சமூகவியல் சார் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். பன்மையான சமூக மனங்களுடன் சந்திப்பை மேற்கொள்வதும் கதைப்பதுமாக இலங்கையின் பல பக்கங்களிலும் அலைந்துதிரிகிறார். முரண்உரையாடல்களில் அதிகம் அக்கறைக்கொண்டு இயங்குபவர். சமூக, கலாச்சார, இலக்கிய அரசியல்கள் மீது புதிய கேள்விகளை புனைந்து பார்க்கிறார்.

Share :

One response to “கவித்துவத்திற்குப் பயன்படு பொருளாகும் பிறன்மை”

  1. Selvam kumar
    August 10, 2025

    உயிருடன் இயங்கும் நிலைக்கு மாற்று சிந்தனை பரப்ப வேண்டும், தேவையும் கட்டுரையும் கவிதையும் இன்னொரு வழி,,தொடர்க,,,

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top