சுபாவின் மேக மரங்கள்
சுபாவுக்குத் தூக்கமே வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள்.
‘இன்னும் ஏழு நாட்கள்தான் இருக்கு. அதுக்குள் எழுதி முடிக்கணும்’ மீண்டும் மீண்டும் மனதில் சொல்லிக் கொண்டாள்.
எதைப் பற்றி எழுதுவது? எப்படி தொடங்குவது? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்… எப்போது தூங்கினாள் எனத் தெரியாமலே தூங்கிப் போனாள்.
மறுநாள் எழுந்ததும் அப்பாவிடம் போனாள். அப்பா சட்டைக்குச் சலவை போட்டுக் கொண்டிருந்தார்.
“அப்பா! அப்பா!” கூப்பிட்டாள் சுபா.
“அடடே! இளவரசி எழுந்தாச்சா… இளவரசிக்கு இந்த அரசரோட காலை வணக்கம்” என்று சொன்னார் அப்பா.
சுபாவும் பதிலுக்கு வணக்கம் சொன்னாள்.
“இளவரசிக்கு என்ன வேணும்? காலையிலேயே அரசரைத் தேடி வந்து இருக்கீங்க?” என்று கேட்டார்.
“அப்பா! எனக்கு ஒரு உதவி வேணும்ப்பா” என்றார்.
“இளரவசிக்கு உதவியா? கட்டளை இடுங்கள் செய்து முடிக்கிறேன்..” என்று சொல்லி வலது கையை வயிற்றுக்கு மேலே குறுக்காகக் கட்டி நின்றார்.
“அப்பா போதும்பா… இயல்பா பேசுங்கப்பா” என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.
“சரி! சரி! சுபா குட்டிக்கு என்ன உதவி வேணும், சொல்லுங்க?” என்றார்.
“எங்க பள்ளியில ஒரு கதைப் போட்டி வெச்சிருக்காங்க….”
“ஓ! அருமை” என்றார் அப்பா.
“அந்தப் போட்டியில கலந்துக்க பேர் கொடுத்து இருக்கேம்ப்பா” என்றாள் சுபா.
“அட! நல்ல செய்திதானே!” என்றார்.
“அப்பா! யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேம்பா… ஒரு கரு கூட கிடைக்கல. அதான் நீங்க ஏதாவது சொல்லுங்க.. நான் கதை எழுதிடுவேன்” என்றாள் சுபா.
“சுபா குட்டிக்கு ரொம்பப் பிடிச்சது எதுவோ, அதையே கதைக்கான கருப் பொருளா வெச்சி எழுதலாமே” என்று ஒரு யோசனை சொன்னார்.
சுபா யோசித்தாள். அவளுக்கு வானம், நட்சத்திரம், நிலா, மரங்கள், பறவைகள், பூச்சிகள், வண்ணங்கள் என எல்லாமே பிடிக்கும். ஆனால் அதைவிட மேகங்களை ரொம்பப் பிடிக்கும். மேகங்கள்தான் மழையைத் தருகின்றன என்பதைப் படித்திருக்கிறாள். மழையும் ரொம்பப் பிடிக்கும்.
“அப்பா! ரொம்ப நன்றிப்பா. மழையைத் தரும் மேகத்தையே கருப்பொருளாக வைத்துக் கதை எழுத நினைக்கிறேம்பா” என்றாள்.
“எனக்கும் மகிழ்ச்சி பாப்பா” என்றார் அப்பா.
ஒரு பெரிய காடு. திடீரென அந்தக் காட்டில் தீப்பிடித்துக் கொண்டது. விலங்குகள் எல்லாம் பயந்து ஓடின. பறவைகள் கூடுகளைவிட்டு விட்டு சத்தம் போட்டபடி பறந்தன. அந்தத் தீயில் செடி, கொடி, மரங்கள் எரிந்து சாம்பலாயின.
பசுமையாக இருந்த காடு, இப்போது கருமையாகி எங்கும் புகை மண்டலமாக இருந்தது. இந்தக் காட்டை மறுபடியும் பசுமையாக்க என்ன வழி எனத் தெரியாமல் விலங்குகளும் பறவைகளும் வருத்தப்பட்டன.
மாலையில் எல்லாப் பறவைகளும் ஒரு மரத்தில் வந்து அமர்ந்தன. கொஞ்சநேரம் அங்கே அமைதியாக இருந்தது. “நண்பர்களே! இந்தக் காட்டுத் தீ அதிக மரங்களை எரித்துவிட்டன. மீண்டும் இந்தக் காட்டைப் பசுமையாக்க யாரிடமாவது யோசனை இருந்தா சொல்லுங்க” என்று கேட்டது ஒரு சிட்டுக்குருவி.
“காட்டை மீண்டும் பசுமையாக்க நம்மால் முடியுமான்னு எனக்குத் தெரியல. அதை இயற்கைதான் சரிசெய்யணும்“ என்றது பச்சைக்கிளி.
“இதற்கு ஒரு தீர்வு இருக்கு. ஆனால் அது ரொம்ப தூரத்தில் இருக்கு” என்றது மைனா.
எல்லாப் பறவைகளும் மைனாவையே பார்த்தன.
“அது என்ன தீர்வு, தெளிவா சொல்லு மைனாவே” என்றது சிட்டுக்குருவி.
“அதோ அந்த உயரத்தில் இருக்கே மேகம். அதனிடம் உதவி கேட்டால் நிச்சயம் இதற்குத் தீர்வு கிடைக்கும்“ என்றது மைனா.
“மைனா சொன்னது சரிதான். மேகத்திடமே உதவி கேட்கலாம். அவ்வளவு தூரம் பறந்து போக கழுகுகளால் மட்டுமே முடியும். நம் சார்பாகக் கழுகுகளை அனுப்பலாம்“ என்றது சிட்டுக்குருவி.
கழுகுகள் சரி என்று சொல்லி, தன் பெரிய சிறகுகளை அசைத்து அசைத்து மேகத்தை நோக்கிப் பறந்தன. மேகத்தைப் பார்த்து, வந்த நோக்கத்தைச் சொல்லின.
உருண்டு திரண்டிருந்த பெரிய மலை போன்ற மேகம், “உதவி செய்ய நான் தயார்” என்று சொல்லி, தன் பஞ்சு போன்ற மேகப் பொதிகை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பல மரங்களை உருவாக்கின. அவற்றை “உப்” என ஊதின. அந்தப் பஞ்சு மரங்கள் மெல்ல காற்றில் அசைந்து.. அசைந்து காட்டில் இறங்கின.
“நன்றி மேகமே! என்றன கழுகுகள்.
“கழுகுகளே! நான் உருவாக்கியவை பஞ்சு மரங்கள்தான். பறவைகளாகிய நீங்கள்தான் அதிகப் பழங்கள் சாப்பிட்டு, அவற்றிலிருந்து விதைகளை இந்தப் பூமிக்குத் தரணும். அதற்காக நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. பழங்களைச் சாப்பிட்டு முடித்ததும், அது உங்கள் கழிவில் இருந்து வெளியேறி பூமியில் விழும். மேகங்களாக நாங்கள் மழையைப் பொழியும்போது அந்த விதை உயிர்பெற்றுச் செடியாக முளைத்து, மரமாக வளரும். இதற்குக் கொஞ்ச மாதங்கள் ஆகலாம். இந்தச் செய்தியை மற்ற பறவைகளுக்குச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்றது மேகம்.
கழுகுகளும் பறவைகளிடம் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டன.
கொஞ்ச நாட்களிலேயே அந்தக் காடுகளில் பறவைகள் எச்சத்தில் விழுந்த விதைகள் செடியாக முளைக்க ஆரம்பித்தன.
இப்படி ஒரு கதையை எழுதி “சுபாவின் பஞ்சு மரங்கள்” என்று தலைப்பிட்டாள் சுபா.
நாளை காலை அப்பாவிடம் காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றாள்.
தூங்கி வழிந்த பாபு
“சிவா! கொஞ்சம் நோட்டக் காட்டேன் எழுதிக்கிறேன்” என்று சிவாவின் நோட்டை வாங்கி அவசர அவசரமாக எழுதினான் பாபு.
ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போடும்போது நன்றாகத்தான் பார்த்து எழுத ஆரம்பிப்பான். அவர் ஐந்து வரிகளைத் தாண்டும்போது, பாபுவின் கண்கள் தானாகவே தூக்கத்தில் செருக ஆரம்பித்துவிடும். அதனால் சரியாகக் கவனிக்க முடியாமல், பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சிவாவிடமோ, மனோவிடமோ நோட்டை வாங்கி எழுதிக் கொள்வான்.
எத்தனைமுறை முயற்சி செய்தாலும் பாபுவால் பாடத்தைக் கவனிக்க முடியவில்லை. அதற்கு அந்தத் தூக்கம்தான் காரணமாக இருந்தது.
பாபு மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அதே பள்ளியில் பாபுவின் அக்கா கமலி, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் விளையாட்டில் படுசுட்டி. பாபுவும் இப்படித்தான் இருந்தான். கொஞ்ச நாட்களாகத்தான் இப்படி தூங்கி வழிகிறான்.
பாபுவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்பதையே கமலிதான் கண்டுபிடித்தாள்.
ஒருநாள் இரவு வீட்டுப்பாடம் முடித்துவிட்டு, பாபுவுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். ஒரு திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் சொல்லி முடித்தாள். அடுத்த குறளை ஆரம்பிக்கலாம் எனத் திரும்பினாள். பாபு உட்கார்ந்து கொண்டே தூங்கித் தூங்கி விழுந்தான்.
“தம்பி! தூக்கம் வருதா?” என்று கேட்டாள்.
“ஆமாங்க்கா… ஆனா, யாராவது பாடம் நடத்தினா எனக்குத் தூக்கம் வர்ற மாதிரி இருக்குக்கா” என்றான்:
அப்ப, வகுப்புல எப்படி பாடத்தைக் கவனிக்கிற? ஆனா நீ எல்லாத்தையும் எழுதிட்டு வர்றீயே” என்று கேட்டாள்.
வகுப்பில் நடப்பதைச் சொன்னான் பாபு.
‘இது தப்பாச்சே’ என மனதில் நினைத்தவள், அம்மாவிடம் பாபுவின் நிலையை எடுத்துச் சொன்னாள்.
“எதனால பாபு தூங்கி வழியிறான்’ என யோசித்தார் அம்மா. ஒன்னும் புரியலையே…’
அப்பா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார். பாபுவின் தூக்கத்தைப் பற்றிச் சொன்னார் அம்மா.
இரவில் பாட்டியோடுதான் படுக்கிறான். அப்புறம் எப்படி? அப்பாவும் அம்மாவும் யோசித்தார்கள்.
அறையை விட்டு வெளியே வந்த பாட்டி, என்னவென்று விசாரித்தார்.
பாபுவைப் பற்றிச் சொன்னார்கள்.
“பாபு நல்லாதானே தூங்குறான்” என்றார் பாட்டி.
அப்புறம் ஏன் வகுப்பில் தூங்குறான். மீண்டும் யோசித்தார்கள்.
“அம்மா! நான் ஒருநாள் பாட்டிக்கூட படுத்திருந்தேன். அன்னைக்கு ஒன்று நடந்தது” என்றாள் கமலி.
“என்ன நடந்தது” என ஆர்வமாகக் கேட்டார்கள்.
“பாட்டி சாப்பிட்ட உடனே தூங்கறது இல்ல..” என்றாள்.
“தூங்காம என்ன செய்றாங்க?” கேட்டார் அப்பா.
“அப்பா! பாட்டி தூங்காம, டிவியில வர நாடகங்களைப் பார்க்குறாங்க. அவங்க எப்ப தூங்குறாங்கன்னே தெரியல” என்றாள் கமலி.
“அப்படியா!” என்று ஆச்சரியப்பட்டார் அம்மா.
அதுமட்டுமில்ல, லைட்டை அணைச்சிட்டு டிவி பார்க்கறாங்க. நாடகத்தில ஒவ்வொரு காட்சியா மாற, மாற வெளிச்சம் போய்ப் போய் வருது. அதனால அன்னைக்கு என்னோட தூக்கமே ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்தது” என்றாள் கமலி.
அப்பாவுக்கு இப்போது ஓரளவு புரிந்தது போல இருந்தது.
பாபு ஒருநாள் கொய்யா மரம் ஏறும்போது வழுக்கி விழுந்து காலில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவன் கால் சரியாகும்வரை, அவனைப் பாட்டியின் அறையில் தங்க வைத்திருந்தார்கள்.
பாட்டி நாடகங்களை விரும்பிப் பார்ப்பார் என்பதால் தனியாக ஒரு டிவி வாங்கித் தந்திருந்தார். பொழுதுபோக்கிற்காக ஆரம்பித்து அதில் வரும் அனைத்தையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார்.
பாட்டியின் அறைக்குச் சென்றார் அப்பா, பாபுவின் நிலையை எடுத்துச் சொன்னார். இனி பாபுவை எங்களோடு படுக்க வைத்துக் கொள்கிறோம்“ என்று சொன்னார்.
“அம்மா! உங்கள் உடல் நலத்திற்கும் தூக்கம் ரொம்ப அவசியம். அதனால நீங்களும் சாப்பிட்டுச் சீக்கிரம் தூங்க முயற்சி செய்யுங்கம்மா” என்றார் கமலியின் அப்பா.
பாட்டிக்குப் புரிந்தது. “சரிப்பா” என்றார்.
“அன்று இரவு அப்பா அம்மாவோடு படுத்துச் சீக்கிரமே தூங்க ஆரம்பித்தான் பாபு.
art : paulbond
சென்னையில் பிறந்த எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா (Kannikovil Raja) சிறுவயது முதலே கவிதைகள் எழுதத் தொடங்கியவர். ஏழாம் வகுப்புப் படிக்கும்போது தான் எழுதிய கவிதைக்குக் கிடைத்த பரிசே இவரை எழுத்துலகில் நுழைய அனுமதிச் சீட்டாக மாறியது. சிறுவர் இலக்கியத்தில் சிறுவருக்கான கதைகள் 60 புத்தகங்களும், சிறுவர் பாடல்கள் 6 நூல்களும், சிறுவருக்கான கதைப் பாடல்கள் 6 நூல்களும், பொதுக்கட்டுரை 4 நூல்களும் எழுதி உள்ளார். ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலாய் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஹைக்கூ நூற்றாண்டின் ஆரம்பத்தை புதுச்சேரியிலும்… முடிவை சென்னையிலும் நிகழ்த்தியவர். தமிழ் ஹைக்கூ நூல் வெளியான வெள்ளி விழா ஆண்டு, நாற்பதாவது ஆண்டு ஆகியவற்றை ஹைக்கூ திருவிழாவாக நடத்தியவர். இவர் “லாலிபாப் சிறுவர் உலகம்” என்ற அமைப்பை உருவாக்கி 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், பாடல் பாடச் செய்தல், ஓவியம் வரையச் செய்தல், கதைப் பயிற்சி தருதல் என அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.








Leave a Reply